3. தூரிகைத் தடங்கள்

19ம் நூற்றாண்டு பிரெஞ்சு கலை உலகின் தவிர்க்க முடியாத சக்திகளில் ஒருவராக விளங்கியவர் கஸ்தவ் கோர்பெட். இவர் பிறந்தது (ஜூன் 10, 1819) சுவிஸ் எல்லையோரமுள்ள ஆர்னன்ஸ் என்ற சிறு நகரத்தில். இப்பகுதி ஜூரா மலைத் தொடரின் இயற்கை அழகு கொஞ்சும் பகுதிகளில் ஒன்றாகும். கோர்பெட்டின் அப்பா வசதியான விவசாயி. ஆர்னன்ஸ் நகரின் குறிப்பிடத்தகுந்த பெரிய மனிதர்களில் கோர்பெட்டின் அப்பாவும் ஒருவர். தலைமுறையாக தலைமுறையாக அதே ஊரில் வாழ்வதாலும், பண்னை நிலம், வசதியான வீடு மற்றும் கணிசமான சொத்துக்கள் காரணமாகவும் கோர்பெட்டின் குடும்பத்துக்கு அவ்வூரில் தனிப்பட்ட மரியாதையும், மதிப்பும் இருந்தது. 


Gustav Courbet1. கஸ்தவ் கோர்பெட்டின் சுய உருவ ஓவியம்

கஸ்தவ் கோர்பெட் ஓவியங்கள் 19ம் நூற்றாண்டின் மிக சக்தி வாய்ந்த படிமங்களால் ஆனவை. வசதிமிக்க விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்த இவர் தன் 20ம் வயதில் பாரீஸுக்கு வந்ததுடன் இலக்கியத்திலும், ஓவியத்திலும் முன் நிறுத்துவதே ரியலிஸ்டுகளின் வெளிப்பாடு. ரியலிசப் பள்ளிக் கலைஞர்களின் தலைவராகவே இவர் அறியப்பட்டார். கோர்பெட் தன்னுடைய கிராமச் சூழ்நிலை மற்றும் விவசாயிகளின் உருவங்களாலும் பாரிஸ் நகரத்தை உலுக்கியவர். பிரமிக்கத் தக்க உயரத்தில் நிறுத்தப்பட்ட மனித இயலால் நிரம்பப் பெற்றவை அவருடைய ஓவியங்கள். புகழோடு, பிரச்சனைக்குரிய மனிதராகவும் அரசாங்கத்தால் கொள்ளப்பட்டதுடன், 1871ல் புரட்சிகர கம்யூன் இயக்கங்களுடன் கொண்ட தொடர்பால் நாடுகடத்தப்பட்டு சுவிட்சர்லாந்தில் தனது 58 வது வயதில் மறைந்தார்.

கோர்பெட் சட்டம் படித்து, சிறந்த வழக்கறிஞராக உருவாக வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் ஆசைப்பட்டனர். ஆனால் கோர்பெட்டுக்கு தூரிகையின் மீதே நாட்டம் இருந்தது. 14வது வயதில் முறைப்படி ஓவியம் பயிலத் தொடங்கினார். நியோ கிளாசிக்கல் ஓவியரான பாரன் கிராஸின் மாணவர் பெரே பாட் என்பவரிடம் ஓவியக் கலையின் பால பாடத்தைப் படித்தார். தனது 18 வயதில் ஆர்னன்ஸ் நகருக்கு அருகிலுள்ள பெசன்கான் நகருக்குச் சென்ற கோர்பெட் அங்குள்ள கலைக் கல்லூரியில் ஓவியப் படிப்பைத் தொடர்ந்தார். இரண்டு வருடங்களுக்குப் பின் அங்கிருந்து பாரிசுக்குச் சென்றார். 

எப்போதும் கலைகளின் தாயகமாக விளங்கும் பாரீஸ், 19ம் நூற்றாண்டில் அரசியல் முக்கியத்துவம் வாயந்த நகரமாகவும் விளங்கியது. கலைஞர்களுடன் புரட்சியாளர்களும், சிந்தனையாளர்களும் பாரீசை ஆக்ரமித்திருந்த காலம் அது. கோர்பெட் பாரீசில் அடியெடுத்த வைத்த நேரத்தில்தான் ஒரு அரசியல் புரட்சியை நோக்கி பிரான்ஸ் நகர்ந்து கொண்டிருந்தது. 

அப்போது கோர்பெட்டுக்கு 20 வயது. கோர்பெட் அசாத்தியமான உயரமும், இயல்பிலேயே அழகும் மிக்கவர். இதோடு எப்போதும் குறையாத தன்னம்பிக்கையும் சேர்ந்திருந்ததால் கம்பீரமான தோற்றத்தை உடையவராக விளங்கினார். 

Courbet
2. ஜீலியட் கோர்பெட்:

ஓவியர் கோர்பெட்டின் சகோதரிகளில் ஒருவரான இவர் கோர்பெட்டிற்கு 12 வயது இளையவர். தன் சகோதரருக்காக வாழ்ந்ததுடன் கோர்பெட்டின் வாரிசாகவும் இவர் அறியப்பட்டார். 13 வயது சிறுமியைக் காண்பிக்கும் இவ் ஓவியம் நன்கு வளமான மத்தியதரக் குடும்பப் பின்னனியிலிருந்து வளர்ந்து வந்தவரைக் காட்டுகிறது.

பாரிசில் அவரது ஆரம்ப காலகட்டம் அவ்வளவு திருப்திகரமாக இல்லை. அவரது ஓவியங்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு ஏதும் கிடைக்கவில்லை. 1841லிருந்து 1847 வரை அவர் வரைந்த 25 ஓவியங்களில் 3 ஓவியங்கள் மட்டுமே ஓவிய அரங்குகளில் தேர்வானது. இருப்பினும் அவற்றில் ஒன்று கூட விற்பனை ஆகவில்லை. சுமார் 10 வருடங்கள் அப்பா அனுப்பி வைத்த காசைக் கொண்டே கோர்பெட் பாரிசில் தனது காலத்தை ஓட்டினார். இந்தக் காலகட்டத்தில்தான் வெர்ஜினி பினட் என்ற பெண்மணியைச் சந்தித்து, தனது மனைவியாக்கிக் கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது (1847).

கோர்பெட்டின் ஓவிய வாழ்க்கையின் மீது மெல்ல மெல்ல வெளிச்சம் பரவத் தொடங்கியது. அவரது ஓவியத்தை கண்காட்சியில் பார்த்த டச்சு நாட்டவர் ஒருவர் ஹாலந்துக்கு அழைத்துப் போனார். அங்கு சில போர்ட்ரெய்ட் ஓவியங்களை வரைந்து கோர்பெட் கணிசமாக சம்பாதித்தார். பாரிசில் புதிதாக ஏற்பட்ட நண்பர்கள் மூலம் மேலும் சில வாய்ப்புகள் கிடைத்தது. 1848 ஜனவரியில் தனது பெற்றோருக்கு அவர் எழுதிய கடிதத்தில், வெற்றிக்கு அருகாமையில் தான் சென்று கொண்டிருப்பதாகவும், சமூகத்தின் செல்வாக்கு மிக்கவர்களாக விளங்கியவர்களை தனது ஓவிங்கள் ஈர்ப்பதாகவும் குறிப்பிட்டார். அதற்கடுத்த சில நாட்களில் பாரிசில் புதிதாக தொடங்கப்பட்ட ஓவியப் பள்ளி ஒன்றுக்கு கோர்பெட் பொறுப்பாளராக நியமனம் ஆனார். 

கோர்பெட்டின் ஓவியக்கூடம் இருந்த சாலையில் சற்று தள்ளிதான், நவீன ஓவியர்களின் வேடந்தாங்கலாக இருந்த ‘பிரேசரி ஆண்ட்லர்’ என்ற கட்டடம் இருந்தது. ரியலிசத்தின் கோயில் என்று அழைக்கப்பட்ட இந்த கட்டடத்தில்தான் ‘ரியலிசம்’ என்ற வார்த்தை முதன்முறையாக பயன்படுத்தப்பட்டது. ரியலிசத்தின் மீது ஈடுபாடு கொண்ட எழுத்தாளர்கள், ஓவியர்கள், சிற்பிகள் தினமும் இங்கு கூடினர். ரியலிசம் என்பதை கலை, இலக்கியத்துக்கு மட்டுமல்லாமல், சமுகப் பிரச்சினைகளுக்கும் தீர்வாக அவர்கள் முன்மொழிந்தனர். 


Courbet3. கோர்பெட்டின் நாயுடன் உள்ள அவருடைய சுய உருவப்படம் அவருடைய ஆர்னன்ஸ் கிராமச் சூழலில் இருப்பது போல் வரையப்பட்டாலும் பாரிஸில் இருக்கும்போது தீட்டப்பட்டது. பெருமைமிக்க மேட்டிமையின் பின்புலம் இதில் வெளிப்படுகிறது. கோர்பெட் பாரீஸில் லூவர் அருங்காட்சியகத்திற்கு தொடர்ந்து சென்று பெரிய ஓவியரான ரெம்பரண்ட் மற்றும் ஸ்பானிய ஓவியங்களின் படைப்புகளை பிரதி எடுப்பதும் பயிற்சி பெறுவதுமாக இருந்தார். ஆனால் பின்பகுதியில் மாறான கருத்தைக்க் கொண்டவராக பலவற்றை மறுதலித்ததுடன் தன்னைப் பெருமையாக சுயம்புவாகவே கருதிக் கொண்டார்.

சமகால உலகம்தான் ஓவியத்தில் பிரதிபலிக்க வேண்டும் என்பதில் தீவிர நம்பிக்கை கொண்டிருந்த கோர்பெட், தனது ஓய்வு நேரங்களை ‘பிரேசரி ஆண்ட்லர்’ கட்டடத்தில் செலவழித்தார். சராசரிக்கும் அதிகமான அவரது உயரம், ஜூரா பகுதி பிரெஞ்ச் உச்சரிப்பு, வாயில் மெலிதாகப் புகையும் பைப், சரளமான பேச்சு என வெகு சீக்கிரம் அந்தக் கூட்டத்தின் அறிவிக்கப்படாத தலைவராக கோர்பெட் மாறினார். அவர் பேசுவதைக் கேட்பதற்காகவே எப்போதும் ஒரு கூட்டம் அவரைச் சுற்றி இருந்தது. 

பிப்ரவரி 1848ல் பெரும் அரசியல் கொந்தளிப்பு ஏற்பட்டது. புதிதாகப் ஆட்சிப் பொறுப்பேற்ற குடியரசுக் கட்சிக்கு ஆதரவாக கோர்பெட் செயல்பட்டார். குடியரசு கட்சி மூன்று ஆண்டுகள் மட்டுமே பதவி வகித்தாலும், அக்காலத்தில் நிலவிய சுதந்திரமான நிலையில் கோர்பெட் போன்ற நவீன கலைஞர்களுக்கு பெரும் மதிப்பும், மரியாதையும் கிடைத்தது. ஆரம்ப காலகட்டங்களில் எந்த ஓவிய அரங்குகளில் கோர்பெட்டின் ஓவியங்கள் நிராகரிக்கப்பட்டனவோ, அங்கெல்லாம் இப்போது ரத்தினக் கம்பளம் விரிக்கப்பட்டது. விமர்சகர்கள் கொண்டாடும் ஓவியராக அவர் மாறினார். 


Courbet4. சிறையில் இருக்கும் ஓவியரின் சுய உருவப்படம்:

கம்யூனின் மெம்பராக இருந்ததோடு, நெப்போலியனின் வெற்றிக்கு நினைவாய் வைக்கப்பட்டிருந்த தூணைச் சாய்த்தபோது ரிபப்ளிக்கன் ஆர்ட் கமிசனில் அவர் இருந்தார். பாரீஸ் கம்யூனிஸ்ட்கள் தோல்வியுற்றபோது கோர்பெட் கைது செய்யப்பட்டு 6 மாத கடுங்காவலும் 500 பிராங்ஸ் அபராதமும் விதிக்கப்பட்டார்.

அடுத்த வருடமே கோர்பெட் வரைந்த ஓவியம் ஒன்று தங்கப் பதக்கம் வென்றது. அந்த ஓவியத்தை அரசாங்கமே வாங்கிக் கொண்டது. இது தங்களுக்குக் கிடைத்த அங்கீகாரமாகவே ரியலிஸ்ட் ஓவியர்கள் கருதினர். 

தான் பிறந்து வளர்ந்த ஜூரா மலைத் தொடரையும், அங்கு வாழும் மக்களையும் அதுவரை தனது ஓவியங்களில் பிரதிபலித்து வந்த கோர்பெட் மெல்ல மெல்ல அதிலிருந்து விடுபடத் தொடங்கினார். குடியரசுக் கட்சி வீழ்ந்தபோது, அவரது ஓவியங்களில் ஒரு வித ஆவேசம் வெளிப்பட்டது. புதிய ஆட்சியாளர்களை அச்சுறுத்தும் விதமாகவே அந்த ஓவியங்கள் இருந்தன. கோர்பெட் தனது அரசியல் கோபங்களை ஓவியங்களாக வரைவதாக நண்பர்கள் அவரிடம் தெரிவித்தனர். அவரும் அதை மறுக்கவில்லை. தனது ஓவியங்களினால் ஆட்சியாளர்கள் சங்கடப்படுவது குறித்து மகிழ்வதாகவேத் தெரிவித்தார். 

கோர்பெட்டை தங்கள் ஆதரவாளராக மாற்ற ஆட்சியாளர்கள் பல முயற்சிகளை மேற்கொண்டனர். ஒவ்வொன்றையும் மிக கவனமாக அவர் நிராகரித்தார். உலக ஓவியக் கண்காட்சியில் பிரான்ஸ் சார்பில் இடம்பெறும்படியாக முக்கியமான ஓவியம் ஒன்றை வரைந்து தரும்படி கோர்பெட்டுக்கு அரசாங்கம் கோரிக்கை விடுத்தது. முடியாது என்று அவர் மறுத்து விட்டார். 

அதே நேரத்தில் தனிப்பட்ட முறையில் தன்னுடைய மூன்று ஓவியங்களை அந்தக் கண்காட்சியில் வைக்க கோர்பெட் முயற்சித்தார். அதற்கு அரசாங்கம் அனுமதி மறுத்துவிட்டது. உலக ஓவியக் கண்காட்சியில் கலந்து கொள்ள முடியாமல் போனது கோர்பெட்டுக்கு ஏமாற்றம் அளித்தாலும் பெரிய அளவில் வருத்தம் எதையும் ஏற்படுத்தவில்லை. தன்னை நிராகரித்ததற்குப் பதில் தரும் முகமாக தனது ஓவியங்களை மட்டுமே கொண்ட ஒரு கண்காட்சிக்கு கோர்பெட் ஏற்பாடு செய்தார். ரியலிசம் பாணி ஓவியங்கள் என்று இதற்கு விளம்பரம் செய்தார். 


Courbet5. குளிக்கும் பெண்கள்(1853)

கிளாசிக் உடல் மொழியைக் கொண்ட ஆனால் நிதர்சனமான தற்காலத் தன்மைகொண்ட தடித்த பெண் குளிப்பதும் அவளுக்கு உதவும் தாதியும் இருக்கும் இவ் ஓவியம் பாரிஸ் நகரை அதிர்ச்சிக் குள்ளாக்கியது. ஒரு பசி மிக்க முதலையின் வயிறை நிரப்பப் போதுமான சதை இதில் இருப்பதாகவும் ஒரு பத்திரிகையாளர் கிண்டல் செய்தார். கிரேக்க கடவுள்களையும் கிளாசிக்கல் தன்மையுடன் படைக்கப்பட்டு வந்த ஓவியங்களுக்குக் நடுவில், இத்தகைய ஓவியங்கள் மூலம் நிதர்சனத்தையும் சமகாலத்தையும் நவீனத்துடன் பார்க்க கோர்பெட் நம்மைத் திருப்பினார்.

அரசாங்கத்திற்கு தனது எதிர்ப்பைத் தெரிவிக்கும்விதமாக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை கோர்பெட்டின் வாழ்க்கையில் விரும்பத்தகாத திருப்புமுனையை ஏற்படுத்தியது. நண்பர்கள் அவரை விட்டுப் பிரிந்தனர். சிலரை அரசாங்கம் கைது செய்தது. மகனையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு கோர்பெட்டின் மனைவி அவரை விட்டுப் பிரிந்தார். தன்னம்பிக்கை மிக்கவரான கோர்பெட் இவற்றையெல்லாம் சாதாரணமாக எடுத்துக்கொண்டார். இது தொடர்பாக நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில், இதைப்பற்றியெல்லாம் சிந்திப்பதற்கு நேரமில்லாமல் ஓவிய வேலைகள் தன்னை முழுமையாக ஆக்ரமித்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். 

அதே நேரத்தில் பிரான்சைத் தாண்டி ஐரோப்பிய நாடுகளில் கோர்பெட்டுக்குக் கிடைத்த வரவேற்பு அவருக்கு உற்சாகமளிப்பதாகவே இருந்தது. இதனால் அந்த நாடுகளுக்கு அடிக்கடி சுற்றுப் பிரயாணம் மேற்கொள்ளத் தொடங்கினார். பிராங்க்பெர்ட் நகரில் அவர் ஒரு ஹீரோவாகவே கொண்டாடப்பட்டார். ஜெர்மனி, ஹாலந்து, பெல்ஜியம், இங்கிலாந்து நாடுகளில் தொடர்ச்சியாக ஓவியக் கண்காட்சிகள் நடத்தினார். பெல்ஜியம் மன்னரின் தங்கப் பதக்கத்தையும், பவேரியா மன்னரின் உயரிய விருதையும் 1869ல் கோர்பெட் பெற்றார். 

விருதுகள், அங்கீகாரம் காரணமாக 1850 மற்றும் 1860களில் அடிக்கடி கோர்பெட் வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டதாக விமர்சகர்கள் கூறினாலும், தனக்குப் பிடிக்காத அரசாங்கத்திடமிருந்து விலகி இருக்கும் முயற்சியாகவே இந்த பயணங்களை மேற்கொண்டார் என்று நண்பர்கள் தெரிவிக்கின்றனர். 1870ல் பிரான்ஸ் அரசு கோர்பெட்டுக்கு உயர்ந்த விருது ஒன்றை அளித்து கெளரவிக்க முன்வந்தது. ஆனால், கலை இலக்கியத்தில் அரசாங்கத்தின் தலையீட்டை எதிர்க்கும் விதமாக அதை ஏற்க அவர் மறுத்து விட்டார். 

Courbet
6. ஓவியரின் ஓவியக் கூடம்(1855)
கோர்பெட்டின் புகழ்மிக்க ஓவியம். 1848லிருந்து1855 வரையிலான ஓவியரின் வாழ்வின் சாரங்களும் உள்ளடக்கியதாக வரையப்பட்ட இவ் ஓவியம் ரியலிசம் என்பதை விட குறியீட்டுத் தன்மை அதிகம் கொண்டதாக உள்ளது. இறந்தவர்கள், வாழ்பவர்கள் என்றும் அவர் வாழ்வில் முக்கியமானவர்களாகவும் இருக்கும் இவ் ஓவியத்தை உலகக் கண்காட்சியில் வைக்க தேர்வுக் கமிட்டி தேர்வு செய்யாமல் நிராகரித்தது. ஆனால் தன்னுடைய எதிர்ப்பைத் தெரிவிக்க கோர்பெட் அதே காலகட்டத்தில் அமைத்த தனிக் கண்காட்சியில் நடுநாயகமாக இவ் ஓவியத்தை காட்சிப்படுத்தினார்.

கோர்பெட்டின் இந்த துணிச்சலான காரியம், அரசாங்கம் வீழ்ந்து புதிய அரசு அமைந்தபோது ஆட்சியாளர்களால் நினைவுகூரப்பட்டது. குடியரசு கலை இலக்கிய ஆணையத்தின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டார். அதற்கு அடுத்த வருடம் நாடாளுமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலை கோர்பெட் நூலிழையில் தவறவிட்டார். இருப்பினும் கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக பதவி வகித்தார். நெப்போலியனின் வெற்றியை நினைவு கூறும் விதமாக எழுப்பப்பட்ட நினைவுச் சின்னங்களை ஆட்சி மன்றக் குழு இடித்தபோது கோர்பெட்டும் அதில் உறுப்பினராக இருந்தார். 

எதிர்பாராதவிதமாக மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது, புதிய ஆட்சியாளர்களால் கோர்பெட் கைது செய்யப்பட்டார். ஆறு மாத சிறைத் தண்டனையும், 500 பிராங்க் அபராதமும் அவருக்கு விதிக்கப்பட்டது. செப்டம்பர் 1871ல் கோர்பெட் சிறைத் தண்டனையை அனுபவிக்கத் தொடங்கினார். ஆனால் உடல்நலக் குறைவு காரணமாக சிறைத் தண்டனை குறைக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். துன்பம் அவரைத் தொடர்ந்து வந்தது. 

1872ல் அவரது மகன் இறந்தார். அதனைத் தொடர்ந்த மாதங்களில் கல்லீரல் பிரச்சினையால் கோர்பெட் பெரிதும் அவதிப்பட்டார். அதிலிருந்து அவர் மீள்வதற்குள் மற்றொரு இடி விழுந்தது. நெப்போலியன் நினைவுச் சின்னத்தை மீண்டும் கட்டுவதற்கு கோர்பெட் 300,000 பிராங்க் செலுத்த வேண்டும் என்று அரசாங்கம் உத்தரவு பிறப்பித்தது. அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை என்று அவர் கூறினார். இதனையடுத்து நாட்டை விட்டு வெளியேறுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டது. 

Courbet
7. தானியம் சலிக்கும் பெண்கள்(1855)

காஸ்தவ் கோர்பெட்டுக்கு கிராமியச் சூழலில் உள்ள மனிதர்களின் தினப்படிச் செயலும் அவர்களின் வாழ்வும்தான் தூண்டுகோலாக இருந்தது ஓவியம் தீட்ட. அவர் பிறந்த ஆர்னன்ஸ் பெண்கள் செய்யும் வேலையைக் கண்பிக்கும் இவ் ஓவியத்தில் அவருடைய இரு சகோதரிகளே இருக்கிறார்கள். ஓவியத்தில் சுற்றி உள்ள பொருட்களையும் காண்பிக்க அவர் எடுத்துள்ள கவனம் மற்றும் நடுவில் உள்ள பெண்ணின் உடல் மொழி ஜப்பானியப் பதிப்பு ஓவியங்களின் பாதிப்பு என்றும் அறியலாம்.

ஜூரா மலைத் தொடரை ஒட்டியுள்ள, பிரெஞ்ச் பேசும் மக்கள் அதிகமுள்ள சுவிஸ் பகுதியில் கோர்பெட் குடியேறினார். சுவிஸ் நாட்டில் இருந்தாலும் பிரான்ஸ் அரசாங்கத்திற்கு எதிரான புரட்சியாளர்களுடன் தொடர்பைத் தொடர்ந்து வந்தார். அளவுக்கு அதிகமாக குடித்தார். அவ்வவ்போது வரைந்தார். மீண்டும் பிரான்சுக்குத் திரும்பி விடுவோம் என்ற நம்பிக்கையை மட்டும் அவர் இழக்கவில்லை. ஆனால் அதற்கான நேரம் மட்டும் அவருக்கு வாய்க்கவேயில்லை. தொடர்ந்து ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக 1877ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி அவர் மரணமடைந்தார். அவரது உடல் பிரான்சுக்கு கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் சுவிஸ் நாட்டிலேயே அடக்கம் செய்யப்பட்டது. 1919ம் ஆண்டுதான் அவரது உடல் தோண்டியெடுக்கப்பட்டு, அவர் மிகவும் நேசித்த ஜூரா மலைத்தொடரின் ஆர்னன்ஸ் நகரில் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது. 


8. தூங்கும் பெண்கள்(1866):
Courbet
லெசிபியன் காதலர்களை காகில்பே என்ற பணக்கார துருக்கியருக்காக கோர்பெட் வரைந்தார். ஓவியர் விஸ்வரின் ஆசைநாயகி இவ் ஓவியத்தில் உள்ள பெண் உருவத்திற்காக மாடலாக இருந்திருக்கிறார். முத்து மாலை அறுந்தும் முத்துக்கள் சிதறியும் கிடக்கும் மெத்தை இவ் ஓவியத்தில் ஓர் அருமையான குறியீடு.
Courbet

9. முதலாளித்துவத்தை எதிர்த்த முதல் புரட்சி பாரிஸ் கம்யூன்புரட்சி.

1871ம் ஆண்டு மார்ச் 18ம் தேதியிலிருந்து மே 28ம் தேதி வரை நடந்த பாரீஸ் கம்யூனின் புரட்சியைக் குறிக்கும் ஓவியமும், பாரீஸ் நகரம் முழுவதும் உள்ள நெருப்புச் சூழலையும் காட்டும் இருவேறு ஓவியங்கள். 20,000 கம்யூன்கள் கொல்லப்பட்டதுடன் பலர் தண்டனைக்குட்படுத்தப்பட்டனர்.
Pin It