பனிப்பூவாம் வாழ்க்கையிலே

புயலாய் வந்தாய்

பகுத்தறிவே நம்வாழ்க்கைப்

பாடம் என்றாய்

தனித்தனியாய்ப் பிரித்தாளும்

சூழ்ச்சி தன்னை

தன்மானப் பெரியாரின்

கொள்கை பற்றி

கனன்றெழுந்த நெருப்பாக

எரித்து வந்தாய்.

கண்ணீரில் எமையெல்லாம்

விட்டுச் சென்றாய்.

அனல்கக்கும் பேச்செல்லாம்

தொலைத்த தெங்கே?

ஆறாக எம்கண்ணீர்

வடிப்ப தெங்கே?

என்னகவி இத்தனைநாள்

எங்கி ருந்தாய்?

எழுச்சியினை ஊட்டுகின்ற(து)

உனது பாடல்.

என்னுடனே இனிநட,வா!

உனது  ஆற்றல்

எள்நுழையும் இடமெல்லாம்

எடுத்துச் சொல்வேன்.

என்றென்னை உச்சிமோந்த

எழுச்சிப் பாட்டே!

இமயத்தைத் தொட்டுவந்த

கவிதைச் சிட்டே!

இன்றெம்மை விட்டுவிட்டுச்

சென்ற தெங்கே?

இறுதிவரை சுமந்ததமிழ்

சுருண்ட தெங்கே?

சிந்தனையாளன் இதழின்

இறுதிப் பக்கம்

சீரிழந்து  வெற்றிடமாய்

ஆகிப்  போச்சே!

பந்தாகத் துள்ளுமிசைச்

சந்தப் பாடல்

பந்தாக்கள் இல்லாத

எளிமைத் தோற்றம்

செந்தணலின் வீச்சாக

உணர்ச்சிப் பேச்சு

செந்தமிழின் நிமிர்வாக

விறைத்த மீசை

வந்தாரை அன்போடு

அழைத்த நாக்கு

வற்றாத கவிநதியே!

வறண்ட தெங்கே?

பெரியாரின் கொள்கைகளை

நெஞ்சில் ஏற்று

பெற்றிமிகு மறவனாகச்

சுற்றி வந்தாய்.

சிறியார்க்கும் மதிப்பளித்து

சிகரம் ஏற்றும்

சீரறிவைப் பகுத்தறிவாய்

ஏற்று வாழ்ந்தாய்.

புரியாரைத் தோலுரித்தாய்;

பக்தி என்னும்

புதைசேற்றில் வீழ்ந்தாரைக்

கரையில் சேர்த்தாய்.

தறியாடும் நாடாவே!

அறிவுச் சீலை

நெய்துதந்த நெசவாளா!

சென்ற தெங்கே?

Pin It