தமிழ்நாட்டில் பொதிகை மலையில் தோன்றி 120 கி.மீ. பாய்ந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், இராமநாதபுரம் ஆகிய மாவட்ட மக்களின் தண்ணீர் தேவைக்குத் தாயாக விளங்கி வருகிறது, தாமிரபரணி ஆறு.

திருநெல்வேலியிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலை வில் உள்ள கங்கைகொண்டானில், தாமிரபரணி ஆற்றின் கரையில் தமிழ்நாடு அரசின் தொழில் வளர்ச்சி நிறுவனமான “சிப்காட்”டில் அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனமான கொகோ-கோலா, பெப்சி கோலா குளிர்பான ஆலைகள் உள்ளன. கோக் நிறுவனம் ஒரு நாளைக்கு 18 இலட்சம் லிட்டர் நீரை ஒரு லிட்டர் நீர் 3.75 காசு விலையிலும், பெப்சி நிறுவனம் 15 இலட்சம் லிட்டர் நீரை ஒரு லிட்டர் நீர் 5.62 காசு விலையிலும் தாமிரபரணி ஆற்றிலிருந்து உறிஞ்சி எடுத்துக் கொள் கின்றன. மக்களின் குடிநீர் தேவைக்கும், வேளாண் மைக்கும் கிடைக்க வேண்டிய நீரைக் கோக், பெப்சி நிறுவனங்களுக்கு அளிப்பதைத் தடைசெய்ய வேண்டும் என்று இரண்டு பொது நல வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தொடுக்கப்பட்டன. அதன்பேரில் 2016 நவம்பர் மாதம் கோக், பெப்சி நிறு வனங்கள் தாமிரபரணி ஆற்றிலிருந்து நீரைப் பயன் படுத்தத் தடை விதிக்கப்பட்டது.

தமிழ்நாடே கடும் வறட்சியின் பிடியில் இருக்கும் நிலையில்-வற்றாத ஆறாக விளங்கிய தாமிரபரணி ஆறு 2016இல் இரண்டு பருவ மழைகளும் பொய்த்ததால் வறண்டு கிடக்கும் நிலையில், 2.3.2017 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளைக் கடந்த நவம்பர் மாதம் கோக்-பெப்சிக்கு விதித்த தடையை நீக்கியது. இத்தடை நீக்கப்பட்டதற்கு மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் ஆகியோர் கூறி யுள்ள காரணம் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.

சிப்காட்டில் உள்ள மற்ற தொழிற்சாலைகள் தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுக்கும்போது எங் களுக்கு மட்டும் அந்த உரிமையை மறுக்கக் கூடாது என்று கோக்-பெப்சி நிறுவனங்கள் வாதிட்டன. சிப்காட்டில் உள்ள மற்ற தொழிற்சாலைகள் பொருள்களை உற்பத்தி செய்கின்றன. ஆனால் கோக்-பெப்சி நிறுவனங்கள், உடல்நலத்துக்கு ஊறுவிளைவிப்பவை என்று உறுதி செய்யப்பட்ட குளிர்பானங்களைத் தயாரித்துக் கொள்ளை இலாபம் ஈட்டுகின்றன. அதன் இரசாயனக் கழிவுகள் நிலத்தையும் நீரையும் நஞ்சாக்குகின்றன. இக்காரணத்தால் கேரளத்தில் பிளாச்சிமடா என்ற ஊரிலிருந்து கோக் நிறுவனம் விரட்டியடிக்கப்பட்டது.

இந்த வழக்கில் தமிழ்நாட்டு அரசின் சார்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட அறிக் கையில், “தாமிரபரணி ஆற்றிலிருந்து 5,049 பில்லியன் கன அடி (ஒரு மில்லியன் என்பது 10 இலட்சம்) தண்ணீர் கடலில் போய் கலந்து கொண்டிருக்கிறது. கோக்-பெப்சி நிறுவனங்களுக்கு 43 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே தரப்படுகிறது” என்று கூறியுள்ளது. தமிழ்நாட்டு அரசும் நீதித்துறையும் முதலாளிய நிறுவனங்களுக்குச் சார்பாகவே நடந்து கொள்கின்றன என்பதற்கு இதுபோன்ற பல நிகழ்வுகள் உள்ளன.

மேலும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், “தாமிரபரணி ஆற்றில் 8 அணைகள் கட்டப்பட்டு, 283 கிலோ மீட்டர் நீளத்துக்குக் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இவை மன்னராட்சிக் காலத்திலும், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும் ஏற்படுத்தப்பட்டவை. தாமிரபரணி ஆற்றி லிருந்து உபரி நீர் கடலில் கலப்பதைத் தடுத்து, உபரி நீர் முழுவதும் நீர்நிலைகளுக்கு நேரடியாகச் செல்வதற் குரிய நடவடிக்கை நாடு சுதந்தரம் பெற்று எழுபது ஆண்டு களாகியும் எடுக்காமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது” என்று கூறியுள்ளனர்.

2009இல் தி.மு.க. ஆட்சியில் ரூ.369 கோடி செலவில் தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்புத் திட்டம் இதற்காகத் தொடங்கப்பட்டது. பாதி வேலை முடிந்த நிலையில் ஆட்சி மாற்றத்தால் கிடப்பில் போடப்பட்டது.

தாமிரபரணி ஆற்றின் உபரிநீரை, ஏரிகள், குளங்களில் தேக்கி வேளாண்மைக்கும் குடிநீருக்கும் பயன்படுத்திடவும், தாமிரபரணியில் கழிவுகள் கலந்து பாழாவதையும் ஆற்றில் மணல் கொள் ளையைத் தடுக்கவும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்குமாறு தாமிரபரணி ஆற்றுப்படுகை மக்கள் தொடர்ந்து பேராட வேண்டும்.

Pin It