எதிர்கால சுதந்திர இந்தியாவில், நாம் ஆளும் இனமாக இருக்க வேண்டும் என உறுதியெடுத்துக் கொள்ள வேண்டும். அடிமை நிலையை ஏற்க நாம் மறுக்க வேண்டும். இல்லை எனில், நாம் வேலைக்காரர்களாகவே நடத்தப்படுவோம் தலைவர்களாக அல்ல. இந்தியாவில் சுயாட்சி அமைக்கப்படும்போது இந்நாட்டின் இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் பட்டியலின சாதியினர் ஆகிய மூன்று பிரிவினரும் அரசியல் அதிகாரத்தைப் பங்கிட்டுக் கொள்ள வேண்டும்.

ஒரு சமூகம் மற்றொரு சமூகத்தின் மீது ஆதிக்கம் செலுத்தும் காலம் முடிந்துவிட்டது. பட்டியலின சாதியினர் தங்களின் உரிமைகளுக்காகப் போராடவும், நாட்டின் நிர்வாகத்தில் உரிய பங்கைப் பெறவும் தீர்மானமாக உள்ளனர் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றாதவரை, வறுமையால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலையில் விரும்பத்தகுந்த முன்னேற்றத்தை அவர்களால் கொண்டுவர முடியாது.

நான் காங்கிரசில் சேர வேண்டும் என வலியுறுத்தும் விமர்சகர்களுக்கு என் பதில் இதுதான்: இந்தியாவில் உள்ள பட்டியலின சாதியினரின் சுதந்திரமே மிக முக்கியமானது என்று நான் கருதுகிறேன். இச்சமூகம், கடந்த 2000 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதிக்கத்தாலும் ஒடுக்குமுறையாலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த நாட்டின் சுயாட்சிக்குப் பாடுபடுவதைவிட, என் சமூகத்தின் மேம்பாட்டுக்காகப் பணியாற்றவே விரும்புகிறேன்.

நான் பட்டியலின சாதியைச் சார்ந்தவன் என்று பெருமையுடன் கூறிக் கொள்ளும் அதேவேளை, இச்சாதியினரின் நலன்களை ஆதரிக்கும், மேம்படுத்தும் பொறுப்பை ஏற்றுக் கொள்ள எந்தத் தலைவராவது முன்வந்தால் நான் என்னுடைய கருத்தை மறுபரிசீலனை செய்யத் தயாராக இருக்கிறேன். சாதிப் பாகுபாடுகளையும், மத வேறுபாடுகளையும் ஏற்றுக் கொள்ளும் எந்தவொரு தலைவரையும் நான் அங்கீகரிக்கத் தயாராக இல்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீங்கள் அனுபவித்து வரும் கொடுமைகளுக்கான காரணங்கள் என்ன என்பது குறித்து நீங்கள் சிந்தியுங்கள். உங்களின் துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் ‘இந்து தர்மமே' முக்கிய காரணமாகும். உலகத்தில் உள்ள மதங்களிலேயே இந்து மதம்தான் சாதிப்பாகுபாடுகளையும் தீண்டாமையையும் அங்கீகரிக்கிறது. சாதி இந்துக்கள், பட்டியலின சாதியினர் மீது அநீதிகளை இழைப்பதற்கு இதுவே காரணமாகவும் அந்த அநீதிகளை மூடிமறைப்பதற்கு உதவியாகவும் இருக்கிறது.

கிராமங்களில் இம்மக்கள் இன்றுவரை சுயமரியாதையுடன் வாழ முடியவில்லை என்று சொல்வதற்காக வருந்துகிறேன். நாம் இந்து மதத்தை விட்டு விலக வேண்டும். இனியும் நம்மீதான இழிவுகளை ஏற்க மறுக்க வேண்டும். நம்முடைய சமூகம் இன்றளவும் இழிவானதொரு நிலையை ஏற்றுக் கொள்வதற்கு சாதி இந்துக்கள் நம் மீது செலுத்தும் ஆதிக்கமே காரணம். இதுவே என்னைப் பெரிதும் பாதிக்கிறது. நீங்கள் உங்களுடைய சொந்த பலத்தை நம்ப வேண்டும். நீங்கள் எந்த வகையிலும் யாருக்கும் தாழ்ந்தவர்கள் அல்ல என்பதை உணர வேண்டும்.

உங்களுடைய அரசியல் அமைப்புகளுக்குப் பின்புலமாக, நீங்கள் அமைப்பு ரீதியாக ஒருங்கிணைய வேண்டிய அவசரத் தேவை இருக்கிறது என்பதை நான் பெரிதும் வலியுறுத்த விரும்புகிறேன். அதுதான் ‘பட்டியலின சாதியினர் கூட்டமைப்பு'. ஆங்கிலேய அரசு, முஸ்லிம்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க எப்போதும் தயாராகவே இருந்தது. காங்கிரஸ் தலைவர்களும் தாங்கள் விடுதலை செய்யப்பட்ட பிறகு, பாகிஸ்தான் பிரச்சனையில் சரிபாதி என்ற ஒப்பந்தத்திற்கு ஒத்துக் கொண்டால் பட்டியலின சாதியினரின் நிலை என்ன?

அரசியல் அதிகாரத்தில் உங்களுக்குரிய பங்கு வேண்டுமெனில், எதிர்காலத்தில் நாட்டை நிர்வகிப்பதில் உங்களுக்கான உரிமைகளைப் பெறுவதற்காகப் போராடுவதற்கு முன்பு நீங்கள் ஓர் உறுதியான அமைப்பாக ஒருங்கிணைய வேண்டும். ‘பேப்பர் அமைப்புகள்' மற்றும் ‘பேப்பர் கட்சிகளை' நடத்திக் கொண்டிருக்கும் பல்வேறு தலைவர்கள் குறித்தும் நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கிறேன்.

நம் பெண்கள் முழு ஆற்றலுடன் உதவி செய்தாலொழிய, நம் இயக்கம் வெற்றி பெறவே முடியாது. மாநகரங்களிலிருந்து 200 மைல் தொலைவிலுள்ள ஒவ்வொரு நகரத்திலும், கிராமத்திலும் இம்மாநாட்டுச் செய்தியைப் பரப்ப, தன்னார்வத் தொண்டர்களை உருவாக்குவதை நான் பெரிதும் வரவேற்கிறேன்.

நம்முடைய சமூகமும் சாதியத்திற்கு ஆட்பட்டு, பாதிப்புக்குள்ளாகியுள்ளது. நம்மீது பிறர் இழைக்கும் தீண்டாமையை அகற்ற நாம் போராடும்போது, பட்டியலின சாதிகளிடையே உள்ள உட்பிரிவுகளைத் துடைத்தெறிய உங்களுக்குள்ள பொறுப்பு மென்மேலும் அதிகரிக்கிறது. உங்களுடைய முன்னேற்றத்திற்கானப் போராட்டத்தில் பெண்களைப் பின்னுக்குத் தள்ளி விடாதீர்கள். நான் மாணவர்களையும், இளைஞர்களையும் கேட்டுக் கொள்கிறேன். சமூகத்திற்குத் தொண்டாற்றும் உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள். எதிர்கால சமூகத்தின் சுமையைத் தாங்க வேண்டிய பொறுப்பு உங்களுடையது. எந்த நிலையிலும், சூழலிலும் நீங்கள் இதை மறந்துவிடக் கூடாது.

‘அகில இந்திய பட்டியலின சாதியினர் கூட்டமைப்பு' 29.1.1944 அன்று கான்பூரில் நடத்திய மாநாட்டில் ஆற்றிய உரை.

Pin It