‘இஸ்லாமியச் சித்தர்' என்றும், சூஃபி ஞானி என்றும் அழைக்கப்படும் குணங்குடி மஸ்தான் சாகிபு இராமநாதபுரம் மாவட்டம் தொண்டிக்கு அருகில் 16 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள குணங்குடி என்னும் சிற்றூரில் ஹிஜ்ரி 1207 இல் (கி.பி. 1792) நயினார் முகம்மது சாகிபிற்கும், பாத்திமா என்பாருக்கும் மூத்த மகனாகப் பிறந்தார். தந்தை, பாட்டனார் எனக் குடிவழிப் பெருமையுடையவர் இவர்.

மஸ்தான் சாகிபு ஆர்வத்துடன் திருக்குர்ஆன் ஓதிச் சமய சாத்திரங்களையும் இலக்கண, இலக்கியங்களையும் கற்றுத் தேர்ந்து விளங்கினார்.

kunangudi mastan sahibதிருமணம் செய்யப் பெற்றோர் விரும்பியபோதும் மஸ்தான் சாகிபு விரும்பவில்லை. சிற்றின்பத்திற்கிடமான மனைவி பேரின்பக் கடலான பரம்பொருளை அடைவதற்குத் தடையாக இருப்பாள் என்று கருதினார். இறையருளை அடைதற்குரிய மெய்யறிவு பற்றிய உயர் கல்வியினைப் பெற விழைந்தார். அவ்வாறே செய்தார்.

நல்ல நூல்கள் பலவற்றைக் கற்றுணர்ந்த மஸ்தான் சாகிபு ஹிஜ்ரி 1228இல் துறவறம் மேற்கொண்டார் என்பர். பின்னர் சூஃபி ஞானியாக முற்பட்டார். பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தினார்.

'நான்' என்பதை அழித்து இறைவனுடன் ஒன்றிவிடும் அத்துவித நிலையை விரும்பினார். இறைக்காதலால் கவரப்பட்ட மஜுதூப் ஆகவும், அந்தத் தெய்வீகப் போதையில் வெறியேறிய பித்தராகவும் உலக நடை நீங்கித் தவத்தில் ஈடுபட்டார். திருச்சிராப்பள்ளி, நாகூர் முதலிய பல்வேறு ஊர்களுக்குச் சென்ற மஸ்தான் சாகிபு இறுதியில் சென்னை சென்றார். சென்னையில் பாவா லெப்பைக்குரிய தோப்பில் வந்து தங்கினார்.

"சென்னையில் மஸ்தான் சாகிபைத் தொண்டியைச் சேர்ந்தவர் எனக் கருதினர். ஆதலின் இவர் தங்கித் தவம் புரிந்த பகுதியைத் தொண்டியார் பேட்டை என்றழைத்தனர். இதுவே தண்டையார் பேட்டை என்று வழங்கலாயிற்று" என்பர். இங்கு வாழ்ந்தபோதும் மஸ்தான் சாகிபு பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார். மஸ்தான் சாகிபு தச்சு வேலை செய்து அதனால் வரும் ஊதியத்தை ஏழை எளியவர்களுக்கு அளித்துள்ளார்” என்பார் மு.றா.மு. அப்துற்றகீம்.

மஸ்தான் சாகிபு தவச் சாலையை அடைந்து இறை வணக்கத்தில் ஈடுபட்டார். தொழுதும் நோன்பு நோற்றும் இறை உணர்வில் மூழ்கியிருந்தார். மஸ்தான் சாகிபின் தவச்சாலை, வாழ்க்கைச் சுமையால் மனம் வருந்தும் மக்களுக்கு அமைதி தரும் நிலையமாக விளங்கியது. மக்கள் இரவும் பகலும் திரண்டனர். அவர்களின் விருப்பங்கள் நிறைவேறி வந்தன. காணிக்கைகள் வந்த வண்ணமிருந்தன. மஸ்தான் சாகிபு அவற்றை ஏழை எளியோர்க்கு வழங்கினார். தவச்சாலைக்கு வருவோர் எல்லோர்க்கும் சமயப் பாகுபாடில்லாமல் அருளும் பொருளும் கொடுத்து வந்தார்.

இவ்வாறு பன்னிரண்டு ஆண்டுகள் பேரின்ப வெள்ளத்தில் மூழ்கினார். நாற்பத்தேழு வயது நிரம்பிய போது இருவகை இறப்பும் இறந்து சுடரும் ஒளியும் போலப் பூரணத்தோடும் பரிபூரணம் அடைந்தார். ஹிஜ்ரி 1254 ஜமாதியுல் அவ்வல் மாதம் 14ஆம் தேதி திங்கட்கிழமை வைகறைப்போதில் இவ்வுலக வாழ்வை முடித்துக் கொண்டார். இவர் தவம் செய்து வந்த இடத்திலேயே இவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஆநந்தப்பத்து, முகியித்தீன் சதகம், முகியித்தீன் ஆண்டவர் கொச்சகம், அகத்தீசன் சதகம், மகுமூது நபியாண்டவர் துதி, தவமே பெறவேடுமெனல், குறையிரங்கியுரைத்தல், தவராஜ மகிமை சாற்றல், வானருள் பெற்றோர் மனநிலை உரைத்தல், ஆனந்தக் களிப்பு, நிராமயக் கண்ணி, பராபரக் கண்ணி, றகுமான் கண்ணி, எக்காலக் கண்ணி, கண்மணி மாலைக் கண்ணி, மனோன்மணிக் கண்ணி, நந்தீஸ்வரக் கண்ணி, கீர்த்தனைகள், ஆனந்தக்களிப்பு(2), எனப் பாடல்கள் எழுதியுள்ளார்.

இறையியல் சிந்தனை

இஸ்லாமிய மெய்ஞ்ஞானப் புலவரான குணங்குடி மஸ்தான் சாகிபு படைத்துப் பாதுகாக்கும் இறைவனுக்கு, ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்று இஸ்லாம் வலியுறுத்தும் கோட்பாட்டையே போற்றிப் பாடுகின்றார்.

எல்லாவற்றையும் படைத்துப் பாதுகாத்து எல்லா உயிர்களுக்கும் வேண்டுவனவற்றையெல்லாம் வாரி வழங்கும் வள்ளன்மைக்குணம் கொண்டவன் இறைவன். அவனே எண் திசைகளிலும் நிறைந்து காணப்படுகின்றான். எல்லார்க்கும் அமுதளிப்பது போல் கல்லினுள்ளிருக்கும் தேரைக்கும் இறைவனே அமுதளிக்கிறான் என்று மஸ்தான் சாகிபு இறைவனின் காக்கும் இயல்பினைக் குறிப்பிடுகின்றார்.

இறைவனுக்குப் படைக்கும் தொழில் இயல்பானது. அடியவர்க்கு விரும்புவனவற்றை அளிப்பதில் கற்பகம் போன்றவன் என்றும் குறிப்பிடுகின்றார்.

இறைவன் இணையற்றவன். அவன் வல்லவர்களுக்கெல்லாம் வல்லவன். அவனையன்றி வேறு வல்லவன் இல்லை. இறைவனுக்கு ஈடாக வேறு எவரும் எதுவும் இல்லை. இறைவனுக்கு உவமை சொல்ல முடியாது. எல்லை நிலை சொல்ல முடியாத வல்லமை உடைய ஏகபராபரன் அவன். எங்கும் நிறைந்து இருப்பவன். உண்மையானவன். அவனைத் தவிர வேறு உண்மையான தெய்வம் இல்லை என்பதை உணர வேண்டுகிறார்.

இறைவனைத் தவிர யாராலும் மனிதர்க்கு உதவ இயலாது. இறைவனை மஸ்தான் சாகிபு பெண்ணாகவும் தம் பாடல்களில் காண்கிறார். பெண்மை ஈர்க்கும் சக்தியுடையது. அதேபோல் இறைவனும் ஈர்க்கும் சக்தியுடையவன். அதனால் தான் தன்னை ஆணாகவும் இறைவனைப் பெண்ணாகவும் கருதிப் பாடுகிறார். என்னை விட்டால் எத்தனையோ மாப்பிள்ளைமார் உனக்கு உண்டு. உன்னை விட்டால் வேறு பெண் எனக்கு உண்டோ மனோன்மணியே என்று கேட்கிறார்.

இதேபோல் இறைவனையன்றி வேறு எதுவுமே தனக்கு இல்லை என்று மஸ்தான் சாகிபு பாடுவது, இறைவனைத் தவிரப் புறந்தொழக் கூடாது என்கின்ற அவரது உணர்வையும் வெளிப்படுத்துகிறது.

இறைவனையன்றி ஓர் அணுவும் அசையாது. அவனே எல்லாப் பேறுகளிலெல்லாம் பெரும் பொருள். சர்வ பரிபூரணப் பொருள். அனைத்திலும் பெரியவன்.

இறைவன் வாக்கு மனம் எல்லாவற்றையும் கடந்தவன். எதற்கும் எட்டாதவன். அறிவுக்கு அப்பாற்பட்டவன். பரிபூரணம், வேதம் கடந்தவன். இரவு பகலற்றவன். பிறப்பு இறப்பு இல்லாதவன், முதலும் முடிவும் இல்லாதவன். போக்குவரவற்றவன். நேற்று இன்று நாளை என்று எல்லாக் காலத்திலும் எங்கும் நிறைந்து இருக்கக் கூடியவன்.

எல்லை நிலை சொல்ல முடியாத வல்லமை உடையவன். எங்கும் எப்போதும் நிறைந்து இருக்கும் ஞானோதயம் என்றெல்லாம் குறிப்பிடும் மஸ்தான் சாகிபு எங்கும் நிறைந்த இறைவனின் இயல்பினைப் பல பாடல்களிலும் குறிப்பிடுகிறார்.

‘உயிர்க்குயிராய் என் உள்ளுள் உலாவிய நீ’ என்று இறைவன் தன்னில் கலந்துள்ள நிலையைக் கூறுகிறார். எல்லாப் பொருளும் தானாய் இருக்கிறான் இறைவன், அவன் அருள் ஒளி. ஏக உருவானவன். எங்கும் நிறைகின்ற பொருள். இறைவனையன்றி வேறு எதுவும் இல்லை. எல்லா இடங்களிலும் இறைவனைத் தவிர வேறு இல்லை என்றும் கூறுகிறார்.

இறைவனின் எங்கும் நிறைந்த இயல்பை ஊனாகி, ஊனில் உயிராகி, எவ்வுலகுமாகி, ஒன்றாகி, இரண்டாகி, உள்ளாகி, வெளியாகி, ஒளியாகி, இருளாகி, ஊருடன் பேருமாகி, கானாகி மலையாகி விலங்குமாகி, கங்குல்பகலாகி, மதியாகி, இரவியாகி, வெளிகண்ட பொருள் எவையுமாகி, நானாகி, நீயாகி, அவனாகி, அவளாகி, நாதமொடு பூதமுமாகி என்று இறைவனின் எல்லாமுமாகிய நிலையைப் பாடுகிறார்.

இறைவனின் பல்வேறு பெரும் பண்புகளுள் மேலானதாகிய அருட் பண்பினை மஸ்தான் சாகிபு பெரிதும் போற்றுகிறார். இறைவனை அருள்மயமாகவும், ‘ஆனந்தம் சேர்க்கும் அருளாகவும் கங்கற்ற பேரருட் கங்கையாகவும்’; பேரருட் செல்வமாகவும், அருள் வெள்ளமாகவும், அருள் விரிவாகவும் வருணிக்கிறார்.

அருள் மிகுந்த இறைவன் மன்னிக்கும் பண்பாளனாகத் திகழ்கிறான். அன்பில் சிறந்த அன்னைபோல் பிறர் மன்னிக்க முடியாத குற்றத்தையும் இறைவன் மன்னித்தருள்வான். 'எத்தனை குற்றங்கள் அடியேன் செய்திருந்தாலும், பொறுத்தருள்வது இறைவனுக்கு அழகாகும்' என்று பாடும் மஸ்தான் சாகிபு மனித குலத்தின் ஆபத்தையும், அடிமை செய்யும் பாவத்தையும் நீக்கியருள வேண்டுகிறார்.

இஸ்லாமியக் கொள்கையின்படி இறைவன் எல்லாம் அறிந்தவனாவான், மஸ்தான் சாகிபு இறைவனை அறிவு மயமாகப் பாடுகிறார். இறைவனை இன்பப் பெருக்கு என இன்பமாகவும் கொண்டு பாடியுள்ளார். இறைவனின் ஆற்றல் பண்பையும் மஸ்தான் சாகிபு போற்றிப் பாடுகிறார். இறைவன் எவ்விதக் குறையுமற்றவன், மாசினின்றும் நீங்கிய தூய்மையாளன், நிறைவுடையவன் என்றும் மஸ்தான் சாகிபு எடுத்துரைக்கிறார்.

இறைவனின் தூய்மைப் பண்பை விளக்கிய மஸ்தான் சாகிபு அவனின் பரிபூரணமான நிறைவுப் பண்பையும் பூரணமே, பரிபூரணானந்தமே, காரணிக்கும் பூரணமே என்றெல்லாம் விளக்குகிறார்.

வாழ்வியல் சிந்தனை

சர்வ சமய சமரச நோக்குடைய இஸ்லாமிய மெய்ஞ்ஞானப் புலவரான குணங்குடி மஸ்தான் சாகிபின் பாடல்கள் எளிமையும் இனிமையும் உடையவை. அற்புதமான வாழ்வியல் நெறிமுறைகளைச் சுட்டக்கூடியவை.

நற்பண்பு மனிதனை உயர்த்தும்; தீயபண்பு கீழான நிலைக்குத் தள்ளும். அன்றாட வாழ்வில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய எல்லா நல்ல செயல்பாடுகளும் நற்பண்புகளாகும். மனிதர்களுடைய துர்க் குணங்கள் எல்லாம் போய் நற்குணங்கள் வரவேண்டும் என்று விரும்புகிறார் மஸ்தான் சாகிபு.

அன்பை அடிப்படையாகக் கொண்டதே உயிர் நிறைந்த இந்த உடம்பு என்பதை, 'அன்பின் வழியது உயிர்நிலை' என்கிறார் வள்ளுவர். அன்பு எல்லோரிடமும் இருக்க வேண்டிய ஒன்றாகும். அன்பு இருந்தால் இவ்வுலகில் எல்லாவற்றையும் பெறலாம் என்கிறார்.

மனத்தளவில் குற்றம் இல்லாதவனாய் இருந்து யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யாது, இயன்ற அளவு எல்லோர்க்கும் நற்காரியங்களைச் செய்வதே அறம். அறம் செய்வதற்கு வழங்காத கையை உடையவர்களைத் திட்டுகிறார். நற்செயல்களைச் செய்வதும் அறத்தின்பாற்பட்டதே. அதனால் அச்செயல்களைச் செய்ய வேண்டும். மனிதனுக்கு எல்லாவற்றையும் விட மேலானது, தேவையானது ஒழுக்கமாகும். எனவே அதனைக் கைக்கொள்ள வேண்டும் என்கிறார் மஸ்தான் சாகிபு.

மனித வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய நன்னடத்தைகள் பல உள்ளன. அவற்றைப் பின்பற்றி வாழ்ந்தால் வாழ்வு சிறப்புறும். இவற்றுள் தன்னைப் போல் அயலானையும் நேசித்தல் சிறந்த நன்னடத்தைகளுள் ஒன்றாகும். இதனை மஸ்தான் சாகிபு பின்பற்ற வேண்டுகிறார்.

உண்மையே மனிதனை வாழ்க்கையில் உயர்த்தும். எல்லா நிலைகளிலும் துணை நிற்கும். உண்மையைக் கடைப்பிடிக்காத கொடியவர்களை மஸ்தான் சாகிபு கண்டிக்கிறார்.

உழைப்பு மனிதனைச் சிறப்படையச் செய்யும்; வறுமையைப் போக்கும். அதனால் உழைப்பைப் பேண வேண்டும். ஒவ்வொரு நிலையிலும் தன்னைத்தானே உயர்த்திக் கொள்ளாமல் தாழ்மையுடனும் பணிவுடனும் நடந்துகொள்பவனுக்கு மேலும் மேலும் உயர்வுகிட்டும். பிறர் நலம் பேண வேண்டும். பிறரை வஞ்சித்து வாழக் கூடாது. நாவடக்கம் வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் மனிதன் நீதி நேர்மைக்குப் புறம்பாகச் செயல்படக் கூடாது.

மனிதர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் தான் அவர்களுக்கு எந்தத் தீங்கும் இல்லை. மனிதர்கள் தங்கள் செயல்களில் நடக்க வேண்டிய நல்வழியே. நேர்வழி. மனிதர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நன்னடத்தைகளில் தலையாயது நேர்வழி என்கிறார் மஸ்தான் சாகிபு.

மனிதனை மனிதன் நேசித்தலே மனித நேயம். அதிகாரத்தாலும் பணத்தாலும் மேலோங்கி இருப்பவர்கள் தங்களுடன் இருக்கும் சக மனிதர்களை மதிப்பதில்லை. இதனை மஸ்தான் சாகிபு கடிந்துரைக்கிறார்.

ஒருவன் பொறுமையைக் கைக்கொண்டால் அவன் எல்லாச் சூழ்நிலைகளிலும் வெற்றி பெறலாம். பார்க்கும் போது மனம் மகிழாமல் முகம் மட்டுமே மலரப் பழகுவது நட்பு அன்று. சமுதாயத்தில் வாழும் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் ஒருவருக்கொருவர் உறவாக இருந்தால்தான் சமுதாயம் முன்னேற்றமடையும். எந்தத் துன்பமும் இராது. பிறருக்குத் தீமை செய்யக் கூடாது. தீயோருடன் உறவு வைத்துக் கொள்ளக் கூடாது. அநியாயம் செய்து வாழ்பவர்களின் வாழ்க்கை நிரந்தரமாக இருக்காது. மனிதர்கள் பாவம் செய்தல் கூடாது என்றெல்லாம் மஸ்தான் சாகிபு மனிதவாழ்க்கை மேம்பாட்டுக்கான வழிகளைக் கூறுகிறார்.

பொய் சொல்லுதல் கூடாது. பொய் சொல்லி வாழ்பவனின் வாழ்வு தாழ்வடையும். வஞ்சகம் செய்து வாழ்தல் இழிவானது. தான் என்கின்ற ஆணவம் மனிதனிடம் இருக்கக் கூடாது. மற்றவர்களின் பொருட்களை ஏமாற்றி மோசடி செய்யக்கூடாது. எல்லாச் செயல்களிலும் உண்மையாக ஈடுபடவேண்டும். மாறாக, நடிக்கக் கூடாது. பிறருக்குக் கெடுதலும் துரோகமும் செய்யக் கூடாது என்றும் மஸ்தான் சாகிபு வலியுறுத்துகிறார்.

வீண் பேச்சுப் பேசித் திரிபவனுக்கு வாழ்க்கையில் எந்தவிதமான முன்னேற்றமும் இருக்காது. வீண் பேச்சுப் பேசுவதும் தவறு. வீணர்களாக இருப்பதும் தவறு என்கிறார் அவர்.

பிறருக்கு நன்மை செய்து வாழ்வதற்குப் பதிலாகத் தீமை செய்து வாழ்வதும், பிறரது பொருளை அல்லது உழைப்பைச் சுரண்டி வாழ்வதும் நேரான பாதையல்ல.

சமுதாயத்தில் எல்லா நிலைகளில் வாழக்கூடிய மக்களும் சுயநலத்தைத் தான் பேணுகின்றனர். தன்னலம் பாராமல் பொதுநலம் பேணி வாழ மஸ்தான் சாகிபு வலியுறுத்துகிறார். சமுதாயத்தில் வாழும் மனிதர்களை அழிக்கும் செயல்களில் சோம்பலும் ஒன்றாகும். சமூகப் பொறுப்பு மிக்க புலவர்கள் எவரும் சோம்பலைப் பழிக்கத் தவறியதில்லை. மஸ்தான் சாகிபும் சோம்பலைப் பழித்துரைக்கிறார். வீணாகப் பொழுது போக்குபவர்களைக் கண்டிக்கிறார்.

மனித உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். யாரையும் புண்படுத்துதல் தகாது. தன்மானத்துடன் வாழ வேண்டும். நன்றியுணர்வுடன் இருப்பதுடன் பிறர் செய்த உதவிகளை நினைத்துப் பார்க்க வேண்டும். பழிவாங்கும் உணர்வு இருத்தல் ஆகாது. கோபம் கொள்ளுதல் கூடாது. பொறாமை கூடாது, பிறரைத் துன்புறுத்தக் கூடாது முதலான வாழ்வியல் சிந்தனைகளையும் குணங்குடி மஸ்தான் சாகிபு தம் பாடல்களில் முன்வைக்கிறார்.

சமரசச் சிந்தனை

இஸ்லாமிய மெய்ஞ்ஞானத் தமிழ்க் கவிஞர்களுள் மிகச் சிறந்தவர் குணங்குடி மஸ்தான் சாகிபு. சமயம் சார்ந்த மெய்யுணர்வுப் புலவரான இவர் சமரச நோக்குடையவராகவும் விளங்குகிறார்.

சூஃபி நெறிப் பாவலரான மஸ்தான் சாகிபு தமிழ் நாட்டுச் சூழலுக்கேற்ப சூஃபி நெறியைப் போற்றிப் பாடியுள்ளார். சைவ சித்தாந்தத்தில் பதி, பசு, பாசம் எனும் மூன்று உண்மைகள் உள்ளன. இதனை மஸ்தான் சாகிபு தமது பாடல்களில் எடுத்தாள்கிறார். இறை, ஆன்மா, உலகம் பற்றியும் கூறுகிறார்.

மஸ்தான் சாகிபு எல்லா மதங்களையும் சமரச நோக்கில் பார்க்கின்றார். மக்கள் அறியாமல் உன் தெய்வம், என் தெய்வம் என்று சண்டையிடுகின்றனர். ஆனால், எல்லாத் தெய்வங்களும் ஒன்றுதான். அவரவர் தெய்வமும் அவரவர் சமயமும் அவரவர்களுக்கு உரியவை. ஆகையால் யாருடைய சமயத்தையும் யாருடைய தெய்வத்தையும் குறைத்து மதிப்பிடலாகாது என்று சமயப் பொறையை வலியுறுத்துகிறார் மஸ்தான் சாகிபு.

மத பேதங்களைக் கூறிச் சமயத் தர்க்கம் புரிபவர்களை மதி கெட்டவர் என்று கடுமையாகச் சாடி, மதவெறியற்ற மதம் வேண்டும் என்று விரும்புகிறார்.

சமயப் பொதுமை பற்றிப் பாடிய மஸ்தான் சாகிபு இறைவனை அடையும் நெறிமுறைகளைப் போற்றுகிறாரே தவிர எந்தச் சமயத்துக் கடவுளரையும் குறிப்பிட்டுத் தாழ்த்திக் கூறவில்லை. எந்த ஒரு சமயத்தையும் குறைவாகக் கூறவில்லை. பிற சமயத்தவர் இறைவனைக் குறிக்கப் பயன்படுத்தும் பெயர்களையும் தம்முடைய பாடல்களில் ஆளுகிறார்.

சைவ சமயம் கூறும் அனைத்தும் கடந்த நிலையை மஸ்தான் சாகிபும் பாடுகிறார். இஸ்லாமிய மார்க்கச் சட்டப்படிப் படைக்கும் இறைவன் வேறு, படைப்பாகிய ஆன்மா வேறு. இரண்டும் கலப்பதை இஸ்லாம் ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால் சூஃபிகள் இறைவனுடன் ஆன்மா கலப்பதாகக் கூறுவர். ஆன்மா ஆசாபாச மாசுகளை அகற்றித் தன்னை மறந்து இறைவனில் திளைக்கும் போது இறைவனில் ஒன்றி விடுகிறது. தன்னை இழந்த நிலையில் ஆன்மா, தான் மெய்ப்பொருள் என்னும் உணர்வைப் பெறுகிறது. இவ்வுணர்வு சிறுபொழுதே தோன்றும் என்றும், தொடர்ந்து இருக்கவும் செய்யும் என்றும் மஸ்தான் சாகிபு குறிப்பிடுகின்றார்.

சர்வ சமய சமரசம் பாடும் மஸ்தான் சாகிபு இறைக் கோட்பாட்டிலும் இறைவன் ஒருவனே, அவன் உருவமற்றவன், நிகரற்றவன், முற்றும் அறிந்தவன், வல்லவன், அருளாளன், அன்பாளன், இன்பமானவன், கடந்தும் கலந்தும் உள்ளவன் என்று இறைவனின் தன்மைகளை விதந்து உரைக்கிறார்.

எல்லாவற்றையும் கடந்துள்ள இறைவன் அனைத்திலும் கலந்துள்ளான் என்பது சைவ சித்தாந்தமும் சூஃபி நெறியும் போற்றும் கொள்கையாகும். இதனையே மஸ்தான் சாகிபும் விளக்குகிறார். இதனுடன் எங்கும் நிறைந்துள்ள இறைப் பண்பினையும் போற்றிப் பாடுகின்றார்.

தமிழ்நாட்டில் இறை வழிபாட்டில் மலர் தூவி, மாலை சூட்டி அர்ச்சனை நிகழ்த்துவது உருவ வழிபாட்டில் காணப்படும் மரபாகும். மலர் தூவி இறைவனை வழிபடுவது இஸ்லாமிய மரபன்று. எனினும், இத்தமிழ் மரபைப் போற்றிப் பராபரக் கண்ணியில் மஸ்தான் சாகிபு,

எப்பொருளுந் தானா யிலங்குமுனைப் பூசை செய்ய

புட்பம் எடுக்கவுந்தான் போமோ பராபரமே!

என்று பாடுகின்றார்.

மலரில் மணம் கலந்திருப்பது போன்று இறைவன் எங்கும் கலந்திருப்பதை மலர் கொண்டு விளக்கும் பாங்கு மஸ்தான் சாகிபிடம் காணப்படுகிறது.

இறைவன் ஒருவன் என்பதை வலியுறுத்தும் மஸ்தான் சாகிபு படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய எல்லாத் தொழில்களையும் அவனே இயற்றுகிறான் எனும் கருத்தைத் தம் பாடல்களில் இழையோடச் செய்கிறார்.

உலகப் படைப்புப் பற்றியும் ஆன்மா முன்னேறுவதற்குத் தடைகளாக இருப்பன பற்றியும் அவற்றைக் கடந்து முன்னேறும் வழிகளைப் பற்றியும் மஸ்தான் சாகிபு சைவ சித்தாந்தத்தை அடியொற்றியே கூறுகிறார். அருள் வடிவாகிய இறைவன் மதத்தின் பேரால் பகை வளர்த்து இரத்தம் சிந்தும் வெறியர்களுக்கு அகப்பட மாட்டான் என்கிறார். மதபேதம் பேசித் திரியும் மதி கெட்டவர்க்கு எட்டாத வான் கருணை வெள்ளம் தான் இறைவன் எனவும் கூறுகிறார்.

பகை வளர்த்துப் பிரிக்கும் மதங்கள் அத்தனையையும் விட்டுவிட்டு 'ஒன்றே குலம்' என உயிர்களையெல்லாம் இணைக்கும் உன் அன்பு மதத்தை எனக்கு அருள் புரிய வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறார்.

தூய அருள் நெறி எங்கும் பரவ வேண்டும் என்றும், மதபேதமற்ற அன்புலகம் தோன்ற வேண்டும் என்றும் மஸ்தான் சாகிபு வேண்டுகிறார். இதற்குத் தம் பாடல்கள் உதவ வேண்டும் என்றும் விரும்புகிறார்.

ஏழைஅடி யேன்அறி விலாமல்உள றுந்தமிழ்க்கு

இரங்குவதும் எக்கா லமோ

தீதுமத பேதங்கள் அற்றுமே எங்குமிது

செல்வதுவும் எக்கா லமோ    (மு.ச.89)

என்று பாடும் மஸ்தான் சாகிபின் பாடல்களைப் பிற சமயங்களைச் சார்ந்த அன்பர் பலரும் வேறுபாடு இன்றிப் படித்தனர். படிக்கின்றனர். இதே போல் பலரும் அவருக்குச் சீடராகவும் இருந்தனர். இவையெல்லாம் அவரது ஏக்கம் ஓரளவுக்கு நிறைவேறி இருப்பதையே காட்டுகின்றன.

தமிழ் நாட்டில் வசித்து வரும் இந்து, முஸ்லீம் மக்களின் சுமூக உறவுக்கு இத்தகைய பாடல்கள் பெரிதும் காரணமாக இருந்தன என்பதை யாரும் மறுக்க முடியாது.

சில துறைகளில் சில காரணங்களுக்காகப் பரிபாஷையைப் பயன்படுத்துவர். ஆன்மீகத் துறையினரும் பரிபாஷையைப் பயன்படுத்துவர். சூஃபி ஞானிகளும் பயன்படுத்துவர். குணங்குடி மஸ்தான் சாகிபும் பரிபாஷையைப் பயன்படுத்துகிறார்.

சிவம், சத்தி, உமை, மனோன்மணி, அம்பிகை, வாலை, பரை, கேசரி, சாம்பவி, தட்சிணாமூர்த்தி, நந்தி, துளவமணிமார்பன், சிற்றம்பலம் ஆகிய பிற சமயக் கடவுளர் பெயர்களைக் குணங்குடி மஸ்தான் சாகிபு தம் பாடல்களில் பரிபாஷைகளாகப் பயன்படுத்துகிறார்.

இது அவரது சமயப் பொறையைக் காட்டுகிறது. சமரச மனப் போக்கையும் பறைசாற்றுகிறது.

குணங்குடி மஸ்தான் சாகிபு இஸ்லாம் தந்த இலக்கியவாதி; தத்துவ ஞானி; அவர் தமிழுக்குக் கிடைத்த இன்னொரு தாயுமானவர். அவர்தம் பாடல்கள் இஸ்லாமியக் கருத்துகளை உள்ளடக்கியவை. ஆயினும், சமரசப் பார்வை உடையவை. இச்சிறப்புக் கருதியே அவர் பாடல்கள் சமய வேறுபாடின்றிப் போற்றப்படுகின்றன. அவற்றில் சைவ சமய அரிய பரிபாஷைகளும் காணக் கிடைக்கின்றன. இவை சமய ஒற்றுமைக்கு வழி வகுக்கின்றன.

- பேராசிரியர் உ.அலிபாவா, தலைவர், தமிழியல்துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி. 620 024

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.