2014இல் பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு சொல்வது ஒன்று செய்வது ஒன்று, என்ற வஞ்சகச்செயல் தொடர்கிறது. பிரதமர் மோடி கூட்டுறவுக் கூட்டாட்சியியலைப்(Co-operative Federalism) பின்பற்றுவேன் என்று உறுதி அளித்தார். ஆனால் தன்னிச்சையான பாசிசம்தான் (Unilateral Fascism) ஆட்சியியலில்பின்பற்றப்படுகிறது. மாநிலங் களுடைய உரிமைகளை முடக்கும் செயல் எப்போதும் இல்லாத அளவிற்குத் தற்போது கடைப்பிடிக்கப்படுகிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கும்போது ஒன்றிய-மாநில நிதி அதிகாரங்களைப் பொறுத்தவரை, எவ்வித மாற்றமும் இல்லாமல் பிரித்தானியா ஆட்சியின் 1935ஆம் ஆண்டு அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிட்ட அதே பிரிவுகளை 1950ஆம் ஆண்டு அரசமைப்புச் சட்டத்திலும் ஏற்றுக்கொண்டார்கள்.இந்த ஆபத்தான போக்கினைப் பல வல்லுநர்கள் எதிர்த்தார்கள். குறிப்பாக அரசமைப்புச்சட்ட அவையில் இடம் பெற்றி ருந்த கே.சந்தானம் டி.டி.கிருஷ்ணமாச்சாரி போன்ற வர்கள் இந்தப் போக்கினைத் தடுத்து மாநிலங்களுக்கு நிதியைப் பிரித்தளிக்கும் ஓர் அமைப்புத் தேவை என வாதிட்டனர்.

1935ஆம் ஆண்டு சட்டத்தில் உள்ள ஒன்றிய-மாநில நிதிஅதிகாரங்களை அப்படியே தொடர்ந்தால் ஒவ்வொரு மாநிலமும் தில்லி அரசின் கதவைத் தட்டும் பிச்சைக்காரர்களாக மாறும் சூழல் ஏற்படும் என்றனர். மாநிலங்களுக்குக் குறைந்த வருவாயைத் தருகின்ற வரிகளையும் மக்களுக்கு அதிக பணிகளைச் செய்கின்ற பொறுப்பையும், ஒன்றிய அரசிற்கு அதிக வருவாயை ஈட்டுகின்ற வரிகளையும் குறைந்த மக்கள் பணி செய்கின்ற பொறுப்பையும் அரசமைப்புச் சட்டம் ஏற்றுக்கொண்டதால் ஒவ்வொரு மாநிலமும் ஆண்டு தோறும் தங்கள் நிதிநிலை அறிக்கையில் நிதிப்பற்றாக் குறையைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்தனர்.

இதன் பிறகு இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 280 என்ற ஒரு புதிய பிரிவை இணைத்தனர். ஐந்தாண்டு களுக்கு ஒரு முறை இப்பிரிவின்படி ஒரு நிதிக்குழுவைக் குடியரசுத் தலைவர் அமைப்பார். அக்குழுமாநிலங் களின் நிதிப் பற்றாக்குறையையும் வருவாய் தேவை யையும் ஆய்வு செய்யும் நிலை உருவானது. 1950 லிருந்து இதுவரை 14 நிதிக்குழுக்கள் அமைக்கப்பட்டன. 2017 நவம்பர் 27ஆம் நாள் 15வது நிதிக்குழுவை ஒன்றிய அரசு நியமித்தது.

இதுவரை 14 நிதிக்குழுக்கள் பரிந்துரைகள் அளித்த பின்பும் மாநிலங்கள் தொடர்ந்து நிதிச்சிக்கல்களையே சந்தித்து வருகின்றன. இதற்கு முதன்மையான காரணம் மாநிலங்களின் உரிமைகள் படிப்படியாகக் குறைக்கப் படுவதுதான் என்று பல ஆய்வுகளின் புள்ளிவிவரங்கள் சான்று பகர்கின்றன. மேலும் நிதிக்குழுவின் அதிகார எல்லையையும் ஒன்றிய அரசுப் பறித்து வருகிறது. ஒன்றிய அரசிற்கு வரும் வரி வருவாயிலிருந்தும் இரயில்வே கட்டணங்களிலிருந்தும் மானியத் தொகை வழங்குவதற்கு14 நிதிக்குழுக்கள் முயற்சி செய்தாலும் மாநிலத்தின் நிதித்தேவைகள் பெருகிவருகின்றன. மாநிலத்தின் கடனளவும் உயர்ந்து வருகிறது.

மக்கள்தொகையில் 80 முதல் 90 விழுக்காடுகள் என்ற அடிப்படையில் நிதிப்பகிர்வை முதல் மூன்று நிதிக்குழுக்கள் மேற்கொண்டன. சிறந்த முறையில் நிதிதிரட்டும் மாநிலங்களுக்கும் அதன் பங்களிப்பிற்கு ஏற்ப 10 அல்லது 20 விழுக்காட்டு நிதியை இந்த முதல் மூன்று நிதிக்குழுக்கள் அளித்தன. நான்காவது நிதிக்குழுவிலிருந்து நிதிப்பகிர்வு முறையில் மாற்றங்கள் செய்யப்பட்டன. குறிப்பாக மக்கள்தொகை விழுக்காட் டைக் குறைத்து மாநிலங்களின் கடன்சுமை பொரு ளாதாரத்தில் பின்தங்கிய நிலை ஆகிய புதிய குறி யீடுகளும் இணைக்கப்பட்டன.

இம்மாற்றங்களால் 29 மாநிலங்களில் தமிழ்நாடு உட்பட 6 மாநிலங்கள் தொடர் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றன. குறிப்பாக தமிழ்நாடு மேற்கு வங்கம் மகாராட்டிரா போன்ற மாநிலங்கள் ஒன்றிய அரசிற்கு அளிக்கும் வரி வருவாயின் பங்கு அதிகளவில் உள்ளது. ஆனால் உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகார், ஒரிசா போன்ற வட மாநிலங்களில் அந்தந்த மாநிலங்கள் திரட்டும் வரி வருவாய் குறைவாகவேஇருந்து வருகிறது. ஒன்றிய அரசிற்கு வருமான வரி, நிறுவன வருமான வரி, ஏற்றுமதி வரி, இறக்குமதி வரி, கலால் வரி ஆகிய வரிகளின் அதிக வரி வருவாயை மகாராட்டிரா, பஞ்சாப், மேற்குவங்கம், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, குஜராத் போன்ற மாநிலங்கள் ஈட்டித் தருகின்றன. இதன் காரண மாகத்தான் “பின்தங்கிய என்ற அளவுகோலைப்” (Backwardness Criteria) பயன்படுத்தி வட மாநிலங் களுக்குத் தொடர்ந்து நிதிக்குழு அதிக வரிவருவாயைப் பங்கிட்டு அளித்து வருகிறது. சான்றாக ஏழாவது நிதிக்குழு, ஜனதா அரசின் பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாயால் நீதிபதி சீலாட் என்பவரின் தலைமையில் நியமனம் செய்யப்பட்டது. இந்நிதிக்குழுதான் தனது சுயாட்சித் தன்மையை உறுதிப்படுத்தியது. இதன் காரணமாகத் தமிழ்நாட்டிற்கு நிதிக்குழுவின் பரிந்துரை வழியாக வழங்கப்பட்ட வரிவருவாயின் அளவு சற்று அதிகரித்தது. மொத்த ஒன்றிய அரசின் வரிவருவாயில் 7 விழுக்காடு தமிழகத்திற்கு அளித்தது. மீதம் 93 விழுக்காட்டை மற்ற மாநிலங்களுக்குப் பிரித்து அளித்தது. ஆனால் எட்டாம் நிதிக்குழுவிலிருந்து இந்நிதிப்பகிர்வு தமிழ்நாட்டிற்குப் படிப்படியாகக் குறைந்துகொண்டே வருகிறது. 14ஆம் நிதிக்குழுவின் பரிந்துரையின்படி ஒன்றிய அரசின் மொத்த வரிவருவாயில் 3.9 விழுக்காடு அளவிற்குத்தான் நிதி ஒதுக்கீடு தமிழகத்திற்குக் கிடைத்தது. சிறப்பான முறையில் பொருளாதாரத்தை வளர்த்தெடுத்த மாநிலங்கள் தங்களுக்குள் விதிக்கும் வரிவருவாயைப் பெருக்கிச் சிறந்த நிதி மேலான்மையைச் செய்த மாநிலங்கள் தொடர்ந்து தண்டிக்கப்பட்டு வருகின்றன.

புதுப்புது அணுகுமுறை என்ற பெயரிலும் புதிய அளவுகோல்களின்படியும் பொருளாதார-சமூகத் தளங்களில் சாதனைகள் படைத்துவரும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் 1990க்குப் பிறகு நடைமுறைப்படுத்தப்பட்ட தனியார்மயம், தாராளமயம், உலகமயம் திட்டங்களால் மோசமான பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு வருகின்றன. இக்கட்டான இச்சூழலிலும் தனியார் முதலீட்டை எந்தெந்த மாநிலங்கள் சிறப்பாக ஈர்த்து வளர்ச்சிப்பாதையில் சென்றதோ அம்மாநிலங்கள் நிதிக்குழுக்களால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன. மேலும் பொருளாதார வளர்ச்சியின் பயன்கள் மானுட மேம்பாட்டில் முடிவு அடைய வேண்டும் என்பதை உலக அளவில் பல பொருளாதார ஆய்வாளர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இதன் அடிப்படையில்தான் ஐக்கிய நாடுகள் மன்றத்தால் ஆண்டுதோறும் வெளியிடப்படும் மானுட மேம்பாட்டு அறிக்கைகளில் பல மானுட வளர்ச்சிக் குறியீடுகள் சுட்டப்படுகின்றன. மானுட மேம்பாட்டு அறிக்கைகளின் அடிப்படையில் இந்திய அரசின் திட்டக்குழு 2001இல் ஒரு மானுட மேம்பாட்டு அறிக்கையையும்ஒன்றிய அரசு 2011இல் ஒரு மானுட மேம்பாட்டு அறிக்கை யையும் வெளியிட்டன.

இவ்வறிக்கைகளின் குறியீடுகளின்படியும் ஐக்கிய நாடுகள் மானுட மேம்பாட்டுக் குறியீடுகளின்படியும் வறுமை ஒழிப்பிலும் கல்வி, பொதுச்சுகாரத்தை அனைத்துப் பிரிவினருக்கு அளிப்பதிலும் தாய்-சேய் பாதுகாப்பை அளிப்பதிலும் குழந்தைகளின் இறப்பு விழுக்காட்டைக் குறைப்பதிலும் ஊட்டச்சத்தினைப் பள்ளிச் சிறார்களுக்கு வழங்குவதிலும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கு வதிலும் சாலை மேம்பாடு, மின் இணைப்பு உட்பட உட்கட்டமைப்பு வசதிகளை அளிக்கும் நாடுகள் மாநிலங்கள் இனம் கண்டு தரவரிசைப் பட்டியல் உரு வாக்கப்படுகின்றன. மாநிலங்களுக்கான தர வரிசை யில் 1980க்குப் பிறகு இந்திய மாநிலங்களிலேயே தமிழ்நாடு முதல் மூன்று இடங்களுக்குள் தொடர்ந்து வருகிறது. ஐக்கிய நாடுகளின் மனித மேம்பாட்டு அறிக்கைகளின்படி இந்தியா 188 நாடுகளின் தர வரிசைப்பட்டியலில் 134 இடத்தைப் பெற்றுள்ளது.

இத்தகைய பொருளாதார, சமூக மேம்பாட்டுக் குறியீடுகளைப்புறக்கணித்து மீண்டும் மீண்டும் இந்தி பேசும் வட மாநிலங்களுக்குத் தொடர்ந்து அதிக நிதிப்பகிர்வினைச் செய்து தென்னக மாநிலங்களுக்குத் தொடர் வஞ்சனையை ஒன்றிய அரசு இழைக்கிறது.

15ஆம் நிதிக்குழுவை அமைத்த விதமே கண்டனத் துக்குரியது. கடந்த 14 நிதிக்குழுக்களின் தலைவர்கள் பெரும்பாலும் அரசியலில் பங்கேற்ற முன்னாள் மாநில முதல்வர்களாகவும், நிதியியல் வல்லுநர்களாகவும், நீதிபதிகளாகவும் இருந்து செயல்பட்டுள்ளனர். ஆனால் தற்போது அமைக்கப்பட்டுள்ள 15ஆம் நிதிக்குழுவிற்கு ஒன்றிய அரசின் பணியிலிருந்து ஓய்வுப்பெற்ற கே.என்.சிங் தலைவராகவும், திரு.சக்திகாந்ததாஸ் முழுநேர உறுப்பினராகவும் ஒன்றிய அரசின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் அசோக் லகரியும் நிதிஆயோக் அமைப்பின் உறுப்பினர் ரமேஷ் சந்த் பகுதி நேர உறுப் பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக நடைமுறையில் பெரும் தோல்வியைத் தழுவி நாட்டின் பொருளாதாரச் சீர்குலைவிற்கு வித்திட்ட உயர்பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் போது கண்மூடித்தனமாக இத்தோல்வியுற்ற செயலை விழுந்து விழுந்து ஆதரித்த வர் திரு.சக்திகாந்ததாஸ் ஆவார். தற்போது அரசமைப்புச் சட்டப்பிரிவின்படி இயங்குகிற நிதிக்குழு-ஒன்றிய அரசின் நிர்வாகப் பணியாளர்களின் ஆணையமாக (From Quasi Judicial Body to Full-Fledged Bureaucratic Body) மாற்றப்பட்டுவிட்டது. இதைவிடக் கொடுமை என்னவென்றால் நிதிக்குழு எந்தெந்தப் பரிந்துரைகளை வழங்கும் என்பதை நிர்ணயம் செய்யும் ஆய்வு வரையறையை (Terms of Reference) ஒன்றிய அரசின் நிதித்துறையே முடிவு செய்து அறிவித்துவிட்டது. ஒன்றிய-மாநில உறவுகளை ஆய்வு செய்த நீதிபதி சர்க்காரியா குழுவும் நீதிபதி இராஜமன்னார் குழுவும் ஒன்றிய மாநில உறவுகளைப் பாதிக்கும் எல்லாவித முதன்மையான பிரச்சினைகள் குறித்து மாநிலங்களுக் கிடையேயான மன்றம்தான் (Inter-StateCouncil-Article 263) முடிவு செய்ய வேண்டும் என்ற பரிந்து ரையை வலியுறுத்தின. பிரதமரும் மாநில முதல்வர் களும் ஒன்றிய அரசின் நிதி அமைச்சரும் இக்குழுவில் இடம் பெறுவதால் நிதிக்குழு அமைக்கப்படுவதற்கு முன்பே மாநிலங்களின் நிதிப்பிரச்சினைகளை அறிந்து, அதற்கேற்ப தீர்வு காணக்கூடிய ஓர் ஆய்வு வரை யறையை முடிவு செய்ய வேண்டும் என்று பல நிதியியல் வல்லுநர்கள் தொடர்ந்து குறிப்பிட்டு வருகின்ற னர். இதையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு சர்வாதிகார அரசு செயல்படுவதுபோல் ஓர் அரசமைப்புச் சட்டத்தின் கீழ், இயங்கும் நிதிக்குழுவைத் தற்போது மோடி அரசு சிறுமைப்படுத்தி இருக்கிறது.

15வது நிதிக்குழுத் தனது ஆய்வு வரையறையில் 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில்தான் நிதிப்பகிர்வு மேற்கொள்ளப்படும் என்று கூறியிருப்பது மக்கள்தொகை கட்டுப்பாடு திட்டத்தைச் சிறப்பாகக் கடைப்பிடித்துவரும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் மீது விழுந்த பேரிடியாகும். 1971ஆம் ஆண்டு புள்ளி விவர அடிப்படையில்தான் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் நிதிப் பகிர்வை யும் செய்ய வேண்டும் என நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட சட்டத்திருத்தத்திற்கு எதிராகவும் இம்முடிவு அமைந்துள்ளது.

2011ஆம் ஆண்டின் மக்கள்தொகை புள்ளி விவரங்களை எடுத்துக்கொண்டால் பத்தாண்டுகளின் சராசரி மக்கள்தொகை வளர்ச்சி உத்திரப்பிரதேசத்தில் 20.1, ம.பி. 20.3, ராஜஸ்தானில் 20.4, ஜார்கண்டில் 22.3, சத்திஸ்கரில் 22.6, பீகார் 25.1 வளர்ச்சி விகிதம் அமைந்துள்ளன. ஆனால் ஆந்திராவில் 11.1 பஞ்சாப் 13.7 மேற்கு வங்கம் 13.9 ஒரிசா 14 தமிழ்நாடு 15.6 கர்நாடகா 15.7 எனப்பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் மிகக் குறைவாக உள்ளன. மேற்கூறிய மக்கள் தொகை அடிப்படையில் நிதிப்பகிர்வு செய்யப்படு மானால் 6 மாநிலங்கள் பெருமளவில் நிதிக்குழுவின் பரிந்துரைகளால் பாதிக்கப்படும்.

சரக்கு-சேவை வரிவிதிப்பு நடைமுறைக்கு வந்த பிறகு, ஜூலை 2017 தொடங்கி நவம்பர் 2017 வரை ஒன்றிய அரசு விதிக்கும் சரக்கு-சேவை வரி வருவாயில் தமிழ்நாடு இரண்டாவது இடத்திலும் மகாராஷ்டிரா முதல் இடத்திலும் இருந்தன. மாநிலங்கள் விதிக்கும் சரக்கு-சேவை வரி வருவாயில் மகாராஷ்டிரா முதல் இடத்திலும் தமிழகம் இரண்டாம் இடத்திலும் உள்ளன. குஜராத் சட்டமன்றத் தேர்தல் வந்தபோது 120 பொருட்களின் மீது திடீரென்று அரசியல் நோக்கோடு நான்கு அடுக்கு வரிமுறைகளான 5, 12, 18, 28 விழுக்காட்டின் வரி அளவைக் குறைத்ததன் காரணமாக 2017 டிசம்பர் மாதத்திற்குப் பிறகு தமிழ்நாடு உட்பட மாநிலங்களின் வருவாய் சரிந்து வருகின்றன. இது போன்ற முதன் மையான வரி வருவாயில் ஏற்படும் ஏற்ற இறக்கங் களை உரிய முறையில் ஒன்றிய அரசிற்கு எடுத்துச் சொல்ல வல்லுநர்கள் என்று சொல்பவர்கள் தயங்கு கின்றனர். ஊடகங்கள் நடுநிலையாக இயங்கி இவ்வுண் மைகளை மோடி அரசுக்கு எடுத்துரைக்க அஞ்சுகின்றன.

மாநிலங்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட வரிகளைத் தாங்களே விதித்து தங்கள் வரி வருவாயின் அளவை முன்பே தெரிந்து கொண்டால்தான் சரியான முறையில் வரிவருவாயை ஆய்வுசெய்து, மக்கள் நலத்திட்டங்களை நிதிநிலை அறிக்கையில் அறிவிக்க முடியும், செயல் படுத்தமுடியும். மேலும்மாநிலங்கள் விதிக்கின்ற வரி களை ஒவ்வொன்றாக ஒன்றிய அரசு எடுத்துக்கொண்டு தேர்தல் அரசியல் கண்ணோட்டத்தோடு வரி விகிதங் களை மாற்றி அமைப்பது மாநிலங்களை நிதித்துறை யில் தள்ளாட வைக்கும் தீய செயலாகும். கூட்டாட்சி இயலுக்கும் ஜனநாயகத்திற்கும் முழுமையாக உலை வைக்கும் செயலாகும்.

இதுவரை மோடிக்கு அடிமையாகயிருந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஒன்றிய அரசின் நிதி யமைச்சகக் கூட்டத்தில் நிதிக்குழுவால் தமிழக அரசிற்குக் கிடைக்கும் நிதியின் அளவு மிக மோசமான அளவிற்குக்குறைந்து வருகிறது என்றும், 13ஆவது 14ஆவது நிதிக்குழுக்கள் பரிந்துரைகளின்படி தமிழ் நாட்டிற்கு வரவேண்டிய நிதி இன்னும் வழங்கப்பட வில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒன்றிய அரசுத் துறைகளால் அறிவிக்கப்படும் திட்டங்கள் வழியாக அளிக்கும் தொகையின் அளவும் குறைந்து வருவதால் இதை ஈடுசெய்வதற்குத் தற்காலிக சிறப்பு மானியத்தை அளிக்க வேண்டும் என்றும் பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டிற்கு அளிக் கப்பட வேண்டிய ஒன்றிய அரசின் திட்டங்களுக்குத் தொகையையும் தமிழகத்திற்கு வர வேண்டிய மானியத் தையும் உடனடியாக அளிக்க வேண்டும் என்று ஒப்பாரி வைக்கிறார். ஒன்றிய அரசால் தமிழ்நாடு பெருமளவு பாதித்துள்ளது என்பதைத்தமிழகத் துணை முதல்வரின் அறிக்கைகள் உறுதி செய்கின்றன.

2018ஜனவரி 19 அன்று கூடிய சரக்கு-சேவை வரி குழுக் கூட்டத்தில் 29 பொருட்களின் வரியையும், 59 சேவைகளுக்கான வரியையும் குறைத்துள்ளார்கள். இந்த வரிக்குறைப்பு தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களையோ வழங்கும் சேவைகளையோ கணக்கில் எடுத்துக்கொண்டு குறைக்கப்பட்டதாகக் கருத முடியாது. இது போன்ற ஒன்றிய அரசின் தன்னிச்சை யான செயல்களை அடுக்கிக்கொண்டே போகலாம். தமிழ்நாடு எல்லாத்துறைகளிலும் எல்லா வகைகளிலும் வஞ்சிக்கப்படுகிறது. இந்திய ஒன்றியத்தின் கீழ்த் தமிழ்நாடு இயங்குகிறதா? அல்லது பாகிஸ்தான் (மோடி மொழியில்) அரசின்கீழ்த் தமிழ்நாடு இயங்குகிறதா? என்ற கேள்வியும் எழுகிறது.

தமிழ்நாடு அரசு தனது மோடி இயக்கத்திலிருந்து தெளிந்துதென் மாநிலங்கள் அல்லது பாதிப்புக்குள்ளாகிற மாநிலங்களின் முதல்வர்கள் இணைந்து ஒரு பொது வான அணுகுமுறையை 15ஆவது நிதிக்குழுத் தனது பரிந்துரைகளை வழங்குவதற்கு முன்பு பின்பற்ற வேண்டும். காவிரியின் நீர் அளவு குறைக்கப்பட்டது போல தமிழ்நாட்டு நிதியாதாரமும் சிதைக்கப்பட்டால் இந்தியாவில் தமிழ்நாடு தன்மானமற்றுத் தொடர வேண்டுமா?

Pin It