மார்க்சியத்தின் மூலவர் கார்ல் மார்க்சின் முதன்மை படைப்பான மூலதனம் 1867-ம் ஆண்டில் வெளியிடப்பட்டது. "இங்கிலாந்தை முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறையின் தூய எடுத்துக்காட்டுக்குரிய நிலைக்களனாகக்" கொண்டு ஜெர்மன் மொழியில் எழுதப்பட்ட அந்த நூல் "அரசியல் பொருளாதார விமர்சனப் பகுப்பாய்வு" என்ற துணைத்தலைப்பைக் கொண்டுள்ளது. முதலாளித்துவத்தின் மீதான மார்க்சின் விமர்சனம், 1917-ம் ஆண்டில் ரஷ்யாவில் முதலாளித்துவத்தைத் தூக்கி எறிந்து கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நிறுவப்பட்டதன் மூலம் வெற்றி கண்டது. அதன் பிறகு, சீனாவிலும் வியட்நாமிலும் பிற நாடுகளிலும் காலனிய ஆதிக்கத்தையும் உள்ளூர் பிற்போக்கையும் ஆயுதம் தாங்கி முறியடித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிகாரத்தைக் கைப்பற்றின. கூடுதலாக, இந்தியாவில் மட்டுமின்றி இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து, மியான்மர் ஆகிய தென்கிழக்காசிய நாடுகளிலும் வலுவான கம்யூனிஸ்ட் கட்சிகள் தோன்றி காலனிய ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெறுவதற்கான போராட்டங்களில் பங்களிப்பு செய்தன.

இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் ரஷ்யாவிலும் பிற சோவியத் குடியரசுகளிலும் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி தூக்கி எறியப்பட்டது. சீனாவும் வியட்நாமும் கூட மேற்கத்திய நவ-தாராளவாத முதலாளித்துவ உலகத்தில் இணைந்தன. மற்ற நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் பலவீனமடைந்துள்ளன அல்லது இல்லாமலே போயிருக்கின்றன. 1990-களில் நவ-தாராளவாதத்தின் எழுச்சிக்குப் பிறகு மூலதனம் நூலின் மீதான கவனம் பின்னுக்குப் போயிருந்தாலும், 2008 முதல் உலக முதலாளித்துவத்தின் தாயகமான மேற்குலகில் வெடித்த அரசியல் பொருளாதார நெருக்கடி மூலதனம் நூலை மீண்டும் தேடிப் படிக்கப்படுவதாக ஆக்கியுள்ளது.

capital in the eastஇந்நிலையில்தான் கிழக்குலகில் மூலதனம் - மார்க்ஸ் பற்றி சில சிந்தனைகள் (Capital in the East - Reflections on Marx) என்ற ஆங்கில நூல், 2019-ம் ஆண்டு அசின் சக்ரபோர்த்தி, அஞ்ஜன் சக்ரபோர்த்தி, பைசாதேப் தாஸ்குப்தா, சமிதா சென் ஆகியோரை தொகுப்பாசிரியர்களாகக் கொண்டு வெளியாகியுள்ளது. இந்நூலில், தொகுப்பாசிரியர்களின் அறிமுகத்தோடு கூடவே, நான்கு பிரிவுகளாக 13 கட்டுரைகள் உள்ளன.

முதல் பிரிவில் உள்ள கட்டுரைகள் மூலதனம் நூலும் பொதுவாக மார்க்சியமும் ஆசிய மொழிகளில் பெயர்க்கப்பட்டது பற்றியும், மேற்குலகில் எழுதப்பட்ட இந்த நூலை ஆசிய நாடுகளின் கலாச்சாரத்துக்கு ஏற்றபடி மாற்றுவதில் ஏற்பட்ட சிரமங்கள் பற்றியும் பேசுகின்றன. சீனாவில் மார்க்சியம் சீனமயமாக்கப்பட்டது (sinification) பற்றியும், வங்காள மொழியில் மூலதனம் நூலும் பிற மார்க்சிய படைப்புகளும் பெயர்க்கப்பட்டது பற்றியும், தென்கிழக்கு ஆசிய நாடுகள் பற்றியும், ஜப்பானின் உற்பத்தி முறை சொற்போர் பற்றியும் கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

இவற்றின் ஊடாக சீன மொழியிலும் (1938), இந்திய மொழிகளிலும் (இந்தி - 1965-1983, மலையாளம் - 1968, மராத்தி - 1970-1980, பஞ்சாபி - 1975, பெங்காலி - 1974-1988), தென்கிழக்காசிய நாடுகளிலும் (பாஷா இந்தோனேஷியா - 2004, தாய் - 1999) மூலதனம் நூலின் மொழிபெயர்ப்புகள் வெளியான விபரங்கள் நமக்குத் தெரிய வருகின்றன. இந்தக் கட்டுரைகளில் குறிப்பிடப்படாத சில பிற இந்திய மொழிகளிலும் (தெலுங்கு - 1996, தமிழ் - 1998, ஒடியா - 2010, கன்னடம் - 2018), வியட்நாமிய மொழியிலும் (1959) மூலதனம் நூல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிகள் மிகவும் வலுவாக இருந்த மலேசியாவிலும் (மலேயா மொழி), மியான்மரிலும் (பர்மிய மொழி) மூலதனம் நூல் இன்று வரை மொழிபெயர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

"கிழக்குலகில் மூலதனம் பெற்ற வரவேற்பு" என்ற முதல் கட்டுரை சீனா பற்றியது. மார்க்சியத்தை சீன மொழிக்கு மாற்றும் முயற்சியில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அப்போதைய தலைவர் சியோ சியுபாய், பாரம்பரிய சீன எழுத்துமொழி அரசியல் தேவைகளுக்கு பொருத்தமாக இல்லை என்று கருதி, பல்வேறு வட்டார பேச்சு வழக்குகளில் இருந்து "பொதுமொழி" (புதொங்ஹுவா) ஒன்றை உருவாக்க முயற்சித்துள்ளார் என்ற தகவலும், அவருக்குப் பின் கட்சித் தலைமைப் பொறுப்பில் இருந்த மாவோ மார்க்சியத்தை சீன மக்களுக்கான மொழியில் பெயர்த்தது பற்றிய விபரங்களும் கிடைக்கின்றன.

"வங்காளத்தில் மூலதனம்: மார்க்சின் பின்-காலனிய பெயர்ப்பு" என்ற கட்டுரை வங்காள மொழியில் மார்க்சியப் படைப்புகளை மாற்றுவதில் ஏற்பட்ட கலாச்சார சிக்கல்களைப் பற்றி பேசுகிறது. உதாரணமாக, வங்காள மொழியில் கூலி உழைப்பும் மூலதனமும் என்ற மார்க்சின் நூலை மொழிபெயர்த்த சுபாஷ் முகோபாத்யாயா அதற்கு "பூத்தர் பேகார்" என்று தலைப்பு கொடுத்துள்ளார். "பூத்தர் பேகார்" என்பது வங்காள மொழியில் "பலன் இல்லா உழைப்பு" என்பதைக் குறிக்கிறது.

ஆனால், வங்காளத்தைச் சேர்ந்த பல கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களும், கட்சி செய்தித் தாளின் ஆசிரியர் குழுவும் முகோபாத்யாயா பயன்படுத்திய கவித்துவ உரிமைகளைக் கண்டு கடுமையாக அதிருப்தியடைந்தனர். அவர்கள் புரிந்து கொண்ட வகையில் மார்க்சியத்தின் சொல்லாடலை உள்ளூர் பழமொழிகளையும், சொலவடைகளையும் பயன்படுத்தி களங்கப்படுத்தக் கூடாது, அது அபபிரயோக் (தவறான பயன்பாடு) அல்லது வாக்தாரா என்று அவர்கள் கண்டித்தனர். அவர்களைப் பொறுத்தவரை, மார்க்சியத்தை கறாரான அறிவியல்ரீதியான சொல்லாடலாக மட்டுமே கையாள வேண்டுமே தவிர, பிசாசு பூதம் போன்ற மூடநம்பிக்கைகள் அதற்குள் புகுத்தக் கூடாது.

மூலதனம் நூலின் மூன்று பாகங்களையும் வங்காள மொழியில் பெயர்த்த பியூஷ் தாஸ்குப்தா கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டார். அதன் காரணமாகவோ என்னவோ, அவர் மொழிபெயர்த்த மூலதனம் நூலும் வங்காளத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவைப் பெறவில்லை என்று வருந்துகிறார், கட்டுரை ஆசிரியர்.

மூலதனம் நூலை பஞ்சாபி மொழியில் மொழிபெயர்த்தவர்களில் ஒருவரான குர்பச்சன் புல்லார், கூட்டாக செய்த இந்த மொழிபெயர்ப்பில் பொருளியல் சொற்களும் எழுத்து நடையும் நூல் முழுவதும் ஒரே மாதிரி இல்லை என்பதை எண்ணி வருந்துகிறார். "நூலின் பெயர் கூட சரியானதா என்று இன்றைக்கும் எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது. ’சர்மயா’ என்பதை விட ‘பூஞ்சி’ என்பது பொருத்தமானதோ என்று தோன்றுகிறது" என்கிறார் அவர்.

இந்த நூலின் அடுத்த மூன்று பிரிவுகள் மூலதனம் நூலில் மார்க்ஸ் உருவாக்கி விளக்கிய கருத்தினங்களை இன்றைய உலகுக்கு பொருத்துவது தொடர்பான கட்டுரைகளைக் கொண்டுள்ளன.

"மதிப்பு, சரக்கு, மூலதனத்தின் வடிவங்கள்" என்ற இரண்டாவது பிரிவில், சரக்குகளின் பரிவர்த்தனை பற்றிய பகுப்பாய்வில் நவ-செவ்வியல் பொருளியல் பின்பற்றும் அகநிலை சார்ந்த சாரமான பயனீடு (abstract utility) என்ற அணுகுமுறையையும், மார்க்ஸ் பின்பற்றும் சமூகரீதியான சாரமான உழைப்பு (abstract labour) என்ற அணுகுமுறையையும் வேறுபடுத்திக் காட்டும் கட்டுரை இடம் பெற்றுள்ளது.

மார்க்ஸ் குறிப்பிடும் பயன்-மதிப்பு என்பது நவ-செவ்வியல் பொருளியல் குறிப்பிடும் பயனீடு என்பதிலிருந்து வேறுபட்டது. மார்க்சின் பயன்-மதிப்பு திட்டவட்டமான பண்புரீதியில் வேறுபட்ட பயன்-மதிப்புகளைக் குறிக்கிறது. பயனீடு என்பது சாரமான பொதுவான பயனீட்டைக் குறிக்கிறது. சாரமான உழைப்பு என்ற சாரமாக்கலை பயன்படுத்த முடியும் என்றால் சாரமான பயனீடு என்ற சாரமாக்கலையும் பயன்படுத்தலாம். ஆனால், இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது, அதில் கலாச்சார-அரசியல் அர்த்தங்கள் பொதிந்துள்ளன. தேர்ந்தெடுக்க வேண்டியது பருப்பொருளை அல்லது கூருணர்வை. அதாவது, சமூகமயமான அகநிலையை அல்லது சமூகமற்ற தனிநபர் அகநிலையை தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது. மார்க்சின் அரசியல் நோக்கம் சுரண்டலின் ஆதாரத்தை வெளிப்படுத்துவது, சுரண்டலுக்கு எதிரான செயல்பாட்டை ஊக்குவிப்பது. சுரண்டல் என்பதை தொழிலாளி வர்க்கத்தின் உபரி-உழைப்பை கையகப்படுத்துவது என்று அவர் வரையறுத்தார்.

நவ-செவ்வியலின் சாரமான பயனீடு (பயனீடு சார்பு என்ற சூத்திரத்தின் மூலம் தெரிவிக்கப்படுகிறது), தனியாகவும் தனிநபர் அளவிலும் மதிப்பிடப்படுகின்றது. எனவே, அதனை இன்னொருவரின் மதிப்பீட்டோடு ஒப்பிட முடியாது.

எனவே, மார்க்சின் பரிவர்த்தனையில் சமூகரீதியான உறவுகளுக்கு இடையேயான பதற்றமும் இழுபறியும் நிச்சயமின்மைகளும் இருக்கின்றன.

நவ-செவ்வியல் அணுகுமுறையில் ஒவ்வொரு தனிப்பட்ட பொருண்மையும் தனக்குள்ளாகவே மூடுண்டுள்ளது. அது இதே போல மூடப்பட்ட பிற பொருண்மைகளை பாதிப்பதில்லை. எனவே, அதில் நெருக்கடிகளுக்கான சாத்தியங்கள் இல்லை.

இந்தப் பிரிவில் உள்ள அடுத்த இரண்டு கட்டுரைகள் உலகளாவிய உற்பத்தி வலைப்பின்னலிலும், நிதி மூலதனத்திலும் மார்க்சின் மதிப்புக் கோட்பாட்டின் செயல்பாட்டைப் பற்றி விளக்குகின்றன. உற்பத்தி வலைப்பின்னல்களில் பங்கேற்கும் வளரும் நாடுகளில் பெரும்பாலானவை தமது பொருளாதார நிலையை மேம்படுத்திக் கொள்ள முடியவில்லை என்ற முடிவுக்கு வருகிறது, உற்பத்தி வலைப்பின்னல்கள் பற்றிய கட்டுரை. நிதிமூலதனம் உபரி-உழைப்பிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வியை எழுப்பி அதற்கான விடையை வழங்க முயற்சிக்கிறது, நிதி மூலதனம் பற்றிய கட்டுரை.

மூன்றாவது பிரிவில், மக்கள்தொகையும் நிலவாரமும் மூலதனம் நூலில் கையாளப்படுவது பற்றிய மூன்று கட்டுரைகள் உள்ளன. மூலதனம் நூலில் மக்கள்தொகை பற்றிய ஒரு கோட்பாடு உள்ளதா, என்ற கட்டுரையில் ரணபீர் சமாத்தர் மால்தஸின் மக்கள் தொகைக் கோட்பாட்டையும் மார்க்ஸ் உருவாக்கிய முதலாளித்துவ சமூகத்துக்கான மக்கள் தொகைக் கோட்பாட்டையும் ஒப்பிடுகிறார். மால்தஸின் பொதுவான மக்கள்தொகை என்ப­திலிருந்து வேறுபட்டு உழைப்பாளர்கள் எத்தகைய சூழல்களில் உழைக்கின்றனர், எத்தகைய நிலைமைகளில் மறுவுற்பத்தி செய்யப்படுகின்றனர், எத்தகைய நிலைமைகளில் வாழ்கின்றனர் என்று மார்க்ஸ் கோட்பாட்டாக்கம் செய்தார்.

மால்தசுக்கு எதிரான மார்க்சின் வாதங்களும், முதலாளித்துவத்தின் கீழ் மக்கள்தொகைக்கான விதி தொடர்பான அவரது சொந்த பகுப்பாய்வும் (உழைப்பாளர் சேமப்பட்டாளம் அல்லது ஒப்பீட்டு உபரி மக்கள்தொகை என்ற வடிவில்) "முதலாளித்துவத் திரட்டலின் பொது விதி" பற்றிய பகுப்பாய்வின் பகுதியாக இடம் பெறுகின்றன (மூலதனம் முதல் பாகம், பகுதி 7, அத்தியாயம் 25, பிரிவுகள் 3-4). ஆதித் திரட்டல் பற்றிய பகுப்பாய்வுக்கு (பகுதி 8) முன்பே இவை இடம் பெறுகின்றன. ஆதித் திரட்டல் என்ற வரலாற்றுப் போக்கு உலக அளவில் அல்லது ஒரு குறிப்பிட்ட நாட்டில் மக்கள்தொகை உபரியாக ஆகும் பின்புலத்தை நமக்குத் தொடர்ந்து நினைவூட்டிக் கொண்டிருக்கிறது.

இந்தப் பிரிவில் அடுத்த கட்டுரை "ஆதித் திரட்டலும் உபரி மக்கள்தொகையும்: மார்க்சியக் கோட்பாட்டின் மூலதனமையவாதம் மீதான ஒரு விமர்சன பகுப்பாய்வு". இதை எழுதியவர் ராஜேஷ் பட்டசார்யா.

ஆதித் திரட்டல் என்பது மூலதனத்தின் தோற்ற காலத்துடன் மட்டும் வரம்பிடப்பட்டதில்லை. முதலாளித்துவ உற்பத்தி இருப்பதற்கான நிலைமைகள் எப்போதெல்லாம் பலவீனமடைய ஆரம்பிக்கின்றனவோ அப்போதெல்லாம் அது செயல்பாட்டுக்கு வருகிறது. இதை இன்னும் நீட்டிச் சொன்னால், ஆதித் திரட்டல் என்பது முதலாளித்துவ உற்பத்தியை கட்டுவிப்பதாக உள்ளது என்கிறார், ஆசிரியர்.

முதலாளித்துவ சமூகப் படிவம் என்பது பல வேறுபட்ட வர்க்கக் கட்டமைப்புகளைக் கொண்டது. அவற்றில் முதலாளித்துவ வர்க்கக் கட்டமைப்புகளும் உண்டு முதலாளித்துவம் அல்லாத கட்டமைப்புகளும் உண்டு. அவை ஒவ்வொன்றும் தன் இருத்தலுக்கான நிபந்தனைகளைக் கொண்டுள்ளது. ஆனால், இதில் முதலாளித்துவ வர்க்கக் கட்டமைப்பு ஆதிக்கம் செலுத்துகிறது. முதலாளித்துவ சமூகப் படிவம் ஒரு முரண்படும் தொகுப்பாக உள்ளது, ஒவ்வொரு வர்க்கக் கட்டமைப்பும் முரண்படும் திசைகளில் "தள்ளல்களையும் இழுபறிகளையும்" கொண்டுள்ளது என்று முன்வைக்கிறார், ஆசிரியர்.

இமான் மித்ரா எழுதிய "மார்க்சின் வாடகை பற்றிய கோட்பாடு: ஒரு ‘ஊகரீதியான’ வாசிப்பு" என்பது நிலவாடகையை உழைப்பு மதிப்புக் கோட்பாட்டுடனும் ஆதித் திரட்டலுடனும் இணைக்கிறது. நிலம் என்பது மதிப்பு இல்லாத சரக்கு, அதாவது உழைப்பால் உருவாக்கப்படாத சரக்கு என்ற நிலைமை மீது இந்தக் கட்டுரை கவனம் செலுத்துகிறது.

இந்த நூலின் நான்காவது பிரிவு "மூலதனத்தின் எல்லைகளும் மாற்றி அமைக்கப்படுவதை மீள்பரிசீலிப்பதும்" என்பதில் 3 அத்தியாயங்கள் உள்ளன.

முதல் அத்தியாயம், சமிதா சென் எழுதிய "மறுவுற்பத்தி என்ற பிரச்சினையில் கூலி வேலைக்கும் கூலி அளிக்கப்படாத குடும்ப வேலைக்கும் இடையேயான உறவு" மார்க்ஸ் உழைப்புச் சக்தியின் மறுவுற்பத்தி பற்றி மிகவும் மேலோட்டமாகவே எழுதியுள்ளார்; ரோசா லக்சம்பர்க் மூலதனத் திரட்டல்/ மறுவுற்பத்தி என்ற காரணியைப் பற்றி விளக்கியுள்ளார். ஆனால், பௌதீக மற்றும் தலைமுறை மறுவுற்பத்தி பற்றிய கேள்விகள் ஃபிரெடெரிக் எங்கெல்சின் படைப்புகளில் மையமான பிரச்சினையாக உள்ளன என்கிறது இந்தக் கட்டுரை.

"அகிம்சா சோசலிசம்: மார்க்சுக்கும் காந்திக்கும் இடையேயான உரையாடல்" என்ற இந்தப் பிரிவின் இரண்டாவது அத்தியாயத்தில், காந்திய சோசலிசம் எனப்படுவதன் "தர்மகர்த்தா" என்ற கருத்தினம் பரிசீலிக்கப்படுகிறது. காந்தியின் எழுத்துக்களில் இருந்து விரிவான மேற்கோள்களைக் காட்டும் ஆசிரியர்கள், சோசலிசம் பற்றிய அந்தப் பார்வையில் உள்ள உள்முரண்களை வெளிப்படுத்துகிறார்கள்.

காந்தி இப்போது இருக்கும் சொத்துடைமை உறவுகளையும் சமூக படிநிலை உறவுகளையும் அப்படியே அங்கீகரித்து, இதிலிருந்து எப்படி முன்னே போவது என்று பார்க்கிறார். அவரது கருத்துப்படி, தொழிலாளர்கள் உழைக்க வேண்டும், முதலாளிகள் உழைப்பின் பலனை கைப்பற்ற வேண்டும், ஆனால் அப்படி கைப்பற்றிய முதலாளிகள் இப்போது இருப்பது போலில்லாமல் அதனை பொது சமூகத்தின் நன்மைக்காக தருமகர்த்தா போல பாதுகாக்க வேண்டும். அப்படியானால், தொழிலாளர்கள் ஏன் தருமகர்த்தா ஆகக் கூடாதா? அதைத் தடுப்பது எது? உழைப்பின் பலன்கள் முதலாளிகளின் கைகளில் ஏன் குவிகின்றன? முதலாளிகள் தர்மகர்த்தா போல செயல்பட மறுத்தால் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து அவர்களை பணிய வைக்க வேண்டும் என்றால், தினசரி செயல்பாட்டிலேயே தொழிலாளர்கள் அதைச் செய்வதை ஏன் தடுக்க வேண்டும்? முதலாளிகளின் திறனும் சமூகத்துக்குத் தேவை என்றால் அதை அவர்கள் தாமே முன்வந்து தரும்படி எப்படி சம்மதிக்க வைப்பது? இதற்கெல்லாம் காந்தியிடம் விடை இல்லை.

காந்தி உழைப்பாளர்களை உழைப்பின் பலன்களில் இருந்து கட்டாயமாக துண்டிக்கிறார். கம்யூனிச வினியோக நிலைமையின் அடிப்படையில் வினியோகிக்கும் ‘உரிமையை’ முதலாளிகளுக்கு வழங்குகிறார். உடைமை-இன்மையை பயன்படுத்தி, முதலாவதாக வேலைக்கான அடிப்படையாக வெகுமதிகள் என்ற கொள்கையை மறுப்பதன் மூலம் அதனைச் செய்கிறார். அதற்கு மாறாக, வேலை என்பது தொழிலாளர்களின் சுய-நலமற்ற தியாகமாக (அவர் உணவுக்கான தனது உழைப்பு படைத்த கூடுதல் செல்வத்தின் மீதான தனது உரிமையை விட்டுக் கொடுக்கிறார்) பார்க்கப்படுகிறது. இரண்டாவதாக, உபரியை ஒட்டுமொத்த சமூகத்துக்கும் வினியோகிப்பதை உறுதி செய்யும் தருமகர்த்தாமுறையை மையப்படுத்துவதன் மூலம் (முதலாளிகள் தாம் கையகப்படுத்திய கூடுதல் செல்வத்தின் மீதான தமது உரிமையை விட்டுக் கொடுக்கின்றனர்) காந்தி அதனைச் செய்கிறார்.

உடைமையின்மை என்பது ஒரு சர்வப்பொது கொள்கையாக பார்க்கப்பட்டால், உபரியை வைத்திருப்பது ஏன் முதலாளிகளின் கைகளில் விடப்பட வேண்டும் என்பது தெளிவில்லை. முதலாளிகள் மட்டுமே தருமகர்த்தா பதவிக்கு தகுதி படைத்தவர்களாக ஏன் உள்ளனர்? தொழிலாளர்கள் ஏன் இருக்கக் கூடாது? தொழிலாளர்களையும் சேர்த்துக் கொண்ட ஒரு பெரிய குழுவாக ஏன் இருக்கக் கூடாது? முதலாளிகளுக்கு வித்தியாசமான / மேம்பட்ட திறன்கள் இருப்பதால், அவர்கள் நிறுவனத்தின் நிர்வாகியாக இருப்பதற்கும் அதன் அடிப்படையில் கூடுதல் வருமானத்தை நிர்வகிப்பவராக இருப்பதற்கும் தனி உரிமையைப் பெற்றுள்ளனர் என்று அவர்களுக்கு சாதகமான தர்மகர்த்தா-அடிப்படையிலான எந்த ஒரு வாதமும் அரசியல்-பொருளாதார சமத்துவம் (’யாரும் தாழ்ந்தவர் இல்லை, யாரும் உயர்ந்தவர் இல்லை’) என்ற காந்திய சட்டகத்தில் செல்லுபடியாகாது.

முதலாளிகள் ‘உடைமையின்மையை’ பின்பற்ற வேண்டும் என்ற முக்கியமான அனுமானம் தவறுவதால் ஏற்படும் விளைவுகளை தொழிலாளர்கள் சுமக்கின்றனர், முதலாளிகளே சுமக்கவில்லை. எனவே, பொறுப்புகளிலும் கடமைகளிலும் தவறுவது ஒரே துலாக்கோலில் எடை போடப்படுவதில்லை என்கிறார்கள் ஆசிரியர்கள்.

தருமகர்த்தாவாக இருப்பதற்குப் பதிலாக, இதுவரையில் முதலாளிகளாக இருந்தவர்களை (தொழிலாளர்களுடன் கூடவே) ‘உணவுக்கான உழைப்பில்’ ஈடுபடும்படி கேட்கலாம். உபரியை கூட்டாக கையகப்படுத்தி வினியோகிக்கும் நிகழ்முறையின் பகுதியாக அவர்கள் ஆக்கப்படலாம். முதலாளிகளையும் ஜமீன்தார்களையும் உணவுக்கான உழைப்பை செலுத்தும்படி கோராமல், தருமகர்த்தாவாக ஆக்குவது ஏன் என்பதை விளக்க காந்தி தவறுகிறார் என்பது தங்கள் கருத்து என்கிறார்கள், ஆசிரியர்கள். நாங்கள் முன்மொழியும் நிறுவன கட்டமைப்போ, ‘உணவுக்கான உழைப்பு’ என்ற புனிதக் கொள்கையை நிறைவேற்றுவதோடு சுரண்டலையும் ஒழித்துக் கட்டுகிறது என்கிறார்கள்.

இந்தப் பிரிவின் மூன்றாம் அத்தியாயத்தில் கூட்டுறவு வடிவங்கள் பற்றி பேசப்படுகிறது. ஸ்பெயினின் பாஸ்க் பிராந்தியத்தில் 1959-ல் தொடங்கப்பட்ட ஒரு கூட்டுறவு நிறுவனம் பல்கிப் பெருகி வலுவாக இயங்கி வருவது பற்றி அமெரிக்க மார்க்சிய அறிஞரான ரிச்சர்ட் வுல்ஃப் 2012-ல் எழுதிய கட்டுரை இங்கிலாந்தின் த கார்டியன் இதழில் வெளியாகியுள்ளதைச் சுட்டிக் காட்டும் ஆசிரியர், இந்தியாவில் கைத்தறி, தேயிலை தோட்டங்கள், சர்க்கரை ஆலைகள் ஆகியவற்றில் கூட்டுறவு முறை செயல்படுவதை ஆய்வு செய்து அவை ஒவ்வொன்றிலும் உள்ள பிரச்சினைகளை வெளிப்படுத்துகிறார்.

கிழக்கில் ‘மூலதனம்’ - மார்க்ஸ் பற்றி சில சிந்தனைகள் என்ற இந்த தொகுப்பு நூல், மார்க்சின் மூலதனம் நூலை இன்றைய உலகத்தின் நடைமுறையோடு இணைப்பதற்கு முக்கியமான ஒரு பங்களிப்பை செய்கிறது. மார்க்சிய மாணவர்களும், அரசியல் செயல்பாட்டாளர்களும் தமது நடைமுறையை மேம்படுத்திக் கொள்வதற்கு இந்நூலை வாசித்து விவாதித்து உள்வாங்குவது பயனுள்ளதாக இருக்கும்.

- மா.சிவகுமார்