வெள்ளையன். 15-8-1947இல் இந்தியாவை விட்டு வெளியேறினான். அதை “இந்திய விடுதலை நாள்” என எல்லோரும் கொண்டாடினர்.
தந்தை பெரியார் மட்டும், “15-8-1947 திராவிடருக்குத் துக்கநாள்” என்று அறிவித்தார். திராவிடர் கழகத்தார் அனைவரும் அன்று துக்கம் கொண்டாடினோம். ஏன்?
“வெள்ளையன் பார்ப்பனிடமும் - பனியா விடமும் இந்தியாவை ஒப்படைத்துவிட்டுப் போகி றான். திராவிடரைப் பார்ப்பானும் பனியாவும் அடிமையாகவே வைத்தி ருப்பார்கள்; சூத்திரனாகவே வைத்திருப்பார்கள்” என்று உறுதிபடச் சொன்னார், பெரியார். அது உண்மையாகிவிட்டது.
வெள்ளையன் காலத்தில், 1835இல். பொதுப் பள்ளிகள் திறக்கப்பட்டன. அவரவர் தாய்மொழி வழியில் 1 முதல் 5 வகுப்பு வரை எல்லோரும் படித்தனர்; எல்லா இந்தியரும் அவரவர் தாய்மொழி வழியில் 5ஆம் வகுப்பு வரை படித்தனர். தமிழனும், தெலுங்கனும், மலையாளியும், கன்னடத்தானும், மராட்டியனும், வங்காளியும் - அதாவது ஒவ்வொரு இந்தியனும் 6ஆம் வகுப்பு முதல் ஆங்கில மொழி வழியில் கல்வி கற்பிக்கப்பட்டான். வெள்ளையன் ஆட்சியில், 1865இல் ஆங்கிலம் இந்தியாவின் ஆட்சிமொழி ஆயிற்று. நிற்க.
பின்னர் 6ஆம் வகுப்பு முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு வரை அவரவர் தாய்மொழி வழியில் கல்வி கற்பிக்கப்பட்டது.
அதற்கு மேற்பட்ட உயர்கல்வி - பட்டக் கல்வி, மருத்துவக் கல்வி, பொறியியல் கல்வி முதலானவை இந்தியா முழுவதிலும் ஆங்கில வழியில் கற்பிக்கப்பட்டன.
1990க்குப் பிறகு, இந்தியா முழுவதிலும் தனியார் கல்வி பெருகியது, மாநில அரசுப் பள்ளிகள், மய்ய அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் எல்லாவற்றிலும் இந்தியர்கள் எல்லோருக்கும் 5ஆம் வகுப்புக்கு மேற்பட்ட கல்வியை அவரவர் தாய்மொழி வழியில் கற்பிக்காமல் ஆங்கில மொழி வழியில் கற்பிப்பது விரைந்து பரவியது. உலகத்தில், மக்களாட்சி நடைபெறும் எந்த நாட்டிலும் இந்த ஈனப்போக்கு இல்லை.
வெள்ளையன், 1922இல், உலகின் 5இல் 1 பகுதியை ஆட்சி செய்தான். படிப்படியாக, 1947க்குப் பிறகு பல்வேறு பிரிட்டிஷ் குடியேற்ற நாடுகள் விடுதலை பெற்றன. இந்தியாவும் அப்படி விடுவிக்கப்பட்டது.
அப்படி விடுவிக்கப்பட்ட இந்தியாவில், இன்று, ஏறக்குறைய 789 பல்கலைக் கழகங்கள் உள்ளன. இவற்றின் ஆளுகையின்கீழ் ஏறக்குறைய 37,204 கல்லூரிகள் உள்ளன. இவ்வகையில் 260 தனியார் பல்கலைக்கழகங்கள், 47 மய்ய அரசுப் பல்கலைக் கழகங்கள், 303 மாநில அரசுப் பல்கலைக்கழகங்கள், 123 மய்ய அரசால் ஏற்கப்பட்ட நிகர்நிலை பல்கலைகள் (Deemed), 74 தேசிய முதன்மை வாய்ந்த பல்கலைக் கழகங்கள் ஆகியவை உள்ளன.
இவற்றின் ஆளுகையின்கீழ் உள்ள 37,204 கல்லூரிகளிலும் 12ஆம் வகுப்புக்கு மேற்பட்ட எல்லா வகைப் படிப்புகளும் ஆங்கில மொழி வழியில் கற்பிக்கப்படுகின்றன. இது அடிமை நாடா?
விடுதலை பெற்ற நாடா?
விடுதலை பெற்ற ஒரு நாட்டில் உள்ள அரசு, எல்லோ ருக்கும் எல்லா நிலைக் கல்வியையும் இலவசமாகத் தரவேண்டும். இந்திய அரசமைப்புச் சட்டத்திலேயே அந்த உரிமை வழங்கப்படவில்லை; எந்தக் கட்சியும், இன்று வரையில் அந்த உரிமையை அரசிடம் கோரவில்லை; கோரிப் போராடவில்லை.
இது அன்னியில், அரசு எல்லோருக்கும் இலவச மருத்துவம், தூய்மை செய்யப்பட்ட இலவசக் குடிநீர் கட்டாயம் வழங்க வேண்டும்.
உலக மக்கள் தொகை நாள் உலகம் முழுவதிலும் 11-7-1989 முதல் கொண்டாடப்படுகிறது. இந்திய அரசு 11-7-2018இல் உலக மக்கள் தொகை நாள் கொண் டாடியது. இன்று உலக மக்கள் தொகை 763 கோடி. உலகில் பேசப்படும் தாய்மொழிகள் 6,000. 21ஆம் நூற்றாண்டின் இறுதிக்குள் 5,700 மொழிகள் உலகில் பேச்சுவழக்கு இழந்துவிடும்; மீதம் உள்ள 300 மொழிகள் மட்டும் பேசப்படும்.
இந்திய மக்கள் தொகை இப்போது 135.4 கோடி. 135.4 கோடி மக்கள் 1652 தாய்மொழிகளைப் பேசுகிறார்கள்; சராசரியாக ஒரு இலட்சம் பேர்களால் பேசப்படும் மொழிகள் இதில் 1619. மீதி உள்ள 33 மொழிகள் ஒவ்வொன்றும் 10 இலட்சம் மக்களுக்கு மேல் பலகோடி மக்களால் பேசப்படுகின்றது. இதில் தமிழும் ஒன்று. தமிழ், தமிழ்நாட்டில் 7.5 கோடி மக்களால் பேசப்படுகிறது.
ஆனால், தமிழ்வழியில் எல்லாப் படிப்பும் தரப்பட வில்லை; அன்றாட நடப்பில் மாநில அரசில் தமிழ் ஆட்சி மொழியாக இல்லை; மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் ஆட்சிமொழியாக இல்லை; உயர் நீதிமன்ற வழக்குரை மொழியாக தமிழ் இல்லை; வழிபாட்டு மொழியாக தமிழ் இல்லை.
இந்நிலை இப்படியே நீடித்தால், 2101ஆம் ஆண்டில், தமிழ்நாட்டிலேயே பெருமளவு மக்களால் பேசப்படும் மொழயாகத் தமிழ் இருக்க முடியாது. மக்களின் எல்லா வகைப் பயன்பாட்டுக்கும் பயன்படுத்தப்படும் மொழியே 22ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்திலும் உயிர் வாழும். இது உறுதி.
எல்லா நாடுகளிலும் 21.2.2000 முதல் ‘உலகத் தாய்மொழி நாள்’ கொண்டாடப்படுகிறது. நாமும் - தமிழர்களும், இந்தியர்களும் 21-2-2019ஆம் நாள் ‘உலகத் தாய்மொழி நாளைக்’ கொண்டாடுவோம்.
இது ஒரு சடங்குத்தனமாகச் செய்யப்படாமல், தமிழர்களும் எல்லா மொழி இந்தியர்களும்
இந்திய அரசே! இந்திய அரசே! எல்லா நிலைக் கல்வியையும் அவரவர் தாய்மொழி வழியில் கொடுக்க வகை செய்!
தமிழக அரசே! தமிழக அரசே! தமிழ்நாட்டில் எல்லா நிலைக் கல்வியையும் தமிழ்வழியில் தர உடனே ஆவன செய்! ஆவன செய்! எனக் கோரி, அனைத்துத் தரப்புத் தமிழரும் ஒருங்கிணைந்து போராடுவோம், வாரீர்! வாரீர்!