உனக்கு இருக்கே எனக்கு இல்லையே

- உளுவத் தலையன்

என்ன டே எனக்கு இருக்கு

- உச்சிக்குடும்பன்

அதுதான் இருக்கே எனக்கு வேணும்

என்ன வேணும்னு சொல்லு டே

நீ வெளியில எப்படி போற

நடந்து போறேன்

கூட யார் வாரா

என் பொஞ்சாதி

அதுதான் எனக்கு வேணும்

ஏலே மூதேவி நான் ஒன் அண்ணனடா

உன் பொண்டாட்டி மாதிரி எனக்கு ஒரு பொண்டாட்டி வேணும்

ஏலே அப்படிச் சொல்லு

உனக்கு கல்யாணம் பண்ணணும் அப்படித்தானே

ஆமா ஆமா ஆமா

நான் உனக்கு பொண்ணு பாக்குறேன்டே

இந்த உரையாடல் தமிழகத் தோல்பாவைக்கூத்து உச்சிக்குடும்பன் உளுவத் தலையன் கல்யாண கதை நிகழ்வில் வருவது" இது சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் நிகழும்' முக்கியமாக நல்லதங்காள் கூத்தில் இது கட்டாய நிகழ்ச்சியாக நடக்கும் சில சமயம் பார்வையாளர்களின் வேண்டுகோளின்படியும் நடக்கும்.thol paavai koothuஇந்த நிகழ்ச்சியை நடத்திக் காட்டும் உச்சிக்குடும்பன் உளுவத் தலையன் இருவரும் முக்கிய தமாஷ் பாத்திரங்கள். இவர்களின் மாற்றுப்பிரதி தான் தமிழ் சினிமா காமெடி நடிகர்களான கவுண்டமணியும் செந்திலும்.

தோல்பாவைக்கூத்து நகைச்சுவை காட்சிகளைச் செந்தில் கவுண்டமணி ஆகிய இருவரும் பெருமளவில் நகல் எடுத்துள்ளனர். இவர்களின் சில நகைச்சுவைக் காட்சிகள் உச்சிக்குடும்பன் உளுவத்தலையனுக்குச் சொல்லிய அல்லது நிகழ்த்திக் காட்டியவைதாம். இந்தக் கதைகளில் சில பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசியில் இரத்தின நாயகர் சன்ஸ் (சென்னை) வெளியிட்டுள்ள கட்டு வாக்கிய கதைகள் என்னும் நூலில் உள்ளன.

இன்றைய தோல்பாவைக்கூத்து கொஞ்சம் கதையும் நிறைய தமாஷ் காட்சிகளும் கலந்த கலவையாக நடக்கிறது. உத்தேசமாக எழுபது-எண்பது ஆண்டுகளுக்கு முன் இப்படி இல்லை. இப்போது இது சிறுவர் கலை.

முப்பதுகளின் ஆரம்பத்தில் கூட கூத்தில் ராகவிஸ்தாரங்களுடன் கூடிய அருணாசலக் கவிராயரின் இராம நாடகக் கீர்த்தனைப் பாடல்கள் பாடப் பட்டிருக்கின்றன. அப்போது கதை நிகழ்ச்சிகளுக்கும் உரையாடலுக்கும் நிறையவே இடம் கொடுத்திருக்கிறார்கள். இதையெல்லாம் சுப்பையா ராவ் எண்பதுகளில் கூட என்னிடம் பல முறை சொல்லி இருக்கிறார்.

ஐம்பதுகளில் சுப்பையா ராவ் போன்றோர் இட்டுக்கட்டி நடத்திய சில தமாஷ் காட்சிகள் எந்த மாற்றமும் இல்லாமல் இன்றும் நடத்தப்படுகின்றன. போடுகா என்பவன், உளுவத் தலையனிடம் பத்து நயா பைசாவை (இன்று இந்த நாணயம் வழக்கில் இல்லை) கடன் கொடுத்துவிட்டு திருப்பிக் கேட்கும் ஒரு காட்சி இன்றைய வாசகருக்கு புரியாமலேயே இருக்கும். நயா பைசா என்பதை இன்றைய வழக்கு நாணயமாகக் கணக்கிட முடியாது, ஆனால் அந்த தமாஷ் காட்சி தொடர்கிறது. பத்து பைசா என்பதை மாற்றி பத்து ரூபாய் என்று சொல்லவும் என்று தோல்பாவைக்கூத்து கலைஞர்களிடம் நான் பலமுறை பேசியது வீணாகி விட்டது.

கூத்தில் முதலில் நகைச்சுவைப் பாத்திரங்கள் அறிமுகமாகும். அவர்களின் பாட்டு கூட்டத்தைக் கலகலப்பாக்கிவிடும். இந்தப் பாடல்கள் பெரும்பாலும் ஸ்பெஷல் நாடகக் கூத்துக்களில் இருந்து எடுக்கப்பட்டவை.

இந்தப் பாடல்களைப் பாடும் கோமாளி தன் கைகளையும் காலையும் அசைப்பான், இச்செய்கை சிறுவர்களைச் சிரிக்க வைத்துவிடும். இதிலிருந்து கூத்தின் இறுதிவரை தனித் தமாஷ் காட்சிகளும் கதையுடன் கூடிய தமாஷ் காட்சிகளும் இணைந்து நடக்கும். இதுவே இந்தக் கூத்தின் இன்றைய நடைமுறை.

தோல்பாவைக்கூத்தின் மொத்தக்காட்சிகளில் உத்தேசமாக 50 விழுக்காடு தமாஷ் காட்சிகளே என்பது இன்றைய நிலை. ஒன்றரை மணி நேரக் கூத்தில் 30 - 40 நிமிடங்கள் தமாஷ் பாத்திரங்களே வரும்படியான சூழ்நிலை இன்று ஆகிவிட்டது.

முந்திய காலங்களில் தனியாகத் தமாஷ் காட்சிகள் நடத்தப்பட்டாலும் நிகழ்ச்சிகளாக நடத்தப்பட்டாலும் அதில் கூட ஒரு நாட்டார் தன்மை இருந்தது. அதுவும்கூட அந்தக் காட்சிகள் வட்டார வழக்காற்றிலிருந்து எடுக்கப்பட்டவையாக இருக்கும்

முந்திய கால நிகழ்ச்சிகளைச் சிறுவர்கள் பார்க்க ஆரம்பித்த காலகட்டத்தில் ஏற்பட்ட மாற்றம் இன்று தொடர்கிறது. இப்படியாக சேர்க்கப்பட்ட காட்சிகள் குழுத்தலைவரின் மனோபாவத்திற்கு ஏற்ப வட்டார ரீதியாக வேறுபடும். ஆனால் இவற்றில் ஒரு பொதுத்தன்மை உண்டு.

தோல்பாவைக்கூத்துத் தமாஷ் காட்சிகளை இரண்டு வகையாகப் பிரித்துக் காட்டலாம். ஒன்று கதைத் தொடர்பு இல்லாமல் தனியாக நிகழ்ச்சி காட்டப்படுவது, இன்னொன்று கதாபாத்திரங்களின் உரையாடல் இடையே நிகழ்வில் காட்டப்படுவது. தோல்பாவைக்கூத்து ராமாயண கதையை நிகழ்த்திக் காட்டுவதற்கு உருவானது என்ற நம்பிக்கை கலைஞர்களிடம் ஆழமாக உள்ளது.

தோல்பாவைக்கூத்து இராமாயண நிகழ்வு 10 நாட்கள் நடக்கும். பட்டாபிஷேகம் நிகழ்விற்குப் பின் அரிச்சந்திரன் கதை, லவகுசா கதை, மயில்ராவணன் கதை மச்சவல்லவன் போர் என்பன நடக்கும். இவை ராமாயணம் தொடர்பான கதைகள்.

இவை அல்லாமல் நல்ல தங்காள் கதை உட்பட வேறு கதைகளும் நடக்கும், இவற்றில் சில சோகத்தின் உச்சத்தில் உள்ளவை. இதனால் இக்கதைகளின் நடுவே தனித்துவமாக காட்சிகளைக் காட்டுகிறார்கள்.

ஒலிப்பெருக்கியும் மின்விளக்கும் இல்லாத காலங்களில் நிகழ்ச்சி தொடர்ந்து நடப்பதில்லை. கலைஞர்களுக்கு ஓய்வு தேவைப்படுவதால் ஒருநாள் விட்டு ஒருநாள் நடத்தியிருக்கிறார்கள்.

இக்காலங்களில் நாட்டார் தன்மையுடன் கூடிய பாடல்களுக்கும் வட்டார ரீதியான தொன்மங்களுக்கும் பொதுமக்களின் நம்பிக்கை சார்ந்த செய்திகளுக்கும் இடம் அளிக்கப்பட்டது. அருணாசலக் கவிராயரின் ராம நாடகக் கீர்த்தனைகள் கூட பாடப்பட்டன. இதைக் கேட்பதற்கு மட்டுமே கூட்டம் கூடியிருக்கிறது.

கோவில் இருந்த சாலைகளில் திருவிழாக் காலங்களில் எல்லா ஜாதிக்காரர்களுக்கும் நுழைய மறுப்பு இருந்தபோது தோல்பாவைக்கூத்துக்காரர்கள் தெரு ஓரங்களில் நிகழ்ச்சி நடத்தியதைக் கோபால்ராவ் நினைவு கூர்ந்தார். கோவிலில் இருந்து சற்று தொலைவில் அப்போது கூத்து நிகழ்ந்திருக்கிறது

கடந்த 70 ஆண்டுகளாக நடக்கும் நகைச்சுவைக் காட்சிகளுக்கு என்று உருவாக்கப்பட்ட பாத்திரங்கள் இப்போதும் கூத்துக் கலைஞர்களிடம் உள்ளன உச்சிக்குடும்பன், உளுவத் தலையன், உச்சியின் மனைவி அமிர்தம், சோமாசி, மொட்டையன் போடுகா, டில்லி முத்தம்மா, நரிக்குறத்தி, நரிக்குறவன் என 16க்கு மேற்பட்ட நகைச்சுவைப் பாத்திரங்களை இன்றைய கலைஞர்கள் வைத்திருக்கின்றனர்.

தோல்பாவைக் கூத்தில் பெருமளவில் பங்கு பெறும் உச்சிக்குடும்பன், உளுவத்தலையன், கோமாளி மாமா போன்றோர் ஒருவகையில் தெருக்கூத்து நிகழ்வில் வரும் கட்டியங்காரன் போன்றவன் என்று கூறலாம். இவர்கள் கட்டியங்காரனை முழுதும் ஒத்துப்போனவர்கள் என்று சொல்லமுடியாவிட்டாலும் சில ஒற்றுமைகள் உள்ளன.

தெருக்கூத்து கட்டியங்காரன், விதூஷகன், காவல்காரன், சபை அலங்காரக்காரன்,கோமாளி எனும் பெயர்களால் அழைக்கப்படுகிறான். இவன் கதை காட்சிகளைப் புரிந்துகொள்ள பார்வையாளனுக்கு சில சமயம் உதவி செய்கின்றவன். அடுத்த நாள் கூத்து நிகழ்ச்சியைப் பார்வையாளருக்கு அறிமுகப்படுத்துபவன்.

கதாபாத்திரங்கள் உரையாடும்போது பார்வையாளர்களின் பிரதிநிதியாக வந்து சில சமயம் பேசுகிறவன்.

சம கால விஷயங்களையும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உள்ள பிரச்சார விஷயங்களையும் உரையாடுகின்றவன்.

இப்படியாகக் கட்டியங்காரனின் செயல்பாடுகள் உச்சிக்குடும்பனுக்கும் உளுவத் தலையனுக்கும் பொருத்தமாக இருக்கின்றன.

தோல்பாவைக்கூத்து நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து இறுதிவரை உச்சிக்குடும்பன் உளுவத் தலையன் ஆகிய பாத்திரங்களிலிருந்து பிரிக்க முடியாதபடிதான் இருக்கும். சில காட்சிகளில் இவர்கள் கதாபாத்திரங்களுடன் இணைந்தவர்களாகக் காட்டப்படுகிறார்கள்.

கூத்து நிகழ்வில் சில தடங்கல்கள் ஏற்படும்போதும் மழை போன்ற இயற்கை நிகழ்வு ஏற்படும்போதும் இந்த தமாஷ் பாத்திரங்கள் கை கொடுக்கிறார்கள்.

பார்வையாளர்களின் ஏழ்மையை இயலாமையை புரிய வைப்பதற்குக் கூட இந்த தமாஷ் பாத்திரங்களே வந்து செல்கின்றார்கள். இதுபோன்ற நிலைகளில் உச்சிக் குடும்பன் கட்டியங்காரனிலிருந்து வேறுபடுகின்றாள்.

இதற்கு ஒரு உதாரணத்தை சொல்லமுடியும் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வட்டத்தில் ஒரு கிராமத்தில் எண்பதுகளில் நான் பார்த்த நிகழ்ச்சி மறக்க முடியாதது.

குழுத்தலைவரான பரமசிவராவ் அந்த ஊரில் அவருக்குத் தெரிந்த ஒருவரிடம் கூத்து நடத்த அனுமதியும் உதவியும் கேட்டிருக்கிறார். அவர் அங்கே செல்வாக்கு உடையவரல்லர். வேறு சில ஆட்களிடமும் அனுமதி பெற்றிருக்கிறார்.

பரமசிவராவ் ஊர்த்தலைவரை நேரடியாகப் பார்க்க வேண்டும் என்பதை முக்கியமாக நினைக்கவில்லை. நிகழ்ச்சி ஆரம்பித்த பிறகு அவருக்கு ஊரில் முழுமையாக உதவி கிடைக்கவில்லை அப்போதுதான் தன் தவறு அவருக்குப் புரிந்தது.

பொதுவாக சில ஊர்களில் கலைஞர்களுக்குக் காய்கறி, அரிசி, மாமிசம் போன்றவை இலவசமாகக் கிடைப்பதுண்டு ஆனால் இந்த முறை அதில் சிறு தடங்கல் ஏற்பட்டது. இதற்கெல்லாம் காரணம் அந்த ஊர் தலைவரைப் பார்க்காததுதான் என்று பரமசிவராவ் புரிந்து கொண்டார்.

ஒருநாள் பரமசிவராவ் கூத்து நிகழ்ச்சியில் இந்த விஷயத்தை லாவகமாக வெளிப்படுத்தி விட்டார். ராமன் மாரீசமானைப் பிடிப்பதற்காக வில்லுடன் செல்லுகிறான். பிடிக்க முடியவில்லை. ஓடிக் களைத்து ஓரிடத்தில் அமருகின்றான்.

அப்போது மெல்ல யாரோ முனங்கும் குரல் கேட்கிறது. யாரது என்று கேட்கிறான் ராமன், அவன் காலின் கீழ் வில்லின் நுனியில் ஒரு தவளை. அது பேசுகிறது "ராமா உன் கோதண்டத்தை என் மீது வைத்து விட்டாயே" என்று புலம்புகிறது. "இராமன் சொல்லுகிறான்: தவளையே நீ ராமா என அழைக்கக் கூடாதா" என்கிறான்.

தவளை உடனே அடுத்தவர் துன்புறுத்தினால் ராமனின் பெயரைச் சொல்லலாம். ராமனே என்னைத் துன்புறுத்தினால் யாரிடம் நான் சொல்லுவேன் பேசுவேன் என்று சொன்னது.

இந்தச் சமயத்தில் உச்சிக் குடும்பன் வருவான். பார்வையாளர்களைப் பார்த்து "இந்த ஊரில் இராமனைப் போன்ற தலைவர் பெரியவர் வள்ளல் நல்ல மனம் படைத்தவர் செயல்பாடுகளிலும் உள்ளவர் எங்கள் மீது அருள் பார்வை வைத்தால் எங்களுக்கு என்ன துன்பம் வரும். இராமனைப் போன்றவர் அல்லவா அவர் என்று சொல்லிக் கொண்டே போவான். உடனே பார்வையாளர்கள் ஆரவாரம் செய்தார்கள்.

அன்று முதல் பரமசிவராவுக்கு கூத்து நடத்துவதில் உள்ள பிரச்சினை தீர்ந்து விட்டது. எல்லாம் இலவசமாகக் கிடைத்தன.

நான் பின்னர் பரமசிவராவிடம் "சமயோஜிதமாக பேசிவிட்டீரே" என்றேன். அவர் "இது என் கற்பனை அல்ல என் அப்பா இது போன்ற சூழ்நிலையில் பேசியது அதை நான் என் சொந்தச் சரக்கு மாதிரி காட்டிக் கொண்டேன்" என்றார்.

உச்சிக்குடும்பன் சிலசமயம் கட்டியங்காரனின் நிலையிலிருந்து முழுக்க வேறுபட்டும் இருப்பான். கதை நிகழ்ச்சியில் வரும் சில செய்திகளை சமகாலத்தோடு பொருத்தி இப்படி இருக்கலாமே என்று அறிவுரை கொடுப்பான். பெரும்பாலும் கணவன் மனைவி உறவு தொடர்பானதாக அது இருக்கும்.

உச்சியும் உளுவனும் ராமாயண கதாபாத்திரங்கள் எல்லாவற்றையும் கிண்டலடிப்பார்கள். ஆனால் ராமன் 'சீதை' லட்சுமணன் என மிகச் சிலர் மட்டும் விதிவிலக்காக இருப்பார்கள்.

கதாபாத்திரங்களின் கருத்தாழம் கொண்ட அல்லது முக்கிய நிகழ்ச்சியில் உரையாடலின்போது இடையில் புகுந்து தீவிரத் தன்மையை தொய்வுறச் செய்யும் ஒரு காரியத்தையும் உச்சியும் உடும்பனும் செய்வார்கள், சாலமன் பாப்பையா பட்டிமன்றத்தில் செய்வது மாதிரி என்று எடுத்துக் கொள்ளலாம்

சூர்ப்பனகை மூக்கு வெட்டப்பட்ட பின்பு இராவண தர்பாருக்கு வேகமாய் சென்று கொண்டிருப்பாள். அப்போது உச்சி அவளைப் பார்த்து வினை ஆரம்பிச்சாச்சு, இனி உங்க எல்லாரு தலை உருளப் போகிறது என்று வரப்போவதை சொல்லிவிட்டு ஓடி விடுவான்.

நல்லதங்காள் கதையில் அலங்காரி புழு நெளியும் அரிசிமாவை நல்லதங்காளிடம் கொடுத்து காய்ச்சிக்குடி என்று சொல்லும்போது உச்சி இடையில் புகுந்து "உனக்கு சுண்ணாம்பு காளவாய்தான் கடைசியில்" என்பான். கதையின் இறுதியில் இது தான் நடக்கப் போகிறது.

பொதுவாக நாட்டார் மரபிலும் வைதீக மரபிலும் நகைச்சுவையை இழையோட விடுவது என்பது வித்தியாசமாகப் படவில்லை. சிரிப்புக்கு ஹாசன் என்ற கடவுள் இருந்திருக்கிறார் வேதங்களில் வாஜசநேயி சம்ஹிதை, தைத்ரீய சம்ஹிதை இரண்டிலும் கோமாளி என்று ஒரு பாத்திரம் இருக்கிறது. வண்டி இழுக்கும். குதிரை லேசான பாரத்தை விரும்பும். அது போல நல்ல சிரிப்பை உண்டாக்கும் கோமாளியின் லேசான சொற்களை விரும்புவர் என்பது பழைய செய்தி.

சுப்பையா ராவ் ஒரு முறை உச்சிக்குடும்பனின் தோற்றம் பற்றி பேசினார். அது மிக பழகிய கதாபாத்திரம் என்பது அவருடைய கருத்து சிவகணங்களில் ஒருவனான குண்டோதரன் விசுவாமித்திரரிடம் ஏதோ கிண்டல் பேச்சு பேச அவர், தமாஷ் பாத்திரமாக மாறும்படி சாபமிட்ட' ஒரு கதையைச் சொன்னார் பரமசிவராவ்.

இந்த தமாஷ் பாத்திரங்கள் இராமனிடம் வரம் பெற்றவர்கள். போரிலே உதவியவர்கள் ராமனின் படைவீரர்கள் களைப்பு இல்லாதவாறு போர் செய்வதற்கு சுவையான செய்திகளை சொல்லிக் கொண்டே இருந்தவர்கள். இதையெல்லாம் கவனித்த ராமன் இனிமேல் உங்களுக்கு ராமாயணக் கதையில் நிரந்தரமான இடம் உண்டு என்று வரம் கொடுத்தாராம்.

தோல்பாவைக்கூத்துக் கலைஞர்களுக்கு ஊர் மக்களிடமும் பார்வையாளர்களிடமும் ஏதோ காரணத்தால் வரும் சிறுசிறு பூசல்களை தங்கள் உரையாடல் மூலம் வெளிப்படுத்துவார்கள், இந்த செய்தியை நாட்டார் கலைஞர்களிடம் நான் கேட்டிருக்கிறேன், கூத்து நிகழும்போது கூத்தரங்கில் திரையை உயர்த்திவிட்டு திருட்டுத்தனமாக கூத்துப் பார்க்க வரும் சிறுவர்களை உச்சி விமர்சனம் செய்வான்.

தமாஷ் காட்சிகளையே காட்டி பழக்கப்பட்ட இந்த கலைஞர்கள் தீவிரமான செய்திகளைச் சொல்வதற்கு முடியாமல் ஆகி விட்டனர். மிக அண்மைக் காலத்தில் பெண்கள் விடுதலை, குழந்தைகள் கல்வி, பொதுவான சமூக விழிப்புணர்வு, பிரச்சாரம் செய்யுமாறு இவர்கள் அரசு பணம் கொடுத்து வேண்டிக் கொண்டனர். பிரச்சார நிகழ்ச்சிகளில் பெரும்பாலான நகைச்சுவைக் காட்சிகள்தாம் என்பது குறிப்பிடத் தகுந்தது.

ஒருமுறை விவேகானந்தரின் வரலாற்றைத் தோல்பாவைக்கூத்தில் காட்ட வேண்டும் என்று என்னிடம் ஒரு அமைப்பு கேட்டுக் கொண்டபோது நான் ஒரு கலைஞருக்கு வேறு ஒருவர் மூலம் பயிற்சி அளித்தேன்.

பொதுமக்களிடம் அந்த நிகழ்ச்சியை. நடத்துவதற்கு முன்பு ஒருமுறை நானும் நண்பர்களும் பார்த்தோம். ஒரு காட்சியில் உளுவத்தலையன் ராமகிருஷ்ண பரமஹம்சரைக் கிண்டல் செய்து பேசுகின்ற உரையாடலை கேட்டேன். அவர் சுவாமி விவேகானந்தரிடம் ஒரு பாட்டு பாடச் சொல்லுகிறார். விவேகானந்தர் பாட ஆரம்பித்ததும் உளுவத் தலையன் இடையில் புகுந்து "காளி பாட்டு பாடும் ஓய்" என்றான். அதோடு நின்றால் பரவாயில்லை கரகாட்ட படத்தில் வரும் மாரியம்மா என்ற பாடலை சத்தமாகப் பாடினான்.

இந்த நிகழ்ச்சியை என்னுடன் பார்த்துக் கொண்டிருந்த நிகழ்ச்சிக்கு நிதி சிபாரிசு செய்த நண்பர் "இனிமேல் இந்த நிகழ்ச்சி வேண்டாம். இதுவரை நிகழ்ச்சி தயாரிக்க கலைஞர் செலவழித்த பணத்திற்கு நான் பொறுப்பு தந்து விடுகிறோம். இதோடு இந்த திட்டத்தை முடித்துக் கொள்வோம்" என்று சொல்லி விட்டார்.

இது போன்று பல அனுபவங்கள் எனக்கு உண்டு. இதற்கு முக்கியமான காரணம், கலைஞர்களால் கருத்தாழம் மிக்க செய்திகளை நகைச்சுவை கலக்காமல் சொல்ல முடியாது என்ற நிலை இன்று ஆகிவிட்டது என்று தோன்றுகிறது.

- அ.கா.பெருமாள், ஓய்வுபெற்ற பேராசிரியர், நாட்டார் வழக்காற்றியல் மற்றும் சமூகப் பண்பாட்டு ஆய்வாளர்.

Pin It