நாவல் என்பது உரைநடையில் அமைந்த கதை. பாத்திரங்களும் நிகழ்ச்சிகளும் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் வண்ணம் அமைந்திருக்கும்' என்கிறது ஆக்ஸ்போர்டு அகராதி. 'நாவல் என்பது நிலைத்து நிற்கக்கூடிய ஒரு கதை. வரலாற்று உண்மை அல்ல. ஆனால் வரலாற்று உண்மையாக இருக்கக்கூடும். இதன் நோக்கம், ஒரு சில காட்சிகள் மூலமும், உணர்வு பூர்வமான கதைப்போக்கு மூலமும் இயற்கையைப் பிரதிபலிப்பதன் மூலமும் படிப்பவர்களை மகிழ்விப்பதும் தான்' எனப் பொருள் சொன்னது என்சைக்கிலோப்பீடியா பிரிட்டானிக்கா.

puliyoor murugesan novelவரலாற்று நாவல்கள் என்பவை சமகால நிகழ்வுகளைத் தவிர்த்து, பழங்காலத்து ஆட்சியாளர்கள் (வேந்தர்கள், குறுநில மன்னர்கள்) நிலைப்பட்ட வாழ்க்கையை, அக்காலச் சூழலில் வழங்கிய மொழியின் (எழுத்து வழக்கு மொழியாகக் கட்டமைத்துக் கொண்டு) தன்மையோடு படைத்துக் காட்டுவதாகும். அடிப்படையில் இவ்வரலாற்றுக் கதைகளின் தோற்றப் பின்புலம் என்பது மேற்கத்திய சூழலில் இருந்துதான் முதன்முதலில் தமிழ்ச் சூழலுக்கு வந்தது. அந்த வகையில் இந்தியச் சூழலில் வரலாற்று நாவலுக்கான தோற்றம் என்பது முதன்முதலில் வங்காள மொழியில் உருப்பெற்றுள்ளது. 1801 ஆம் ஆண்டு எழுதப்பட்ட ‘பிரதாபத்திய சரித்திரம்’ என்பதே முதல் வரலாற்று நாவலாகச் சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து 1865இல் பக்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய ‘துர்கேச நந்தினி’ (குறுநில மன்னர்களின் மகள்) என்பதும் வரலாற்று நாவலாக அடையாளப்படுத்தப்பட்டது. தொடர்ந்து இந்திய மொழிகள் அனைத்திலும் வரலாற்றுப் புனைவுகள் தோன்ற வழிவகுத்தது எனலாம்.

‘சிறுபான்மை மத வெறுப்பை உமிழாத நேர்மையான வரலாற்றாய்வாளர்களுக்கு’ தன் புதினத்தை சமர்ப்பித்திருக்கும் புலியூர் முருகேசன் மார்க்சீயத்தை தன் வழியாகக் கொண்டவர்.

முறுக்கு மீசையும், வஜ்ரம் போல் மேனியும் கொண்ட இளவரசன், கச்சைக்குள் அடங்காப்பெரும் ஸ்தனங்களைக் கொண்ட மஞ்சளழகியைக் கட்டிலில் சேர்த்த வீர சாகசம், இந்த தமிழ் தேசத்தில் வரலாற்றுப் புதினம்-என்ற பெயரால் அழைக்கப்படுவது, தமிழர்க்குத் தலைக்குனிவு தரும் செயலாகும்.. 'தமிழில் தக்க வரலாற்றுப் புதினம் தோன்றவில்லையே என்கிற வசை என்னால் ஒழிந்தது', என்ற அமரர் பிரபஞ்சனின் கூற்று மிகை அல்ல.

புலியூர் முருகேசன் படைப்பித்த ஆலம்கிர் ஔரங்கசீப் நாவலிலும் கச்சைகளை அவிழ்க்க யத்தனிக்கும் இளவரசிகளையோ, காமுக அரசர்களையோ காண இயலாது. மாறாக பிற மத பெண்டிர்மீது மிக்க மரியாதைக் கொண்ட ஔரங்கசீப் எனும் மாமனிதனைக் காணலாம்.

ஓர் இலக்கியப் படைப்பு சிறந்து விளங்க வேண்டுமானால் அதில் இடம்பெறும் மாந்தர்களும், அம்மாந்தர்களின் பின்புலத்திலுள்ள சகல இயக்கங்களும் உரிய பொருட்களும் மிக நுணுக்கமாகச் சித்தரிக்கப்பட வேண்டும். இலக்கியத்தில் இடம்பெறும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றிய இன வரைவியல் செய்திகள் அவ்விலக்கியத்தில் இடம் பெறும் பாத்திரங்களுக்கும், பிரச்சினைகளுக்கும் பொருத்தமான பின்புலத்தை உருவாக்க உதவுகின்றன.”(இனவரையிலும் தமிழ் நாவலும் – ஆ. சிவசுப்பிரமணியன்)

"நாவல் ஒரு கலை, கைத்திறனுள்ள ஒரு தொழில் நாவலாசிரியன் ஒரு கலைஞன், கைவினைஞன். அவன் தன் பணியைக் கவனமாகச் செய்ய வேண்டியவன், தன் தொழிலுக்குரிய விதிகளை நன்கறிய வேண்டியவன். அவனுடைய நாவலில் நல்ல வேலைப்பாடு இருந்தால் மட்டும் போதாது. அவன் கவியையும் இசைவாணர்களையும் போலப் படைக்கும் திறன் வாய்ந்ததொரு கலைஞனாகவும் திகழவேண்டியவன்" என்பார் ப. கோதண்டராமன் (உலக நாவல் இலக்கியம், ப. 6).

புதினத்தின் பின்னணி சரித்திரம் எனினும் வரலாற்றுப் பார்வையோடு மாயயதார்த்தம் கலக்கிறது. எனில் காலங்கள் தாண்டி அறிந்த பாத்திரங்களே மீண்டும் வாசகர் முன் வருகிறார்கள்.

“இலக்கியத்தின் அடிப்படைகளை முன் எப்போதும் இல்லாத 3. அளவிற்குச் செழுமைப்படுத்திக்கொள்ள நவீனத்துவம் தளம் அமைத்துக் கொடுத்தது. நுட்பமான வடிவ அணுகல்கள், கச்சிதமான உள்ளடக்கம், பிசிறில்லாத எடுத்துரைப்பு, மொழியில் கவனம், திட்டமிட்ட உருவ உள்ளடக்க வரையறைகள் என, இலக்கியத்தின் அடிப்படைகள் மீது புதிய உரையாடல்களை இதற்கு முன்னர் எந்த இலக்கிய இயக்கமும் நிகழ்த்தவில்லை.” என்பார் பேராசிரியர் ந. இரத்தினக்குமார் [திறனாய்வுக் கோட்பாடுகளும் பன்முக வாசிப்புகளும் ப 69 ]

நாவலை நகர்த்திச்செல்லும் விதங்களில், நவீனத்துவத்திற்குப் பின்னான இலக்கியமாற்றங்கள் அனைத்தையும் நாவலின் கட்டமைப்பையும் கருத்திலெடுத்துக் கொண்டு இந்நாவலைப் படைத்திருக்கிறார் புலியூர். முருகேசன். இந்த நாவலில் திட்டவட்டமானக் கதைச் சொல்லலைத் தவிர்த்து, சம்பவங்களுக்கும், நிகழ்வுகளுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டு அந்தச் சம்பவம் அல்லது நிகழ்வின் கால, இட நிர்ணயங்களை முன்னும்பின்னுமாக நகர்த்துவதன் மூலமாகவோ அல்லது முற்றிலுமாகக் கலைத்து வேறொரு நிர்ணயத்திற்கு ஏற்ப அடுக்குவதன் வாயிலாகவோ, வாசகன் அடையும் திகைப்பு நெருக்கடி, நெகிழ்ச்சி மற்றும் விகாசம் ஆகியவற்றை நோக்கி வாசிப்பவரின் சிந்தனையைக் குவியச் செய்திருப்பது வாவளின் சிறப்பு எனலாம். மனித முக அடையாளங்கள் மாறினாலும் அவர்தம் வர்க்கக் குரல்கள் மாறுவதில்லை என்பதைச் சொல்ல புலியூரார் கண்ட யுக்தி இது.

லாவேஜ் விடுதலையின் குறியீடாய், அறம் சார்ந்த மானுடனாய், நற்குண நாயகனாய் வடிவமைக்கப்பட்டுள்ள்ளான் எனில் விக்ரம் ஜோஷி துர்குணங்களின் சேகராமாய், அறம் கொன்றவனாய், மானுட விடுதலைக்கு எதிரான சனாதனத்தின் கொடியுயர்த்தி கர்ஜிக்கும் கொடுந்தீய சக்தியாய் முக்கியமய் சமகாலசங்கிகள் பலரின் பிரதியாக பிரதிநிதியாக காட்சி தருகிறான்.. அறம் தூவி அன்பு வளர்ப்பது ஒரு புறமெனில் பிரிவினைப் பேசி வம்பு வளர்ப்பது இன்னொரு புறம்

முகம்மது பின் துக்ளக் எனும் சுல்தானை வெறுமனே பகடி செய்து கேலிக்கும். கிண்டலுக்கும் ஆளாக்கி satirical character assassination செய்ததில் சில்லுண்டித்தனமான பாத்திரமாய்க் காட்டியதில் சோ ராமசாமி எனும் சனாதன வன்மம் மிக்க இந்துத்துவ வெறியனுக்கு முக்கியப் பங்குண்டு.

அதேநேரம் கிரீஷ் கர்னார்ட் படைத்த துக்ளக், டெல்லி சுல்தானின் உண்மை முகத்தை, ஆட்சித்திறத்தை, அவருக்கு உடனிருந்திர் செய்த துரோகத்தை காட்சிப்படுத்தியது.

அவுரங்கசீப் எனும் மனிதனின் /ஆட்சியாளனின் நற்குணங்கள், கம்பீரமான முடிவுகள், பெண்மையைப் பாதுகாத்து போற்றும் அரும்பண்பு, சனாதனிகளுக்கெதிரான வலிமையானக் குரல் யாவும் நாவலில் தூவலாக காட்சிகளாகின்றன. புலன்களால் அனுபவமாகும் பௌதீக யதார்த்தத்திற்கப்பாலும் வேறு வகையான யதார்த்தங்கள் இருக்க சாத்தியம் உண்டு என்ற நம்பிக்கை யுடன் எழுதப்பட்டிருக்கும் இந்தப் புதினம் சுவாரஸ்யம்மிக்க, விறுவிறுப்பான நடையில், இலகுவான வாசிப்புத்தன்மையுடன் எழுதப்பட்டுள்ளது..

புலியூர் முருகேசனும் ஒரு தராசு முள்ளைப் போல் அவுரங்கசீப் எனும் பெருமன்னனின் ஆட்சி காலத்தை அலசித் தரமான புதினமாகத் தமிழுக்குத் தந்திருக்கிறார்.

வரலாற்று ஈடுபாட்டின் காரணமாக வாசகர் தேடிப்பிடித்துப் படிக்க வேண்டிய நூல்பட்டியலில் இப்புதினம் நிச்சயம் இடம் பெறும். அ நேர்க்கோட்டில் சொல்லப்பட்ட அபாரமான புதினம் இந்நூலென மதிப்பிடுவதில் எவ்வித மனக்கிலேசமுமில்லை.

அன்பாதவன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.