cho ramasamy 400பல்துறைத் திறனாளர்-“துக்ளக்” இதழின் ஆசிரியர் சோ.இராமசாமி அவர்கள், மூச்சுத் திணறலுக்கும் மாரடைப்புக்கும் ஆளாகி, 7.12.16 புதன் காலை 4 மணிக்குத் தம் 82 ஆம் அகவையில் மறைந்தார் என்பதை வருத்தத் துடன் அறிவித்துக் கொள்கிறோம்.

பழைய செங்கற்பட்டு மாவட்டத்தில் ஒரு பெருநிலக் கிழார் குடும்பத்தில் பிறந்தவர் சோ.இராமசாமி.

கல்வித் தகுதியால் வழக்குரைஞர் என்றாலும், அவர் ஓர் இதழ் ஆசிரியர், நாடக நடிகர், திரைப்பட நடிகர், அரசியல் திறனாய்வாளர், நறுக்குத் தெறித்தாற் போல் வினாவுக்கு விடை தரும் துணிச்சல்காரர் என்பவை அவர் பெற்றிருந்த பல்துறைகளைச் சார்ந்த திறமைகள்.

1975-76இல் இந்திராகாந்தி அவசரகால ஆட்சியை (Emergency) அறிவித்தபோது-அவருடைய ஆட்சியைக் கடுமையாகக் கண்டனம் செய்தவர். “துக்ளக் இதழ் அட்டைப்படத்தில் இரண்டு கழுதைகளின் படத்தை வெளியிட்டு அவை பேசிக் கொள்ளுவது மாதிரி திற னாய்வுக் கண்டனம் தெரிவித்தார், சோ.இராமசாமி.

அவர் பிறப்பால் பார்ப்பனர். மிகவும் உண்மையான பார்ப்பனியக் கொள்கை களை விளக்கி, மகாபாரதம், இராமாயணம் இவற்றை இளந்தலைமுறையினரிடையே பரப்பி வந்தார். அது தான் உண்மையான தொண்டு.

தமிழின-திராவிட இன உணர்வு கொண்ட சிலரைப் போல்-பார்ப்பன இன நலம் காப்பதில்-வடமொழியின் நலன் காப்பதில் வல்லவர், சோ.இராமசாமி.

அதே நேரத்தில் முதலமைச்சராக இருக்கும் போதும், இல்லாத போதும் நட்பு முறையில் தி.மு.க. தலைவர் கலைஞரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் மறைந்த செயலலிதாவும் அவரை அழைத்துப் பேசும் அளவுக்குத், தம் திறமையை வளர்த்துக் கொண்டவர், அவர்.

தந்தை பெரியார் மறைந்த உடன் காரில்-திருச்சி பெரியார் மாளிகை, எழும்பூர் பெரியார் திடல் இவற்றை யெல்லாம் பார்வையிட்டுத் தம் கருத்தைத் “துக்ளக்” இதழில் பதிவு செய்தவர். ஆனால் எவரிடமும் தன் நிலை பாட்டை மாற்றிக் கொள்ளாதவர்; ஆர்.எஸ்.எஸ்.-இந்துத்துவா கொள்கைகளைக் காப்பதை வாழ்வின் இலக்காகக் கொண்டவர்.

வகுப்புவாரி விகிதாசார இடஒதுக்கீடு கொள்கையை முழுமையாக எதிர்ப்பவர். இது பற்றித் தம் நண்பர் களுடன் உரையாடிக் கொண்டிருந்த போது, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் க.சுப்பு அவருடன் இருந்தார்.

“மண்டல் கமிஷன்” என்பது பற்றி மற்ற நண்பர் களுடன் சோ.இராமசாமி பேசிக் கொண்டிருந்த போது, க.சுப்பு குறுக்கிட்டு, “மண்டல் கமிஷன்” அமைக்கப்பட எல்லாம் செய்தது ஆனைமுத்து என்பவர்தான். மற்றபடி கருணாநிதியோ, வீரமணியோ அல்ல” என்று சான்றோடு விவரமாகச் சொன்னதை-தம் “துக்ளக்” இதழில் வினா- விடைப் பகுதியில் வெளியிட்டிருந்தார். நான் அதைப் படிக்கவில்லை.

அய்.என்.டி.யு.சி. (INTUC) அலுவலகத்தில், வாழப்பாடி கூ.இராமமூர்த்தி அவர்களோடு நான் பேசிக் கொண் டிருந்தபோது, அங்கே வந்த க.சுப்பு அவர்கள் அதை என்னிடம் சொன்னார்.

என்ன சான்று? என்ன விவரம்?

தந்தை பெரியார் நூற்றாண்டு விழா, லோகியா 70ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா- மற்றும் இந்தி நூல் வெளியீடு-30,000 பேர் கொண்ட வகுப்புரிமைப் பேரணி 23-3-1979 அன் ஃபெரோஷ்லா கோட்லா மைதானத் திலிருந்து புறப்பட்டு, 8 கி.மீ. நடந்து 30,000 பேரும் போட் கிளப்பில் கூடி, ராம் அவதேஷ்சிங் முன்மொழிய, வே.ஆனைமுத்து தலைமையேற்க-துணைப் பிரதமர் பாபு ஜெகஜீவன்ராம் விழாவைத் தொடங்கி வைக்க, அமைச்சர் ராஜ் நாராயணன் “இந்தி” நூலை வெளியிட பகல் 10 முதல் இரவு 7 மணிவரை நடந்த பேரணியை-விழாவை நேரில் கண்டு பூரித்தவர்கள்: 1) இரா.குசேலர், 2) முனைவர் மு.நாகநாதன், 3)க.சுப்பு, 4) டி.என்.அனந்தநாயகி, 5) காஞ்சி அரங்க.சானகிராமன் ஆகிய மற்ற கட்சியினரும், மா.பெ.பொ.க. தோழர்கள்-தாய்மார்கள் 200 பேருமே ஆவர்.

இதை இங்கே ஏன் குறிப்பிடுகிறேன்? “வசிஷ்ர் வாயால் பீஷ்மர் பட்டம் பெறுவது பெருமை என்று மூடன், நினைப்பது போல-சோ, தம் ‘துக்ளக்’ ஏட்டில் என்னைப் பற்றி ஒருவரி எழுதிவிட்டார் என்பதற்காக அல்ல. நிற்க.

“துக்ளக்” ஆசிரியரும் தம் ஆருயிர் கணவருமான சோ.இராமசாமி அவர்களின் மறைவால் பேரிழப்புக்கு ஆளாகியுள்ள அவருடைய மனைவி சௌந்தரா அம்மை யார், மகள் சிந்துஜா, மகன் சிறீராம் ஆகியோர்க்கும், உறவினர்க்கும் மனங்கசிந்த இரங்கலை, மா.பெ.பொ.க. சார்பில் உரித்தாக்குகிறேன்.

வாழ்க துக்ளக் இராமசாமி புகழ்!

Pin It