1931ம் ஆண்டு மார்ச்சு 23ம் தேதி.  லாகூர் மத்திய சிறையில் தூக்குத் தண்டனை விதிக்கப் பட்ட கைதிகளின் ஒற்றைக்கொட்டடி.  எங்கும் அமைதி தவழ்கிறது.  ஆம், அது மயான அமைதி.  அங்கு மூலையொன்றில் இருந்த கொட்டடிக்குள் இளைஞன் ஒருவன் - அவனும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு நிறைவேற்றும் நேரத்தை எதிர் பார்த்துக் கொண்டிருப்பவன்தான் - எனினும் ஒரு புத்தகத்தை தனது கவனம் முழுமையும் செலுத்தி படித்துக் கொண்டிருந்தான்.  அவன் கொட்டடிக்கு முன்னால் நீட்டிய சனியன்களைக் கொண்ட துப்பாக்கிகளுடன் நின்ற காவலர்கள் அவன் கவனத்தை எந்த வகையிலும் பாதித்ததாகத் தெரிய வில்லை.  அப்பொழுது சிறை அதிகாரி வருகிறார்.  பல வார்டர்கள் புடைசூழ கலகலவென ஓசையுடன் கதவுகள் திறக்கப்படுகின்றன.  ஆனால் புத்தகத்தில் லயித்திருந்த இளைஞனின் கவனம் திரும்பிய பாடில்லை.  உடனே அதிகாரி, “தம்பி எழுந்திரு, தூக்குமேடை செல்லும் நேரம் வந்து விட்டது!” என்றார்.  அப்பொழுதும் இளைஞன் அதிகாரியை ஏறிட்டுப் பார்க்காமலேயே, “கொஞ்சம் பொறுங்கள், இன்னும் இரண்டு பக்கங்கள்தான் உள்ளன.  முடித்து விட்டு வருகின்றேன்” என்று கூறி, அவ்விதமே முடித்துவிட்டு, ‘சரி, நான் இப்பொழுது தயார்’ என திருப்தியடைந்த முகத்தோடு, தூக்கு மேடைக்கு செல்ல எழுகின்றான்.

இந்த இளைஞன் வேறு யாருமல்ல.  வீரன் பகத்சிங்தான்.  அவன் அப்படி ஆழ்ந்து படித்த நூல் எது தெரியுமா? லெனினைப் பற்றிய நூல்.

இவ்வாறு உலகத்தில் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களில் ஈடுபட்ட அனை வருக்கும் ஒளிகாட்டி வழிகாட்டும் தீபஜோதியாக விளங்கியது லெனின் பெயர்.  இன்னும் அவ்வாறே விளங்குகிறது.

இத்தகைய மாமேதை லெனின் 1870 ஏப்ரல் 10ல் ரஷ்யாவில் சின்பிர்ஸக் என்ற ஊரில் ஒரு முற்போக்கான ரஷ்ய அறிவாளி வர்க்கக் குடும்பத்தில் பிறந்தார்.  அவருடைய மூத்த சகோதரர் அலெக்சாந்தருடைய திடமான மனோவலிமையும், உயர்ந்த ஒழுக்க சீலமும் அவரைப் பெரிதும் ஈர்த்தது.  அலெக்சாந்தர் தான் முதன்முதலாக லெனினுக்கு மார்க்சிய இலக்கியம் பற்றிக் கூறியவர்.  மூன்றாவது ஜார் மன்னனை அலெக்சாந்தர் கொலை செய் வதற்கான முயற்சிகளில் சம்பந்தப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு அவர் தூக்கிலிடப்பட்டார்.  இது லெனினுக்கு பேரதிர்ச்சியை அளித்தது.  புரட்சிகரப் போராட்டத்திற்கு தனது வாழ்வையே அர்ப்பணித்துக்கொள்வதற்கான அவரது உறுதியை இந்த சம்பவம் மேலும் ஊர்ஜிதப்படுத்திற்று.  தனது அண்ணனின் வீரத்தையும் தியாகத்தையும் லெனின் போற்றினார்.  ஆனால் அவர் வேறுபட்ட புரட்சிப் பாதையை பின்பற்றத் தீர்மானித்தார்.  தனிப்பட்டவர்களை கொலை செய்வதன் மூலம் எதேச்சதிகாரத்தோடு போராட முயலுதல் தவறானதும் பயனற்றதுமாகுமெனக் கருதினார்.  இளைஞனாக இருந்தபொழுதே மார்க்சியத்தை ஆழ்ந்து கற்றார்.

மார்க்சியத்தின் உண்மையான சீடர்

பதினேழு வயதிலேயே புரட்சிகர மாணவர் கூட்டத்தில் லெனின் கலந்துகொண்டார்.  எனவே நாடு கடத்தப்பட்டார்.  அவர் மீது பலத்த போலீஸ் கண்காணிப்பு இருந்து வந்தது, பின்னர் வரவிருக்கும் புரட்சிகரப் போராட்டத்திற்குத் தேவையான அறிவனைத்தையும் அவர் இந்த காலக்கட்டத்தில் தான் சேகரித்தார்.  அப்பொழுதுதான் அவரது மார்க்சிய கம்யூனிசக் கருத்துக்கள் ஓர் இறுதி வடிவம் பெற்றன.  மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் ஆகியோரது மாபெரும் லட்சியத்திற்கும் போதனைகளுக்கும் லெனின் ஓர் உண்மையான சீடரானார்.

தொழிலாளர்களால் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் தெளிவாகவும் எளிய நடையிலும் தொழிலாளர்களிடையே பிரச்சாரம் செய்தார்.  துண்டுப் பிரசுரங்களையும், கட்டுரைகளையும், சிறு நூல்களையும் எழுதி புரட்சிகரப் பணியில் பேரார்வத்துடன் லெனின் மூழ்கினார்.  தொழி லாளி வர்க்கத்தினது போராட்டத்தின் முன்னேற்றப் பாதையைச் சுட்டிக்காட்டினார்.

போல்ஷ்விக் கட்சியை புது வடிவத்தில் உருவாக்கினார்

புது வடிவிலான புரட்சிகரமான தொழிலாளி வர்க்கக் கட்சியைக் கட்ட வேண்டுமென்றும், முதலாளித்துவத்தை வீழ்த்துவதற்காக தொழிலாளி வர்க்கத்தை ஸ்தாபனரீதியாகத் திரட்டி அவர் களுக்குத் தலைமைதாங்கும் ஆற்றலை அக்கட்சி பெற்றிருக்க வேண்டுமென்றும், கட்சியானது தொழிலாளி வர்க்கத்திற்கு தலைமை தாங்க வேண்டு மென்றால், மார்க்சிய தத்துவத்தை தொழிலாளி வர்க்க இயக்கத்திற்குள் புகுத்த வேண்டுமென்றும், அதன் வாயிலாக தொழிலாளி வர்க்கத்திற்கு சோஷலிச உணர்வை ஊட்ட வேண்டுமென்றும் புரட்சிகரமான தத்துவமில்லாமல் புரட்சிகரமான இயக்கம் இருக்கமுடியாதென்றும் லெனின் எடுத் துரைத்தார்.  அவைகளை நடைமுறைப்படுத்த வேண்டி போல்ஷ்விக் கட்சியை 1903ல் புதிய வடிவத்தில் தொழிலாளிவர்க்கக் கட்சியாக முதன் முதலாக லெனின் உருவாக்கினார்.  அக்கட்சியின் திட்டத்தை புதுவடிவில் வகுத்தார்.  தொழிலாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கான போராட்டமே வர்க்கக் கட்சியின் முக்கியக் கடமை என்று அக் கட்சியின் திட்டம் கூறியது.  நேரடியாக கட்சிக் கமிட்டிகளுக்கு லெனின் வழிகாட்டினார்.  ‘இஸ்கரா’ என்ற தொழிலாளிவர்க்கப் பத்திரிகையை முதன் முதலாகத் துவக்கினார்.

பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சிக்குத் தலைமை

1905-ல் ரஷ்யாவில் வெடித்த பூர்ஷ்வா-ஜனநாயகப் புரட்சிப் போராட்டத்திற்கு லெனின் நேரிடையாகத் தலைமை தாங்கினார்.  பூர்ஷ்வா-ஜனநாயகப் புரட்சியின் விசேட அம்சங்களையும், அதன் இயக்க சக்திகளையும், எதிர்கால வாய்ப்புக் களையும் வெளிக்கொணர்ந்த முதல் மார்க்சிய வாதி லெனினே ஆவார்.  பூர்ஷ்வா புரட்சியின் முழு வெற்றியினால் சோஷலிசத்திற்கான தொழிலாளி வர்க்கத்தின் போராட்டம் முன்னேறிச் செல்லத் துணைபுரிய முடியுமென லெனின் நம்பினார்.  தொழிலாளி வர்க்கமும், விவசாயி வர்க்கமும் மாபெரும் போராட்டத்தை நடத்தியபோதிலும், இந்தப் புரட்சியானது ஜாரிசத்தால் நசுக்கப்பட்டு தோல்வியடைந்தது.  லெனின் மீண்டும் வெளிநாடுகளில் தங்கவேண்டி வந்தது.

பிராவ்தா தினசரி பத்திரிகையைக் கொணர்ந்தார்

புதிய வலிமையுடனும், ஆற்றலுடனும் அடுத்த புரட்சிக்கான தயாரிப்புகளில் இறங்கினார்.  பூர்ஷ்வா புரட்சியில் தோல்வி அவரது போராட்ட உறுதியை உடைத்துவிடவில்லை.  எதிர்கால வெற்றியை தீர்க்கதரிசனத்துடன் கண்டார்.  அவரது நம்பிக்கை ஏனையோர் நெஞ்சங்களிலும் நம்பிக்கையினை ஊட்டியது.  1912-ல் ‘பிராவ்தா’ என்ற தினசரிப் பத்திரிகையைக் கொணர்ந்தார்.  மார்க்சிய போதனைகளின் சாராம்சம் பற்றியும், மார்க்சியம் என்னும் புரட்சிகர தத்துவத்தின் பொருள் பற்றியும் தினந்தோறும் பிராவ்தா பத்திரிகையில் எழுதினார்.  இரண்டாண்டுகளுக்குள் 280 கட்டுரைகளுக்கும் அதிகமாக அவர் எழுதினார்.

தனியொரு முதலாளித்துவ நாட்டில் கூட சோஷலிஸ்ட் புரட்சி வெற்றி பெறும்

1914ல் ஏகாதிபத்திய யுத்தம் துவங்கியது.  அதற் கெதிராக மிக உறுதியான போராட்டத்தைத் துவக்கினார்.  போரின் மீது போர் தொடுங்கள்

என்ற லெனினது வீரமிக்க அறைகூவலே உலகம் முழுவதும் கேட்டது.  தொழிலாளர்கள் பிற நாடு களிலுள்ள தமது சக தொழிலாளர்களைச் சுட்டுக் கொல்லக் கூடாது என்றும், மாறாக பிற்போக்கு பூர்ஷ்வா அரசுகளுக்கு எதிராகத் தமது துப்பாக்கி களைத் திருப்பவேண்டுமென்றும் லெனின் அறை கூவினார்.  இது தொழிலாளி வர்க்கப் புரட்சிக்கான அறைகூவலாகும்.  தொழிலாளி வர்க்க சர்வ தேசியப் பதாகையின் கீழ் எல்லா தேசிய இனங்களையும் சார்ந்த தொழிலாளர்களை ஒற்றுமைப்படுத்து வதும் ஒருங்கிணைப்பதும் பிரதானமானது என்று லெனின் கருதினார்.  சமுதாய வளர்ச்சி குறித்த புதிய விவரங்களின் அடிப்படையில் ஏகாதிபத்திய சகாப்தத்தில் சோஷலிசப் புரட்சியானது ஆரம் பத்தில் ஒரு சில முதலாளித்துவ நாடுகளிலோ அல்லது தனியொரு முதலாளித்துவ நாட்டிலோ கூட வெற்றிபெற முடியுமென லெனின் முடிவு கட்டினார்.  சோஷலிசப் புரட்சி சம்பந்தமான மார்க்சிய தத்துவத்தில் இது மேலும் ஒரு வளர்ச்சி யாகும்.

புதுயுகத்தை தோற்றுவித்தார்

ரஷ்யாவில் 1917 பிப்ரவரிப் புரட்சி வெற்றி பெற்றது, ஏப்ரல் 3-ம் நாள் மீண்டும் லெனின் ரஷ்யா வந்து சேர்ந்தார்.  நாடு பூரிப்போடு விழாக் கோலத்துடன் அவரை வரவேற்றது.  பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சியினிடமிருந்து தொழிலாளி வர்க்கத்தின் கைக்கு ஆட்சியை மாற்றவேண்டி சோஷலிசப் புரட்சிக்கான ஒரு ஸ்தூலமான திட்டத்தை அவர் வெளியிட்டார்.  அன்றைய நிலவரத்தில் புரட்சியானது சமாதான மார்க்கத்தை பின்பற்றலாமென அவர் நம்பினார்.  ஆனால் தற்காலிக பூர்ஷ்வா அரசாங்கம் லெனினை கைது செய்ய முற்பட்டது.  எனவே அவர் மீண்டும் தலை மறைவானார்.  கட்சிப்பத்திரிகை மீண்டும் தடை செய்யப்பட்டது.  ஜனநாயக உரிமைகள் மீண்டும் பறிக்கப்பட்டன.  எனவே, அமைதியான முறையில் ஆட்சியைக் கைப்பற்ற தொழிலாளி வர்க்கத்திற்கு ஏற்பட்டிருந்த சாத்தியப்பாடுகளில் மாறுபட்ட நிலைமை உருவாகிவிட்டது.  இதனால், ஆயுதம் தாங்கிய புரட்சியை நடத்தியாக வேண்டிய

அவசியமேற்பட்டது.  அப்புரட்சியை திட்டமிட்டு அக்டோபர் 25ல் துவக்கும்படி கம்யூனிஸ்ட் கட்சிக்கு வழி காட்டினார்.  புரட்சி வெற்றி வாகை சூடியது.  இதுவே மாபெரும் அக்டோபர் புரட்சி யாகும்.  இது அனைத்துலக வரலாற்றில் ஒரு முக்கிய மான திருப்புமுனையாகும்.  ஒரு புதிய யுகத்தை முதலாளித்துவத்திலிருந்து சோஷலிசத்திற்கு மாறும் யுகத்தை, சோஷலிசம் கம்யூனிசத்தின் வெற்றி யுகத்தைத் துவக்கி வைத்தது.  இந்தப் புரட்சியினை ஏற்பாடு செய்து உத்வேகமூட்டியவர் லெனினே ஆவார்.

மக்கள் ஆதரவு பெருகிற்று

புரட்சிக்கான தயாரிப்பும், புரட்சியின் வழியும், லெனின் ஒரு மாபெரும் மார்க்சிய தத்துவவாதி யென்பதையும், ராஜதந்திரி, கம்யூனிஸ்டு கட்சியின் விவேகமிக்க தலைவரென்பதையும், புரட்சிக் கலையில் கைதேர்ந்தவரென்பதையும் உலகுக்கு வெளிப் படுத்தின. கம்யூனிஸ்டு கட்சி அதிகாரத்தில் அமர்த்தப் பட்டவுடனேயே மக்கள் பாலுள்ள கடமைகளை அது நிறைவேற்றத் தொடங்கியது.  புரட்சி பூர்த்தி செய்யப்பட்ட முதல் நாளிலிருந்தே அந்த ஆதாயங் களைப் பேணிப்பாதுகாத்து வளர்க்கும் பணியில் முழுமூச்சுடன் இறங்கினார்.  சோஷலிச நிர்மாணத்தில் பரந்த அளவில் தொழிலாளர்களையும் விவசாயி களையும் தீவிரமாக ஈடுபடுத்த வேண்டியது கட்சியின் தலையாய கடமையென லெனின் கூறினார்.  கட்சியின் கேந்திரக் கடமைகளையும் அரசாங்கத்தின் கொள்கையையும் உருவாக்கி வகுத்தார்.  உழைக்கும் சுரண்டப்படும் மக்களது உரிமைப் பிரகடனம் ஒன்றை லெனின் தயாரித்தார்.  மக்களது நலன்களுக்காக கட்சியாலும் சோவியத் அரசாலும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் உழைப்பாளி மக்களிடம் மாபெரும் செல்வாக்கினை ஏற்படுத்தின.  மக்கள் மேலும் மேலும் அரசை ஆதரித்து அதிக அளவில் திரளலாயினர்.

போல்ஷ்விக் கட்சி கம்யூனிஸ்ட் கட்சி ஆயிற்று

இந்தக் கால கட்டத்திலும் ஏகாதிபத்தியப் போர் தொடர்ந்து நடந்துகொண்டுதானிருந்தது, அந்தப் போர் ஒழிக்கப்பட வேண்டியதை முதல் வேலையாக லெனின் கருதினார்.  ஏகாதிபத்திய யுத்தத்தினின்று விலகிக்கொள்ளத் தீர்மானித்தார்.  பிரிட்டனும், பிரான்சும், அமெரிக்காவும் ஜெர்மனி யுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த மறுத்து விட்டன.  சோவியத் அரசு ஜெர்மனியுடன் தனியாக ஒரு சமாதான ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டு மென லெனின் கருதினார்.  ஆனால் ஜெர்மனி சோவியத் பிரதேசத்தில் பெரும்பகுதியை சமாதானப் பரிசாக விரும்பிற்று.

சோவியத் குடியரசைக் காப்பாற்ற தியாகங்கள் செய்யப்படத்தான் வேண்டுமென்று, சோவியத் ஆட்சியை வலுப்படுத்தவும், பாட்டாளி வர்க்கப் புரட்சியின் ஆதாயங்களைப் பாதுகாக்கவும், குறுகிய காலத்திற்காவது சமாதானம் வேண்டியது தான் என்று லெனின் கூறினார்.  ஜெர்மனியுடன் சமாதான ஒப்பந்தம் எற்பட்டது.  இக் கால கட்டத்தில் தான் போல்ஷ்விக் கட்சி என்பதை கம்யூனிஸ்ட் கட்சியென பெயர் மாற்றம் செய்யப் பட்டது.  பரிபூரண கம்யூனிசத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோமென்பதை கம்யூனிஸ்ட் என்ற பெயர் மிகத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது என்று லெனின் கூறினார்.

புரட்சிப் போராட்டத்தின் நெளிவுசுளிவு

ஏகாதிபத்திய யுத்தத்தினின்று விலகிக் கொண்ட தானது, சோவியத் நாட்டின் தொழிலாளி வர்க்கத் திற்கும், பாடுபடும் விவசாயிகளுக்கும் கிடைத்த ஆதாயங்களை உறுதிப்படுத்திக்கொள்ள, அவர் களுக்குப் பெரிதும் தேவைப்பட்ட அந்த ஓய்வை அளித்தது, சோவியத் ஆட்சியைப் பலப்படுத்தி சோஷலிசப் புரட்சியை முன்னேற்றவும் தேவைப் பட்ட அந்த ஓய்வு பயனளித்தது.  இதைச் சாதித்ததில் மிகப் பெரும் பெருமை லெனினுக்கே உரியது.  சமாதான உடன்படிக்கையை மேற்கொண்டதானது லெனினுடைய நெளிவுசுளிவான நடைமுறைத் தந்திரத்திற்கும், வருங்காலப் போர்களில் வெற்றி பெறுவதற்கான சக்திகளை திரட்டப் போதுமான அவகாசத்தைப் பெறுவதற்கும், தேவையான போது பின்வாங்கும் அவரது திறனுக்கும் மிகச் சிறந்த சரித்திர முக்கியத்துவம் பெற்ற நடவடிக்கையாகும் - கிடைத்த அந்த சமாதான இடைக்காலத்தை லெனினும், கம்யூனிஸ்ட் கட்சியும், சோவியத் அரசாங்கமும் சோவியத் அதிகாரத்தை ஸ்திரப் படுத்தவும், சோஷலிச நிர்மாணத்தைத் துவக்கவும் பயன்படுத்துவதில் முனைந்தனர்.

லெனின் சுடப்பட்டு உயிர் மீண்டார்

எனினும் இந்த இடைவெளி ஓய்வு நீடிக்க வில்லை.  1918ம் ஆண்டு இளவேனிற்காலத்தில் ஆயுதபலத்தைக் கொண்டு, புதிய சோஷலிச நாட்டை நசுக்கிவிடும் முயற்சியில் பிரிட்டிஷ், பிரெஞ்சு, ஜப்பானிய ஏகாதிபத்தியங்கள் சோவியத்துக்கு எதிராகத் தங்களது யுத்தத்தைத் தொடங்கின. தூக்கி யெறியப்பட்ட முதலாளிகளும், நில உடைமையாளர்களும், வெண்காவல் படையினரும், எதிர்ப் புரட்சிக் காரர்களும் ஓர் உள்நாட்டு யுத்தத்தையும் தொடுத்தனர்.  ஏகாதிபத்தியவாதிகளால் தூண்டப் பட்டு அவர்கள் லெனினையும் அவரது கூட்டாளி களையும் கொலைசெய்ய முயன்றனர்.  1918 ஆகஸ்ட் 30ம் தேதி ‘காப்லான்’ என்னும் ஒரு சோஷலிஸ்டு புரட்சிவாதி விஷம் தோய்ந்த குண்டுகள் கொண்ட கைத்துப்பாக்கியால் பக்கத்திலிருந்தே லெனினைச் சுட்டு அவரை படுகாயப்படுத்தினாள்.  லெனின் உயிர் பேராபத்திலிருந்தது.  சில நாட்களுக்குப் பின்னர் குணமடைந்தார்.  குணமடைந்தவுடனேயே மீண்டும் கட்சியின் தலைமைப் பதவியையும் நாட்டின் தலைமைப் பதவியையும் லெனின் வகிக்க ஆரம்பித்தார்.

சோஷலிச மலர்ச்சி

சற்றும் ஓய்வுஒழிச்சலின்றி லெனின் தனது வலிமையையும் ஆற்றலையும் தனது புரட்சிப் பணியிலேயே ஈடுபடுத்தினார்.  1920 தொடக்கத்தில் அன்னிய தலையீட்டாளர்களையும் உள்நாட்டு, எதிர்ப்புரட்சியாளர்களையும் எல்லா முனைகளிலும் லெனினுடைய வழிகாட்டுதலில் செஞ்சேனை தோற்கடித்தது.  நாட்டில் சமாதானமாக வாழ் வதற்கு சிறிது அவகாசம் கிடைத்தது.  உடனடியாக லெனினும் கம்யூனிஸ்ட் கட்சியும் நாட்டின் மூல வளங்களில் பெரும்பகுதியை பொருளாதார நிர்மாணத்தில் ஈடுபடுத்தினர்.  அதில் பரிபூரண வெற்றியும் கிட்டிற்று.  முதன் முதலாக சோஷலிசம் மலர்ந்தது ரஷ்யாவிலே.

லெனின் மறைவு

1921 ஜனவரி 21ம் நாள் மாலை 6-50க்கு மூளை இரத்த நாளங்கள் வெடிப்பினால் லெனின் இறந்தார்.  கம்யூனிஸ்ட் அகிலத்தை ஸ்தாபித்தவரும், சர்வதேச தொழிலாளி வர்க்கத்தின் பாசத்திலும் பெருமை யிலும் உருவாகி நின்றவரும், ஒடுக்கப்பட்ட கீழைய மக்களுக்கு வழிகாட்டும் பதாகை ஏந்தியவரும், ரஷ்ய நாட்டின் தொழிலாளி வர்க்க சர்வாதி காரத்தின் தலைவரும், சோவியத் அரசை நிறுவிய வரும், கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பாளரும், உன்னத அறிஞரும், கருணை உள்ளம் கொண்ட வரும், அடக்கமான மனிதரும், மாபெரும் தலை வருமான லெனின் இறந்து விட்டார்.  மக்களின் துயர் கங்குகரையற்றுப் பொங்கி வழிந்தது.  ஜனவரி 27ம் தேதி மாலை 4-30க்கு லெனினது இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டு அவரது உடலைத்தாங்கி யுள்ள சவப்பெட்டி செஞ்சதுக்கத்தில் ஒரு விசேஷ சமாதியில் வைக்கப்பட்டது.  சமாதியில் அவரைக் காண இன்றும் மக்கள் திரள் திரளாக க்யூ வரிசையில் மைல் கணக்கில் நின்று அவருக்கு மரியாதை செலுத்தி வருகிறார்கள்.  சோவியத் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் சர்வதேச கம்யூனிச இயக்கத்திற்கும் லெனினியம் என்றழைக்கப்படும் மகத்தானதொரு புரட்சிகரச் சித்தாந்தத்தை லெனின் மரபுரிமை யாக விட்டுச்சென்றார்.  தனது 30 ஆண்டுகால அரசியல் நடவடிக்கைகளின் போது லெனின் நூற்றுக் கணக்கான நூல்களையும், துண்டுப் பிரசுரங் களையும், கட்டுரைகளையும், கடிதங்களையும் எழுதியுள்ளார்.  கட்சிக் காங்கிரஸ்களிலும், மாநாடு களிலும், உழைக்கும் மக்கள் கூட்டங்களிலும் பற்பல உரைகள் ஆற்றியுள்ளார்.  மார்க்சியத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் புதிய வரலாற்றுச் சூழ்நிலையில் லெனின் வளர்ச்சியுறச் செய்தார்.  அவரது உருவம் மக்களின் இதயங்களிலும் எண்ணங் களிலும் என்றென்றும் வாழும்.  அவரது மாபெரும் இலட்சியங்களும், போதனைகளும் யுகயுகமாக வாழும் லெனினது இலட்சியம் வெல்லற்கரியது!

1973ல் வெளிவந்த மார்க்சிய ஒளி இதழ் 1ல் வெளியான கட்டுரை

Pin It