என் பள்ளிப்பருவம் முதல் இன்றுவரை சோழகங்கம் (எ) பொன்னேரியைப் பார்க்கும் போதெல்லாம் - நினைக்கும் போதெல்லாம் நெஞ்சம் பதறும்! நான் பிறந்த மருதூரில் இருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த சோழகங்கம். கி.பி.1012 முதல் 1044-க்கு இடைப்பட்ட காலத்தில் மாமன்னர் இராசேந்திர சோழனால் வெட்டப்பட்ட இந்த ஏரி, தென் வடக்காக 16 மைல் நீளமும், கிழக்கு மேற்காக 6 மைல் அகலமும் கொண்டதாகும். இலால்குடிக்கு அருகில் இருந்து கால்வாய் வெட்டி இந்த ஏரிக்கு நீர்வரத்து செயதிருந்தான்அதிகாரங்களைப் பாடமாக்கி தனித்தாளாக திருக்குறளில் தேர்வு எழுதினால்தான் பட்டம் என்ற நிலை என்று வருகிறதோ, அன்றுதான் திருக்குறள் விளங்கும் - வளரும்” என்று விளக்கிப் பேசினேன்.

நான் பேசி உட்கார்ந்த உடனே ஒரு தோழர் என்னை அரங்குக்கு வெளியே அழைத்தார். ஏதோ திட்டித் தீர்க்க அழைக்கிறார் என எண்ணி வெளியே சென்றேன். “கை கொடுங்கள்” எனக் கூறினார். தயக்கத்துடனே கையை நீட்டினேன்.

“அய்யா நீங்கள் ஒருவர்தான் இருக்கும் நிலையை - என்ன செய்தால் நாளை குறள் வளரும் என்று உண்மையைப் பேசினீர்கள்” எனக் கூறி, வெகுவாகப் பாராட்டினார்.

மீண்டும் வீட்டிற்கு வாருங்கள் எனக் குறுகிய காலத்தில் அழைத்துத் தன் துணைவியரிடம் நன்கு அறிமுகப்படுத்தி விருந்தும் அளித்தார். என் இலண்டன் பயணம் குறித்து மிகவும் விளக்கமாகக் கேட்டு கணவன், மனைவி மற்றும் நண்பர்கள் மகிழ்ந்தனர். பொது வாகப் பேசிக்கொண்டிருந்த போதே நாங்கள் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் செலவில் வடலூர் அருகில் “வாலாஜா” என்ற பெரிய ஏரியைத் தூர் வாரி நன்கு செப்பனிட் டோம் என்று கூறி மகிழ்ந்தார். முத்துக்கிருட்டிணன் என்ற அருமைக் கணக்காயத் தோழர் இந்த ஏரி புத்துயிர் பெற, அப்போது கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த திரு. ககன்துப் சிங்பேடி, ஐ.ஏ.எஸ். மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு. துரைக்கண்ணு இவர்களின் அளவில்லாப் பணி மகத்தானது எனக் கூறினார். அப்படி அவர் கூறி முடிக்கும் முன்பே,

“ஏங்க உங்களுக்கு இந்த வாலாஜா ஏரிதான் தெரிந்ததா? வரலாற்றுப் புகழ்பெற்ற மாமன்னர் இராசேந்திர சோழனால் வெட்டப்பட்ட சோழகங்கம் எனும் மாபெரும் ஏரி தெரியவில்லையா” எனக் கேட்டேன், முன்பின் பழக்கமில்லாத் தோழரிடம்! அவரும் சளைக்காமல், “ஏங்க, எங்க கண்ணுக்கு வாலாஜா ஏரிதான் தெரிந்தது. உங்க கண்ணுக்கு சோழகங்கம் ஏரி தெரியுதுல - நீங்க வெட்டுங்க” என்றார். எப்படி முடியும் என்ற வேகத்தில், “என்ன கிண்டல் செய்றீங்களா? அல்லது ஏதாவது மந்திரம் சொல்லி ஏரியை வெட்றதா?” எனக் கேட்டேன்.

“மந்திரமும் வேண்டாம் - மாயமும் வேண்டாம் - அரசியல், விளம்பரம் தேடாத சிலரை ஒரு குழுவாக அமையுங்கள். அவர்களுக்கு ஒரு பொறுப்பளித்து ஒரு தன்முகவரி தாள் கற்றை (Letter Pad) தயாரித்து உங்கள் கோரிக்கைகளை எழுதி, சட்டமன்ற - நாடாளு மன்ற உறுப்பினர்களிடம் பரிந்துரை பெற்று, மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்து, அவரது பரிந்துரையுடன் என்.எல்.சி. (NLC) -க்கு அனுப்புங்கள். பிறகு நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். இந்த என்.எல்.சி. தனது மொத்த வருவாயில் 2 விழுக்காடு பணத்தை சமுதாய மேம்பாட்டிற்காகச் செலவிட வேண்டும் என்பது விதி. அந்த நிதி மூலம் சோழகங்கத்தை மீண்டும் புத்துயிர் பெறச் செய்துவிடுவோம்” என்று நண்பர் முத்துக் கிருஷ்ணன் கூறியதைக் கேட்ட உடனே, நான் வான வெளியில் பறந்தேன். 71 வயதாகும் எனக்கு, எம்.ஏ., பி.எல். படித்த எனக்கு, பல அரசியல் பொருளியல் சமுதாய இயல் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட எனக்கு, இந்தப் பெரும் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் ஆண்டு நிகர லாபத்தில் 2 விழுக்காட்டை C.S.R. Corporate Social Responsibility என்ற கணக்கில் சமுதாய நல வளர்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டும் என்ற விதி சிறிதும் தெரியாமல் இருந்ததற்கு மிகவும் வெட்கமும், வேதனையும் பட்டேன்.

அன்றிலிருந்து அதே கனவு! அதே வேலை! இந்தப் பொன்னேரி (எ) சோழகங்கம் ஏரி மீட்புக் குழுமத்திற்குச் சரியான ஆள் தேடும் வேலை சில நாள்கள் நடந்தன. பிறகு மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பம் தயாரித்தேன். இந்தக் குழுவுக்குத் தலைவராக பொறி யாளர் ஆர். மோகன் என்பவரை ஈடுபடுத்தி நான் செயலாளராகச் செயல்படுகிறேன். செயங்கொண்டம், காட்டுமன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிதம்பரம் தொகுதி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர்களிடம் தக்க பரிந்துரை பெற்று - விண்ணப்பத்தை மாவட்ட ஆட்சியரிடம் மார்ச் மாதம் கொடுத்தோம், நானும் நண்பர் அரங்க. இளவரசன் அவர்களும். மிகவும் ஆர்வத்துடன் பல விளக்கங்களைக் கேட்ட மாவட்ட ஆட்சியர் திருமதி. விசயலக்குமி, ஐ.ஏ.எஸ். மின்னல் வேகத்தில் சுமார் ஒரே மணி நேரத்தில் பரிந்துரை செய்து என்.எல்.சி.க்கு அனுப்ப உத்தரவிட்டது வியப்பே!

வாலாஜா ஏரியின் கதாநாயகன் - முன்னாள் கடலூர் மாவட்ட ஆட்சியர் - இந்நாள் வேளாண்துறைச் செயலர் திரு. ககன்தீப்சிங் பேடியைச் சந்தித்து, இந்த சோழகங்கம் மீண்டும் உயிர்ப் பெற வழிவகைகளைக் கேட்டறியும் பொருட்டு அவரைத் தலைமைச் செயலகத்தில் சந்தித்தேன். மிகவும் ஈடுபாட்டுடன் விவரங்களைக் கேட்டறிந்து வழிவகைகளைக் கூறினார். இதில் நெய்வேலியைவிட அரியலூரில் உள்ள சிமெண்ட் கம்பெனிகளைப் பயன்படுத்தி இந்த ஏரியைச் சீர் செய்யலாம் எனக் கூறியதோடு, நாளையே நான் மாவட்ட ஆட்சியருக்குத் தொலைப்பேசி செய்கிறேன் எனக்கூறி என் விண்ணப்பத்தின் நகலையும் எடுத்துக் கொண்டார். ஆனால் சில நாள்களிலேயே மாவட்ட ஆட்சியர் பணி இடம் மாற்றப்பட்டார். அதனால் திரு. ககன்தீப்சிங் பேடி, ஐ.ஏ.எஸ். கூறியபடி மீண்டும் ஒரு விண்ணப்பம் தயாரித்து புதிய ஆட்சியர் டாக்டர் டி.ஜி. வினெய், ஐ.ஏ.எஸ். அவர்களிடம் நானும் நண்பர் அரங்க. இளவரசனும் 12.7.2019-இல் கொடுத்தோம். எங்களை அமரவைத்து சுமார் அரை மணிநேரம் எல்லா விவரங்களையும் கேட்டார். மனநிறைவுடன் வெளியில் வந்தோம்.

இந்த ஏரி புத்துயிர் பெற பல காலமும், பல அமைப்புகள் கோரி வந்தன. என்றாலும் அலுவலக முறைப்படி, அதிகார மையத்தில் நான் செயல்பட்டேன். 12.7.2019-இல் நான் விண்ணப்பம் கொடுத்த 4 நாள்களில் மாவட்ட ஆட்சியர் ஏரியைப் பார்வை யிட்டார். பார்வையிட்ட 5 நாள்களில் சோழகங்கத்தைத் தூர் வாரும் பணியை 21.7.2019-இல் தொடங்கி வைத்துள்ளார். ஆயினும், இப்போதைக்கு இந்த ஏரியை ஆழப்படுத்தும் மண் தஞ்சை-சென்னை 4 வழிச் சாலைக்குப் பயன்படுத்தப்படுகிறது.

ஏரியின் 245-76 கி.மீ. தூரம் உள்ள கரையைப் பலப்படுத்தி, மரஞ்செடி கொடிகளை நட வேண்டும். இந்தப் பூங்காக்களில் சிறார்களுக்கான ஊஞ்சல் போன்ற வற்றைப் போட வேண்டும். இப்படி செய்தால் இது ஒரு சிறந்த பறவைகள் சரணாலயமாகவே மாறும்.

இந்த ஏரியின் அருகில் உள்ள மாமன்னர் இராசேந்திர சோழனால் கட்டப்பட்ட கோயில் உலகப் புகழ்பெற்ற வரலாற்றுச் சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைக் காண வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அணிவகுக்கின்றனர். இந்தப் பயணிகள் சில நாள்கள் தங்கி, இந்த ஏரி மற்றும் இயற்கைச் சூழலில் பறவைகள் சரணாலயத்தைக் கண்டு மகிழ்வர். இது அரசுக்கும் நல்ல வருவாயைத் தரும்.

எல்லாவற்றுக்கும் மேலாக வானம் பார்த்த பூமியாக உள்ள இந்த அரியலூர் பகுதி இந்த ஏரி மூலம் ஆண்டுக்கு முப்போகம் பயிரிடப்பட்டுப் பொன்விளையும் பூமியாகவே மாறும். மேலும் ஏரியைச் சுற்றி உள்ள எத்தனையோ ஊர்களின் மக்களும், கால்நடை களும், மற்ற உயிரினங்களும் நிரந்தரமாகக் குடிநீர் பெறுவர். இந்த ஏரியால் இந்தப் பகுதி நீர்வளத்தால் - நில வளத்தால் ஒரு சிறு சொர்க்கமாகவே மாறும்.

1000 ஆண்டுகளுக்கு முன் மாமன்னர் இராசேந்திர சோழனால் வரையப்பட்ட இந்தச் சோழகங்கத்தின் புகழ், தமிழ்நாட்டு அரசு மூலம் நம்மால் மீண்டும் புத்துயிர் பெற எழுதப்பட வேண்டும்.

இந்தச் சோழகங்கம் எனும் பொன்னேரி மீண்டும் புத்துயிர் பெற இதைப் படிக்கும் அனைவரும் தமிழக அரசுக்கு உரிய முறையில் வேண்டுகோள் கொடுத்து இந்த வரலாற்றுச் சாதனையை படைத்திட அன்புடன் அழைக்கிறேன்.

Pin It