1935, மார்ச், 6-ஆம் நாள் நடைபெற்ற உ.வே. சாமிநாதையரின் எண்பதாம் ஆண்டு நிறைவு விழாவின்போது சென்னை மாநிலக் கல்லூரித் தமிழ் மாணவர் சங்கத்தார் அளித்த வாழ்த்துரையின் நடுப்பகுதி,

“செயற்கரிய செயல்களைத் தமிழுலகத்திற்குத் தாங்கள் செய்து வந்திருப்பதோடு துரைத்தனக் கல்லூரிகளில் தமிழாசிரியராகவிருந்தே தங்கள் வாழ்நாளிற் பெரும்பாகத்தைக் கழித்தீர்களென்று அறிந்து தங்களைப் பெரிதும் நாங்கள் பாராட்டுகின்றோம். தங்கள்பாலுள்ள தெய்வபக்தி, உண்மை, அன்பு, உறுதி, சொல்வன்மை, கலைபயில் தெளிவு முதலிய அரிய குணங்கள் தங்கள் மாணவரின் மனத்தை முற்றிலும் தம்பால் வசீகரித்து அவர்தம் வாழ்க்கையையும் புனிதமாக்கின” (எண்பதாம் ஆண்டு நிறைவுவிழாவில் அளிக்கப்பெற்ற உபசாரப் பத்திரங்கள், ப. 26)

என அமைந்திருக்கிறது. இந்த வாழ்த்துரை சாமிநாதையர் கல்லூரிப் பணியிலிருந்து ஓய்வுபெற்றுப் பதினாறு ஆண்டுகளுக்குப் பின்னர் வழங்கப்பெற்றது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். அவர் முதன்முதலாகப் பணியாற்றிய கும்பகோணம் கல்லூரி மாணவர்களும் அப்போது வாழ்த்தி மகிழ்ந்திருக்கிறார்கள். 

chidambaran 500(ஆசிரியர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிஷீமீளையும் மாணவர் உ.வே. சாமிநாதையரும்)

லயோலா கல்லூரி, அரசு இசுலாமியக் கல்லூரி மாணவர்களும் சாமிநாதையர் அவர்களுக்கு வாழ்த்துப் பாக்களை வழங்கியிருக்கிறார்கள். சாதி, சமயப் பாகுபாடுகளின்றிப் பலரும் சாமிநாதையரின் எண்பதாம் ஆண்டு நிறைவுவிழாவின்போது வாழ்த்துரைகளை வழங்கியிருக்கின்றனர். இவ்வகைப் போற்றுதலுக்கெல்லாம் சாமிநாதையர் மாணவர்கள் போற்றிக் கொண்டாடிய நல்லாசிரியராக அரைநூற்றாண்டிற்கும் மேலாகக் கல்லூரிகளில் பணியாற்றியிருப்பதுதான் காரணமாக இருந்தது.

சாமிநாதையரின் வரலாற்றுச் சிறப்பான செயல்களுக்கு ஆசிரியர்களின் பங்களிப்பு மகத்தானதாகும். சாமிநாதையரின் ஆசிரியர் பரம்பரை மிக நீண்ட நெடும்வரலாற்றுப் பின்புலத்தைக் கொண்டமைந்திருக்கிறது. அவரின் ஆசிரியர் பரம்பரையை இரண்டு நிலைகளாகப் பகுத்துக்கொள்ளலாம். ஒன்று மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் பாடம் கேட்பதற்கு முந்தைய நிலை (1860 - 1870), இரண்டு அதற்குப் பிந்தைய நிலை (1871 - 1876) என்பனவாகக் கொள்ளலாம். 

மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் பாடங்கேட்பதற்கு முந்தைய நிலை (1860 - 1870)

முதல்நிலை, ஐந்து வயதில் உத்தமதானபுரத்தில் நாராயண ஐயர் என்பவரிடம் அரிச்சுவடி முதலிய ஆரம்பப் பாடங்களைப் படிக்கத்தொடங்கியது முதல், செங்கணம் சின்ன பண்ணை விருத்தாசல ரெட்டியாரிடம் யாப்பருங்கலக் காரிகையைப் பாடங்கேட்டது வரையிலான காலப்பகுதியைக் கொள்ளலாம். 

உ.வே. சாமிநாதையர், தம் பாட்டி ஊரான காவிரியின் வடகரையில், கஞ்சனூரென்னும் தலத்துக்கு வடகிழக்கிலுள்ள சூரியமூலையில் 19, பிப்ரவரி, 1855இல் பிறந்தவர். சாமிநாதையர் குடும்பத்தார் அப்போது அரியிலூரில் வசித்துவந்தனர். சாமிநாதையர் ஆரம்பக் கல்வியைத் தம் சொந்த ஊரான உத்தமதானபுரத்தில் பயின்றிருக்கிறார். பின்னாளில் பல ஊர்களில் தமது கல்வியைக் கற்க வேண்டிய சூழல் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. தந்தை வேங்கடசுப்பையர் சங்கீதப் புலமை பெற்று விளங்கியவர். இவரது முன்னோர்களும் இசைப்பயிற்சியில் புலமை பெற்றவர்களாக இருந்திருக்கின்றனர். கீர்த்தனங்களை இசையுடன் பாடும் வல்லமை பெற்றவராக வேங்கடசுப்பையர் விளங்கியிருக்கிறார். ஊர் ஊராகச் சென்று திருவிளையாடல் புராணம், கம்பராமாயணம், பாரதம் முதலிய நூல்களைப் பிரசங்கம் செய்து, ஊரார் அளிக்கும் சன்மானங்களைப் பெற்று வாழ்ந்து வந்தவர். ஜமீந்தார்கள், செல்வந்தர்களின் ஆதரவிலும் வேங்கடசுப்பையர் சங்கீத வித்துவானாக இருந்திருக்கிறார். இதனால் தந்தை செல்லும் இடமெல்லாம் சாமிநாதையரும் உடன் செல்லக்கூடிய சூழல் இருந்தது. 

பிரசங்கம் செய்யச் செல்லும் ஊரில் தங்கியிருக்கின்ற காலத்தில், அந்த ஊரில் உள்ள கற்றுத்தேறியவர்களிடம் சாமிநாதையரைப் பாடம் கேட்க வைப்பது வேங்கடசுப்பையரின் வழக்கமாக இருந்தது. தம் முன்னோர்கள் வழக்கப்படி சாமிநாதையரும் இசைப் பயிற்சியைப் பெறவேண்டுமென்ற பெருவிருப்பம் தந்தை வேங்கடசுப்பையருக்கு இருந்தது. காலம் சாமிநாதையரைத் தமிழின்பால் ஈடுபாடுகொள்ளச் செய்துவிட்டது. 

உத்தமதானபுரம்

கல்வியறிவு பெற்ற குடும்பச்சூழலில் பிறந்துவளரும் குழந்தைகள், ஆரம்பக்கல்வியைப் பெறுவதைப் போன்றே உ.வே. சாமிநாதையரும் குடும்ப உறுப்பினர்களாகிய பாட்டி, பாட்டன், தாய், தந்தை, சிறிய தந்தை ஆகியோர்களிடம் அரிச்சுவடி, தெய்வத் துதிப் பாடல்களைப் பாடம் கேட்டிருக்கிறார். தம் தந்தை வேங்கடசுப்பையரிடம் நிகண்டு போன்ற பல கருவிநூல்களையும், சதக நூல்களையும் பாடங்கேட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். தாம் ஆரம்பக் கல்வி பெற்றது குறித்து என் சரித்திரத்தில் விரிவாக எழுதியிருக்கிறார் உ.வே.சா. அதில் ஓரிடத்தில், 

“எனக்கு ஐந்தாம் பிராயம் நடைபெற்றபோது வித்தியாப்பியாசம் செய்வித்தார்கள். என் பாட்டனார் அரிச்சுவடி சொல்லித்தந்தார். முதலில் உத்தமதானபுரத்தில் தெற்கு வடக்குத் தெருவில் இருந்த பள்ளிக்கூடத்தில் நாராயண ஐயரென்பவரிடம் சில மாதங்களும், பிறகு வடக்குத் தெருவில் இருந்த பள்ளிக்கூடத்தில் சாமிநாதையரென்பவரிடம் சில வருஷங்களும் படித்தேன். தமிழில் கீழ்வாயிலக்கம், நெல் இலக்கம் முதலியவற்றையும், வடமொழியில் சில நூல்களும் படித்தேன். பள்ளிக்கூடத்தில் படிப்பதோடு வீட்டிலும் என் பாட்டனார், தந்தையார், சிறிய தகப்பனார் ஆகியவர்களும் எனக்குக் கற்பித்து வந்தனர்” (என் சரித்திரம், ப. 51)

என்று பதிவுசெய்திருக்கிறார் (கீழ்வாயிலக்கம், நெல் இலக்கம் என்பன தமிழ் - எண் குறியீடாகும்).

ஆரம்பக்காலத்தில் உத்தமதானபுரத்திலிருந்த நாராயண ஐயர் என்பவரிடம் அரிச்சுவடி, எண் சுவடி பாடங்களைக் கேட்டறிந்திருக்கிறார். அவ்வூரிலிருந்த சாமிநாதையர் என்பவரிடம் தமிழும் கணக்கும் கற்றறிந்திருக்கிறார்; இவரிடமே ஏட்டில் எழுதும் பயிற்சியையும் உ.வே.சா. பெற்றிருக்கிறார். இவரிடம் சங்«க்ஷப ராமாயணம், விஷ்ணு ஸஹஸ்ரநாமம், நீதிசாரம் முதலிய நூல்களையும் பாடம் கேட்டிருக்கிறார். உத்தமதானபுரத்திலிருந்த சிவஸ்வாமி ஐயர் என்பவரிடம் ஆங்கில எழுத்துக்களைக் (கி,ஙி,சி...) கற்றறிந்திருக்கிறார். தமிழ் எண்களை மட்டுமே அறிந்திருந்த உ.வே.சா. இவரிடமே ஆங்கில எண்களைக் (1,2,3...) கற்றுத் தெரிந்திருக்கிறார். 

தமிழ், கணக்கு உள்ளிட்ட பாடங்களை யார் யாரிடம் கேட்டறிந்துகொள்ளும் சூழல் தமக்கு வாய்க்கப்பெற்றது என்பது பற்றிய தகவல்களுடன், அவரின் சமகால ஆசிரியர்களுக்குக் கிடைத்த ஊதியம் குறித்த செய்திகளையும் உ.வே.சா. பதிவுசெய்திருக்கிறார். அதில் ஓரிடத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.

“உபாத்தியாயருக்கு மாதம் கால் ரூபாய் சம்பளம்; ஒவ்வொரு பையனும் கொடுப்பான். பணக்காரர்கள் வருஷாசனமாக நெல் கொடுப்பார்கள். விசேஷ காலங்களில் மரியாதையும் செய்வார்கள். நவராத்திரி காலங்களில் உபாத்தியாயருக்கு ஒரு வகையான வரும்படி உண்டு. அந்த உத்ஸவத்தை ‘மானம்பூ’ என்று சொல்வார்கள்; மகா நோன்பு என்னும் சொல்லே அந்த உருவத்தை அடைந்தது. அக்காலத்தில் பிள்ளைகள் நன்றாக அலங்கரித்துக்கொண்டு வந்து பாட்டுப் பாடுவார்கள்; கோலாட்டம் போடுவார்கள். அதற்கெனவே தனியே பாட்டுக்கள் உண்டு. ஒவ்வொருவர் வீட்டுக்கும் பிள்ளைகளை அழைத்துச் சென்று பாடச் செய்வது உபாத்தியாயர் வழக்கம். வெளியூருக்கும் அழைத்துச் செல்வது உண்டு. அவரவர்கள் தங்கள் தங்கள் நிலைமைக்குத் தக்கபடி பணம் தருவார்கள். இந்தப் பணம் முழுவதையும் உபாத்தியாயர் எடுத்துக் கொள்வார். மானம்பூ வருவாயினால்தான் உபாத்தியாயர்கள் தங்கள் வீட்டுக் கல்யாணம் முதலிய காரியங்களைச் சிறப்பாக நடத்துவார்கள்” (என் சரித்திரம், பக். 56 - 57)

அரியிலூர் 

உ.வே.சா. அவர்களின் ஆறாம் வயது நடைபெற்றுக்கொண்டிருந்தபோது பாட்டி, பாட்டனார் இருவரும் இயற்கையெய்தி விடுகின்றனர். பெற்றோர்கள் ஊரில்வந்து உடனிருக்க வேண்டுமென்ற விருப்பத்தினாலேயே முன்பிருந்த அரியிலூரைவிட்டு உத்தமதானபுரம் வந்து வசித்துவந்தார் உ.வே.சா. வின் தந்தையார் வேங்கடசுப்பையர். பெற்றோர்களின் இறப்பிற்குப் பின்னர் அவர்களுக்குரிய இறுதிக் கடன்களையெல்லாம் செய்துமுடித்துவிட்டு உத்தமதானபுரத்தைவிட்டு மீண்டும் அரியிலூருக்கே வந்து வசிக்கத் தொடங்கினார் வேங்கடசுப்பையர். அந்தக் காலத்தில் அரியிலூரிலிருந்த சமஸ்தானத்தில் வேங்கடசுப்பையர் சங்கீத வித்துவானாக இருந்துவந்தார். அந்தச் சமஸ்தானத்து ஜமீந்தாரால் இலந்தங்குழி எனும் ஓரூரில் பத்துக்காணி நிலத்தைச் சர்வமானியமாக உ.வே.சா. தந்தை வேங்கடசுப்பையர் பெற்றிருக்கிறார். 

உ.வே.சா. அவர்களின் ஏழாம் வயது முதல் பதினொன்றாம் வயதுவரையில் வேங்கடசுப்பையர் அரியிலூரில் வசித்துவந்திருக்கிறார். தந்தை அரியிலூருக்குச் சென்றபிறகு உ.வே.சா. முதன்முதலாகக் கிருஷ்ண வாத்தியார் என்பவரிடம் பாடங்கேட்டிருக்கிறார். அவரிடம் ஆத்திசூடி, மூதுரை, மணவாள நாராயண சதகம் முதலிய சில சதகங்கள், இரத்தினசபாபதி மாலை, நாலடியார், திருக்குறள் முதலிய நூல்களை. பாடங்கேட்டிருக்கிறார். கறடா (மட்டி)க் காகிதம் அறிமுகமான காலமாதலின், அக்காகிதத்தில் கொறுக்காந் தட்டைப் பேனாவால் எழுதும் பயிற்சியையும் இவரிடமே உ.வே.சா. பெற்றிருக்கிறார். 

அரியிலூரிலிருந்த முத்துவேலாயுத பண்டாரம் என்பவரிடம் தெலுங்கு, கணிதம், வேமன்ன சதகம், ராமதாச சதகம் முதலிய நூல்களை உ.வே.சா. பாடங்கேட்டிருக்கிறார். இதே காலத்தில் உ.வே.சா. அவர்களை, அவ்வூரிலிருந்த தில்லை கோவிந்த பிள்ளை என்பவரிடம் கிராமக் கணக்கு வேலையைப் பயிற்றுவிக்கும்படி வேங்கடசுப்பையர் ஒப்பித்திருந்தார். அங்குக் கிராமக் கணக்குப் பயிற்சியும் பெற்று விளங்கினார். 

உ.வே. சாமிநாதையரின் ஆசிரியர்களுள் முக்கியமானவர் அரியிலூர்ச் சடகோப ஐயங்கார். பரம்பரையாக வித்துவான்களாக இருந்த மரபிற் பிறந்த சடகோப ஐயங்கார், தமிழும் சங்கீதமும் நன்கு அறிந்தவர்; உ.வே.சா. அவர்களைத் தமிழில் நன்கு ஈடுபாடு கொள்ளச் செய்தவர் இவரேயாவார். சடகோப ஐயங்கார் தாம் இயற்றிய ஆலந்துறையீசர் பதிகத்தில் உள்ள கீர்த்தனங்களைப் பாடி இசைப் பயிற்சியும் அளித்திருக்கிறார். திருவேங்கடத்தந்தாதி, திருவேங்கடமாலை முதலிய தமிழ் நூல்களையும் கற்றுக்கொடுத்திருக்கிறார். இவரைப் பற்றி என் சரித்திரத்தில்,

“என் பிதா சடகோபையங்காரிடம் என்னை ஒப்பித்ததற்கு முக்கியமான காரணம் சங்கீதத்தில் எனக்கு நல்ல பழக்கம் உண்டாக வேண்டுமென்றும், அதற்கு உதவியாகத் தமிழறிவு பயன்படுமென்றும் எண்ணியதே. ஆனால் என் விஷயத்தில் அந்த முறை மாறி நின்றது. தமிழில் அதிகப் பழக்கமும் அதற்கு உபகாரப்படும் வகையில் சங்கீதமும் இருப்பதையே நான் விரும்பினேன். சடகோபையங்காரிடம் என்று நான் மாணாக்கனாகப் புகுந்தேனோ அன்றே தமிழ்த் தாயின் அருட்பரப்பிற் புகுந்தவனானேன். எனக்குத் தமிழில் சுவை உண்டாகும் வண்ணம் கற்பித்த முதற் குரு சடகோபையங்காரே. பொம்மை (பாவை)களைக் காட்டிக் குழந்தைகளைக் கவர்வது போலத் தமிழ்ச் செய்யுட்களின் நயத்தை எடுத்துக்காட்டி என் உள்ளத்துக்குள் அந்த இளம்பருவத்தில் தமிழ் விதையை விதைத்தவர் அவரே” (என் சரித்திரம், ப. 71)

என்று உ.வே.சா. பதிவுசெய்திருக்கிறார். இவரிடம் கற்றுக்கொண்டிருந்த நூல்களன்றி வீட்டில் சூடாமணி நிகண்டின் பன்னிரண்டு தொகுதிகளையும், மணவாள நாராயண சதகம், அறப்பளீசுவர சதகம், குமரேச சதகம், இரத்தினசபாபதி மாலை, கோவிந்த சதகம், நீதி வெண்பா என்னும் நீதி நூல்களையும், நன்னூற் சூத்திரங்களையும் மனப்பாடம் செய்து தந்தையாரிடம் ஒப்பித்து வந்ததாகவும் உ.வே.சா. குறிப்பிடுகிறார். 

குன்னம்

அரியிலூர் ஜமீந்தாரின் ஆதரவு மெல்ல மெல்லக் குறைந்துவந்தமையால் உ.வே.சா. அவர்களின் தந்தை வேங்கடசுப்பையர் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகிறார். குடும்பத்திற்குக் கடனும் ஏற்பட்டுவிடுகிறது. வேங்கடசுப்பையரின் குடும்பம் ஜமீந்தாரின் ஆதரவில்லாமல் இருப்பதைக் குன்னம் சிதம்பரம் பிள்ளையென்பவர் அறிந்து கொள்கிறார். இவர் வேங்கடசுப்பையரின் பால்யகால நண்பர். அரியிலூருக்கு அருகிலுள்ள குன்னம் என்னும் கிராமத்துக் கணக்கு வேலை பார்த்து வந்தவர். இவர் உ.வே.சா. குடும்பத்தாரைக் குன்னத்திற்கு அழைத்துச் சென்று ஆதரவு அளித்து வந்திருக்கிறார். குன்னம் சென்றவுடன் வேங்கடசுப்பையர் அருணாசலகவி ராமாயணத்தை இரவிற் பிரசங்கம் செய்வித்து வந்திருக்கிறார். உ.வே.சா. அப்போது சிதம்பரம் பிள்ளையிடம் சில பிரபந்த நூல்கள், திருவிளையாடற் புராணம் முதலிய நூல்களைப் பாடம் கேட்டு வந்திருக்கிறார். தந்தையின் விருப்பப்படி கிராமக் கணக்கு வேலையில் நன்கு பயிற்சிபெற்றுள்ள சிதம்பரம் பிள்ளையிடம் கணக்கு வேலையையும் கற்றுவந்திருக்கிறார்; அவருடன் உதவிக் கணக்கு வேலையையும் பார்த்து வந்திருக்கிறார். 

உ.வே.சா. அவர்கள், சிதம்பரம் பிள்ளையைச் சந்திப்பதற்கு வந்துபோகும் பல வித்துவான்களுள் ஒருவரான கதிர்வேற் கவிராயர் என்பவரிடம் தனிப் பாடல்களைப் பாடம் கேட்டிருக்கிறார். இந்தக் கதிர்வேற் கவிராயர் சேலத்தைச் சேர்ந்த, அரியிலூர், உடையார்பாளையம் முதலிய சமஸ்தானத்தில் வித்துவானாக இருந்த குமாரசாமிக் கவிராயரின் மாணவராக இருந்து விளங்கியவர். 

கார்குடி

குன்னத்தில் இருந்த காலத்தில் அவ்வூர் வைஷ்ணவர் ஒருவர் வீட்டுத் திருமணத்திற்கு வந்திருந்த கார்குடி கஸ்தூரி ஐயங்காரின் அறிமுகம் உ.வே.சா. அவர்களின் தந்தை வேங்கடசுப்பையருக்கு ஏற்படுகிறது. அவர், குன்னம் சிதம்பரம் பிள்ளைக்கு நன்கு பழக்கமானவர்; கம்பராமாணயத்தில் நன்கு புலமைபெற்றவராகவும் விளங்கியிருக்கிறார். அவர் கார்குடிக்கு வரும்படி வேண்டிக் கொண்டார். அவர் பிரசங்கத் தொழிலையும் செய்துவந்தவராதலின், வேங்கட சுப்பையருக்கும், கஸ்தூரி ஐயங்காரின் விருப்பப்படி கார்குடி சென்றால் தாமும் அங்குப் பிரசங்கம் செய்யலாம், பிள்ளையையும் அவரிடம் பாடங்கேட்க வைக்கலாம் என்ற விருப்பம் ஏற்படுகிறது. சிதம்பரம்பிள்ளையின் விருப்பமும் அதுவாகவே இருந்தமையால் உ.வே.சா. குடும்பம் கார்குடிக்குச் சென்றது. கார்குடி சென்றதும் கஸ்தூரி ஐயங்காரிடம் நாலடியார், நன்னூல், இராமாயணம், பாரதம், பாகவதம், நைடதம் முதலான நூல்களை உ.வே.சா. பாடம் கேட்டிருக்கிறார். விசாகப் பெருமாளையர் இயற்றிய நன்னூல் காண்டிகையுரையை முழுவதும் பாடம் சொல்லி அதன் கருத்துரை, விசேட உரை முதலியவற்றை உ.வே.சா. அவர்களுக்குப் பாடம் பண்ணி வைத்தவர் இவரே ஆவார். 

குன்னத்திலிருந்த கஸ்தூரி ஐயங்காருடைய நண்பரான சாமி ஐயங்கார் என்பவரிடம் பாடம் கேட்க வேண்டுமென்று விரும்பிக் கம்பராமாயணப் பாடத்தைக் கேட்டறிந்திருக்கிறார். ஆறுமாத காலமே கார்குடியில் இருந்துவிட்டு உ.வே.சா. குடும்பத்தார் மீண்டும் குன்னத்திற்குத் திரும்பி வந்து விடுகின்றனர். கார்குடியிலிருந்தபோது ஸ்ரீநிவாஸையங்கார் என்பவர் உ.வே.சா. அவர்களுக்கு மகாலிங்கையர் இலக்கணம், விசாகப்பெருமாளையர் நன்னூற் காண்டிகை ஆகிய இலக்கண நூல்களின் அச்சுப்பிரதியைப் படிப்பதற்காகத் தந்திருந்தார். குன்னம் வந்த பின்னர் அந்நூல்களை முழுவதுமாகப் படித்துப் பாடம்பண்ணிவிட்டு ஐயம் உள்ள பாடங்களைக் குறித்துவைத்துக்கொண்டு மீண்டும் கார்குடி சென்று நான்கு நாட்கள் தங்கியிருந்து கஸ்தூரி ஐயங்காரிடம் அந்த ஐயங்களைக் கேட்டுத் தெளிந்திருக்கிறார். குன்னத்திலிருந்தபோது இராமாயணப் பிரசங்கம் செய்யும்பொருட்டுச் சிலகாலம் வெண்மணி எனும் ஊருக்குச் சென்று உ.வே.சா. குடும்பம் வசித்துவந்துள்ளது. 

உ.வே.சா. அவர்களுக்குப் பதினான்கு வயது நடந்துகொண்டிருந்தபோது தந்தை வேங்கடசுப்பையர் திருமண ஏற்பாடுகளைச் செய்யத்தொடங்கிவிட்டார். திருமணத்திற்கு வேண்டிய பொருளை ஈட்டும் முயற்சியில் அரியிலூரை விட்டுப் பெரும்புலியூர்த் தாலுகாவிலுள்ள களத்தூருக்குச் சென்று சிலகாலம் உ.வே.சா. குடும்பம் வசிக்கலானது. வேங்கடசுப்பையர் அவ்வூரில் இராமாயணம், நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகளைப் பிரசங்கம் செய்து, வேண்டிய பொருளை ஈட்டிவந்து, உ.வே.சா. அவர்களுக்குத் திருமண ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கியுள்ளார். 

பாபநாசம்

தம் சொந்த ஊரான உத்தமதானபுரத்தில் 16, ஜூன், 1868இல் உ.வே.சா. அவர்களுக்கும் மதுராம்பாள் என்பவருக்கும் திருமணம் நடைபெற்று முடிந்தது. அப்போது இவருக்கு வயது 14; மனைவி மதுராம்பாளுக்கு வயது 8. திருமணம் முடிந்த பின்னர்த் சிலகாலம் அங்கேயே இருந்துவிட்டு மீண்டும் களத்தூருக்குச் சென்று உ.வே.சா. குடும்பம் வசிக்கத் தொடங்கியது. தலைதீபாவளியின் பொருட்டு உத்தமதானபுரம் வந்த உ.வே.சா. அவர்கள், ஆறுமாதகாலம் அங்கேயே இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. தந்தையாருக்கு ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக மேலும் ஆறுமாத காலம் உத்தமதானபுரத்திலேயே இருக்கவேண்டிய சூழல் அவருக்கு வாய்த்து விடுகிறது. இந்தக் காலத்தில் உத்தமதானபுரத்திற்கு அருகில் பாபநாசத்திலிருந்த இராகவையரிடம் சென்று நன்னூல் காண்டிகையுரையைப் பாடங்கேட்டு வந்திருக்கிறார். பாபநாசத்தில் சிறு பள்ளிக்கூடம் ஒன்றில் ஆசிரியராக இருந்த அவர், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, தியாகராச செட்டியார் ஆகியோரிடம் பாடம் கேட்டுப் புலமை பெற்று விளங்கியவர். பிற்காலத்தில் மதுரைக் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராகப் பணியாற்றியவர். இவரிடம் தினந்தோறும் உத்தமதானபுரத்திலிருந்து பாபநாசம் சென்று பாடம்கேட்டு வந்திருக்கிறார். தியாகராச செட்டியார் பாடம் நடத்தும் அருமையைத் தினம் தினம் சொல்லிச் சொல்லி மகிழும் இவர் இயல்பின் வழியாகத் தியாகராச செட்டியாரின் தமிழ்ப் புலமையை உ.வே.சா. அவர்கள் அறியும் வாய்ப்பேற்பட்டுள்ளது. 

வேங்கடசுப்பையர் மீண்டும் குன்னத்திற்கு வந்து வழக்கம்போலவே பிரசங்கத் தொழிலைச் செய்யத் தொடங்கியுள்ளார். இவருடன் உ.வே.சா. அவர்களும் வந்து இருக்கவேண்டிய சூழல் இருந்தது. இந்தக் காலத்தில் ஒருநாள் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் நண்பர் ஒருவரை வேங்கடசுப்பையர் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. அவர் உ.வே.சா. அவர்களுக்கு இருக்கும் தமிழ் ஈடுபாட்டைக் கண்டு வியந்து, இவரைக் கொண்டுபோய் மீனாட்சி சுந்தரம்பிள்ளையிடம் பாடம் கேட்கச் சொல்லுங்கள் என்று வேங்கடசுப்பையரிடம் சொல்லியிருக்கிறார். வேங்கடசுப்பையருக்குத் திருமணமான இவரை எப்படித் தனியே அனுப்புவது என்ற தயக்கமும், செலவிற்குப் போதிய பணம் இல்லை என்ற வருத்தமும் இருந்தது. இதனால் அப்போது அவர் சொன்னபடி மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் பாடம் கேட்க அனுப்பி வைக்க முடியாமல் போகிறது. இந்தக் காலத்தில் உ.வே.சா. அவர்களுக்குப் பிள்ளையவர்களிடம் பாடம் கேட்க வேண்டும் என்ற விருப்பம் நன்றாக ஏற்பட்டுவிட்டது. 

செங்கணம்

குன்னத்தில், வேங்கடசுப்பையர் தங்கியிருந்த வீட்டு உரிமையாளராகிய ராமையங்கார் என்பவர் உ.வே.சா. அவர்களின் தமிழ் ஈடுபாட்டைக் கண்டு, ஒருநாள் வேங்கடசுப்பையரிடம் ‘செங்கணம் சின்ன பண்ணை விருத்தாசல ரெட்டியார் அவர்களிடம் கொண்டுபோய்விட்டால் அவர் பாடஞ் சொல்வார்’ என்று சொல்லியிருக்கிறார். சிலநாள் கழித்து அவர் சொல்லியபடி வேங்கடசுப்பையர் குடும்பத்துடன் செங்கணம் சென்று தங்கியிருந்து உ.வே.சா. அவர்களை ரெட்டியாரிடம் பாடங்கேட்கச் செய்விக்கிறார். ரெட்டியாரிடம் யாப்பருங்கலக் காரிகை (1869; சுக்கில - மார்கழி) தனிப்பாடல் திரட்டு, செவ்வைச் சூடுவார் இயற்றிய பாகவதம், பாட்டியல் நூல்கள், திருக்குறள் உள்ளிட்ட நூல்களை உ.வே.சா. கற்றுத் தெரிந்து கொண்டிருக்கிறார். ரெட்டியார் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் பெருமைகளை நாளும் சொல்லிக்கொண்டே இருக்கும் இயல்பினராதலின், பிள்ளையின் பெருமைகளை நாளும் கேட்டுக்கொண்டே இருக்கும் சாமிநாதையருக்கு அவரிடம் எப்போது பாடம் கேட்கும் சூழல் அமையும் என்ற ஏக்கம் பெருகிக் கொண்டே சென்றுள்ளது. உ.வே.சா. மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் பாடம் கேட்க வேண்டுமென்ற தம் விருப்பத்தை ரெட்டியாரிடம் சொன்னபோது, அவர், 

“ஆம், அவரிடம் போனால்தான் இன்னும் பல நூல்களை நீர் பாடங் கேட்கலாம்; உமக்குத் திருப்தியுண்டாகும்படி பாடம் சொல்லக்கூடிய பெரியார் அவர் ஒருவரே. நாங்களெல்லாம் மேட்டு நிலத்தில் மழையினால் ஊறுகின்ற கிணறுகள். என்றும் பொய்யாமல் ஓடுகின்ற காவிரி போன்றவர் அவர். அவரிடம் போய்ப் படிப்பதுதான் சிறந்தது” (முன்னது, ப. 150)

என்று சொன்னதாக என் சரித்திரத்திலே குறிப்பிட்டிருக்கிறார். ரெட்டியார் உ.வே.சா. அவர்களிடம் சொன்னது மட்டுமின்றித் தந்தை வேங்கடசுப்பையரிடமும், 

“என்னால் இயன்றதைச் சொல்லிக் கொடுத்தேன். இன்னும் நன்றாகப் படித்துப் பயன் அடைய வேண்டுமானால் பிள்ளையவர்களிடம் இவரை விட்டுப் படிப்பிப்பதுதான் நலம். உங்களை ஆதரிக்க வழியில்லாமல் இவ்வாறு சொல்லுகிறேனென்று நீங்கள் சிறிதும் எண்ண வேண்டாம். நீங்கள் எவ்வளவு வருஷம் இருந்தாலும் எனக்குச் சிரமம் இல்லை. கடவுள் கொடுத்திருப்பதைக்கொண்டு என்னால் இயன்ற அளவு ஆதரித்து வருவேன். இவரால் எனக்குச் சிரமம் உண்டென்று நான் நினைப்பதாகவும் எண்ணாதீர்கள். இவருக்குப் பாடம் சொல்வதும், இவரோடு தமிழ் நூல் சம்பந்தமாகப் பொழுதுபோக்குவதும் உண்மையில் எனக்கு அளவற்ற திருப்தியைத் தருகின்றன. எப்பொழுதும் இப்படியே இருக்கலாம். ஆனால் எனக்கு இனிமேல் வாழ்க்கையில் ஆகவேண்டியது ஒன்றும் இல்லை; இவர் இனிமேல்தான் முன்னுக்கு வந்து பிரகாசிக்க வேண்டும். தக்க இடத்தில் இருந்து பாடங் கேட்டால் இவர் அபிவிருத்தி அடைவாரென்பதில் தடையில்லை. இவரை அனுப்புவதற்கு எனக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது. என் வருத்தத்தை மாத்திரம் உத்தேசித்து, இவருடைய அபிவிருத்திக்குத் தடை உண்டாக்குவது பாவமல்லவா?” (முன்னது, ப. 150)

என்று சொல்லியதாகக் குறிப்பிட்டிருக்கிறார். செங்கணத்தில் உ.வே.சா. குடும்பம், பிரமோதூத வருஷம் மார்கழி மாதம் முதல் பங்குனி வரையில் (1870 டிசம்பர் முதல் 1871 மார்ச்சு வரையில்) இருந்துவிட்டு அங்கிருந்து அரியிலூர் வந்து சேர்ந்திருக்கிறது. அரியிலூருக்கு அருகில் உள்ள கீழைப்பழுவூர் என்ற ஊரிலிருந்த செல்வந்தராகிய சபாபதி பிள்ளை என்பவர் சிலகாலம் வந்து எங்கள் ஊரில் தங்கியிருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டதால் உ.வே.சா. குடும்பத்தினர் அரியிலூரிலிருந்து புறப்பட்டுச் சென்று கீழைப்பழுவூர் சென்று சிலகாலம் தங்கியிருந்தனர். அப்பொழுது தமிழ்ப் புலமை பெற்றிருந்த சபாபதி பிள்ளையிடம் தஞ்சைவாணன் கோவை நூலை உ.வே.சா. பாடங்கேட்டிருக்கிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டுப் பெரிய திருக்குன்றம் வந்து சிலநாள் தங்கியிருந்துவிட்டுப் பின்னர்ச் சொந்த ஊரான உத்தமதானபுரம் வந்துசேர்ந்தனர் உ.வே.சா. குடும்பத்தினர். அங்கிருந்து மாயூரம் சென்று மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களிடம் பாடம் கேட்கச் செல்வது என்பது அப்போது அவர்களின் திட்டமாக இருந்தது. அதற்குரிய ஏற்பாடுகளையெல்லாம் வேங்கடசுப்பையர் செய்து முடித்திருந்தார். உ.வே.சா. அவர்களும் தம் எதிர்கால இலக்கு நோக்கிய பயணத்திற்கு ஆயத்தமாக இருந்தார். 

மீனாட்சிசுந்தரம் பிள்ளை சந்திப்பும் - சந்திப்பிற்குப் பின்னரும் (1871 - 1880)

மாயூரம் 

தந்தை செல்லும் ஊர்களிலெல்லாம் உடன்சென்று அந்தந்த உர்களிலுள்ள பண்டிதர்களிடம் பாடம் கேட்டுவந்த உ.வே. சாமிநாதையர் 1871, ஏப்ரல் மாதம் மாயூரம் சென்று மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் மாணவராகச் சேர்ந்து பாடம் கேட்கத் தொடங்கினார். மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் பாடம் கேட்க வேண்டுமென்ற நெடுநாள் கனவு நிறைவேறியதில் உ.வே.சா. அவர்களுக்கு பெருமகிழ்ச்சி ஏற்பட்டது. தக்க ஆசிரியரிடம் தம் மகனைப் பாடம் கேட்க வைக்க வேண்டுமென்ற வேங்கடசுப்பையரின் நெடுநாள் விருப்பமும் கைகூடி வந்து நின்றது. 

மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் பாடம் கேட்க வேண்டுமென்று உ.வே.சா. அவர்களுக்கு எவ்வளவு ஆவல் மிகுந்திருந்தது என்பதற்குச் சான்றாகக் கீழ்வரும் அவரின் கூற்றை நோக்கினால் நன்கு விளங்கும்.

“நெடுநாளாக இப்புலவர் பெருமானைக் காணவேண்டுமென்ற ஆவல் மிகுதியாக இருந்து வந்தமையால் இவரைக் கண்டவுடன் என்னை அறியாமலே ஒருவகை மகிழ்ச்சியும் அன்புணர்ச்சியும் உண்டாயின. இவருடைய தோற்றப் பொலிவும் முகமலர்ச்சியும் என்னுள்ளத்தைக் கவர்ந்தன. ‘இவரைப் பார்த்தல் கூடுமோ? கூடாதோ!’ என்று ஏங்கியிருந்த எனக்கு அந்தச் சமயத்தில் உண்டான இன்பத்திற்கு எல்லையில்லை. இவர் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன்” (மீனாட்சிசுந்தரம் பிள்ளை சரித்திரம், பாகம் - 2, ப. 3)

மாயூரம் சென்று மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களைக் கண்ட முதற் காட்சியை என் சரித்திரத்தில் இவ்வாறு பதிவுசெய்து நமக்குக் காட்சிப்படுத்துகிறார். 

“புலவர் பெருமான் வரும்போதே அவருடைய தோற்றம் என் கண்ணைக் கவர்ந்தது. ஒரு யானை மெல்ல அசைந்து நடந்து வருவதைப்போல் அவர் வந்தார். நல்ல வளர்ச்சியடைந்த தோற்றமும் இளந்தொந்தியும் முழங்கால் வரையில் நீண்ட கைகளும் பரந்த நெற்றியும் பின்புறத்துள்ள சிறிய குடுமியும் இடையில் உடுத்திருந்த தூயவெள்ளை ஆடையும் அவரை ஒரு பரம்பரைச் செல்வரென்று தோற்றச் செய்தன. ஆயினும் அவர் முகத்திலே செல்வர்களுக்குள்ள பூரிப்பு இல்லை; ஆழ்ந்து பரந்த சமுத்திரம் அலையடங்கி நிற்பதுபோன்ற அமைதியே தோற்றியது. கண்களில் எதையும் ஊடுருவிப்பார்க்கும் பார்வை இல்லை; அலக்ஷியமான பார்வை இல்லை; தம் முன்னே உள்ள பொருள்களில் மெல்லமெல்லக் குளிர்ச்சியோடு செல்லும் பார்வைதான் இருந்தது” (என் சரித்திரம், 159)

உ.வே.சா. மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களிடம் பாடம் கேட்பதற்கு முன்னர், அவரிடம் பாடம் கேட்டுக்கொண்டிருந்த மாணவர் ஒருவரிடம் முதன் முதலாக நைடதத்தைப் பாடம் கேட்டு முடித்திருக்கிறார். பின்னர் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் நேரடியாகப் பாடம்கேட்கத் தொடங்கியுள்ளார். பிள்ளையிடம் முதன் முதலாகப் பிரபந்த நூல்களுள் ‘திருக்குடந்தைத் திரிபந்தாதி’யைப் பாடங்கேட்டு முடித்திருக்கிறார். பின்னர் பழமலைத் திரிபந்தாதி, திருப்புகலூர்த் திரிபந்தாதி, மருதூர் யமகவந்தாதி, தில்லை யமகவந்தாதி, திருவேரகத்து யமகவந்தாதி, துறைசை யமகவந்தாதி, மறைசையந்தாதி முதலிய அந்தாதிகளும், மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், முத்துக் குமாரசாமி பிள்ளைத்தமிழ், செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ், அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் முதலிய சில பிள்ளைத் தமிழ்களும், அஷ்டப்பிரபந்தத்துள் சில பிரபந்தங்களும் பாடம் கேட்டு முடித்திருக்கிறார். 

மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் இவர் பாடம் கேட்கத் தொடங்கிய காலத்தில் காரைக்காற் சவேரிநாத பிள்ளை, கூறைநாட்டுக் கனகசபை ஐயர், சிவப்பிரகாச ஐயர், திருமங்கலக்குடி சேஷையங்கார், வல்லம் கந்தசாமி பிள்ளை, மாயூரம் முத்துசாமி பிள்ளை, நாகம்பாடிச் சாமிநாத பிள்ளை, மூவலூர்ச் சாமிப்பிள்ளை, திட்டைச் சோமசுந்தரம் பிள்ளை, சீயாலம் சிதம்பரம் பிள்ளை ஆகியோர் மாணவர்களாகப் பயின்று கொண்டிருந்தனர். மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் 1870ஆம் ஆண்டு முதல் 1876ஆம் ஆண்டுவரை ஆறு ஆண்டுகள் முறையாகத் தமிழைக் கற்றுத் தேறியிருக்கிறார். நிலையாக ஒரே இடத்தில் ஒரே ஆசிரியரிடம் பாடம் கேட்கும் வாய்ப்பு இங்குதான் உ.வே.சா. அவர்களுக்கு வாய்க்கப்பெற்றிருக்கிறது. 

அரிய பல நூல்களை, நுட்பமாகப் பாடம் கேட்கும் நல்வாய்ப்பும், பாடத்தில் ஐயம் ஏற்படுகின்றபோது அதைத் தீர்த்துக் கொள்ளும் அறிஞர் பெருமக்களின் தொடர்பும் இந்தக் காலத்தில்தான் உ.வே.சா. அவர்களுக்கு வாய்க்கப் பெற்றது. அந்த நல்வாய்ப்புதான் அவரை உயர்நிலைக்குச் செல்லக்கூடிய அடித்தளத்தை நன்றாக அமைத்துக் கொடுத்திருக்கிறது. 

திருவாவடுதுறை

திருவாவடுதுறை மடத்தில் மகாவித்துவானாக இருந்து பாடம் சொல்லிவந்த மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் 1876, பிப்ரவரி, 1-ஆம் நாள் இயற்கையெய்தி விடுகிறார். அவரின் இறப்பிற்குப் பின்னர், அவரிடம் பாடம் கேட்டுவந்த மாணவர்கள் திருவாவடுதுறை மடத்தில் அப்போது ஆதீனகர்த்தராக விளங்கிய மேலகரம் ஸ்ரீசுப்பிரமணிய தேசிகரிடம் பாடம் கேட்கத் தொடங்கினர். உ.வே.சா. அவர்கள் நான்கு ஆண்டுகள் (1876 - 1880) தேசிகரிடம் மாணவராக இருந்து பாடங்கேட்டிருக்கிறார். இந்தக் காலத்தில் குட்டித் தம்பிரான்களுக்குப் பாடம் சொல்லும் ஆசிரியராகவும் விளங்கியிருக்கிறார். இதன் தொடர்ச்சியாகத்தான் 16, பிப்ரவரி, 1880இல் கும்பகோணம் கல்லூரியில் தமிழாசிரியர் பணியை ஏற்கும் பேறு அவருக்கு வாய்க்கப் பெற்றது. கும்பகோணம் கல்லூரியில் 23 ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றினார். பின்னர் 1903 நவம்பர் மாதத்தில் சென்னை மாநிலக் கல்லூரிக்கு வந்து தமிழாசிரியர் பணியைச் செய்யத் தொடங்கியிருக்கிறார். மாநிலக் கல்லூரியில் 1903ஆம் ஆண்டுமுதல் 1919ஆம் ஆண்டு வரையில் 16 ஆண்டுகள் ஆசிரியர் பணியாற்றிவிட்டு ஓய்வுபெற்றிருக்கிறார். ஒய்வுக்குப் பின்னர் சிலகாலம் கழித்து 1924 முதல் 1927 வரையில் மூன்றாண்டுகள் சிதம்பரத்தில் அண்ணாமலை செட்டியார் தொடங்கிய மீனாட்சித் தமிழ்க் கல்லூரியில் முதல்வராக இருந்து பணி செய்திருக்கிறார். இந்த மீனாட்சித் தமிழ்க் கல்லூரிதான் அண்ணாமலைப் பல்கலைக்கழகமாக 1929இல் உருவானது. 

திருவாவடுதுறை மடத்தில் வித்துவானாக இருந்தது முதல், கும்பகோணம் கல்லூரி, சென்னை மாநிலக் கல்லூரி இரண்டிடங்களில் ஆசிரியராகவும், மீனாட்சித் தமிழ்க் கல்லூரியில் முதல்வராகவும் இருந்ததுவரையில் ஏறத்தாழ அரைநூற்றாண்டிற்கும் மேலாக உ.வே.சா. கல்விப்புலப் பின்னணியிலேயே இருந்திருக்கிறார். இந்த ஆசிரியப் பணிக்காலத்தின் இடையிலேதான் தமிழின் பல பெருவளங்களை ஓலைச்சுவடிகளிலிருந்து ஆராய்ந்து அச்சிட்டு வெளியிட்டிருக்கிறார் என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். 

தாம் சங்கீதப் புலமை பெற்றிருந்தாலும் அதைத் தனையன் சாமிநாதையர் மீது வலிந்து வற்புறுத்தித் திணிக்காமல், பிள்ளையின் விருப்பம் அறிந்து நல்ல ஆசிரியர்களைத் தேடி அடையாளங்கண்டு, கொண்டு சேர்த்துத் தமிழ்ப் பயிற்சி அளித்து நாடுபோற்றும் நல்லாசிரியராகப் பெயர் பெறும்படி செய்தவர் அவரின் தந்தை வேங்கடசுப்பையர். இதனால்தான் தந்தை செய்த நற்செயலை இவ்வாறு ஓரிடத்தில் குறிப்பிட்டு நினைவுகொள்கிறார் சாமிநாதையர். 

“இளமையில் எனக்கு ஒரு தக்க ஆசிரியரைத் தேடித் தந்ததும், பின்பு தமிழ்ச் சுவடிகளே கதியாகக் கிடந்த எனக்கு லௌகிகத் தொல்லை அணுவளவேனும் இல்லாமற் பாதுகாத்ததும், சிவபக்தியின் மகிமையைத் தம்முடைய நடையினால் வெளிப்படுத்தியதுமாகிய அரிய செயல்களை நான் மறக்கவே முடியாது. அவருடைய ஆசாரசீலமும் சிவபூஜையும் பரிசுத்தமும் சங்கீதத் திறமையும் அவரைத் தெய்வமாக எண்ணும்படி செய்தன. அவருக்கு என்பாலுள்ள வாத்ஸல்யம் வெளிப்படையாகத் தோற்றாது. அவரது உள்ளமாகிய குகையிலே அது பொன்போற் பொதியப்பட்டிருந்தது. அதன் ஒளியைச் சில முக்கியமான சந்தர்ப்பங்களில் நான் அறிந்திருக்கிறேன்” (என் சரித்திரம், ப. 27)

உ.வே.சாமிநாதையர், பல அறிஞர் பெருமக்களிடம் தமிழ்ப் பாடங்களைக் கற்றுத்தேறி, அரைநூற்றாண்டிற்கும் மேலாக மாணவர்கள் போற்றும் நல்லாசிரியராகப் பணியாற்றி விளங்கி, ஆசிரியர் பணிக்கால இடையில் பல அரியதமிழ் நூல்களைச் சுவடியிலிருந்து பெயர்த்தெழுதி ஆராய்ந்து பதிப்பித்து வெளியிட்டவர்; உரையில்லாத சில பழந்தமிழ் நூல்களுக்கு உரையியற்றியும் பதிப்பித்து அளித்தவர். சாமிநாதையர் அவர்களின் வரலாறு போற்றும் செயல்களுக்கெல்லாம் அடிப்படைக் காரணமாகத் தந்தை காட்டிய நல்வழியும், ஆசிரியர்கள் ஊட்டிய தமிழறிவும், அதனை நன்முறையில் கைக்கொண்டு உழைத்த அவரின் கடும் உழைப்பும் இருந்தன என்பதை நாம் மனதில்கொள்ள வேண்டும். 

துணைநின்ற நூல்கள்

1) சாமிநாதையர், உ.வே. 2008 (ஏழாம் பதிப்பு). என் சரித்திரம். சென்னை: மகாமகோபாத்தியாயர் டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல்நிலையம்.

2) சாமிநாதையர், உ.வே. 1940 (இரண்டாம் பதிப்பு) திருவாவடுதுறையாதீனத்து மகாவித்துவான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம், இரண்டாம் பாகம். சென்னபட்டணம்: லிபர்ட்டி அச்சுக்கூடம்.

3) மகாமகோபாத்தியாயர் தாக்ஷிணாத்ய கலாநிதி டாக்டர் உ.வே. சாமிநாதையரவர்களுடைய எண்பதாம் ஆண்டு நிறைவுவிழாவில் அளிக்கப்பெற்ற உபசாரப் பத்திரங்கள், 6.3.1935. சென்னை: லா ஜர்னல் அச்சுக்கூடம்.