தென்தமிழக கடற்கரை நகரான வகுதை என்றழைக்கப்பட்ட கீழக்கரையில் ஏறத்தாழ 370 ஆண்டுகளுக்கு முன் பிறந்து, தன் ஈகைக் குணத்தாலும், கடல் வாணிப செல்வாக்காலும், பரங்கியர்களை எதிர்த்து நின்ற தீரத்தாலும், தாய்த் தமிழை போற்றிய புலவர்களை ஆதரித்ததாலும், சமய நல்லிணக்கத்தைக் காத்தும் வான்புகழ் எய்திட்ட சேது நாட்டுப் பெரியதம்பி மற்றும் விஜய இரகுநாத பெரியதம்பி என்ற மெய்கீர்த்திகள் கொண்டவர்தான் செத்தும் கொடை கொடுத்த வள்ளல் சீதக்காதி என்ற செய்கு அப்துல் காதிர் மரைக்காயர் அவர்கள். வள்ளல் சீதக்காதி மரைக்காயர் மறைந்து 320 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், கீழக்கரை வரலாற்றில் அவர் அழியாப்புகழ் நிலையை அடைந்து இப்புவி உள்ளவரை நினைவு கூறப்படுவார் என்றால் அது மிகை இல்லை.
முகில் மறைந்து, நிலம் வறண்டு, தன் குலம் வாடிய காரிருள் பஞ்சத்திலும் நாட்டார் மனமும், வயிறும் குளிர ஊனளித்த வான்புகழ் சீதக்காதி வள்ளலின் முன்னோர்கள் கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் கீழக்கரை பகுதி பாண்டியர்களின் வசம் இருந்த காலம் தொட்டு மன்னார் வளைகுடா பகுதியின் நீர்வழிப் போக்குவரத்து, கடல் வாணிபக் கட்டுப்பாடு, கடலோர மற்றும் கடல்வளப் பாதுகாப்புக்கான அதிகாரத்தைப் பெற்று மலிக் அல்லது கறுப்பாறு காவலர்கள் என்றும், பின்பு பெரியதம்பி என்ற அரசப் பட்டங்களைப் பெற்றும், சேது சீமையின் கடல்புறத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.
போர்த்துகீசியர்களுக்குப் பின் கீழக்கரை பகுதிக்குள் நுழைந்த பரங்கியர்களான டச்சுக்களின் அடாவடியை எதிர்த்து, அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய வள்ளல் சீதக்காதி, இராமநாதபுரம் அரசர் கிழவன் சேதுபதியுடன் நேசம் பாராட்டி நட்புக்கு இலக்கணமாக இருந்ததுடன், அரசருக்கு ஆலோசனை கூறும் அமைச்சராகவும் விளங்கினார். வள்ளலின் வேண்டுகோளின்படியே இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு தாய்த் தமிழில் உமறுப்புலவரால் சீறா புராணம் என்ற காப்பியமாக இயற்றப்பட்டது. அக்காலத்தில் வாழ்ந்த சறகுப்புலி இமாம் சதக்கத்துல்லா அப்பா அவர்களிடம் பெருமதிப்பு கொண்டிருந்த வள்ளல் சீதக்காதி , சதக்கத்துல்லா அப்பா அவர்களின் ஆலோசனையின் பேரில் திராவிட தொன்கலை நயத்துடன் நடுத்தெரு ஜும்ஆ பள்ளியை நிர்மாணித்து இருக்கலாம் என்று கருத்தும் நிலவுகிறது. வங்காளத்திற்கு கவர்னராக நியமிக்க மாதிஹ் ரசூல் சதக்கத்துல்லா அப்பாவை ஆற்காடு நவாப் மூலம் பேரரசர் ஒளரங்கசீப் பாதுஷா வேண்டியபோது, தனக்கு அந்தப் பதவி ஒத்துவராது என்றும், வள்ளல் சீதக்காதி மரைக்காயர்தான் சரியான தேர்வாக இருக்க முடியும் என்று கருதி , சீதக்காதி மரைக்காயரையே கவர்னராக நியமிக்கலாம் என ஆற்காடு நவாபின் சமூகத்துக்கு சதக்கத்துல்லா அப்பா பரிந்துரை செய்ததாகவும் , வள்ளல் சீதக்காதி அச்சமயம் தனது வர்த்தகத் தொடர்பை கல்கத்தா வரை விரிவுபடுத்தி இருந்தமையால், அந்த கவர்னர் பொறுப்பினை ஏற்று, கல்கத்தா சென்று, சிறிது காலம் கவர்னர் பதவியில் இருந்து, பின் ஊர் திரும்பியதாகவும் செய்திகள் உண்டு. இந்த நிகழ்வுக்கான சான்றுகளை உறுதிப்படுத்த முடியவில்லை எனினும் மூதறிஞர் இராஜாஜி அவர்கள் வங்காளத்தின் கவர்னர் ஜெனரலாக பொறுப்பேற்க கல்கத்தா சென்ற போது, தன்னை மதராஸில் இருந்து வரும் இரண்டாவது கவர்னர் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
காஜி முதலாம் சேக் அப்துல்லா அவர்கள் கீழக்கரையின் நகர காழியாகவும், நகர் தலைவராகவும் இருந்த கி.பி.1680 களில் இந்தியாவை ஆட்சி புரிந்த மொகலாய சக்கரவர்த்தி ஔரங்கசீப் பாதுஷா அவர்களால் சீதக்காதி மரைக்காயருக்கு தன் கைப்பட எழுதி வழங்கிய திருக்குர்ஆன் பிரதியினை, தனது நண்பரான காஜி அவர்களுக்கு சீதகக்காதி மரைக்காயர் வழங்கியதாகக் கூறப்படும் திருக்குர்ஆன் பிரதி இன்றும் காஜிக்களின் வாரிசுகளால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
17 ஆம் நூற்றாண்டில் சேதுபதிகள் இராமநாதபுரத்தில் வைகை ஆற்றின் களரிக் கம்மாய்க் கரையில் உருவாக்கிய சிங்காரத்தோப்பு போன்றே, வள்ளல் சீதக்காதி அவர்களும் கீழக்கரையில் ஆற்றங்கரையோரம் கொடிக்கால்கள் நிறைந்த செவ்வல் என்ற செம்மணல் பகுதியில் தனது சிங்காரத்தோப்பை உருவாக்கி இருக்கிறார். கீழக்கரை புறநகரில் இருக்கும் சிங்காரத்தோப்பு தற்பொழுது பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனை மற்றும் குடியிருப்புப் பகுதியாக உருமாறி இருக்கிறது.
கீழக்கரை கடற்பிரதேசத்தில் அரசியல் ஆதிக்கம் பெற்று பாண்டிய மன்னர்களால் சாமந்தர்களாக நியமிக்கப்பட்ட கறுப்பாறு காவலர்கள் என்றழைக்கப்பட்ட சோனக சாமந்தர்கள் 9 ஆம் நூற்றாண்டு முதல் வள்ளல் சீதக்காதி மரைக்காயர் வாழ்ந்த 17 ஆம் நூற்றாண்டு காலம் வரை தொடர்ந்து ரீஜெண்ட்களாகவே இந்தப் பிரதேசத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தது எட்டயபுரம் உமறு கத்தாப் புலவர் இயற்றிய சீதக்காதி திருமண வாழ்த்துப் பாடலின் வாயிலாகத் தெளிவாகிறது.
பாண்டிய மண்னர்களால் தங்களுக்கு 12 ஆம் நூற்றாண்டிலேயே வழங்கபட்ட கறுப்பாறு காவலர்கள் என்ற அந்தஸ்த்துடனும் , 15 ஆம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட நாயக்க அரசால் பெரியதம்பி என்ற பட்டத்துடனும் ரீஜண்ட்களாகவும் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வந்தனர். பாம்பன் நீர்வழி கால்வாயில் வர்த்தகக் கப்பல்களின் போக்குவரத்தை கண்காணிக்கும் மிகப்பெரும் பொறுப்பு கீழக்கரை மரைக்காயர்களான பெரிய தம்பிகளிடமே இருந்தது, குறிப்பாக சீதக்காதி வள்ளலின் முன்னோரான ஆறாம் பாண்டியன் என்று மதிப்புடன் அழைக்கப்பட்ட கறுப்பாறு காவலரிடம் 12 ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களால் கடல்வழி வர்த்தகப் பொறுப்பு வழங்கப்பட்டு பின் தொடர்ந்து வந்ததை சீதக்காதி திருமண வாழ்த்துப் பாடல் குறிப்பிடுகிறது.
நிரைகொழிக்கும் முத்தும் நிதியும் திரைக்கரத்தால்
கரைகொழிக்கும் செல்வக் கறுப்பாறு காவலன்..
இந்தப் பகுதிகளில் போர்த்துகீசியர்கள் ஆதிக்கம் தலையெடுத்த அச்சுதப்ப நாயக்கர் காலமான 16 ஆம் நூற்றாண்டின் மத்தியில் சேகுகண்டு மரைக்காயர் அவர்களது பேரரும், சீதக்காதி மரைக்கயரின் பாட்டனாருமான மாமு நெய்னா என்ற மஹ்மூது நெய்னா மரைக்காயர் மற்றும் சீதக்காதி மரைக்காயரின் தாயைப் பெற்ற பாட்டனார் பாவா அலி என்ற வாவாலி மரைக்காயர் போன்றவர்களிடம் கடல்வழி வர்த்தகப் பொறுப்பு இருந்திருக்கலாம் எனக் கருத முடிகிறது. சேகுகண்டு மரைக்காயர் காலம் தொடங்கி வகித்து வந்த அரசுப் பதவிக்குரிய பெரியதம்பி என்ற பட்டத்துடன் தொடர்ந்து அழைக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். இந்த நிலை சேதுபதி அரசர்களால் நியமிக்கப்பட்ட வள்ளல் சீதக்காதி மரைக்காயர் காலம் வரை இருந்து வந்தது. அரசர் கிழவன் சேதுபதி, சீதக்காதி மரைக்காயருக்கு இந்தப்பகுதியில் வர்த்தக வரி வசூலிப்பது, முத்துக் குளித்தல், கடல் வழி பண்டமாற்று, கடல்வணிகக் கட்டுப்பாடு, கடலோர எல்லைகளைக் கண்காணித்துப் பாதுகாப்பது போன்ற கூடுதல் பொறுப்புகளையும் வழங்கி, விஜய இரகுநாத பெரியதம்பி என்ற பட்டத்தையும் வழங்கி இருக்கிறார். போர்த்துக்கீசிய ஆவணங்களில் கீழக்கரை துறைமுகப் பொறுப்பில் இருந்த மரைக்காயர்கள் அனைவரையுமே முதலாம், இரண்டாம், மூன்றாம் பெரியதம்பி என்று குறிப்பிட்டு வள்ளல் சீதக்காதி இன்னாரெனக் குறிப்பிடாமல் வரலாற்றுக் குழப்பத்தை விளைவித்து விட்டனர்.
1537 ஆம் ஆண்டு குஞ்சாலி மரைக்காயர் படைக்கும், போர்த்துகீயர்களுக்கும் போர் நடைபெற்ற வேதாளை நகரில், மீண்டும் கொல்லம் 863 (கி.பி. 1687) ஆம் ஆண்டு வள்ளல் சீதக்காதி மரைக்காயரின் மூத்த சகோதரர் மலிக் சேய்ஹ் இப்ராஹீம் மரைக்காயர், கிழவன் சேதுபதி அரசரின் படைத் தளபதியாக, பாம்பன் கால்வாய் நீர் வழி கண்காணிப்புப் பொறுப்பில் இருந்த சூழலில் போர்த்துக்கீசியர்களுடன் நடைபெற்ற போரில் சமர் புரிந்து, குடல் சரிந்து வீர மரணம் அடைந்தார் என்ற செய்தியின் மூலம் கீழக்கரைப் பகுதி வர்த்தகர்களும், மக்களும் நூறாண்டுகளுக்கும் மேலாக போர்த்துக்கீசிய மற்றும் டச்சுக்காரர்களான பரங்கியப் படைகளால் எத்தகைய துன்பம் அடைந்திருக்கிறார்கள் என்பதை உணர முடிகிறது, போர்த்துக்கீசியர்களின் ஆதிக்க சூழலை சீதக்காதி மரைக்காயர் சேதுபதி அரசரின் உதவியுடன் கையாண்ட விதத்தின் மூலம் அவரது ஆளுமையும் திறமையும் வெளிப்படுகிறது.
சீதக்காதி மரைக்காயர் மறைந்து ஏறக்குறைய 320 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும், அவரது புகழ் இன்னும் சுடர்விட்டு எரிந்து கொண்டிருப்பதே அவர் வாழ்ந்த சீர்மிகு வாழ்வுக்கு சாட்சியாகக் கொள்ளலாம். எல்லையற்ற ஈகைக் குணம் கொண்டு, தான் சார்ந்த பகுதி மக்களின் காவலனாகத் திகழ்ந்து, சமூக நல்லிணக்கம் காத்த நெறியாளராக, சேது சீமையின் ரீஜண்ட்டாக போர்ச்சுக்கீசியர்களுடன் மூர்க்கமாக மோதி நாடு காத்த வீரத்தின் திலகமாக, தமிழ்ப் புலவர்களை ஊக்குவித்த தமிழ் ஆர்வலராக , வள்ளுவம் கூறும் அனைத்து நல் அறங்களுக்கும் குறியீடாக விளங்கியவர் வள்ளல் சீதக்காதி மரைக்காயர். அவர் வாழ்ந்த வாழ்வின் எச்சமாக சிதைந்த நிலையில் கீழக்கரை தென்கிழக்குப் பகுதியில் கடலோரத்தில் அவரின் வசந்த மாடம் இன்றும் இருக்கிறது. சிதிலடைந்த நிலையில் இருக்கும் இந்த மாடம் தற்போது சுங்கத்துறையால் கையகப்படுத்தப்பட்டிருக்கிறது. எக்காலத்துக்கும் வரலாற்று சாட்சியாக கி.பி 1680 களில் நடுத்தெருவில் அவர் நிர்மாணித்த பெரிய குத்பா பள்ளி விளங்குகிறது, காதில் கடுக்கனுடன், மரைக்கயர் பச்சை என்ற மரகத கல் வைத்த கணையாழி அணிந்து, யானைதந்த பிடி வைத்த வாள் கொண்டு வீரச் செருக்குடன் பரங்கியர் படைகளை நடுங்க வைத்த சீதக்காதி மரைக்காயரை குறித்த வரலாறு சரியான முறையில் ஆவணப்படுத்தப்படவில்லை என்பதே இன்றைய நிலை.
வேதாளையில் வீரமரணம் அடைந்த சீதக்காதி மரைக்காயரின் சகோதரர் மலிக் சேய்ஹ் இப்ராஹீம் மரைக்காயர் அவர்களின் கல்லறை வேதாளை கூரைப் பள்ளியில் இருக்கிறது. இவரின் மூதாதையரான மலிக் சுங்கம் கட்டளை செய்யது (எ) செல்லக்குட்டி மரைக்காயர், முளம்மர் (எ) மழ மரைக்காயர் முதல் இவரின் பாட்டனார் மலிக் மஹ்மூது நெய்னா (எ) மாமு நெய்னா மரைக்காயர், தந்தை மலிக் பெரியதம்பி மரைக்காயர் வரையிலான வம்சாவழிப் பெயர்கள் இவரது கபுரின் மீஜான் கல்லில் எழுதப்பட்டிருப்பதைக் காணலாம். மீஜான் கல்லில் பொறிக்கப்பட்ட இந்த வம்சாவழிக் குறிப்பை 1851 ஆம் ஆண்டு சீதக்காதி மரைக்காயர் வாரிசுகளால் எழுதப்பட்ட ஜாபிதாவுடன் ஒப்பிடும் போது, சீதக்காதி மரைக்காயரின் பாட்டனாரான மாமு நெய்னா மரைக்காயரின் பாட்டனார் பெயர் சேகுகண்டு மரைக்காயர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது சற்று குழப்பத்தை ஏற்படுத்துகிறது. எனினும் சீதக்காதியின் பாட்டனார் பெயர் மஹ்மூது நெய்னா என்ற மாமு நெய்னா மரைக்காயர் என்பது வேதாளை கல்வெட்டிலும், வம்சாவழி ஜாபிதாவிலும் குறிப்பிடப்பட்டு உறுதிப்படுத்தப்படுகிறது. மேலும் நாகலாபுரம் உமறு கத்தாப் புலவர் தான் வடித்த சீதக்காதி திருமண வாழ்த்தில் கூறும் கருப்பாறு காவலர் என்பது பாண்டிய மன்னர்களால் தென் தமிழக கடலாதிக்கத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்ட சுங்கம் கட்டளை செய்யது என்ற சேகுகண்டு மரைக்காயராக இருக்கலாம் என்றும், வன்ணப்பரிமளப் புலவர் இயற்றிய ஆயிரம் மசாலா என்ற புராணத்தில் குறிப்பிடப்படும் அதன் கொடை நாயகராகிய கறுப்பாறு காவலர் என்பவர் 16 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்த சீதக்காதி மரைக்காயரின் பாட்டனார் மலிக் மஹ்மூது நெய்னா என்ற மாமு நெய்னா மரைக்காயர் ஆக இருக்கலாம் என்றும் கருத முடிகிறது.
கி.பி 1650 ஆம் ஆண்டு, மதுரை நாயக்கர் பேரரசின் தென்கடல்பகுதி துறைமுக நகரமான கீழக்கரையின் வணிக வளம் உலகெங்கும் புகழுச்சியில் இருந்த காலம், மன்னர் திருமலை நாயக்கர் ஆட்சியின் கீழ் இருந்த இந்தப் பகுதியில் போர்த்துக்கீசியர்கள் தங்கள் மேலாதிக்கத்தை வீம்புடன் செயல்படுத்தி மரைக்காயர் வணிகர்களை அச்சுறுத்திய போர்ச் சூழல், கீழக்கரையில் கறுப்பாறு காவலர் என்ற கடல் பகுதி வர்த்தகத்துக்கு 6 தலைமுறையாக இங்கே பொறுப்பாளர்களாக இருந்த, தென்தமிழகத்தின் தலைசிறந்த கடல் வாணிபக் குடும்பமும் செல்வாக்கு மிக்க செல்வக் குடும்பத்தைச் சேர்ந்தவருமான பெரிய தம்பி மரைக்காயர் அவர்களின் மகனாக செய்கு அப்துல் காதிறு மரைக்காயர் என்ற சீதக்காதி மரைக்காயர் அவர்கள் கீழக்கரை நடுத்தெருப் பகுதியில் கல்வீட்டில் (தற்போதைய கல்வீட்டுத் தெரு) பிறந்தார்கள்.
சீதக்காதி மரைக்காயரின் வாரிசுகளில் 10, 11 மற்றும் 12 ஆம் தலைமுறையினர் இன்று நடுத்தெருவில் வாழ்ந்து வருவதைக் காண முடிகிறது, இன்று ஒரு நெருக்கமான குடியிருப்பாக மாறிப்போன கல்லூட்டு முடுக்கு என்றழைக்கப்படும் கல்வீட்டுத் தெரு, அதையொட்டிய மரைக்காயர் அப்பா குடும்பத்தினருக்கு சேர்ந்த காணிகள், அதற்கு எதிரில் இருக்கும் குத்பா பள்ளி வளாகம், மையவாடி ஆகியவை அனைத்தும் சீதக்காதி அவர்களுக்கு சொந்தமான நிலமாக இருக்கலாம் என்றும், காலப்போக்கில் அது அவரது வாரிசுகளால் விற்கப்பட்டிருக்கலாம் என்றும் கருத முடிகிறது, பெரிய குத்பா பள்ளி வளாகம் முழுதும் வள்ளல் சீதக்காதி மரைக்காயர் குடும்பத்தாரின் பண்டக சாலை இருந்த இடம் என்றும் செய்திகள் உண்டு. நடுத்தெரு, கல்வீட்டுப் பகுதியில் இருந்த வள்ளல் சீதக்காதி மரைக்காயரின் மாளிகைக்கு முன்பும் ஒரு பெரிய ஆசாரம் (சதுக்கை) இருந்ததாகவும் , பார்வையாளர்கள் சீதக்காதி மரைக்காயரை சந்திக்க இந்த ஆசாரத்தில் அமர்ந்து காத்திருப்பார்கள் என்றும் சீதக்காதி நொண்டி நாடகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
சீதக்காதி மரைக்காயரின் பேரர் கப்ப நெய்னா மரைக்காயர், அவருடைய பேரர் பட்டனசாமி முத்தலிஃப் வம்சவழியில் சீதக்காதி மரைக்காயர் அவர்களின் மகள் முத்து மீரா நாச்சியின் மரபினராக, மரைக்காயர் அப்பா வீடு, முத்தலிஃப் காக்கா வீடு என்ற அடைமொழியுடன் இன்றும் அழைக்கப்படுகிறார்கள். சீதக்காதி மரைக்காயரின் மகள் பெரிய மீரா நாச்சி வழியில் வள்ளலின் 8 ஆவது தலைமுறையில் வந்தவர்தான் நடுத்தெருவில் பிறந்து, இலங்கையில் மறைந்த ஆசாரக் கோவை தந்த அப்துல் மஜீது புலவர் என்று வரலாற்றின் மூலமும், 1851 ஆம் ஆண்டு வள்ளலின் குடும்பத்தினரால் எழுதப்பட்டு பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த வம்சாவழி ஜாபிதா முலமும் அறிய முடிகிறது.
கடையேழு வள்ளல்களுக்கு பிறகு எட்டாம் வள்ளலாக அறியப்பட்டவர் வள்ளல் சீதக்காதி. இராமநாதபுரத்தை ஆண்ட கிழவன் சேதுபதி என்றழைக்கப்படும் ராஜா விஜய இரகுநாதத் தேவருக்கும், இவருக்கும் இடையிலான தோழமை சமய நல்லிணக்கத்திற்குத் தக்கதோர் எடுத்துக்காட்டாக அந்நாளில் திகழ்ந்தது. அரபிக்கடல், கோரமண்டல் கடல் பகுதி முதல் வங்காளம் வரையிலுமான (கொல்லம், குட்ட நாடு, மலப்புரம், மராட்டியம், கர்நாடகம், குடகு மற்றும் துலு நாடு என்ற கோவா பகுதிகள், பல்லவம், கலிங்கம் என்ற ஒரிசா , காம்பீலி, திரிகூடம், பப்பாவம், டில்லி, ஆக்ரா, அயோத்தி, பாஞ்சாலம் உள்ளடக்கிய உத்திரபிரதேசம் மற்றும் உத்திரகாண்ட் பகுதிகள், கீழைக்கடல் பகுதிகளான காம்போஜம் (கம்போடியா), சைக்கோன் (வியட்நாம்), சாவகம் (ஜாவா), சுவர்ணதீபம் (சுமத்ரா), கடாரம் மற்றும் மலாக்கயிஸ் (மலேசியா), ஈழம், கண்டி மற்றும் சிங்களம் (ஸ்ரீலங்கா), முச்சீனம் (சீனா) அக்ஸைன் (பர்மா உள்ளிட்ட இந்தோ சீன நாடுகள்) மற்றும், மக்கம் (அரேபிய நாடுகள்) ,கிரீஸ், பிரான்ஸ்லாந்த் (ஃப்ரன்ஸ்) ஆகிய மேலை நாடுகளிலும் சீதக்காதி மரைக்காயர் கப்பல்கள் மூலம் வணிகம் புரிந்து பெரும் செல்வாக்கு கொண்டிருந்தமையால் மொகலாயர்கள் மற்றும் கர்னாடக நவாப்கள் என்ற ஆற்காடு நவாபுகளும் சீதக்காதி மரைக்காயரின்பால் பெரும் மதிப்பு வைத்திருந்தனர், மேலும் இலங்கையில் விளையும் கொட்டைப் பாக்குகள் அனைத்தையும் கொள்முதல் செய்யும் உரிமையையும் பெற்றிருந்தார்.
மன்னார் வளைகுடா மற்றும் இலங்கைக் கடலில் சங்கு மற்றும் முத்துக் குளிப்பு, கப்பல் வாணிபம், சுங்க வசூல், கடலோரப் பாதுகாப்பு என அனைத்தும் சீதக்காதி மரைக்காயரின் ஆதிக்கத்தில் இருந்தது. அப்பொழுது இங்கு வியாபாரம் மட்டுமே செய்து கொண்டிருந்த ஆங்கிலேய கிழக்கியக் கம்பெனியர் சீதக்காதி மரைக்காயரின் வர்த்தகத் திறமையையும், செல்வாக்கையும் கண்டு வியந்து, பெரிதும் மதித்து அவருடன் மிளகு மற்றும் இதர பொருட்களை கொள்முதல் செய்து கொள்ளவும், மேலும் பல வியாபாரங்களுக்கும் ஒப்பந்தம் செய்து கொண்டனர். சீதக்காதி திருமண வாழ்த்தில் இடம்பெறும் பாடல்கள் மூலம் சீதக்காதி மரைக்காயரின் நாடுகள் கடந்த வணிக ஆதிக்கத்தை அறியலாம்.
1680 களில் திருச்சியை தலை நகராகக் கொண்டு ஆண்டு வந்த மன்னர் சொக்கநாத நாயக்கருக்கு எதிராக பாளையக்காரர்கள் கிளர்ந்தெழுந்த நிலையில், சேதுபதிகளின் உதவியால் கிளர்ச்சி முறியடிக்கப்பட்டது, அந்த நேரத்தில் சீதக்காதி மரைக்காயரின் ராஜதந்திர யுக்திகள் முறியடிப்புக்கு பெரிதும் பயன்பட்டது. மேலும் மைசூர் படைகள் மதுரையைக் கைப்பற்ற வந்த சமயத்திலும் சீதக்காதி மரைக்காயரின் அணுகுமுறைகள் மூலம் முறியடிக்கப்பட்டது.
மேலும் 1690களில் நாயக்கர் அரசி ராணி மங்கம்மாள் ஆட்சிக் காலத்தில் சேதுபதி சீமையை கிழவன் சேதுபதி சுதந்திர சமஸ்தானமாக அறிவித்து, நாயக்கர் ஆட்சியின் கீழிருந்த நிலையை விலக்கிக் கொண்ட காலத்தில், சேதுபதிகளின் பாதுகாப்புக் காரணங்களுக்காக போகலூரில் இருந்த சேதுபதி மன்னர் கோட்டையை இராமநாதபுரத்திற்கு மாற்றியதில் பெரும் பங்கு வகித்தவர் வள்ளல் சீதக்காதி. இராமலிங்க விலாசம் என்ற தர்பார் மண்டபத்தை அரண்மனைக்குள் அமைக்க யோசனை தந்தவர், சீதக்காதி மரைக்காயரின் அலுவல்களுக்காக இராமநாதபுரம் அரண்மனைக்குள் சின்ன அரண்மனை என்ற ஒரு மாளிகையை அரசர் நிர்மானிக்க உத்தரவிட்டார். சீதக்காதி நொண்டி நாடகத்தில், ஒடுங்காபுலி முதலில் சீதக்காதியைத் தேடி இராமநாதபுரம் அரண்மனைக்குச் சென்று, அங்கு அவரில்லை, கீழக்கரையில் இருப்பதாக செய்தி சொன்னதால் அவன் கீழக்கரையை நோக்கி வந்ததாகவும் அந்தப் பாடல் குறிப்பிடுகிறது. இதன் மூலம் சீதக்காதி மரைக்காயர் இராமநாதபுரம் அரண்மனையிலேயே பெரும்பாலும் அலுவல்கள் காரணமாக வசித்திருக்கிறார் என்றே கருத முடிகிறது..
தலைமலைக் கண்ட தேவர், அழகிய சிற்றம்பலக் கவிராயர், படிக்காசுத் தம்பிரான் முதலான தமிழ்ப் புலவர் பெருமக்களுடன் நெருங்கிப் பழகி அவர்களின் நன்மதிப்பைப் பெற்றவராகவும், அண்ணல் நபியின் புகழ்பாடும் சீறாப்புராணக் காப்பியத்தை உமறுப்புலவர் இயற்ற ஆதரவும், உதவியும் நல்கியவராகவும் இருந்திருக்கிறார். சீறாவின் கொடை நாயகரான பரங்கிப்பேட்டையைச் சார்ந்த அபுல்காசிம் மரைக்காயர் என்பவர் சீதக்காதி வள்ளலின் நண்பராகவோ, நிதி மற்றும் நிர்வாகத்துக்கான பொறுப்பாளராகவோ அல்லது வள்ளல் குடும்பத்தின் பொக்கிஷதாரராகவோ இருக்கலாம் அல்லது வள்ளலின் வணிகக் கூட்டாளியாகக் கூட இருக்கலாம் என கருத்துகள் நிலவுகிறது, அவர் கீழக்கரையை சார்ந்தவர்தான் என்ற கருத்து உறுதிப்படுகிறது, அதற்கான ஆதாரமாக சீறாபுராணத்தில் உமறுப்புலவர் வகுதை அபுல்காசீம் மரைக்காயர் என பலமுறை குறிப்பிடுகிறார். அதுமட்டுமின்றி வைகையம்பதிக்கு வேந்தன் என்றும் குறிப்பிடுவதால் வகுதை மற்றும் வைகயம்பதி என்பதும் கீழக்கரையை குறிக்கும் சொல்லாக தெளிவுற உறுதியானதாலும், சீறாபுராணம் கி.பி. 1665 ஆம் ஆண்டு கீழக்கரையில் சீதக்காதி மரைக்காயரின் அமைச்சரான அபுல்காசீம் மரைக்காயர் முன்னிலையில் அரங்கேற்றப்பட்டதாகவும், பன்னூலாசிரியர் திரு. கா.சு. பிள்ளை தனது தமிழ் இலக்கிய வராலாறு – 2 ஆம் பாகத்தில் குறிப்பிடுவதாலும், கொடைநாயகர் அபுல்காசீம் மரைக்காயர் பரங்கிப்பேட்டையைச் சேர்ந்தவர் என பதிவிடுவது நகைப்புக்குரியதாகிறது.
மாதிஹ் ரசூல் இமாம் சதக்கத்துல்லா அப்பா அவர்களின் மேல் அளவற்ற பாசமும் மரியாதையும் கொண்டிருந்தவர் மட்டுமின்றி, அவர்களது அறிவுரைகளை என்றும் ஏற்று நடப்பவராகவும், அப்பா அவர்களது வழிகாட்டுதலின் படிதான் பெரிய குத்பா பள்ளியை வள்ளல் சீதக்காதி கட்டத் துவங்கினார். கீழக்கரை பெரிய குத்பா பள்ளியை நிர்மாணிக்க சீதக்காதி மரைக்காயரின் தந்தையாரான பெரியதம்பி மரைக்காயர் காலத்தில் இமாம் மஹ்தூம் சின்னீனா லெப்பை ஆலிம் அவர்களின் வேண்டுகோள்படி திட்டமிடப்பட்டதாகவும் சில வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். சின்னெய்னா லெப்பை ஆலிம் கீழக்கரை பழைய குத்பாபள்ளி தெருவில் அக்காலத்தில் சீதக்காதி மரைக்காயரின் முன்னோர்களால் நடத்தப்பட்டு வந்த தாருல் உலும் என்ற அரபி மத்ரஸவின் தலைமை ஆசிரியராக பணியாற்றியவர்.
சீதக்காதி மரைக்காயரின் சகோதரரான பட்டத்து மரைக்காயரின் (முஹம்மது அப்துல் காதிறு மரைக்காயர்) மகன் அபூபக்கர் மரைக்காயர் அவர்கள் சதக்கத்துல்லா அப்பாவின் மகள் சாரா உம்மாவை மணம் முடித்ததாகவும், இவர்களின் புதல்வர்களான வள்ளல் லெப்பை நெய்னா மரைக்காயர் மற்றும் அவ்வாகாறு என்ற அப்துல் காதிறு மரைக்காயர் ஆகியோர்கள் தமது மூதாதையர் என்றும் வரலாற்று ஆய்வாளர் எம். இத்ரீஸ் மரைக்காயர் தனது கீர்த்திமிகும் கீழக்கரை நூலில் குறிப்பிடுகிறார். 1851 ஆம் ஆண்டு கிடைக்கப்பெற்ற வம்சாவழி ஜாபிதாவில், சீதக்காதியின் இளவல் பெயர் செய்யது லெவ்வை நெய்னா என்ற பட்டத்து மரைக்காயர் என்றும், அவர்களின் வாரிசு குறித்த செய்திகள் எதுவும் கிட்டவில்லை எனவும் கவிஞர் ச.சி.நெ. அப்துல் ஹக்கீம், ச.சி. நெ.அப்துற் ரஸாக் ஆகியோர் எழுதிய சேது நாட்டு பெரியதம்பி நூலின் மூலம் தெரிவிக்கின்றனர். சீதக்காதி நொண்டி நாடகத்தில் வரும் மாமு நெய்னா பிள்ளை என்பவர் சீதக்காதி மரைக்காயரின் சிறிய தகப்பனார் மீராப்பிள்ளையின் மகன் என்றும், வள்ளலின் மகள் முத்து மீரா நாச்சியை மணம் முடித்தவர் என்றும் அறிய முடிகிறது.
17 ஆம் நூற்றாண்டில் 1675 ஆம் ஆண்டு தொடங்கி 1682 வரை 7 வருடங்களாக தொடர்ந்து சேது சீமையில் ஏற்பட்ட கடும் பஞ்ச காலத்தில் தனது தானியக் களஞ்சியத்தில் சேமிக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளை மக்களுக்கு வாரி இறைத்த, கடல் வாணிபத்தில் தாம் ஈட்டிய பெருமளவிலான செல்வத்தை மக்களுக்கு கணக்கின்றி வாரிக் கொடுத்த செந்தமிழ் வள்ளலாகச் சீதக்காதி திகழ்ந்தார். இதனைப் புகழ்ந்து படிக்காசுப்புலவர் கீழ்கண்ட பாடலை பாடியிருக்கிறார் .
ஓர்தட்டி லேபொன்னு மோர்தட்டி லேநெல்லு மொக்கவிற்குங்
கார்தட் டியபஞ்ச காலத்தி லேதங்கள் காரியப்பேர்
ஆர்தட்டி னுந்தட்டு வாராம லேயென்ன தானத்துக்கு
மார்தட் டியதுரை மால்சீதக் காதி வரோதயனே.
மேலும் செய்தக்காதி நொண்டி நாடகம் மற்றும் உமர் கத்தாப் புலவர் எழுதிய செய்தக்காதி மரைக்காயர் திருமண வாழ்த்து என்ற இரண்டு இசுலாமியச் சிற்றிலக்கியங்கள் இன்றைக்கும் சீதக்காதியின் புகழ் பாடுவனவாக நமக்குக் கிடைக்கின்றன. படிக்காசு தம்பிரான் புலவர் பாடிய இன்னுமொரு பாடலில் சீதக்காதி வான்புகழ் வள்ளல்தன்மையை தெளிவுற வரையறுக்கிறார்
காய்ந்து சிவந்தது சூரிய காந்தி கலவியிலே
தோய்ந்து சிவந்தது மின்னார் நெடுங்கண்க டொல்பல நூல்
ஆய்ந்து சிவந்தது பாவாணர் நெஞ்ச மனுதினமும்
ஈந்து சிவந்தது மால்சீதக் காதி யிருகரமே…
சீதக்காதியின் மறைவுக்குப் பின்னர் செத்தும் கொடை கொடுத்தார் சீதக்காதி என்றதோர் சொல்வழக்கு தமிழகத்திலே இன்றும் நின்று நிலவுகின்றமையே அவரின் வள்ளல் தன்மைக்குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டாகும். படிக்காசுத் தம்பிரானின் கீழ்க்கண்ட இரங்கற்பா , தமிழ் புலவர்களுக்கும் சீதக்காதி மரைக்காயருக்கும் இருந்த உறவினை நமக்குத் தெளிவாகப் புலப்படுத்தும்.
மறந்தா கிலும் அரைக் காசும் கொடாத மாந்தர் மண்மேல்
இறந்தா வதென்ன! இருந்தா வதென்ன! இறந்து விண்போய்ச்
சிறந்தா ளுங்கா யல்துரை சீதக்காதி திரும்பி வந்து
பிறந்தா லொழியப் புலவோர் தமக்குப் பிழைப்பில் லையே..
அலிபாபாவும் 40 திருடர்களும் திரைப்படத்தில் பானுமதி பாடிய "அன்பினாலே ஆளவந்த அழகு பூபதி அமீர் பூபதி" பாடலின் சரணத்தில் "சிந்தை தன்னை கவர்ந்து கொண்ட சீதக்காதியே..." என்ற வரிகள் வருவதைக் கேட்டிருப்போம், 1956 ஆம் ஆண்டு டி.ஆர். சுந்தரம் இயக்கி, எம்.ஜி.ஆர், பானுமதி ஆகியோர் நடிப்பில் தென்னிந்தியாவில் முதல் முழு ஈஸ்ட்மெண்ட் கலரில் வெளிவந்த திரைப்படம்தான் அலிபாபாவும் 40 திருடர்களும். இதன் பாடலாசிரியர் மருதகாசி அவர்களுக்கும், சீதக்காதிக்கும் என்ன தொடர்பு என ஆராய்ந்ததில் இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்துக்கும் பல்லவி அமைத்துக் கொடுத்து உதவியர், எழுத்தாளரும், கவிஞரும், சுதந்திரப் போராட்ட வீரரும், வள்ளல் சீதக்காதி வரலாறு என்ற நூலை எழுதியவருமான மறைந்த கவி. கா.மு. சரீஃப் அவர்கள். இந்தப் பாடலில் விந்தை ஒன்றும் பொதிந்திருப்பதைக் காணலாம். 8 ஆம் நூற்றாண்டில் படைக்கப்பட்ட அரேபிய இலக்கியக் காவியமான அலிபாபா கதையை தழுவி எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தில் 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சீதக்காதி மரைக்காயரின் புகழைப் பறைசாற்றிய பின் வரலாற்றுப் பாத்திரத்தை முன் வரலாற்று கதைப் பாடலில் புகுத்தி கவி.கா.மு சரீஃப் நவீனம் நிகழ்த்தியிருப்பார்.
வள்ளல் சீதக்காதியின் வாழ்க்கை குறித்து பல நூல்கள் வெளிவந்திருக்கிறது. குறிப்பாக டாக்டர் ஹூசைன் நைனார் எழுதிய சீதக்காதி வள்ளல்., கவி. கா.மு. ஷரீஃப் எழுதிய வள்ளல் சீதக்காதி வரலாறு, கேப்ட்டன் அமீர் அலி எழுதிய வள்ளல் சீதக்காதியின் வாழ்வும் காலமும், டாக்டர் எஸ்.எம். கமால் எழுதிய செந்தமிழ் வள்ளல் சீதக்காதி, பாவலர் உசேன் எழுதிய செந்தமிழ் வள்ளல் சீதக்காதி அகப்பொருள் கோவை, டாக்டர் எஸ்.எம்.ஏ. காதர் எழுதிய சீதக்காதி பிள்ளைத் தமிழ் ,கவிஞர் ச.சி. நெ, அப்துர் ரஸாக், கவிஞர் ச.சி. நெ. அப்துல் ஹக்கீம் ஆகியோர் எழுதிய சேது நாட்டு பெரியதம்பி வள்ளல் சீதக்காதி ஆகியவை இதில் குறிப்பிடத்தக்கவை..
பஞ்சத்தில் சேதுமண் பட்டினி நோயில் பரிதவிக்க
அஞ்சற்க என்றே கரத்தால் படியை அளந்த வள்ளல்…
என்ற உசேன் பாவலரின் பாடலுக்கேற்ப தனது ஈகை குணத்தாலும், தமிழ்ப் பற்றாலும் புகழோங்கியவராகவும், பெரும் வணிகராகவும், சமூக நல்லிணக்கத்தின் சிகரமாகவும், வீரத்தின் பிறப்பிடமாகவும் திகழ்ந்த வள்ளல் சீதக்காதி மரைக்காயர் அவர்கள் தனது 48 ஆவது வயதில் கி.பி.1698 ஆம் ஆண்டு இவ்வுலகைவிட்டு மறைந்தார், வள்ளலின் பூத உடல் நடுத்தெரு குத்பா பள்ளியில் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
18 ஆம் நூற்றாண்டில் கீழக்கரையில் வாழ்ந்த புலவர் பெருமக்களும் கூட சீதக்காதி வள்ளலின் வரலாற்றினை விரிவாகப் பதிவு செய்யாமல் போனது ஏன் என்று அறிய முடியவில்லை. 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் டாக்டர் ஹூசைன் நெய்னார் எழுதிய வள்ளல் சீதக்காதி என்ற நூல் வெளியாகும் வரை சீதக்காதி நொண்டி நாடகமும், சீதக்காதி திருமண வாழ்த்தும், படிக்காசு தம்பிரான் புலவர் எழுதிய சரம கவிகளுமே வள்ளளின் வாழ்வு குறித்து பதிவு செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- எஸ்.மஹ்மூது நெய்னா