பார்வைக்கு வெள்ளி போல காணப்படும் லித்தியத்தின் அணு எண் 3. கல் என்று பொருள்படும் லித்தோஸ் என்ற கிரேக்கச் சொல்லில் இருந்து இதற்கு லித்தியம் என்ற பெயர் ஏற்பட்டது. தனிம வரிசை அட்டவணையில் ஆல்கலைல் பிரிவில் உள்ள இது, எடை குறைவான ஓர் உலோகம். ஜம்மு காஷ்மீரில் ரியாசி மாவட்டத்தில் 5.9 லட்சம் டன் லித்தியம் சேகரம் உள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டதுடன் உலகில் மிக அதிக அளவில் இதன் சேகரம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது.

மின்கலங்களும் லித்தியமும்

பொலிவியா, அர்ஜெண்டினா, சிலி, யு எஸ், ஆஸ்டிரேலியா ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களில் உள்ளன. அயனி மின்கலங்களின் (ion battery) உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் சீனாவில் இருப்பதைக் காட்டிலும் அதிக அளவில் காஷ்மீரில் லித்தியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை சரியான விதத்தில் பயன்படுத்துவது என்பது சவாலான ஒன்று.

2030ல் 12.5 கோடி மின்சார வாகனங்கள் சாலைகளில் ஓடத் தொடங்கும் என்று சர்வதேச ஆற்றல் முகமை (IEA) கூறுகிறது. இது தவிர போன், மடிக்கணினி போன்ற நாம் அன்றாடம் பயன்படுத்தும் கருவிகளில் இந்த லித்தியம் மின்கலங்கள் உள்ளன.

முந்தைய மின்கலங்களைக் காட்டிலும் இந்த மின்கலங்களைப் பயன்படுத்தி வேகமாக மின்னேற்றம் செய்ய முடியும். எடை மிகக் குறைவு. அதிக நேரம் மின்னேற்றம் நிற்கும்.

இந்த காரணங்களால் இவை இப்போது பிரபலமடைந்துள்ளன. மின் தண்டுகளின் (electrodes) உற்பத்தி, செல்களின் ஒருங்கிணைந்த செயல்பாடு ஆகியவை இவற்றின் சிறப்புப் பண்புகள்.

ஆற்றல் கிடைப்பது எவ்வாறு?

ஒரு லித்தியம் மின்கலத்திற்குள் பல செல்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும் நேர்மின் தண்டு (anode), எதிர்மின் தண்டு (cathode) மற்றும் மின் பகுளி (electrolyte) ஆகியவை உள்ளன. மின்பகுளிக் கரைசல் வழியாக எலக்ட்ரான்கள் நேர்மின் தண்டில் இருந்து எதிர்மின் தண்டிற்குப் பயணம் செய்யும்போது ஆற்றல் உற்பத்தி செய்யப்படுகிறது. இது போன்ற பல செல்களை ஒருங்கிணைத்து தேவையான வோல்டேஜை உண்டாக்குவதன் மூலம் இது இயங்குகிறது.

பிரித்தெடுக்கும் முறைகள்

பூமியில் இருந்து தாது மற்றும் உப்பு நீருள்ள குளங்களில் நீரை ஆவியாக்குதல் முறைகள் மூலம் லித்தியம் தோண்டி பிரித்தெடுக்கப்படுகிறது. தாதுவில் இருந்து இதைப் பிரித்தெடுப்பது சிக்கல் நிறைந்தது. உலகில் 145 வகையான தாதுக்களில் லித்தியம் உள்ளது. என்றாலும் இவற்றில் ஐந்து தாதுக்களில் இருந்து மட்டுமே வணிகரீதியில் இது பிரித்தெடுக்கப்படுகிறது.lithium extractionஇதன் தாதுக்கள் ஸ்போடுமின் (spodumene) லெப்பிடோலைட் (lepidolite மற்றும் பெட்டலைட் (petalite) போன்றவை. என்றாலும் பரவலாக ஸ்போடுமின் தாதுவே இதற்காக அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதில் ஆஸ்திரேலியா உலகில் முதலிடத்தில் உள்ளது. தாதுவில் இருந்து பிரித்தெடுக்கும் முறையைக் காட்டிலும் உப்பு வயல்களில் இருந்து பிரித்தெடுக்கும் முறையே எளிமையானது; பரவலாகப் பயன்பாட்டில் உள்ளது.

உப்பு வயல்களில் இருந்து லித்தியம்

பூமிக்கடியில் இருந்து உவர் நீர் தரையின் மேற்பகுதிக்கு பம்ப் செய்து நிறைக்கப்படுகிறது. ஆவியாக்குவதற்காக அமைக்கப்படும் ஏரிகளில் சேகரித்து வைக்கப்படும் இந்த நீர் சூரியனின் வெப்பத்தால் நீராவியாக மாறுகிறது. அப்போது நீரில் இருக்கும் லித்தியம் உட்பட உள்ள உப்புகள் பிரிந்து வருகின்றன. கால்சியம் ஹைடிராக்சைடின் உதவியுடன் உப்பு நீரில் இருந்து தேவையற்ற பொருட்கள் பல கட்டங்களில் அகற்றப்படுகின்றன.

படிப்படியாக லித்தியத்தின் அளவு அதிகமாகிறது. அப்போது தொடர் வினைகள் மூலம் இந்த உலோகம் பிரித்தெடுக்கப்படுகிறது.

மதிப்பு

இதன் மதிப்பு நாளுக்குநாள் அதிகரிக்கிறது. 2021 இறுதியில் ஒரு டன் லித்தியத்தின் விலை 14,000 டாலர். 2022 மார்ச்சில் இது 76,700 டாலராக உயர்ந்தது. கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிக்கொண்ட அர்ஜெண்டினாவிற்கு இந்த உலோகத்தின் சேகரம் பெரும் ஆறுதலைத் தந்துள்ளது. பிரித்தெடுப்பதற்காக இந்நாட்டிற்குப் படையெடுத்து வந்த வெளிநாட்டுக் கம்பெனிகளை அர்ஜெண்டினா வரவேற்றது. இவை லித்தியம் உற்பத்திக்காக இங்கு 1.5 பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளன.

வருமானம் ஈட்டித் தரும் லித்தியம்

கடந்த பத்தாண்டில் இந்நாட்டின் லித்தியம் ஏற்றுமடி வருமானம் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. லித்தியம் அயனி மின்கலம் மற்றும் அதன் ஏற்றுமதியில் தென்கொரியா முன்னணியில் உள்ளது. மின்கலங்கள் ஏற்றுமதி மூலம் தென்கொரியாவின் வருமானம் கடந்த பத்தாண்டில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. 2018ல் மட்டும் மின்கல ஏற்றுமதித் தொழிலின் மூலம் மட்டும் இங்கு 2000 புதிய வேலைவாய்ப்புகள் ஏற்பட்டன. விரைவில் இது இரு மடங்காகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரிச்சலுகை, பிற சலுகைகள் மற்றும் அயல்நாட்டு ஒத்துழைப்புக் கொள்கையின் மூலம் தென்கொரியா 2030ம் ஆண்டிற்குள் லித்தியம் மின்கலங்களின் உற்பத்தித் தலைநகரமாக மாறத் திட்டமிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் 2021-22ல் ஐந்து பில்லியன் டாலராக இருந்த லித்தியம் ஏற்றுமதி வருமானம் 2022-23ல் 16 பில்லியன் டாலர் என்ற நிலையை அடையும் என்று நம்பப்படுகிறது.

சூழல் பிரச்சனைகள்

பிரித்தெடுத்தல் பெருமளவில் நடக்கும் இடங்களில் வறட்சி அதிகமாக ஏற்படுகிறது. லித்தியத்தைப் பிரித்தெடுக்க நிலத்தின் அடியில் இருக்கும் ப்ரைன் (brine) என்ற உப்பு நீர் மட்டுமே பயன்படுகிறது. உப்பு நீர் நிலத்தின் அடியில் இருந்து மேற்பரப்பிற்கு பம்ப் செய்யப்படும்போது சுற்றிலும் இருக்கும் நன்னீர் அந்த இடத்திற்குச் சென்று நிறைவதே வறட்சி ஏற்படக் காரணம் என்று கருதப்படுகிறது.

ஒரு டன் லித்தியத்தைப் பிரித்தெடுக்க இரண்டு மில்லியனுக்கும் கூடுதலான நீர் தேவைப்படுகிறது. இதனால் மற்ற பல சூழல் பிரச்சனைகளும் ஏற்படுகின்றன.

பிரித்தெடுக்கப்படும் இடங்களுக்கு அருகில் இருக்கும் நன்னீர் மூலங்களில் நச்சுத்தன்மையுடைய கழிவுகள் வந்து சேர்கின்றன. இது பிரதேசவாசிகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. உயிர்ப் பன்மயத் தன்மையைப் பாதிக்கிறது. காலநிலை மாற்றம் மற்றும் உலோகத்தைப் பிரித்தெடுக்க பெருமளவில் நீர் ஆவியாக்கப்படுவதால் பெருத்த சூழல் நாசம் ஏற்படுகிறது. உப்பு நீர்த் தடாகங்களின் பரப்பு இதனால் சுருங்குகிறது.

உப்பு நிலங்களில் காணப்படும் டை ஆட்டம் போன்ற ஆல்காக்கள் இப்பகுதியில் வாழும் சிலியன், ஆண்டீஸ் மற்றும் ஜேம்ஸ் பூநாரைகளின் முக்கிய உணவுகளில் ஒன்று. ஆல்காக்கள் இல்லாமல் போவதால் இவற்றின் வாழ்வு அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது.

பிரித்தெடுக்கப்படும்போது கார்பன் டை ஆக்சைடு உட்பட பல பசுமைக்குடில் வாயுக்கள் வெளியேற்றப்படுகின்றன. சுரங்கங்கள் அமைந்துள்ள பகுதிகளில் சாதாரணமாக மரங்கள் இருப்பதில்லை. இதனால் ஒளிச்சேர்க்கைக்கான வாய்ப்புகள் இல்லாமல் போகிறது. இது புவி வெப்ப உயர்வுக்கு வழிவகுக்கிறது.

அழியும் வயல்களும் ஆரோக்கியப் பிரச்சனைகளும்

இத்தொழிலிற்காக பெருமளவிலான நிலப்பகுதிகள் பறிக்கப்படுகின்றன. இதனால் வளமான வயல்வெளிகள் நஷ்டமடைகின்றன. இது அந்த நாட்டின் வேளாண் உற்பத்தியைப் பாதிக்கிறது. சுரங்கங்களுக்கு அருகில் வசிக்கும் மனிதர்கள், விலங்குகளுக்கு சுவாசக் கோளாறு நோய்கள் ஏற்படுகின்றன. கந்தக அமிலம், யுரேனியம், மக்னீசியம் போன்ற நச்சு வேதிப்பொருட்கள் அடங்கும் பெருமளவிலான கழிவுகள் வெளித்தள்ளப்படுகின்றன.

இந்தியாவில் லித்தியம்

காஷ்மீர் ரியாசி மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட லித்தியம் சேகரத்தை இந்தியப் பொருளாதாரத்தின் பேட்டரி என்று பிரதேச ஊடகங்கள் கொண்டாடுகின்றன. ஆனால் இந்த சேகரம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்தே எல்லாம் அமையும். லித்தியம் சேகரங்கள் பூமியில் அபூர்வமானவை இல்லை. ஒரு சேகரத்தை சுரங்கம் மூலம் எடுக்கும் வகையில் அந்த இடத்தை மாற்றி வணிகரீதியில் லாபகரமாக லித்தியத்தை பிரித்தெடுப்பது ஒரு நாட்டிற்கு முன்புள்ள பெரிய சவால்.

இந்தியாவை விட அதிக பரப்பில் லித்தியம் சேகரங்களைக் கண்டுபிடித்த பல நாடுகள் பிரித்தெடுக்கும் பணிகளை இன்னும் ஆரம்பிக்கவில்லை. எடுத்துக்காட்டு ஜெர்மனி மற்றும் கனடா. ஆஸ்திரேலியா, சிலி ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதியையே ஜெர்மனி இப்போதும் நம்பியிருக்கிறது. பிரித்தெடுக்கும் இடங்களை முழுமையாக இயங்கச் செய்ய உள்ள நடைமுறைத் தடைகளே இதற்குக் காரணம்.

தொழில்நுட்பச் சிக்கல்கள் தவிர காஷ்மீரின் நில அமைப்பு, அரசியல் நிலை ஆகியவை அங்கிருந்து லித்தியம் பிரித்தெடுப்பதில் பெரும் சவால்களாக உள்ளன. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் இருந்து 30 மைல் தொலைவில் உள்ள பகுதியில் இருந்தே லித்தியம் சேகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்ப்புகள்

மின்சார வாகன உற்பத்தித் துறையில் இதன் மூலம் இந்தியா முன்னணி இடத்தைப் பெற முடியும். இது காஷ்மீரில் இப்போது இருக்கும் வேலை வாய்ப்பின்மைக்கு ஒரு தீர்வாக அமையும். சாலை மற்றும் ரயில் போக்குவரத்து மேம்பாட்டின் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும். சூழலுக்கும் உயிரினங்களுக்கும் மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் லித்தியம் உற்பத்தி செய்யப்பட்டால் இந்தியா வருங்கால உலகின் மின்சார வாகன உற்பத்தியில் தலைமையிடமாக மாறும் என்பதில் ஐயமில்லை.

மேற்கோள்: https://www.mathrubhumi.com/environment/features/lithium-deposits-in-india-1.8574280

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It