17.9.2019-இல் நூற்றாண்டு கண்ட அவலூர்ப்பேட்டை பெரியார் பெருந்தொண்டர், கர்நாடகம் வாழ் தமிழ்ச் சிங்கம் வீ.மு. வேலு அவர்களுடன் நேர்காணல்

மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில் 2.10.2019 அன்று பெங்களூருவில் பெரியார் நாகம்மை அறக்கட்டளையின் பொறுப்பாளர் கு.தொல்காப்பியன், மேட்டூர் மா.செந்தில்குமார், போச்சம்பள்ளி வீ.காவியவர்மன் ஆகியோர் வீ.மு.வேலு அவர்களை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து மகிழ்ந்தனர். அப்போது அவருடன் ஒரு நேர்காணல் :

கேள்வி 1 : அய்யா தங்களைப் பற்றிக் கூறுங்கள்?

பதில் : என் பெயர் வீ.மு. வேலு. நான் பிறந்தது திருவண்ணாமலையை அடுத்த அவலூர்ப்பேட்டை. நான் 17.9.1920 அன்று பிறந்தேன்; 8 ஆம் வகுப்பு வரை அவலூர்ப்பேட்டையில் கல்வி கற்றேன். என் 18ஆவது வயதில் பிழைப்புத் தேடி பெங்களூருக்குச் சென்றேன். அங்கு சில காலம் கிடைத்த வேலையைச் செய்து கொண்டிருந்தேன். பின்னர் பெங்களூரு நகராட்சியில் ஓட்டுநர் வேலை கிடைத்தது.

கேள்வி 2 : அய்யா, உங்கள் குடும்பம் பற்றி?

பதில் : எனக்குத் திருமணமாகி இரண்டு மகள்கள், இரண்டு மகன்கள் உள்ளனர். என் மனைவி பெயர் வீரம்மாள். அவர் தன் 80ஆம் அகவையில் நான்கு ஆண்டுகளுக்கு முன் மறைந்தார்.

என் மூத்த மகனுக்குத் தந்தை பெரியர்தான் பெயர் வைத்தார். பெரியாரின் முதல் மனைவி நாகம்மையின் முதல் எழுத்தையும், இரண்டாவது மனைவி மணியம்மையின் முதல் எழுத்தையும் சேர்த்து நாகமணி என்று பெயர் வைத்தார். மற்றவர்களுக்கு வீரமணி, தங்கமணி செல்வமணி என்று பெயர் சூட்டியுள்ளேன். அனைவரும் நலமுடன் உள்ளனர்.

கேள்வி 3 : பெங்களூருக்கு எப்போது வந்தீர்கள்?

பதில் : 1938-இல் தந்தை பெரியார் அவர்கள், அவலூர்ப்பேட்டைக்குப் பொதுக் கூட்டத்திற்கு வந்தார். அது பற்றிய கூட்ட அறிக்கையை ஊர் மக்களிடம் வழங்கிக் கொண்டிருந்தேன். அப்போது என்மீது கோபம் கொண்ட கொள்கை எதிரிகள் என்னைச் செமையாக அடித்துப் போட்டுவிட்டனர். அவர்களுக்கு அஞ்சி நான் பெங்களூருக்குப் பிழைப்புத் தேடிப் போனேன்.

கேள்வி 4 : சுயமரியாதைக் கொள்கைத் தொடர்பு பற்றிச் சொல்லுங்கள்?

பதில் : என் இளம் வயதிலேயே முன்னாள் அமைச்சர் ப.உ. சண்முகம், சி.பி. சிற்றரசு ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தேன். பெங்களூருக்குச் சென்ற பின் அங்கிருந்த கல்வியாளர் அ.ம.தர்மலிங்கம், பெரியார் தொண்டர்கள் பூ,அ. கொடையரசன், வீ.சி. வேலாயுதம், கீ.சு. இளங்கோவன், க. வேலு ஆகியோருடன் இணைந்து பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளைப் பரப்புவது, திருக்குறள் பரப்புவது ஆகிய பணிகளில் ஈடுபட்டேன்.

நாடகத் துறையில் எனக்கு அதிக ஆர்வம் இருந்ததால் 70 நாடகங்களுக்கு மேல் எழுதியும் நடித்தும் இருக்கிறேன். நடிகவேள் எம்.ஆர். இராதா அவர்களைப் பலமுறை அழைத்து நாடகம் நடத்தியுள்ளேன்.

திருவாரூர் தங்கராசு அவர்களின் ‘இரத்தக் கண்ணீர்’ நாடகத்தை அவரின் அனுமதி பெற்று ‘சீரழிந்த சீமான்’ என்ற பெயரில் நாடகம் போட்டேன்.

கேள்வி 5 : தோழர் வே.ஆனைமுத்துவுடன் உங்களுக்கு உள்ள தொடர்பு பற்றிக் கூறுங்கள்?

பதில் : ஒருமுறை திருவாரூரில் நடைபெற்ற தி.க. மாநாட்டிற்கு இரயில் மூலம் நான் திருச்சியிலிருந்து திருவாரூருக்குப் பயணமானேன். அப்போது என் அருகில் தோழர் வே.ஆனைமுத்துவும் அமர்ந்திருந்தார். என்னைப் பற்றி அவருக்குத் தெரியும். அவர்தான் ஆனைமுத்து என்று எனக்குத் தெரியாது. நான் பக்கத்தில் உள்ள தோழர்களிடம் சுயமரியாதைக் கொள்கைகள் பற்றி விவாதம் பண்ணிக் கொண்டு வந்தேன். அதுபற்றி வே.ஆ. அவர்கள் சைகையால் ஆர்வமூட்டி என்னை மேலும் பேச வைத்தார்; பிறகு இருவரும் மாநாட்டிற்கு ஒன்றாகச் சென்ற பிறகுதான், தன்னைப் பற்றித் தெரிவித்தார். அண்மையில் 2017 மார்ச் மாதம் என் சொந்த ஊரான அவலூர்ப்பேட்டையில் என் நண்பரின் குடும்ப மணவிழாவுக்கு வந்திருந்தார். அப்போது மா.பெ.பொ.க. மாவட்டச் செயலாளர் பொ. சுப்பிரமணி, வேளாண் அணிச் செயலாளர் கோ.கோதண்டராமன் ஆகியோருடன் ஆனைமுத்துவையும் சந்தித்தேன்.

கேள்வி 6 : பெரியாருடன் உங்களின் மறக்க முடியாத நிகழ்ச்சி?

பதில் : பெங்களூரில் தி.க.வுக்கு அங்கமுத்து என்பவர் தலைவர்; நான் செயலாளர். எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவர் என்னைக் கட்சியிலிருந்து ஒதுக்க நினைத்தார். இந்த நிலையில் அங்கமுத்து தலைமையில் பெரியாரை வைத்து ஒரு கூட்டம் ஏற்பாடு ஆனது. அப்போது பெரியாரும், அங்கமுத்துவும் இருக்கும்போது, பெரியாரிடம் நான் என் நண்பர் ஒருவரின் திருமணத்திற்கு ஒப்புதல் கேட்டேன். அப்போது அங்கமுத்து பெரியாரிடம் என் அனுமதி இல்லாமல் அவருக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று பெரியாரிடமே சொன்னார். அதற்குப் பெரியார், “ஓ அப்படியா சேதி! உன் அனுமதி தேவையா? ஆகட்டும்” என்று சொல்லிவிட்டு அருகில் இருந்த மணியம்மை அவர்களிடம் இவரிடம் திருமண நாள், நேரம், இடம் ஆகியவற்றைக் குறிப்பு வாங்கி வைக்கும்படி சொன்னார். சொன்னபடி என் நண்பரின் திருமணத்தை யாரையும் எதிர்பார்க்காமல் தானே வந்து நடத்திக் கொடுத்தார். இது என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத நிகழ்ச்சியாகும்.

பெங்களூரில் என்னுடைய திருமணம் தாலி மறுப்புத் திருமணமாகும். அதற்கும் முன்னும், பின்னும் இதுவரை யாரும் அப்படிச் செய்து கொள்ளவில்லை.

கேள்வி 7 : இக்கால இளைஞர்களுக்குத் தங்கள் அறிவுரை என்ன?

பதில் : இக்காலம் பல இளைஞர்களிடம் நல்ல பண்பு கிடையாது. அதற்கு ஊடகங்கள் முக்கிய காரணமாகின்றன. இளைஞர்கள் மூடப் பழக்கவழக்கங்களைக் கைவிட்டு நல்ல மனிதர்களோடு பழகியும், நல்ல புத்தகங்களைப் படித்தும் அதன் மூலம் சுயமரியாதை வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

Pin It