2012ல் நடுவண் அரசு பிறப்பித்த நீட்தேர்வு ஆணையை உச்சநீதிமன்றம் 2013 சூலையில் அரசமைப்புச் சட்டத்துக்கும் கூட்டாட்சி நெறிமுறைக்கும் எதிரானது என்று கூறி செல்லாது என்று அறிவித்தது. நடுவண் அரசு சீராய்வு விண்ணப்பம் செய்தது. அதன் மீது உச்சநீதிமன்றம் 2016 ஏப்பிரல் மாதம் அளித்த தீர்ப்பில் நீட்தேர்வு முறை, நடுவண் அரசின் வேண்டு கோளின்படி 2016 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தலாம் என்று இடைக்காலத் தீர்ப்பு வழங்கியது.
நீட்தேர்வு குறித்த வழக்கு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. 2016ஆம் ஆண்டிற்கு மட்டும் விரும்புகிற மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்விலிருந்து தமிழகத் திற்கு நிரந்தரமாக விலக்கு அளிக்கவேண்டும் என்று தமிழகச் சட்டமன்றத்தில் 1.2.2017 அன்று ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது குடியரசுத் தலை வரின் ஒப்புதலுக்காக நடுவண் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்மீது எந்தக் கருத்தும் கூறாமல் முடிவும் எடுக்காமல் நரேந்திர மோடி தலைமையிலான பா.ச.க. ஆட்சி ஏழரைக் கோடி தமிழர்களை இழிவுபடுத்துகிறது. இதைப்பற்றி நடுவண் அரசிடம் தட்டிக் கேட்கும் துணிவற்ற அடிமை அரசாக அ.திமு.க தலைமையிலான ஆட்சி இருக்கிறது.
அதனால் மூன்றாவது ஆண்டாக 2019 சூலையில் நீட்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்புக்கான சேர்க்கை நடைபெறவுள்ளது. நீட்தேர்வால் தனியார் பயிற்சி நிறுவனங்களிலும் தனியார் மருத்துவக்கல்லூரிகளிலும் கல்வி வணிகக் கொள்ளை பெருகி வருகிறது. தனியார் கல்வி வணிகக் கொள்ளையை வளர்தெடுப்பதற்காகவே நீட்தேர்வு நடத்தபடுகிறதோ என்று நினைக்க வேண்டிய நிலை இருக்கிறது.
இந்திய அளவில் மருத்துவப் படிப்பில் 66,000 இடங்கள் உள்ளன, இவற்றில் பாதி இடங்கள் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ளன. 2019 மே.5 அன்றுமொத்தம் 14,10,755 மாணவர்கள் நீட்தேர்வு எழுதினர். இவர்களில் 7,97,042 பேர் தேர்ச்சி பெற்றதாக மருத்துவ படிப்பில் சேருவதற்கான தகுதி பெற்றவர்கள் என்று அறிவிக்கபட்டுள்ளது. நீட்தேர்வின் மொத்த மதிப்பெண் 720. பொதுபிரிவினருக்கு 134 மதிப்பெண், பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இன, பழங்குடியினர் ஆகிய இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 107 மதிப்பெண் தேர்ச்சிக் குரிய மதிப்பெண் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. 134, மதிப்பெண் என்பது 20 விழுக்காட்டுக்கும் குறைவாகும். தேர்ச்சிக்குரிய மதிப்பெண் இவ்வளவு குறைவாக வைத்திருப்பது ஏன்?
மொத்தம் உள்ள 66000 இடங்களில் சேருவதற்காக அதிக அளவாக இரண்டு இலக்கம் பேர் தேர்ச்சி பெறும் வகையில் தேர்ச்சிக்கான மதிப்பெண்ணை நிர்ணயித்து இருக்கவேண்டும். இதுதான் பிறதேர்வு முறைகளில் வழக்கமாகப் பின்பற்றப்படும் நடைமுறையாகும். மதிப்பெண்ணை 20 விழுக்காட்டுக்கும் குறைவாக வைத்திருப்பதன் நோக்கம், தேவைக்கும் அதிகமான அளவில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றால் தான் தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும், நிகர்நிலைப் பல்கலைக் கழகமருத்துவப் படிப்புகளிலும் ஆண்டிற்கு பல இலக்கம் உருவா பணம் கட்டிப்படிப்பதற்கும் போட்டி போட்டுக் கொண்டு மாணவர்கள் முன் வருவார்கள் என்பதே ஆகும். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும், நிகர்நிலைப் பல்கலைக்கழக இடங்களுக் கும் ஆண்டிற்கு 20 முதல் 30 இலக்கம் வரை கட்டணம் பெறப்படுகிறது. 60 விழுக்காடு மதிப்பெண் பெற்றிருந்தாலும் இவ்வளவு பெருந்தொகையைச் செலவிட முடியாது. என்பதால் எண்ணற்ற மாணவர்கள் தனியார் மருத்துவ கல்லூரியில் சேருவதில்லை. எனவே குறைந்த மதிப்பெண் பெற்ற பணக்கார வீட்டுப் பிள்ளைகள் இவற்றில் சேரு கின்றனர். இதனால் மருத்துவக் கல்வி வணிகமயமா வதுடன், தரமும்தாழ்ந்து போகிறது. இது நீட்தேர்வின் குறிக்கோளுக்கு முற்றிலும் எதிரானது.
2019 சூன் 15 நாளிட்ட டைம்° ஆப் இந்தியா ஆங்கில நாளேட்டில் வெளியிட்ட செய்தியில் பஞ்சாப் மாநிலத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 2017ஆம் ஆண்டு சேர்ந்த மாணவர்களில் 85 விழுக்காட்டினர் நீட்தேர்வில் வேதியியல், இயற்பியல் பாடங்களில் சுழியம் முதல் பத்து மதிப்பெண் வரை மட்டுமே பெற்றுள்ளனர் என்பது அம்பலமாகியுள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரி களுக்குப் பல இலக்கம் உருவா பணம் கட்டிப்படிக்க கூடிய மாணவர்களைப் பிடித்துத் தருவதுதான் நீட்தேர்வின் நோக்கமாக இருக்கிறது.
2019ல் தமிழ்நாட்டில் 1,23,078 பேர் நீட்தேர்வு எழுதினர், இவர்களில் 59,785 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர், தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் ஆகியவற்றில் மொத்தம் சற்றொப்ப 6,000 இடங்கள் தான் இருக்கின்றன. 6,000 இடங்களுக்கு 60,000 பேர் தேர்ச்சி என்பது மருத்துவக் கட்டணக் கொள்ளையை ஊக்குவிப்பதற்குதானே! 400 மதிப்பெண்ணுக்கு மேல் 5634 பேரும், 300 மதிப்பெண்ணுக்குமேல் 14,443 பேரும் மதிப்பெண் பெற்றுள்ளனர். 6000 இடங்களுக்கு 300க்கு மேல்மதிப்பெண் பெற்றவர்கள் 20,000 பேர் என்று அல்லவா இருந்திருக்க வேண்டும். 107 மதிப்பெண் பெற்றவரும் மருத்துப்படிப்பில் சேருவதற்குத் தகுதியா னவர் என்பது தனியார் கல்வி வணிக மயத்திற்குத் துணை போவதல்லவா!
தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலிருந்து. 17,630 மாணவர்கள் நீட்தேர்வு எழுதினர். 2,557 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் 3 பேர் மட்டுமே 400 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றனர். இவர்கள் மூவரும் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆங்கில வழியில் படித்தவர்கள். 300 முதல் 400 வரை மதிப்பெண் பெற்றவர்கள் 29 பேர். இவர்களில் 5 பேர் தமிழ் வழியிலும் 24 பேர் ஆங்கில வழியிலும் படித்தவர்கள். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களில் ஏழு பேருக்கு மட்டுமே மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. 6000 இடங்களில் பத்து இடங்கள் தவிர்த்து மற்ற இடங்களெல்லாம் தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களே கைப்பற்றுவார்கள். என்பது சமூக நீதியைக் குழிதோண்டிப் புதைப்பதல்லவா! எனவே தான், சமூக நீதிக்கான மருத்துவர் சங்கம் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 504 விழுக்காடு இடங்களை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்துள்ளது. நீட்தேர்வு முறையை ஒழிப்பதே இக்கொடுமைக்கு நிரந்தரத் தீர்வாகும்.
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு நீட்தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களில் 60 விழுக்காட்டினர் பன்னிரெண்டாம் படிப்பை முடித்த பின் ஓராண்டு, அல்லது இரண்டாண்டு தனியார் நீட் பயிற்சி நிறுவனத்தில் இரண்டு இலக்கம் , மூன்று இலக்கம் என்று பணம் செலுத்திப் படித்தவர்களே ஆவர். தனியார் நீட் பயிற்சி நிறுவனங்கள் பெரிய நகரங்களில் மட்டும் இருப்பதால் ஊரகப் பகுதி மாணவர்களால் இவற்றில் படிக்க முடியாது. சிற்றூர்களிலும் நகரங்களிலும் உள்ள ஏழை மாணவர்களாலும் இவற்றில் இவ்வளவு பணம் செலுத்திப் படிக்க முடியாது. நீட் தனிப்பயிற்சிக்காக வெளி மாநிலங்களுக்கும் பலர் சென்று படிக்கின்றனர். எல்லா வகையிலும் உயர்கல்வி மேலும் மேலும் தனியார்மயமாகவும் வணிகமயமாகியும் வருகிறது.
பன்னிரண்டாம் வகுப்பின் தொடக்கத்திலிருந்தே நீட்தேர்வுக்கான பயிற்சியும் பெறுவதால் உயிரியல், வேதியியல், இயற்பியல் பாடங்களை முழு ஈடுபாட்டுடன் பயில இயலாமல் போகிறது. இதனால் பொதுத்தேர்வில் இப்பாடங்களில் போதிய மதிப்பெண் பெறுவதில்லை. அதனால் மருத்துவப்படிப்பில் இடம் பெறாத எண்ணற்ற மாணவர்கள் நல்ல கலை அறிவியல் கல்லூரிகளிலும் இடம்பெற முடியாத அவல நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
நீட்தேர்வு முறை தாய்மொழி வழிக் கல்வியை மேலும் பின்னுக்குத் தள்ளுகிறது. நீட்தேர்வை எந்த மொழியில் எழுதினார்கள் என்ற விவரம் கீழே தரப்பட்டுள்ளது.
2019ல் நீட்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் மொழிவாரியாக
எண் மொழி எண்ணிக்கை விழுக்காடு
1 ஆங்கிலம் 12,04,968 79.31
2 இந்தி 1,79,857 11.84
3 குசராத்தி 59,395 3.91
4 வங்காளம் 31,490 2.07
5 தமிழ் 31,239 2.06
6 அசாமி 4,750 0.31
7 மராத்தி 2,305 0.15
8 உருது 1,858 0.12
9 தெலுங்கு 1,796 0.12
10 கன்னடம் 1,017 0.07
11 ஒடிசா 700 0.05
மருத்துவக் கல்வி வணிக மயமாவதைத் தடுக்கவும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஒளிவுமறைவு அற்ற மாணவர் சேர்க்கை நடைபெறுவதை உறுதி செய்யவும், தகுதியான மாணவர் மட்டும் மருத்துவக் கல்லூரியில் சேருவதை உறுதி செய்யவும் நீட்தேர்வு முறை கொண்டு வருவதாகக் கூறப்பட்டது. இந்திய அளவில் நீட்தேர்வு நடப்புக்கு வந்தபின் கடந்த நான்கு ஆண்டுகளில் இந்த நோக்கங்கள் படுதோல்வி அடைந்துள்ளன என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. எனவே நீட்தேர்வு முறை உடனடியாக நீக்கப்பட வேண்டும்.
நீட்தேர்வின் மூலநோக்கம் கல்வியில் மாநில உரிமையைப் பறிப்பதே ஆகும். தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் உரிமையை மறுப்பது கூட்டாட்சி முறைக்கு எதிரானதாகும். தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க பல முனைகளிலும் போராட வேண்டியிருந்தாலும், நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதும் முதன்மை என்று தொடர்ந்து போராடுவோம்.