மாந்த குல வாழ்வு நாகரீகத்தின் எட்டமுடியாத உச்சத்தில் அமர்ந்திருக்கிறது. இந்த உலகின் எந்த மூலையும் தன்னுடைய சுண்டுவிரலில் சுழற்றும் அளவிற்கு சுருங்கிப் போய்விட்டது. உலகளாவிய நாகரீகம், மொழி, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவைகள் நமது வீட்டு வரவேற்பறைக்குள்ளேயே வட்டமிடத் தொடங்கிவிட்டது. மாந்தநேயம் வளரத் தொடங்கிவிட்டது. இன்று மாந்தத்திற்கு எதிரான எந்த செயலும் எதிர்ப்புக்குள்ளாக, அதற்கான இயக்கங்கள் பெருமளவில் வீச்சடைந்திருந்திருக்கிறது. எங்கேயும் மாந்த அவதூறுகள் ஏற்கப்படுவதில்லை. மாந்த குருதியும், தசை வாடையும் உலகெங்கும் நடக்கும் போர்களால் இந்த பூமியை அவலப்படுத்தும்போதெல்லாம் ஏதோ ஒரு மூலையில் எழுச்சியோடு அதை நிறுத்து என்ற கோரிக்கை மிக வேகமாக ஒலிக்கத் தொடங்கிவிட்டது.
 
எங்கோ நடைபெறும் போருக்கு இங்கிருந்து நமது குரல் எதிர்ப்பாய் பதிவு செய்யப்படுகிறது. பாலஸ்தீன மாந்த வீழ்ச்சிக்கு வியாசார்பாடியிலிருந்து எதிர்ப்புகள் கிளம்புகின்றன. ஈராக்கிலே வீழ்ந்த மாந்த நாகரீகத்திற்கு எதிராக தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையிலிருந்து எதிர்ப்பு குரல் எழுச்சியோடு கேட்கிறது. மாந்த உயிர் காப்பற்றப்பட வேண்டும், மாந்தநேயம் பேணப்பட வேண்டும் என்கின்ற அடிப்படை சிந்தாந்தங்களில் இன்று மனிதவாழ்வு ஒன்றிணைந்திருக்கிறது. இது இனம், மொழி, பண்பாடுகளை கடந்து மாந்தம் என்ற ஓர்மை தன்மையை அடைந்திருக்கிறது. இதுவே மாந்த வாழ்வின் மாபெரும் வெற்றியாகும். மாந்த உயிர் என்பது மதிக்கத்தக்கதாக, மாண்பு கொண்டதாக இன்று உலாவரத் தொடங்கிவிட்டன. மாந்த உயிர்கள் சிதைவடைவதை எந்த ஒரு மனிதனாலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
 
குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை அளிப்பதைக் கூட தடை செய்ய வேண்டும் என, தரணியெங்கும் பல்வேறு அமைப்புகள் படைகட்டி பரப்புரை செய்து கொண்டிருக்கின்றன. சாவுக்கு சாவுதான் தண்டனை என்பதை ஒப்புக்கொள்ள, இன்றைய மாந்தம் மறுக்கிறது. காரணம், மன்னிப்பு, சட்டம் போன்ற அடிப்படை பண்புகளை அவை உயர்த்திப்பிடிக்க நினைக்கின்றன. எங்கேயும் எப்போதும் மாந்தம் வீழ்ந்துவிடக் கூடாது என்பதிலே இந்த பூமிப் பந்தின் எல்லா பகுதியிலிருந்தும் தாங்கிப் பிடிக்கும் கரங்கள் உயர்ந்திருக்கின்றன. இதுவே, மாந்த குல வாழ்வின் வளர்ச்சிக்கான அடையாளமாக நாம் கணக்கிட்டுக் கொள்ளலாம். ஆனாலும்கூட, அதையும்தாண்டி அடக்குமுறைகளும், அரச பயங்கரவாதங்களும், அளவிட முடியாத படைக்கருவிகளும் நாள்தோறும் புதிதுபுதிதாக உருவாகிக் கொண்டே இருக்கின்றன. படைக்கருவிகளைக் கொண்டு நாம் பசியாறவா முடியும்?
 
அவைகளைக் கொண்டு உலகின் ஏதாவது ஒரு மூலையில் இந்த மாந்தத்தை வீழ்த்த அந்த பகுதியில் உள்ள குருதி வாடையை காற்றிலே கலக்க, அந்த பூமியை இரத்தச் சுவடுகளால் பதிவு செய்யவே அவை பயன்படும். இந்த கருவிகளால் எந்த நிலையிலும் மாந்தத்திற்கு விடிவே கிடையாது. கெட்ட, போரிடும் உலகினை வேரோடு சாய்ப்போம் என்ற கவி வரிகள் இந்த காலத்தில் ஏற்கக் கூடிய, இந்த காலத்தை வளர்ச்சியடையச் செய்யக்கூடிய தத்துவார்த்த சொல்லாக இருக்கிறது. இப்படி உலகெங்கும் மாந்தத்தைக் குறித்த அளவிடமுடியாத மதிப்பீடுகள், மாந்தகுல மாண்புகள் உயர்ந்து கொண்டிருக்கும் தருணங்களில்தான் என்கவுண்டர் என்று சொல்லக்கூடிய மோதல் கொலைகள் நம் நாட்டில் மாந்தத்திற்கெதிரான கேவலமாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
 
மாந்த வாழ்வை, அதன் மாண்பை கேள்விக் குறியதாகவும், கேலி பேசுபவையாகவும் இந்த மோதல் கொலைகள் தொடர்ந்து கொண்டிருப்பது, மாந்தத்தின் மேல் அக்கறைக் கொண்ட மனிதநேய சிந்தனையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஆனாலும் விரைவாக மறந்துபோகக் கூடிய மனப்பக்குவம் நிறைந்த நமது மக்களுக்கு இந்த மோதல் கொலைகள் பெரிய அதிர்வை தரக்கூடியதாக இல்லை. இது தேவையா? தேவை இல்லையா? என்ற விவாதமோ, இதன் அடிப்படை வாதமோ இவர்களுக்கு பெரும் பிரச்சனையாகவோ, அல்லது அதன் பொருட்டு சிந்தனைக்கு எடுத்துக் கொள்ளக்கூடிய ஒரு பொருளாகவோ அவை இல்லாத காரணத்தினால், காவல்துறையினர் மோதல் கொலைகள் என்கின்ற மாந்தத்திற்கெதிரான செயலை மீண்டும் மீண்டும் செய்து கொண்டிருக்கின்றனர். வன்முறையற்ற, அடக்குமுறை இல்லாத, அமைதியான சமூக வாழ்விற்கு நாம் நம்மை தயாரித்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் இதற்கு எதிரான நடவடிக்கைகளும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
 
கோழைகளின் ஆயுதம் அடக்குமுறை என்ற வார்த்தை காவல்துறையினருக்கு மிகப் பொருத்தமாக அமைந்துவிடுகிறது. எந்த நிலையிலும், எப்போதும் காவல்துறையினர் என்கின்ற அளவிட முடியாத, ஆற்றல் வாய்ந்த ஒரு அணி மக்களுக்கு எதிரணியில்தான் தொடர்ந்து தொண்டாற்றிக் கொண்டிருக்கின்றது. அது, அரச அணிக்கு பணிந்து போகும் கூட்டமாக செயல்படுவதை பல்வேறு காலக்கட்டங்களில் நிகழ்த்தப்பட்ட செயல்கள் நம்மை பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியது. இந்த சமூகத்தில் அந்தஸ்துடன் கூடிய சட்டப்பணியாற்றும் வழக்குரைஞர்களுக்கே பாதுகாப்பற்ற ஒரு நிலை காவல்துறையினரால் ஏற்படுத்தப்பட்டு, அந்த வழக்கு இன்றுவரை நிறைவே இல்லாமல் நீடித்துக் கொண்டிருப்பதும், அதன் செயல்கள் நியாயப்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பதும் சாமானிய மக்களுக்கு பெரும் அச்சத்தை தரும் நிகழ்வுகளாக மாறி இருக்கின்றன.
 
காவல்துறையில் பணியாற்றும் எவரும், எந்த நிலையிலும் ஏதோ ஒரு புதிய கிரகத்திலிருந்து இந்த பூமிக்கு வந்தவர்களல்ல. ஆனாலும்கூட இவர்கள் பயிற்சி காலத்திற்கு பிறகு, முழுக்க முழுக்க ஒரு புது பிறப்பு எடுத்துவிடுகிறார்கள். இந்த சமூகத்திலிருந்து முற்றிலுமாக விலக்கப்பட்ட ஒரு சமூகமாக இவர்கள் அடையாளப்படுத்தப்படுகிறார்கள். இவர்களுக்கான ஆயுதம் அடக்குமுறை. இவர்களுக்கான செயல் அடித்தல், உதைத்தல், அதைத்தாண்டி சுட்டுக் கொல்லுதல். இதிலிருந்து மீளவே முடியாதா? இந்த சிந்தனையிலிருந்து மாற்றவே முடியாதா? இது அவர்களாகவே எடுக்கும் முடிவா? என்கின்ற பல்வேறு கேள்விகள் நமக்குள் எழத்தான் செய்கின்றன. ஒவ்வொருமுறையும் இந்த மோதல் கொலைகளின் பின்னணி நம்மை அதிர்ச்சிக்கு பதிலாக நகைப்புக்கே உள்ளாக்குகிறது. அதோடு அந்த அமைப்பின்மீது நமக்கு அளவிடமுடியாத கோபத்தையும் ஏற்படுத்துகிறது.
 
வெறும் இரண்டாண்டு பயிற்சியின் மூலம் இப்படி அரச அடிமைகளாக மாறக்கூடிய உளவியல் பண்புகளை இவர்கள் எப்படி பெற்றார்கள் என்பது புரியவில்லை. மேலும், ஆட்சி மாற்றம் நிகழும்போதெல்லாம் புதிய ஆட்சியாளர்களின் அடிதொழும் பக்தர்களாக இவர்கள் மாறி நிற்பது மக்களிடையே இவர்கள் மேல் உள்ள மரியாதையை மேலும் மேலும் குறைக்கின்றன. ஆனால் உண்மை என்னதென்றால் காவல்துறையில் பணியாற்றும் ஏராளமான காவலர்கள், தாம் உள அழுத்த நோய்க்கு உள்ளாகி இருக்கிறார்கள். இவர்களின் இந்த அழுத்தத்தை எப்படி தீர்ப்பதென்பது இவர்களுக்கே புரியாத புதிராக இருக்கிறது. கடந்த 98ஆம் ஆண்டு முதல் 2008 வரை நடந்த மோதல் கொலைகள் 69. கொல்லப்பட்டவர்களைக் குறித்து காவல்துறையினர் சொல்லும் தகவல்கள் தொடர்ந்து ஒரே அலைவரிசையில், ஒரே கோணத்தில்தான் அமைந்திருக்கிறது.
 
ஒன்று, இவர்கள் இடதுசாரி தீவிரவாதிகள் அல்லது மாவோயிஸ்டுகள். இரண்டு, இவர்கள் மதத் தீவிரவாதிகள். மூன்று, இவர்கள் தேடப்பட்டு வந்த போக்கிலிகள். கொல்லப்படும் எல்லோருக்கும் இவர்கள் இப்படித்தான் பெயர் சூட்டுவார்கள். ஆனால் மோதல் கொலையின்போது ஏற்படும் தாக்குதலுக்கு உள்ளாகும் காவல்துறை அதிகாரிகளோ, காவலர்களோ கரத்தில்மட்டும் காயங்களை ஏந்திக் கொண்டு கட்டுப்போட்டு, கட்டிலில் படுத்திருப்பார்கள். ஒருமுறைக்கூட இந்த மோதல் கொலையின்போது காவலர்களுக்கு கரத்தை தாண்டி, வேறுபகுதியில் காயம்பட்டதாக நாம் காணவில்லை. இந்த நிகழ்வு எப்படி சாத்தியம் என்று எமக்குப் புரியவில்லை. தொடர்ந்து எல்லா காவலர்களுக்கும் கரங்களில் மட்டும் காயம் ஏற்படுத்த இவர்கள் போக்கிலிகள் அல்லது இடதுசாரி தீவிரவாதிகள், மதத் தீவிரவாதிகள் என்று சொல்லக்கூடியவர்கள், காவலரின் கரங்களில் மட்டும் காயத்தை ஏற்படுத்திவிட்டு தப்பித்து செல்ல முயற்சிப்பதும், ஆகையால் இவர்கள் துப்பாக்கி எடுத்து சுடுவதுமான திரைக்கதை, வசனங்கள் தொடர்ந்து செய்தித்தாள்களிலே நாம் காண்கின்றோம்.
 
இந்திய அரசியல் தளத்திலே சட்டமன்றம், நாடாளுமன்றம், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என்று பல்வேறு அமைப்பு முறைகள் இருக்கின்றன. இவைகளில் இயற்றப்படும் சட்டங்கள், குற்றங்களுக்கு ஏற்ப தரப்படுத்தப்படுகின்றன. இந்த குற்றத்திற்கு இதுதான் தண்டனை என்பதை சட்டங்கள் தீர்மானிக்கின்றன. ஆனால் இதையெல்லாம்மீறி காவல்துறையினரே, சட்டங்களை கையில் எடுத்துக் கொண்டு, குற்றவாளி என்று அடையாளப்படுத்தி, சுட்டுக் கொல்கிறார்கள் என்றால் இவர்களுக்கு சட்டத்தின்மீதோ, அல்லது நீதிமன்றத்தின்மீதோ நம்பிக்கை இருக்கிறதா என்ற கேள்வி, சாமானிய மக்கள் ஒவ்வொருவருக்கும் இயற்கையாக ஏற்படுகிறது. இது இந்திய அரசியல் சட்டத்திற்கு மட்டுமல்ல, மக்கள் குடியரசின் கோட்பாட்டிற்கு எதிரானது.
 
சற்றேறக்குறைய இவை கொலைக் குற்றத்திற்கு சமமானதுதான் என்பதை நம்மால் மறுத்துரைக்க முடியாது. சாவு தண்டனை தவறானது என்கின்ற கருத்து பரவலாக வலுவடைந்துக் கொண்டிருக்கும் இந்த காலக்கட்டத்தில், காவல்துறையினர் செய்யும் இந்த கொலைகள் காட்டுமிராண்டித்தனமானது, ஒழிக்கப்பட வேண்டியது. காவல்துறையினர் என்னத்தான் கதைச் சொன்னாலும், அதை மக்கள் நம்ப தயாராக இல்லை. இந்த மோதல் கொலைகளை பொறுத்தவரை யாரை, எங்கே வைத்து, யார் கொல்ல வேண்டும் என்பது வரை சரியாக திட்டமிடப்பட்டே நிகழ்த்தப்படுவதாக மக்கள் நல ஆர்வளர்கள் கருத்து கூறுகிறார்கள். வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது காவல்துறையினர் நடத்திய அத்துமீறல்களும், அநியாயங்களும் இப்போது கசிந்து மெல்ல வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. காவல் துறையினர் நடத்திய வன்புணர்ச்சி, சித்ரவதைகளின் போது எழுந்து ஓலங்கள், வீசிய ரத்தவாடைகள், தெறித்த மனித தசைகள், வீழ்த்தப்பட்ட அப்பாவி உயிர்கள் தமிழக காவல்துறையின் கோரமுகத்தை அம்பலப்படுத்தியது. காவல்துறையினரின் அக்கிரமங்களுக்கு இந்திய அரசியல் சட்டத்தின் குற்றவியல் நடைமுறை சட்டம் 132 மற்றும் 197 ஆகியவை இவர்களை காக்கும் அரணாக செயல்படுகின்றன.
 
 பிரிட்டிஷ் காலணி ஆதிக்கத்தின்போது இந்தியர்களை கொலை செய்வதற்கு துணை புரிந்த அதே சட்ட வரையறையை சொந்த மக்களை கொல்வதற்கு இவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். நாம் இதைப்பற்றியெல்லாம் சிந்தித்துக் கொண்டிருக்கும் போதுதான் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த மார்ச் 26ஆம் தேதி கொரநடராஜ் என்பவரை காஞ்சிபுரம் மாவட்டத்திலே சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். தொடர்ந்து விரட்டி சென்றதாகவும், அவர் குண்டு வீசியதாகவும், தம்மைக் காப்பாற்றிக் கொள்ள அதைத்தொடர்ந்து சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் சொல்கின்றன. ஆக, இது அடிப்படை மாந்த உரிமை மீறிய செயலாகும்.
 
இப்படிப்பட்ட மோதல் கொலைகள் நடக்கும்போது, இந்த கொலைகள் நிகழ்த்த காரணமான அதிகாரிகளை விசாரிக்க, விடுதலையான ஒரு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். முழு விடுதலைக் கொண்ட அந்த அமைப்பினர் எந்தவித இடையூறும் இன்றி அந்த அதிகாரிகளை விசாரிக்க, அதிகாரமளிக்க வேண்டும். இந்த விசாரணை முடியும்வரை இக்குற்றச் செயலில் ஈடுபட்ட காவலர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட வேண்டும். இப்படிப்பட்ட அடிப்படை நடைமுறைகளை பின்பற்றாவிட்டால், இந்த நிகழ்வுகளை தடுக்க யாராலும் முடியாது, அதைவிட மேலாக காவல்துறையினரின் பயிற்சி காலத்தின்போது மாந்தகுல மாண்பு பற்றிய அடிப்படை தன்மைகளை விளக்கமாக எடுத்துரைத்து, அதிலே அவர்கள் பயிற்சி பெற வேண்டும்.
 
இந்த உலகத்தில் எல்லாவற்றையும்விட மனித உயிரே உயர்ந்தது. உலகில் உள்ள எல்லா பொருட்களும் மாந்த குலத்திற்காகவே படைத்தளிக்கப்பட்டது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வாய்ப்பு தரவேண்டும். மனித மாண்புகளுக்கு எதிராக, வாழும் உரிமையை நசுக்கும் இந்த மோதல் கொலைகள், நிகழா வண்ணம் தடுக்க, மாந்த அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் கடமை ஆற்றவேண்டும். இதுவே நாளைய மாந்த குலத்திற்கான மாண்பை காப்பாற்ற வழி வகுக்கும். மனிதர்களுக்கான வாழும் உரிமையை தடுக்க யாருக்கும் எந்த அதிகாரமும் கிடையாது.

- கண்மணி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It