வாழ்க்கைக்குத் தேவையான பொருளீட்டலுக்காகப் பலரும் பிறந்த மண்ணை விட்டுப் பெருநகரங்களுக்கு வருகிறார்கள். தமிழகம், இந்தியா, உலகம் எனப் பல பகுதிகளிலிருந்தும் சென்னைக்கு வந்து வாழ்கின்றவர்கள் இலட்சக்கணக்கில் உள்ளனர். அவர் களுள் குமரி மாவட்டத்தில் பிறந்து சென் னையில் வாழ்கின்றவர்கள் தங்களு டைய பிறந்த மண்ணையும் மக்களையும் சிந்திக்கின்றவர்களாகி குமரி மாவட்ட வரலாற்றுப் பேரவை என்னும் அமைப்பை 2004-ஆம் ஆண்டில் உருவாக்கிச் செயல்பட்டு வருகின்றனர். இப்பேரவை 2006-ஆம் ஆண்டில் “கன்னியாகுமரி மாவட்டம் - அரசியல் சமூக வரலாறு, முதல் தொகுதி” என்னும் நூலை எழுதி வெளியிட்டது. 2014-ஆம் ஆண்டில் “தமிழர் வரலாற்றில் வேணாடு” என்னும் நூலை எழுதி வெளியிட்டது. 2018-ஆம் ஆண்டில் “கன்னியாகுமரி மாவட்டம் - அரசியல், சமூக வரலாறு, இரண்டாம் தொகுதி” என்னும் நூலை எழுதி வெளியிட்டுள்ளது.

விடுதலைக்கு முன் திருவிதாங்கூர் மன்னராட்சிக்கும், விடுதலைக்குப் பின் கேரள மாநிலத்தின் ஆட்சிக்கும் உட்பட்டி ருந்த குமரி மண்ணைத் தாய்த் தமிழகத்துடன் இணைப்ப தற்காக நடத்தப்பட்ட போராட்டத்தில் பங்கேற்று முக்கியப் பங்காற்றிய மார்சல் நேசமணி, ஏ. குஞ்சன் நாடார், அ. அப்துல் ரசாக், அலெக்சாண்டர் மனுவேல் சைமன், தோப்பூர் மு. சுவாமி நாதன், தோப்பூர் மு. சுப்பிரமணியன், ஆ. சிங்கராயர், ப. தங்கமணி, சாம்நத்தானியேல், சாமி நாடார், புலவர் கு. ஆறுமுகப் பெருமாள் நாடார் ஆகிய 11 பேர்களின் பங்களிப்பு இந்நூலில் சொல்லப் பட்டுள்ளன.

மேலும் தென் எல்லைப் போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தியாகிகள் மற்றும் குடும்பத்தினர், அனந்தனும் டச்சுப் படைகளுக்கு எதிரான போரும், வேணாடு மன்னர் பரம்பரை, அய்யா வழி அறிவோம், கன்னியாகுமரி மவாட்ட கெசட்டியர் - குழப்பங்களும் தேவையும் ஆகிய தலைப்புகளிலும் பல அரிய செய்திகள் சொல்லப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி மாவட்ட வரலாற்றுப் பேரவை யினை நிறுவுதல், ஆய்வு, நூலாக்கம், நூல் வெளியீடு ஆகிய பணிகளை முன்னெடுத்துச் செய்வதுடன், அப்பணி முழுமை பெறும்வரை முழு மனதுடன் பாடுபட்டு வருகின்ற இந்த அமைப்பின் தலைவர் நாஞ்சில் செ. நடராசன் மற்றும் அதன் நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். தமிழக வரலாறு எழுதப்படுவதற்கு இதுபோன்று பல பகுதிகளுக்கும் நூல்கள் எழுதப்பெற்று வெளியிடப் பட வேண்டும். 216 பக்கம் கொண்ட இந்நூலின் விலை ரூ.220/-

முகவரி : கன்னியாகுமரி மாவட்ட வரலாற்றுப் பேரவை

143, பெருமாள் கோயில் தெரு, ரங்கா நகர், குரோம்பேட்டை, சென்னை - 600 044.

- கலசம்