1992 திசம்பர் 6 அன்று அயோத்தி யில் பாபர் மசூதி தகர்க்கப்பட்டது தொடர் பான வழக்கு முடிந்து போன ஒன்றுதான் என்று எல்லோரும் எண்ணிக் கொண் டிருந்த நிலையில், 19.4.2017 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.சி. கோஷ், ரோகின்டன் எஃப். நாரிமன் ஆகியோ ரைக் கொண்ட அமர்வு அந்த வழக்குக்குப் புத்துயிரூட்டியுள்ளது.
நீதிபதிகள் பி.சி. கோஷ், நாரிமன் ஆகி யோர் அளித்த நாற்பது பக்கங்கள் கொண்ட தீர்ப்பில், “25 ஆண்டுகளுக்குமுன் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடித்தளமாக விளங் கும் மதச்சார்பின்மையை அழிக்கும் தன் மையில் நடந்த இக்குற்றத்திற்குத் தண்ட னை வழங்கப்பட வேண்டும். வானமே இடிந்து வீழ்வதாயினும் நீதி நிலைநாட்டப்படும்” என்று கூறியுள்ளனர்.
இத்தீர்ப்பின் மூலம் 2001 மே 4 அன்று ரேபரேலி சிறப்பு நீதிமன்றம் (வாஜ்பாய் பிரதமராக இருந்த போது) எல்.கே. அத்வானி, அசோக் சிங்கால், கிரிராஜ் கிஷோர், முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங், வி.எச். டால்மியா, உமாபாரதி, வினய் கட்டியார், சாத்வி ரிதம்பரா உள்ளிட்ட 21 பேரை பாபர் மசூதி இடிப்பு சதிக்குற்ற வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டது செல்லாததாகிவிட்டது. இவர்கள் மீதான சதிக்குற்ற வழக்கை இரண்டு ஆண்டுகளுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இப்போது ஆணை யிட்டுள்ளது.
25 ஆண்டுகளாக இந்த வழக்கு இழுத்தடிக்கப் பட்டு வருவதைக் கருத்தில் கொண்டு, உச்சநீதிமன்றம் தனக்குள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, அரச மைப்புச் சட்ட விதி 142இன்கீழ் இத்தீர்ப்பை வழங்கி யுள்ளது. தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக் கடைகளை உடனடியாக அகற்றுமாறு இந்த 142ஆவது விதியின் அடிப்படையில்தான் உச்சநீதிமன்றம் தீர்ப் பளித்தது.
பாபர் மசூதி தகர்க்கப்பட்ட 1992 திசம்பர் 6 அன்று இரண்டு முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப் பட்டன. வழக்கு எண்.197 என்பது எண்ணிலடங்காத - பெயர் தெரியாத கரசேவகர்கள் மீதானது. வழக்கு எண்.198 அத்வானி உள்ளிட்ட பா.ச.க., விசுவ இந்து பரிஷத், சிவசேனை, பஜ்ரங்தள் ஆகிய அமைப்புகளின் தலைவர்கள், கரசேவகர்களை வெறிகொள்ளும் படியாகப் பேசினார்கள் என்பதாகும். மத்தியப் புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.) 1993 அக்டோபரில் இந்த இரண்டு வழக்குகளையும் ஒரே வழக்காக ஆக்கியதுடன், அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் மீது சதிக்குற்றம் (ஊடிளேயீசையஉல) செய்ததாக வழக்கைப் பதிவு செய்தது.
ஆனால் 1997இல் அலகாபாத் உயர்நீதிமன்றம் இந்த வழக்கை இரண்டாகப் பிரித்தது. தலைவர்கள் மீதான சதிக்குற்றவழக்கு ரேபரேலி நீதிமன்றத்திலும் பெயர் தெரியாத கரசேவகர்கள் மீதான வழக்கு லக்னோ நீதிமன்றத்திலும் விசாரிக்கப்பட வேண்டும் என்று ஆணையிட்டது.
19.4.2017 அன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.சி. கோஷ், நாரிமன் அளித்த தீர்ப்பில், இவ்விரு வழக்குகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு லக்னோ நீதிமன்றத்தில் ஒரே வழக்காக விசாரிக்கப்பட வேண்டும்; நாள்தோறும் விசாரணை நடத்தி இரண்டு ஆண்டுகளுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும்; வழக்கு விசாரணையை நடத்தும் நீதிபதிகளை எக்காரணம் கொண்டும் பணியிட மாற்றம் செய்யக்கூடாது; புதிய வழக்காகப் பதிவு செய்யாமல் ஏற்கெனவே நடந்த விசாரணையின் தொடர்ச்சியாக இவ்வழக்கு விசாரணை நடைபெற வேண்டும் என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளனர்.
மேலோட்டமாகப் பார்த்தால் உச்சநீதிமன்றம், பாபர் மசூதி இடிப்பு வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று கூறியிருப்பது பா.ச.க.வுக்கு ஒரு பின்னடைவு போல் தோன்றும். சதிக்குற்ற வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட சங்பரிவாரங்களின் தலைவர்கள் மீண்டும் குற்றவாளிக் கூண்டில் நிற்கவைக்கப்பட்டிருப்பது இந்துத்துவ ஆதிக்கத்துக்கு ஒரு தலைக்குனிவு அல்லவா என்று நினைக்கலாம். ஆனால் எல்.கே. அத்வானிக்குத் தவிர வேறு எவருக்கும் இழப்பு இல்லை. 1989 முதல் 1992இல் பாபர் மசூதி இடிக்கப்படும் வரை, பாபர் மசூதியை இடித்து இராமஜென்ம பூமியை மீட்பது என்கிற போராட்டத்தின் தன்னிகரற்றத் தலைவராக அத்வானி திகழ்ந்தார். இந்துத்துவக் கோட்பாட்டின்கீழ் இந்துக்களின் வாக்குகளை ஒன்றுதிரட்டிய பெருமை அத்வானிக்கே உரியதாகும் என்று கருதப்பட்டது. ஆனால் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் 1998 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளில் தில்லியில் பா.ச.க. ஆட்சி அமைத்த போது, அத்வானி “வில்லனாக”க் கருதப்பட்டு, “எல்லோ ருக்கும் நல்லவர்-இனியவர்” என்று கூறப்பட்ட ஏ.பி. வாஜ்பாய் பிரதமர் பதவியை அத்வானியிட மிருந்து பறித்துக்கொண்டார்.
2014ஆம் ஆண்டிலேனும் பிரதமராகலாம் என்ற கனவில் இருந்தார் அத்வானி. ஆனால் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே, நரேந்திர மோடி தன்னைப் பிரதமர் வேட்பாளராக அறிவித்துக் கொண்டதன் மூலம் அத் வானியின் பிரதமர் கனவைத் தகர்த்தார். நரேந்திர மோடி பிரதமரானதும் ஆட்சியிலும் கட்சியிலும் மூத்த தலைவர்களை முற்றிலுமாக ஓரங்கட்டினார். 2017 சூலையில் பிரணாப் முகர்ஜியின் குடியரசுத் தலைவர் பதவிக் காலம் முடிந்ததும், தான் குடியரசுத் தலைவ ராகலாம் என்ற கனவில் மிதந்து கொண்டிருந்தார் அத்வானி. ஆனால் உச்சநீதிமன்றத்தின் ஏப்பிரல் மாதத் தீர்ப்பு அத்வானி மீதான சதிக்குற்றவழக்கிற்குப் புத்து யிரூட்டியிருப்பதால், அத்வானியின் இறுதிக்காலக் கனவும் சுக்குநூறாகத் தகர்ந்துவிட்டது.
இத்தீர்ப்பின்படி நடுவண் அமைச்சராக உள்ள உமாபாரதியும், பாபர் மசூதி தகர்க்கப்பட்ட போது உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்தவரும், இப்போது இராஜஸ்தான் மாநிலத்தின் ஆளுநராக இருப்பவருமான கல்யாண் சிங்கும் சதிக்குற்ற வழக்கில் இருக்கின்றனர். நெறிசார்ந்த அரசியல் மரபின்படி, இவர்கள் இருவரும் தாமாகவே முன்வந்து தங்கள் பதவிகளிலிருந்து விலக வேண்டும். ஆ. இராசா, லாலுபிரசாத் ஆகியோர் மீது குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்ட போது, அவர்கள் பதவி விலக வேண்டும் என்று வாய்கிழிய கூச்சலிட்டு நாடாளுமன்றத்தில் கலவரம் செய்த பா.ச.க. உமாபாரதி அமைச்சர் பதவியில் நீடிக்கலாம் என்று வெட்க உணர்ச்சி இல்லாமல் இப்போது கூறுகிறது. பல குற்ற வழக்கு களில் சிக்கியுள்ள யோகி ஆதித்தியநாத்தை உ.பி.யின் முதலமைச்சராக்கியுள்ளது பா.ச.க. இதுதான் பா.ச.க. வின் “அரசியல் தர்மம்”.
பாபர் மசூதி இடிப்பு தொடர்பான சதிக்குற்ற வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருப்பது பற்றி பா.ச.க. எள்ளளவும் கவலைப்படவில்லை. ஏனெனில் 25 ஆண்டுகளாக இந்த வழக்கை இழுத்தடித்து அதை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்ட பா.ச.க.வால் இன்னும் பல ஆண்டுகளுக்கு இழுத்தடித்துக் காலவெள்ளத்தில் கரைந்து போகும்படி செய்துவிட முடியும். சொத்துக் குவிப்பு வழக்கை செயலலிதாவால் இருபது ஆண்டுகள் இழுத் தடிக்க முடிந்தபோது, பா.ச.க.வுக்குப் பல தலைமுறை களுக்குத் தள்ளிப்போடும் ஆற்றல் இருக்கிறது என்பதை மறுக்க முடியுமா?
எந்தவொரு சூழ்நிலையையும் தனக்குச் சார்பாக மாற்றிக்கொள்ளும் சூழ்ச்சித்திறன் சங்பரிவாரங்களுக்கு உண்டு என்பதை 1925ஆம் ஆண்டு முதற்கொண்ட அதன் வரலாறு காட்டுகிறது. உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, இரண்டு ஆண்டுகளுக்குள் இந்த வழக்கின் தீர்ப்பில் அத்வானி உள்ளிட்டோர் குற்றவாளிகள் என்று தண்டிக்கப்பட்டாலும் அய்ந்து ஆண்டுகள் வரைதான் சிறைத்தண்டனை விதிக்க முடியும். அவ்வாறான தீர்ப்பு வந்தாலும் இந்துத்துவத் தலைவர்கள் உடனே சிறை யில் அடைக்கப்படமாட்டார்கள். ஏனெனில் இத்தீர்ப்பின் மீது பல அடுக்கு மேல்முறையீடு வாய்ப்புகள் உள்ளன. அந்த மேல்முறையீடுகளின் வழக்குகளின் விசாரணை பல ஆண்டுகள் நீடிக்கும். சதிக்குற்றம் சாட்டப்பட்ட 21 பேரில் 8 பேர் இறந்துவிட்டனர். எஞ்சியுள்ள 13 பேரும் வழக்கு விசாரணையின் நெடியகாலத்திற்குள் இறந்து போவார்கள். இவர்கள் அனைவரும் இந்து மதத்தின் பெருமையை நிலைநாட்டுவதற்கான போரில் தங்கள் இன்னுயிரை ஈந்த மாபெரும் ஈகியர்களாகப் போற்றப் படுவார்கள். வி.டி. சாவர்கர், தீன்தயாள் உபாத்தியாயா போன்றவர்கள் இப்போது இத்தன்மையில்தான் மாபெரும் தலைவர்களாக சங்பரிவாரங்களால் போற்றப்படு கின்றனர்.
பாபர் மசூதி இடிப்பு தொடர்பான சதிக்குற்ற வழக்கின் தீர்ப்பு 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் வந்து விட வேண்டும் என்று பா.ச.க. விரும்புகிறது. அத்தீர்ப் பின் முடிவு எப்படியிருந்தாலும்-அத்வானி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்ப்டடால் அது இராமஜென்மபூமியின் வெற்றி என்றும், தண்டிக்கப்பட்டால் இராமஜென்மபூமி யில் இராமனுக்குக் கோயில் கட்டாமல், பாக்கித்தானிலா கட்டமுடியும் என்றும், இந்துக்களின் உணர்ச்சியைத் தூண்டி, வெறியூட்டி அணிதிரட்டி தேர்தலில் வாக்கு களாக மாற்றி வெற்றி பெற பா.ச.க. முனையும்.
வாஜ்பாய் தலைமையில் பா.ச.க. நடுவண் அரசில் ஆட்சிக்கு வந்தது முதல் அயோத்தியில் இராமனுக்குக் கோயில் கட்டும் கோரிக்கையை ஓரங்கட்டி வைத்திருந்தது. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் நாட்டின் வளர்ச்சி, ஊழல் ஒழிப்பு, முழக்கத்தை முன்வைத்து மோடி தலைமையில் பா.ச.க. வெற்றி பெற்றது. இப்போதே இம்முழக்கங்களின் சாயம் வெளுத்துவிட்டது. 2019இல் இம்முழக்கங்கள் வெற்றிக்குக் கைகொடுக்காது. எனவே சங்பரிவாரங்கள் அயோத்தியில் இராமனுக்குக் கோயில் கட்டுதல் என்ற முழக்கத்தை முன்னெடுத்திட லக்னோ நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பு இருப்பதாக மதச்சார்பின்மையில் நம்பிக்கைக் கொண்டிருப்போர் அஞ்சுகின்றனர்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கின் வரலாறும் - வஞ்சகமான காலத்தாழ்வும்
பாபர் மசூதியைத் தகர்த்த, பெயர் தெரியாத - எண்ணற்ற கரசேவகர்கள் மீதான வழக்கு லக்னோ நீதிமன்றத்திலும், கரசேவகர்களின் உணர்வுகளைத் தூண்டும் வகையில் பேசியதாகக் குற்றம் சாட்டப்பட்ட தலைவர்கள் மீதான வழக்கு ரேபரேலி நீதிமன்றத் திலும் நடந்துவந்தன. கரசேவகர்கள் மீதான வழக்கில் இதுவரை 195 பேர் சாட்சியங்களாக விசாரிக்கப்பட் டுள்ளனர். மேலும் 800க்கும் மேற்பட்டோர் விசாரிக் கப்பட வேண்டியுள்ளனர். தலைவர்கள் மீதான ரேபரேலி வழக்கில் 57 பேர் சாட்சியங்களாக விசாரிக்கப்பட்டுள்ள னர். இன்னும் 105 பேர் விசாரிக்கப்பட வேண்டும்.
இவ்விரு வழக்குகளையும் ஒரே வழக்காக விசாரிக்க வேண்டும் என்று சி.பி.ஐ. வலியுறுத்தியதன் பேரில், உத்தரப்பிரதேச அரசு 2001 பிப்பிரவரியில் ரேபரேலி வழக்கை லக்னோ நீதிமன்றத்துக்கு மாற்றியது. ஆனால் அலகாபாத் உயர்நீதிமன்றம் தன்னிடம் இதற்கான முன் அனுமதியைப் பெறாமல் அரசு மாற்றியது தவறு என்று கூறி இவ்வாறு மாற்றப்பட்டது செல்லாது என்று அறிவித்தது. ஆயினும் மூன்று மாதங்களுக்குள் உ.பி. அரசு உயர்நீதிமன்றத்திடம் அனுமதி பெற்று ரேபரேலி வழக்கை லக்னோ நீதிமன்றத்துக்கு மாற்றிக் கொள்ள லாம் என்றும் கூறியது. அதனால் தலைவர்கள் மீதான வழக்கு ரேபரேலி நீதிமன்றத்திற்கே திரும்பியது.
2001 மே 4 அன்று ரேபரேலி நீதிமன்றத்தின் நீதிபதி எஸ்.கே. சின்ஹா, அத்வானி உள்ளிட்ட 21 தலை வர்களை இக்குற்ற வழக்கிலிருந்து விடுதலை செய்தார். அப்போது அத்வானி துணைப் பிரதமராக இருந்தார் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
அலகாபாத் உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டிய குறை பாட்டைக் களையுமாறு சி.பி.ஐ., 2001 சூன் 16 அன்று உ.பி. அரசுக்கு மடல் எழுதியது. சி.பி.ஐ.யின் கோரிக் கையை 2002 செப்டம்பர் 28 அன்று உ.பி. அரசு நிராகரித்தது. இக்கால இடைவெளியில் உ.பி. முதல்வ ராக இராஜ்நாத் சிங் இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
ரேபரேலி நீதிமன்றம் அத்வானி உள்ளிட்ட 21 பேரைச் சதிக் குற்றவழக்கிலிருந்து விடுவித்த மூன்று ஆண்டுகள் கழித்து - நடுவண் அரசில் வாஜ்பாய் தலை மையிலான பா.ச.க.வின் ஆட்சி முடிந்த பிறகு, 2004 நவம்பர் 2 அன்று சி.பி.ஐ., 21 பேர்விடுதலை செய்யப் பட்டதற்கு எதிராக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அதன்பின் ஆறு ஆண்டுகள் இந்த மேல் முறையீடு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தூங்கிக் கொண்டிருந்தது.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட அன்றே நடுவண் அரசு, நீதிபதி லிப்ரான் தலைமையில் அதைப் பற்றி ஆராய ஒரு குழுவை அமைத்தது. லிப்ரான் குழு 48 தடவை கள் நீட்டிப்பு வாங்கி 17 ஆண்டுகள் கழித்து, 2009இல் அதன் அறிக்கையை நடுவண் அரசிடம் அளித்தது. அந்த அறிக்கையில், “பாபர் மசூதி வளாகத்தில் திரண் டிருந்த கரசேவகர்களின் உணர்ச்சிகளைத் தூண்டும் வகையில் எல்.கே. அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, உமாபாரதி, சந்நியாசினி ரிதம்பரா முதலானோர் உரையாற்றியதால்தான் கரசேவகர்கள் வெகுண் டெழுந்து பாபர் மசூதியை இடித்தனர்” என்று திட்ட வட்டமாகக் கூறப்பட்டுள்ளது.
ஆனால், 2010 செப்டம்பர் 24 அன்று அலகாபாத் உயர்நீதிமன்றம் லிப்ரான் குழுவின் அறிக்கையைக் கருத்தில் கொள்ளாமல், இந்துத்துவ உணர்ச்சிக்கு ஆட்பட்டு மிகவும் கேடான ஒரு தீர்ப்பை வழங்கியது.
ரேபரேலி நீதிமன்றம் 21 பேரை விடுவித்து வழங்கிய தீர்ப்பை மறுஆய்வு செய்ய முடியாது என்று கூறிவிட்டது. மேலும் பாபர் மசூதியின் நடுவில் இருந்த கவிகை (Dome)யின் கீழ் உள்ள இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்று திட்டவட்டமாகக் கூறியது. பாபர் மசூதி இடிக்கப்பட்டதும் அந்த இடத்தில் மீண்டும் இராம்லாலா (குழந்தை இராமன்) சிலை நிறுவப்பட்டு தற்காலிகக் கோயில் 7.12.1992 அன்று அமைக்கப் பட்டு பூசை நடந்து வருகிறது.
1994 திசம்பர் 22-23 நள்ளிரவில் அய்ம்பது அறுபது பேர் கொண்ட இந்துமத வெறியர்கள் பாபர் மசூதியின் பூட்டை உடைத்து மசூதியில் குழந்தை இராமன் சிலையை நாட்டினர். அதற்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் 2010இல் சட்ட அங்கீகாரம் வழங்கி விட்டது. பாபர் மசூதி உள்ள இடத்தில்தான் இராமன் பிறந்தான் என்று நெடுங்காலமாக இந்துக்கள் நம்பு கிறார்கள் என்பதன் அடிப்படையில் இத்தீர்ப்பை வழங்கியதாக அலகாபாத் உயர்நீதிமன்றம் கூறியது.
மேலும் பாபர் மசூதி இருந்த 2.77 ஏக்கர் நிலத்தை மனுதாரர்களான குழந்தை இராமனுக்கும், நிர்மோகி அக்ஹாராவுக்கும் (Nirmohi Akhara) சன்னி வக்ஃபு வாரியத்துக்கும் பிரித்தளிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறியது. இம்மூன்று தரப்பினருள் எவரும் இவ்வாறு 2.77 ஏக்கர் நிலத்தைப் பிரித்தளிக்க வேண்டும் என்று கேட்காத நிலையில், நீதித்துறையின் நெறிமுறைக்கு எதிரான வகையில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டது. இத் தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளின் உள்நோக்கம், மசூதி யின் கவிகைகள் உள்ள இடத்தில்தான் இராமன் பிறந் தான்; அந்த இடத்தை இராமனிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்பதாகவே இருந்தது. மதச்சார்பின்மைக் கும் சனநாயகத்துக்கும் எதிரான இழிவான தீர்ப்பு இது.
2010ஆம் ஆண்டிலேயே அலகாபாத் உயர்நீதி மன்றம் பாபர் மசூதி இருந்த இடம்தான் இராமஜென்ம பூமி (இராமன் பிறந்த இடம்) என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டதால் அங்கே இராமனுக்கு மாபெரும் கோயில் கட்டப்பட வேண்டும் என்று பா.ச.க. உள்ளிட்ட இந்துத் துவவாதிகள் தொலைக்காட்சி விவாதங்களில் ஊளை யிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
2010 செப்டம்பர் 24 அன்று அலகாபாத் உயர்நீதி மன்றம் அளித்த இக்கேடான தீர்ப்பை எதிர்த்து சி.பி.ஐ. 2011 பிப்பிரவரியில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்தது. இந்த மேல்முறையீடு ஆறு ஆண்டு களுக்குமேல் உச்சநீதிமன்றத்தில் உறங்கிக் கொண்டி ருந்தது. மொத்தம் 16 ஆண்டுகள் மேல்முறையீட்டுப் படிநிலைகளிலேயே இந்த வழக்கு இழுத்தடிக்கப்பட்ட மைக்கு உ.பி. அரசும், நடுவண் அரசும், நீதித்துறை யும், சி.பி.ஐ.யும் இதில் பொறுப்புணர்வுடன் செயல்பட வில்லை என்று சொல்வதைவிட அத்வானி உள்ளிட்ட தலைவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத் துடனேயே செயல்பட்டுள்ளன என்பதே உண்மை யாகும்.
இக்கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ளது போல் 2011 பிப்பிரவரியில் உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ. செய்த மேல்முறையீட்டின் மீதான விசாரணை 6.4.2017 அன்று நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், ரோகின்டன் எஃப். நாரிமன் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. 19.4.17 அன்று இவ்விரு நீதிபதிகள், அத்வானி உள்ளிட்ட 13 பேர் மீதான சதிக்குற்ற வழக்கை இரண்டு ஆண்டுகளுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறினர்.
பாபர் மசூதி இருந்த இடம் யாருக்குச் சொந்தம்!
உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.சி. கோஷ், நாரிமன் ஆகியோர் 19.4.2017 அன்று அளித்த தீர்ப்பு, பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான குற்றவழக்காகும். ஆனால் பாபர் மசூதி இருந்த இடம் யாருக்குச் சொந்தம் என்பது குறித்த உரிமைஇயல் வழக்கு 1950 முதல் உச்ச நீதிமன்றத்தில் இருந்து வருகிறது. பாபர் மசூதி உள்ள இடம் 2016இல் மறைந்த ஹாசிம் அன்சாரி யின் பெயரில் பட்டா உரிமை இருக்கிறது. உ.பி. சன்னி வக்ஃபு வாரியத்தின் சார்பில் ஹாசிம் அன்சாரி பாபர் மசூதி இடத்தின் உரிமையைக் கோரி 1961இல் வழக்குத் தொடுத்தார்.
2010 செப்டம்பர் 24 அன்று அலகாபாத் உயர்நீதி மன்றம் பாபர் மசூதி இருந்த 2.77 ஏக்கர் இடத்தை மூன்று தரப்பினருக்கும் பிரித்து அளிக்க வேண்டும் என்று அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடுகள் செய்யப்பட்டன. இந்த மேல்முறை யீட்டு விண்ணப்பங்கள் மீதான விசாரணை 21.3.2017 அன்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர், நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், எஸ்.கே. கவுல் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்வந்தது.
அப்போது வஞ்சகமே வடிவாய்க் கொண்ட சுப்பிர மணியசாமி, “அயோத்தியில் இராமர் கோயில் கட்டும் பிரச்சனை குறித்த வழக்கு கடந்த ஆறு ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது; இப்பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணவேண்டும்” என்று நீதிபதிகளிடம் சொன் னார். அப்போது தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர், “மக்களின் உணர்வுபூர்வமான விவகாரம் என்பதால் அயோத்தி பிரச்சனைக்கு நீதிமன்றத்துக்கு வெளியே பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண முயற்சிக்க வேண்டும்; தேவைப்பட்டால் நானே நடுவராக இருக்கிறேன்” என்று கூறினார்.
தலைமை நீதிபதியின் இக்கருத்து சங்பரிவாரங் களுக்குப் பழம் நழுவிப் பாலில் விழுந்தது போன்ற தாகும். 1984இல் பாபர் மசூதி - இராமஜென்மபூமி சிக்கல் சங்பரிவாரங்களால் உருவாக்கப்பட்டது முதலே நீதிமன்றத்துக்கு வெளியில்தான் இதைத் தீர்க்க முடியும் என்று கூறி வருகின்றனர். வாஜ்பாய், அத்வானி உள்ளிட்ட அனைவரும், “பாபர் மசூதியின் இடத்தில் தான் இராமன் பிறந்தான் என்று இந்துக்கள் அனைவரும் நம்புகின்றனர்; இந்த நம்பிக்கை என்பது நீதிமன்றத் தின் சட்டவரம்புக்கு அப்பாற்பட்டது” என்று கூறிவரு கின்றனர்.
இந்நிலைப்பாட்டை பா.ச.க. 1989ஆம் ஆண்டி லேயே திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. 1989 நாடாளு மன்றத் தேர்தலுக்குமுன் சூன் 11 அன்று நடைபெற்ற பா.ச.க. தேசிய செயற்குழுவில், “பாபர் மசூதி உள்ள இடத்தில் இராமர் பிறந்தார் என்பது தொடர்பான பிரச்சனையை நீதிமன்றத்தில் சட்டத்தின் மூலம் தீர்க்க முடியாது. இந்துக்களின் நம்பிக்கை உணர்வை மதித்து, இராமஜென்மபூமியை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும். இது பேச்சுவார்த்தை மூலமோ, புதியதாகச் சட்டம் இயற்றுவதன் மூலமோ நிறைவேற்றப்பட வேண்டும். நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் இது முடியாது” என்று தீர்மானம் நிறைவேற்றியது.
பிரதமர்களாக இருந்த சந்திரசேகரும், பி.வி. நரசிம்ம ராவும், காஞ்சி சங்கராச்சாரி ஜெயந்திர சரசுவதியும் மேற்கொண்ட சமரச முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
பாபர் மசூதி சங்பரிவாரங்களால் தகர்க்கப்பட்டபின் 1992 திசம்பர்-1993 சனவரியில் மும்பையில் இசுலாமி யர்கள் மீது கொடிய தாக்குதல் நடத்தப்பட்டது. நரேந்திர மோடி குசராத்தின் முதலமைச்சராக இருந்தபோது 2002 பிப்பிரவரி - மார்ச்சு மாதங்களில் இந்தியா - பாக்கித்தான் பிரிவினையின் போது நடந்ததைவிட மிகக்கொடிய முறையில் முசுலீம்கள் தாக்கப்பட்டனர்; கொல்லப்பட்டனர். 2014இல் நரேந்திர மோடி பிரதம ரான பிறகு முசுலீம்கள் அச்சுறுத்தல்களுக்கும், தாக்கு தல்களுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும் உள்ளாக்கப் பட்டு வருகின்றனர். அண்மையில் உ.பி. சட்டமன்றத் தில் 403 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் பா.ச.க. ஒரு முசுலீமையும் வேட்பாளராக நிறுத்தவில்லை. இந்தியாவில் 17 கோடி மக்களாக இருக்கும் இசுலாமி யரின் வாக்குகள் எங்களுக்குத் தேவையில்லை என்று கூறி பா.ச.க. இசுலாமியர்களைப் புறக்கணிக்கிறது. மாட்டிறைச்சி உண்பவர்கள் என்று கூறி அவர்களைத் தாக்குகிறது. மொத்தத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தத்துவத் தந்தை எம்.எஸ். கோல்வால்கர், “இசுலா மியர்கள் இந்தியாவில் இரண்டாந்தரக் குடிமக்களாக வாழ்வதற்கு மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்” என்று கூறியதை நரேந்திர மோடி ஆட்சி தீவிரமாகச் செயல் படுத்தி வருகிறது.
எனவே சமஉரிமையோ, சமத்துவமோ இல்லாத நிலையில் இருக்கும் இசுலாமியர், பாபர் மசூதி - இராம ஜென்மபூமி வழக்கில் நீதிமன்றத்துக்கு வெளியில் நடைபெறக்கூடிய சமரசப் பேச்சுவார்த்தையில் இந்துத் துவ ஆதிக்கச் சக்திகளால் மிரட்டப்பட்டு, பாபர் மசூதி இடத்தைப் பறிகொடுக்கக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. எனவே உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் முன்மொழிந்துள்ள சமரசப் பேச்சு வார்த்தை என்பது இசுலாமியருக்கு முற்றிலும் எதிரான தாகவே இருக்கும். தலைமை நீதிபதி ஜெ.எஸ். கேஹரும் உச்சநீதிமன்றமும் தங்கள் பொறுப்பைத் தட்டிக்கழித்து, கட்டப்பஞ்சாயத்திடம் ஒப்படைப்பது மிகவும் கேடானதாகும். இந்தியாவில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? மதநம்பிக்கையின் ஆட்சியா?
காங்கிரசுக் கட்சி தொடர்ந்து பல ஆண்டுகளாகச் செய்துவந்த தவறுகளால் இன்று கலகலத்துக் கிடக்கிறது. இந்நிலையைப் பா.ச.க. நன்கு திட்டமிட்டுப் பயன்படுத்தி இந்தியா முழுவதும் தன் ஆதிக்கத்தை நிலைநாட்டி, தேர்தலில் வெற்றிகளைக் குவித்து வருகிறது. தமிழ்நாடு, கேரளம், மேற்குவங்காளம் ஆகிய மூன்று மாநிலங்களைத் தவிர, வேறு மாநிலங் களில் பா.ச.க.வுக்கோ, இந்துத்துவத்துக்கோ பெரிய அளவில் எதிர்ப்பு இல்லை. இம்மூன்று மாநிலங்களை யும் தன் ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவர அட்டூழியமான வழிமுறைகளில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
இத்தகைய அரசியல், சமூக, மதச்சார்புப் பின்னணி யில் 2019இல் நாடாளுமன்றத்திற்கு நடைபெறவுள்ள தேர்தலில், நரேந்திர மோடியின் ஒப்பற்ற ஆளுமை யின்கீழ், மேலும் கூடுதலான இடங்களுடன் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி, பாபர் மசூதி இருந்த இடம் இராமஜென்மபூமி தான் என்று நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றுவதன் மூலம் இராமனுக்கு மாபெரும் கோயிலைக் கட்டும் திட்டத்தைச் சங்பரிவாரங்கள் வைத்துள்ளன.
அயோத்தி நிலம் யாருடையதாக இருந்தாலும் அது இராமருக்குப் பரிசாக அளிக்கப்பட வேண்டும் என்று நடுவண் அமைச்சர் உமாபாரதி, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஜெ.எஸ். கேஹர் சமரசப் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணலாம் என்ற கருத்தை அறிவித்தபின் கூறியிருக்கிறார்.
எனவே சங்பரிவாரங்கள் பாபர் மசூதி-இராமஜென்ம பூமி பிரச்சனையில் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்க முடியாது என்று தொடர்ந்து கூறிவருகின்றன. நாட்டின் நலன் கருதி, இராமன் இந்துக்களுக்கான கடவுள் மட்டும் அல்ல; இந்தியர் அனைவருக்குமான தலைவர்; இந்தியக் கலாச்சாரப் பெருமிதத்தின் அடையாளம் என்பதை இசுலாமியர்கள் உணர்ந்து, ஏற்று, பாபர் மசூதி இடத்தை இராமர் கோயில் கட்டுவதற்கு ஒப்படைக்க வேண்டும் என்று கூறிவருகின்றனர். இது இசுலாமியர் மீது தொடுக்கப்படும் பாசிசம் ஆகும்.
பாபர் மசூதி-இராமஜென்ம பூமி சிக்கல் மட்டுமின்றி, ஆர்.எஸ்.எஸ். தலைமையின்கீழ் இயங்கும் நரேந்திர மோடியின் பாசிச ஆட்சி, எஞ்சியிருக்கின்ற சனநாயக நெறிகளையும், சகிப்புத்தன்மையையும், மதச்சார்பற்ற தன்மையையும், பல்வேறு தேசிய இனங்களின் - மொழிகளின் உரிமைகளையும், கருத்துச் சுதந்தரத் தையும் ஒழித்து, ஒரே இந்தியா, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒற்றை அதிகார மய்யம் என்கிற சர்வாதி கார ஆட்சியை நிலைநாட்டிட தீவிரமான நடவடிக்கை களை எடுத்து வருகிறது. எந்தவொரு நாட்டிலும் பாசிச ஆட்சி நீண்டகாலம் நிலைத்ததில்லை என்பது வரலாறு. மக்களின் பேரெதிர்ப்பால் மோடியின் ஆட்சியும், இந்துத் துவ ஆதிக்கமும் வீழும் என்பது உறுதி.
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் மசூதி கட்டப்படக்கூடாது. அதேபோன்று இராமன் கோயிலும் கட்டப்படக்கூடாது. சகிப்புத்தன் மையும் மதச்சார்பற்ற உணர்வும் நாட்டின் இன்றிய மையாத் தேவைகள் என்பதை உணர்த்தும் குறியீட்டு இடமாக அது திகழவேண்டும். அந்த இடம் தொல்லியல் துறையின் பொறுப்பில் பாதுகாக்கப்பட வேண்டும்.