(எண்சீர் விருத்தம்)

தேன்சிந்தும் அடைபோலக் கிழக்கு வானில்

                தெரிகின்ற ஆதவனும் சிரிக்கும் காலை

நான்கொஞ்சம் நறுமலரின் தோட்டந் தன்னில்

                நடந்தபடி சுவைத்திருந்தேன் பார்த்துப் பார்த்து

பூண்டினமும் புல்லினமும் மலிந்திருந் தாலும்

                பூவினிலே புகழ்கொள்ளும் வாசத் தாலே

மூண்டுவந்த சிந்தனையின் நடுவே எந்தன்

                முத்தமிழின் நிலைசற்றே எண்ணிப் பார்த்தேன்

செடிகொடிகள் மரம்விலங்கு பறவை கட்கும்

                செல்ஒன்றில் செழித்துவந்த உயிர்க ளுக்கும்

அடிநிலம்நீர் நெருப்போடு வானம் காற்று

                அத்தனைக்கும் அடையாளம் தனித்து உண்டு

களிப்புடனே மனங்கலந்து தமிழ ரெல்லாம்

                கருத்ததனை யறிந்திடவோர் மொழியைத் தந்தும்

தனித்ததொரு கொடிநாடு கொற்றம் இன்றி

                தவிக்கின்றாள் தமிழன்னை தரைமீ திங்கே

ஆனாலும் தமிழ்த்தோட்டம் தன்னில் இன்று

                ஆரியமும் ஆங்கிலமும் அன்னியும் நூறும்

தாராள மாய்வந்து முளைத்து விட்டு

                தமிழேதான் நானென்று தருக்காய்க் கூறும்

மதமென்னும் பெயரலே மடமை கோடி

                மக்களது மனத்தினிலே சேர்தல் போல

பதமென்னும் பசுவேடம் போட்டு இங்கு

                பல்வேறு மொழிச்சொற்கள் தமிழை மேயும்!

ஆரியராம் அந்நாளில் இங்கே வந்து

                அவமான வடமொழியை வளர்ப்ப தற்கு

சீரியதாம் தமிழ்மொழியை மாற்றி விட்டார்

                சிக்கலினை நாக்கினிலே ஏற்றி விட்டார்

ஊரினிலே கொண்டாட்டம் மக்கள் கூட்டம்

                உல்லாசக் கலைகளுடன் ஆட்டம் பாட்டம்

தேரினிலே வடமொழியை ஏற்றி விட்டு

                தென்தமிழர் தன்மொழிதான் மறந்து விட்டார்!

நாக்கினிலும் வாக்கினிலும் தூய்மை இல்லை

                நல்லதமிழ்ப் பேச்சினிலும் தூய்மை இல்லை

பாக்களிலும் பாட்டினிலும் தூய்மை இல்லை

                பழகிவரும் பல்துறையில் தமிழும் இல்லை

கூப்பிடவோர் பிள்ளைபெயர் தமிழில் இல்லை

                கும்பிடுவோர் சிந்தனையும் தமிழாய் இல்லை

சாப்பிடவும் சம்பளமும் தமிழில் கேட்கும்

                தமிழருக்குத் தமிழரென்ற உணர்வே இல்லை!