பண்டைய மேற்குலகில் அறிவியலும் பேரரசும்:

 அறிவியல் வளர்ச்சிக்கு முன்பு உலகம் தட்டையானது எனவும் பூமிதான் இந்தப் பிரபஞ்சத்தின் மையம் எனவும் ஞாயிறும் பிற கோள்களும் பூமியைச் சுற்றி வருகின்றன எனவும் மனிதன் நம்பி வந்தான். மேற்குலகில், சுமார் கி.மு. 500 முதல் கி.மு. 200 முடிய ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சி இக்கருத்துக்களை மாற்றியமைத்தது. இக்காலகட்டத்தில் கிரேக்கத்தில் நகர அரசுகள் இருந்ததோடு, மத்தியதரைக்கடலை ஒட்டி பல்வேறு சிறு சிறு கிரேக்கக் குடியேற்ற நகர அரசுகளும் இருந்தன. இவை அறிவியலை வளர்த்தெடுத்தன. அலெக்சாந்தரால் எகிப்தில் உருவாக்கப்பட்ட அலெக்சாண்ட்ரியா நகரம் கிரேக்க அறிவியலின் அடித்தளமாகச் செயல்பட்டது. அங்கு தொடர்ந்து அறிவியல் வளர்ந்து வந்தது. இதன் விளைவாகவும் அதற்கு முன்னரும் பல வானவியல் அறிவியலாளர்கள் தோன்றினார்கள். அதில் பெரிக்கிளிசு(PERICLES)-(கி.மு.495-429) காலத்தில் வாழ்ந்த ஆனக்சாகரசு (ANAXAGORAS)–(கி.மு.510-428), சிசிலித்தீவில் உள்ள சிரக்கியூசு நகரத்தைச் சேர்ந்த ஆர்க்கிமிடிசு(ARCHIMEDES)-(கி.மு.287-212), அதே காலத்தில் வாழ்ந்த ஞாயிற்று மண்டலத்தின் தந்தை எனக் கருதப்படும் அரிசுட்டார்க்கசு(ARISTARCHUS)- (கி.மு.310-230), அலெக்சாண்ட்ரியா நகர நூலகத்தின் காப்பாளர் எரட்டாசுத்தனிசு(ERATOSTHENES)-(கி.மு.276-194) ஆகியவர்கள் முக்கியமானவர்கள் ஆவர். இவர்கள் அறிவியல் வளர்ச்சியின் துணைகொண்டு, பண்டைய கருத்துக்களை மாற்றியமைத்தார்கள்-(1).

 science historyஇவர்கள் உலகம் உருண்டையானது எனவும், பூமி பிரபஞ்சத்தின் மையம் இல்லை எனவும், பிரபஞ்சத்தில் நிறைய பூமிகளும் ஞாயிறுகளும் உள்ளன எனவும், பூமிதான் ஞாயிற்றைச் சுற்றி வருகிறது எனவும் கண்டுணர்ந்து சொல்லியதோடு பூமியின் சுற்றளவையும் கிட்டத்தட்டத் துல்லியமாக அளந்து கணக்கிட்டார்கள். கிட்டத்தட்ட கி.மு. 100வரை இந்த அறிவு மேற்குலக அறிவியலாளர்களிடம் இருந்து வந்தது எனலாம். இந்த அறிவின் ஆழத்துக்கு பூமியின் சுற்றளவை அன்றே அளந்தது குறித்தத் தரவுகளைக் காண்போம். இதைச் செய்தவர் அலெக்சாண்ட்ரியா நூலகத் தலைவராக இருந்த எரட்டாத்தனிசு என்பவர் ஆவார். இவரது காலம் கி.மு.276-194 ஆகும்.

 அலெக்சாண்ட்ரியாவுக்கு 493 மைல் தொலைவில் இருந்த அசுவான் நகரில், முதுவேனிற்கால நடு நாளன்று, நண்பகலில், ஓர் ஆழமான கிணற்றின் அடியில் இருந்த நீரில் கதிரவனின் கதிர்கள் பட்டு பிரதிபலித்தது. அவ்வூரில் கதிரவனின் கதிர்கள் நேர் கீழாக, அதாவது செங்குத்தாக உறைந்தன. அதனால்தான் கிணற்றின் அடி ஆழத்தில் இருந்தும் கதிரவனின் கதிர்கள் பிரதிபலிக்க முடிந்தது. அச்சமயத்தில் அவ்வூர் முழுவதும் ஓரிடத்தில் கூட நிழல் இருக்கவில்லை. அதே சமயம் அலெக்சாண்ட்ரியாவில் இருந்த ஒவ்வொரு கட்டடமும் நிழலைத் தந்தது. அலெக்சாண்ட்ரியாவில் கதிரவனின் கதிர்கள் செங்குத்து நிலையைவிட்டு 7.2 டிகிரி விலகிச் சாய்ந்து உறைந்தன. இரண்டு ஊர்களுக்கும் இடையே கதிரவன் இவ்வாறு வேறுபட்டு உறைப்பதற்கு பூமி உருண்டையாக, ஒரு கோளமாக இருப்பதே காரணம் என்பதை எரட்டாத்தனிசு அறிவார். கோளம் 360 டிகிரி கொண்டது. 7.2 டிகிரி என்பது 50இல் ஒரு பங்கு ஆகும். ஆகவே ஒருபங்குக்கு 493 மைல் எனும்பொழுது 50 பங்குக்கு 24,650 மைல் வருகிறது என அவர் கணக்கிட்டார். எரட்டாத்தனிசு அவர்களின் கணக்குப்படி பூமியின் சுற்றளவு என்பது 24,650 மைல் ஆகும். இன்றைய நவீன அறிவியல்படி பூமியின் சுற்றளவு 24,830 மைல் ஆகும். இரண்டுக்கும் இடையே 180 மைல்தான் வேறுபாடு ஆகும். அதாவது, பிழையின் அளவு ஒரு விழுக்காட்டுக்கும் குறைவு(0.7%) ஆகும்-(2).

 இந்தளவு வளர்ச்சியடைந்திருந்த வானவியல் அறிவு அதன்பின் இல்லாது போனது. உரோம நகர அரசு வளர்ந்து உரோமப்பேரரசு ஆக ஆகியது. நகர அரசுகள் அனைத்தும் இல்லாது போயின. எகிப்தும் கி.மு. 31 வாக்கில் உரோம அரசின் ஆளுகைக்குக் கீழ் வந்தது. மேற்குலகம் முழுவதையும் உரோமப் பேரரசு ஆக்ரமித்துக் கொண்டது. உரோமப் பேரரசு வளர்ச்சியடைந்து நகர அரசுகள் இல்லாது போனதின் காரணமாக, அறிவியலின் வளர்ச்சி தடையானதோடு, நாளடைவில் அது பின்னோக்கிச் செல்லத் துவங்கியது. அதன் விளைவாக கி.பி 2ஆம் நூற்றாண்டில் தோன்றிய வானவியலாளர் தாலமி-1(CLAUDIUS PTOLEMY)-(கி.பி.100-170) என்பவர், உலகம் தட்டையானது எனவும் பூமிதான் இந்தப் பிரபஞ்சத்தின் மையம் எனவும் ஞாயிறும் பிற கோள்களும் பூமியைச்சுற்றிவருகின்றன எனவும் போன்ற கருத்துக்களைக் கொண்ட ‘Almagest’ என்கிற நூலை எழுதினார். அப்பிற்போக்குக் கருத்துக்களே மறு மலர்ச்சிக்காலம் வரை அனைவராலும் ஏற்றுக்கொண்ட கருத்துக்களாக ஆகியது. முடியாட்சி காலத்துப் பேரரசு என்பது மக்களைக் கட்டுப்படுத்தவும், அடக்கி ஆளவும், அறிவியலை முடக்கி, கருத்துமுதல்வாதக் கருத்துக்களையும், கடவுளையும், மதநம்பிக்கைகளையும் பரப்புகிறது. அதனைத்தான் உரோமப் பேரரசும் செய்தது. அதன் விளைவாக அறிவியல் வளர்ச்சி இல்லாது போனது-(3).

தொல்காப்பியம் - மூலச்சிறப்புள்ள தமிழ்ச்சிந்தனை மரபின் வெளிப்பாடு:

 பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை அவர்களின் ஆய்வுமுறை பற்றிப் பேராசிரியர் வ.ஐ. சுப்பிரமணியம் அவர்கள் எடுத்துக்காட்டியதை பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள், தமிழில் இலக்கிய வரலாறு என்கிற தம் நூலில், ‘மூலப்பாடத் திறனாய்வாளர் ஏற்றுக் கொள்ளத்தக்க நிரூபண முறைமைகளைக் கொண்டிராத தொல்காப்பியப் பாடப்பகுதிகள் பிற்காலத்து இடைச்செருகல்கள் என ஏற்றுக்கொள்ள அவரால் முடிய வில்லை. திட்டவட்டமான கருத்துக்களின் வரலாறு இல்லாத ஒரு நிலையில் வடமொழி நூல்களில் கூறப்பட்ட கருத்துக்கள் தமிழ் நாட்டிலிருந்து எடுக்கப்பட்டிருக்கலாம் எனும் சாத்தியப்பாட்டினையும் அவர் ஒத்துக் கொள்ளவில்லை” எனச் சுட்டிக் காட்டியுள்ளார்-(4). தொல்காப்பியத்தில், பொருளதிகார மரபியலில், விலங்குகளைப் பற்றியும், மரங்களைப் பற்றியும் கூறுமிடத்தில் எவ்விதத் தொடர்புமின்றி வருண வேறுபாடுகளைக் குறிக்கும் செய்திகள் கூறப்படுகின்றன. ஆதலால் மரபியல் நூற்பாக்கள் 71-85 முடிய உள்ளவை இடையில் நுழைக்கப்பட்டனவே என்பதில் ஐயம் இல்லை. ‘சூத்திரம் என்ற சொல்லும், உத்தி என்ற சொல்லும் தாம் இடையில் புகுத்தப்பட்ட தன்மையை எளிதே புலப்படுத்துகின்றன. ஆதலின் 100-112 முடிய உள்ள நூற்பாக்கள் ஆசிரியரது அல்ல என்பது தெளிவாகிறது-(5). தொல்காப்பியத்தில் இவை போன்று வேறுசில இடைச்செருகல்கள்களும் இடம் பெற்றுள்ளன. ஆனால் இந்த இடைச் செருகல்கள்தான் தொல்காப்பியம் அழியாமல் காப்பாற்றப்பட்டதற்குக் காரணம் எனலாம்.

 இதுவரை தமிழ்மெய்யியல் பற்றித் தரப்பட்ட தரவுகளில் இருந்து தொல்காப்பியம் குறித்துக் கீழ்கண்ட கருத்துக்களுக்கு நாம் வரமுடியும். மூலச்சிறப்புள்ள சாங்கியம், பண்டைய தாந்திரீகம் ஆகியவற்றின் அடிப்படைக் கோட்பாடுகளையும், பொருள்முதல்வாதச் சிந்தனையாளர்கள் மூலச்சாங்கியத்திற்கும், தொடக்ககாலச் சிறப்பியத்திற்கும், யோக, உலகாயத மெய்யியல்களுக்கும் சேர்ந்தவை எனக் கருதுகிற படிமுறைக்கோட்பாடு, அண்டவியல்(ஐம்பூதக்) கோட்பாடு, அளவை இயல் கோட்பாடு, காரண–காரியக்கோட்பாடு, இன்பவியல்கோட்பாடு ஆகிய அறிவியல் துறைகளையும் விரிவாகவும் செறிவாகவும் தொல்காப்பியம் எடுத்துச் சொல்கிறது. வெளி, காலம் குறித்த தொல்காப்பியரின் கருத்துக்கள் ‘ஸ்டீவன் ஆக்கிங்சு’ போன்ற அண்மைக்கால அறிவியல் அறிஞர்களின் கருத்துக்களோடு ஒத்துப்போகிறது. சாங்கியத்தின் தாக்கம் இல்லாத பண்டைய இந்தியத்தத்துவங்களே இல்லை எனலாம். ஆனால் அதன் மூலச்சிறப்புள்ள கோட்பாடுகள் அனைத்தும் செறிவோடும் நிறைவோடும் தொல்காப்பியத்தில்தான் இடம்பெற்றுள்ளன. அறிவு ஆராய்ச்சியியலாகிய ஆன்வீக்சி எனப்படும் ஐந்திரம் நிறைந்தவராக தொல்காப்பியர் கருதப்படுகிறார். ஆகவே தொல்காப்பியம் என்பது மூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபின் வெளிப்பாடு எனலாம். அதனால்தான் அறிஞர் டாக்டர் கபில் சுவெலபில் அவர்கள், தொல்காப்பியம், “மனித அறிவாற்றல் எவ்வளவு வியத்தகு உச்சநிலை எய்தக்கூடும்” (one of the finest monuments of human intelligence) என்பதைக் காட்டும் சிறந்த சான்றுகளுள் ஒன்று எனவும் இலக்கியக் கொள்கையில் வேறு எந்தப் பண்டைய மொழிகளிலும் இல்லாத சிறந்த கருத்துக்களைத் தொல்பொருள் செய்யுளில் தொல்காப்பியம் கூறுகிறது எனவும் குறிப்பிடுகிறார். காலம்-வெளி குறித்த தொல்காப்பியர் கருத்து மனித அறிவாற்றலின் உச்ச நிலையைக் காட்டுகிறது.

 பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை போன்றவர்கள் வைதீக மரபு சார்ந்த இந்திய வரலாற்றைக் கட்டமைக்கும் மனநிலை உடையவர்களாகவே இருந்தனர். அதனால்தான் அவர்கள் போன்றவர்களால் தொல்காப்பியத்தின் சிறப்பம்சங்களை, அதன் மூலச்சிறப்புள்ள பொருள்முதல் வாதச் சிந்தனைகளைப் புரிந்துகொள்ள இயலவில்லை. அதில் புகுத்தப்பட்ட இடைச்செருகல்களைக் கொண்டே அவர்கள் தொல்காப்பியத்தை மதிப்பிட்டார்கள். தொல்காப்பியம் போன்ற தமிழ் நூல்களில் இருக்கும் மூலச்சிறப்புள்ள கருத்துக்கள் அனைத்தும் வடமொழி சார்ந்த சிந்தனைகளில் இருந்து வந்தவைகளே என அவர்கள் கருதினார்கள்.

 வடமொழி சார்ந்த சிந்தனை என்பது வேத, உபநிடதங்களை அடிப்படையாகக் கொண்ட கருத்துமுதல்வாத வைதீகச்சிந்தனை என்றே பொருள்கொள்ளமுடியும். அதில் பொருள்முதல்வாதச் சிந்தனைகளுக்கு இடமில்லை. வடமொழியில் இருக்கும் சாங்கியம், உலகாயதம், சிறப்பியம் & நியாயம், தாந்திரீகம், போன்ற பொருள்முதல்வாதக் கருத்துக்கள் அனைத்தும் வடமொழி சார்ந்த கருத்துமுதல்வாத சிந்தனைகளுக்கு எதிரானவை, ‘பண்டைய இந்தியச்சிந்தனை’ என்பதற்கு மாறுபட்டவை, பிற இடங்களில் இருந்து வந்தவை, முக்கியமாகத் தமிழகத்திலிருந்து வந்தவை என்பதை நமது ஆய்வு உறுதி செய்கிறது.

 தமிழ்ச்சமூகச்சூழல் பொருள்முதல்வாதக் கருத்துக்கள் செழித்து வளர்வதற்கு ஏற்ற இடமாக மிக நீண்டகாலம் இருந்துள்ளது என்பதை நாம் உறுதிப்படுத்தியுள்ளோம். அதனால்தான் சாங்கியம் போன்ற மூலச்சிறப்புள்ள பொருள்முதல்வாதச்சிந்தனைகள் தமிழகத்தில் உருவாகின. ஆனால் அது போன்ற ஒரு சமூகச்சூழல் வட இந்தியாவில் அதிக காலம் நீடிக்கவில்லை. வட இந்தியாவில் நிலவிய வேத, உபநிடதச் சூழலும், பேரரசுக்கொள்கையும் கருத்துமுதல்வாதச் சிந்தனைக்கே இடமளித்தது. தமிழ் தனக்கான வரிவடிவத்தைக் குறியீடாக கி.மு. 1500 வாக்கிலேயே பெற்றிருந்தது என்பதை மயிலாடுதுறை கற்கோடாலியில் உள்ள குறியீடுகளும் இன்னபிற அகழாய்வு முடிவுகளும் உறுதிப்படுத்தியுள்ளன. கி.மு. 1000க்கு முன்பிருந்தே பொருள்முதல்வாதச்சிந்தனை தமிழகத்தில் செழித்து வளர்ந்து வந்தது என்பதை நாம் முன்பே உறுதி செய்துள்ளோம்.

 இவைபோன்ற புரிதல்கள் எதுவும் இல்லாத பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை போன்றவர்கள் சிறப்புமிக்க அனைத்துச் சிந்தனைகளுக்கும், அனைத்துக் கருத்துக்களுக்கும் வடமொழிச் சிந்தனைகளே, வைதீகச் சிந்தனைகளே மூலம் எனக் கருதினார்கள். இதன் காரணமாக வடமொழி நூல்களே அனைத்துத் தமிழ் நூல்களுக்கும் மூலநூல்கள் எனக் கருதும் சூழ்நிலை உருவானது. இவை வைதீக வழியிலான இந்தியாவை உருவாக்க வழியமைத்தது. இன்றும் கூட இது போன்ற வைதீக மரபு சார்ந்த வரலாறு கட்டமைக்கப்படுகிறது. கி.மு. 1000 முதல் கி.மு. முடிய இருந்த வட இந்தியச் சமூகச் சூழல் குறித்தோ, அதேகாலகட்டத் தமிழ்ச் சமூகச் சூழல் குறித்தோ முறையான, அறிவியல் அடிப்படையிலான, வரலாற்றுப் பொருள்முதல்வாத அடிப்படையிலான, தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், அகழாய்வு, மொழியியல் ஆகியவற்றின் அடிப்படையிலான ஆய்வுகள் இல்லாத வரலாறு குறித்தப் புரிதல்கள்தான் இவை அனைத்திற்கும் காரணம் என்பதோடு, வைதீக மரபு சார்ந்த இந்திய வரலாற்றைக் கட்டமைக்கும் மனநிலையும் ஒரு மிக முக்கியக் காரணம் எனலாம்.

 பொதுவுடமைவாதிகளான டாங்கே, வானமாமலை போன்றவர்களிடமே இந்த வைதீக மரபு சார்ந்த இந்திய வரலாற்றைக் கட்டமைக்கும் மனநிலை இருந்ததாக பேராசிரியர் வி. அரசு அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். டி.டி. கோசாம்பி போன்றவர்களிடமும் அது போன்ற மனநிலை இருக்கிறது என நான் கருதுகிறேன். ஆனால் அவர்களிடம் வரலாற்றுப் பொருள்முதல்வாதச் சிந்தனைகள் இருந்தன; ஆனால் தமிழகத்தின் சில ஆய்வாளர்களிடம் வரலாற்றுப்பொருள்முதல்வாதச்சிந்தனையும் இல்லை என்பதால் வைதீக மரபு சார்ந்த இந்திய வரலாற்றைக் கட்டமைக்கும் மனநிலை மிக மிக அதிகமாகவே இருக்கிறது எனலாம். பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை போன்றே, சிறப்புமிக்கப் பெரும்பாலானச் சிந்தனைகளுக்கும், பெரும்பாலான கருத்துக்களுக்கும் வடமொழிச் சிந்தனைகளே, வைதீகச் சிந்தனைகளே, சமற்கிருத நூல்களில் உள்ள கருத்துக்களே மூலம் என அவர்கள் கருதுகிறார்கள். அதன்மூலம் வைதீக மரபு சார்ந்த இந்திய வரலாற்றைக் கட்டமைக்கும் பணியை மிகச் சிறப்பாகச் செய்து அனைத்து மக்களின் வாழ்வுக்கும், வரலாற்றுக்குமான மூல ஊற்றாக விளங்குகிற, பொருள்முதல்வாதச் சிந்தனையின் அடிப்படையை தகர்த்தெறிகிறார்கள்.

 சமண பௌத்த மதக் கருத்துக்கள் வைதீகத்துக்கு எதிரானவை என்ற அளவில் அவைகளை இவர்கள் ஆதரிக்கிறார்கள். ஆனால் இந்த சமண பௌத்த மதக் கருத்துக்கள் உலகாயதம், வைசேடிகம் போன்ற பொருள்முதல் வாதச்சிந்தனை மரபுகளை எவ்வளவு கடுமையாக எதிர்த்துப் போராடி அவைகளை அழித்து ஒழித்தன என்பதை மறந்து விடுகிறார்கள். மணிமேகலை இதனை நமக்குத் தெளிவாகக் காட்டுகிறது. அதுபோன்றே சமண பௌத்த மதங்கள், மதம் என்ற நிறுவனமாக ஆகிய நிலையில் தங்களது முற்போக்கான பாத்திரத்தை அவை இழந்தன என்பதையும் அவர்கள் மறந்துவிடுகிறார்கள். இலங்கையில் பௌத்தமதம் என்ன செய்தது என்ற புரிதல் அவர்களிடத்தில் இல்லை.

 1500 ஆண்டுகளாக இலங்கை பௌத்தமதத்தின் மகாவம்சம் நூல் தமிழர்களைக் கொல்லுவதன் மூலமே பௌத்தத்தைக் காக்க முடியும் என்ற தமிழர் எதிர்ப்பு இனவெறிக்கருத்தைப் பரப்பி வந்தது. இன்றும் பரப்பிக் கொண்டிருக்கிறது. மகாவம்சம் என்பது சிங்களர்களின் புனித நூலாகக் கருதப்படுகிறது. மகாவம்சம் நூலில் துட்டகாமினியின் தாய், தான் கர்ப்பமாக இருந்தபோது, தமிழனான எல்லாள மன்னனின் தமிழ் வீரன் ஒருவனைக்கொன்று அவனது தலையின் மீது நின்று அந்தத் தமிழ் வீரனின் பச்சை இரத்தத்தை குடித்துத் தனது கர்ப்பகால விருப்பத்தை நிறைவேற்றிக்கொண்டாள். இவளே சிங்கள மக்களின் மகாதாயாகக் கருதப்படுகிறாள். இதே முறையில் இலங்கையில் நடந்த இனப் படுகொலையின் போது சிங்கள வெறியர்கள் பலர் தமிழ் மக்களைக் கொன்று அவர்களின் தலை மீது நின்று தமிழ் மக்களின் பச்சை இரத்தத்தை குடிக்கும் நிகழ்வு நடைபெற்று, அவை வரலாற்றில் பதிவும் செய்யப்பட்டுள்ளது. ஆதலால் தமிழர்களைக் கொல்லுவதே ஒரு சிங்களனின் வாழ்வுக்கு அடிப்படை என்பது போன்ற இனவெறிக்கருத்துக்களை மகாவம்ச நூலின் மூலம் சிங்களபௌத்தம் 1000 வருடங்களுக்கு மேலாகப் போதித்து வருகிறது. மகாவம்ச நூலில் துட்டகாமினி வரலாற்றைக்கூறும் பகுதியில் உள்ள 57 பக்கங்கள் தமிழர் வெறுப்பையும் இனவெறிக்கருத்துக்களையும் விதைக்கும் பக்கங்களாக உள்ளன. அதில்தான் மேலே கண்ட நிகழ்வும் உள்ளது-(6).

 தமிழகத்தில் பொருள்முதல்வாதச் சிந்தனையை அழித்தொழித்ததில் சமண பௌத்த மதங்களுக்குப் பெரும் பங்குண்டு. களப்பிரர் ஆட்சியின்போது செல்வாக்கு பெற்ற இந்த சமண பௌத்த மதங்கள் 1000 ஆண்டுகளாக தமிழகத்தில் இருந்துவந்த பொருள்முதல்வாதச் சிந்தனை மரபுகளை(சாங்கியம், பூதவாதம், சிறப்பியம், நியாயவாதம் போன்ற) அடியோடு அழித்தொழித்தன. பொருள்முதல்வாதச் சிந்தனை மரபின் இன்பியல் கோட்பாடு சங்கம் மருவிய காலத்தில் எல்லை கடந்ததாக ஆகி சீரழிவு நிலையை அடைந்திருந்ததும், சமற்கிருதமயமாக்களும் போன்றவைகளும் அவைகளின் அழிவுக்குக் காரணமாக இருந்தன.

 ஆகவே பௌத்த சமண மதங்கள் தான் தமிழகத்தில் மறுமலர்ச்சியைக் கொண்டுவந்தன போன்ற கருத்துக்கள் உண்மைக்கு மாறானவைகளாகும். பொருள்முதல்வாதச் சிந்தனைகள்தான் தமிழக மக்களின் கல்வி வளர்ச்சிக்கும் அதன் பொருள் உற்பத்தி, தொழிநுட்பம், வணிகம், வேளாண்மை, இலக்கியம், இசை, நாட்டியம் போன்ற கலைகள் போன்றவற்றின் வளர்ச்சிக்கும் ஊற்றுக்கண்களாக இருந்தன. மேலே சொல்லப்பட்டவற்றில் தமிழகத்தின் வளர்ச்சி என்பது கிமு. 7ஆம், 6ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டது. பூதவாதத்தையும், சாங்கியத்தையும் கற்றுக்கொள்ள கி.மு. 6ஆம் நூற்றாண்டு வாக்கில் வட இந்திய அறிஞர்கள் தமிழகம் நோக்கி வந்தனர் என்ற விடயம் இதனை உறுதிப்படுத்துகிறது. தமிழர் மதமாக இருந்த ஆசிவக மதம் அவைகளைப் பேணிக் காத்து வந்தது. ஆனால் சமண பௌத்த மதத்தின் பங்கு என்பது எதுவும் இல்லை. அவைகள் சாங்கியம், எண்ணியம், சிறப்பியம் போன்ற மூலச்சிறப்புடைய தமிழ் சிந்தனைகளைக் கொண்டு உருவானவை. அவை தமிழகத்திற்குத் தருவதற்கு எதுவுமில்லை. இந்தப் புரிதல் நமக்கு அவசியம்.

 பொருள்முதல்வாதச் சிந்தனை என்பது உழைக்கும் மக்களின் சிந்தனையே ஆகும். பண்டைய மேற்குலகில் பாரசீகப் பேரரசும், எகிப்தியப் பேரரசும், இரோமப்பேரரசும் வழங்காத மூலச்சிறப்புள்ள அறிவியல் கருத்துக்களை கிரேக்க நகர அரசுகள் உலகத்துக்கு வழங்கின. அதே போன்று, மகதப் பேரரசுகள் வழங்காத, மூலச்சிறப்புள்ள பல தத்துவார்த்த, அறிவியல் கருத்துக்களை பண்டைய தமிழக நகர்மைய அரசுகள் இந்தியாவுக்கும் உலகத்துக்கும் வழங்கியுள்ளன. இந்தியாவின் பொருள்முதல்வாதச் சிந்தனைகளின் மூல ஊற்று பண்டைய தமிழகமே என்பதை நாம் முன்பே உறுதிப்படுத்தியுள்ளோம். இந்திய வைதீகச் சிந்தனையை 2000 ஆண்டுகளுக்கு மேலாக எதிர்த்து வந்த சிந்தனை மரபு என்பது மூலச்சிறப்புள்ள தமிழ்ச்சிந்தனை மரபுதான் ஆகும்.

 அந்தத் தமிழ்ச் சிந்தனை மரபு பொருள்முதல்வாதச் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டது என்பதை நாம் உறுதிப்படுத்தியுள்ளோம். தொல்காப்பியத்தில் தான் அந்த மூலச்சிறப்புள்ள தமிழ்ச்சிந்தனை மரபு ஓரளவு முழுமையாக இடம் பெற்றுள்ளது. ஆகவே தொல்காப்பியத்தை முழுமையாகவும் ஆழமாகவும் படித்துப் புரிந்து கொள்வதும், அதன் இடைச்செருகல்களை அறிந்து கொள்வதும் அவசியம். உண்மையில் இடைச்செருகல்கள் மூலம்தான் தொல்காப்பியம் தன்னை பாதுகாத்துக் கொண்டது என்பது வேறு விடயம். இடைச்செருகல்கள் இல்லை எனில் இந்நூலும் அழிந்து போன நூலில் ஒன்றாக ஆகியிருக்கும். தமிழகத்தின் உழைக்கும் மக்களே தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள் போன்றவற்றை இன்றுவரை பாதுகாத்து வந்து நமக்குக் கையளித்தார்கள் என்பது வரலாறு. ஆகவே மூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு என்பது உழைக்கும் மக்களுடையது என்ற புரிதல் அவசியமாகிறது.

இந்தியப் பொருள்முதல்வாதச் சிந்தனை-தமிழ்ச்சிந்தனை:

 இந்திய அளவில் உள்ள பொருள்முதல்வாதச் சிந்தனைகளான சாங்கியம், உலகாயதம், சிறப்பியம் போன்றன மூலச்சிறப்புடைய தமிழ்ச் சிந்தனை மரபுக்கு உரியன என்பதை தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, வானமாமலை, நெடுஞ்செழியன் ஆகியவர்களின் நூல்களைக் கொண்டு இங்கு சொல்லப்பட்டுள்ளது. அதுபோன்றே சாணக்கியரால் அறிவியல் ஆராய்ச்சிமுறை எனக்கருதப்பட்ட ஆன்வீக்சி எனப்படும் ஐந்திரம் என்பதும் தமிழ் மூலம்கொண்டது என்பதும் சொல்லப்பட்டுள்ளது. இந்திய அளவில் தொல்காப்பியம் மட்டுமே சாங்கியம் போன்ற மூலச்சிறப்புள்ள பொருள்முதல்வாதச் சிந்தனையின் கூறுகளைச் செறிவாகவும் விரிவாகவும் கூறுகிறது. சங்க இலக்கியங்களும், திருக்குறளும் கூட பொருள்முதல்வாதச் சிந்தனையின் மூலச்சுவடுகளைக் கொண்டுள்ளன. சாங்கியம், யோகம், உலகாயதம் ஆகிய மெய்யியல்களுக்குரிய அளவை இயலை அடியொற்றி அமைந்த இலக்கியங்கள் இந்திய மொழிகளில் தமிழ் மொழியில் மட்டுமே அமைந்துள்ளன.

 கி.மு. 1000 முதல் கி.மு. 50 வரை இருந்த தமிழ்ச் சமூகச் சூழல் பொருள்முதல்வாதச் சிந்தனை வளருவதற்கான இடமாக தமிழகத்தை ஆக்கியிருந்தது. சங்கம் மருவிய காலத்தில் இந்நிலை மாறத்தொடங்கியது. களப்பிரர் ஆட்சியும், சமற்கிருதமயமாக்களும் இணைந்து தமிழகத்திலிருந்த பொருள்முதல்வாதச் சிந்தனை மரபை இல்லாதொழித்து சமண, பௌத்த, வைதீகச் சிந்தனையைக் கொண்டு வந்தன. பக்திகாலகட்ட இறுதியில் சமண, பௌத்த மதங்களும் இல்லாதொழிந்து வைதீகம் மட்டுமே செல்வாக்குபெற்ற நிலை உருவானது. இக்காலகட்டத்தில் பொருள்முதல் வாதச்சிந்தனை சார்ந்த நூல்கள் இல்லாதொழிந்தன. ஆனால் தொல்காப்பியம் மட்டும் அந்தச் சிந்தனையின் அடிப்படைக் கூறுகளைக் கொண்டதாக இன்றும் உள்ளது. ஆகவே இந்தியப்பொருள்முதல்வாதச்சிந்தனை என்பது மூலச்சிறப்புடைய தமிழ்ச்சிந்தனையே ஆகும்.

மூலச்சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபு:

 இந்திய அளவில் அறிவியல் கண்ணோட்டமும், பொருள்முதல்வாதக் கண்ணோட்டமும், காரணகாரியம்&தர்க்கவியல் கண்ணோட்டமும், தந்திரீகக் கருத்துக்களும் கொண்டதாக மூலச்சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபு இருந்துள்ளது. படிமுறைக்கோட்பாடு, அண்டவியல்(ஐம்பூதக்) கோட்பாடு, அளவை இயல் கோட்பாடு, காரண–காரியக்கோட்பாடு, இன்பவியல் கோட்பாடு ஆகிய அறிவியல் துறைகளைக் கொண்டதாக தமிழ்ச்சிந்தனை மரபு உள்ளது. சாங்கியம், சிறப்பியம், நியாயம், உலகாயதம் ஆகிய தத்துவச் சிந்தனைகளை அது கொண்டுள்ளது. ஆதலால் மூலச்சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபு என்பது மூலச்சிறப்புடைய கிரேக்கச் சிந்தனையோடு ஒப்பிடத்தக்கதாகும். சிலவிதங்களில் அதைவிட மேம்பட்டதாகவும் இருக்கிறது எனலாம். இவை குறித்து, விரிவான ஆழமான ஆய்வுகள் இன்றைய தேவையாக இருக்கிறது. இவை பற்றிய விழிப்புணர்வை தமிழ் மக்களிடம் கொண்டு செல்வதன் மூலமே மூலச்சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபின் பல்வேறு பரிமாணங்களையும் நாம் கண்டறிய இயலும்.

(முற்றும்)

- கணியன் பாலன், ஈரோடு

பார்வை:

1, 2, 3. பெரிக்கிளிசு(PERICLES), ஆனக்சாகரசு(ANAXAGORAS), ஆர்க்கிமிடிசு (ARCHIMEDES), அரிசுட்டார்க்கசு(ARISTARCHUS), எரட்டாத்தனிசு(ERATOSTHENES), தாலமி-1 (CLAUDIAS PTOLEMY) ஆகியவர்களின் விக்கிபிடியாத் தரவுகள் & அறிவியல் வரலாறு, ஆர்தர் எசு. கிரிகர், முகம், ஜூலை-2012, பக்; 47-50, 67-69, 55-72.

4. அறிவியல் வரலாறு, ஆர்தர் எசு. கிரிகர், முகம், ஜூலை-2012, பக்: சு.க. மணி-அணிந்துரை- xvi, xvii.

5. சி.இலக்குவனார், தொல்காப்பிய ஆராய்ச்சி, 2009, பக்: 192.

6. மகாவம்சம், தமிழில் எஸ்.பொ., அக்டோபர் -2009, பக்: 197-25

Pin It