(ACT TO PROVIDE 10% RESERVATION TO WEAKER SECTIONS OF FORWARD CASTE A FRAUD ON CONSTITUTION-DECLARE IT VOID)

உலகின் எப்பகுதியிலும், எச்சமயத்திலும் இல்லாத தன்மையில் இந்தியாவில் பார்ப்பன இந்துச் சட்டம் தன் சமய மக்களையே சமயத்தின் பேராலேயும், கடவுள் பேராலேயும் வஞ்சகமாய் வகுத்தளித்த வருணாசிரம சாதிப் பிரிவுகளின் அடிப்படையில், மிகப்பெரும் தொகுப்பு மக்கள் இரண்டாயிரம் ஆண்டுகளாக சமூக சம உரிமை கள், கல்வி மறுக்கப்பட்டவர்களாக நாலாஞ் சாதி இழிமக்களாக வைக்கப்பட்டு வந்துள்ளனர் என்பதை இந்த 21ஆம் நூற்றாண்டிலேயும் உணராதவர்களாக, இதுகாறும் அந்த இழிநிலையை உடைத்தெறியாமல் இருப்பது உலக மானுட குலத்திற்கே விடப்பட்ட சவால் என்றுதான் எண்ணத் தோன்றுகின்றது,

இருப்பினும் இந்திய நாடு விடுதலையடைந்த பின் இவ்வொடுக்கு முறைகளிலிருந்து விடுவிக்கப்பட்டு இச்சமூக மக்கள் சற்றேனும் மேம்பாடடைய வழிகாணும் வகையில் அரசமைப்புச் சட்ட அவை (Constituent Assembly),, அம்பேத்கரின் உயர் நுண் அறிவுசார் கருத் துக்களின் அடிப்படையில் இந்திய அரசமைப்புச் சட்டத்தில், சமூக நீதிக் கோட்பாட்டை வகுத்தது. ஆனால் அதே நேரத்தில் பொருளாதார அடிப்படையைக் கணக்கில் கொண்டு இடஒதுக்கீடு வழங்குவது பற்றி நெடிதும் விவாதித்து அது அனைவருக்கும் பொதுவான கூறு (Universal)  என்றும், மாறும் தன் மையது என்றும் கருதப்பட்டு கைவிடப்பட்டது.

அவற்றுள் முதன்மையானதாக ஒடுக்கப்பட்ட மக்க ளான மக்கள் தொகுப்பைக் கீழ்காணும் அளவுகோல் களின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட மக்களென ஒரு பெரும் தொகுப்பாக இனம் கண்டு, இவர்கள் ஆட்சி, நிருவாகம், கல்வியில் பங்குபெறும் வகையில் இவர் களுக்கு இடஒதுக்கீடு அளித்து இவர்களை மேம்பாடு அடையச் செய்வது.

  1. சமூக ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள்.
  2. கல்வி மறுக்கப்பட்டு ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப் பட்டவர்கள்.

இவற்றை உள்ளடக்கிய தன்மையில்தான் அரசமைப்புச் சட்ட விதிகள் 15(4) மற்றும் 16(4) வடித்தெடுக்கப்பட் டுள்ளன. 1950இல் நடைமுறைக்கு வந்த அரசமைப்புச் சட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் கல்விக்கான இடஒதுக்கீடு இல்லாமையை இட்டு நிரப்பும் வகையில் பெரியாரின் அரும் போராட்டத்தின் விளைவால் அரசமைப் புச் சட்ட முதல் திருத்தம் செய்யப்பட்டு விதி 15(4) சேர்க்கப்பட்டது.

மேற்சொன்ன ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோர்/பெருந் தொகுப்பின் கீழ் அப்போது ஏற்கெனவே தொகுக் கப்பட்டிருந்த சாதிகளைக் கொண்ட இரு பட்டியல்கள் இருந்தன. அவை :

  1. பட்டியல் வகுப்பினர் (Scheduled Castes)
  2. பட்டியல் பழங்குடிகள் (Scheduled Tribes)

இவ்விரு பட்டியல்களுக்கு அப்பால் மேலும் பல வகுப்பு மக்கள் ஒடுக்கப்பட்டவர்களாக இருந்து வந்த போது அவர்களைக் கொண்ட முறையான முழுமை யான பட்டியல் இல்லாததைச் சுட்டிக்காட்டி, அவர்களை அடையாளம் கண்டு மேற்சொன்ன பிற்படுத்தப்பட் டோரின் இரு பட்டியல்களுடன், இதர பிற்படுத்தப்பட் டோர் பட்டியல் தயாரிப்பதற்கென இந்திய பிற்படுத்தப் பட்டோர் நல ஆணையம் அமைத்திட அம்பேத்கர் கோரினார். அதில் காலத் தாழ்வு ஏற்பட்டதைக் கடிந்து தன் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் அம்பேத்கர் தம் சட்ட அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு ஒன்றிய அமைச்சரவையிலிருந்து வெளியேறினார்.

அதன்பின் காக்கா கலேல்கர் தலைமையில் ஒன்றிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்கப்பட்டு, அவ் வாணையம் விடுபட்ட பிற்படுத்தப்பட்ட தன்மைக்கு ஆட்பட்ட  இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் (OBC) என்ற பெயரில் 1955இல் ஒன்றிய அரசிடம் வழங்கியது.

பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர் இதர பிற்படுத் தப்பட்டோர் ஆகிய இம்மூன்று வகுப்பு மக்கள் சமூக, கல்வி ஒடுக்குமுறைகளிலிருந்து விடுபட்டு மேம்பாடு அடையும் வகையில் அரசமைப்புச் சட்ட அடிப்படை உரிமைகள் பகுதியில் விதிகள் 15(4)லும், 16(4)லும் கல்வியிலும் அரசுப் பணிகளிலும் வேலைகளிலும்  இடஒதுக்கீட் டுக்கு வழிவகை செய்யப்பட்டது. பட்டியல் பிரிவினர் வகுப்புகள் ஏற்கெனவே தொகுக்கப்பட் டிருந்ததால் 1943-லிருந்து பட்டியல் வகுப்பு மக்கள் (SC)  பெற்று வந்த இடஒதுக்கீடு தொடர்ந்தது; பட்டியல் பழங் குடியினருக்கு (ST)  இடஒதுக்கீடு அரசமைப்புச் சட்டம் 1950 சனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்த பின் வழங்கப் பட்டது.

இந்த இடத்தில் தலைப்புக்குள் நுழையும் முன் மேலும் சில விவரங்களை முன்வைக்க விழைகிறேன். அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த 1950 சனவரி 26-லிருந்து விதி 16(4)இலிருந்தே அடிப்படை உரிமையாக அளிக்கப்பட்டிருந்த இதர பிற்படுத்தப்பட் டோருக்கு 40 ஆண்டுகள் நயவஞ்சகமாக அரசு அலகுகள் காலம் தாழ்த்தி, மார்க்சியப் பெரியாரியப் பொதுவு டைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் வே. ஆனைமுத்துவின் நுண்மான் மதிநுட்ப ஆழ் ஆய்வுடன் பெரியாரின் ஒப்பற்ற மானுட பற்றை மனம் கொண்டு மாபெரும் நெடும் போராடடத்தை 1978-இல் தமிழகத்தில் தொடங்கி, ஒன்றிய மாநிலங்களுக்கெல்லாம் குறிப்பாக வடபுலத்திற்கு எடுத்துச் சென்று, ஒன்றியத் தலைநகர் தில்லியில் பல மாநாடுகளை நிகழ்த்தி, ஒன்றிய அரசின் உயர்நிலை குடியரசுத் தலைவர், முதன்மை அமைச்சர், பிற அமைச்சர்கள், ஒன்றிய உயர்நிலைச் செயலாளர்கள் என மண்டல் தலைமையில் பிற்படுத்தப் பட்டோர் ஆணையம் அமைத்திடச் செய்து அவர்களுடன் சட்ட நுணுக்கங்கள், தருக்கங்கள் அடிப்படையில் விவா தித்து, பின் ஓய்வறியா ஒப்பற்ற தொடர் நடவடிக்கை மேற்கொண்டு ஆணையத்தின் பரிந்துரைகள் ஏற்கப்பட வைத்து (நேரு ஆட்சிக் காலம், இந்திரா ஆட்சி காலம், இராசிவ் காந்தி ஆட்சி காலம் எனக் கடந்து) 1990இல் முதன்மை அமைச்சர் விசுவநாத் பிரதாப் சிங் அரசு இதர பிற்படுத்தப்பட்டோருக்கு ஒன்றிய அரசுப் பணிகள், வேலைகள் மட்டிலும் 27 விழுக்காடு இடஒதுக்கீடு அளித்திட வழிகண்டார். இவ்வகையில் பல அமைப்புகள் அரசியல் கட்சிகள் பாங்காற்றின. ஆனால் இது நடை முறைக்கு வருவதற்கு மேலும் நான்காண்டுகள் ஆயின. 1950லிருந்து 44 ஆண்டுகள் கழித்துத்தான் 1994இல் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு ஒன்றிய அரசுப் பணிகளில் ஒதுக்கீடு நடைமுறைக்கு கொண்டு வர முடிந்தது. அரசமைப்புச் சட்ட அடிப்படை உரிமைகள் பகுதியில் அளிக்கப்பட்டுள்ள உரிமை எவ்வளவு வஞ்சக மாக நாட்டிலுள்ள ஒடுக்கப்பட்டுள்ள மக்களுக்கெதிராக சில விலக்கின்றி அனைத்து தேசியக் கட்சிகளும் பல தளங்களில் செயல்பட்டு எவ்வளவு நெடுங்காலத்திற்கு சற்றொப்ப அரை நூற்றாண்டுக்கு மறுக்கப்பட்டு வந்துள்ளதை மனம் கொள்ள வேண்டும்.

அதன்பின் மேலும் பல போராட்டங்களுக்குப்பின் தான் மேலும் 12 ஆண்டுகள் கழித்து 2006இல் தான் விதி 15(4) வழங்கப்பட்ட உரிமையான ஒன்றிய அரசின் கல்வியிலும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு சட்டப்படி இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டு அதன் பின்னும் பல ஆண்டுகள் கழித்துத்தான் பகுதி பகுதியாக முதலில் 9 விழுக்காடும், அதன்பின் மூன்றாண்டுகளுக்கும் மேலாகக் காலம் தாழ்த்தி 27 விழுக்காடு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. உண்மையில் இதன் செயல் வடிவம் இரங்கத்தக்க நிலையில்தான் மிகவும் குறைவான அளவில் நிறைவேற்றப்படுகிறது.

அடிப்படை உரிமையாக அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள சமூகநீதிக் கூறான இடஒதுக்கீட்டைப் பலப்பல போராட்டங்களுக்குப் பின் ஒன்றிய வேலையில் 44 ஆண்டுகள், கல்வியில் 57 ஆண்டுகள் காத்திருந்து பெற்றிட முடிந்தது. நடப்புக்கு வந்து இவ்வளவு காலத் தில் ஒடுக்கப்பட்டோரின் பங்கு 20 விழுக்காட்டுக்கும் குறைவுதான், இதற்கிடையில் உச்ச நீதிமன்ற கூடங் களில் பல உயர்நீதிமன்றங்களில் (பொது வெளியில் அல்ல) நீதியரசர்கள், நாட்டின் பெருங்கேடுகளில் கையூட்டை ஒப்ப இடஒதுக்கீட்டுக் கொள்கை என்றும், ஏன் இது தொடரப்பட வேண்டும், இது எவ்வளவு காலங்களுக்கு நீட்டிக்கப்பட வேண்டும், ஆனால் இட ஒதுக்கீடு எந்த அளவிலும் என்றும், இவர்களுக்குப் போதுமான பங்கீடு இல்லை என்ற நிலை உள்ளது என அரசு உணரும் வரையிலும் இடஒதுக்கீடு தொடர லாம் எனச் சொல்வதைக் கண்ணுரலாம் எனினும் எவ்வளவு கரிசனத்தோடும் கவலையோடும் மனம் வெதும்பி  நாட்டின் நலன் கருதுபவர்களாகக் குரல் எழுப்புகிறார்கள் என்பது எவ்வளவு கயமைத்தனம். இவர்கள், இந்நாட்டின் 80-85 விழுக்காட்டு, அரசியல், அரசு, நீதித்துறை, உயர் பணிகள், உயர்கல்வி இடங் களில் 10 விழுக்காடு மக்கள் தொகை அளவுள்ளோரே நாடு விடுதலை அடைந்து சென்ற 70 ஆண்டுகளுக்கு மேலாக கோலோச்சுபவர்களாக இருந்து வரும் நிலை யில் உலக நாடுகளில் நாட்டின் மனித மேம்பாட்டு குறியீடு 137-இல் வறுமை, பட்டினியில் உழல்வோர் விழுக்காட்டில் முதலிடம், உலகிலுள்ள உயர் கல்வி நிறுவனங்கள் 200இல் இந்தியாவில் ஒன்றுமில்லை, மக்களின் ஊட்டச்சத்து நிலை சோமாலியாவுக்குப் பின் எனப் பல மேம்பாட்டுக் குறியீடுகளில் கடைநிலையில் தான் இந்தியா உள்ளது என்பதை கவனத்தில் கொள் கின்றனரா? ஆனால் 60-70 ஆண்டுகளுக்கு மேல் சமூக நீதி இடஒதுக்கீடு நடைமுறையில் இருக்கும் தமிழ் நாடு, கேரளம், மகாராட்டிரம் மாநிலங்களின் மனித மேம்பாடு குறியீடு அளவு குறிப்பாக சில துறைகளில் அய்ரோப்பிய நாடுகளுக்கும் ஒப்பாக இணையாக மேம்பாடு அடைந்த நிலையில் உள்ளன என்பதையும் இவர்கள் கருத்தில் ஏற்றிப் பார்க்க வேண்டும்.

இப்பொழுது மோடி அரசு நடைமுறைப்படுத்தியுள்ள 10 விழுக்காட்டுச் சட்டத்தைப் பார்ப்போம். பா.ச.க. போன்றே காங்கிரசும் இதை 2014 தேர்தல் வாக்குறுதியாகத் தந்துள்ளது. ஏன் பொதுவுடைமைக் கட்சிகளும் இதற்கு இசைவாகவே உள்ளனர். இவர்கள் பா.ச.க. 2014இல் ஆட்சிக்கு வந்து 4¾ ஆண்டுகள் கழித்து வெறும் மூன்று நாள்களுக்கும் குறைவாக 50 மணிநேரக் கால இடைவெளியில் அரசமைப்புச் சட்ட அடிப்படை உரிமைப் பகுதிக்குத் திருத்தம் தரும் வரைவுச் சட்டத்தைக் கொண்டு வந்து இரு நாடாளுமன்ற அவைகளிலும் நிறைவேற்றி உடனே குடியரசுத் தலைவரின் ஒப்புத லையும் பெற்றுச் சட்டமாக இயற்றி, அவற்றை நடை முறைப்படுத்தும்படி ஒன்றிய அரசு, குசராத், இராசுத்தான் போன்ற மாநில அரசுகளும் பல்வேறு துறைகளை அறிவுறுத்தி நிருவாக ஆணைகளையும் வெளியிட்டு விட்டனர். இது என்ன ‘ஜெட்’ வேகமா? ராக்கெட் வேகமா? ஏன் இவ்வளவு பாய்ச்சல்?

இப்பொழுது புரிகிறதா, பா.ச.க.வின் இந்துக்கள் மீதான கவலை, அக்கறை, அதாவது இவர்கள் இந்துக்கள் என மனமாரக் கருதுவது முற்றபட்ட சாதிகளைத்தான். குறிப்பாகப் பார்ப்பனர்களைத்தான். இதில் மிகை, நகை, முரண், இவர்களுள் நலிந்த பிரிவினர்கள் மேல் என்ற பெயரில் அவர்களும் பசைப்பிடிப்பான வளமானோர் தான். இந்த இந்துத்துவா காவிக் கூட்டம் போன்றே காங்கிரசுக் கயவர்கள், ஏன் பொதுவுடைமைக் கட்சிகள் கூட இந்த நலிந்த முற்பட்டவர்களை எப்படி அடையாளம் காண்கிறார்கள் என்பதுதான். அதாவது முற்பட்ட வகுப்பி னருள் ஒருவரின் குடும்ப ஆண்டு வருமானம் அதிக அளவாக ரூ.7,99,999/- அதாவது திங்களுக்கு ரூ.66,666/- வருமானமாக இருப்பின், அவர்தான் நலிந்த பிரிவைச் சேர்ந்தவர் எனக் கருதப்படுவார்.

ஒருவரின் வருமானம் நாளும், கிழமையும் மாறிக் கொண்டே இருக்கக்கூடியது. எனவே ஆண்டு வருமான அளவுகோல் முற்றிலும் பொருளற்றது. நடைமுறையில் வருமானத்தைக் கணக்கிட முடியாது. மேலும் குடும்ப வருமானம் என்பதால் அக்குடும்பத்தில் சராசரியாக மூவர் (அ) நால்வர் இருக்கலாமென எடுத்துக் கொண் டால், அக்குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் சராசரியாக ஆண்டுக்கு அதிக அளவாக ரூ.2,66,666 (அ) ரூ.1,99,999 வருமானம் உள்ளவராவர். இவர்கள் தான் இந்த 40 விழுக்காடு சட்டப்படி ஒதுக்கீடு பெறத் தகுதியானவர்கள், நலிந்தவர் என வளமானோர் எளிதில் சான்றிதழ் எப்படியும் பெறலாம். இதிலும் ஏழை, எளியோர் வஞ்சிக்கப்படுவர்.

ஆனால் மண்டல்குழு பரிந்துரையின் அடிப்படையில் சமூக அளவில் கல்வியில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என இதர பிற்படுத்தப்பட்டவர் களுக்கும் வி.பி. சிங் ஒன்றிய அரசு 40 ஆண்டுகளாக நடப்பில் இருந்த அரசமைப்புச் சட்ட விதி 16(4) படி ஒன்றிய அரசுப் பணிகளில் மட்டும் இடஒதுக்கீடு வழங்கி ஆணையிட்ட போது அதனை எதிர்த்து, வடபுலத்தில் சில வன் முறையைக் கட்டவிழ்த்துவிட்டு அதை நாடே கொதித் தெழுந்ததுபோல், இந்தக் காவிக் கூட்டம், காவிகளின் கைக்கூலிகளான ஊடகங்களும் ஊதிப் பெரிதாக்கிக் காட்டி, அந்த இடஒதுக்கீட்டு ஆணையை நடைமுறைக்கு வரவிடாமல் தடுத்துவிட்டது. இவர்கள் இடஒதுக்கீடு பெறத் தக்க இந்துக்கள் இல்லையா? இல்லை. இந்தக் கயவர்களுக்கு இந்துச் சமயத்திலுள்ள நாலாஞ்சாதிகள் இந்துக்கள் அல்ல என்பது மட்டுமல்ல, முற்பட்ட பார்ப்பன பனியாக் கூட்டம்தான் இந்துக்கள், இவர்கள் இலக்கணப்படி அதிலும் முற்பட்டவருள் நலிந்தவர்கள் என அடையாளம் காண இந்தக் காவிக் கூட்டம் விதித் துள்ள ஆண்டு வருமான உயர் அளவு ரூ.7,99,999 என விதித்து பசையான வசதி படைத்தவர்கள் மட்டுமே இடஒதுக்கீடு பயன்பெறத் தக்கவர்கள் என்றாக்கி, அந்தத் தொகுப்பிலுள்ள உண்மையான ஏழை, எளியோர் பகடைக் காயாக்கப்பட்டு மனமறிந்து கொடுமையாக வஞ்சிக்கப்பட்டு விட்டனர்.

இனி இக்கட்டுரையின் தலைப்புப்படி, 10% இடஒதுக்கீட்டுச் சட்டம் எப்படி அரசமைப்புச் சட்டத்தின்மீது நிகழ்த்தப் பட்ட மோசடி என்பதைப் பார்ப்போம், இச்சட்டம், அரச மைப்புச் சட்ட விதி 46-ஐ அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்ட சட்டம் என சட்டமுன்வரைவின் சட்டத்தின் நோக்கமும் காரணங்களும் என்ற தலைப்பின்கீழ் விளக்கப்பட்டுள்ளது.

இவ்விதி 46 அரசமைப்புச் சட்ட வழிகாட்டு நெறிகள் பகுதியின்கீழ் வருகின்றது. இதன் கீழ்வரும் விதிகள் கட்டளை விதிகள் என்று கொள்ளத்தக்கதல்ல, ஆனால் செயல்படுத்துவதற்கானவை அல்ல என எதிர்மறை யாகக் கொள்ளக்கூடாது. இருப்பினும் இச்சட்டத்தை தங்கள் நோக்கத்தில் இயற்றுவதற்கு ஏற்ப இதைக் கட்டளை விதியாக (Mandatory Article) பொருள் விளக்கம் வலிந்து கொடுக்கப்பட்டுள்ளது உள்நோக்கம் கொண்டதாகும்.

இந்த விதியில் நலிந்த பிரிவுகளில் உள்ள மக்கள் குறிப்பாகப் பட்டியல் வகுப்பு, பழங்குடிகள் சமூக அநீதி களிலிருந்தும் எல்லா வகையான சுரண்டலிலிருந்தும் காப்பாற்றப்படும் வகையில் அரசு சிறப்புக் கவனத் துடன் இவர்களின் கல்வி, பொருளாதாரத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளும். இங்கு “நலிந்த பிரிவுகளாக உள்ள மக்கள்” என்ற சொற்றொடர் நாட்டின் குடிமக்கள் அனைவரையும் உள்ளடக்கி இவர்கள் தவிர்த்த பிறரை யும் குறிக்கும் பொதுச் சொல்லாகத்தான் கையாளப் பட்டுள்ளது. இங்கு “சமூக அநீதியிலிருந்து காப்பாற்றப் படும்” என்ற சொற்றொடர் இந்துக்களுள் பட்டியல் வகுப் பினர், பழங்குடிகள், பிற்படுத்தப்பட்டோரை மட்டுமே சுட்டும். இந்து முற்பட்டோர், பிற கிறித்துவ, இசுலாமிய சமயங்களைக் குறிக்காது. மேலும் பொருளா தாரத்தில் நலிவுற்றோர் என்று குறிப்பிடுவதும் அனைத்து மக்களையும் குறிப்பதாகும். இதில் முற்பட்ட வகுப்பினரை மட்டும் வலிந்து பிரித் தெடுத்து அவர்களுக்கு மட்டும் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு பெறத்தக்கவர்கள் என விளக்கம் அளித்து அரசமைப்புச் சட்டத் தைத் திருத்தியுள்ளது என்பது அரசமைப்புச் சட்டத்தின் மேல் நிகழ்த்தப்பட்ட அரசமைப்புச் சட்ட மோசடி என்றுதான் கொள்ள முடியும். எனவே இச்சட்டம் முற்றிலும் செல்லத்தக்கதல்ல (The Act is Void).

வி.பி. சிங்கின் ஒன்றிய அரசு இதர பிற்படுத்தப் பட்டோருக்கு மண்டல் குழுவின் பரிந்துரையை ஏற்று விதி 16(4)இன்படி, ஒன்றிய அரசுப் பணிகள், வேலை களில் மட்டும் 27 விழுக்காடு இடஒதுக்கீடு அளித்து ஆணையிட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விரிவாக ஆய்வு செய்த உச்சநீதிமன்றம் 27 விழுக்காடு ஒதுக்கீட்டை ஏற்றுக் கொண்டது. ஆனால், எவ்வித ஒதுக்கீட்டுக்கும் உச்சவரம்பு 50 விழுக்காடுதான் என்ற பொது விதியை விதித்தது. இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் பல மாநிலங்கள் இடஒதுக்கீட்டு வரம்பு 50 விழுக்காட்டிற்கு அதிகமாக எக்காரணங்களைக் கொண்டு இடஒதுக்கீடு அளிக்க முன்வந்த போதெல்லாம் அந்தந்த உயர்நீதிமன்றங்கள் அது தொடர்பான ஆணைகளைத் தள்ளுபடி செய்தன. அதையும் எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகளிலெல்லாம் 50 விழுக்காடு இடஒதுக்கீட்டு உச்சவரம்பை வலியுறுத்தி உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த வகையில் 50 விழுக்காடு இடஒதுக்கீட்டு உச்சவரம்பை விதித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு அரச மைப்புச் சட்டப்படி நீதிபதி தந்த சட்டம் (Judge made law) என்றுதான் பின்பற்றப்படுகிறது.

இதற்கு மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி முற்றிலும் உடன்படாத நிலைப்பாட்டைக் கொண் டுள்ளது. இருப்பினும் இத்தீர்ப்பு நடப்பின் செயல்பாட்டில் உள்ளது என்பதினால் அதன்படி இந்தப் பத்து விழுக் காட்டு சட்டம் பார்த்த மாத்திரத்தில் (Persee)  எவ்வித ஆய்வுக்கும் தகுதியற்றது எனக் கருதி செல்லத்தக்க தல்ல என்ற முடிவுக்கு வரமுடியும். எனவே 10 விழுக் காடு சட்டத்திற்கெதிரான வழக்குப் பதிவு செய்தவுடன் இச்சட்டம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்க வேண்டும். எனினும் இது நாடாளுமன்றத் தால் நிறைவேற்றப்பட்ட சட்டம் என்ற அடிப்படையில் 10 விழுக்காடு சட்டத்திற்கு இடைக்காலத் தடைவிதித் திருக்க வேண்டும். பின்புதான் அதை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும். இப்பொழுதாவது இந்த கருத்து மற்றும் முன் பத்தியில் தந்த விளக்கத்தின் அடிப் படையில் இச்சட்டம் செல்லத்தக்கதல்ல என நிறுவப் பட்ட நிலையை உச்சநீதிமன்றம் அறிந்திருக்கும் என்ப தால், இச்சட்டத்தை நிறைவேற்றுவதற்காக ஒன்றிய அரசும், குசராத், இராசுத்தான் போன்ற மாநிலங்கள் வெளியிட்ட நிருவாக ஆணைகளை உடனடியாக நிறுத்தி வைத்தும், நாடு முழுக்க பொருந்தும் வகையில் பொது இடைக்காலத் தடைவிதித்து இடைக்காலத் தீர்ப்பு வழங்கிட உச்சநீதிமன்றம் உடன் முன்வரவேண்டும்.

இந்த 10 விழுக்காடு சட்டத்தைப் பொறுத்த வரை மிக முக்கியமான நுணுக்கமான அரசமைப்புச் சட்டம் சார்ந்த விரிவான விளக்கத்தை (interpretation) ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம். இதில் விதிகள் 15(1), 16(2), 15(4), 16(4) மற்றும் 46 ஆகியவை ஒன்றுடன் ஒன்று மிக நெருங்கிய தொடர்புடையவை. அருள்கூர்ந்து இவற்றை  நுணுகி படிக்கவும்.

15(1), 16(2) விதிகளின்படி எந்தக் குடிமகனையும் சமயம், இனம், சாதி, பாலினம், பிறப்பிடம் அல்லது இவற்றுள் ஏதாவது ஒன்றின் அடிப்படையில் வேறுபடுத்தி (discriminate)  நடத்தக் கூடாது என்றுள்ளது. இருப்பினும் மேற்சொன்ன விதிகளிலும் இன்னும் பல விதிகளிலும் கருத்தில் கொள்ளாமல் 15(4), 16(4) விதிகளில் முறையே ஒன்றிய அரசுக் கல்வியிலும், பணிகளிலும், சமூகக் கல்வியில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படலாம். மேலே வரையறுத்துச் சொல்லப்பட் டுள்ள ஐந்து பொருள்களில், வேறுபாடுகள் (discrimination)  காட்டப்படுவதற்கு வாய்ப்புள்ளன. ஆனால் இவ் வைந்து தளங்களிலும் பொருளாதார நலிவு என வேறுபாடுகள் இயல்பாகவே இருக்கும்.

இதிலிருந்து இது ஒரு பொதுவான இயலாமைக் கூறு என்பது (universally) தெளிவு. ஆனால் இவ்வைந்தும் இயற்கையாகவே நிகழ்ந்திடக் கூடியவை. எனவே இயற்கையாக நிகழக்கூடியதை வேறுபடுத்திக் காட்டி, ஒருவரை புறம்தள்ளக்கூடாது (exclusive)  என்பது இயற்கை நியதி. ஆனால் பொருளாதார நலிவு என்பது இயற்கையாகவே நிகழ்ந்துவிடுவதில்லை. அதைத்தாண்டி பல்வேறு காரணிகளால் செயற்கையால் ஒருவர் பொருளாதார நலிவுக்குள்ளாகிறார்.

இந்தப் பின்னணியில்தான் பொருளாதார நலிவு என்ற கூறு வேறுபாட்டைத் தூண்டக்கூடிய ஒன்றாகக் கருதமுடியாது என்ற தன்மையில் மேற்சொன்ன அய்ந்து கூறுகளுடன் ஒருவரின் அல்லது அவரின் குடும்பத்தின் பொருளாதார நலிவையும் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

அரசமைப்புச் சட்ட வழிகாட்டுநெறி பகுதியில் வரும் விதி 46-இல் சொல்லப்பட்டுள்ள ‘நலிந்தவர்’ என்ற சொல் 15(1), 16(2) விதிகளில் சொல்லப்படாத நிலை யில், இதை வலிய இணைத்துப் பிணைத்து அரச மைப்புச் சட்டத்தை மோசடி செய்துள்ளனர் என்பது தெள்ளத் தெளிவாகின்றது. எனவே இந்த அரசமைப் புச் சட்ட மோசடிக்குச் சவுக்கடி கொடுக்கும் வகையில் இச்சட்டத்தைச் செல்லாததாக (void) ஆக்க வேண்டும்.

ஒன்றிய அரசு எதிர் இந்திரா சகானி வழக்கில் மண்டல் குழுவின் பரிந்துரை அடிப்படையில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு அளித்து வெளியிடப்பட்ட ஒன்றிய அரசின் ஆணையை சட்டப்படி செல்லும் என்று 9 நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு 16.11.1992இல் தீர்ப்பளித்தது. ஆனால் இதர பிற்படுத்தப்பட்டோருள் வளமான பிரிவினர் - பல்வேறு அடிப்படையில் ஆறு வகைப்பட்டவர்களைப் பட்டியலிட்டு-ஒதுக்கீட்டு வரையறைக்குள்ளிருந்து நீக்கி அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படக் கூடாது என்றும் அத்தீர்ப்பில் ஆணையிடப்பட்டுள்ளபடி இந்த முடிவுக்கு வருவதற்கு உச்சநீதிமன்றம் விரிவான விளக்கம் தந்தது. இதனை இப்போது உச்சநீதிமன்றம் கட்டாயம் கணக்கில் எடுத்துக்கொண்டால், இந்த 10 விழுக்காடு சட்டத்தின் அநியாயத் தன்மையை உணர முடியும். உச்சநீதிமன்றத் தீர்ப்பில் அந்த விளக்கத் தைப் பார்க்கலாம். அதில் பட்டியலிடப்பட்டு அந்த ஆறு வகையினரும் ஒப்பீட்டளவில் பொருளாதார அளவில் உயர்நிலை அடைந்துவிட்டிருந்தால் அவர்களை இந்த நிலையை அடைவதற்கு முன்னால் சமூக நிலையிலும், கல்வி நிலையிலும் ஒடுக்கப்பட்ட இதர பிற்படுத்தப் பட்டவர்களாக இருந்தார்கள்; என்றாலும் இப்போது மேற்சொன்ன இரு நிலைகளிலும் இந்த வகுப்பினருள் முன்னேறிய பிரிவினராகி விடுகின்றனர். எனவே அரசமைப்புச் சட்ட விதிகள் 15(4), 16(4)இல் சொல் லப்பட்ட சமூக, கல்வி நிலையில் பிற்படுத்தப்பட்டோ ராகக் கருதப்பட முடியாது.

எனவே அந்த விதிகளில் இவர்கள் இடஒதுக் கீடு பெற உரியவர் அல்ல என அறுதியிட்டுக் கூறிவிட்டது உச்சநீதிமன்றம். உச்சநீதிமன்றத்தில் அந்த விளக்கப்படி பார்த்தால் 10 விழுக்காடு சட்டத்திற்குட்படும் முற்பட்ட வகுப்பினர் சமூக வரலாற்றில் எந்தக் காலக்கட்டத்திலும் சமூக நிலையிலும், கல்வியிலும் ஒடுக்கப்பட்டோர்களாக இருந்ததில்லை என்பதுடன் இவ்விரு தளங்களிலும் மேம்பட்டவர்களாகத்தான் எப்போதும் இருந்து வந்துள்ளனர்.

மேலும் இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்துச் சமயத்தின் சனாதன தர்மத்தின் பேரால், அச்சமயம் சார்ந்த கணிசமான மக்கள் தொகுப்பு சமூகத்திலும் கல்வியிலும் கொடும் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப் பட்டு-தாழ்த்தப்பட்டவர்களாக ஆக்கப்பட்ட பட்டியல் வகுப்பினர் இசுலாம், கிறித்துவ சமயங்களுக்கு மாறி யதும் அவர்கள சமூக, கல்வி ஒடுக்குமுறைகளிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களாகக் கொண்டு இடஒதுக்கீடு மறுக்கப்பட்டு பொதுப் போட்டித் தொகுப்புக்குள் தள்ளப் படுகின்றனர். நாட்டின் நலிந்த பிரிவினர் என்ற தொகுப் புக்குள் இந்த வகுப்பு மக்கள் தான் பெரும் பகுதியின ராக இருப்பர். ஆனால் முற்பட்ட வகுப்பினர் மிக மிகச் சொற்ப அளவில் இருப்பர். இந்தக் கூட்டம் எந்த சமூக, கல்வி ஒடுக்குமுறைக்கு வரலாற்று நெடுகிலும் உள்ளாகி டாமல், மாறாக ஒடுக்கும் வகுப்பாகவே இருந்து கொண்டு நயவஞ்சகமாக நலிந்தோர் என்ற பெயரில் அவர்கள் 10 விழுக்காட்டு இடஒதுக்கீட்டுக்கு தகுதியுடை யவர்களாக மாற்றிவிடுகிறது. எனவே 10 விழுக்காடு சட்டம் மோசடி. ஆனால் சமூகத்தில் பொருளாதாரம் உள்ளிட்ட பல நிலைகளில் ஆக நலிந்தோராக இருந்த சமூகம், கல்வியில் ஒடுக்கப்பட்டவர்களான பட்டியல் வகுப்பினர் பொதுப் போட்டிக்குள் தள்ளப்படுவது அநீதியின் உச்சம்; வஞ்சகமானது. இதிலிருந்து பா.ச.க. உள்ளிட்ட பல்வேறு இந்துத்துவக் காவி கும்பல் பார்ப்பனிய வெறிபிடித்த மனநிலைக்கு வந்துவிட்டனர் எனத் தோன்றுகின்றது. அந்த வக்கிரத்தின் வெளிப்பாடுதான் அரசமைப்புச் சட்ட மோசடியான 10 விழுக்காட்டு இடஒதுக் கீட்டுச் சட்டம். எனவே இது தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.

இனி இச்சட்டம் பிறப்பிலே பிழையானது (in herently error sticken) எப்படி எனப் பார்ப்போம்.

முற்பட்ட வகுப்பின் நலிந்த பிரிவுகளில் உள்ள மக்களை அடையாளம் காண வகுக்கப்பட்ட வரையரை யான ஆண்டு வருமான வரம்பு ரூ.7,99,999. இந்தத் தொகை எவ்வாறு, எதன் அடிப்படையில் வரையறுக் கப்பட்டது? இந்த வருமான வரம்புக்குள் உள்ளோர் முற்பட்ட வகுப்பு மக்களுள் எத்தனை விழுக்காட்டினர்? உண்மையில் இந்த வருமான வரம்புக்குள் வரும் மக்கள் தொகுப்பிலிருந்து எவ்வளவு பேர் அரசுக் கல்வி, பணிகளில் இடம்பெற்றுள்ளனர்? இந்த நலிந்த மக்கள் அரசு கல்வியில், பணிகளில் உள்ளோருள் எத்தனை விழுக்காடு உள்ளனர்? இதற்கெல்லாம் எவ் வகையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு ஆய்வு முடிவுகள் எட்டப்பட்டதா? அப்படி எந்த அடிப்படையின்றித் தான், பொத்தாம் பொதுவாக 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டதா? நாட்டின் பல மாநிலங்களில் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் புதியதாகச் சாதிகள் சேர்க்கப்பட்ட பல நிகழ்வுகளில் உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம், எவ்வித ஆய்வின் அடிப்படையிலும் இல்லாமல் பட்டியலில் இணைந்து வெளியிடப்பட்ட ஆணைகள் பார்த்தமாத்திரத்தில் தள்ளுபடி செய்யப்பட்டன. அத்தன்மையில் இந்த 10 விழுக்காடு ஒதுக்கீட்டுச் சட்டம் தள்ளுபடி செய்யப்படத்தக்க சட்டம்தான். இவற்றை மோடி அரசு அறியாமலிருக்க வாயப்பில்லை. ஆனால், உச்சநீதிமன்றம் இதுபோன்ற நிகழ்வுகளை கருத்தில் கொண்டு முடிவுக்கு வரும் என நம்பலாம்.

ஆசை அறிவை இழக்கச் செய்துவிடும் என்பர். அதற்கேற்ப இந்தச் சட்டத்தை இயற்றுவதில் மோடி அரசு காட்டியுள்ள ஆர்வம் இவ்வுலகமே கண்டிராதது என்பதை இதில் இவர்கள் காட்டிய எல்லையில்லா வேகத்திலிருந்து அறியலாம். இந்த முற்பட்ட வகுப்பு நலிவுற்றவர்களுக்கு அரசுப் பணிகள் கல்வியில் இடஒதுக் கீடு அளிக்க வகை செய்ததுடன், தனியார் நிறுவனங் களிலும் இவர்களுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கிடவும் இச்சட்டம் வகை செய்துவிட்டது.

புதிய பொருளாதாரக் கொள்கை 1991-லிருந்து ஒன்றிய அரசு கடைபிடிக்கப்பட்டதின் விளைவால் சனநாயக அரசின் மக்கள் நலக் கோட்பாட்டின்படி கல்வி, மருத்துவம் கொடுக்கப்பட வேண்டுமென்றிருக்க ஒன்றிய அரசு மக்கள் தொகை வளர்ச்சி ஏற்றவாறு அரசுப் பணி, கல்வி வாய்ப்புகளைப் புதிதாக உருவாக்காமல் இப்பொறுப்புகளிலிருந்து அரசு விடுவித்துக் கொள்ளும் வகையில் நடந்து வருவதால் இந்த வாய்ப்புகள் பெரிதும் அருகிக் கொண்டே வருகின்றன. இதற்கு குறிப்பாக, சென்ற அய்ந்தாண்டு மோடி ஆட்சியே சான்று.

அரசின் இந்த பொறுப்பற்ற போக்கால் தனியார் வணிகம், தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு துறைகளில் பெருமளவில் விரிந்து செயல்படுவது போல் கல்வி, மருத்துவத் துறைகளிலும் கால்பரப்பிவிட்டனர். தனியார் துறையில் முற்பட்டவர்கள் கோலோச்சுவது வெளிப்படையாகத் தெரிகின்றது.

எனவே அரசு மற்றும் தனியார் பணிகளில் ஒடுக்கப் பட்ட மக்களின் வாய்ப்புகள் தேய்ந்து கொண்டே வருவதைக் கருத்திற் கொண்டு, 25-30 ஆண்டுகள் பல்வேறு போராட்டங்கள் நிகழ்த்தி, தனியார் துறைகளில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு அளித்திட வேண்டு மென்று கோரிக்கைகள் அளிக்கப்பட்டு நிலுவையில் தான் உள்ளன. இதையெல்லாம் தம் அய்ந்தாண்டு ஆட்சிக் காலத்தில் கிஞ்சிற்று கருத்தில் கொள்ளாத பா.ச.க. காவிக்கும்பல் அரசு, அதன் ஆட்சிக்காலம் முடிவுறும் நிலையில் திடும் என அரசமைப்புச் சட்ட மோசடி செய்து, முற்பட்ட வகுப்பு நலிந்தவர் என்ற பெயரில் இவர்களுக்கு அரசுக் கல்வி, பணிகளில் 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கியது மட்டுமின்றி, தனி யார் கல்வியிலும் 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளித்து அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தம் செய்து சட்டம் இயற்றியுள்ளது. தன் காவிப் பாசத்தை ஒட்டுண்ணி இந்துக் கூட்டத்தின் மீது கொட்டித் தீர்த்து (Blood is thicker than water) என்ற பழமொழியைப் மெய்ப்பித்துவிட்டது.

பார்ப்பன, பனியாக் கூட்டம் தன் நலத்திற்காக எந்தக் கொடுஞ்செயலையும் கொஞ்சமும் கூச்சநாச்ச மின்றி, எந்தச் சலனமுமின்றி அதை வறட்டுத்தனமாக நியாயப்படுத்தியும் செய்திட முன்வருவார்கள் எனப் பெரியார் அறுதியிட்டுச் சொன்னதை, 10 விழுக்காடு ஒதுக்கீட்டுச் சட்டத்தைக் கொண்டு வந்து எண்பித்து விட்டனர். இத்தன்மையிலே மா.பெ.பொ.க. பொதுச் செயலாளர் சென்ற 20-25 ஆண்டுகளுக்குமுன் மண்டல் குழு அமைத்திட, அதன் பரிந்துரைகளை நிறைவேற்றிட அடுத்தடுத்து நெடும் போராட்டங் களின் ஊடே இந்தப் பார்ப்பன பனியாக் கூட்டம் நாடாளுமன்றத்தை மடை மாற்றி வஞ்சகச் செயல் புரிந்து பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு, தங்கள் கும்பலுக்கு இடஒதுக்கீடு செய்து கொள்ளவும் முற்படுவார்கள் என்று கட்சியின் ஏடான சிந்தனையாளன் ஏட்டில் அப்போதே பதிவு செய்தார். அது இப்போது மெய்யாகிவிட்டது.

உலகளவில் அமெரிக்கா, அய்ரோப்பிய நாடுகள், ஆசுத்துரேலியா போன்ற நாடுகளின் இனவெறிக் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு கல்வி மறுக்கப்பட்டு துயருற்ற ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசு அதிகாரங் களிலும் கல்வியிலும் பங்கு அளித்திடல் வேண்டும் என்று மக்கள் நாயகக் கோட்பாட்டின்படி இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகின்றது. இது ஒன்றும் புதுமையல்ல. இதில் கொடுமை என்னவெனில் நம் நாட்டு மக்களி டையே இந்து சமய, பார்ப்பன சனாதன கோட்பாட்டைப் பின்பற்றி ஒரு சிறு கூட்டம், பெரும் தொகுப்பு நம் இந்து சமய மக்களையே அதன் பேராலேயே இழி மக்கள், நாலாஞ் சாதியினர், உடைமைக்கும் கல்வி பெறுவதற்கும், ஏன் பிழைக்கவே தகுதியற்றவர்கள் என பசு மாடுகளைக் காத்திட இம்மக்கள் பலியும் ஆகலாம் என்று அவர்களையே எண்ண வைத்து அவர்கள் 2000 ஆண்டுகளாக அடக்கி, ஒடுக்கி வைக்கப்பட்டனர். நாடு விடுதலை அடைந்து, காலமெல்லாம் இம்மண்ணின் வளமெல்லாம் உருவாக்கித் தந்தவர்களின் நலனுக் காக, சமூக நீதி கோட்பாட்டைக் கடைப்பிடித்து அதன் ஒரு கூறான இடஒதுக்கீட்டுக் கொள்கை சில பத்து ஆண்டுகள் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் 1992இல் உச்சநீதி மன்றம் மேற்சொன்ன விளக்கத்தைத் தந்துள்ளது. இதுவும் இங்கு வெறும் பெயரளவிலேதான் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

இதற்கிடையில் தகுதி, திறமை புறந்தள்ளப்பட்டு விட்டது என்று பலவாறான ஓலங்கள். ஆனால் மண்ட லுக்குப் பிந்தைய காலத்தில் நெல்சன் மண்டேலா இந்தியா வருகை தந்த போது, இந்தியாவின் ஒடுக்கப் பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டுக் கொள்கை போற்று தலுக்குரியது என்றும் இதனால் தகுதி, திறமை குறையு மெனில் முட்டாள்கள் என்றாகினும் முட்டாள்களாகிய நாங்கள் எங்கள் நாட்டை நாங்களே ஆண்டு கொள் வோம் என்றும் சூளுரைத்தார்.

எனவே, சமூகநீதிக் கோட்பாட்டைக் குலைத்திடும் நோக்கில் அரசமைப்புச் சட்ட மோசடியாகக் கொண்டு வரப்பட்டுள்ள இந்தப் 10 விழுக்காட்டு ஒதுக்கீட்டுச் சட்டம் நாட்டிற்கே தலைகுனிவு. மக்கள் நாயக மாண்பிற்கே இழுக்கு. இது ஒரு அரச வன்முறைச் சட்டம். இவ்வாறான பார்ப்பன இந்துத்துவ காவிக் கூட்டத்தின் அடாவடிக்குத் தன்மானமிழந்து மக்கள் மவுனம் காப்பது அடிமைத்தனப் பணிவுதான். இந்நிலையில் உச்சநீதிமன்றம் தன் மாண்பையும் மதிப்பையும் மக்கள் அதன்மீது வைத்துள்ள நம்பிக்கையையும் தக்க வைக்கும் வகையில் முதலில் இந்தச் சட்டத்தின் அடிப்படையில் வெளியிட்டுள்ள நிருவாக ஆணைகளை உடனடியாக நிறுத்தி வைக்கும் எனவும், சட்டத்தைச் செல்லாததாக்கும் எனவும் நம்பிக்கை கொள்ளலாம்.

Pin It