கடல்தாண்டி வந்த இலட்சக்கணக்கான மக்களின் கண்ணீரை கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழகம் சந்தித்துக் கொண்டிருக்கிறது. இரு நூற்றாண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர்களால் உள்ளுர் கங்கானிகள் மூலம் கூலி உழைப்பிற்காகக் கொண்டு செல்லப்பட்ட தமிழகக் கிராமப்புற உழைக்கும் ஏழை மக்கள் இலங்கையின் காடு மேடுகளை இம்மக்களின் உழைப்பினால் சீர்படுத்திப் பெருந்தோட்டங்களை உருவாக்கி செல்வத்தை வாரிச் சுருட்டிக் கொண்டனர். 1948-இல் இந்த கடும் உழைப்புக்கும் அதனால் விளைந்த வளங்களுக்கும் பரிசாக இம் மக்களின் வாக்குரிமையைப் பறித்து நாடற்றவாகளாய் நடுத் தெருவில் விட்டனர். பின்னர் இந்திய-இலங்கை அரசுகளின் துரோகம் 1964-ம் ஆண்டு சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தமாக வடிவெடுத்தது. இந்த ஒப்பந்தத்தின் விளைவாக சுமார் 5,25,000 பேர் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர். இவ்வாறு அனுப்பப்பட்ட மக்களையே “தாயகம் திரும்பியோர் (REPARTIATES)” என்கிறோம்.

இவ்வாறு “இராமானுஜம்” என்ற கப்பல் மூலம் தலைமன்னாரிலிருந்து இராமேஸ்வரம் வந்து சேர்ந்தார்கள். மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டு, அதன் பின்னர் பிற இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தாயகம் திரும்பியோருக்கான மறுவாழ்வுத் திட்டங்கள்:

தாயகம் திரும்பிய மக்களுக்கான மறுவாழ்வுத் திட்டங்கள் ஒன்றிய அரசின் உதவியுடன் மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டன. மொத்தத் தாயகம் திரும்பியேரில் சுமார் 75%க்கு மேல் தமிழ்நாட்டில் குடியேறினர். மீதமுள்ளோர் கேரளா, காநாடகா, ஆந்திரா ஆகிய தென் மாநிலங்களில் குடியமர்த்தப்பட்டனர்.

1) வியாபாரக் கடன்

2) வீட்டுக்கடன்

3) அரசுவேலை

4) கூட்டுறவு சர்க்கரை மற்றும் நூற்பாலைகளில் வேலை

5) போக்குவரத்துக் கழகங்கள் உள்ளிட்டப் பொதுத்துறை நிறுவனங்களில் வேலை

6) விவசாயத் திட்டங்கள்

7) அரசு தேயிலைத் தோட்டக் கழகம்

8) அரசு ரப்பர் தோட்டக்கழகம்

9) கல்வி. வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு

10) பிற மாநிலங்களில் தொழிற்பயிற்சி மற்றும் சிறப்புப் பயிற்சிகள்

11) ‘ரெப்கோ வங்கி’ உதவித் திட்ட வேலைகள்.

இவ்வாறு பல மறுவாழ்வுத் திட்ஙகள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டன. எனினும் இத்திட்டங்கள் மூலம் தாயகம் திரும்பிய மக்களில் மிகப் பெரும்பான்மையினருக்கு முறையான மறுவாழ்வு கிடைக்கவில்லை.

இந்தியத் துணைத் தூதரகம்:

இலங்கையில் கண்டி நகரில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகமே சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தப்படி தாயகம் திரும்பியோர் தொடாபான பணிகளை கவனித்தது. இங்கு கடவுச் சீட்டு வழங்கப்பட்டது. இது ஒரு தடவை மட்டும் இலங்கையில் இருந்து இந்தியா வருவதற்கானக் கடவுச்சீட்டாகும் (சிவப்பு நிற பாஸ்போர்ட்). தாயகம் திரும்புவோரின் மறுவாழ்வு குறித்துப் பதிவேடாக குடும்ப அட்டை ஒன்று வழங்கப்பட்டது. இந்தக் குடும்ப அட்டையில் மறுவாழ்வுத் திட்டங்கள் பதிவு செய்யப்பட்டன.

தனி வட்டாட்சியர் (மறுவாழ்வு) – Special Thasildhar (Rehabilitation):

தமிழ்நாட்டில் ஒவ்வொரு வட்டத்திலும் (தாலுகா) தாயகம் திரும்பியோர் அதிகமாகக் குடியேறிய பகுதிகளில் மறுவாழ்வுக்கென சிறப்பு வட்டாட்சியர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். இவரது அலுவலகமே மறுவாழ்வு அலுவலகமாக இருந்தது. தற்போது இந்த அலுவலகங்கள் இல்லை. இன்றும்கூட மறுவாழ்வு தனி வட்டாட்சியர் அலுவலகம் அமைந்திருந்த இடம் துறையூரில் ‘சிலோன் ஆபீஸ்” என்று அழைக்கப்படுகிறது.

1. வியாபாரக் கடன்:

இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மிகப் பெரும்பாலானக் குடும்பங்களுக்கு ரூ. 3000/- வியாபாரக் கடனாக வழங்கப்பட்டது. முன் பின் தெரியாத புதிய இடத்தில் எவ்வாறு ஒரு வியாபாரத்தை இவர்களால் செய்ய இயலும். முகாமில் இருந்து வெளியே அனுப்பப்பட்ட பின்னர் எங்கே செல்வது என்று தெரியாது விழித்துக் கொண்டிருந்தனர். சில உறவினர்களை நம்பிப் போய் இருக்கும் கொஞ்சத்தையும் இழந்து ஏமாந்தவர்கள் அநேகம் பேர். சொந்தப் பூர்வீக ஊர்களில் இருந்த மூதாதையர்களின் சிறிய அளவிலான சொத்துக்களையும், பெரும்பாலும் உறவினர்களே கைப்பற்றியிருந்தனர். இவ்வாறு அனாதையாக நின்ற நிலையில் அரசு வியாபாரக் கடனாகக் கொடுத்த பணம் சில மாதங்களிலேயே செலவாகிப் போனது.

திட்டம் குடும்பங்கள்

---------- --------------------

1) வியாபாரக் கடன் - 77,445

2) வேளாண் கடன் - 3,275

3) தேயிலைத் தோட்டக் கழகம் - 3,445

4) ரப்பர் தோட்டக் கழகம் - 285

5) சிங்கோனா தோட்டம் - 125

6) நூற்பாலைகள் - 3,942

7) ரெப்கோ உதவித்திட்டம் - 4,918

8) சுய வேலைவாய்ப்பு - 526

9) வீட்டுக் கடன் - 57,461

மொத்தம். 151422

பிற மாநிலங்களில்:

கர்நாடகம் - 988

கேரளா - 1599

ஆந்திரா - 1962

புதுச்சேரி - 25

ஆந்தமான் - 64

குஜராத் - 1

2. வீட்டுக்கடன்:

தாயகம் திரும்பியவர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆரம்பத்தில் ரூ. 5000/- வீட்டுக்கடனாக வழங்கப்பட்டது. பின்னர் இத்தொகை ரூ. 10000/-ஆக உயர்த்தி வழங்கப்பட்டது. இந்தத் தொகையிலேயே வீட்டுமனையும் வாங்கிக்கொள்ள வேண்டும். நாடுவிட்டு நாடு வந்த மக்களால் இங்குள்ள அரசு அதிகாரிகளின் கெடுபிடிகளையும் லஞ்ச லாவண்யங்களையும் தாண்டி கடன் பெறுவதும் இந்த தொகையை வைத்து வீடு கட்டுவதும் மனை வாங்குவதும் இயலாத செயல். எனவே, இந்தச் சூழலைப் பயன்படுத்தி சம்பாதிக்க ஒரு இடைத்தரகர் கூட்டம் (புரோக்கர்/காண்ட்ராக்டர்) உருவாகியது. அரசு அதிகாரிகளுடன் இவர்கள் கூட்டணி வைத்துக் கொண்டனர்.

தாயகம் திரும்பிய மக்கள் குடியிருக்கும் இடங்களுக்கே சென்று அவர்களது பாஸ்போர்ட், குடும்ப அட்டை ஆகியவற்றை சேகரித்தனர். ஒரு இடத்தை வாங்கி பல மனைகளாகப் பிரித்து, கடன் தொகையை மொத்தமாகப் பெற்று சிறிய அளவிலான வீடுகளைக் கட்டினர். இவ்வாறு உருவானதே சிலோன் காலனிகள். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இத்தகைய சிலோன் காலனிகளைக் காணலாம்.

இவ்வாறு தங்கள் பாஸ்போர்ட்களையும், குடும்ப அட்டைகளையும் புரோக்கரிடம் (காண்ட்ராக்டர்) கொடுத்துவிட்டு எங்கோ ஒரு இடத்தில் பல்லாயிரக் கணக்கானக் குடும்பங்கள் கடந்த 40, 50 வருடங்களாக வாழ்கின்றனர். தங்களுக்கான வீடு எந்த ஊரில் எந்தக் காலனியில் கட்டப்பட்டுள்ளது என்ற தகவலே இவர்களுக்குத் தெரியாது. இவ்வாறு விடப்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டு மனைகளைக் கைப்பற்றி போலி ஆவணங்கள் மூலம் விற்கப்பட்டது ஏராளம். பல காலனிகள் அடையாளம் தெரியாமலேயே போய்விட்டன.

3. வேளாண் திட்டம்:

வேளாண் திட்டம் சில மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு குடும்பத்திற்கு 3 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. விவசாயம் குறித்து எதுவுமே அறியாத இவர்களால் எவ்வாறு விவசாயம் செய்ய முடியும்? பண்படுத்தப்படாத, நீர்ப்பாசன வசதி இல்லாத நிலங்களை வைத்து விவசாயம் செய்ய இயலவில்லை. எனவே அன்றாட உணவுக்காக கூலிவேலை தேடி சென்றுவிட்டனர். இவ்வாறு வழங்கப்பட்ட வேளாண் நிலங்களில் பெரும்பகுதி தாயகம் திரும்பியோரால் கைவிடப்பட்ட நிலையில், அவை பிறரால் (உள்ளுர்வாசிகள்) கைப்பற்றப்பட்டுவிட்டன. மொத்தத்தில் வியாபாரக் கடன், வீட்டுக்கடன, வேளாண் திட்டம் என்பன முழுமையாகத் தோல்விடைந்துவிட்டன. இக்கடன்கள் அனைத்தையும் (1984 மார்ச் 31 வரை) ஒன்றிய அரசு தள்ளுபடி செய்துவிட்டது குறிப்பிடத்தக்கது. 

4. நூற்பாலைகள் மற்றும் சர்க்கரை ஆலைகள்:

தமிழ்நாட்டிலும் பிற தென் மாநிலங்களிலும் உள்ள கூட்டுறவு நூற்பாலைகளுக்குப் பல குடும்பங்கள் அனுப்பப்பட்டன. இவ்வாறு அனுப்பப்பட்டக் குடும்பங்களில் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலையும் குடியிருக்க வீடும் கிடைத்தது. வீட்டுக்கடன் திட்டத்தின் கீழ் இந்த வீடுகளும் மனைகளும் சொந்தமாகவே கொடுக்கப்பட்டன.

இவ்வாறு நூற்பாலைகளில் வேலை கிடைத்தவர்களின் வாழ்நிலை சற்று நன்றாகவே உள்ளது. மாதம் தோறும் ஒரு ஊதியம் இவர்களுக்கு உத்திரவாதமாக இருந்தது. எனினும் குடும்பத்தலைவர் இறந்த பிறகோ ஓய்வுபெற்ற பிறகோ அந்தக் குடும்பத்தில் எவருக்கும் இந்த ஆலைகளில் வேலை கொடுக்கப்படவில்லை. எனவே இவர்கள் வேறு கூலி வேலை தேடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

5. கல்வி உதவிகள்:

இலங்கையில் 10, 11, 12 வகுப்புகளில் படித்தவர்களுக்கு சிறப்பு வகுப்பொன்று மதுரையில் நடத்தப்பட்டு பல்வேறு அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் அனுமதி வழங்கப்பட்டது. இவ்வாறு சென்றவர்கள் அரசு பணிக்கு சென்று நிரந்தரமான வருமானம் பெற்றனர். இதேபோல கும்மிடிப்பூண்டி (திருவள்ளுர் மாவட்டம்) பயின்ற அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்களுக்கும் வேலை கிடைத்தது.

6. சிறப்புப் பள்ளி:

புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் என்ற இடத்தில் தாயகம் திரும்பியோர்களுக்கான உண்டு, உறைவிட சிறப்பு மேல்நிலைப்பள்ளி ஒன்று ஏற்படுத்தப்பட்டு, இப்பள்ளியில் நூற்றுக்கணக்கானோர் படித்தனர்.

7. அரசு வேலைகள்:

கல்வி, வேலைவாய்ப்பில் தாயகம் திரும்பியோருக்கு 2% இடஒதுக்கீடு வழங்கப்பட்டதன் மூலம் பலர் அரசு வேலைகளுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இவ்வாறு அரசு வேலைகளுக்குச் சென்றவர்கள் நிலை இன்று மிக உயர்வாக உள்ளது.

8. ரெப்கோ வங்கி:

தாயகம் திரும்பியோர் கூட்டுறவு மற்றும் நிதி மற்றும் வளர்ச்சி வங்கி (Repartiates Co-op. and Finance and Development Bank) என்ற நிதி நிறுவனம் 1969-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ் தொடங்கப்பட்ட இந்த வங்கியில் ‘அ’ வகுப்பு உறுப்பினர்களாகத் தாயகம் திரும்பியோர் (இலங்கை மற்றும் பர்மாவில் இருந்து வந்தோர்) இணைக்கப்பட்டனர். பெரும்பாலானத் தாயகம் திரும்பிய மக்களுக்கு இவ்வாறு தமக்கென ஒரு வங்கி ஆரம்பிக்கப்பட்டுள்ள விபரம் இன்றுவரை (சுமார் 63 ஆண்டுகளாகியும்) தெரியாத நிலையே உள்ளது. இன்றுவரை சுமார் 10% மட்டுமே இவ்வங்கிளல் உறுப்பினர்களாக உள்ளனர். விபரம் தெரிந்த, வசதிபடைத்த, கல்வி அறிவுடைய சிறிய பிரிவினர் இவ்வங்கியின் திட்டங்களைப் பயன்படுத்தி வளர்ச்சி பெற்றுள்ளனர். இவ் வங்கியின் ‘அ’ வகுப்பு உறுப்பினர்களால் தெரிவு செய்யப்படும் பேரவை பிரதிநிதிகள் இயக்குநர்கள் சிலரைத் தெரிவு செய்கின்றனர். மற்ற இயக்குநர்கள் அரசு அதிகாரிகளே.

இந்த வங்கி தற்போது ஒரு வணிக வங்கியாக மாற்றப்பட்டுவிட்டது. தாயகம் திரும்பியோர் நல அறக்கட்டளை என்ற ஒரு அமைப்பை இவ்வங்கியின் கட்டுப்பாட்டில் நிறுவி தாயகம் திரும்பிய மக்களுக்காக சிறிய அளவிலான உதவிகள் வழங்கப்படுகின்றன. ஆரம்பக் காலங்களில் தாயகம் திரும்பியோரை வேலைக்கு வைத்துக் கொள்ளும் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஒரு நபருக்கு ரூ. 25000/- வீதம் ரெப்கொ வங்கி வழங்கியது குறிப்படத்தக்கது.

9. தமிழ்நாடு தேயிலைத் தோட்டக்கழகம் (Tamil Nadu Tea Plantation Corporation Ltd.):

தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம் (TANTEA) 1968-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் அமைந்துள்ளது. சுமார் 2053.7580 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கழகத்தில் 3724 நிரந்தர தொழிலாளர்களும் 1014 தற்காலிகத் தொழிலாளர்களும் பணியாற்றுகிறாாகள். இலங்கையிலிருந்த தாயகம் திரும்பிய மக்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் நோக்குடன் அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் அவர்களால் தொடங்கப்பட்டது.

தேயிலைத் தோட்டக் கழகம் தாயகம் திரும்பியவர்களுக்கு மிகவும் பொருத்தமான மறுவாழ்வு திட்டமாக இருந்தது. இது தவிர ஏராளமானத் தனியார் தேயிலைத் தோட்டங்களும் இருந்ததால் பொருவாரியானத் தாயகம் திரும்பிய மக்கள் நீலகிரி மாவட்டத்திலேயே குடியேறினா. நீலகிரி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகையில் 60% தாயகம் திரும்பியோரே. கூடலூர், குன்னூர் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளில் அதிக எண்ணிக்கையில் தாயகம் திரும்பியோரே வாக்காளர்களாக உள்ளனர். தற்போது தேயிலைத் தோட்டக் கழகத்தில் பணியாற்றம் தொழிலாளர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் பல நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர்.

 தேயிலைத் தோட்டக் கழகத் தொழிலாளர்களுக்கு சொந்தமாகக் குடியிருக்க வீடு வழங்கப்படவில்லை. தொழிலாளி ஓய்வு பெற்றபின் அவரது குடும்பத்தில் ஒருவர் வேலையில் சேரவில்லையென்றால் அந்த வீட்டைக் காலி செய்ய வேண்டும். தாயகம் திரும்பிய அவர்களுக்கு சொந்த மனையோ, வீடோ இல்லாததால் அவர்களுக்கு இது பெரும் கேள்விக் குறியாக உள்ளது.

 தேயிலைத் தோட்டக் கழகம் தமிழ்நாடு அரசின் வனத்தறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால் பல சிரமங்களை மக்கள் எதிர்நோக்குகின்றனர்.

 வன நிலங்கள் என்ற அடிப்படையில் தேயிலைத் தோட்டங்களின் பரப்பளவைக் குறைத்து வருவது தொழிலாளர்களின் வாழ்வாதார சிக்கலாக உருவெடுத்துள்ளது.

10. அரசு ரப்பர் கழகம் (Arasu Rubber Corporation):

அரசு ரப்பர் கழகம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்த தாயகம் திரும்பியவர்களே இங்கு முழுமையாகப் பணியாற்றுகிறார்கள். த.நா. தேயிலைத் தோட்டக் கழகத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் அனைத்தப் பிரச்சினையும் ரப்பர் கழகத் தொழிலாளர்களும் எதிர்நோக்குகின்றனர். 1984-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் மாநில அரசின் கட்டுப்பாட்டில் ரப்பர் தோட்டங்கள் உள்ளன. சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்கள் இங்கு வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

தேயிலைத் தோட்டக் கழகத்தைப் போலவே அரசு ரப்பர் கழகத் தொழிலாளர்களுக்கும் மிகக் குறைந்த ஊதியமே வழங்கப்படுகிறது. வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால் வனப்பகுதி என்ற அடிப்படையில் தோட்டங்களின் பரப்பளவு குறைக்கப்பட்டு வருகிறது. இதனால் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ரப்பர் கழகத்தின் பரப்பளவு 4,785.70 ஹெக்டேர். இதில் வனத்துறைக்குச் சொந்தமானப் பரப்பளவு 3,994.495 ஹெக்டேர். எனினும் 1,243 ஹெக்டேர் நிலத்தில் மட்டுமே பால் வடிப்புப்பணி நடைபெற்று வருகிறது. பயன்பாடற்ற இடம் என்று காட்டுவதன் மூலம் ரப்பர் கழகத்தின் நிலங்களை வனத்துறையிடம் ஒப்படைக்கும் சதி நடந்தேறி வருகிறது.

பிற மாவட்டங்களில்...

நீலகிரி மாவட்டம், கோவை மாவட்டம் வால்பாறை, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு போன்ற மலைப்பகுதிளில் தாயகம் திரும்பிய மக்கள் செறிவாக வாழ்கின்றனர். இது தவிர அனைத்துப் பிற மாவட்டங்களிலும் தாயகம் திரும்பியோர் வாழ்கின்றனர். ஈரோடு, கோவை, கரூர், திருப்பூர், சேலம், திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் தாயகம் திரும்பியோர் வாழ்கின்றர். மூன்றாவதாக மதுரை, விருதுநகர், திருநெல்வேலி முதலிய தென் மாவட்டங்களிலும் தாயகம் திரும்பியோர் கனிசமான எண்ணிக்கையில் உள்ளனர். ஏனைய மாவட்டங்களிலும் தாயகம் திரும்பியோர் பரவலாக வாழ்கின்றனர்.

அரசுப்பணி, பொதுத்துறை நிறுவனங்கள், நூற்பாலைகள் முதலியவற்றில் வேலைக்குச் சென்றவர்களின் வாழ்நிலை நன்கு சிறப்பாகவே உள்ளது. கையில் கனிசமான பணத்துடன் வந்த வணிகர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளனர்.

தாயகம் திரும்பிய மக்களில் நிரந்தர மறுவாழ்வைப் பெற்று நல்ல முன்னேற்றமான நிலையில் வாழ்பவர்கள் பத்து முதல் இருபது சதவீதத்தினர் மட்டுமே. அன்றாடக் கூலித் தொழிலை நம்பி வாழ்பவர்களின் எண்ணிக்கை 60 முதல் 70 சதவீதம் வரை இருக்கலாம். இவர்கள் நகர் புறங்களில் கூலித் தொழிலாளர்களாக உள்ளனர். கிராமங்களில் குடியேறி விவசாயம் செய்பவர்கள் மிக சொற்ப எண்ணிக்கையில் மட்டுமே உள்ளனர்.

பிற மாநிலங்களில்...

கேரளா, ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் தாயகம் திரும்பிய மக்கள் வாழ்கின்றனர். தமிழ்நாட்டுக்கு அடுத்த நிலையில் கேரளாவிலேயே அதிக எண்ணிக்கையில் வாழ்கின்றனர். கர்நாடகத் தோட்டங்களில் கனிசமான எண்ணிக்கையில் உள்ளனர். ஆந்திர மாநிலத்தில் நெல்லூர், பிரகாசம் ஆகிய மாவட்டங்களில் தாயகம் திரும்பியோர் வசிக்கின்றனர்.

பிற மாநிலங்களில் வாழ்கின்றத் தாயகம் திரும்பியோர் நிலை பொருளாதார ரீதியாக ஓரளவு நன்றாக இருந்தாலும், ஏனைய பல்வேறு வகையானப் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். மொழிப் பிரச்சினை முதன்மையானதாக உள்ளது. தாயகம் திரும்பியோரின் குழந்தைகளுக்குத் தமிழ்வழிப் பள்ளிகள் இல்லாதது மிகப்பெரும் பிரச்சினையாக உள்ளது.

தாயகம் திரும்பியோர் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள்:

1. ஆவணங்கள்:

இலங்கையிலிருந்து தாயகம் திரும்பும்போது கொண்டுவரும் கடவுச்சீட்டு, குடும்ப அட்டை ஆகிய இரு ஆவணங்களும் அடிப்படையான ஆதாரங்களாக உள்ளன. வீட்டுக்கடன் பெறுவதற்காக இடைத்தரகர்களின் மூலம் அரசு அலுவலகங்களில் கொடுக்கப்பட்டு, அவை மீட்க முடியாத நிலையில் உள்ளன. இதனால் ரெப்கோ வங்கியில் ‘அ’ வகுப்பு உறுப்பினராக சேரமுடியாத நிலை உள்ளது. தாயகம் திரும்பியவர் என்று அடையாளப்படுத்த இயலாத நிலை முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றாக உள்ளது.

2. அரசு சலுகைகள்:

தாயகம் திரும்பியோருக்கான அடிப்படை சலுகையான கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு முற்றாக நீக்கப்பட்டுவிட்டது. இதனால் தாயகம் திரும்பியோரின் வாரிசுகள் கல்வி, வேலைவாய்ப்புகளில் பின் தங்கியுள்ளனர்.

3. கடன் ரத்து:

வீட்டுக்கடன், வியாபாரக்கடன், வேளாண் கடன் முதலியன முற்றிலும் ரத்து செய்யப்பட்டு அதற்கான அரசாணைகள் வெளியிடப்படாத நிலையில், அல்லது அந்த அரசாணைகள் தாயகம் திரும்பியோருக்கு கிடைக்காத நிலையில் பல இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

வீட்டுக்கடன் மூலம் கட்டப்பட்ட வீடுகளும் மனைகளும் பெருமளவில் பிறரால் கைப்பற்றப்பட்டுவிட்டன. இவை குறித்து கொடுக்கப்படும் புகார்கள்மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

4. பாஸ்போர்ட்:

இலங்கையிலிருந்து வரும்போது கொண்டுவந்த பாஸ்போர்ட் கையில் இல்லாததால் புதிதாக பாஸ்போர்ட் பெற முடியாத நிலை உள்ளது.

பரிந்துரைகள் - கோரிக்கைகள்:

தாயகம் திரும்பியோர் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஒரு நிரந்தரத் தீர்வைக் காண வேண்டுமெனில் கீழ்க்கண்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

1) தாயகம் திரும்பியோரின் கடவுச் சீட்டு மற்றும் குடும்ப அட்டை ஆகிய ஆவணங்கள் அரசு அலுவலகங்களில் இருந்து தேடி எடுக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். ஆவணங்கள் இல்லாதபட்சத்தில் அதற்கான சான்று வருவாயத் துறை மூலம் வழங்க வேண்டும்.

2) வீட்டுக்கடன் மூலம் கட்டப்பட்ட வீடுகளும் மனைகளும் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

3) வேளாண் திட்டத்தில் வழங்கப்பட்ட நிலங்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

4) தாயகம் திரும்பியோரின் இரண்டு தலைமுறை வாரிசுகளுக்கு கல்வி வேலைவாய்ப்பு 2 சதவீத ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

5) ரெப்கோ வங்கி மீண்டும் தாயகம் திரும்பிய மக்களுக்கான முழுமையான வங்கியாக மாற்றப்பட வேண்டும். மாவட்டம்தோறும் கூட்டுறவு வங்கியாக செயல்பட வேண்டும்.

6) ரெப்கோ வங்கி மூலம் அமைக்கத் திட்டமிடப்பட்ட தாயகம் திரும்பியோரின் பிள்ளைகளுக்கான கல்லூரியை ஆரம்பிக்க வேண்டும்.

7) அகதிகளாக இருக்கின்ற இந்திய வம்சாவழியினரைத் தாயகம் திரும்பியவர்களாகக் கருதி அவர்களுக்கு இந்திய குடியுரிமையும் மறுவாழ்வு உதவிகளும் வழங்க வேண்டும்.

8) தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம் மற்றும் அரசு ரப்பர் கழகம் ஆகியவற்றின் நிலங்களை வனத்துறையிலிருந்து மாற்றி மேற்படிக் கழகங்களுக்கு உரித்தானவையாக மாற்றுவதுடன், மேற்படி கழகங்களை வனத்துறை கட்டுப்பாட்டிலிருந்து மீட்டு தனித்துறையாக இயங்கச் செய்ய வேண்டும்.

9) தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் குடியேறியுள்ளத் தாயகம் திரும்பியோர் குறித்து ஒரு விரிவான ஆய்வை ரெப்கோ வங்கி நடத்த வேண்டும்.

10) இலங்கை மலையகத்தில் உள்ளவர்களின் பல அசையா சொத்துக்கள் தமிழ்நாட்டில் அவர்களது பூர்விகக் கிராமங்களில் உள்ளன. உரிமையாளாகள் இச் சொத்துக்களை மீட்கவும் விற்பனை செய்யவும் தமிழக அரசு உரிய அனுமதியை வழங்க வேண்டும்.

11) தாயகம் திரும்பியவர்களில் இலங்கையில் பிறந்தவர்கள் விசா இன்றி இலங்கை சென்றுவர இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும். காலவரையறையின்றி இலங்கையில் தங்குவதற்கு இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும்.

12) தமிழ்நாடு அரசு தாயகம் திரும்பியோர் நல வாரியம் அமைக்க வேண்டும்.

13) திருச்சியை மையமாகக் கொண்டு இலங்கை மலையக ஆய்வு மையம் ஒன்றை அமைத்து. மலையக மக்களின் வரலாறு, வாழ்வியல், பண்பாடு, கலை இலக்கியம் முதலியவற்றை எடுத்துக் காட்டும் ஆவணங்கள் முதலியவற்றை சேமித்து வைத்து ஆய்வாளர்களுக்குப் பயன்படுத்த உரிய ஏற்பாடுகளை தமிழக அரசு செய்ய வேண்டும்.

நிறைவாக:

ஆங்கிலேயர் ஆட்சியில் இலங்கை உட்பட்ட பல நாடுகளுக்குத் தமிழ்நாட்டிலிருந்து கூலித் தொழிலாளர்களைக் கொண்டு சென்றது மிகக் கொடிய வரலாற்று அவலமாகும். அந்தந்த நாடுகளை தம் கடின உழைப்பால் வளப்படுத்திய மக்களை மீண்டும் அவர்களது பூர்வீக மண்ணுக்கே சட்டப்பூர்வமாக, பண்டங்களைப் போல விரட்டியடித்தது இலங்கை-இந்திய அரசுகள் உருவாக்கிய சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம்.

இரு நூறு ஆண்டுகால இந்த வரலாற்றுத் துயரத்தின் வலிகள் இன்னும் இருப்பது மனித நாகரிகத்துக்கே இழுக்காகும்.

தமிழக அரசும் இந்திய ஒன்றிய அரசும் இந்த அவலநிலைக்குத் தீர்வு காண முன் வரவேண்டும். தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் தலைவர்களும் சமுதாயச் சிந்தனையாளர்களும் இலங்கை மலையகம் குறித்தும் தாயகம் திரும்பியோர் குறித்தும் அதிகமாகப் பேசுவதில்லை. மௌனம் காத்துவரும் அலட்சியப் போக்கே தமிழ்நாட்டில் நிலவுகிறது.

இந்தப் போக்கு களையப்பட்டு. தமிழகத்தில் மலையகம் குறித்தும், தாயகம் திரும்பியோர் குறித்தும் அக்கறை செலுத்துகிற சூழல் உருவாக்கப்பட வேண்டும். அனைத்துத் தரப்பினரும் தங்கள் கவனத்தை தாயகம் திரும்பியோர்மீது குவிக்க வேண்டும்.

- வழக்கறிஞர். தமிழகன்

Pin It