school students 399தமிழகத்தில் 1980களில் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிக எண்ணிக்கையில் உயர்ந்தது. தமிழகம் முழுவதும் இந்நிலை மேலும் அதிகரித்தது. தமிழகத்தில் தமிழ்வழியில் கற்கும் குழந்தைகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்தது. இந்த அவலநிலைக்கு ‘மாநில அரசின் கல்விக் கொள்கையின் அடிப்படையில்லான சிக்கலான நடவடிக்கைகள்’, ‘அரசுப் பள்ளிகளைப் புதியதாகத் தொடங்காத நிலை’, ‘தரமற்ற கல்வி’, ‘பெற்றோர்களின் ஆங்கில ஆர்வம்’, ‘தனியார் பள்ளிகளின் வரவு’ ஆகியவற்றைச் சுட்டலாம். தமிழ்வழியில் முதல் வகுப்பு முதல், பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வி வகுப்புகள் அரசுப் பள்ளிகளில் இருந்த நிலையிலும், ஆங்கிலக் கல்வி மோகம் பெற்றோர்களிடம் இருந்தது என்பதை விளக்கும் புள்ளி விவரம் வருமாறு:

students ratioகட்டாயத் தமிழ்வழிக் கல்விப் போராட்டம்

பள்ளிகளில் ஆங்கிலவழிக்கல்வி ஆர்வம் அதிகரித்து வருவதைக் கண்டு கவலையுற்ற தமிழகக் கல்வியாளர்கள், தமிழாசிரியர்கள், பல்வேறு தமிழ் அமைப்புகள் தமிழ்வழிக் கல்விக்கான மக்கள் அமைப்புகளைத் தொடங்கி 1998ஆம் ஆண்டு முதல், பிரச்சாரம் செய்து வந்தனர். தமிழ் அமைப்புகள் ஒன்று கூடி 1999ஆம் ஆண்டு தமிழ்ச் சான்றோர் பேரவை என்ற அமைப்பின் கீழ் போராடுவதென முடிவெடுத்தனர். இதற்காக 1999 ஏப்ரல் மாத இறுதியில் நூறு தமிழறிஞர்கள், சாகும் வரை உண்ணாநோன்பு மேற்கொள்ள முடிவெடுத்தனர். தமிழறிஞர் தமிழண்ணல் தலைமையிலான போராட்டக்குழு அரசுக்கு வைத்த கோரிக்கைகள் வருமாறு:

1.            தமிழ் நாட்டில் உள்ள அனைத்துக் கல்விக் கூடங்களில் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் மட்டுமே பாடமொழியாகவும் பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டும். ஆறாம் வகுப்பு முதல் அனைத்து நிலையிலும் ஆங்கிலம் ஒரு பாடமொழியாகக் கற்பிக்கப்படலாம்.

2.            பொறியியல், மருத்துவம், சட்டம், தொழில் நுட்பங்கள் உள்ளிட்ட உயர்கல்வித் துறைகள் அனைத்திலும் முன்னரே தமிழ்வழிப் பாட நூல்கள் தயாராகவும் அறிமுக நிலையில் இருப்பதால் வரும் கல்வி ஆண்டிலேயே அவ்வுயர் கல்வித்துறைகள் அனைத்திலும் தமிழ்வழிக்கல்வியை நடைமுறைக்குக் கொண்டுவரவேண்டும்.

3.            தமிழக அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகள் அனைத்திலும் தமிழ்வழிக்கல்வி பயின்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தரவேண்டும். (தமிழ்ச் சான்றோர் பேரவை தீர்மானங்கள் 1999)

தமிழறிஞர்களின் இக்கோரிக்கைகளை விரைவில் நடை முறைப்படுத்தப்போவதாக உண்ணாநோன்பை நிறைவு செய்து உரையாற்றிய அமைச்சர் மு.தமிழ்க்குடிமகன் அறிவித்து ஒரு அறிக்கையை வாசித்தார். இதைத் தொடர்ந்து நீதிபதி மோகன் தலைமையில் பயிற்றுமொழி குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டது.

மோகன் குழு

தமிழை மழலையர் பள்ளிகளில் நடைமுறைப்படுத்துவது, தொழிற் கல்வியில் தமிழ்வழிக் கல்வி பயின்றோருக்கு வேலைவாய்ப்பு முன்னுரிமை ஆகிய மூன்று கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் உள்ள சட்டச்சிக்கல்கள் என்ன? இதனால் சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு பாதிப்பு உண்டா, என்பதைக் கண்டயறிய ஓய்வுபெற்ற நீதிபதி எஸ். மோகன் தலைமையில் ஒரு குழுவைத் தமிழக அரசு அமைத்தது. இக்குழுவில் வா.செ.குழந்தைசாமி (முன்னாள் துணைவேந்தர்). ச.முத்துக்குமரன் (முன்னாள் துணைவேந்தர்), தமிழண்ணல், இரா.இளங்குமரன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இக்குழு 31.05.1999க்குள் அறிக்கையை அரசுக்கு அளிக்க ஆணை வெளியிடப்பட்டது (27.11.1998).

இக்குழு எப்படிச் செயற்பட்டது என்பதைக் கவனியுங்கள்.

“இக்குழு 15.5.1999 தொடங்கி, பல்வேறு நிலைகளில் இப்பிரச்சினைகளை ஆராய்ந்தது. பொதுமக்கள் கருத்தை வாய்மொழி மூலமாக மூன்று நாட்கள் கேட்டறிந்தது; எழுத்து மூலமாகவும் கருத்துகள் பெற்றது. குழுவிடம் தொடர்பு கொண்டவர்கள் எண்ணிக்கை பின்வருமாறு: தனிநபர்கள் 423; ஆசிரியர் கழகங்கள் 5; வழக்கறிஞர்கள் 3 பள்ளி நிர்வாகங்கள் 40; பள்ளி நிர்வாகக் கழகங்கள் 22; ஆசிரியர் பெற்றோர் சங்கங்கள் 8; தமிழ்ச் சங்கங்கள் உட்பட மற்ற சங்கங்கள் 87; அரசியல் கட்சி சார்பான நிறுவனங்கள் 8; சிறுபான்மையினரும் அவர்தம் சங்கங்களும் 9. அயல் மாநிலங்களில் உள்ள நடைமுறைகளை அறிவதற்காக அதிகாரிகளை அனுப்பி உரிய ஆணை விவரங்களைப் பெற்றுவரச் செய்தது. கல்வி தொடர்புடைய தமிழக அரசின் உயர் அதிகாரிகளையும், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர்களையும், மருத்துவம், பொறி­யியல் உட்படப் பல்வேறு உயர்கல்வித்துறை இயக்குநர்களையும், அழைத்து விவரம் கேட்டறிந்தது. இவை தொடர்பான சிக்கல்களையும் தீர்வுகளையும் தொடர்ந்து ஆராய்ந்து, இவ்வறிக்கையை அரசிடம் அளிக்கின்றது.”

இக்குழு எந்த அளவுக்கு எல்லாருடைய கருத்துகளையும் கேட்டிருக்கிறது என்பதை உணர முடியும்.

1968இல் அண்ணா சட்டமன்றத்தில் பின்வரும் கருத்துகளை வைத்தார்.

“ஒரு நாட்டின் பயிற்று மொழி, ஆட்சிமொழி ஆவதற்குத் தாய்மொழி என்னும் தகுதிக்கு ஈடாக வேறு எந்தத் தகுதியும் ஒரு மொழி பெற்றிடத் தேவையில்லை. தமிழ்நாட்டில் கல்விக் கூடங்கள் அனைத்திலும் பயிற்சி மொழியைப் பொறுத்தவரை முதல் மொழி தமிழே; இரண்டாம் மொழியே ஆங்கிலம்” என்று தெளிவுபடக் கூறியுள்ளார்.

ஆங்கில மொழியுடன் எவ்விதப் பகையும் இருத்தல் கூடாது. அதன் இனிமை, மனத்தை ஈர்க்கும் திறன், தகுதியுடைமை போல்வன பல்வேறு வகைகளில் பயன்படும். ஆனால், அதன் சிறப்புக்களைக் கருதி, நம் சொந்த மொழிகளை எவ்வித எழுச்சியும் இன்றித் தேங்க விடுவது என்பது முறையாகுமா?

மேலும், தனக்குத் தெரிந்த மொழிவழி ஒரு துறை அறிவைப் பெறுவது மகிழ்ச்சி தரும்; சரிவரத் தெரியாத மொழியில் துறை அறிவைப் பெற முயல்வது தண்டனையாகவே அமையும். ஆகவேதான் உலகின் பல நாடுகளிலும் தாய்மொழி மூலமே கல்வி கற்பிக்கப் படுகிறது. மேலும், தாய்மொழி வழிக் கல்வியே முன்னேற்றத்திற்கு அடிப்படையாக அமைகிறது.

மேன்மையான கல்விக்கு ஆங்கிலம்

“ஆங்கிலத்தில் மிக உயர்ந்த கல்வித் திறன் பெறுதற்கு வாய்ப்புள்ளது” என்று ஒரு கருத்துத் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், அவ்விதம் உயர்ந்த ஆங்கிலக் கல்வித்திறம் பெற்ற மேதகு வி.எஸ். சீனிவாச சாத்திரியார், சக்கரவர்த்தி சி.இராசகோபாலாச்சாரியார் போன்றோர் ஆங்கிலமொழியும் மேலைநாட்டார் பண்பாடும் மேன்மேலும் வளர்ந்து, கல்வி கற்காத நம் நாட்டு ஏழை எளிய மக்களிடமிருந்து மிகவும் விலகிச் சென்று விடுதல் கூடாது எனக் கூறியுள்ளனர். எனவேதான், தங்கள் வாழ்நாளில் மிகுந்த ஆர்வத்துடன் தமிழில் கட்டுரைகளும் நுல்களும் எழுதியுள்ளனர்.

மேலும், ஆங்கிலவழிக் கல்விப் பள்ளிகளில், வழிவழியாகக் கல்வி கற்ற பெற்றோர்களின் குழந்தைகளே பெரும்பாலும் கல்வி கற்கின்றனர். அப்பள்ளிகளில் கல்வி கற்கும் மாணவர், அவர்தம் சமுதாயப் பின்னணியின் பயனாக நன்கு கல்வி கற்றுத் தேறுகின்றனர். இதற்கெதிராக தமிழ்வழிப் பள்ளிகளில் ஏழை மாணவரும் நடுத்தரக் குடிமக்களின் குழந்தைகளுமே கல்வி கற்கின்றனர். இவர்களது பின்னணியாலும் குடும்பச் சூழலாலும் இவர்களது திறமைகளை வளர்க்க முடிவதில்லை. இவர்கள் குறைந்த அளவு தேர்ச்சி பெறுவதற்கும் வாழ்க்கையில் வெற்றி பெறாததற்கும் குடும்பச் சூழலே காரணம்.

இளமையிலே ஆங்கில வழிக்கல்வி

ஆங்கில வழிக்கல்வி இளமை முதலாக அமைய வேண்டும் என்றும் அதனால் குழந்தைப் பருவத்திலேயே ஆங்கில மொழிக் கல்வியைத் தொடங்கிவிட வேண்டும் என்றும் பலர் கருதுகின்றனர். ஆனால், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே சாட்லர் கமிஷனும் (Sadler Commission), கார்டாக் குழுவும் (Hartog
Committee), அபோட் மற்றும் வுட் (Abbot and Wood) என்பார் அறிக்கையும் தாய்மொழி வழிக் கல்வியை மிக வற்புறுத்தி எழுதியுள்ளன. மிக விரிவாக விவாதிக்கப்பட்ட சார்ஜண்ட் திட்டம் (Sargent Scheme) கல்வியாளர் பலருடனும் விவாதித்து, மகாத்மா காந்தியின் வார்தாத் திட்டத்தையும் மேற்கோள் காட்டி அனைத்து உயர்நிலைப்பள்ளிகளிலும் தாய்மொழியே பயிற்றுமொழியாக இருக்க வேண்டும் என்று முடிவு கூறியிருக்கிறது.

பயிற்றுமொழி; இலக்கணம்

பொதுவாக ஒரு மொழி உண்மையாகவும், முழுமையாகவும் பயிற்று மொழியாவதற்குக் கீழ்க்கண்ட தகுதிகள் தேவை: தேவையான அளவு மாணவருக்கு அம்மொழி தெரிந்து இருக்க வேண்டும். அம்மொழியில் ஆசிரியருக்கு நல்ல தேர்ச்சி இருக்க வேண்டும். மாணவனின் குடும்பத்திற்கும் பள்ளிக்கும் நெருக்கமான உறவு அமைய அப்பயிற்று மொழி இளம் மாணவரின் பெற்றோருக்குத் தெரிந்து இருக்க வேண்டும்.

அம்மொழியில் தரமான பாட நூல்கள் கிடைக்க வேண்டும். அம்மொழியில் பாடநூல்கள் தவிர துணை நுல்களும், துணை ஆதார நூல்களும் கிடைக்க வேண்டும்.

இந்தத் தகுதிகளின் அடிப்படையில் பார்த்தால் பயிற்று மொழி தாய்மொழியாகத்தான் இருக்க வேண்டும் என்பது தெளிவு. இதை நாம் நடைமுறையில் காண்கிறோம்.

ஆங்கிலவழிக் கல்வி கற்பிக்கும் பள்ளிகள் யாவும் மேலான கல்வி நிறுவனங்கள் என்று சொல்வதற்கில்லை. அவற்றுள் ஒன்றுக்கொன்று மிகுந்த வேறுபாடுகள் உண்டு. வீட்டில் பெற்றோர் உதவியுடன் ஓரளவு ஆங்கிலம் தெரிந்த குழந்தைகள் ஆங்கில வழிப் பள்ளிகளில் பயன் பெறும் வாய்ப்புண்டு. ஆனால், ஆங்கிலமே தெரியாத அல்லது சரிவர ஆங்கிலம் தெரியாத குழந்தைகளே பெரும்பாலும் கல்வி கற்கும் பள்ளிகள் பல உண்டு. இவற்றில் கல்வி கற்கும் குழந்தைகள் மிகுந்த முயற்சிக்குப்பின், பல ஒலிகளைத் தெரிந்து கொள்கின்றனர்; ஆனால் அவற்றின் உட்பொருள்களைத் தெரிந்து கொள்வதில்லை. ஆகவே அவர்கள் வெற்றி பெறுவதில்லை. இவ்வகைப் பள்ளிகளில் ஆங்கிலம் ஒரு பயிற்று மொழியாக அமைந்து மற்ற பாடங்களைக் கற்கப் பயன்படவில்லை; துறைப் பாடங்கள் கற்பது ஆங்கிலமொழி கற்க ஒரு வாய்ப்பாகப் பயன்படுகிறது. மற்ற பாட வகுப்புகள் ஆங்கிலம் கற்பிக்கும் வகுப்புகளாக மாறிவிடுவதால் அறிவைப் பெறுவது தடை பெறுகிறது. ஆகவே, இவ்வகை ஆங்கில வழிப் பள்ளிகளில் கல்வி கற்கும் மாணவர் பொதுவாக மேன்மையாகக் கல்வியைப் பெறாதது மட்டுமல்ல; அயல்நாட்டு மொழிவழிக் கல்வி அவர்களின் முழுத்திறமையை வெளிக்கொணரும் வாய்ப்பையும் தடை செய்துவிடுகிறது.

அடுத்து, புதியனவற்றைக் கற்ற குழந்தை அவற்றைத் தனது பெற்றோரிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றனர். பெற்றோரும் தமது குழந்தையின் ஆர்வத்தில் பங்கு கொண்டு குழந்தையின் சிந்தனையைத் தூண்ட விரும்புவார்கள். ஆனால் குழந்தையின் பயிற்று மொழி பெற்றோருக்குத் தெரியவில்லை எனில், வீட்டில் குழந்தை பெறக்கூடிய மகிழ்ச்சியும், ஆதரவும் பெறும் வாய்ப்பில்லை. ஆகவேதான் குழந்தைப் பருவத்தில் தாய்மொழியே சிறந்த பயிற்று மொழி என்று முடிந்த முடிவாக சொல்லப்படுகிறது.

தாய்மொழி வழிக் கல்வியின் பயன்

தாய்மொழி வழிக்கல்வி கற்றால் சிறு வயதிலேயே மற்ற பாடங்களைக் கற்கும் வாய்ப்பு மிகுதியாகிறது. வேற்று மொழி வழிக் கற்பதற்கு அம்மொழியை முதலில் கற்க வேண்டியிருப்பதால், இளம் வயதில் மற்ற பாடங்களைக் கற்று அறிவைப் பெறும் வாய்ப்பு குறைகிறது. இளம் வயதில் அவசியமின்றி மொழிச் சுமை ஏற்றப்படுவதால் அறிவைப் பெறுவது தள்ளிப் போடப்படுகிறது. தாய்மொழி வழிக் கல்வி பெறுவதால் அறிவை வளர்த்துக் கொள்ள இயலாது என்று யாரும் சொல்ல முடியாது. அறிவு எந்த மொழிக்கும் தனிப்பட்ட சொத்து அல்ல. அறிவை எந்த மொழி வழியும் பெற முடியும். தாய்மொழி வழிப் பெறுவது இயற்கை, எளிதும் கூட.

கற்பிப்பதில் இடர்ப்பாடு

பள்ளிக் கல்வியைத் தமிழ் வழிக் கல்விக்கு மாற்றினால் ஆசிரியர் இடர்ப்படுவர்; பாடத்திட்டத்தை மாற்றுவதிலும், பாட வேளைகளைப் பகுப்பதிலும் சிக்கல் உண்டாகும். ஆசிரியர்கள் சிலர் வேலை இழக்க நேரும்; பள்ளிகளை மூடவும் நேரும் எனக் கூறுகின்றனர். நடைமுறைப் படி இக்கூற்றில் உண்மை இல்லை. பள்ளிக் கல்வியைத் தாய்மொழி வழியாகவே கற்பிப்பது என அனைத்துப் பள்ளிகளுக்கும் விதி வகுக்கும்போது, மேற்கூறிய நிலைமைகள் ஏற்பட வாய்ப்பு இல்லை. அயன்மொழிக்கு மாறுவது என்பதுதான் ஆசிரியர், மாணவர்களுக்குக் கடினமாகுமே தவிர தாய்மொழிக்கு மாறுவது என்பது எவ்வகையிலும் கடினமாகாது.

புதிய கண்டுபிடிப்புகள்

ஆங்கில மொழி வழியே கற்கவில்லை என்றால் புதிய புதிய உலகச் சிந்தனைகள் உடனுக்குடன் பெறுதல் இயலாது; உலகளாவிய நிலையில் வேலைவாய்ப்புப் பெறுதல் இயலாது என்றும் கூறப்படுகிறது. ஆனால், இன்றைய சூழலில் அறிவியல் என்பது ஆங்கில மொழிக்கு மட்டுமே உரியதென்று கூறுவது சரியன்று. அறிவியல் சிந்தனைகள் உலகப் பொதுவுடைமை ஆகும். அவற்றை உடனுக்குடன் மொழியாக்கம் செய்ய வழியுண்டு. இந்நூற்றாண்டில் அறிவியல் வளர்ச்சியால் உலகம் மிகமிகச் சுருங்கிய குடும்பமாகி வருகின்றது. இந்நிலையில் எவரொருவர் எம்மொழியில் தம் கண்டுபிடிப்பைக் கூறினாலும், அதனால் பயனடைய விரும்புவோர் அதனைத் தம் மொழியில் பெற்றுக் கொள்ள வாய்ப்பு உள்ளது.

அயல்மொழியில் தேர்ச்சி

தாய்மொழி வழிக்கல்வியைக் கொண்டு வருவதால் ஆங்கில மொழிக் கல்வித்தரம் குறையும் என்று கூறப்படுகிறது. உண்மையில் தாய்மொழி மூலம் பாடங்களைப் படிப்பது என்பது வேறு; ஆங்கிலத்தை ஒரு மொழிப் பாடமாகக் கற்பது என்பது வேறு. “ஆங்கில மொழிக் கல்வியை எல்லா வகையாலும் மேன்மேலும் தரப்படுத்த வேண்டும் என்பதில் எவருக்கும் கருத்துவேறுபாடு இருத்தல் இயலாது” என்கிறது அறிக்கை.

ஆங்கில மொழி வழிப் படிப்பது வேறு; ஆங்கில மொழியைப் படிப்பது வேறு என்று பல பெற்றோர்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை.

மொழிவழிக் கல்வியும் பண்பாடும், எப்படிப் பின்னிப் பிணைந்திருக்கின்றன என்பதை அறிக்கை உணர்த்துகின்றது.

“மொழியும் பண்பாடும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை. ஒரு மக்களின் பண்பாடு அவர்களது மொழி வழியே வளர்கிறது. நமது பண்பாடு நம் முன்னோர் நமக்கு விட்டுச் சென்ற சொத்து. அதைப் பேணிக் காப்பது நமது கடமை. தமிழ்நாட்டுக் குழந்தைகள் தமிழ் இலக்கியங்களைக் கற்றால்தான் அவர்களால் தமிழ்ப் பண்பாட்டைப் புரிந்து கொள்ள இயலும். வளர்க்க இயலும். நமது பண்பாட்டைப் புரிந்து கொள்ளாது ஆங்கிலவழிப் படித்து பட்டம் பெற்று வெளிநாட்டில் பணியாற்றச் சென்றால் அங்கு அந்நாட்டு மக்கள் நல்ல பண்பாட்டுடன் வாழ்வதையும் தாம் பண்பாடில்லாமல் குறையுடன் இருப்பதையும் உணர முடியும். தனது குறை அவனுக்குத் தெரிவதுடன் அந்நாட்டு மக்களும் இவனை மதிக்க மாட்டார்கள். ஆகவே தமிழை ஆழமாகக் கற்பதும் தமிழ் இலக்கியங்கள் கற்பதும் இன்றியமையாதது. அதாவது தமிழ் மொழியைப் பல ஆண்டுகள் கற்பது தேவையான ஒன்று.”

இது தொடர்பாகக் குழு தன் பரிந்துரைகளை அழுத்தம் திருத்தமாகச் செய்கின்றது.

“அரசு மிக விரைவாகவும் தெளிவாகவும் இது தொடர்பான சட்டமியற்ற வேண்டுமென்று இக்குழு பரிந்துரைக்கிறது.”

குழு மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கான அடிப்படை குறித்தே பரிந்துரை செய்து தன் அறிக்கையில் தெளிவு படுத்தியுள்ளது.

“இன்றைய மெட்ரிகுலேசன் பள்ளிகளில் ஆங்கிலம்தான் பயிற்று மொழியாக இருக்க வேண்டுமென்ற விதியுளது. தமிழ் அல்லது தாய்மொழியைப் பயிற்று மொழியாக ஏற்றுக்கொண்ட பின்னர் அவ்வாறிருத்தல் ஆகாது. ஆகவே அவ்வாறிருக்கும் விதி, ஆங்கிலம் அல்லது தமிழ்/தாய்மொழி பயிற்று மொழியாக இருக்க வேண்டுமென்று திருத்தப்படவேண்டும்”.

இந்த அடிப்படையில் குழு பின்வரும் பரிந்துரைகளைச் செய்தது.

1.            மழலையர் மற்றும் 5-ஆம் வகுப்பு (E. S.) வரை அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் அல்லது தாய்மொழி மட்டுமே பயிற்று மொழியாக அமைய வேண்டும். 3-ஆம் வகுப்பு தொடங்கி ஆங்கிலம் ஒரு மொழிப் பாடமாக பயிற்றுவிக்கப்படவேண்டும்.

2.            6 ஆம் வகுப்பில் சேர்ப்பதற்கு 5ஆம் வகுப்புத் தகுதி நிலையில் கல்வி மாவட்ட அளவில் மாவட்டக் கல்வி அதிகாரி தலைமையில் ஒரு குழு அமைத்து ஒரே நாளில் ஒவ்வொரு பள்ளியிலும் (ஒரு பொதுவான) தேர்வு நடத்தி, தேர்வு பெற்றவர்களைச் சேர்த்துக் கொள்ளலாம்.

3.            பயிற்று மொழிக் கொள்கையைப் பின்பற்றாத பள்ளிகள் ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் (3 ஆண்டுகள்) மாற்றியமைத்துக் கொள்ள வேண்டு மென்று அரசு அறிவிக்க வேண்டும். இதனை ஏற்காத பள்ளிகட்கு ஏற்பு வழங்கக் கூடாது.

4. மெட்ரிகுலேசன் பள்ளிகளில் ஆங்கிலம்தான் பயிற்றுமொழி என்றிருப்பதை, ஆங்கிலம் அல்லது தமிழ்/தாய்மொழி பயிற்று மொழி என்று திருத்தப்பட வேண்டும். இதனால் 6 ஆம் வகுப்பு தொடங்கி தமிழ் வழி கற்பிக்கும் மெட்ரிகுலேசன் பள்ளிகள் அரசின் ஏற்புப் பெற வாய்ப்பு ஏற்படும்.

5.            அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் பயிற்றுமொழியாக இருக்கும் பிரிவுகளை, 6-ஆம் வகுப்பிலிருந்து ஒவ்வொரு வகுப்பாக (படிப்படியாக) நீக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

6.            ஆங்கிலத்தை முறையாகக் கற்பிக்க 6-ஆம் வகுப்பு முதல் ஆங்கிலத்தில் பட்டம் பெற்று நன்கு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை அரசு நியமிக்க வேண்டும். மாணவர்கள் பேசவும், எழுதவும் திறம் பெறும் வகையில், ஆங்கில மொழியைக் கற்பிக்கும் முறையில் மாற்றம் செய்ய வேண்டும்.

7. ஆறாம் வகுப்பு முதல் முதற்பிரிவில் வட்டாரமொழி அல்லது தாய்மொழி படிக்க வேண்டும் என்னும் விதியை (அரசு ஆணை எண்.105, கல்வி, நாள் 24.1.68) தமிழ் அல்லது தாய்மொழி என்று திருத்தம் செய்ய வேண்டும்.

8.            உயர் கல்வி : கலைச் சொல் பட்டியல்கள் தயாரித்தல்; பாடநூல் தயாரித்தல்; தொழிற்கல்வியை தமிழ்வழி கற்பித்தலைத் தொடங்குதல்.

I.        சட்டத்தின் வாயிலாக தன்னாட்சி அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும். (A Statutory Autonomous Body). பதவி வழிப்பட்ட தலைவராக முதல்வர் சி.வி. இருக்க வேண்டும். செயல் தலைவராகக் கல்வித் துறையில் சிறந்த ஒருவர் இருப்பார். துறைதோறும் அத்துறை நிபுணர்களைத் துறைத் துணைத் தலைவர்களாகக் கொண்டு துறைசார் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

II.  கைவினைஞர் நிலையில் (I.T.I.) தமிழ் பயிற்றுமொழி ஆக்குவதைத் தொடர்ந்து, தொழில்நுட்பப் பயிலகமும் (Polytechinic) பின்னர் பொறியியல் கல்லூரியும் (Engineering College) தமிழைப் பயிற்று மொழியாக்க வேண்டும். இம்மூன்று நிலைகளிலும் தேவையான ஆயத்தப் பணிகளை ஒரே சமயத்தில் தொடங்க வேண்டும்.

9. சித்த மருத்துவம், வேளாண்மை, கால்நடை மருத்துவம் போன்ற துறைகளில் தமிழ்வழியில் கற்பிப்பதற்கான வாய்ப்பினை அரசு உருவாக்க வேண்டும்.

10. வேலைவாய்ப்பில் முன்னுரிமை:- மற்ற அனைத்துக் கூறுகளிலும் சம தகுதி பெற்றவர்களுக் கிடையில் தமிழ்வழிப் பயின்றவர்களுக்கு முன் வாய்ப்பு நல்குவது தமிழ்வழிக் கற்பவர்களை ஊக்குவிப்பதாக அமையும். (அவர்கள் அரசுப் பணியாளர்களாக நியமிக்கப்படுவதால் தாய்மொழி வழியில் ஆட்சி செலுத்துவது நல்ல முறையில் அமைய உதவும்.)

“இப்பரிந்துரைகள் அமைச்சரவைக் கூட்டத்தில், விவாதிக்கப்பட்டு, மேற்கொள்ளப்படும் முடிவுகள் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பின்னர் அறிவிக்கப்படும்.”

இக்குழு பலரது கருத்துகளையும் கேட்டு மட்டும் பரிந்துரை செய்யவில்லை.

ஒருசில மாநிலங்களுக்கும் சென்று, தக்கவர்களிடம் கலந்து பேசி உண்மைகளை அறிந்து, அவர்கள் பிறப்பித்துள்ள ஆணைகளையும் இங்கே இணைத்துக் காட்டியிருக்கிறார்கள்.

கர்நாடகத்தைப் பொறுத்த வரையில் ஒன்று முதல் நான்கு வரை தொடக்கக் கல்வி. இங்கு ஒன்று முதல் நான்கு வகுப்புகளில் ஆங்கிலத்தை ஒரு மொழிப் பாடமாகக் கட்டாயமாகக் கற்பிக்கவோ அல்லது பயிற்றுமொழியாகப் பயன்படுத்தவோ கூடாது என்பதுதான் விதி. உச்சநீதி மன்றத்தில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது என்றாலும் கர்நாடகம் இதில் தெளிவாக உள்ளது.

மொழிப்பாடம் மற்றும் பயிற்றுமொழி தொடர்பாகச் சிறுபான்மையர் நடத்தும் நிறுவனங்களுக்கு விதிவிலக்கு ஏதுமில்லை. ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட மாணவர்களுக்கு மட்டும் இப்போது அங்கீகாரம் பெற்றுள்ள ஆங்கில வழிப் பள்ளிகளில் 1 முதல் 4 வகுப்புகளில் ஆங்கில வழிக் கல்வி கற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேல்நிலை

இரண்டு மொழிகள் கற்க வேண்டும்; ஒன்று கன்னடம் (அ) தாய்மொழி, மற்றொன்று ஆங்கிலம். நான்கு பாடங்கள் கற்க வேண்டும். ஆங்கிலம் (அ) தாய்மொழியில் கற்கலாம்; வினாத் தாள்கள் ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் மட்டுமே இருக்கும்; விடைகளை கன்னடம் (அ) ஆங்கிலத்தில் மட்டுமே எழுதவேண்டும்.

மேற்கு வங்க நிலைமை

“கடந்த ஆண்டு வரை ஆரம்பக் கல்வி அனைத்தும் அந்தந்த பகுதியினுடைய தாய்மொழியிலேயே இருந்ததாகவும், மேற்கு வங்காளத்தில் பெங்காலி மொழியே பெரும்பாலான மக்களின் தாய்மொழியாக இருப்பதால் பெங்காலி மொழியிலேயே பாட போதனை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.

மேலும், மேற்கு வங்காளத்தில் சற்றேறக்குறைய 55,000 தொடக்கப் பள்ளிகள் இருப்பதாகவும் தெரி­வித்தார்.

3ஆம் வகுப்பு முதல் ஆங்கிலம் ஒரு பாடமாகப் பயிற்றுவிக்கப் படுகிறது. (1999-2000க்குப்பின் இந்த நிலை).

ஆந்திர மாநில நிலைமை

ஆங்கிலம் இரண்டாவது மொழிப்பாடமாக ஐந்தாம் வகுப்பு முதல் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.

தெலுங்கு மொழி அல்லது சிறுபான்மை மொழி. - மொழிப் பாடம். பிற பாடங்கள், இந்தப் பாடங்கள் தெலுங்கு மொழியிலோ அல்லது சிறுபான்மை இனத்தவர் அவர்களது தாய்மொழியிலோ பயில வசதி உள்ளது. ஆங்கில வழிக் கற்பவர்கள், ஆங்கில மொழி வாயிலாக இந்தப் பாடங்களை பயிலுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் நர்சரி பள்ளிக்கு அங்கீகாரம் மற்றும் ஒப்புதல் போன்ற நடைமுறைகள் ஏதுமில்லை. இதற்கென தனியாக வரைமுறைப்படுத்தும் சட்டதிட்டம் எதுவும் இல்லாத காரணத்தால், எத்தனை பள்ளிகள் உள்ளன என்ற விவரம் முழுமையாக இல்லை.

மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள் என்ற எந்த நிலையிலும் பள்ளிகள் இல்லை என்ற கருத்தும் அறியப்பட்டது.

ஆந்திராவில் உள்ள பள்ளிகள் விவரம்:

தெலுங்கு மொழிப் பள்ளி               -              61166

ஆங்கில வழியில் நடப்பவை       -              3004

உருது -              1265

தமிழ்  -              73

ஒரியா, கன்னடம், இந்தி,

மராத்திய மொழி வழிப் பள்ளிகள்         -              234.

தெலுங்கு, உருது, ஆங்கிலத்துடன் தமிழையும் இணைப்பயிற்சி மொழியாகக் கொண்டுள்ள கல்வி நிறுவனம் : ஒன்று (HAJC)

தெலுங்கு, தமிழ் மட்டுமே இணைப் பயிற்றுமொழியாகக் கொண்டுள்ள

தொடக்கப் பள்ளிகள்                                       -              16

நடுநிலைப் பள்ளிகள்                                      -              6

உயர் நிலைப்பள்ளிகள்                                   -              9

(HAJC)                                      -              1

ஆந்திராவில் மொழிப்பாடம் எப்படி அமைந்துள்ளது? 6ஆம் வகுப்பு முதல் மும்மொழிக் கொள்கைதான். ஆனால், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை ஒரே மொழிதான் : தெலுங்கு மொழி அல்லது தாய்மொழி 5ஆம் வகுப்பில் ஆங்கிலமும் பாடமாகிறது.

எனவே, நீதியரசர் மோகன் தலைமையிலான குழு ஆந்திரா, கர்நாடகம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் தொடக்கக் கல்வி நிலைகளையும், அங்கு பயிற்றுவிக்கப்படும் மொழிகளையும் உணர்ந்தே தக்க பரிந்துரைகளைச் செய்திருக்கின்றது என்பதனைக் கவனிக்க வேண்டும்.

* * *

இப்பரிந்துரைகளுடன், தமிழக அரசு மெட்ரிகுலேசன் மற்றும் ஆங்கிலோ இந்தியப் பள்ளிகளின் கருத்துக்களையும் பரிசீலித்து தமிழக அரசு ஆணை வெளியிட்டது.

தமிழக அரசு ஆணை

மோகன் குழுவின் அறிக்கையை முழுமையாக ஏற்றுக்கொண்ட தமிழக அரசு மழலையர் பள்ளிகளில் தமிழைப் பயிற்றுமொழியாக்கும் திட்டத்தை அறி­வித்தது. அரசு வெளியிட்ட ஆணை வருமாறு:

1.            பயிற்சி மொழிக் கொள்கை பற்றி வெளி­யிடப்படும் அரசாணைகள் செல்லும் என நீதிமன்றம் கூறியுள்ளது. இதற்காகச் சட்டம் எதுவும் இயற்றப்பட வேண்டியதில்லை என அரசாங்கம் கருதுகிறது. எனவே அரசாங்கத்தில் மொழிக் கொள்கை பற்றிய உத்தரவுகள் அரசாணை மூலம் வெளியிடப்படுவது தொடரும்.

2.            மெட்ரிகுலேசன் பள்ளிகள், அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், பெறாத பள்ளிகள் உட்பட எல்லாப் பள்ளிகளிலும் தமிழ் அல்லது தாய்மொழியே முதல் மொழியாக இருக்கும்.

3.            மெட்ரிகுலேசன் மற்றும் அரசுப் பாடத்திட்டம் வழக்கில் உள்ள பள்ளிகளிலும் முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் அல்லது தாய்மொழியே பயிற்சிமொழியாக இருக்கும்.

4.            தமிழ் அல்லது தாய்மொழிப் பயிற்சிக்கு மாறும் பணி மூன்றாண்டுகளில் நிறைவுபெறும். 2000 - 2001 ஆம் ஆண்டு முதல் வகுப்பில் பயிற்சிமொழி ஆகும். பின்னர் அது படிப்படியாக உயர் வகுப்புகளுக்கு விரிவுபடுத்தப்படும்.

5.            அனுமதி பெறாத அல்லது அங்கீகாரம் பெறாத பள்ளிகளிலோ தனிப்பட்ட முறையில் பயின்ற மாணவர்கள் 6 ஆவது வகுப்பு வரை, பள்ளி­யினால் நடத்தப்படும் நுழைவுத் தேர்வின் அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுவர்.

6.            தமிழ் அல்லது தாய்மொழியே பயிற்சிமொழி என மெட்ரிக்குலேசன் பள்ளி போர்டு விதிகளில் தெளிவாக்கப்படும். இத்தகைய திருத்தத்தை மெட்ரிகுலேசன் பள்ளிகளில் ஆறாவது வகுப்பிலிருந்து செயல்படுத்தத் தனியாக ஆணை பிறப்பிக்கப்படும்.

அரசாங்க உதவி பெற்ற, பெறாத, அனுமதி பெற்ற மற்றும் மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆகிய எல்லாப் பள்ளிகளிலும் முதன்மை மொழி தமிழ் அல்லது தாய்மொழி எனத் தெளிவுபடுத்தப்படும்.

தனியார் பள்ளிகள் எதிர்ப்பு (மெட்ரிகுலேசன் கூட்டமைப்பு)

அரசு வெளியிட்ட ஆணையை தனியார் பள்ளிகளின் நிர்வாகிகளும், பெற்றோர்களும் எதிர்த்தனர். இந்த அரசு ஆணை மாணவர்கள், பெற்றோர்களின் உரிமையைப் பறிப்பதாக ஆங்கிலவழிப் பள்ளி நிர்வாகிகளின் கூட்டமைப்பு உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. ஆங்கிலப் பள்ளிகளின் சங்கத்தின் சார்பில் அதன் செயலர் பி.டி.குமார் இந்த வழக்கில் முதல் வாதியாக சேர்க்கப்பட்டார். 31 தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் வழக்கில் வாதிகளாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

உயர்நீதி மன்றத்தில் ஆங்கிலப் பள்ளி நிர்வாகத்தினர் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.

உயர்நீதிமன்றத்தில் முறையீடு

உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசின் பயிற்றுமொழிக் கொள்கைக்கு ஆதரவாக அரசின் பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர், பள்ளிக்கல்வி இயக்குநர், தொடக்கக்கல்வி இயக்குநர் ஆகியோர் பிரதிவாதிகளாகச் சேர்க்கப்பட்டனர். தமிழ்ச்சான்றோர் பேரவையின் நிறுவனர் அருணாச்சலம், வலம்புரிஜான், வழக்கறிஞர் காந்தி, வழக்கறிஞர் அரிபரந்தாமன் ஆகியோர் தங்களையும் வழக்கின் பிரதிவாதியாகச் சேர்த்துக்கொள்ளக் கோரி மனு செய்தனர். தனியார் பள்ளிகள் சார்பில் பலரை வாதிகளாக ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் தமிழ்வழிக் கல்விக்கு ஆதரவாக மனு செய்தவர்களின் மனுக்களை நிராகரித்துவிட்டது.

வழக்கு விசாரணையின்போது தமிழ்வழிக் கல்விக்கு எதிரான பேரணியை சென்னையில் நடத்தப்போவதாக பி.டி.குமார் அறிவித்தார். தமிழ்வழிக் கல்விக்கு ஆதரவான பல தமிழ், தமிழர் அமைப்புகள் தமிழ்வழிக் கல்விக்கு ஆதரவுப் பிரச்சாரத்தில் இறங்கின. இதன் விளைவாகத் தமிழ்வழிக் கல்வி குறித்தான பலத்த விவாதங்கள் தமிழக மின்னணு ஊடகங்களில் எழுந்தன. இதன் விளைவாக அன்றைய தி.மு.க. அரசு தமிழ்வழிக் கல்விக்கு ஆதரவான கூட்டங்களைத் தமிழகமெங்கும் நடத்தப்போவதாக அறிவித்தது. இதனை எதிர்த்து பி.டி.குமார் (மெட்ரிகுலேசன் கூட்டமைப்பு செயலர்) வழக்கு முடியும் வரை, தமிழ்வழிக் கல்வித் திட்டத்தினை ஆதரித்து கூட்டங்களைத் தமிழக முதல்வர் உள்ளிட்ட யாரும் நடத்த தடைவிதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு செய்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் தமிழ்வழிக்கல்விக்கு ஆதரவான, எதிர்ப்பான கூட்டங்கள் நடத்துவதைத் தடை செய்தது.

நீதியரசர்கள் ஏ.எஸ் வெங்கடாசல மூர்த்தி, எஸ்.ஜெகதீசன், என்.தினகர் ஆகியோர் அடங்கிய மூவர் குழு இவ்வழக்கை விசாரித்தது.

தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் சாந்தி பூஷண் வாதாடினார்.

“அரசு வெளியிட்ட உத்தரவு முக்கியமான கொள்கை முடிவாகும். குழந்தைகள் தாய்மொழி மூலமாகத்தான் பாடங்களைத் தானாகப் புரிந்து கொள்ள முடியும். குழந்தைகளுக்கு எவ்விதம் கல்வி அமைய வேண்டும் என்பதை பெற்றோர் அறிந்திருந்தாலும், அவர்களை விட கல்வியாளர்களுக்குத்தான், குழந்தைகளின் கல்வி குறித்தும் அதிகம் தெரியும். தாய்மொழியில் படிப்பதுதான் குழந்தைகளுக்கு நல்லது என்று கல்வியாளர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்" என்றார் சாந்திபூஷண்.

“The Government can impose reasonable restrictions on provision of primary education to children in a State especially on medium of instruction as this was an important matter of policy for the State.

The language of instruction at a primary level was an important part of policy of the Government. Education had to be imparted in the mother tongue, in which the child was most familiar with,” என்றும் வாதாடினார் அவர்.

இதன்பிறகு வழக்கு தமிழக அரசின் ஆணையை இலதாக்குவதில் (இரத்துச் செய்வதில்) முடிந்தது. ‘தமிழக அரசின் ஆணை செல்லாது என்பது தீர்ப்பு.’

இதன்படி கலைஞர் கருணாநிதியின் தமிழ்வழிக் கல்வியின் கனவு தகர்ந்தது.

அன்றைய நிலையில் தமிழ் உணர்வாளர்களும் இத்தீர்ப்புக்கு பெரிய கண்டனங்களை தெரிவிக்கவில்லை.

- டாக்டர் சு.நரேந்திரன், சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக சிறப்புநிலைப் பேராசிரியர்.

Pin It