செங்கற்பட்டு சுயமரியாதை மகாநாட்டைப் பற்றி சென்னை ஜஸ்டிஸ் பத்திரிகை ஒருவாறு புகழ்ந்து எழுதியிருப்பதாகக் காணப்பட்டாலும், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைப் பற்றி தனது அபிப்பிராயத்தை தெரிவித்திருப்பதில் மிக முக்கியமான தீர்மானங்கள் என்று பொது ஜனங்களால் கருதப்படும் தீர்மானங்கள் விஷயத்தில் அது தனக்கு உள்ள அபிப்பிராய பேதத்தை காட்டியிருக்கின்றதை நாம் மனப்பூர்வமாக வரவேற்று சமாதானம் சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றோம். ஏனெனில் அவரவர்களுக்குத் தோன்றும் எந்த விஷயங்களைப் பற்றியானாலும் அபிப்பிராய பேதங் களையும் அதனால் ஏற்படக் கூடிய சாதக பாதகங்களையும் எடுத்துச் சொல்ல யாவருக்கும் உரிமை உண்டு என்பதையும் ஒவ்வொரு அபிப்பிராய பேதத்தையும் கண்ணியமாய் வரவேற்று சமாதானம் சொல்ல வேண்டியது மிகவும் நியாயமானது என்பதையும் நாம் எப்போதும் வலியுறுத்தி வந்திருக் கின்றோம்.

periyarr 450ஆதலால் அம்முறையிலேயே ஜஸ்டிசின் சில தீர்மானங்களைப் பற்றிய அபிப்பிராய பேதத்தையும் அதன் நியாய விளக்கத்தையும் கவனிப் போம். அதாவது,

கலியாண சம்மந்தமாகவும் பெண்ணுக்கும் ஆணுக்கும் உள்ள உரிமை சம்மந்தமாகவும் செய்த ஒரு தீர்மானத்தைப் பற்றியும் கடவுளுக்கு வணக்கத்திற்கென்று பணம் செலவு செய்யக் கூடாது என்கின்ற தீர்மானத் தைப் பற்றியும் ஜஸ்டிஸ் எழுதுகின்றபோது, பொது ஜனங்கள் அத் தீர்மா னங்களுக்கு ஏகமனதாய் அபிப்பிராயம் கொடுக்கவில்லை என்றும் அன்றி யும் அவர்கள் ஏகமனதான சம்மதத்தைப் பெற முடியாது என்றும் எழுதி இருக்கின்றது.

இந்த இடத்தில் ஜஸ்டிஸ் ஒழுங்காக நடந்து கொள்ளவில்லை என்பதை எடுத்துக் காட்ட வருத்தப்படுகின்றோம். ஏனெனில் கலியாண சம்மந்தமான தீர்மானத்திற்கு அவ்வளவு பெரிய கூட்டத்தில் ஒரு சிறு ஆட்சேபனை கூட கிளம்பவேயில்லை. ஒரே ஒரு வாலிபர் புருஷனும் பெண்ஜாதியும் பிரிந்து கொண்டால் குழந்தை யாரைச் சேர்ந்தது என்று மாத்திரம் கேட்டார். உடனே ஒருவர் தகப்பனைச் சேர்ந்தது என்று சொன்னார். இதைத் தவிர வேறு எந்தவிதமான ஆnக்ஷபனையாவது, ஆnக்ஷபனைக் குறியாவது அங்கு நிகழவேயில்லை. அப்படியிருக்க மகாநாட்டு கூட்டத்தில் அதற்கு ஒரு வித சம்மதமில்லை என்று எழுதியிருப்பது வருந்தத்தக்கதே ஆகும்.

தவிர கோவிலில் கடவுளை வணங்கும் விஷயத்தில் பணம் செலவழிக்கக் கூடாது என்கின்ற தீர்மான விஷயத்தில் சிலர் ஆட்சேபனை இருந்தது மெய்தான். அதுவும் ஜஸ்டிஸ் கட்சி மாஜி பத்திராதிபரும் ஜஸ்டிஸ் பத்திரிகை காரியதரிசியும் ஜஸ்டிஸ் கட்சிக்காக நடத்தப்படும் தெலுங்கு பத்திரிகையாகிய ‘சமதரிசினி’ பத்திரிகை ஆசிரியரும் ஆகிய மூவர்களே ஆட்சேபித்து பேசினர். அப்படிப் பேசியதிலும் சிலவு செய்ய வேண்டும் என்கின்ற கட்சிக்காக அவர்களில் யாராவது ஒரு நியாயமும் சொல்லவே யில்லை. அவர்களில் ஒருவர் நியாயமான சிலவு செய்யலாம் என்றார். மற்றவர் கல்பூரம் மாத்திரம் கொளுத்தலாம் என்றார். இன்னொருவர் இந்தியா வின் சிற்ப வேலை அலங்காரத்திற்கு கோயில்களை மீத்துவைக்க வேண்டி யிருப்பதால் சிலவு செய்துதான் தீரவேண்டும் என்றார்.

எனவே ஆnக்ஷபித்துப் பேசிய மூன்று கனவான்களுடைய பேச்சிலிருந்தும் இம்மாதிரி விஷயங்களில் ஜஸ்டிஸ் மனப்பான்மை எப்படி இருக்கின்றது என்பதை உணர மட்டும் முடிந்ததே தவிர வேறு சரியான காரணங்கள் ஒன்றும் கண்டுபிடிக்க முடியவே இல்லை.

“அவசியமான செலவை செய்ய வேண்டும்” என்றால் என்னவித மான செலவு என்று கண்டுபிடிக்க தெர்மா மீட்டர் எங்குபோய் கண்டு பிடிப்பது. அதை நிர்ணயமாக்க என்ன அவசியமும் ஆதாரமும் இருக்கின் றது? உலக ஜனத் தொகையில் மிக்க அதிகமான பாகத்தைக் கொண்ட கிறிஸ்தவர்கள் மகமதியர்கள் கோவில்களில் கடவுள் வணக்கத்திற்கு என்றும் கடவுளை வணங்கும்போது எவ்வளவு பணம் செலவு செய்கின்றார்கள் அல்லது எவ்வளவு பொருமான சாமான் செலவு செய்கின்றார்கள் என்பதை யோசித்தால் இந்தத் தீர்மானம் எப்படி மக்களுக்கு நாஸ்திகத்தை போதிக்கக் கூடியதாகும் என்பது விளங்காமல் போகாது. அன்றியும் ஜஸ்டிஸ் கட்சியின் பிரயத்தனத்தால் தேவஸ்தானச் சட்டம் நிறைவேறி இன்றைக்கு 3,4 வருஷங்களாயின. எந்தக் கோவில் செலவுகள் சுருக்கம் செய்யப்பட்டது அல்லது யாத்திரைக்காரர்கள் செலவை மட்டுப்படுத்த முடிந்தது. அல்லது கடவுளுக்காக பொது ஜனங்கள் கொடுத்த பணங்களில் எந்தப் பாகம் மீதி செய்யப்பட்டது. வருகின்ற பணம் ‘கிரமப்படி’ ‘முறைப்படி’ செலவாகின் றதா என்று பார்க்கின்ற அதிகாரம் தவிர தினம் எத்தனை வேளை பூஜை எத்தனை பிடி அரிசி எத்தனை விளக்கு எத்தனை எண்ணை எத்தனை பால்விட்டு அபிஷேகம் என்பதை தணிக்கைப் பார்த்து சரியாய் கொஞ்சமும் இறையாமல் செலவு செய்யப்படுவது தவிர வேறு காரியமோ அதிகாரமோ சுதந்திரமோ அந்தச் சட்டத்தில் இருக்கின்றதா? என்று கேட்கின்றோம்.

இவ்வளவு கோடி ரூபாய்கள் நமது கடவுள்களுக்கென்று நாம் செய்தும் இன்றையத் தினம் நமது நாட்டில் கண் ஆஸ்பத்திரி மருத்துவ ஆஸ்பத்திரி பேர்போன உயர்தர கலாசாலை தீண்டாதார் பள்ளிக் கூடம் அனாதைகள் ரக்ஷண ஆஸ்ரமம் ஆகியவைகள் எல்லாம் முக்கியமாக கடவுளைத் தொழ கோயிலில் ஒரு காசு கூட செலவு செய்ய வேண்டியில்லாத மதத்தை சாமியை சேர்ந்த மக்களால் அவர்கள் இனத்தாரின் தர்ம பணத்தில் தானே நடைபெறுகின்றது. அன்றியும் நாமும்கூட சற்றும் ‘தேசிய சுயமரியாதை’ என்பது ஒரு சிறிதுமில்லாது அவைகளில் போய் சிகிச்சை செய்து கொண்டும் படித்துக் கொண்டும் இருந்துவிட்டு நம்முடைய சுவாமிக்கு பூஜைக்கும் வணக்கத்திற்கும் செலவு செய்வதை மாத்திரம் நிறுத்த முடியாது என்றால் இதில் ஏதாவது அறிவு இருக்கின்றதா என்று கேட் கின்றோம்.

தவிர “கற்பூரமாவது பற்றவைக்க வேண்டாமா” என்பது. இதை இந்த மகாநாட்டில் பேசியது ஒரு சிறிது கூட ஞானமில்லாமல் பேசிய வார்த்தைகள் என்றுதான் சொல்ல வேண்டியிருப்பதற்கு வருந்துகின்றோம். இவ்வார்த்தைகள் வர்ணாசிரம சனாதனதர்ம மகாநாடுகளில் பேசுவது ஒரு சமயம் கிரமமும் அவசியமுமான வார்த்தைகளாயிருக்கலாம். அப்படிக்கின்றி சீர்திருத்தம் பகுத்தறிவு தன்மானம் முதலியவைகளை அடிப்படையாகக் கொண்ட சுயமரியாதை மகாநாட்டில் சாமிக்குக் கற்பூரம் பற்ற வேண்டுமென்றால் இது எவ்வளவு வெட்கக் கேடான காரியம். பழமோ தேங்காயோ பொங்கலோ புளியோதரையோ செலவு செய்தாலாவது சுவாமி தின்கா விட்டாலும் சூட்சிக்காரச் சோம்பேறிப் பார்ப்பானுக்கு ஒரு மூடியும், வைத்துப் பூசை செய்த முட்டாளுக்கு ஒரு மூடியாவது கிடைக்கும். மற்றும் அவர்கள் தின்னவாவது உதவும். வெறும் கற்பூரத்தை வாங்கி கொளுத்தி அதன் கரிப்புகையை மூக்கிலும் வாயிலும் ஏற்றிக் கொண்டு அதன் கிரயத்தை சைனாக்காரனுக்கும் ஜப்பான்காரனுக்கும் போய்ச் சேரும்படி செய்வதில் யாருக்கு என்ன லாபம்.

கற்பூர வெளிச்சம் எதற்காக வேண்டும்? சுவாமி குருடா அல்லது நாம் குருடா அல்லது கற்பூரம் பற்றி வைத்து கும்பிட் டால்தான் நான் அந்தக் கும்பிடை ஏற்பேன் என்று சாமி சொல்கின்றதா? எதற்காக கல்பூரம் அவசியம்? அதில் எவ்வளவு கொழுப்பு கலந்திருக்கின்றது என்பது யாவருக்கும் தெரியாதா? இவற்றை சற்றும் கவனியாமல் “சாமிக்கு கற்பூரம் கூட வேண்டாம் என்கின்றார்களே இது என்ன அநியாயம்” என்று பேசுவதில் என்ன லாபம்? இதில் பகுத்தறிவு உண்டா அல்லது சீர்திருத்தம் உண்டா அல்லது மானம் வெட்கம் உண்டா என்று தான் கேட்கின்றோம். “இந்தியாவில் சிறந்த புண்யபூமி”யாகிய காசியில் உள்ள விஸ்வேஸ்வர சுவாமி வணக்கத்துக்குகூட கற்பூரம் பழம் தேங்காய் ஒன்றும் கிடையாது. தண்ணீரை அதன் தலையில் கொட்டி ஏதாவதொரு இலைகளை அதன் தலையில் போட்டு கையால் தொட்டுக் கண்ணில் ஒத்திவைத்துக் கொள்வதை இன்றைக்கும் யாரும் பார்க்கலாம். அப்படியிருக்க இத்தீர்மானம் ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்களுக்கு அதிலும் பார்ப்பனரல்லாதார் பணம் வீணாகாமல் பார்த்துக் கொள்பவர்களுக்கு சுவாமிக்கு செலவு செய்ய வேண்டும் என்ற அவசியம் இவ்வளவு பலமாக பதிந்திருப்பது நமக்கு வேடிக்கையைத் தருகின்றது.

தவிர பழய ஞாபகச் சின்னத்தை காப்பாற்றவாவது சாமி வணங்கு முறையில் பணம் செலவு செய்ய வேண்டும் என்று மகாநாட்டில் மற்றொரு கனவான் சொன்னது நமக்கு இன்னமும் அதிசயமாய் இருக்கின்றது. பழய சின்னத்தைக் காப்பாற்றுவதற்கும் சாமி வணக்கத்திற்குச் செலவு செய்வதற் கும் என்ன சம்மந்தம் இருக்கின்றது என்பது நமக்கு ஒரு சிறிதும் விளங்க வில்லை. பழய சின்னங்கள் இப்போது அநேகம் காப்பாற்றப்பட்டு வருவதை நாம் பார்க்கின்றோம். அவர்கள் சுவாமி வணக்கத்தின் பெயரால் செய்யும் செலவைக் கொண்டு காப்பாற்றப்படவில்லை என்பது நாம் சொல்ல வேண்டியதில்லை.

சட்டசபையில் ஒரு தீர்மானம் கொண்டு வந்து இன்ன இன்ன சித்திர வேலைப்பாடுள்ள கட்டடங்களை சாமிகளை சர்க்கார் பழய சின்னங்களை காப்பாற்றும் திட்டத்தில் சேர்த்துப் பொதுப் பணத்திலிருந்து மற்றவைகளைப் போல் பாதுகாத்து வர வேண்டியது என்று உத்திரவுப் போட்டு விட்டால் தானாக காப்பாற்றப்பட்டுப் போகும். அப்படி இருக்க கட்டடத்தைக் காப்பாற்ற சாமி கும்பிடுகின்றவர்கள் எதற்காக செலவு செய்ய வேண்டும் என்றுதான் கேட்கின்றோம். பொதுவாக சென்னை நாகரீகம் பெற்ற நகரம் என்று சொல்லுவது வழக்கமாயிருந்தாலும் அது வெளிவேஷத்தில் நாகரீகம் பெற்றிருக்கின்றதே தவிர உள்ளுக்குள் பகுத்தறிவிலும் மூட நம்பிக்கைகளிலும் பட்டிக்காடு என்பவைகளைவிட மோசமான புத்தியையும் மனப்பான்மையையும் உடையது என்றே சொல்லுவோம்.

சென்னை ஆண்களுக்கும் பெண்களுக்கும் மூட பக்தியில் மிகுதியும் நம்பிக்கை உண்டு. அதாவது ஒரு கிழவி கழுத்தில் மொத்தமாக மஞ்சள் நூலை போட்டுக் கொண்டு கையில் நெருப்புச் சட்டியை ஏந்திக்கொண்டு இரண்டு மூன்று மாரியாயி பாட்டுப் பாடிவிட்டால் ஐக்கோர்ட்டு ஜட்ஜி வீட்டுப் பெண்கள் முதல் கொண்டு ஷெரீப் வீட்டுப் பெண்கள் முதல் கொண்டு நகர சபைத் தலைவர் வீட்டுப் பெண்கள் முதல் கொண்டு அக்கிழவி காலில் தண்ணீரைக் கொட்டி சாம்பிராணிப் புகை போட்டு கற்பூரம் பற்ற வைத்து காலில் விழுந்து வரங் கேட்பதை இன்றும் பார்க்கலாம். ஆண்களும் மேல் வேஷ்டியை இடுப்பில் வரிந்துகட்டி கீழே விழுந்து கும்பிட்டு வரம் கேட்டு வேப்பிலையைக் கிள்ளி வாயில் போட்டுக் கொள்வதையும் பார்க்கலாம். எனவே இவர்கள் கற்பூரம் பொருத்தி வைப்பதற்கு வாதாடுவதில் அதிசயமில்லை. ஆனாலும் இவர்கள் வார்த்தைக்காக கூட்டத்தில் இருந்தவர்களில் 100க்கு 99 பேர் என்ன மதிப்பு கொடுத்தார்கள் என்பது அங்கிருந்தவர்களுக்கு நன்றாய் விளங்கியிருக்கும். நிற்க அடுத்த தீர்மானமாகிய கலியாண விஷயத்தைப் பற்றியும், ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமை இருக்கும்படி செய்த அடுத்தத் தீர்மானத்தைப் பற்றி மறுமுறை எழுதுவோம்.

(குடி அரசு - கட்டுரை - 03.03.1929)

Pin It