தமிழ்நாட்டிலுள்ள பல மாவட்டங்களுள் தஞ்சாவூரும் ஒன்றாகும். பிற மாவட்டங்கள் பலவற்றுக்கும் இல்லாத வரலாற்றுப் பெருமை, நீர்வளம், நிலவளம் நிறைந்தும், சமயம் சார்ந்த வாழ்க்கை முறை ஆகிய சிறப்புகள் இம்மாட்டத்துக்கு உண்டு. வேளாண்மை என்பது மண்ணின் குணங்களை விருத்தி செய்யும் வழிகள், நிலத்தைப் பண்படுத்துவதற்குப் பயன்படும் கருவிகள், எருவின் பயன்பாடு, அதனால் பயன்பெறும் பயிர் வகைகள், நோய், நொடி, புழு, பூச்சிகள் அவை நீக்குவதற்குத்தக்க சிகிச்சைகள், மனிதன் நல்வாழ்விற்கு இன்றியமையாத செய்திகள். மேற்படிக் கருத்துக்களை ஆசிரியர் சுபாஷ் சந்திரபோஸ் தன் மனதிலிருந்து தஞ்சாவூர் மாவட்ட வட்டாரங்களில் நடைபெற்று வந்த சாகுபடி முறைகள் பற்றிய தம் நாவல்களில் பதிவு செய்துள்ள பாங்கினை இவ்வாய்வுக் கட்டுரை எடுத்துரைக்கின்றது.

tamilnadu farmingவேளாண் இனம்

சாகுபடி செய்து வாழும் உழவர்கள் அக்காலத்தில் வேளாண் மாந்தர் என அழைக்கப்பட்டார்கள். அவர்கள் அடிப்படைத் தொழிலான பயிர்த் தொழிலைப் பாதுகாத்து நல்ல விளைச்சலைப் பெருக்குவதிலும், தங்களுடைய முழுக்கவனமும் பயிர்த்தொழில் செய்வதிலேயே இருத்தல் வேண்டும் என எதிர்பார்த்தனர். இக்கருத்தினைத் தொல்காப்பியம்,

வேளாண் மாந்தர்க் குழுதூண் அல்லது

இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி               (தொல்.பொருள்.மரபு.81)

எனக் குறிப்பிடுகிறது.

மரபு சார்ந்த சாகுபடி முறைகள்

இந்தியாவில் பல இடங்களிலும் தலைமுறை தலைமுறையாகச் செய்து பார்த்து இம்முறையானது ஏற்றதென்று விவசாயிகளால் நிர்ணயிக்கப்பட்ட சாகுபடி முறைகளே பழக்கத்தில் இருந்து வருகின்றன.

இயற்கையாக விளைந்த பழங்கள், காய்கள், கிழங்குகள் முதலியவற்றை அதே முறையில் பயிரிட்ட வேளாண்மையே, இயற்கை வேளாண்மை அல்லது மரபு சார்ந்த வேளாண்மையாகும்.1

சாகுபடி செய்வதின் நோக்கங்கள்

நிலத்தின் தன்மையைப் போற்றி விதைத்த தானியங்கள் முளைப்பதற்கு வசதியளிப்பது, பயிர்கள் சரியாக வளருவதற்கு ஏற்றவாறு நிலத்தைத் தயாரிப்பது, களையை நிலத்திலிருந்து எடுப்பது, எரு, உரம் முதலியவற்றை நிலத்தில் வைப்பது.2

புதினங்கள் அவ்வக்கால உணர்ச்சிகள், வாழ்க்கை முறை, வர்க்கப் போராட்டங்கள், வாழ்க்கையோடு தொடர்புடைய தொழில்கள் ஆகியவற்றை ஆசிரியர் தம் படைப்புத் திறத்தால் வெளிப்படுத்தியுள்ளார்.

தஞ்சாவூர் பகுதி நிலவளம்

ஒரு பகுதி நீர்வளம் பெற்றிருப்பதால் மட்டும் போதாது நில வளமும் பெற்றிருக்க வேண்டும். நிலத்தின் தன்மைகளை,

கலப்பையைப் பிடித்து உழும்போது உழவு சுலபமாயிருக்கிறதா? அல்லது கடினமா­யிருக்கிறதா? என்பதைப் பார்த்து நிலங்களை மணற்சாரியென்றும், களிப்பாங்கானதென்றும் பிரிக்கின்றார்கள். உழுகின்ற நிலத்தில் கல் துண்டுகள் அதிகமாக இருக்குமானால் அதைக் கல்காடு என்றும், சரல் பாங்காக இருக்குமானால் சரல் நிலம் என்றும், மண்ணின் நிறம் செந்நிறமாக இருந்தால் செவல் என்றும், கருப்பாயிருந்தால் கரிசல் என்றும், உப்பு பொங்கி நிற்கும் நிலங்களை உவர் என்றும் களர் என்றும், சுண்ணாம்புப் பாறைகள் மிகுதியாக இருக்கப்பட்ட நிலங்களைச் சுண்ணாம்பு நிலம் என்றும் வழக்கத்தில் சொல்லுகிறார்கள்3

என்று ஆனந்த பத்மநாபப்பிள்ளை குறிப்பிடுகின்றார். இவர் குறிப்பிடும் நிலவகையில் தஞ்சாவூர் மாவட்டம் களிமண் பாங்கான வண்டல், செம்மண் மணல் பாங்கான நிலங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன.

தஞ்சாவூர் மாவட்டம் முதலில் கிழக்குத் தஞ்சாவூர் அபிவிருத்தி மாவட்டம், மேற்குத் தஞ்சாவூர் அபிவிருத்தி மாவட்டம் என இரண்டு பிரிவாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் ஆறு ஆறு வட்டங்கள் வீதம் பன்னிரண்டு வட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது.4

என்று சோமலே குறிப்பிடுகின்றார். அவற்றில் மேற்குத் தஞ்சாவூர் அபிவிருத்தி மாவட்டத்தில் காணப்படும் ஆறு வட்டாரங்களில் ஒரத்தநாடு தொகுதியும் ஒன்று. இப்பகுதியே சுபாஷ் சந்திரபோஸின் புதினங்கள் குறிப்பிடுவதாகும்.

தஞ்சாவூரிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் 22 கி.மீ. தொலைவில் ஒரத்தநாடு உள்ளது. இது வட்டத் தலைநகரமாகவும் உள்ளது. இவ்வூருக்கு உறந்தை நாடு என்பதே பழங்காலத்துச் சிறப்புப் பெயராகும். முத்தம்மாள்புரம் சத்திரம் என்ற வேறு பெயர்களும் உண்டு. உறந்தைராயன் குடிக்காடு, பாப்பநாடு, திருமங்கலக்கோட்டை, தென்னமநாடு, கண்ணந்தங்குடி, பின்னையூர், உளூர், தெக்கூர் போன்ற ஊர்களும் இதனைச் சுற்றி காணப்படுகின்றன. விளைநிலங்களின் தன்மை, வகைப்பாடு, நீர்நிலம், நிலவுடைமை, நில உடைமையாளர்கள், உடைமையாளர்களின் நிலைப்பாடுகள் போன்ற செய்திகளை ஆசிரியர் தம் படைப்புத் திறத்தால் வெளிப்படுத்தியுள்ளார்.

விளைநிலங்களின் தன்மை

மண்ணைக் குறிக்கும் பொதுவான பெயர்களில் நிலம் என்னும் பெயரும் ஒன்று. இச்சொல் தற்காலத்தில் உழுநிலத்தைக் குறிக்கும். சொல்லாய் மட்டும் நின்றுள்ளது. வயலில் உணவுப் பயிர்கள் விளைவிக்கப்படுவதால் விளைநிலம் என்று குறிப்பிடப்படுகின்றது. முறைப்படுத்தப்பட்ட நிலையில் விளைவித்த பொருள்களை அறுவடை செய்து பலனை அனுபவிப்பதால் சாகுபடி நிலம் எனவும் கூறலாயினர். இத்தன்மையே வயலென வழங்கலாயிற்று. வயலுக்குக் காடு, கொல்லை என வெவ்வேறு பெயர்களில் அழைத்தனர். பொதுப்பெயரும், சிறப்புப் பெயரும் இணைந்த இலக்கணம் போல வயற்காடு என்று வழங்கும் வழக்கம் கிராமப்புறங்களில் காணப்படுதலை,

மணப்பாறை மாடுகட்டி

மாயவரம் ஏறுபூட்டி

வயக்காட்டை உழுதுபோடு செல்லக்கண்ணு5

என்ற பட்டுக்கோட்டையார் பாடலின் வழியும் அறியலாம்.

விளைநிலங்கள் பூமியின் இயற்கை வளங்களைப் பொறுத்தே அமைகின்றன. நிலவளத்தைப் பொறுத்தே பயிர்வளம் கிட்டும். படைப்பாளர் சுபாஷ் சந்திரபோஸின் புதினங்கள்வழி விளைநிலங்களின் தன்மை நான்கு வகையில் இருப்பதை, (1) களிமண் நிலம், (2) செம்மண் நிலம், (3) படுகை நிலம், (4) இருமண் நிலம் என்னும் பகுப்பு முறையைத் தெளிவாக ஆசிரியர் பதிவு செய்துள்ளதைக் காணலாம்.

களிமண்

தஞ்சாவூர் வட்டாரப் (ஒரத்தநாடு) பகுதிகளில் களிமண் பாங்கான நிலமும் காணப்படுகின்றது. கொள்ளிட ஆற்றினுக்கு வடக்கே காணப்படுகின்ற இம்மண்வகை மிகவும் கருமையானதாகக் காணப்படும். ஆனால், ஒரத்தநாடு வட்டாரப் பகுதிகளில் காணப்படும் களிமண் ஓரளவே கருமை நிறம் இருக்கும். மழைக்காலத்தில் பொழிகின்ற வான்மழை நீரைப் பெருமளவு தேக்கிவைத்துக் கொள்ளும். அத்துடன் ஈரப்பதம் தொடர்ந்து இருந்து கொண்டே இருப்பதால் பயிர் வளர்வதற்கு ஏற்ற நிலமாக அமைந்துள்ளது. இம்மண்ணில் 85 விழுக்காடு களிமண்ணும், 10 விழுக்காடு மணலும், 2 விழுக்காடு சுண்ணகச்சத்தும், 3 விழுக்காடு மக்கு பொருளும் இருக்கும். அதனால்தான் வளம் பொருந்தியதாக இம்மண் காணப்படுகிறது. மாவீரன் வாட்டாக்குடி இரணியன். சாம்பவான் ஓடைச் சிவராமன் ஆகிய இரு புதினங்களிலும் பாட்டாளி மக்கள் வேலை செய்யும் பெரும்பான்மையான நிலங்கள் இவ்வகை களிமண் பகுதியைச் சார்ந்தவை என்பதை ஆசிரியர் பதிவு செய்துள்ளார்.

ஒரத்தநாடு பகுதியில் விளைநிலத்தைக் கரம்பைக்காடு என்று அழைக்கின்றனர். இப்பகுதி மண்ணில் நெல் மட்டுமே விளைவிக்கப்படுகின்றது.

செம்மண் நிலம்

செம்மண் நிலம், செவல் நிலம் என்றும் பேச்சு வழக்கில் வழங்கப்படுகின்றது. சாலியமங்கலத்திற்குத் தெற்கில் உள்ள வயற்பகுதியெல்லாம் செம்மண் பகுதியே ஆகும். ஆதலால் அப்பகுதி தென்சீமை என்றும் வழங்கப்பட்டு வருகின்றது. பலவகை உணவுப் பயிர்களும் விளையும் பகுதியை நாம் அறியமுடிகிறது.

படுகை நிலம்

ஆற்றங்கரையோரப் பகுதி நிலங்கள் நீர் வளத்தால் வறுமை பெற்றதாகக் காணப்படும். அப்பகுதி படுகை என்றழைக்கப்படும். மழைக்காலத்தில் காட்டுப்புறங்களிலும், மலைப்பிரதேசங்களிலும் பெய்யும் மழை தெள்ளிய களிமண்ணையும், வண்டலையும் அடித்துக்கொண்டு ஆறுகள் மூலமாகக் கடலுக்குப் போகிறது. போகும் வழியில் வண்டல் படிகிறது. இவ்வாறு படிந்த மண்ணையே படுகை எனலாம். எனவே பருத்தி இம்மண்ணில் விளைவதால் வண்டல் நிறைந்த பகுதியாகத் தஞ்சாவூர் பகுதி காணப்படுகிறது.

இருமண் பாங்கான நிலம்

மணலும் செவலும் ஏறக்குறைய சரிசமமாகக் கலந்திருக்கும் நிலத்தை இருமண் பாங்கான நிலம் என்று கூறுகின்றனர். இந்நிலங்களில் தென்னை, வாழை போன்ற பயிர்கள் நன்கு விளையும். மேலும் நிலத்தின் தன்மையைப் பொறுத்து (1) நன்செய் நிலம் (2) புன்செய் நிலம் எனப் பாகுபடுத்தப்படுகின்றன.

நன்செய் நிலம், புன்செய் நிலம்

நீர் வசதியுள்ள நிலம் நன்செய் நிலம் என்றழைக்கப்படுகிறது. இந்த நன்செய் நிலத்தை சங்க இலக்கியத்தில் மென்புலம் என்றும் குறிப்பிடுகின்றனர். மென்பால் என்பது மருத நிலத்தையும் (பதி.75:8), நெய்தல் நிலத்தையும் (புறம்.384:1) குறிக்கின்றது.6

நன்செய், புன்செய் நிலங்கள் பற்றியும், அதில் விளைகின்ற பயிர்கள் பற்றியும் புதினங்களில் செய்திகள் காணப்படுகின்றன. அவற்றை இரணியன் கப்பலில் மேல் ஏறி நின்று தனது ஊரைப் பார்க்கும்போது, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நாலாப்பக்கமும் நஞ்சை நிலங்கள் தெரிந்தன

(மா.வா.இ., ப.54) என்று ஆசிரியர் குறிப்பிடுவதன் மூலம் அறிந்துகொள்ளலாம். “பண்ணையார்களுக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம்” (சா.ஓ.சி., ப.62) இருந்ததாக இப்புதினம் எடுத்துக்காட்டுகிறது.

சேரி மக்கள் விடிவதற்கு சில நாழிகளுக்கு முன்பே எழுந்துவிடுவார்கள். சாணி அள்ளி, சோளம் குத்தி, வீடுவாசல் சுத்தம் செய்து வேலைகளை முடித்துவிட்டு அவசர அவசரமாக கொல்லைக்கு வேலைக்குப் போவார்கள். இதனை,

வயற்காடு, கொல்லைக்காடுகளில் இடுப்பில் துணி இருக்கிறதா? இல்லையா? என்றுகூடப் பார்க்காமல் வேலை செய்வார்கள்.7

கஞ்சியைக்கூட எடுத்துக்கொள்ளாமல், பச்சைப் பிள்ளைக்காரி ஆராயி ஓட்டமும் நடையுமாக வயற்காட்டிற்கு ஓடினாள். வயலில் சேறு அடிப்பதும், நாற்று அரிப்பதும், தூக்குவதும், நடுவதும் என மழைநேர வைக்கோல் வேலை போல நெருதுளி ஆகிக்கொண்டிருந்தது. வயலில் நடவு நடும் விதத்தினைப் பற்றிய குறிப்பு வேளாண்மை சிறப்பாக நடைபெற்றதை ஆராயி பாத்திரத்தின்வழி சித்திரித்துக் காட்டியிருப்பது போற்றுதலுக்குரியது.

மலைபாம்பு என்னும் புதினத்தில் ராமசாமி என்பவர் விவசாயம் செய்து வந்தார். அதனை வயலில் விளையும் நெல்லைவிட வாசலில் வட்டிக்கு வந்த நெல்லில் கட்டிப்போட்ட சேரே பெரிதாக இருக்கும் (ம.ம., ப.49). என்பதை இப்புதினத்தில் ஆசிரியர் படம்பிடித்துக் காட்டியுள்ளார்.

பண்ணையார் பரமசிவம் சாமியார்களை வரவழைத்து வேலை கொடுத்தார் என்பதை, தப்புப் பண்ணிப்புட்டு தாடி வளத்துக்கிட்டு சுத்துறானுவ. கோயிலுக்காளமாரி சுத்துற இவனுவொளுக்கு ஏதாச்சும் வேலை கொடுத்தாத்தான் சரிப்படும். தண்டோரா போட்டபடி "ஒங்களுக்கு மூணு வேளையும் நல்ல சாப்பாடும் வேட்டியும் கொடுப்போம். கருது அறுத்து அடிச்சுப் போட்டுப் போவாட்டி விடமாட்டேன் (ம.ம., ப.80). நடந்து போயி நாலு வாயி வாங்கித் திங்கறதவிட, இருந்த எடத்துல இருந்து ரெண்டு வாயி தின்னாப் போதும்" என்று வந்த சாமியார்களை கருது அறுக்க வைத்த நிகழ்வை இப்புதினத்தின்வழி ஆசிரியர் வெளிப்படுத்தியுள்ளார்.

நேற்று முடிந்த இடத்தில் இருந்து அறுவடை ஆரம்பம் ஆகியது. அரியை அள்ளிப்போட்டு கட்டினார்கள். முடியாதவர்கள் பிரித்துப் போட்டு ஒத்தாசை செய்தார்கள். நல்ல ஆரோக்கியம் உள்ள சாமியார்கள் தூக்கிவிட்ட கட்டைப் பந்தைப் போல முழங்காலால் முட்டித் தலையில் வாங்கிக்கொண்டார்கள். “கட்டுகள் ஓட்டமும் நடையுமாகக் களத்துமேட்டிற்குப் பறந்தன” (ம.ம., ப.90). எல்லாவற்றையும் மறந்து அறுவடை செய்த சாமியார்களின் நிலையை இப்புதினத்தில் காண முடிகிறது.

செல்லன் குடும்பத்திற்கு மூன்று வேலிக்கு மேல் சாகுபடி நிலம் இருந்தது. நெல், சோளம், கேழ்வரகு, கடலை, மிளகாய் என்று சொல்லியபடி விளையும் (ம.ம., ப.212). வயல் கொல்லைக்காக குடியானத் தெரு பக்கத்தில் இருந்தன. குடியானவர்களில் அதிக வசதி இல்லாதவர்கள் இவர்கள் கொல்லையில் சோளக்கதிர் பொறுக்கவும், மிளகாய்ப் பழம் எடுக்கவும் வருவார்கள் என்பதை இப்புதினத்தின்வழி அறிந்துகொள்ளமுடிகிறது.

பண்ணையாரின் நிலங்கள் பெருகிக் கொண்டே செல்வதற்கும் ஊரில் உள்ள பெரும்பான்மையோருக்கு நிலம் இல்லாமல் போனதற்கும் பண்ணையார்களின் நில அபகரிப்புத் திட்டமே காரணமாக இருந்துள்ளது. குறுவிவசா­யிகளின் நிலங்கள் பறிபோனதை எண்ணி, பண்ணையார்களுக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் அதுவும் ஏதோ ஒரு வகையில் வந்தது.8

தஞ்சாவூர் பகுதி விளைநிலங்கள் எல்லாமே பண்ணையார்களிடமே காணப்பட்டன. இதனை, கீழ்த்தஞ்சைப் பகுதியிலுள்ள பல லட்சம் ஏக்கர் நிலங்கள் குறிப்பிட்ட சில பண்ணையார்களிடமே இருந்தன (சா.ஓ.சி., ப.62) என்பதை ஆசிரியர் சுட்டிக் காட்டியுள்ளார்.

நிலப்பண்படுத்தல்

நிலத்தைப் பண்படுத்தும் முறையில் மரத்தால் செய்யப்பட்ட ஏர் (கலப்பை) கருவியில் மாடுகளைப் பூட்டி உழவு செய்யும் முறை இருந்தது. இம்முறையில் உழுது நிலத்தைப் பண்படுத்தும் தன்மை பெற்றிருந்தனர். கலப்பையை உழவர்கள் வணங்கும் தெய்வமாகவே கருதினர். ராமலிங்கத் தேவர் மகனை அழைத்துக்கொண்டு வந்தார். வயலுக்குள் தண்ணீர் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. வெங்கடாசலம், பதற்றப்படாமல் ஏரைப் பூட்டி ஓட்டினான் (மா.வ.க., ப.52). உழவர்கள் விவசாயத்திற்குக் கலப்பைகள் பயன்படுத்தியதற்கான சான்றுகள் புதினங்களில் புலப்படுகிறது.

மண்வெட்டியானது வரப்பு கட்டுவதற்கும், வாய்க்கால் வெட்டுவதற்கும், மடைகட்டுவதற்கும், வரப்பைச் சரிசெய்வதற்கும், நிலத்தைச் சமப்படுத்துவதற்கும் பயன்படுத்தப் பெற்றுள்ளது. விளைந்த நெற்கதிர்கள் மற்றும் எள், உளுந்து, பயறு, கேழ்வரகு போன்ற தானியக் கதிர்களை அறுத்து எடுக்கக் கருக்கரிவாள் பயன்படுகிறது. பயறுவகைப் பயிர்களைவிட நெற்கதிரை அறுப்பதற்கே கருக்கருவாள் அதிகம் பயன்படுத்தப்பட்டதற்கான குறிப்புகளைப் புதினத்தின்வழி அறியலாம்.

வெளியூரிலிருந்து வந்து தஞ்சாவூர் மாவட்டச் சுற்றுவட்டாரக் கிராமங்களில் ஆடுகள் வைத்து ‘கிடைபோட்டு’ அதில் இலாபம் அடைந்துள்ளனர். கிடை போடுபவர்களுக்கு கூலியாக நெல் கொடுக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சாகுபடியாளர்கள் சீமை உரம் அதிகம் பயன்படுத்தாத காலங்களில் தஞ்சை விவசாயமும் புஞ்சை விவசாயமும் ஆட்டுக் கிடைகளையும் மாட்டுக் கிடைகளையும் நம்பி இருந்தார்கள் என்பதை புதினத்தின்வழி அறிய இயலும்.

விதைகளை இரு முறைகளில் விதைக்கின்றனர். (1) கையால் விதைத்தல், (2) இயந்திரங்களின் உதவியோடு விதைத்தல். தஞ்சை மாவட்டத்திலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கைகளால் விதைக்கும் முறையே காணப்படுகிறது.

கால்வாய்ப் பாசனம்

ஆற்றில் வருகின்ற தண்ணீர் வாய்க்கால்கள் மூலம் பிரிக்கப்பட்டு நிலத்துக்குப் பாய்ச்சப்படுகிறது. தமிழகத்தில் வெள்ளப்பெருக்குக் கால்வாய்கள், நீர்த்தேக்கக் கால்வாய்கள் இவ்விரண்டின் மூலமே பாசனம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் மொத்த கால்வாய்ப் பாசனப் பரப்பில் பாதியளவிற்கு மேல் தஞ்சை மாவட்டத்தில் உள்ளது. மற்ற மாவட்டங்களைவிட இம்மாவட்டத்தில் 4,60,453 எக்டேர் பரப்பு கால்வாய்ப் பாசனம் மூலம் சாகுபடி செய்யப்படுகிறது.9

புதினங்களிலும் கால்வாய்ப் பாசனம் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த வடக்கு வாட்டாக்குடி விவசாயிகளும், தெற்கு வாட்டாக்குடி விவசாயிகளும் ஒரே வாய்க்காலில் வரும் நீரைக் கொண்டு விவசாயம் செய்ததை, ‘மாவீரன் வாட்டாக்குடி இரணியன்’ புதினத்தில் காணலாம்.

வடக்கு வாட்டாக்குடிக்கும் தெற்கு வாட்டாக்குடிக்கும் ஒரே வாய்க்கால் பாசனம். அந்த வாய்க்காலில் இரண்டு பக்கத்திலும் முக்கியமானவர்களின் நிலம் இருந்தது. மழை பொழிந்தாலும் ஏழை எளியவர் நிலம் பாயத் தண்ணீர் விடமாட்டார்கள்.10

சோழநாட்டுப் பகுதியில் கால்வாய்ப் பாசனப் பரப்பில் 64 விழுக்காடு அளவு காவிரி ஆற்றை நம்பியே உள்ளது. தற்சமயம் இந்த ஆற்றில் கர்நாடக அரசு பல அணைக்கட்டுகள் கட்டி, அங்கிருந்து வரும் நீரைப் பயனாக்குவதால், இன்று காவிரி ஆற்றுப்பாசனமே நம்பிக்கையற்ற ஒன்றாக மாறி வருகிறது.

நெல்

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று போற்றப்படும். தஞ்சாவூரிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நெல் முக்கிய பயிராகப் பயிரிடப்படுகிறது. நஞ்சை, புஞ்சை என இரண்டு நிலங்களிலும் நெல் பயிரிடப்படுகிறது. “சேரி மக்கள் வாழும் பகுதியில் தை முதல் பங்குனி மாதம் வரை வரும் தலையடி நெல்லும் போரடி நெல்லும் இவர்கள் குடிசைகளைக் களைகட்ட வைத்துவிடும்” (சா.ஓ.சி., ப.24). தலையடி நெல் வீட்டிற்கு வந்ததும் சேரி மக்கள் மகிழ்வோடு இருப்பார்கள் என்பதை இப்புதினத்தில் ஆசிரியர் அழகாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளார்.

இவ்வாறு செழிப்புடன் வேளாண் செய்து வாழும் மக்களின் இன்றைய நிலையைக் காணலாம். தமிழ்நாட்டில் காவிரியை நம்பி 24.5 லட்சம் ஏக்கர் விவசாயம் நடைபெறுகிறது. 19 மாவட்டங்களின் குடிநீர் ஆதாரம் இதுவே. டெல்டா மாவட்டங்களில் 15 லட்சம் ஏக்கரில் பயிரிடப்படும் சம்பா பயிரை நம்பி 40 லட்சம் விவசாயிகள் உள்ளனர். கடந்த ஆறு ஏழு வருடங்களாகக் குறுவை இல்லை.

ஜெனிவா ஒப்பந்தப்படி காவிரியைச் சுற்றி 25 லட்சம் ஏக்கர் விவசாயம், 19 மாவட்ட மக்களது குடிநீர் இவற்றை கர்நாடகம் தடுப்பதும் போர்க்குற்றம் போன்றதே. “சோழநாடு சோறுடைத்து” என்பார்கள். ஆனால் காவிரி டெல்டா பகுதியானது, 500 அடி முதல் 1700 அடி வரை அதன் கீழ் உள்ள நிலக்கரிப் படிமங்களாகவும் மீத்தேன் எரிவாயு இருப்புக்குமே அதிகம் பார்க்கப்பட்டு, 690 சதுர கி.மீட்டர் பரப்பில் முதலில் அவற்றை எடுத்து ஆயத்தப் பணிகள் நடந்து வருகின்றன. மக்கள் அதனை எதிர்த்து 100 நாட்கள் அளவில் போராட்டம் நடத்தி வருகின்றனர். உலக அளவில் விவசாயத்துக்கு அதிக இடம் ஒதுக்கிய நாடாக நாம் இருந்தாலும் ஏக்கருக்கு உற்பத்தித் திறன் குறைந்தே உள்ளது. இந்திய மக்களில்

60-க்கும் அதிகமானோர் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் மக்கள் கடந்த பத்தாண்டுகளில் புதிதாக 10 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்ந்து வருகின்றனர். 1/3 இந்தியருக்கு இரவில் உணவு கிடைப்பதில்லை. 2030இல் இன்றைய உணவுத் தேவையைவிட 50 விழுக்காடு அதிகம் தேவைப்படும். உலக அளவில் அதிக உணவு உற்பத்திக்காக வேளாண்மைக்கு மட்டுமே அதிக செலவினம் செய்ய வேண்டியிருக்கும்.

முடிவுரை

‘சோழ வளநாடு சோறுடைத்து' என்பது முதுமொழி. காவிரி பாயும் செல்வச்செழிப்பான ஒருங்கிணைந்த தஞ்சைத் தரணி தனது பெருமையை இழந்து விதற்பா விதைத்த விவசாயம் என்ற புனித தொழில் நசிந்து, நிலைமை சீர்கேடாக உள்ளது. இந்நிலை மாற வேண்டும்.

தஞ்சைத் தரணி சரியான முறையில் விவசாயம் செய்தால் தமிழ்நாடு விவசாயம் செய்யத் தேவை­யில்லை. தமிழ்நாடு சரியான முறையில் விவசாயம் செய்தால் உலகம் முழுதும் உணவு அளிக்க இயலும்.

சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால்

உழந்தும் உழவே தலை

என்ற வள்ளுவரின் குறளுக்கேற்ப உலகத்தாரைத் தாங்கி நிற்கும் அச்சாணி உழவுத்தொழில் என்பதே இக்கட்டுரை வெளிப்படுத்தியுள்ளது.

சான்றெண் குறிப்புகள்

1.            ஜே.ஆர்.வி.எட்கர், மரபுவழி வேளாண்மைச் சிறப்புகள், ப.320.

2.            வி.பு.சுப்பையா முதலியார், தென்னிந்தியப் பயிர்கள், ப.31.

3.            ஆனந்த பத்மநாபப்பிள்ளை, பண்ணைப் பராமரிப்பும் வேளாண்மையும், ப.33.

4.            சோமலெ, தஞ்சாவூர் மாவட்டம், ப.35.

5.            பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், ப.25.

6.            பெ.மாதையன், சங்க இலக்கியத்தில் வேளாண் சமுதாயம், ப.119.

7.            சு.சுபாஷ் சந்திரபோஸ், மலைப்பாம்பு மனிதர்கள், ப.41.

8.            சு.சுபாஷ் சந்திரபோஸ், சாம்பவான் ஓடைச் சிவராமன், ப.159.

9.            பி.எஸ்.மணி, தமிழகத்தில் நீர்வளம் பெருக்கும் வழிமுறைகள், ப.68.

10.         சு.சுபாஷ் சந்திரபோஸ், மாவீரன் வாட்டாக்குடி இரணியன், ப.51.

குறிப்புதவி நூல்கள்

1.            ஆனந்த பத்மநாபப்பிள்ளை, பண்ணைப் பராமரிப்பும் வேளாண்மையும், அமுத நிலையம், சென்னை, 1957.

2.            மணி, பி.எஸ்., தமிழகத்தின் நீர்வளப் பிரச்சனைகளும் வழிமுறைகளும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 1990.

3.            மாதையன், பெ., சங்க இலக்கியத்தில் வேளாண்மைச் சமுதாயம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2007.

- பி.சா.மாதவி, முனைவர் பட்ட ஆய்வாளர், சர் ஏ.டி.பன்னீர்செல்வம் தமிழ்த்துறை உயராய்வு மையம், அரசர் கல்லூரி, திருவையாறு

Pin It