aanai muthu copyபுஷ்யமித்ர சுங்கர்கள் ஆட்சியில்

பார்ப்பனியம் தலைவிரித்தாடுகிறது!

சுழலட்டும் பெரியார் அம்பேத்கர் கைத்தடிகள்...

இந்தியச் சமூகத்தில் ஆரியப் பார்ப்பனர்கள் ஊடுருவிய காலந்தொட்டு வெகுமக்களாக இருக்கிற உழைக்கும் வர்க்கத்தினரான சூத்திரர்களும் தீண்டப்படாதவர்களும் இழிமக்களாக நடத்தப்பட்டு, தொடர்ந்து 2000 ஆண்டுகளாகக் கல்விபெறுகிற, மிகுதியான உடலுழைப்பு செலுத்துகிற பணிகள் தவிர்த்த அரசாங்க - அதிகாரம் செலுத்துகிற வேலைகள் செய்கிற உரிமையும் மறுக்கப்பட்டனர்; 2020 - இலும் மறுக்கப்படுகின்றனர்.

இதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது பிறப்பால் உயர்வு - தாழ்வு கற்பிக்கிற வருணாசிரம தர்மமும், மநுநீதியும், புராண இதிகாசங்களும்; இரும்புக்கோட்டை போலப் பாதுகாப்பு கொடுப்பது வெகுமக்களுக்கு எதிரான இந்திய அரசமைப்புச் சட்டமும் அவற்றை நடைமுறைப்படுத்துகிற பொறுப்பிலுள்ள பார்ப்பன அதிகாரிகளும், நீதிமன்றங்களும் ஆகும்.

“ஏவலர்களான சூத்திரசாதி மக்கள் பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள் ஆகிய மூவர்க்கும் பொறாமையின்றிப் பணிபுரிதல் ஒன்றையே முதன்மை யாகக் கொள்ளக் கடவர்” (1 : 91)

“ஒரு பிராமணன் ஒரு சூத்திரனுடைய பொருள்களை முழுமன அமைதியோடு எடுத்துக்கொள்ளலாம். ஏனென்றால் சூத்திரனுக்கென்று எதுவும் சொந்தமில்லை. அவனது சொத்துக்களை அவனது எஜமானன் எடுத்துக் கொள்ளலாம்” (8 : 417)

“ஒரு சூத்திரனால் சம்பாதிக்க முடியுமானாலும் அவன் செல்வத்தைப் பெருக்க அனுமதிக்கக் கூடாது. சூத்திரன் வைத்திருக்கும் செல்வத்தை வெறுமனே பார்ப்பதுகூட பிராமணனைத் துன்புறுத்தும்” (9 : 129)

என்கிறது மனுநீதி.

ஈராயிரம் ஆண்டுகளின் இந்த இறுக்கமான கட்டமைப்பு சற்றே நடுக்கமுற்றது இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில்தான், பார்ப்பனரல்லாதார் தலைமையில் அமைந்த நீதிக்கட்சி ஆட்சியில்தான். அதுவரை பார்ப்பனர், சத்திரியர், வைசியர் மற்றும் சற்சூத்திரர் என்கிற மேல்சாதி சூத்திரர்கள் உள்ளிட்ட 17 விழுக்காடு மக்களே கல்வி பெறுவதிலும் அரசுப் பணிகளைப் பெறுவதிலும் முற்றுரிமை பெற்றவர்களைப் போல இருந்தனர்.

பார்ப்பனர் அல்லாத மக்கள் - தகுதி, திறமை என்கிற பேரால் மாகாண அரசின் வேலைகளிலும், மாகாண அரசின் உயர்படிப்பிலும் 1920 வரை பார்ப்பன ஆதிக்கத்திற்கு ஆட்பட்டு உரிமையற்றுக் கிடந்தனர். 1927-க்குப் பிறகுதான் தந்தைபெரியார், முதலமைச்சர் டாக்டர் ப.சுப்பராயன், பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் எஸ்.முத்தைய முதலியார் ஆகியோரின் பெருமுயற்சியால், 1928 முதல் பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார், இசுலாமியர், கிறித்துவர், ஆதித்திராவிடர் ஆகிய 5 வகுப்புகளுக்கும் மாகாண அரசின் வேலையில் வாய்ப்புத் தரப்பட்டது. 1940 முதல் கல்வியிலும் இந்த 5 வகுப்புகளுக்கும் இடப்பங்கீடு தரப்பட்டது. அதன் விளைவாக பழைய சென்னை மாகாணப் பார்ப்பனரல்லாதாரின் நிலை இந்த இரண்டு துறைகளிலும் சொல்லும் படியான நிலையில் ஓரளவு முன்னேற்றம் கண்டுள்ளது.

வடநாட்டுப் பார்ப்பனரல்லாதார் நிலை குறிப்பாக பிற்படுத்தப்பட்டோர் நிலை மிகவும் பின்தங்கி இருப் பதற்குக் காரணம், வெள்ளையன் வெளியேறிய பிறகும் இந்திய அரசமைப்புச் சட்டம் 1950-இல் நடப்புக்கு வந்தபிறகும் 1978 வரை பிற்படுத்தப்பட்டோருக்கு ஒரு விழுக்காடு இடஒதுக்கீடுகூட வழங்கப்படாததே ஆகும்.

மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியும் அனைத்திந்திய ஒடுக்கப்பட்டோர் பேரவையும் இணைந்து 1978 முதல் நடத்திய - பீகார் மாநிலம் முழுவதும் 17.9.1978 முதல் 18.10.1978 வரை வகுப்புரிமைப் பரப்புரை, 19.10.1978 முதல் 31.10.1978 வரை பாட்னாவில் சிறை நிரப்பும் போராட்டம் (பத்தாயிரம் பேர் சிறை) 20.12.1978 - இல் இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் குழு அறிவிப்பு; 15.11.1979 முதல் 01.12.1979 முடிய தில்லி திகார் சிறை நிரப்பும் போராட்டம் உள்ளிட்ட தொடர்ச்சியான போராட்டத்தின் வழிதான் மண்டல் குழு அமைக்கப்பட்டு 1994-இல் முதன் முதலாகப் பிற்படுத்தப்பட்டோருக்கு நடுவண் அரசில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.

இந்தியா முழுவதிலும் உள்ள பட்டியல் வகுப்பின ருக்கும் பழங்குடியினருக்கும் அரசமைப்புச் சட்டப்படி 1950-இல்தான் கல்வியிலும் வேலையிலும் இடஒதுக்கீடு தரப்பட்டது. இருப்பினும் மொத்தம் 25.5 விழுக்காடு மக்கள் தொகையுள்ள பட்டியல் வகுப்பினரும் பழங்குடியினரும் முதல்நிலைப் பதவிகளில் 2021-இலும் 17 விழுக்காட்டுக்கு மேல் பங்குபெறமுடியவில்லை.

அதேபோல் பிற்படுத்தப் பட்டவர்கள் நடுவணரசின் கல்வியிலும் வேலையிலும் 1994-இல்தான் இடஒதுக்கீடு பெற்றனர். எல்லா மதங் களையும் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோரும் 2020-இலும் 5 விழுக்காடு அளவுக்கே நடுவணரசின் முதல்நிலைப் பதவிகளில் பங்குபெற்றுள்ளனர். ஆனால், அவர்களின் மக்கள்தொகை இந்திய அளவில் 57 விழுக்காடு ஆகும்.

2018-இல் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடி மக்களின் நிலை பற்றிய ஒரு கேள்விக்கு நாடாளுமன்றத்தில் விடையிறுத்த இந்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், பேராசிரியர் பணியிடங்களில் 25.5 விழுக்காடு உள்ள இம்மக்கள் 2.8 விழுக்காடு மட்டுமே பங்கு பெற் றுள்ளனர் என்கிற பேருண்மையை ஒப்புக்கொண்டார்.

இத்துனைப் போராட்டங்களுக்குப் பிறகு கிடைக்கப் பெற்ற மக்கள் தொகையின் அடிப்படையில் இல்லை யெனினும் மிகக்குறைந்த அளவான சட்டப்படியான இந்தப் பங்கீடுகளைக்கூட உயர்பதவிகளிலும், இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் (IITs), இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள் (IIMs), இந்திய அறிவியல் நிறுவனம் (IISc), பிற நடுவண் கல்வி மருத்துவ நிறுவனங்களில் “தகுதிபெற்ற ஆட்கள் இல்லை” என்ற மோசடியான காரணங்களைச் சொல்லி அந்த இடங்களை நிரப்பாமல் விடுவதும், இடஒதுக்கீடு முறையையே மாற்றி அந்த இடங்களில் முற்பட்ட வகுப்பினரையும் நிரப்பும் என்கிற மோசடியைக் கமுக்கமாக நிறைவேற்றி வந்த பார்ப்பனியக் கும்பல், பாசிச வெறிபிடித்த பாசக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து இடஒதுக்கீட்டையே முற்றிலுமாக ஒழித்துக்கட்டிட எல்லாம் செய்யத் துணிந்துவிட்டன.

அதன் நீட்சியாகத்தான் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்களில் பேராசிரியர்கள் நியமனத்தில் மட்டுமன்றி, மாணவர் சேர்க்கையிலும் இடஒதுக்கீட்டைப் பயனுள்ள வகையில் செயல்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்து அரசுக்குப் பரிந்துரைப்பதற்காக என தில்லி இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் இயக்குநர் இராம் கோபால் ராவ் தலைமையில் ஒரு வல்லுநர் குழுவை 2020 ஏப்ரலில் அமைத்த இந்திய உயர்கல்வித்துறை அமைச்சகம் மூன்றே மாதத்தில் சூன் 2020-இலேயே அதன் அறிக்கை யையும் கமுக்கமாகப் பெற்றுக்கொண்டது மோடி தலைமை யிலான பாஜக அரசு.

தகலறியும் உரிமைச் சட்டப்படி பெறப்பட்டுள்ள அதன் பரிந்துரைகள் சில நாளேடுகளில் வெளிவந்துள்ளன.

அவ்வறிக்கையில், “கற்பித்தல், ஆராய்ச்சி, திறமை யான மாணவர்களை உருவாக்குதல் உள்ளிட்டவற்றில் உலகின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களுடன் போட்டியிட ஏதுவாகக் கல்வித் தரத்தை உயர்த்தவேண்டுமெனில் இடஒதுக்கீடு கூடாது; இடஒதுக்கீட்டுப் பிரிவிலிருந்து தகுதியான ஆட்கள் கிடைப்பதில்லை” என்று கூறியிருப்பது இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டுவது மட்டுமல்ல, இந்திய அரசமைப்புச் சட்டத்தையே அவமதிப்பதும், 136 கோடி இந்தியருள் 113 கோடி மக்களாக இருக்கிற உழைக் கும் மக்களான ஒடுக்கப்பட்ட மக்களை வஞ்சிப்பதும் இழிவுபடுத்தும் செயலாகும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்திலிருந்து பொதுப் பட்டியலை ஒழித்துக் கட்டுவதும், கல்வி உள்ளிட்ட நடுவணரசு பறித்துக்கொண்ட மாநில உரிமைகளைப் போராடி மீளப்பெறுவதும், ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில மக்களின் மக்கள் தொகைக்கேற்ப கல்வி, வேலை என எல்லாத் துறைகளிலும் விகிதாசாரப் பங்கீடு பெறுவதும் மட்டுமே இன்றைக்கிருக்கிற இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கிற உரிமைகளின் படி அடையக்கூடிய வாய்ப்புள்ள தீர்வுகளாகும்.

புஷ்யமித்ர சுங்கர்கள் ஆட்சியில் பார்ப்பனியம் தலை விரித்தாடுகிறது.

இப்போதும் இந்திய ஒடுக்கப்பட்ட மக்கள் ஓரணியில் திரண்டு போராடத் தவறுவது என்பது அவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்குச் சமம்.

பார்ப்பனியக் கொட்டமடக்க பெரியார் அம்பேத்கரின் கைத்தடிகள் சுழலட்டும்.

இத் தன்மானப் போரின் வழி ‘ஆயிரம் பூக்கள் மலரட்டும்’ என்பதுபோல முப்பத்திரண்டு குடியரசுகள் மலர்ந்து உண்மை யான இந்திய ஒன்றியத்தினைச் சமைக்கட்டும்.

-  வே.ஆனைமுத்து (01.01.2021)

Pin It