எடுப்பான தோற்றம், மிடுக்கான நடை, கணீரென்ற குரல், உரையாடலிலும், உரை யாற்றுவதிலும், தாம் அறிந்த கருத்துகளை அழுத்தம் -திருத்தமாக மொழிதல், மற்றவர்கள் என்ன நினைக்கிறார்களோ என்று தயங்காமல் தன் கருத்தை உரைத்தல், கொள்கையை உறுதியாகக் கடைப்பிடித்தல், தொய்வின்றித் தொடர்ந்து பணியாற்றுதல், உண்மை - நேர்மை இவற்றுடன் அனைவருடனும் கனிவுடனும் அன்புடனும் பழகுதல், விருந்தோம்பல் ஆகிய அனைத்தின் தொகுப்பே பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைக் குன்றம் சீர்காழி மா.முத்துசாமி அவர்கள்.

seerkazhi muthusamyவட மாநிலங்களில் பயணம்

1978இலிருந்து இந்திய ஒன்றிய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட, மண்டல் குழு அமைக்கப் படுவதற்கு முன்னும் அக்குழு அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரைகளை இந்திய அரசிடம் அளித்த பின், அது நடைமுறைப்படுத்தப்படுவதற்கான ஆணை பிறப்பிக்கப்படும் வரை அதற்காக சலிப்பின்றித் தொடர்ந்து உழைத்தார்.

மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடமைக் கட்சி (1976 முதல் 1987 வரை பெரியார் சமஉரிமைக் கழகம்)இன் துணைப் பொதுச் செயலாளர் என்ற முறையில் பொதுச் செயலாளரான தோழர் வே.ஆனைமுத்து அவர்களுடன் புதுதில்லி மற்றும் பீகார், உத்தரப் பிரதேசம், அரியானா, பஞ்சாப் ஆகிய இடங்களுக்கு அடிக்கடி பயணம் மேற் கொண்டு அங்குள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களிடையே இட ஒதுக்கீடு கோரிக்கை வெற்றி பெற ஆதரவு திரட்டும் பணியில் ஈடுபட்டு வந்தார். 17.09.1978 முதல் 19.10.1968முடிய பீகார் முழுவதும் பயணம் செய்து பரப்புரைச் செய்தார். 29.04.1978 முதல் நவம்பர் 2001வரை வட இந்தியாவுக்குப் பேரார்வத்துடன் சென்று வந்தார். பெரியாரின் கொள்கைகளை அங்கு பரப்புவதற்காக தொடர்ந்து தன் உழைப்பையும் பணத்தையும் செலவிட்டு வந்தவர் தான் தோழர் மா.முத்துசாமி அவர்கள்.

“பற்றற்ற உள்ளம்

படைக் கஞ்சா பேராண்மை

வற்றாத தன்மான உணர்ச்சி

கற்றார்க்குரிய கடப்பாடு

உறுதியோ டைந்தும்

பெரியார் தொண்டர்க்கு அணி.”

என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் வரிகளுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் நம் தோழர் மா.முத்துசாமி.

அகவை 20இல் சுயமரியாதைக்காரர் ஆனார்.

தம் இருபதாம் அகவை வரை தீவிர காங்கிரசு கட்சிப் பற்றாளராக இருந்த முத்துசாமி 1947இல் திருச்சியில் பெரியார் உரையாற்றிய ஒரு பொதுக் கூட்டத்தில் கல்லெறிவதற்காகச் சென்றார். பெரியாரின் உரையைத் தொடக்கம் முதல் தொடர்ந்து கேட்டார். அவரது உரையில் இருந்த ஆணித்தரமான அடிப்படைகள், மறுக்க முடியாத உண்மைகள் தோழர் முத்துசாமியைச் சிந்திக்க வைத்தது. அன்று முதல் பெரியார் சுயமரியாதைக் கொள்கைப் பற்றாளரானார்.

1948முதல் ஏற்றுக்கொண்ட கொள்கையைப் பரப்பத் தொடங்கினார். எதிலும் ஒரு தீவிரம் காட்டும் இயல்பினர் ஆதலால், கொள்கையைக் கடைப்பிடித்தலிலும் பரப்புவதிலும் உறுதியும் விசையும் அவரிடம் அவரிடம் இருந்தது.

குடும்பச் சூழல்- இளமையில் வறுமை.

திருநெல்வேலி மாவட்டம், கோவில்பட்டி வட்டம் (இப்போது விளாத்திகுளம்) ஆற்றங்கரை எனும் சிற்றூரில் மாடசாமி-வெள்ளையம்மாள் இணையர்க்கு 28.06.1927இல் முத்துசாமி மூன்றாம் குழந்தையாக - முதல் மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தோர் இரண்டு தமக்கையர், ஒரு தம்பி, இரண்டு தங்கையர். மாடசாமி யின் தந்தை அவ்வூர் சமீன்தாரிடம் முகாமையானப் பொறுப்பு அலுவலராகப் பணியாற்றினார். ஆனாலும் மாடசாமி தமக்கு சொந்தமான நிலத்தில் பயிர் செய்து வந்தார். மாடசாமியின் குடும்பம் பெரியதானதால் வறுமை வந்து சேர்ந்தது. முத்துசாமியின் அகவை மூன்றில் குடும்பம் சாத்தூருக்கு இடம் பெயர்ந்தது. முத்துசாமியின் படிப்பு அவ்வூர் எட்வர்டு பள்ளியில் ஆறாம் வகுப்பில் இடைநின்றது. 12அகவையில் எண்ணெய்க் கடை பணியாள் ஆனார். 13அகவையில் தனியாக திருச்சிராப்பள்ளிச் சென்றார். தலைச்சுமைப் பாத்திர விற்பனையில் ஈடுபட்டார். அன்றைய திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், தென்னாற்காடு, செங்கல் பட்டு மாவட்டங்களிலும் புதுவையிலும் உள்ள ஊர்களில் அலைந்து - திரிந்து பாத்திரங்கள் விற்பனை செய்தார்.

வாழ்க்கைத்துணை ஒப்பந்தம்

முத்துசாமிக்கு திருச்சியில் ஆதரவு அளித்து வந்தவர் வயனபெருமாள் என்பவர். குடந்தையில் வயனபெருமாளின் மாமனார் சீனியப்பர் அறிமுகம் கிடைத்தது. முத்துசாமியின் கடுமையான உழைப்பு, நேர்மையைக் கண்டு, அவர்தம் மகள் பேச்சியம்மாளை முத்துசாமிக்கு மணம் முடிக்க விரும்பினார்.

முத்துசாமி அவர்கள் சுயமரியாதைக் கொள்கையை ஏற்றுக் கடைப்பிடித்ததுடன் அவர் வசித்தப் பகுதியில் பரப்புவதிலும் ஈடுபட்டிருந்தார். எனவே, திருமணம் குடந்தையில் தோழர் சின்னசாமி தலைமையில் நடைபெற்றது. திருமணத்தில் சி.பி.சிற்றரசு, குடந்தை கே.கே.நீலமேகம் ஆகியோர் வாழ்த்துரைத்தனர்.

சாதி மறுப்புத் திருமணம்

திருச்சியில் முத்துசாமியின் நண்பர் கோபால்சாமி, நாயுடு வகுப்பைச் சேர்ந்தவர்; பட்டுநூல் சாதியைச் சேர்ந்த சுந்தரியம்மாளுக்கும் கோபால்சாமிக்கும் காதல் மலர்ந்தது. இக்காதலுக்கு இரு குடும்பத்தாரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். முத்துசாமியும் அவரின் மனைவியும் ஆதரித்தனர். அவ்விணையருக்கு முத்துசாமி முன் நின்று திருமணம் நடத்தி வைத்தார். இது அப்பகுதியில் நடைபெற்ற முதல் சாதி மறுப்புத் திருமணம் ஆகும். இதன்பின், முத்துசாமியின் குடும்பம் குடந்தைக்கு இடம்பெயர்ந்தபோது, கோபால்சாமி-சுந்தரியம்மாள் இருவரையும் உடன் அழைத்துவந்து, அவர்களுக்கு உதவி, ஓர் உணவுக்கடையை நடத்தச் செய்தார்.

கைம்பெண் மறுமணம்

கொள்ளிடம் பெரியசாமிக்கும் கைம்பெண்ணான தங்கதுரைச்சியம்மாளுக்கும் முத்துசாமி முன்நின்று, மதுரை மா.சா.இராமசாமி அவர்கள் தலைமையில் திருமணம் நடத்தி வைத்தார். தஞ்சை, திருச்சி மாவட்டப் பகுதியில் நாடார் வகுப்பில் நடந்த முதல் கைம்பெண் திருமணம் இது ஆகும்.

சீர்காழி வாசி முத்துசாமி

1963இல் சீர்காழி கடைவீதியில் “முத்து எவர்சில்வர் மாளிகை” என எவர்சில்வர் பாத்திர விற்பனை கடையைத் தொடங்கினார். குடும்பமும் சீர்காழியில் அமைந்தது. அன்பழகன், செந்தமிழ்ச்செல்வி, இரணியன், மரகதமணி, நேருஜி (பெண்) ஆகியோர் இவரின் மக்கள். குடும்ப உறுப்பினர்களை மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், பயிற்சி வகுப்புகளுக்கு அழைத்துச் சென்றதன் காரணமாக அனைவரும் கொள்கை நெறியாளர் ஆகினர்.

திராவிடர் கழகத்தில் இயக்கப் பணி

1975 வரை தஞ்சை மாவட்ட, (இப்போது தஞ்சை, திருவாரூர், நாகை) திராவிடர் கழகப் பொருளாளராகச் செயல்பட்டார். நாங்கூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் கைத்தொழில் ஆசிரியராகப் பணியாற்றிய இரெ.தனஞ்சேயன்-பாக்கியலட்சுமி திருமணம் தோழர் முத்துசாமி தலைமையில் நடைபெற்ற முதல் சுயமரி யாதைத் திருமணம். பின்னர் நூற்றுக்கணக்கான சுயமரியாதைத் திருமணங்களை இவர் தலைமை ஏற்று நடத்திவைத்தார். சீர்காழி ஏ.எஸ்.குருசாமிக்கும் டெய்சிராணிக்கும் நடத்திய திருமணம் இந்து, கிருத்துவ மதமறுப்புத் திருமணமாகும்.

1949இல் நடந்த பெரியார் - மணியம்மை திருமணம் இவருக்கு ஏற்புடையதாக இல்லாத நிலை யிலும் பெரியாரின் பெரும்பணியைக் கருத்தில் கொண்டு, தொடர்ந்து திராவிடர் கழகப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். விடுதலை ஆசிரியராகவும் திராவிடர் கழகப் பொதுச் செயலாளராகவும் விளங்கிய குத்தூசி குருசாமியின் சொற்பொழிவுகளையும் எழுத்துகளையும் விரும்பிப் படிப்பவர் மா.முத்துசாமி. 1962 சனவரியில் குத்தூசி குருசாமி தி.க.விலிருந்து விலக்கப்பட்டார். திராவிடர் கழக மத்திய நிர்வாகக் குழுத் தலைவராக இருந்த திருச்சி தி.பொ.வேதாசலம் அவர்களும் தி.க.வில் இருந்து நீக்கப்பட்டார். குத்தூசி குருசாமியும் தி.பொ.வேதாசலமும் இணைந்து “தமிழ்நாடு சுயமரி யாதை இயக்கம்“ எனப் புதிய அமைப்பைத் தொடங்கிய போதும் மா.முத்துசாமி தி.க.விலேயே செயல்பட்டார்.

மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடமைக் கட்சி (பெரியார் சமஉரிமைக் கழகம்)

பெரியார் மறைவுக்குப் பின், திராவிடர் கழகத்தில் இருந்து பலர் விலக்கப்பட்டனர். அவ்வமைப்பின் செயல்பாடுகளில் மனநிறைவின்மையுடன் இருந்தனர் பலர். இவர்கள் அனைவரும் 08.08.1976அன்று சீர்காழியில் தோழர் மா.முத்துசாமி இல்லத்தில் திருச்சி தோழர் வே.ஆனைமுத்து தலைமையில் கூடி “பெரியார் சமஉரிமைக் கழகம்“ என்ற அமைப்பை நிறுவினர். இந்த அமைப்பு 13.03.1988 முதல் “மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடமைக் கட்சி” என்ற பெயரில் இயங்கிக் கொண்டுள்ளது. இவ்வமைப்பின் பொதுச் செயலாளராக தோழர் வே.ஆனைமுத்துவும் துணைப் பொதுச் செயலாளராக தோழர் மா.முத்துசாமியும் இயங்கி வந்தனர்.

தொண்டின் இறுதி

25ஆண்டுகள் நீரிழிவு நோயுடன் இருந்தும் ஓய்வறியாது, தொய்வின்றி பணியாற்றியத் தொண்டர்- தலைவர் தோழர் மா.முத்துசாமி. சீர்காழியில் வணிகர் சங்கம் தொடங்கக் காரணமானவர்.

சீர்காழி நுகர்வோர் பாதுகாப்புக் குழுவின் அமைப்பாளராக விளங்கியவர் மா.முத்துசாமி. பல்வகை ஏடுகள், பருவ இதழ்கள், நூல்கள் விற்பனை செய்வது, பொதுக்கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்வது, மாநாடுகள் நடத்துவது, போராட்டங்களில் பங்கேற்பது என மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் தளபதியாகவும், தோழர் வே.ஆனைமுத்து அவர்களுக்கு ஏற்ற தோழராகவும், பெரியாரின் கொள்கை மறவராகவும் விளங்கிய கொள்கைக் குன்றம் சீர்காழி மா.முத்துசாமி அவர்கள் 27.04.2002இல் தம் 75ஆம் அகவையில் அரைநூற்றாண்டு இயக்கத் தொண்டினை முடித்துக் கொண்டார்.

தோழர் சீர்காழி மா.முத்துசாமி ஏற்று, கடைப்பிடித்தக் கொள்கைகள் வெல்க!

- சா.குப்பன்

Pin It