இன்று (பிப்ரவரி 21-ந் தேதி) உலகத் தாய்மொழி தினம்.

இன்றைய வங்க தேசத்தில் (அன்றைய கிழக்குப் பாகிஸ்தானில்) வங்காள மொழியையும் பாகிஸ்தானின் தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் என்று கிளர்ச்சி செய்தார்கள். அந்தப் போராட்டத்தில் நான்கு மாணவர் கள் 1952ஆம் ஆண்டு பிப்ரவரி 21-ந் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அந்தக் கிளர்ச்சி தீவிரம் அடைந்து கிழக்குப் பாகிஸ்தான் தனி நாடாகி ‘வங்கதேசம்’ என ஒரு நாடு உருவாகியது. 1999ஆம் ஆண்டு ‘யுனெஸ்கோ’ (ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டுக் கழகம்) நத்திய ஒரு மாநாட்டில் வங்கதேச அரசினர், தாய் மொழிக்காகப் போராடித் தங்கள் உயிரை நீத்தவர்களின் நினைவாகவும் தாய்மொழியின் சிறப்பை வலியுறுத்தும் விதமாகவும் பிப்ரவரி 21-ந் நாளை ‘உலகத் தாய்மொழி நாளாக’ ஆண்டுதோறும் கொண்டாட வேண்டும் என்ற தீர்மானம் கொண்டு வந்தார்கள். யுனெஸ்கோ அந்தத் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது. அதன் விளைவாக, 2000-ஆம் ஆண்டில் இருந்து பிப்ரவரி 21 ‘உலகத் தாய்மொழி நாள்’ என்று அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆயிரம் மொழி அறிந்தாலும் அவற்றிற்கு அடிப்படையாக விளங்குவது தாய்மொழி அறிவே. “உங்களுக்குத் தெரிந்த மொழியிலே ஒருவன் பேசினால் அது உங்கள் அறிவைச் சென்று சேரும்; ஆனால், உங்கள் தாய் மொழியிலே பேசினால் அது உங்கள் உள்ளத்தையும் ஊடுருவிச் செல்லும்” என்று நெல்சன் மண்டேலா குறிப்பிட்டார். அந்த வகையில் தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய அழுகையோடு, சிரிப்போடு, அனைத்து மெய்ப்பாடு களோடும் வளர்ந்த மொழி ஆகும். தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமை.

உலகத்தில் 2700 மொழிகள் பேசப்பட்டு வருவதாகவும், 5 ஆயிரம் வட்டார மொழிகள் பேசப்பட்டு வருவதாகவும், புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஆனால், அந்த 2700 மொழிகளில் ஆசியாவில்மட்டும் 2200 மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. இந்தியாவில் முப்பத்து மூன்று மொழிகளும் இரண்டாயிரம் வட்டார மொழிகளும் பேசப்பட்டு வருவதாக விவரங்கள் அறி விக்கின்றன. அந்த முப்பத்து மூன்று மொழிகளில் இரு பத்து மூன்று மொழிகளை நம்முடைய இந்திய அரசி யல் சட்டத்தினுடைய எட்டாவது அட்டவணையின்கீழ் ஏற்பிசைவு (அங்கீகாரம்) வழங்கியிருக்கிறார்கள்.

கிரேக்க மொழி, இலத்தீன் மொழி, ஈப்ரு மொழி, சீன மொழி, நம்முடைய இந்தியாவிலே தமிழ் மொழி, சமஸ்கிருத மொழி, இவையெல்லாம் மிகப் பழமை வாய்ந்த மொழிகள். சமஸ்கிருத மொழி பேச்சு மொழி அல்ல. ஏனைய மொழிகளெல்லாம் ஒரு காலத்திலே மக்கள் திரள் திரளாகப் பேசிக்கொண்டோ, இலக்கியங் களை, அறிவியலைப் படைத்துக் கொண்டோ இருந்த மொழிகள். அவற்றுள் இன்றைக்குக் கிரேக்கமும், இலத்தீனும் செல்வாக்கு இழந்துவிட்டன. செல்வாக்கிழந் திருந்த ஈப்ரு மொழி யூதர்களின் எழுச்சியினாலும் உழைப்பாலும் மறுமலர்ச்சி அடைந்துள்ளது. சீன மொழி என்றைக்குமே தளர்ச்சி அடையவில்லை. சீனர்கள் இடைவிடாத வணிகத்தாலே உலகத் தோடு தொடர்பு கொண்டு வலிமை வாய்ந்த ஓர் இனமாக என்றைக்குமே இருந்த காரணத்தினாலே சீன மொழி நிலைத்து நிற்கிறது. அதுபோலவே உலகெங்கும் பல்வேறு நாடுகளுக்குச் சென்று குடியேறிய தமிழர்களின் முயற்சியால் தமிழ் மொழியும் ஒரு சிறப்பு வாய்ந்த உலக மொழி யாக நிலைபெற்று நிற்கிறது.

எளிமையாக ஒலிப்பதற்கு, எளிமையாகப் பேசுவதற்கு, எளிமையாக எழுதுவதற்கு வாய்ந்த ஓர் உயர்தனிச் செம்மொழி தமிழ்மொழிதான். அடுத்தது, அதன் இனிமை தமிழைச் சொல்லும்பொழுது, அடிவயிற்றிலே இருந்து நாம் பேச வேண்டிய தேவையில்லை. மற்ற மொழி களைச் சொல்லும் பொழுது அடிவயிற்றிலே அந்த ஒலிப்பு தொடங்கும். அப்படி தொல்லைப்பட்டு ஒலிக்க வேண்டிய ஒலி எதுவுமே தமிழில் இல்லை. தமிழின் சொற்கள் யாவுமே மிகவும் குறைவான எழுத்துகளு டைய சொற்கள்தான். இவ்வாறு அமைப்பிலும் ஒலிப் பிலும் எல்லா நிலைகளிலும் எளிமையும் இனிமையும் என்றும் மாறாத தன்மையும் கொண்டது தமிழ்மொழி. திருவள்ளுவர் எப்படிப் பேசினாரோ, அதேபோலத் தான் நாம் பேசுகிறோம். அதனால்தான் திருக்குறள் நமக்குப் புரிகிறது. ஆங்கிலம் பதினொன்றாம் நூற்றாண் டுக்குப் பின்னாலே வந்த மொழிதான் எனினும் ஆங்கில மொழியிலேயே கி.பி.13-ஆம் நூற்றாண்டுக் குரிய ஆங்கிலம் இன்றைக்கு இருக்கிற ஆங்கிலேயர் களுக்குப் புரியாது. ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய திருக்குறள் இன்று நமக்குப் புரியும். காலம் மாறினாலும் என்றும் மாறாது இருக்கின்ற பெருமை தமிழின் தனிச்சிறப்பு ஆகும்.

டாடி, மம்மி என்று கூப்பிட்டால் பெற்றோர்களுக்குப் பெருமையாக இருக்கிறது. அதனால் குழந்தை களுக்கு வேறு வழியில்லை. ஆனால், அவ்வாறு அழைப்பது தவறு என்று பெற்றோர்கள் கருதத் தொடங்கினால், குழந்தைகள் அவ்வாறு அழைக்கமாட்டார்கள். குழந்தைகள் பெற்றோரிடமிருந்துதானே பேசக் கற்றுக் கொள்கின்றன? பெற்றோர் எந்த அளவுக்கு வீட்டிலே தமிழைப் பயன்படுத்துகிறார்களோ அந்த அளவுக்குக் குழந்தைகளுக்கு மொழியறிவும் பேச்சுத் திறனும் வளரும். வீட்டில் தமிழைப் பேசிப் பல புதியச் சொற் களையும் குழந்தைகள் தெரிந்து கொள்ளுமாறு செய்தல் பெற்றோரது கடமையாகும். அது ஒரு சமூகக் கடமை யென்ற எண்ணம் ஏற்பட்டால், குழந்தை வளர்வதைப் போன்றே அதன் தமிழறிவும் சிறப்பாக வளரும் அல்லவா?

புலம்பெயர்ந்த தமிழர்கள் நல்ல தமிழிலே உரை யாடுகிறார்கள். அமெரிக்காவுக்கோ, சிங்கப்பூருக்கோ போனால், நல்ல தமிழிலே வீட்டிலேயே பேசுகிறார்கள். அந்தக் குழந்தைகளெல்லாம் அருமையாக நல்ல தமிழிலே பேசுகின்றன. நமக்கெல்லாம் வியப்பாகவே இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் தமிழை நம்முடைய மாநிலத்திலேயே இரண்டாவது மொழியாக அறிமுகப்படுத்துவதற்குக்கூட போராடிக் கொண்டிருக் கிறோம். ஆனால், அமெரிக்காவிலே பதினான்கு மாநிலங்களில் தமிழ் இரண்டாம் மொழியாகக் கல்வி நிலையங்களிலே பயிற்றுவிக்கப்படுகிறது. காரணம் யார்? பெற்றோர்கள்? அவர்கள் “அமெரிக்கத் தமிழ்க் கழகம்” என்று ஓர் அமைப்பையும் “கலிபோர்னியாத் தமிழ்க் கழகம்” என்ற அமைப்பையும் உருவாக்கி எல்லாக் குழந்தைகளுக்கும் தமிழ் கற்றுக் கொடுப் பதை மிக எளிமையாக காணொலிகள் (வீடியோ) மூலமாக, ஒலிப்பேழைகள் (ஆடியோ) மூலமாக, பாட்டுக் கள் மூலமாக, இசை மூலமாக, நாடகத்தின் மூலமாகப் பரப்பி வருகிறார்கள். தமிழ் ஆர்வம் மேலிட்டு அமெரிக்கத் தமிழ்க் குழந்தைகளெல்லாம் மிக அருமையான தமிழிலே எந்த வழுவும் இல்லாமல், எந்தக் கலப்பும் இல்லாமல் அவர்கள் இல்லத்திலே பேசுவதை நீங்கள் அங்கே சென்றால் கேட்கலாம்.

தாய்மொழி என்பது நம்முடைய உணர்வோடு, நம்முடைய கனவோடு பின்னிப்பிணைந்திருப்பது. நீங்கள் என்னதான் பிறமொழி படித்தாலும் இன்னொரு மொழியிலே கனவுகாண முடியுமா? உங்கள் கனவிலே வருவது எந்த மொழி? தாய்மொழி தானே?

“சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே! அதைத் தொழுது படித்திடடி பாப்பா!”, “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்!” என்றெல்லாம் தமிழைப் போற்றினார், பாரதியார்; “தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!” என்றார் பாரதி தாசன். தமிழை நாம் போற்றுகின்ற அளவு, பயன் படுத்துவதில்லை.

அன்றாடப் பேச்சு வழக்கில், ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். தமிழும், ஆங்கிலமும் கலந்த கலப்புத் தமிழை நீக்கி, தமிழிலே உரையாடும் பழக்கம் மேலோங்க வேண்டும். கல்லூரிகளிலும், நீதிமன்றத்திலும், கோவிலிலும் தமிழே இல்லாத சூழலை மாற்றாமல், தமிழை வெறுமனே போற்றிப் பயனில்லை என்பதை மக்கள் உணர வேண்டும். அந்த உணர்வு ஏற்பட்டு, தாய்மொழி சிறந்தோங்க ஆவன செய்வதே நம் அனைவரின் கடமை யாகும்.

(“தினத்தந்தி,” 21-2-2019)

Pin It