புல்லட் இரயில், டிஜிட்டல் இந்தியா, எட்டுவழிச் சாலை முதலான திட்டங்கள் மூலம் அறிவியலில் இந்தியாவை அமெரிக்காவுக்கு இணையாகத் தூக்கி நிறுத்தப்போவதாக பிரதமர் நரேந்திர மோடி நாள் தோறும் முழங்கிக் கொண்டிருக்கிறார். அதேசமயம் பா.ச.க.வும் அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.-ம் மற்றும் அதன் கிளை அமைப்புகளும் “பாரதக் கலாச்சாரத்தைக் கட்டிக்காப்போம்” என்கிற பெயரால் அறிவியலுக்கு எதிரான மூடநம்பிக்கைகளை வளர்த்து வருகின்றன.

பா.ச.க.வின் முன்னைய அவதாரமான ஜன சங்கம் 1951இல் தோற்றுவிக்கப்பட்ட காலம் முதலே இராஜஸ்தான் மாநிலத்தில் அது செல்வாக்குடன் இருந்து வருகிறது. நீண்டகாலமாக அம்மாநிலத்தில்ல ஆட்சி யிலும் இருந்து வருகிறது. அதனால் இந்த இந்துத்து வச் சக்திகள் பகுத்தறிவுச் சிந்தனை வளருவதற்குப் பெரும் தடையாக இருந்து வருகின்றன.

2018 சூலை 3 அன்று இராஜஸ்தான் மாநிலம், பண்டி மாவட்டம், அரிபுரா எனும் ஊரில் சாதிப் பஞ்சாயத்தினர் கூடி அய்ந்து அகவைச் சிறுமிக்குத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தனர். மூன்று நாள்களுக்கு அச்சிறுமி அவருடைய வீட்டிற்குள் செல்லாமல், வீட்டின் பின்புறம் உள்ள தொழுவத்தில் இருக்க வேண்டும் என்பதே சாதிப் பஞ்சாயத்து விதித்த தண்டனையாகும்.

அச்சிறுமி செய்த கொடிய குற்றம் என்ன? ஒரு முட்டையை உடைத்துவிட்டாள் என்பதே அவள் மீதான குற்றச்சாட்டு. நிலத்தில் முட்டையிடும் ஒருவகையான பெரிய குருவி இராஜஸ்தானில் ஹதோதி பகுதியில் வாழும் இந்துக்களால் புனிதமானதாகக் கருதப்படுகிறது. மார்ச்சு முதல் ஆகத்து மாதத்திற்குள் மேடான நிலப் பகுதியில் இக்குருவி முட்டையிடுவதை வைத்து தென் மேற்குப் பருவமழை எப்போது வரும் என்று கணிக்கும் மூடநம்பிக்கை அவர்களிடம் இருக்கிறது. அதனால் அக்குருவியையும் அதன் முட்டைகளையும் புனிதமான தாகவும் தெய்வீகமானதாகவும் மக்கள் கருதுகின் றனர். பருவமழை என்பது உலக அளவில் நிலவும் சூழலியல் நிலைமைகளால் தீர்மானிக்கப்படுகிறது என்பதைப் பள்ளிப் பாடநூல்களில் படித்தாலும், பறவை முட்டையிடுவதே பருவ மழையைத் தீர்மானிக்கிறது என்கிற மூட நம்பிக்கையைக் கைவிடாமல் காப்பதே பாரதக் கலாச்சாரம் என்று சங்பரிவாரங்கள் சொல் கின்றன. அதனால்தான், மனித உடலில் யானையின் தலையை வைத்துத் தைத்த “பிளாஸ்டிக் அறுவை” வேத காலத்திலேயே இருந்தது என்று மருத்துவர் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

தண்டிக்கப்பட்ட அந்த அய்ந்து அகவைச் சிறுமி சூலை முதல் நாள் தான் பள்ளியில் சேர்ந்தாள். சூலை 2 அன்று பள்ளியில் பகல் உணவாக வழங்கப்படும் பாலை வாங்குவதற்காக வரிசையில் நின்றிருந்த போது கால் தவறி அக்குருவியின் கூட்டில் இருந்த முட்டையை உடைத்துவிட்டாள். இப்புனித முட்டையை உடைத்ததற்காகத்தான் அச்சிறுமியைச் சாதிப் பஞ்சா யத்தினர் தண்டித்தனர். இத்தண்டனையை அச்சிறுமி யின் தந்தை எதிர்த்ததால், 3 நாள் தண்டனையை 11 நாள் தண்டனையாக உயர்த்தியது சாதிப் பஞ்சாயத்து.

சுட்டெரிக்கும் வெய்யிலில் அச்சிறுமி நாள் முழு வதும் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்தவாறு கதறி அழுது கொண்டேயிருந்தாள், அச்சிறுமியின் தந்தை உக்கம் சந்த் நாய்கர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். கூலி வேலை செய்து வாழ்க்கையை நடத்துபவர். மேல்சாதி நாட்டாண்மைக்காரர்களின் தீர்ப்பால் தம் பிஞ்சுக் குழந்தைக்கு விதிக்கப்பட்ட கொடிய தண்ட னையைக் கண்டு தாயும் தந்தையும் செய்வதறியாது அழுது புலம்பினர்.

இக்கொடுமை 11-7-2018 அன்று வெளியுலகிற்குத் தெரியவந்தது. அதன்பின் வருவாய்த் துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் தலையிட்டு அச்சிறுமியை அவளுடைய வீட்டிற்குள் அனுப்பி வைத்தனர். அப்போது கூட, சாதிப் பஞ்சாயத்தினர் அச்சிறுமிக்குத் தீட்டுக் கழிக்கும் புனிதச்சடங்கைச் செய்த பிறகே அவளுடைய வீட்டிற்குள் நுழைய அனுமதித்தனர். அய்ந்து அகவைச் சிறுமிக்குத் தண்டனை விதித்த சாதிப் பஞ்சாயத்தினர் பத்துப் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிகார வர்க்கத்திலும் நீதித் துறையிலும் இருப்பவர்களில் பெரும்பாலோர் இதுபோன்ற மூடநம்பிக்கை கொண்டவர் களாக இருப்பதால் கைது செய்யப்பட்டவர்கள் தண்ட னையின்றி வெளியே வந்துவிடுவார்கள். பகுத்தறி வைப் பிரச்சாரம் செய்ததற்காக தபோல்கர், கோவிந் பன்சாரே, கல்புர்கி, கவுரி லங்கேஷ் முதலானோர் கொல்லப்பட்ட இந்த இந்துத்துவ ஆட்சியில் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?

Pin It