டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்துறை பேராசிரியராக பணிபுரிபவர் முனைவர். சாய்பாபா. ஏழைகள், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அவர் நெடுங்காலம் தனது குரலை உயர்த்தி வந்திருந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன் மத்திய இந்தியாவில் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதியில் நக்சல்பாரிகளை ஒடுக்குவதாக மத்திய அரசு பச்சை வேட்டை என்ற பெயரில் நடத்திய மனித உரிமை மீறல்களை சாய்பாபா தொடர்ந்து எதிர்த்து வந்தார். அறிவு சார்ந்த தளத்தில் நின்று அரசாங்கத்தின் பழங்குடி விரோத நிலைபாட்டை விமர்சித்தும் வந்தார்.

கடந்த 2014 ஆண்டு மே மாதம் 9 ஆம் தேதி பல்கலைகழக தேர்வு முடித்துக்கொண்டு மதியம் தனது வீடு திரும்பும் போது பல்கலைகழகத்திற்கு வெளியே அவரின் காரை வழிமறித்த சீருடை அணியாத மகாராஷ்டிர காவல்துறையினர் அவரை வலுக்கட்டாயமாக கைது செய்து பின் நாக்பூருக்கு கூட்டிச் சென்றனர். அவர் மீது மாவோஸ்ட் அமைப்பு செயல்பாட்டாளர் என குற்றம் சுமத்தப்பட்டு, நவீன வடிவ தடா சட்டமான சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச்சட்டத்தின் கீழ் நாக்பூரின் அண்டா செல் என்ற முட்டை வடிவ சிறையில் அடைக்கப்பட்டார்.

saibaba 330பேராசிரியர் சாய்பாபா பிறவியிலேயே உடல் ஊனமுற்றவர். கால்கள் இரண்டும் போலியோ பாதிக்கப்பட்டும் கை மற்றும் தண்டுவடமும் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருபவர். அவரைக் கைது செய்து சிறைபடுத்திய பின் நான்கு நாட்கள் கழிப்பிட வசதிகூட அவருக்கு செய்து தரப்படவில்லை. சுமார் 72 மணி நேரம் அவர் கழிப்பறைக்கு அனுப்பப்படாமல் வைக்கப்பட்டிருந்தார். இயற்கை உபாதைகளைக்கூட கழிக்க பிறரின் உதவியினை எதிர்நோக்கவேண்டிய உடல் பாதிப்புள்ள சாய்பாபாவுக்கு தொடர்ந்து மாற்றுத் திறனாளிகளுக்கு தரப்படவேண்டிய உதவிகள் மறுக்கப்பட்டது. சாய்பாபாவின் கைது சனநாயக சமூகத்தில் , அறிவு தள செயல்பாட்டில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.

கழிப்பிடம் செல்ல முடியாத மாற்றுத்திறனாளி என்ற போதும் சிறையில் அவருக்கு எவரும் உதவி செய்ய அனுமதிக்கப்படவில்லை. நாக்பூரின் முட்டை வடிவ சிறையின் பாதிப்பால் அவரின் முதுகு தண்டுவடப்பிரச்சனையும் அதிகரித்தது. அவரின் கை விரல்கள் செயல்பாடுகள் குறைந்து போனது. சிறையிலேயே சாய்பாபா சாகடிக்கப்பட்டுவிடலாம் என்ற நிலையில் அவரின் உடல்நிலையினைப் பற்றி “தி இந்து” ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியைப் பார்த்து சமூக ஆர்வலர் பூர்னிமா உபாத்தியாயா என்பவர் பம்பாய் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஒரு இ மெயில் செய்தியை அனுப்பி சாய்பாபாவின் உடல் நிலையை கவனப்படுத்தினார். அந்த இ மெயில் கடிதத்தையே பொது நல மனுவாக ஏற்று தலைமை நீதிபதி மொகிட்சா மற்றும் நீதிபதி எஸ்.பி.சுக்கூர் ஆகியோர் கொண்ட பம்பாய் உயர்நீதிமன்ற அமர்வு கடந்த ஆறு மாதத்திற்கு முன் 2015 டிசம்பர் 31 ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கியது. அந்த உத்தரவில் சாய்பாபா உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளதாகவும், அவருக்கு ஜாமீன் வழங்காவிட்டால் அவரின் அடிப்படை உரிமையை நீதிமன்றம் காக்கத் தவறிய தவறை செய்ததாக ஆகிவிடும் எனக் கூறியது.

ஜாமீனில் விடுதலை ஆகும் போது அவர் 14 மாதம் சிறைவாழ்க்கையினை கழித்திருந்தார். அவரின் இதயம், சிறுநீரகம், தண்டுவடம் உள்ளிட்ட முக்கிய உறுப்புக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் அதற்கு சிகிச்சை எடுத்து வந்தார். இந் நிலையில் கடந்த டிசப்பர் 23 ஆம் தேதி பம்பாய் உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை நீதிபதி அருன் செளத்ரி ஏற்கனவே சாய்பாபாவுக்கு கொடுத்திருந்த இடைக்கால ஜாமீனை இரத்து செய்து அவர் உடனடியாக சிறைபடுத்த உத்திரவிட்டார். மேலும் சாய்பாபா கைது செய்யப்பட்ட ஓராண்டு கடந்திருந்த நிலையில் கடந்த 2015 மே மாத அவுட் லுக் இதழில் எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதியிருந்த கட்டுரையில் அரசாங்கம் 90 சதவிகிதம் ஊனமான இந்த மனிதனைக் கண்டு பயப்படுகின்றது என்றும் கோழைத்தனமாக அவரை டெல்லியில் கைது செய்து நாக்பூருக்கு போலிஸ் கடத்தி வந்தது என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும் 2002 குஜராத் கலவரத்தில் நரோடா பாட்டியாவில் 97 முஸ்லீம்கள் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளியான பாபு பஜிரங்கிக்கு ஜாமீன் கிடைக்கும் போதும், ஆயுள் தண்டனை பெற்ற குஜராத் முன்னாள் அமைச்சர் மாயா கொட்டானிக்கு உடல் நிலை மற்றும் மனநிலை கருத்தில் கொண்டு நீதிமன்றம் 2014 ஜீலை மாதம் ஜாமின் வழங்கியதையும், போலி மோதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இன்றைய ப.ஜா.க தலைவர் அமித்சாவுக்கு ஜாமின் கிடைக்கும் போது 90 சதவிகித உடல் ஊனமுள்ள சாய்பாபாவுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதை அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

அந்த கட்டுரையானது நீதிமன்றத்தையும், காவல்துறையினரையும், அரசையும் விமர்சிப்பதாகவும் நீதிமன்றத்தின் நீதி நிர்வாகத்தில் தலையிடுவதாகவும் கூறி நீதிபதி ஏ.பி. செளத்ரி என்பவர் எழுத்தாளர் அருந்ததிராய்க்கு எதிராக கிரிமினல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். பொதுவாக நீதிமன்ற அவமதிப்பு சட்டம் 1971ல் கடந்த 2006 ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்ட திருத்தத்தின்படி உன்மையைப் பேசுவதை நீதிமன்ற அவமதிப்பாக கருதக் கூடாது என கூறுகின்றது. மேலும் எந்த கெட்ட நோக்கமுமின்றி பொது நலன் கருதி வெளிப்படும் நேர்மையான விமர்சன கருத்துக்களும் நீதிமன்ற அவமதிப்பாக கருத கூடாது என்பதும் விதி. அருந்ததி ராய் தனது விமர்சனத்திற்கு எதிராக பம்பாய் உயர்நீதிமன்றம் தாக்கல் செய்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளார். இதற்கிடையே முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்சு உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிர்வாழ போராடும் சாய்பாபாவை கைது செய்து சிறைபடுத்தியதன் மூலம் அவரின் மனித உரிமைக்கு பாதிப்பு ஏற்பட்டுவிட்டதாகவும் அவருக்கு அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதாகவும், உச்சநீதிமன்றத்தில் சாய்பாபாவுக்கு நியாயம் கிடைக்கும் எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.

சாய்பாபா ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தவர். தனது சிந்தனை மற்றும் கருத்து மூலம் கொடுங்கோன்மை புரியும் அரசாங்கத்தை விமர்சித்தார். இந்த விமர்சனங்களை அரசியல் ரீதியாகவும், கருத்து ரீதியிலும் எதிர்கொள்ளாது சிறை என்ற சித்தரவதையினை சாய்பாபாமீது திணித்துள்ளது அரசு. அவர் தனது கருத்துக்காக இந்த வதைகளை எதிர்கொண்டுள்ளார். அவர் உயிர் காப்பாற்றப்படவேண்டும். சனநாயக சமூகத்தில் ஆட்சியாளர்கள், நீதிமான்கள் என அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்களின் சுய விருப்பு வெறுப்பு மற்றும் அரசியல் பார்வைக்கு தக்கபடி தங்கள் முன் உள்ள பிரச்சனையினை தீர்மாணிக்ககூடாது என்பதற்காகவே அரசமைப்பு சட்டத்தின் வழிகாட்டுதல் உள்ளது. அந்த சட்டம் ஏழைகளுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் ஆதரவாய் செயல்பட வேண்டும் . சாய்பாபாவுக்கு நியாயம் கிடைக்கவேண்டும் . அவர் பாதுகாக்கப்படவேண்டும். அவரை பாதுகாப்பது சனநாயக சமூகத்தின் கடமை. சாய்பாபா விடுதலைக்காக குரல் கொடுப்போம்.

- ச.பாலமுருகன், எழுத்தாளர். பி.யு.சி.எல் செயலர்

Pin It