கே.ஜி. கண்ணபிரான், மனித உரிமைகளுக்காக வாதாடும் புகழ் பெற்ற வழக்குரைஞர். போலி மோதல் கொலைகளுக்கு (என்கவுன்டர் கொலை) எதிரான அமைப்பில் செயல்படுபவர். ‘ஆந்திர மாநில மக்கள் சிவில் உரிமைக் கழகத்'தின் தலைவராக 15 ஆண்டுகள் இருந்தபோது, மாநில காவல் துறையினரால் நடத்திய ‘என்கவுன்டர்' விசாரணை ஆணையங்களான தார்குண்டே குழு மற்றும் பார்கவா ஆணையத்தில் பங்கேற்றவர். தற்பொழுது சிவில் உரிமைகளுக்கான மக்கள் அமைப்பின் தலைவராக செயல்பட்டு வருகிறார். தன்னுடைய 40 ஆண்டுக் கால பொது வாழ்க்கையைப் பற்றி குறிப்பிடும்போது, என் பொது வாழ்வின் பெரும் பகுதியை எண்ணற்ற மக்களின் விடுதலையை, நான் போராடி காத்து வந்துள்ளதாக உணர்கிறேன் என்று சுருக்கமாகக் கூறுகிறார்.
அண்மையில் ‘பிரண்ட்லைன்' (9.10.09) இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், ‘போலி மோதல் கொலை'க்கு காரணமான காவல் துறை அதிகாரிகளையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறார். அந்தப் பேட்டியிலிருந்து...
போலி மோதல் கொலைகளுக்கு எதிராக நீண்ட காலமாகப் போராடி வரும் நீங்கள், பிப்ரவரி 2009 இல் வெளிவந்த ஆந்திரப் பிரதேச தீர்ப்பு பற்றி என்ன நினைக்கிறீர்கள். ஒவ்வொரு ‘என்கவுன்டரை' நிகழ்த்திய பிறகும் அதில் ஈடுபட்ட போலிஸ் அதிகாரிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு, முதல் தகவல் அறிக்கை காவல் துறையினரால் பதிவு செய்யப்பட வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருக்கிறதே?
இது, இவ்வாறான முதல் தீர்ப்பு அல்ல. 1997 இல் மதுசூதன்ராஜ் (யாதவ்) வழக்கில் இதே போன்றதொரு தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அடுத்தடுத்து வந்த நீதிமன்றங்கள் இதற்கு முரண்பட்ட தீர்ப்புகளையே அளித்து வந்ததால், அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. இப்போதும் கூட, உச்ச நீதிமன்றம் அத்தீர்ப்புக்கு தடை விதித்துள்ளது. மே மாதம் நிகழ்ந்த சம்பவத்தில் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் குழு உறுப்பினர் பட்டேல் சுதாகர் (ரெட்டி) கொல்லப்பட்டார். ஆனால் உச்ச நீதிமன்றத்தின் தடை நீக்கப்படாதவரை, எந்த ஆணையையும் வெளியிட முடியாது.
‘என்கவுன்டர்' விசாரணையில், தற்பொழுதுள்ள நடைமுறைகள் போதுமானவையாக இருக்கின்றனவா?
நிர்வாகத் துறை நடுவர் (Executive Magistrate) விசாரணைகள் கட்டுப்படுத்த முடியாதவையாக இருப்பதால், ‘செஷன்ஸ்' விசாரணைக்கு மாற்றாக நீதித் துறை நடுவர் விசாரணை இருக்க முடியாது. ஒரு ‘என்கவுன்டர்' நடந்து முடிந்த பிறகு, பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கையில், குற்றம் சாட்டப்பட்டவரின் (அதாவது கொல்லப்பட்டவரின்) குற்றப்பட்டியல் மட்டுமே பதிவு செய்யப்படுகிறது. கொலைக்குக் காரணமான காவல் துறையினரின் நடவடிக்கைகள் பதிவு செய்யப்படுவதில்லை. இந்திய குற்றவியல் சட்டம் 157இன்படி, என்கவுன்டருக்குப் பொறுப்பேற்ற காவல் அதிகாரிக்கு – விசாரணை செய்யவோ, செய்யாமலிருக்கவோ விருப்புரிமை உண்டு. ஆனாலும், அவர் அதற்கான காரணங்களை நீதிபதிக்கு அறிக்கையாகத் தர வேண்டும்.
விசாரணை தேவையில்லை என்று போலிஸ் முடிவு செய்தாலும், விசாரணைக்கு உத்தரவிட இந்திய குற்றவியல் சட்டம் 159இன் கீழ் நீதிபதிக்கு உரிமை உண்டு. விசாரணைக்கான நடைமுறைகளை வகுப்பதில் சட்டம் மிகுந்த கவனம் எடுத்துக் கொள்கிறது. ஒரு என்கவுன்டர் முடிந்த பிறகு குற்றம் சாட்டப்பட்டவர் இறந்து விடுவதால், விசாரணை இல்லாமல் வழக்கு முடிக்கப்பட்டு விடுகிறது. எனவே, காவல் துறையினர் மீது வழக்குப் பதிவு செய்தால் அதை விசாரித்து தொடர்ந்து வழக்கு நடத்த முடியும்.
ஒவ்வொரு என்கவுன்டருக்குப் பிறகும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையத்தின் சட்ட திட்டங்களில் ஏற்கனவே கூறப்பட்டுள்ளதே. அது போதாதா?
தேசிய, மாநில மனித உரிமை ஆணையங்கள் பல் பிடுங்கப்பட்ட அமைப்புகள். அவை சட்டப்பூர்வமாக ஓய்வு பெற்றவர்களால் நடத்தப்படும் சட்டப்பூர்வ பொழுதுபோக்கு மய்யங்கள். அதன் வழிகாட்டல்கள் சட்ட நூல்களிலிருந்தே எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, சட்ட செயல்பாட்டு முறைகள் தவிர, வேறு எதுவும் மனிதனின் வாழும் உரிமையைத் தடுக்க முடியாது. கீழ் நீதிமன்றங்கள் அளிக்கும் மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும் என்பதிலிருந்தே அரசமைப்பின் 21ஆவது பிரிவுக்கு சட்டப்பூர்வமான முக்கியத்துவம் இருப்பது தெரிய வருகிறது. ஆனால் என்கவுன்டரில் என்ன வகையான நடைமுறை பின்பற்றப்படுகிறது? அல்லது அது நடந்து முடிந்த பிறகுதான் என்ன மாதிரியான ஒழுங்கு நடவடிக்கைகள் பின்பற்றப்படுகின்றன?
சட்டத்தை செயல்படுத்தும் அதிகாரிகளும், ராணுவ அமைப்புகளும் சிறப்பு சூழ்நிலைகளில் பணியாற்றுவதால், அதிகப்படியான அதிகாரங்களைக் கொண்டுள்ளதாக பலரின் வாதம் இருக்கிறதே?
தன் கையில் அதிகாரம் இருப்பதாலேயே விளைவுகளிலிருந்து தப்பித்து விடலாம் எனும் மனப்பான்மை அவர்களிடம் இருக்கிறது. சட்டப்படி மனித உயிரைப் பறிக்கும் உரிமை, இந்தியாவில் அரசு அளிக்கும் மரண தண்டனையில் மட்டுமே உள்ளது.
நீதித்துறைக்கு அப்பாற்பட்ட கொலைகள், சட்டப்படி மனிதக் கொலை என்ற பிரிவில் வராது. ‘ஆயுதப் படை (சிறப்பு அதிகார) சட்டம்' மற்றும் ‘பாதிக்கப்பட்ட பகுதி'யாக அறிவிக்கப்பட்ட இடங்களில் உள்ள சட்டங்கள் – பொது அமைதியை நிலைநாட்ட துப்பாக்கிச் சூடு நடத்தவோ, அதிகபட்சமாக மரணம் விளைவிக்கக்கூடிய தாக்குதல் நடத்தவோ உரிமை கொண்டவை. சட்டத்தின் இந்தப் பகுதி அவர்களுக்குப் பாதுகாப்பு அளித்தாலும், சட்டப்பிரிவு 21இன் படி அது தவறு. இதேபோல, என்கவுன்டர் வழக்குகளில் ‘தற்காப்புக்காக' என்பது வாதத்திற்காகப் பலமுறை பயன்படுத்தப்படுகிறது. இவையெல்லாம் விசாரணைக்குப் பிறகு நீதிமன்றங்களால் முடிவு செய்யப்பட வேண்டியவை.
ஒரு போலிஸ் அதிகாரி தற்காப்புக்காகத்தான் செயல்பட்டார் என்று எப்படி அறிந்து கொள்வது? குறிப்பாக சாட்சிகள் இல்லாமல் நடக்கும் ‘என்கவுன்டர்' போன்ற நிகழ்வுகளில்...
ஆந்திர அரசு – எதிர் – ராயவரப்பு புன்னையா 1976 வழக்கில் நீதியரசர் (ரஞ்சித் சிங்) சர்க்காரியா கூறியபடி, எல்லா கொலைகளும் குற்றத்திற்குரிய மனிதக் கொலைகளே. ஒரு காவலர் தேவையையொட்டி அதிகப்படியான தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறினால், அது கொலைக் குற்றம் சாட்டப்படக்கூடியது. ஆனால் கொலை அல்ல. ஆனால் காவலர் எந்த வன்மமும் இன்றி செயல்பட்டிருந்தால் மட்டுமே அது செல்லுபடியாகும். தன் உயிருக்கு ஆபத்து இருந்ததால் தேவையான சக்தியை பயன்படுத்த நேர்ந்ததாக அவர் நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். நீதிமன்றத்தில் அவருடைய எண்ணத்தை கேள்விக்குட்படுத்தாமல், செயல்பட்ட விதத்தை அறிவுப்பூர்வமான விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். இங்கே விவாதத்திற்குரியது தற்காப்பிற்காக செயல்பட்டேன் என்பது – திட்டமிட்ட கொலையா, வன்மமற்ற கொலையா என்று விசாரிப்பதுதான்.
விசாரணை மட்டுமே ஒரு மரணம் கொலையா, வன்மமற்ற கொலையா, கொலைக் குற்றமா என முடிவு செய்யும் என்பதால் மட்டுமே குற்றம் சாட்டாமல் இருக்க முடியாது. இது, குற்றம் சாட்டப்பட்டவர் அச்சுறுத்தலுக்கு எப்படியான எதிர்வினையாற்றினார் என்பதைப் பொறுத்தே அமையும்.
உச்ச நீதிமன்றத்தில் வெளியிடப்படவிருக்கும் தீர்ப்பின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா?
40 ஆண்டுகளாக நான் இதற்காகப் போராடி வருகிறேன். ஆந்திராவில் என்கவுன்டர் நடைபெற்ற ஒவ்வொரு இடத்திற்கும் சென்று விசாரணை நடத்தியிருக்கிறேன்; பத்திரிகையாளர் சந்திப்புகளையும் நடத்தியிருக்கிறேன். பல பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆனால், என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. குறைந்தபட்சம் முதல் தகவல் அறிக்கையாவது பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் சாதாரண மனிதர்களைப் போலவே காவல் துறையினரையும் விசாரணைக்கு உட்படுத்த முடியும் என்று மக்கள் அறிந்து கொள்ளச் செய்ய முடியும்.
ஒவ்வொரு குற்ற விசாரணையும் சமூகத்திற்குப் படிப்பினை. நான் ஒரு நியாயமான விசாரணைக்காகத்தான் போராடுகிறேன்.
தமிழில் : மாணிக்கம்