மூன்று தலைமுறையாக சனாதன தர்மத்தை தமிழ்நாடு தோற்கடித்திருக்கிறது என்று கூறிய ப. சிதம்பரம், பெரியாரை நான் பல ஆண்டுகளுக்கு முன்பே உள்வாங்கியவன் என்று கூறினார்.

கலைஞர் செய்தி தொலைக்காட்சியில் அவர் அளித்த பேட்டியிலிருந்து சில பகுதிகள்:

கேள்வி: 2019 கால தேர்தல்களில்கூட நீங்கள், ஸ்டாலின் பாஜகவை எதிர்ப்பது மிக கடுமையான பணி என்று குறிப்பிட்டீர்கள் அது எந்தளவு கடுமையானது ?

பதில்: மிக கடுமையான பணி அது. அவர் ஆட்சிக்கு வந்தவுடன் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பாஜக தான் ஆட்சியில் இருக்கப் போகிறது. மாநில அரசு மத்திய அரசிற்கு இணக்கமாகத்தான் போக வேண்டும். ஆனால், தவறு நடக்கிற போது சுட்டிக் காட்டுகிறார். மத்திய அரசை விமர்சிப்பது என்பது நெருப்பின் மேல் நடக்கிறது போன்றது தான்.

அதை மிக கவனமாக செய்து வருகிறார். அழுத்தமான சொற்களை பயன்படுத்துகிறார். அதே நேரத்தில் யாரையும் வசைபாடுவதில்லை. யாரை பேசும் போதும் தவறான வார்த்தைகளை பயன்படுத்து வதில்லை. மிக கவனமாக செயல்பட்டு வருகிறார். அவர் முதல்வராக வர வேண்டும் முதல்வரான பின்பு மத்திய அரசிடம் இணக்கமாக இருக்க வேண்டும். இணங்கி போதல் வேறு கொள்கையில் இருப்பது வேறு.

கேள்வி: 2019 திமுக மேடையில் தந்தை பெரியார் தான் எங்களுக்கும் பாட்டன் உங்களுக்கும் பாட்டன் என்று கூறினீர்கள் ?

பதில்: உண்மை தான். தந்தை பெரியார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர். பின் அதிலிருந்து வெளியேறி திராவிடர் கழகத்தை ஆரம்பித்து அதன் தலைவராக இருந்தார். எல்லாருக்கும் பாட்டன் அவர்தான்.

கேள்வி: பெரியாரிய பார்வையோடும் காங்கிரஸ் செயல்படுகின்ற நிலையில் உள்ளதா ?

பதில்: நான் பெரியாரின் பார்வையை உள்வாங்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. 'கணையாழி' பத்திரிக்கையை பொறுப்பெடுத்து நடத்துகின்ற போது அதன் தீபாவளி மலருக்கு அனைவரும் சங்கராச்சாரியை பேட்டிகண்டு அட்டை படத்தில் போடுவார்கள். நான் பெரியாரை பேட்டி கண்டு அட்டை படத்தில் பதிவிட்டேன்.

கேள்வி: இந்த தேர்தலில் தமிழ் வாக்காளர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான பிரச்னையாக நீங்கள் எதை கருதுகிறீர்கள்?

பதில்: தமிழ் மொழிக்கு பேராபத்து; இந்தி வந்து தமிழ் மீது உட்கார்ந்து கொண்டுவிடும். தமிழ் கலாச்சாரத்துக்கு பேராபத்து. இந்து வேறு முஸ்லிம் வேறு, இந்து வேறு கிருஸ்துவர்கள் வேறு என்பது தமிழ் கலாச்சாரம் கிடையாது. இந்து, கிருஸ்துவ, முஸ்லீம்களை இணைப்பது தமிழ் மொழியும், தமிழ் இனமும் தான்.

பாரதிய ஜனதா கட்சி புகுத்துகிற கலாச்சாரம் என்பது தமிழ் கலாச்சாரத்தை அழித்துவிடும். மூன்றாவது முக்கிய காரணம், பாரதிய ஜனதா கட்சி சனாதன தர்மத்தை தனது கொள்கையாக கொண்டிருக்கிறது. அதை திராவிட இயக்கமும் தேசிய இயக்கமும் தமிழ்நாட்டில் உறுதியாக எதிர்க்கிறார்கள்.

தந்தை பெரியாருக்குப் பின்னால் பெருந்தலைவர் காமராசரும், பேரறிஞர் அண்ணாவும் அதை எதிர்த்தார்கள். மூன்று தலைமுறை சனாதன தர்மத்தை எதிர்த்து தமிழ்நாடு வென்றிருக்கிறது. மீண்டும் சனாதன தர்மம் நுழைந்து விடாமல் பார்த்துக் கொள்வது வாக்காளர்களின் கடமை.

எனவே, தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம், தமிழ் பண்பாடு ஆகியவற்றை காப்பாற்றவேண்டுமானால் பாஜக கூட்டணி வைத்துள்ள அதிமுக ஆகியவை தோற்கடிக்கப்பட வேண்டும். அதிமுக ஆட்சியி லிருந்து இறக்கப்பட்டு திமுக அமரும்.

ஆனால் பாஜக அரசு போகாது, பாஜகவின் நச்சுக்கொள்கைகள் தென்னகத்தில் நுழைய விடாமல் தடுத்தோம் என்ற பெருமை தமிழர்களுக்கு கிடைக்கும்.

- கலைஞர் செய்தி தொலைக்காட்சிக்கு ப. சிதம்பரம் அளித்த நேர் காணலிலிருந்து

Pin It