1844 ஆம் ஆண்டு வாக்கில் மார்க்ஸ் பாரிஸில் இருந்தார். அப்பொழுது அவர் பொருளாதாரம் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இதற்கு முன்னர் ஹெகலின் தத்துவம் பற்றி எழுதி வந்தார். இது தொடர்பான பல கட்டுரைகளை எழுதினார். இதே காலகட்டத்தில் எங்கல்ஸ் “அரசியல் பொருளாதாரத்தில் விமர்சன வரைவு” என்ற பெரிய கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். இதனை மார்க்ஸ் படித்து விட்டுப் பெரிதும் பாராட்டினார். அதுமட்டுமல்ல இந்தக் கட்டுரை மார்க்சின் ஆய்விற்கு உறுதுணையாகவும் இருந்தது. ஆனால் இந்தக் கட்டுரைகள் முற்றுப் பெறவில்லை.

இவை சமகாலக் கட்டுரைகள் ஆனபடியால் “இவற்றைத் தொகுத்து 1844 - பொருளாதார தத்துவக் கையேடுகள்” என்ற தலைப்பில் சோவியத் யூனியன் வெளியிட்டது.

இந்தக் கட்டுரைகளில் மார்க்ஸ் தனது அடிப் படையான கருத்துக்கள் சிலவற்றை வெளியிட்டார். இக்கட்டுரைகளை வசதிக்காக இரண்டாகப் பிரித் துள்ளனர் தொகுப்பாளர்கள்; ஒன்று பொருளா தாரம் தொடர்பானது, மற்றொன்று தத்துவம் தொடர்பானது. பொருளாதாரம் தொடர்பான கட்டுரைகளில் அவர் குயின்சே, ஆடம்ஸ்மித், ரிக்கார்டோ, சே, ஜேம்ஸ்மில் ஆகியோரது கருத்துக்களை விமர்சனம் செய்கிறார்.

மார்க்சின் கருத்துப்படி, அரசியல், பொருளா தாரம் தனிச் சொத்தினை அடிப்படையாகக் கொண்டுள்ளது என்பதாகும். இதனைத்தான் எங்கல்ஸ் அவருடைய “அரசியல் பொருளாதார விமர்சனத்தின் வரைவு” என்பதில் கூறியுள்ளார். ரிக்கார்டோ என்ற பொருளாதார அறிஞரின் கருத்துப்படி, பண்களில் இடம் பெற்றுள்ள உழைப்பின் அளவிற்கு ஏற்றபடிதான் அவை பரிமாற்றம் செய்யப்படுகின்றன ரிக்கார்டோ உழைப்பாளிகளுக்குக் கிடைக்கும் ஊதியம் இயல்பானது என்று கூறுகிறார். ஏனென்றால் தொழிலாளி அவன் வாழ்வதற்காகவே உழைக்கிறான். உழைப்புப் பற்றி ரிக்கார்டோ கூறியவற்றை ஏற்றுக்கொண்டு, அது சரியான பார்வை அல்ல என்று மார்க்ஸ் கூறுகிறார்.

அடுத்தபடியாக மார்க்ஸ் விமர்சிப்பது ஆடம் ஸ்மித் என்ற அறிஞரை. மூலதனம் என்பது சேமிக்கப் பட்ட உழைப்பு என்று ஸ்மித் கூறுகிறார். ஆனால் அவர் தனிச்சொத்தினைப் பற்றி ஒன்றும் கூற வில்லை. ஆனால் தனிச்சொத்து இல்லாமல் மூலதனம் உருவாக முடியாது. உழைப்பின் மீது மூலதனம் செலுத்தும் ஆதிக்கம் அளவிடற்கரியது. இதுதான் தனிச்சொத்தின் வளர்ச்சியில் மிக உயர்ந்த கட்டம் ஆகும். இதன் விளைவாகத்தான் உடைமையாளர்கள், உழைப்பாளிகள் என்ற பிரிவாக சமூகம் மாறியது. ஆடம்ஸ்மித்தின் இந்தக் கருத்தினை ஏற்றுக்கொண்ட மார்க்ஸ் அவரது விமர்சனத்தினை முன்வைக்கிறார்.

ஆடம்ஸ்மித்திடமிருந்து வேறுபட்டு மார்க்ஸ் அவரது கவனம் முழுவதையும் தனிச்சொத்தின் மீது திருப்புகிறார். ஊதியம் என்பதை நிர்ணயிப்பதே மூலதனம், உழைப்பு ஆகியவற்றிற்கு உள்ள முரண் பாடுதான் என்று அவர் கூறுகிறார். ஆனால் அரசியல் பொருளாதாரம் என்பதில் தனிச்சொத்து பற்றிக் கூறப்படுகிறது. அது எவ்வாறு உருவாகிறது என்பது பற்றிக் கூறப்படவில்லை. உழைப்பு மூலதனத்தி லிருந்து ஏன் பிரிந்தது, நிலத்திலிருந்து மூலதனம் ஏன் பிரிந்தது என்பதற்கான விளக்கம் அரசியல் பொருளாதாரத்தில் இல்லை. முதலாளிகளின் பேராசை, உழைப்பு - மூலதன வேறுபாடு, மூலதனம் - நிலம் வேறுபாடு, பரிவர்த்தனை, போட்டி, மதிப்பு, பணத்தின் ஆதிக்கம் ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மார்க்ஸ் கூறுகிறார்.

தனிச் சொத்து பற்றிப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால் அதனை உருவாக்கும் உழைப்பு பற்றி நாம் ஆராய வேண்டும். உழைப்பினைப் பொது வாகக் காணக் கூடாது. அதனை ஒரு குறிப்பிட்ட வரலாற்று வடிவமாகக் காண வேண்டும் அதன் பெயர் தான் அந்நியமயமான உழைப்பு. இது தான் இந்தக் கையேடுகளின் மையமான கருத்தாகும்.

அந்நியமயமாதல் என்றால் என்ன? ஒரு குறிப் பிட்ட வரலாற்றுச் சூழலில் மனிதனது செயல் களின் விளைவு அனைத்தினையும் அவனிடமிருந்து பிரித்து அவனைச் சாராமல் இருக்கும் ஒன்றாகக் காட்டும் செயல் ஆகும். இது, நிகழ்வுகளையும், உறவுகளையும் சிதைத்துக் காட்டும் போக்கு ஆகும். இவை மனிதன் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன என்று கூறுவதும் ஆகும். அந்நியமயமாதல் என்ற கருத்தினை ரூஸோ, அதே, ஷில்லா ஆகிய பல அறிவொளிக் கால அறிஞர்களிடையே காணலாம். ஜெர்மானியச் செவ்வியல் தத்துவத்தில் இது இடம்பெற்றது. பிஷ்டேயிடம் இது உள்ளது. இதனை ஹெகல் கருத்து முதல் வாத முறையில் வளர்த்தெடுத்தார். இவரது கருத்துப்படி புறவய உலகம் என்பது “அந்நியமயமானது ஆகும்.

இது பொதுமையான முழுமையில் இருந்து பிரிந்து உள்ளது. புரிதலின் (புரிந்து கொள்ளுதல்) வேலை இந்தப் பிளவை நீக்குவதாகும். அதாவது பிரிந்த புறவய உலகம் முழுமையுடன் ஒன்று சேருவது என்பது வளர்ச்சியின் நோக்கம். இது ஏறத்தாழ வேதாந்தத்தில் பேசப்படும் பரமாத்மா - ஜீவாத்மா பிரிவைப் போன்றது. வேதாந்தத்தில் பொருள்கள் அனைத்தும் மாயை என்றே பேசப்படுகிறது. பூயர்பா என்ற பொருள்முதல் தத்துவவாதி, மதம் என்பதை மனித சாராம்சத்தின் அந்நியமயமான ஒன்றாகக் கண்டார். இவர்கள் எல்லோரும் அந்நிய மயமாதலை பிரக்ஞை என்பதுடன் தொடர்பு படுத்தியே கண்டனர். எனவே இதனை அகற்று வதற்கான வழிகளைக் கொள்கை விமர்சனத் திலேயே (சிந்தனையில்) கண்டனர் நிஜ உலகத்தில் அல்ல.

மார்க்ஸ் இவர்களில் இருந்து வேறுபடுகிறார். அந்நியமயமாதல் என்பதற்கு இந்த நூலில் Estranged Labour என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இந்த செயலை ஆராய்வதன் மூலம் தனிச் சொத்தின் தோற்றத்தினையும் ஆராய்கிறார். அவரது கருத்துப் படி, அந்நியமயமாதல் என்பது தனிச் சொத்தின் விளைவு ஆகும் இதனை விளக்க மார்க்ஸ் மனிதனுக்கும் இயற்கைக்கும் உள்ள உறவிலிருந்து தொடங்குகிறார். மனிதன் இயற்கையின் ஒரு பகுதி. இந்தக் கண்ணோட்டத்தின்படி அவன் ஒரு இனஜீவி (Species - Being)அதே சமயத்தில் அவன் சமுதாய ஜீவியும் ஆகிறான். மனிதன் இயற்கைப் பொருள்களைக் கொண்டு செயல் புரிகிறான். இப்பொழுது அவன் பொருள்களைப் படைக் கிறான். இது அவனது இனஜீவித் தன்மையிலிருந்து வேறுபட்டது. இது விலங்குகள் படைப்பதி லிருந்து வேறுபட்டது. அவன் படைத்த உலகில் மனிதன் அவனைக் காண்கிறான். இது மனிதனை இனஜீவியாகக் காணும் போக்கிலிருந்து வேறு பட்டது. எனவே உழைப்பு என்பது மனிதனைச் சமூக மனிதனாக மாற்றுகிறது.

ஆனால் இந்தச் செயல் அந்நியமாகிறது. உழைப்பானது மனிதனை உருவாக்குகிறது. அதே சமயத்தில் மனிதனைச் சிதைக்கிறது “உழைப்பாளி உற்பத்தி செய்த பொருள் அந்நியமான ஒன்றாகத் தோன்றுகிறது. இது உற்பத்தியாளனைச் சாராமல் இருப்பது போலத் தோன்றுகிறது. உழைப்பாளியின் உழைப்பு பொருளாக மாறியுள்ளது. இது உழைப் பினைப் பொருளாகக் காணுதல் ஆகும். ஆனால் இவ்வாறு உழைப்பாளி, பொருளில் தன்னை வெளிப் படுத்துவது என்பது அவனையே இழப்பதாக உள்ளது. பொருள் அவனை விட்டு விலகி நிற்கிறது. ஏன்? அவன் பொருள்களை மற்றவர்களுக்காக உற்பத்தி செய்கிறான். உற்பத்தி, விநியோகம் என்று வரும் பொழுது அந்நியமயமாதல் பூர்த்தியடை கிறது. பொருள் உடைமையாளனுக்குரியதாகி விடுகிறது.

இதன் விளைவு என்ன! ஒன்று, அவன் பொருளிலிருந்து அந்நியப்பட்டு இருக்கிறான். இரண்டு அவன் இயற்கையிலிருந்தும் அந்நியப் பட்டு உள்ளான். இயற்கையின் ஒரு பகுதியான மனிதன் அதிலிருந்து பொருள்களைப் பெற்றுப் பண்டங்களை உற்பத்தி செய்கிறான். “இயற்கை அவனுக்கு ஒரு கருவியாக விளங்குகிறது. அந்நிய மயமாதல் காரணமாக இயற்கைக்கும் அவனுக்கும் உள்ள உறவுகள் ஒடுக்கப்படுகின்றன.”

உற்பத்தி செய்த பண்டங்கள் உற்பத்தி யாளனுக்குச் சொந்தம் இல்லை என்றால் அது வேறு ஒருவனுக்குச் சொந்தமாகிறது. அவள் தான் சொத்துஉரிமையாளன். இங்கு சகமனிதனே மற்ற மனிதர்கள் மீது அந்நியமயமான சக்தியாகத் தோன்றுகின்றான். இந்த நிலை காரணமாக உழைப்பாளி அதளபாதாளத்திலும், சொத்து உடைமையாளன் போலியான சொர்க்கத்திலும் இருக்கிறான். இந்தத் தனிச் சொத்து என்பது அந்நியமயமான உழைப்பின் விளைவு என்பது மார்க்சின் கருத்து. இதனைப் பூர்ஷ்வாப் பொருளா தார அறிஞர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. இந்தத் தனிச்சொத்து அந்நியமயமான உழைப்பின் விளைவு என்றாலும், தனிச்சொத்தின் விளைவு அந்நியமய மான உழைப்பு ஆகும். இந்த பரஸ்பரச் செயலையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். இவை ஒன்றையொன்று பாதிக்கின்றன.

இந்த அந்நியமயமாதல் காரணமாக உழைப் பாளிக்கு வேலை என்பது அலுப்புத் தருவதாகவும், சுமையாகவும் உள்ளது. அவன் உழைக்காத நேரத்தில் நிம்மதியாக உள்ளான். பல்வேறு பொழுது போக்குகளில் ஈடுபடுகிறான். சொத் துடைமையாளன் ஆடம்பர வாழ்க்கையை நடத்துக்கிறான்.
இந்தக் கையேடுகளில் பண்டப் பரிவர்த்தனைக் காகப் பணம் வகிக்கும் இடத்தைப் பற்றியும் மார்க்ஸ் விவரிக்கிறார். இங்கு தான் ஷேக்ஸ்பியரது நாடக மான “ஏதன்ஸ் நகர டிமன்” என்பதிலிருந்து ஒரு பகுதியை மேற்கோளாகக் காட்டுகிறார். அதற்கு விளக்கமும் அளிக்கிறார்.
பணத்தின் இரு பண்புகளை வலியுறுத்து கிறார்.

1. பணம் கண்ணுக்குத் தெரியும் கடவுள். மனிதனது பண்புகளை நேர் எதிராக மாற்றுகிறது. பொருள்களைச் சிதைக்கிறது ஒட்ட முடியாத வற்றை அது       இணைக்கிறது.

2. உலகப் பொதுவான பரத்தையின் பணம் (universal Prostitute) மக்களையும் நாடுகளையும் அது விலைக்கு வாங்குகிறது.” இவை அனைத்தும்          அந்நியமயமாதலின் விளைவுகள் ஆகும். இது எவ்வாறு நீங்கும். வர்க்க வேறுபாடுகள் அகற்றப்படும் பொழுது இது இடம் பெறும். இது, தொடர்பாக         மார்க்ஸ் பொது உடைமை பற்றிய பழைய கருத்துக்களை விமர் சனம் செய்து, வர்க்க வேர்களை அகற்றும் பொது உடைமையைத் தீர்வாகக்                   காட்டுகிறார். இது மட்டுமல்ல தனிச்சொத்து அகற்றப்படும் பொழுது மானுடப் பண்பு சார்ந்த விஷயங்களும் மாறும் என்கிறார்.

இந்த நூலின் அடுத்த பகுதி பூயர்பாலின் பொருள்முதல்வாதக் கருத்து பற்றிய விமர்சனம் ஆகும். பூயர்பாலின் கருத்தினை விமர்சனம் செய்து ஹெகலின் கருத்துமுதல்வாதத்தினையும் விமர்சனம் செய்கிறார். ஆனால் இவர்களது இயங்கியல் முறையை ஏற்றுக் கொள்கிறார். இது இந்தப் புத்தகத்தின் ஒரு சுமாரான சுருக்கம் மட்டுமே. இந்த நூல் பற்றி ஏராளமான விமர் சனங்கள் வந்துள்ளன.

முதலாவது, பூயர்பா மனிதனை இன ஜீவியாகக் காண்பதன் தாக்கத்திலிருந்து மார்க்ஸ் இதில் விடுபடவில்லை. எனவே இங்கு மனிதநேயம் வலுவாக உள்ளது. இந்த மனிதநேயம் என்பது எல்லோரையும் விடுவிக்க வேண்டும் என்ற பரந்து பட்ட மனிதநேயம் ஆகும். மார்க்ஸ் பொதுவான மனிதநேயத்தினையே இங்கு வலியுறுத்தகிறார் என்ற வாதம் முன் வைக்கப்படுகிறது. அதாவது பொருளாதாரச் சிந்தனைகளைவிட மனிதநேயச் சிந்தனைகள் தாம் அதிகமாக இதில் உள்ளது. ஆனால் மார்க்சின் பிந்திய படைப்புகளில் மனித நேயச் சிந்தனை குறைந்து விஞ்ஞானப் போக்கு அதிகமாக உள்ளது. இதற்குப் பதில் அளிப்பது என்பது சற்று விரிவாகப் பேச வேண்டிய ஒன்றாகும். சுருக்கமாக ஒன்றைக் கூறலாம் முதல் நூலில் இருந்து கடைசி நூல் வரை மார்க்ஸ் உழைக்கும் மனிதனைப் பற்றித் தான் சிந்தித்தார். இந்த உழைக்கும் மனிதன் விடுதலை பெறும் பொழுது முரண்பாடுகளின் தன்மை மாறும், சமூகத்தின் இதர பிரிவினரும் விடுதலை பெறுவர். உடைமையாளர்கள் உதிர்ந்து மறைந்து விடுவர். இது மார்க்சீய மனிதநேயம் இதனை விஞ்ஞானத் தன்மை என்ற ஒன்றைக் காட்டி மறைக்கக் கூடாது என்று மட்டும் இங்குக் கூறலாம்.

இரண்டாவதாக உள்ளது, இளம் மார்க்ஸ் முதிய மார்க்ஸ் என்ற பிரிவு. இளம் மார்க்ஸை மனிதநேயவாதியாகவும், முதிய மார்க்ஸை விஞ்ஞானத் தன்மை உள்ளவராகவும் காட்டுவது. இளம் மார்க்ஸ் அடிப்படையான விஷயங்களை ஏற்கனவே கூறிவிட்டார். பின்னால் உள்ள மார்க்ஸ் அவற்றைத் திரும்பத் திரும்பவே கூறினார் என்று கூறுகிறார்கள். அதாவது மார்க்சிடம் புதியது எதுவுமில்லை என்பது இதன் பொருள்.

ஹெட்பர்ட் மார்க்யூஸ் என்ற அறிஞர் மார்க்ஸின் இந்த நூலிற்கு ஒரு விளக்கம் அளித் துள்ளார். இவர் கூறுகிறார், “மார்க்ஸ் மனிதனை ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தின் பிரதிநிதியாகக் காண வில்லை. ஒரு மனிதனாக, ஒரு தனிநபராக மட்டுமே காண்கிறார்” இந்தக் கையேடுகளில் அந்நியமய மான உழைப்பு என்ற பகுதியையும், “தனிச் சொத்து” என்ற பகுதியையும் படிப்பவர்கள் மார்க்ஸ் வர்க்க வேறுபாடுகளைப் பற்றிக் கூறு வதைக் காண முடியும். ‘நிலம், குத்தகை’ என்ற பகுதியைப் படிக்கும்பொழுது நிலஉடைமை யாளர்கள், குத்தகை தாரர்கள், பண்ணையடிமைகள் ஆகியோரது நிலை பற்றி மார்க்ஸ் கூறுகிறார். கூலி அல்லது ஊதியம் என்பதே மூலதனத்திற்கும், உழைப்பிற்கும் உள்ள முரண்பாட்டின் விளைவு என்று கூறுகிறார். மார்க்சின் விளக்கம் ஒரு தலைப்பட்சமானது என்று மட்டுமே இங்குக் கூற முடியும்.

டிமன் என்பவர் மார்க்சின் மனிதநேயத்தினை ஏற்றுக்கொண்டு பொருள் முதல்வாதியான மார்க்சை மறுக்கிறார். ‘மூலதனம்’ போன்றவற்றில் உள்ள மார்க்ஸ் பொருள்முதல்வாதி என்றும், “கையேடுகளில்” உள்ளவர்தான் உண்மையான மார்க்ஸ் என்றும் அவர் கூறுகிறார். எனவே இந்தக் கையேடுகளைத் தான் நாம் அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறுகிறார். ராபர்ட் சி.டக்கர் என்பவர் இதில் உள்ள அந்நிய மயமாதலின் பின்னணியில் மார்க்சை சமயச் சிந்தனையாளர் என்றே கூறுகிறார். இவை எல்லா வற்றிற்கும் மேலாக கால்பஸ் என்பவர் மார்க்சின் கருத்துக்கள் மதம் பேசும் அந்நியமாதல் என்பவை தான் என்று கூறுகிறார். மனிதன் செய்த முதல் பாவம் (தடை செய்யப்பட்ட மரத்தின் பழத்தை ஆதாமும், ஏவாளும் உண்ணுதல்) காரணமாக மனிதன் கடவுளிடமிருந்து அந்நியப்பட்டு விட்டான். இதில் தான் மத அந்நியமயமாதல் உள்ளது. எனவே மார்க்சின் அந்நியமயமாதல் என்பதில் இது அடங்கியுள்ளது. அவர் பொருளாதார ரீதியாக அந்நியமயமாதல் என்று கூறுவதெல்லாம் இதன் வழி நிலையாது ஆகும்.

இத்தகைய போக்கு தமிழகத்திலும் உள்ளன. கோவை ஞானி, எஸ்.என்.நாகராசன், தமிழவன், எஸ்.வி.ராஜதுரை ஆகியோர் இக்கருத்துக்களை விளக்கியுள்ளனர். வைணவத்துடன் மார்க்சீயத்தை இணைப்பது, சைவத்துடன் மார்க்சீயத்தை இணைப்பது அந்நியமயமாதலைப் பரந்த அளவில் காண்பது போன்றவை இதில் அடங்கும்.

இவ்வாறு அந்நியமயமாதல் என்பதை மட்டும் இவர்கள் ஏன் அதிகம் வலியுறுத்துகிறார்கள். வர்க்க முரண்பாடு, வர்க்கப் போராட்டம் ஆகிய வற்றைப் புறக்கணிப்பதற்காக இதனை இவர்கள் கையிலெடுத்துக் கொண்டுள்ளனர். எல்லா வற்றையும் அந்நியமயமாதல் மூலம் விளக்கும் பொழுது வர்க்கப் போராட்டம் என்பதையும் அந்நியமயமான ஒன்று என்று கூறலாம் அல்லவா! முதலாளியும் அந்நியமயமானவன், தொழிலாளியும் அந்நியமனமானவன் என்று கூறி, இவர்கள் ஒன்றுபடுவது விடுதலை என்று கூறலாம் அல்லவா என்று இவ்வாறு கூறுவதற்கான இடம் உண்டு என்று கருதினாலும், மார்க்ஸ் ஏன் இந்தக் கருத்தினை தவிர்த்துவிட்டுப் பிந்திய காலத்தில் ------- வணக்கம் என்ற கருத்திற்குச் சென்றார் என் பதையும் நாம் காண வேண்டும். இதற்கு மார்க் சியத்தின் அடிப்படை வர்க்கப் போராட்டம் தான், வர்க்க சமரசம் அல்ல என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்பொழுது தான் இந்த நூல் பற்றிய விமர்சனம் எவ்வளவு போலியானது என்று தெரியவரும். இந்த நிலை மார்க்சீய வளர்ச்சியின் ஒரு கட்டம் என்று கருதலாமே ஒழிய முழுமையான கட்டம் என்று கூற முடியாது.

Pin It