தற்போது நடைபெற்று வரும் 43வது சென்னை புத்தகத் திருவிழாவில், ‘மக்கள் செய்தி மையம்’ என்ற பதிப்பகத்திற்காக ஒதுக்கிய கடையை, அரசுக்கு எதிரான சர்ச்சைக்குரிய புத்தகத்தை விற்றதாகக் காரணம் காட்டி அகற்றச் செய்திருக்கும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (BAPASI/பபாசி) செயல் கருத்துரிமைக்கு எதிரானது; கடும் கண்டனத்துக்குரியது.

பபாசியின் புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 341 (முறையற்ற வகையில் ஒருவரைத் தடுத்து வைத்திருத்தல்), 294b (பொது இடத்தில் ஆபாசச் செயலில் ஈடுபடுதல்), 506 (ii) (கொலை செய்தல், கொடுங்காயம் ஏற்படுத்துவது உள்ளிட்ட மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதியப்பட்டு, மக்கள் செய்தி மையத்தின் பதிப்பாளர், வி. அன்பழகன் ஜனவரி 24 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். காவல் துறையின் ஆலோசனையின் பேரிலேயே பபாசி புகார் கொடுத்ததாகவும், பெருநகர நீதித்துறை நடுவர், அன்பழகனை நீதிமன்றக் காவலில் வைப்பதற்கு முதலில் மறுப்பு தெரிவித்ததாகவும், காவல்துறையின் விளக்கத்திற்குப் பிறகே நீதிமன்றக் காவலுக்கு அவர் அனுப்பப் பட்டுள்ளார் என்றும் ஊடகச் செய்திகள் தெரிவிப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

பதிப்பாளர் அன்பழகன், ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில், சென்னை மாநகராட்சியின் ஊழலை அம்பலப்படுத்தும் வகையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கிடைத்தத் தகவல்களைத் தொகுத்து புத்தகமாகக் காட்சிப் படுத்தியதாக ஊடகச் செய்திகள் மூலம் அறிய வருகிறோம். அவர், அரசால் தடை செய்யப்பட்ட புத்தகம் எதையும் விற்றதாகத் தெரியவில்லை. பபாசியின் விதிமுறைகள் தொகுப்பும் அரசால் தடை செய்யப்பட்ட புத்தகங்கள், சி.டிக்களை காட்சிப்படுத்துவது மற்றும் விற்பனை செய்வதை மட்டுமே தடை செய்கிறது.

இந்த விதிக்கு மாறாக, அரசுக்கு எதிரான சர்ச்சைக்குரிய புத்தகத்தை விற்றதைக் காரணம் காட்டி மக்கள் செய்தி மையத்தின் கடையை அகற்றியிருப்பதும், அவர் மீது கொலைமிரட்டல் விடுத்ததாக வழக்கு பதிவு செய்திருப்பதும், பபாசி அரசின் பகையைச் சம்பாதிக்க விரும்பாமல், சமரசம் செய்து கொண்டுள்ளது என்ற சந்தேகத்தையே எழுப்புகிறது. மேலும், பபாசியின் துணைத் தலைவரான பாரதி புத்தகாலயம் க. நாகராஜன் பபாசியின் தலைவர் மற்றும் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்திலிருந்து, முழு நிர்வாகக் குழுவைக் கூட்டாமல் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டிருப்பதும் தெரிய வருகிறது.

அரசின் தவறுகளைச் சுட்டிக் காட்டுவதும், விமர்சிப்பதும் மக்களாட்சியின் அடிப்படைக் கூறுகள். உலகம் முழுக்க கருத்துரிமையைப் பாதுகாப்பதிலும், பரப்புவதிலும் புத்தகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால், இந்தியாவின் முக்கியப் புத்தகத் திருவிழா ஒன்றிலேயே கருத்துரிமை நசுக்கப்பட்டிருப்பது முரண்நகையன்றி வேறல்ல.

ஆண்டு தோறும் அறிவுப்பசியுடன் லட்சக் கணக்கான வாசகர்கள் கூடும் சென்னை புத்தகத் திருவிழாவை ஏற்பாடு செய்யும் பபாசி, கருத்துச் சுதந்தரத்தைப் பாதுகாக்காமல் இப்படி தரம் தாழ்ந்து நடந்திருப்பது, மரியாதைக்குரிய பதிப்புத் தொழிலைக் கேவலப்படுத்தும் செயலே ஆகும். சிவில் சமூகம் நிச்சயம் கண்டிக்க வேண்டிய விஷயம் இது!

‘கருத்துரிமை என்பது சலுகையல்ல, அது அரசியல் சாசனம் நமக்கு வழங்கியிருக்கும் உரிமை’ என்பதை பபாசியும், தமிழக அரசும் உணர வேண்டும். பதிப்பாளர் அன்பழகன் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும், மக்கள் செய்தி மையம் மீண்டும் புத்தகத் திருவிழாவில் கடை திறக்க பபாசி அனுமதிக்க வேண்டுமெனவும் பியூசிஎல் கோருகிறது.

- கண. குறிஞ்சி, மாநிலத் தலைவர் & க.சரவணன், மாநிலப் பொதுச் செயலர், பியூசிஎல்

Pin It