5 ஆண்டு  மோடி ஆட்சி வட மாநிலங்களுக்கும்  தென் மாநிலங்களுக்கும் இடையிலான முரண்பாட்டை கூர்மையாக்கி யுள்ளது. அடுத்து ஆட்சியை பா.ஜ.க. அமைத்தாலும் மாநிலக் கட்சிகள் காங்கிரஸ் ஆதரவோடு அமைத்தாலும் “மாநில சுயாட்சி மற்றும் தென் மாநிலங் களுக்கான கூட்டமைப்பு” என்ற முழக்கத்தை முன்னெடுத்தாக வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது. தென் மாநிலங்களின் இந்த கோரிக்கையில் நியாயம் இருக்கிறது.

2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில்தான் 15ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைகள் அமையும் என்பதை சமீபத்தில் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் திட்டவட்டமாகப் பதிவு செய்தார் அதன் தலைவரான மாநிலங்களவை உறுப்பினர் திரு. என்.கே.சிங். 2017ஆம் ஆண்டின் இறுதியில் ஒன்றிய அரசால் 15ஆவது நிதிக்குழு அமைக்கப்பட்டு, அரசாணை யில் அதன் பணி வரன் முறைகள் (Terms of Reference) வழங்கப்பட்ட உடனேயே அது தென் மாநிலங்களில் மிகப்பெரிய சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தியது . அதற்கு முக்கியக் காரணம், 2020-21 முதல் 2024-25 வரையிலான நிதியாண்டுகளில் ஒன்றியப் பகுப்பு நிதியிலிருந்து (central divisible pool) மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட இருக்கும் வரித் தொகையின் அளவைத் தீர்மானிக்கும் சூத்திரம், 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில்தான் வடிவமைக்கப்படும் எனும் வரன்முறையே ஆகும்.

இதற்கு எதிராகக் குரல் கொடுக்கும் வண்ணம், தென்மாநிலங்களின் நிதி அமைச்சர்களின் கூட்டம் சென்ற ஆண்டு மே மாதம் திருவனந்தபுரத்தில் நடந்தது (தமிழகம் வருவதாகக் கூறி, பின்னர் பின்வாங்கியது தனிக்கதை). இத்தகைய எதிர்வினைக்கு என்னதான் காரணம்? மாநிலங்களின் சார்பாக ஒன்றிய அரசு வசூலிக்கும் வரித்தொகையை அவர் களுக்குப் பகிர்ந்தளிப்பதிலும், மாநிலங்களின் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை முடிவு செய்வதிலும் 2026ஆம் ஆண்டு வரை, 1971ஆம் ஆண்டின் மக்கள்தொகைதான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று எழுபதுகளிலேயே மாநிலங்களுக்கு உறுதி அளிக்கப்பட்டது.

எழுபதுகளின் பிற்பாதியில் இருந்தே தென்மாநிலங்கள் மட்டுமல்லாது, மேற்கு வங்காளம், ஒடிசா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களும் தங்களுடைய மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு, அதில் பெரும் வெற்றியையும் பெற் றுள்ளன. ஆனால், சமூக - பொருளாதார ரீதியாக பின்தங்கி இருக்கும் வட மாநிலங் கள், மக்கள் தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதில் தென்மாநிலங்களை விட மிகவும் பின் தங்கியுள்ளன.

இத்தகைய நிலையில், 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படிதான் நிதி பகிர்ந்தளிக்கப்படும் என்ற முடிவு, மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தியிருக்கும் தென்மாநிலங்களை வஞ்சித்து, அதிக மக்கள் தொகையைக் கொண்ட வடமாநிலங்களுக்கு கூடுதல் நிதியை மடைமாற்றம் செய்யும் ஏற்பாடாகப் பார்க்கப்படுகிறது. 2011ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப் படையில் நிதிப்பகிர்வை மேற்கொள்வது தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு பலவகைகளில் அநீதி இழைப்பதாகும்.

இந்தச் சர்ச்சையின் விவாதப் பொருளை நாம் நுணுக்கமாக, ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், இந்தியாவின் மாநிலங்கள் இடையே ஏற்பட்டுள்ள சமமற்ற மக்கள்தொகை வளர்ச்சி, புலம்பெயர்வின் போக்கு ஆகிய வற்றை அறிந்துகொள்வது அவசியம்.

ஒரு நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர வேண்டும் என்றால், அந் நாட்டின் மக்கள் தொகையில் உழைக்கும் வயதில் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும். இந்த நிலையில்தான் இந்தியா இருக்கிறது. 2020ஆம் ஆண்டில் இந்தியாவில் 25 வயதிற்கும் குறைவானவர்கள் 35 விழுக் காடு இருப்பார்கள் என்று கணிக்கப் படுகிறது. இந்தியாவில் உழைக்கும் வயது மக்கள்தொகை – உழைக்கும் வயதில் இருப்பவர்களைச் சார்ந்திருக்கும் மக்கள் தொகை ஆகியவற்றின் விகிதம் (working age to non-working age population ratio) 1.7 தென் கொரியா, மக்கள் சீனம் போன்ற நாடுகளின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்தபோது இந்த விகிதம் 2.5 முதல் 3 வரை இருந்த போதிலும், அது பல பத்தாண்டுகளுக்கு நீடிக்கவில்லை; அது வேகமாக வளர்ந்து வேகமாகவே வீழ்ந்தும் விட்டது. ஆனால், இந்த விகிதம் ஒப்பீட்டளவில் இந்தியாவில் குறைவு என்றாலும், 2050 வரை நீடிக்கும் வாய்ப்பு இருக்கிறது.

தேசிய அளவில் இந்த நிலை இருந்தா லும், இந்தியாவின் மாநிலங்களுக்கிடையே மக்கள்தொகை வளர்ச்சியில் உள்ள பெரும் வேறுபாட்டையும், சமமற்ற தன்மையையும் புரிந்து கொண்டால்தான் உண்மை நிலவரம் என்னவென்று புலப்படும். பொருளாதார வளர்ச்சி, உழைக்கும் வயது மக்கள் தொகை வளர்ச்சியைப் பொறுத்தவரை மேற்கூறிய ஆசிய நாடுகளின் பாதையில் தான் இந்தியாவின் தென்மாநிலங்கள் பயணிக்கின்றன. இங்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் வயதில் (15 வயது - 44 வயது) இருக்கும் பெண்களின் கருவுறுதல் விகிதம் (Fertility rate) 2.1க்கும் குறைவாக உள்ளது. இந்த விகிதம் 2.1 என்று இருந்தால்தான் ஒரு மாநிலத்தின் மக்கள்தொகை நிலையாக இருக்கும். தென்மாநிலங்களில் இது 2.1 க்கும் குறைவாக இருப்பதால், வரும் காலங் களில் மக்கள் தொகை குறைவது மட்டு மின்றி, உழைக்கும் வயதில் இருக்கும் மக்களின் எண்ணிக்கையும் குறையும்.

இதற்கு முற்றிலும் மாறாக, உத்தரப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான் போன்ற வடமாநிலங்களில் பெண்களின் கருவுறுதல் விகிதம் 2.5 முதல் 3.5 வரை இருப்பதால், அம்மாநிலங்களின் மக்கள் தொகை தொடர்ந்து வளர்வது மட்டு மின்றி, உழைக்கும் வயதில் இருக்கும் மக்கள் தொகையின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். ஆக, முதுமை அடைந்து வரும் தென்மாநில மக்களின் ஆரோக்கியம் சார்ந்த தேவைகளை கவனித்துக்கொள்வதும், இளமையான வடமாநில மக்களின் கல்வி, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு சார்ந்த தேவைகளை கவனித்துக்கொள்வதும் அந்தந்த மாநில அரசுகளின் பொறுப்பாக இருக்க வேண்டும் என்பது புரிகிறது.

வடமாநில மக்களின் புலம்பெயர்வு

ஆனால் கள ஆய்வுகள், புள்ளி விவரங்கள், பத்திரிகை செய்திகள், நம்முடைய அன்றாட அனுபவங்கள் ஆகியவை, வடமாநில அரசுகள் தங்களுடைய மக்களின் நலனை உறுதி செய்வதில் போதிய அக்கறை காட்ட வில்லை என்பதைத் தெரிவிக்கின்றன. இதற்குச் சிறந்த குறியீடு, வடமாநிலங் களிலிருந்து தென்மாநிலங்களுக்கு வந்து வேலை செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதே ஆகும். மக்கள்தொகை கணக் கெடுப்பு 2011, 2016-17ஆம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை புலம் பெயர்வு பற்றித் தரும் தகவல்களைப் பார்ப்போம்.

2001-2011 காலத்தில், புலம்பெயரும் உழைப்பாளி மக்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் சராசரியாக 4.5 விழுக்காடு வளர்ந்திருக்கிறது. இது 1991-2001 காலத்தில் கண்ட வளர்ச்சி 2.4 விழுக்காடு மட்டுமே. இந்தியாவின் மொத்த உழைப்புப் படையில் புலம் பெயர்ந்தவர்களின் பங்கு 2011இல் 10.5 விழுக்காடு; இது 1991 மற்றும் 2001 ஆண்டு களுக்கான மக்கள்தொகை கணக்கெடுப் பின்படி வெறும் 8.1 விழுக்காடாக இருந்தது.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், 2000க்குப் பின், வேலை சார்ந்த புலம்பெயர்வு ஆண்டுக்கு 5 கோடி முதல் 9 கோடி வரை இருந்துவந்துள்ளது. பொதுவாகவே, பொருளாதார ரீதியாகப் பின்தங்கியிருக்கும் பகுதிகளிலிருந்து, வளர்ந்த அல்லது வளரும் பகுதிகளுக்கு மக்கள் புலம்பெயர்வார்கள். இந்தியாவில் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் புலம் பெயர்வும் இந்த போக்கையே கடை பிடித்துவருவதாகத் தெரிகிறது.

புலம் பெயர்பவர்கள் அதிக அளவில் உத்தரப் பிரதேசம், பிகார், ஒடிசா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து வருபவர்கள் என்றும், அவர்கள் நோக்கிச் செல்லும் மாநிலங்களில் முதன்மை இடங்களில் டெல்லி, மகாராஷ்டிரா, தமிழகம், கேரளம், கர்நாடகம் ஆகியவை இருப்பதாகத் தெரிய வருகிறது. வட மாநிலங்களிலிருந்து தென்மாநிலங்களுக்கு வேலை தேடிப் புலம்பெயர் பவர்கள் எண்ணிக்கை சமீப காலங்களில் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது என் பதற்கு ஆதாரமாக, இந்த மாநிலங்களின் மக்கள் தொகையில் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் எண்ணிக்கையை பதிலியாக வைத்துக் கொண்டு பார்ப்போம்.

தென்மாநிலங்களில் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டுள்ளவர்கள் எண்ணிக்கை 1991-2011:

census 91 2001 11 600

மாநிலங்களுக்கு இடையே நிதிப் பகிர்வுச் சிக்கல்கள்

ஒரு மாநிலத்திற்குள் புலம்பெயர்வு என்பது தொழில்மயமாதல், நகர மயமாதலின் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் பிரதிபலிப்பு என்றாகும் போது, அந்த மாநிலத்தின் உட் கட்டமைப்பு வசதிகள், அரசின் மீது சுமை அதிகமாகிறது. மேலும், இது திட்டமிடாத வகையில் நடக்கும்போது, புலம்பெயர்ந்து வந்தவர்கள் உட்பட அனைவருக்கும் அடிப்படை வசதிகளை உறுதிசெய்து, நிலைத்தகு முறையில் இந்த வளர்ச்சியைக் கொண்டு செல்லுதல் பெரும் சவாலாகிறது. புலம்பெயர்ந்து வந்தவர்களுக்கு உணவுப் பாதுகாப்பு, தங்க அடிப்படை வசதிகள் கொண்ட இடம், சுகாதார வசதி, சமூகப் பாதுகாப்புத் தொகை, அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி போன்றவற்றை உறுதி செய்தல் என ஏராளமான சவால்கள் நம்முன் உள்ளன.

ஆக, வளர்ந்த மாநிலங்களுக்கும் பல புதிய சவால்கள் இருப்பதால், அவற்றை சமாளிக்கக் கூடுதல் நிதி ஆதாரங்களும் வேண்டும். இதன் பின்னணியில்தான் மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி, புலம்பெயர்வினால் உண்டாகும் அழுத்தங்களைச் சந்திக்கும் தென் மாநிலங்களுக்கும் நிதிப்பகிர்வில் நியாயம் வழங்குவதற்கான வாதம் முன்வைக்கப்படுகிறது.

Pin It