திரிபுரா மாநிலத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட உடனேயே, அதாவது பா.ஜ.க. ஆட்சிக் கட்டிலில் அமர்வதற்கு முன்பேயே, அவசரஅவசரமாக அங்கே லெனின் சிலை உடைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைத்தால் பெரியார் சிலைகள் அனைத்தும் உடைக்கப்படும் என்று அக்கட்சியின் தேசியச் செயலாளரான எச்.ராஜா அறிவித்தார். காவிகள் ஓரிடத்தில் பெரியாரின் சிலையைச் சேதப்படுத்தவும் செய்தனர்.
ஆனால் தமிழ்நாட்டில் இதற்குக் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது. திராவிட இயக்கத்தினர் மட்டும் அல்லாது அனைத்து மக்களும் அவ்வாறு எதிர்ப்பு தெரிவித்தது ஒரு சிறப்பாகும். அதுவும் "நாங்கள் கடவுள் நம்பிக்கையாளர்கள் தான். பெரியார், கடவுளை மறுப்பவர் என்பதும் நன்றாகத் தெரியும். அந்த வகையில் பெரியாருடன் மாறுபட்டாலும், அவர் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களுக்கு ஆற்றிய பெரும் பணியை அறிவோம். எங்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்கு அவர்தான் வழிகாட்டி" என்று தெளிவான முழக்கத்துடன் அவர்கள் குரல் கொடுத்ததானது பெரியாரின் எதிரிகளை மிரளச் செய்து இருக்கிறது.
இதைத் தொடர்ந்து நாட்டின் பிற பகுதிகளில் அம்பேத்கரின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டன. எது நடந்தாலும் கருத்து சொல்வது இல்லை என்ற முடிவோடு "அமைதி" காத்துக் கொண்டு இருந்த பிரதமர் மோடி வாயைத் திறந்தே தீர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேற்கு வங்காளத்தில் ஜனசங்கம் (அந்நாளைய பா.ஜ.க.) கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான சியாமா பிரசாத் முகர்ஜியின் சிலை சேதப்படுத்தப்பட்டது. உடனே பிரதமர் மோடி சிலைகளை உடைப்பது தவறு என்று திருவாய் மலர்ந்து அருளிவிட்டார்.
ஆனால் "நான் இப்படிச் சொன்னேன் என்பதற்காக நீங்கள் அமைதியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை." என்பது காவிக் கும்பலினரின் இரகசியக் குறியீடு போல் இருக்கிறது. தமிழ்நாட்டு மக்களின், அதுவும் திராவிட இயக்கங்களைச் சாராத மக்களின் கடும் எதிர்ப்பைக் கண்டு அஞ்சி, தங்கள் பெரியார் சிலை உடைப்புப் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த காவிக் கும்பலினர் மீண்டும் வீரியமாக அப்பேச்சைத் தொடர்ந்து பேசி வருகின்றனர். ஓரிடத்தில் உடைக்கவும் செய்துள்ளனர்.
பெரியார் சிலையை உடைத்தது / உடைப்பது தவறு என்று கொந்தளித்த மக்களைப் பார்த்து "அது ஒரு கல் தானே? அதை உடைப்பதில் மனம் ஏன் நோகிறது?" என்றும் "பெரியார் விநாயகர் சிலைகளை உடைத்தாரே?" என்றும் வினாக்களை எழுப்புகின்றனர்.
விநாயகர் சிலைகளின் மீது கற்பித்து வைக்கப்பட்டு உள்ள புனிதம் உண்மை அல்ல என்று மெய்ப்பிப்பதற்காகவே பெரியார் அவற்றை உடைத்துக் காண்பித்தார். அதுவும் கோவில்களில் உள்ள சிலைகளையோ, மற்றவர்களுக்கு உரிமையான சிலைகளையோ அவர் உடைக்கவில்லை. தன் சொந்தக் காசைச் செலவழித்து விநாயகர் சிலைகளை வாங்கி உடைத்துக் காண்பித்தார். அதையும் அவர் இரகசியமாகச் (பெரியார் சிலைகளைக் காவிகள் திருட்டுத்தனமாக உடைப்பது போல்) செய்யவில்லை. மக்கள் திரளுக்கு நடுவே "இது கல் தான். இதில் புனிதம் ஒன்றும் இல்லை. இதை உடைப்பதால் எந்தக் கேடும் வந்து விடாது என்று புரிய வைப்பதற்காகவே உடைக்கிறேன்." என்று வெளிப்படையாகக் கூறியே உடைத்தார். இதே போல் கோவிலில் உள்ள கடவுள் சிலைகளையும் உடைத்தால் ஒரு கேடும் வந்து விடாது என்று பிரச்சாரம் செய்தாரே ஒழிய கோவிலுக்குள் நுழைந்து அங்கிருக்கும் சிலைகளை உடைக்கவில்லை.
காவிக் கும்பலினரே! நீங்கள் பெரியார் சிலைகளை உடைக்க வேண்டும் என்று விரும்பினால் முதலில் அவற்றை விலை கொடுத்து வாங்குங்கள். பின் அவற்றை உடைப்பதற்கான காரணங்களைத் தெளிவாகக் கூறுங்கள். பின் உடையுங்கள். பெரியார் இருந்திருந்தால் தன் சிலையை உடைக்க முனைபவர்களுக்குத் தானே சிலைகளை விற்க ஆயத்தமாக இருப்பதாக அறிவித்து இருப்பார்.
1970-71ஆம் ஆண்டில் பெரியார் இராமர் படத்திற்குச் செருப்பு மாலை அணிவித்தும், செருப்பால் அடித்துக் கொண்டும் ஊர்வலம் சென்ற போது, பெரியார் படத்திற்குச் செருப்பு மாலை அணி விப்போம் என்றும், பெரியார் படத்தைச் செருப்பால் அடிப்போம் என்றும் கூறி, சனாதனவாதிகள் கொதித்து எழுந்தனர். உடனே பெரியார் செருப்பு மாலை அணிவிப்ப தற்காகத் தன்னுடைய உருவப் படம் விலைக்குக் கிடைக்கும் என்றும், வெளியில் போலியான உருவப்படம் வாங்கி ஏமாறாமல் தன்னிடம் தத்ரூபமான உருவப் படத்தை வாங்கிச் செருப்பு மாலை அணிவிக்கலாம் என்றும், படத்தைச் செருப்பால் அடிக்கலாம் என்றும் அறிவித்தார். அது மட்டும் அல்லாமல் மாலையாக அணிவிப்பதற்கும் படத்தை அடிப்பதற்கும் செருப்புகளையும் விற்பனை செய்ய ஆயத்தமாக இருப்பதாகவும் அறிவித்தார். இன்னும் வேண்டினால் பிய்ந்த செருப்புகளையும் அளிக்கத் தயார் என்றும் கூறினார். சனாதனக் கும்பல் பேச்சு மூச்சில்லாமல் அடங்கி விட்டது.
இப்போதும் காவிகளுக்கு, பெரியாரின் நிலைப்பாட்டையே அறைகூவல் விடுக்கிறோம். நீங்கள் பெரியார் சிலைகளை உடைக்க வேண்டும் என்றால் முதலில் அவற்றை விலை கொடுத்து வாங்குங்கள். பின் என்ன காரணங்களுக்காக உடைக்க விரும்புகிறீர்கள் என்று தெளிவாக அறிவியுங்கள். அக்காரணங்கள் ஏற்புடையவை என்றால் மற்றவர்களும் உங்களைப் பின்பற்றுவார்கள். அதை விடுத்து மற்றவர்கள் அமைத்த, மற்றவர்களுக்கு உரிமையான சிலைகளை உடைக்க நினைக்காதீர்கள். அது திருட்டும் கொள்ளையும் ஆகும்.