உயர்ஜாதி கட்ஆப் - 42;
பட்டியல் பிரிவுக்கு 94.8
உயர்ஜாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை மோடி ஆட்சி அமுல்படுத்திய பிறகு, ‘ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’ எழுத்தர் தேர்வுக்கு பார்ப்பனர் உயர்ஜாதியினர் 28.51 கட்ஆப் மதிப்பெண் எடுத்தாலே போதும் என்ற அதிர்ச்சியான தகவல் வெளி வந்தது.
பிற்படுத்தப்பட்டோரும், பட்டியல் இனப் பிரிவினரும் 61.25 ‘கட்ஆப்’ மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இந்த சமூக அநீதியின் அதிர்ச்சியிலிருந்து மீள முடியாத நிலையில் தற்போது மேலும் ஒரு பேரிடி செய்தி வெளி வந்திருக்கிறது.
இது நடுவண் அரசின் கட்டுப்பாட்டிலுள்ள அஞ்சல் துறையில் கிளை அதிகாரிகள் என்ற பதவிகளுக்கான தேர்வு. தமிழ்நாட்டில் 4443 காலி இடங்களுக்கு விண்ணப்பங்கள் கேட்கப்பட்டு, 2019 ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளி வந்தது.
குறைந்த பட்ச கல்வித் தகுதி 10ஆம் வகுப்பு தேர்ச்சி; ‘ப்ளஸ் டூ’ படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆனாலும் வழக்கமான குளறுபடிகள் அரங்கேறின.
இணையதள வழியாக விண்ணப்பிக்க ஏப்.15, 2019 கடைசி நாள் என்று அறிவித்தனர். ஆனால் அஞ்சல் துறையின் இணைய தள ‘சர்வர்’ மார்ச் 28 முதலே பல பகுதிகளில் செயல்படாமல் முடங்கிக் கிடந்தது. வேலைக்கு மனுப் போடத் துடித்துக் கொண்டிருந்த இளைஞர்கள், தமிழ்நாட்டிலுள்ள அஞ்சலகத் தலைமை அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு ‘சர்வர்’ முடங்கிக் கிடப்பதை கவனத்துக்குக் கொண்டு சென்றனர்.
‘இது தேர்தல் நேரம்; எனவே சீர் செய்ய இயலாது’ என்று கூறி விட்டனர், அஞ்சலக அதிகாரிகள். இந்த நிலையில் விண்ணப்பிக்கும் தேதியை மேலும் நீட்டித்து காலக் கெடு வழங்குமாறு விடுத்த கோரிக்கையையும் அஞ்சலக அதிகாரிகள் காதில் போட்டுக் கொள்ளவில்லை. ஏற்கனவே அறிவித்த ஏப். 15 தான் கடைசி தேதி என்று பிடிவாதம் பிடித்தது நிர்வாகம். இந்த செய்திகள் ‘தினமணி’ ஏட்டில் வெளி வந்திருக்கின்றன.
இந்தப் பின்னணியில்தான் இளைஞர்கள் எப்படியோ விண்ணப்பித்தார்கள். ஸ்டேட் வங்கித் தேர்வில் நடந்த அதே அதிர்ச்சிதான் இங்கும் காத்திருக்கிறது.
பார்ப்பன உயர்ஜாதியினருக்கு நிர்வாகம் நிர்ணயித்துள்ள ‘கட்ஆப்’ மதிப்பெண் 42.
பட்டியலினப் பிரிவுக்கோ - 94.8
பழங்குடிப் பிரிவினருக்கு - 89.6
பிற்படுத்தப்பட்டோருக்கு - 95
பார்ப்பன உயர்ஜாதியினர் 42 மதிப்பெண் பெற்றாலே போதும் என்ற அடிப்படையில் 453 பேருக்கு வேலை வாய்ப்புக்கான நியமன உத்தரவுகளையும் பிறப்பித்து விட்டனர். இவர்களுக்கான ஊதியம் மாதம் ரூ.12,000 முதல் ரூ.35,480 வரை!
இதே வேலைக்கு உடல்ஊனமுற்ற, பார்வைத் திறனற்ற மாற்றுத் திறனாளிகள்கூட 85.8 சதவீத ‘கட்ஆப்’ மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
ஆனால், பார்ப்பனர் உயர்ஜாதியினர் என்றால் 42 பெற்றாலே போதும்.
சமச்சீர் கல்வியில் படித்த நமது பிள்ளைகள் 500க்கு 450 வாங்கினால்கூட ‘தரமற்ற கல்வி; மனப்பாடக் கல்வி’ என்று ‘வக்கணை’ பேசுவதில் ஒன்றும் குறைச்சல் இல்லை.
இவர்களின் வேலைக்கான தகுதி என்றால் 500க்கு 210 பெற்றாலே போதும். (அதாவது 42 சதவீதம்)
10 சதவீத இடஒதுக்கீடு இப்படி அக்ரஹாரங்களை கொழுக்க வைக்கவே கொண்டு வரப்பட்டிருக்கிறது.