தமிழில் இரவுப் பொழுதை நான்காகப் பகுப்பது மரபு. அவை முதல் யாமம், இரண்டாம் யாமம், மூன்றாம் யாமம், நான்காம் யாமம் என்பனவாகும். யாமம் என்பது ஜாமம் என மருவிய நிலையில் இன்றைக்கும் கிராமத்து வழக்கில் இருப்பதை அறிகிறோம். பண்டைக் காலம் முதற்கொண்டு பொழுதைப் பகுத்து நோக்கும் வழக்கம் தமிழரிடம் இருந்துவருவதை இலக்கியங்கள் காட்டுகின்றன. ஒரு நாளின் இரு பகுதிகளாக உள்ள இரவு, பகல் பொழுதுகளைப் பகுத்து நோக்கிய தமிழரின் நாட்கணக்கு முறை நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது.

பத்துப்பாட்டுள் ஒன்றாகிய மதுரைக்காஞ்சியில் பண்டைய மதுரை மாநகரம் இரவுப் பொழுது மேற்சுட்டிய நான்கு யாமத்திலும் எப்படி இருந்தன என்பதை அழகாக வருணித்துக் கூறுவார் மாங்குடி மருதனார் என்னும் சங்கப் புலவர். முதல் இரண்டு யாமத்தின் நிகழ்வுகளை அழகியல் உணர்வுகளோடு மருதனார் பதிவுசெய்து நம் மனதை மயக்கச் செய்கிறார்; மூன்றாம் யாமத்து நிகழ்வுகளை நெஞ்சு நடுக்குறும் வகையில் பதிவுசெய்திருக்கிறார். நான்காம் யாமமாகிய அதிகாலைப் பொழுது மென்மையான சூழலோடு சொல்லிப் பொழுது புலர்வதாகக் காட்டுகிறார் புலவர்.

மூன்றாம் யாமத்தில் விழித்திருந்து தொழில் புரிபவர்கள் இருவர். அவர்கள் கள்வர். அந்தக் கள்வர்களிடமிருந்து குடிகளைக் காக்கும் காவலர் ஆகியோராவர். மூன்றாம் யாமத்தில் இவர்களோடு பேயும் விழித்திருந்து தம் தொழிலைச் செய்வதாகப் புலவர் காட்டுகிறார். மூன்றாம் யாமத்தில் இந்த மூவருக்கு மட்டுமே வேலை போலும். மற்றவர்கள் உழைத்துச் சேமித்து வைத்துள்ள பொருள்களை இரவுப்பொழுதில் களவாடிச் செல்லும் கள்வரைத்தான் கண்மாறாடவர் என்று மருதனார் சுட்டுகிறார். இந்தச் சொல்லுக்கு ‘விழித்த கண் இமைக்குமளவிலே மறைகின்ற கள்வர்’ என்று உரை எழுதுகிறார் நச்சினார்க்கினியர். மூன்றாம் யாமத்தில் அந்தக் கள்வர்கள் (கண்மாறாடவர்கள்) எப்படி வெளிப்படுவார்களாம் தெரியுமா?

பேய்களும், வருத்தும் தெய்வங்களும், கழுகுகளும் திரியத் தொடங்கும் அந்த மூன்றாம் யாமத்தில், அப் பேய்கள் போலத் தீக்குணம் படைத்த கள்வரும் தம் தொழிலுக்காக வெளிவருவார்களாம். அவர்கள் வெறுமனே களவுத் தொழிலில் ஈடுபவர்கள் இல்லை; களவு நூல் கற்றுக் களவில் வல்லுநகராக விளங்குபவர்களாம். இருட்டிற்கு மேலும் இருள் சேர்க்கும் கருஞ்சட்டை முதலிய கருப்பு உடைகளை அணிந்தும், தொழிலுக்கு உகந்த, களவுக்குதவும் கத்தி, வாள், உளி, கயிற்று ஏணி முதலிய கருவிகளுடன் வெளிப்படுவர். விழித்த கண் இமைக்கும் அளவிலே மறைந்துவிடும் இயல்புடையவர்களாம் இக் கள்வர்கள். குடிமக்களை வருத்திக் களவுத் தொழில் புரியும் கள்வரையும் எப்படியரு அழகான தமிழ்ச் சொல்லால் சுட்டுகிறார் மருதனார். இதுதான் சங்கப் புலவனின் உயர்ந்த பண்பு. இப்படித்தான் சங்க காலத்துப் புலவர்களின் பாடல் இயற்றும் மாண்புகள் இருந்துள்ளன. மருதனார் சுட்டும் கள்வரையும் கவர்ந்திழுக்கும் அவ்வரிகள் இவ்வாறு அமைந்து காணப்படுகின்றன.

பேயும் அணங்கும் உருவுகொண் டாய்கோற்
கூற்றக் கொஃறேர் கழுதொடு கொட்ப
இரும்பிடி மேஎந்தோ லன்ன இருள்சேர்பு
கல்லு மரனுந் துணிக்குங் கூர்மைத்
தொடலை வாளர் தொடுதோ லடியர்
குறங்கிடைப் பதித்த கூர்நுனைக் குறும்பிடிச்
சிறந்த கருமை நுண்வினை நுணங்கறல்
நிறங்கவர்பு புனைந்த நீலக் கச்சினர்
மென்னூல் ஏணிப் பன்மாண் சுற்றினர்
நிலனகழ் உளியர் கலனசைஇக் கொட்கும்
கண்மா றாடவர் ஒடுக்க மொற்றி (632 - 642)

புலவர் பெருமக்கள், தம்மையும் தம் நாட்டையும் புகழ்ந்துபாடும் வகையில் பண்பால் ஒழுகுதலே உயரிய வாழ்க்கையின் நோக்கமாகக் கருதினர். பண்டைய தமிழ் அரசர்கள், புலவர் போற்றும் வகையில் தமிழ் மன்னர்கள் நாட்டை ஆண்ட வரலாற்றைச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. நாட்டை ஆளும் மன்னன் ஒருவன் புலவன் புகழ்ந்து பாடாத வகையில் நான் ஆட்சி செய்ய விரும்பவில்லை என்று சொன்னதாகக் கீழ்வரும் பழம்பாடல் ஒன்று சுட்டுகிறது.

ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவ னாக
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்
புலவர் பாடாது வரைகஎன் நிலவரை

பாண்டிய நெடுஞ்செழியன், வேற்று மன்னன் ஒருவனோடு புரியும் போரில் தான் தோல்வியுற்றால் ‘மாங்குடி மருதன் என்னும் சான்றோனை முதல்வனாகக் கொண்ட புலவர்கள் தம் நிலப்பகுதியைப் புகழ்ந்து பாடாமல் நிறுத்திக் கொள்ளும் வகையில் எனது நிலைமை கெடுவதாகுக’ என்று வஞ்சின மொழி உரைத்ததாக வரலாறு சுட்டுகிறது. இது சங்காலப் புலவனின் கவித்திறத்தையும் கவிப் புலமையும் காட்டுவதாக உள்ளது. சங்க காலப் புலமைச் சமூகத்தின் சொல் வளமையும் இது வெளிப்படுத்துகிறது.

Pin It