பண்டைத் தமிழர்களின் வாழ்வில் திருமணம் என்பது ஆண் - பெண் ஒன்றிணையும் ஒரு முக்கியச் சடங்கின் நிகழ்வாகும். ஒரு மனிதன் அவன் வாழும் இனக்குடியிலிருந்து முழுமனிதன் என்னும் நிலையைப் பெறவேண்டுமெனில், அது திருமணத்தின் மூலமாகவே நிறைவேறுகின்றது. அதனால்தான் இவர்களின் குடிமரபுகளின்படி, திருமணம் ஆனவர்களுக்கு மட்டுமே நடுகல் நடும் மரபும் வழக்கமும் இருந்து வருகின்றன. தமிழரின் தொன்மையான நடுகல் வழிபாட்டை உயிர்ப்புடன் இன்றுவரை வைத்திருக்கிறார்கள். திருமணம் ஆகாமல் ஒருவர் இறந்து விட்டாலும் சடங்குகள் எதுவும் செய்யாமல் புதைத்தோ எரித்தோ விடுகின்றனர். இங்குத் திருமணம் என்பது சமூக உயர்விற்கு வழிவகுக்கும் பண்பாட்டு எச்சமாக மிளிர்கின்றது. “மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்” என்ற (குறள்:942) திருக்குறளின் மூலம், ஒருவர் முதலில் உண்ட உணவு செரித்ததை அறிந்து உண்டால், உடலுக்கு மருந்தும் தேவையில்லை என்று திருவள்ளுவரும் மேற்கூறியதன் சுருக்கமாக “மீதூண் விரும்பேல்” என்று (ஆத்திசூடி:90) பிற்கால ஒளவையாரும் உணவின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறுகின்றனர். ஒரு மனிதன் உயிர்வாழ உணவும் நீரும் மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். அதேபோல், ஒரு மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரையில் நீரும் நெருப்பும் உணவும் சடங்குகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அவ்வகையில், கொங்கு நாட்டில் அருந்ததியர் (சக்கிலியர்) இனக்குடியினரின் “சேட்டுக்கழித்தல்” என்னும் சடங்கியல் நிகழ்வும் அதனுடன் தொடர்புடைய “பள்ளத்துப் பொங்கல்” என்ற உணவின் தன்மைப்பற்றியும் இவ்வாய்வுக் கட்டுரையில் காணலாம்.pallathu pongalஐந்திணை தொழிற்குடியினர்

தமிழ்நாட்டில் சங்ககாலம் தொட்டே வாழ்ந்துவரும் தொல்குடிகளில் சிறுகாரோடர், தோட்டி, உறைகாரர், பகடை, தோல் வினைஞர், தோல் துன்னர், செம்மார் மற்றும் பறம்பர் போன்ற இனக்குடிகளிலிருந்து தோன்றிய பிரிவினர் சக்கிலியர். இவர்கள் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடமும் தன் இனத்தைச் சேர்ந்தவர்களிடமும் தமிழும் தெலுங்கும் கலந்த ஒரு கலவையான தமிழ் மொழியினைப் பேசுகின்றனர். இம்மொழி இவர்களுக்கென்று தனித்துவமான பண்பாட்டு முறையில் காணப்படும் பழங்குடியினரின் மொழியைப் போலவே, சிறப்புத்தன்மை வாய்ந்ததாகும். இவற்றில் ஏறத்தாழ எண்பது விழுக்காட்டுச் சொற்கள் தமிழும் இருபது விழுக்காட்டுச் சொற்கள் கொச்சையான தெலுங்கு மொழிச் சொற்களும் காணப்படுகின்றன. அதேவேளை, எழுத்து வடிவம் இல்லாத் தொல்குடியினரின் மொழியாகும். ஒரு மொழி பலராலும் பேசப்படும் பொழுது, பேசும் இடம், செய்யும் தொழில் மற்றும் பேசுவோரின் இனம் ஆகியவற்றின் அடிப்படையில் அதன் இயல்புகள் வடிவங்களில் சில மாற்றங்கள் காணப்படுவது இயல்பு நிலையிலுள்ள ஒன்றாகும். சான்றாக, பழங்குடியினர் மொழிகள், வட்டாரமொழிகள் ஆகியவை ஒரு மொழியின் அடிப்படையில் ஓர் இனக்குழுவினரை இனவரையறை செய்தல் என்பது தவறான முடிகளைத் தரும். அதற்குச் சரியான சான்று சக்கிலியர் இனக்குழுவினர் ஆவர்.

சங்ககாலத்தில் தோல் தொடர்பான பணிகளைச் செய்துவந்த ஐந்திணையிலும் வாழ்ந்து வந்த தொழிற்குடியினரே சக்கிலியர் என்போர். இவர்கள் கங்கையும் கடாரமும் கொண்ட முதலாம் இராஜேந்திர சோழனின் ஆட்சிக்காலத்தில் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ரிஷபேஸ்வரர் கோயிலில் காணப்படும் கல்வெட்டின் சான்றுகள்படி, ஏறத்தாழ ஆயிரத்தி முப்பதாம் (1030) ஆண்டின் தொடக்கத்தில் அப்பகுதியில் வாழ்ந்து வந்துள்ளனர். அதேபோல், சக்கிலியர் என்னும் சொல்லும் முதன்முதலாக இக்கல்வெட்டில்தான் காணவும் கிடைக்கின்றது. சக்கிலியர் என்னும் சொல் நேரிடையாக ஒரு பிரிவினரைக் குறிக்கும் வகையிலும் குறிப்பாக இவர்கள் தோலில் செருப்புத்தைக்கும் தொழிற்குடியினர் என்பதையும் கல்வெட்டின் மூலம் அறியமுடிகின்றது.

சடங்குகள்

ஓர் இனக்குழுவினரது வாழ்வில் காணப்படும் தொன்றுதொட்டு நீண்டநெடிய ஓர் அறுபடாத இனவழிப் பண்பாடாகச் சடங்குகள் அமைகின்றன. ஏன்? எதற்கு? எப்படி? என்ற அடிப்படையில் கேள்வி எதுவும் இல்லாமல், வழிவழியாக முன்னோர்கள் செய்துவந்ததைப் பின்னால் வரும் சந்ததியினரும் கடைப்பிடித்து வருகின்றனர். இவர்கள் சடங்குகளைச் “சாங்கியம்” என்னும் வடமொழிச் சொல்லால் குறிக்கின்றனர். மானிடவியல் அறிஞர் பக்தவத்சல பாரதி (2002) சடங்கு என்பது நிகழ்த்தப்படுவது (ritual is performed); அழகியல் வெளிப்பாட்டுடன் ஓர் அதீதப் புலப்பாட்டினை வெளிப்படுத்துவது (aesthetically marked and weightened mode of communication). இதில் பரஸ்பர உறவுடைய இரண்டு கூறுகள் உண்டு. ஒன்று: சடங்கென்பது ஒன்றைச் செய்து இன்னொன்றைப் பெறுவதற்காக நிகழ்த்தப்படுவதாகும். இரண்டு: சடங்கென்பது ‘ஒன்றைச் செய்து இன்னொன்றை அடைவது’ (performance of something, to get another thing) என்னும் ஏற்பாடாக இருப்பதால் இதில் ‘நிகழ்த்தப்படுதல்’ அடிப்படையாக அமைகின்றது என்பார். அவ்வகையில், “சேட்டுக்கழித்தல்” என்னும் சடங்கியலும் ஒன்றை இழந்து, ஒன்றைப் பெறுவதற்குச் செய்யப்படும் சடங்காகும். அதேவேளை இதுபோன்று மறைமுகமாகச் செய்யும் சடங்குகளை மேனாள் பழங்குடியினர் ஆய்வு நடுவத்தின் இயக்குநர் சி.மகேசுவரன் (2023) “கமுக்கச் சடங்குகள்” என்பர்.

சேட்டுக்கழித்தல்

“சேட்டுக்கழித்தல்” சடங்கு என்பது ஓர் ஆணுக்கு மட்டுமே நிகழ்த்தப்படும் சடங்காகும். இதில், திருமணம் செய்து கொண்ட ஓர் ஆண் அல்லது திருமணம் செய்துகொள்ளும் வயதுள்ள ஓர் இளைஞர் மட்டுமே பங்கேற்கின்றனர். உடலும் உள்ளமும் தூய்மையாக இருக்கவேண்டும் என்பதன் அடிப்படையில் செயல்படுத்தும் சடங்காகவும் அதுமட்டுமின்றி, இனிமேல் இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபடவும் மாட்டேன் என்ற உறுதிமொழியோடு சத்தியம் செய்யும் சடங்காகவும் சக்கிலியர் பண்பாட்டில் இணைந்து காணப்படுகின்றன. ஓர் ஆண்மகன் நீண்ட நாட்களாகச் சரியாக உணவு எடுத்துக் கொள்ளாமல் கவலை கொண்டவனாகவும் உடல்நிலை சரியில்லாமல் பித்துப்பிடித்தவன் போலவும் காணப்படுவான். அவன் நாள்தோறும் உடல்நலம் மெலிந்து கொண்டு வருவதைப் பெற்றோர்கள் கவலை கொண்டு, அவனிடம் நீ எதாவது? தவறு செய்திருந்தால், சொல்லிவிடு என்று கேட்பார்கள். அவன் தன் பெற்றோர்களிடம் சொல்வதற்கு வெட்கப்பட்டு, எதுவும் சொல்லாமல் இருப்பான். வேறுவழியின்றி, அவனுடைய பெற்றோர்கள் ஊரிலுள்ள பெரியோர்களான ஊர்ப் பெரியதனக்காரர், கொத்துக்காரர், கோல்காரர் மற்றும் பகடையார் போன்றோர்களிடம் தன் மகனின் நிலையினை எடுத்துக் கூறுவார்கள். அவர்கள் நால்வரும் ஒன்றாக இணைந்து, இவனிடம் நடந்ததையெல்லாம் ஒன்றுவிடாமல் சொல்லிவிடு என்று மிரட்டியும் இல்லையெனில், அன்போடு கேட்டும் உண்மைத் தன்மையினைத் தெரிந்துக்கொள்கின்றனர். அதன்பின்னர் அவனின் பெற்றோர்களிடம் உங்கள் மகனுக்குச் “சேட்டுப்பிடித்து” உள்ளது. அதனை இறக்கினால் அவன் பழைய நிலைக்குத் திரும்புவான் என்றனர். இவர்களும் தன்மகனின் மேலுள்ள பாசத்தால், பூசைக்கு ஏற்பாடுகள் செய்யுங்கள் என்று ஒரு பெரிய தொகையினையும் வழங்குவார்கள். அவர்களும் பூசைக்குத் தேவையானவற்றை எல்லாம் தயார்செய்து, ஓரிரு நாளில் தகவல் கொடுப்பார்கள். இதனைத் தகவலாளி செங்கோட்டையன் மற்றும் கண்ணுப்பையன் மூலமாக அறிய முடிகிறது.

படையலுக்குரிய பொருட்கள்

கருப்பு நிறமுள்ள கெடாய்க்குட்டி, ஒரு கருப்புத்துண்டு, ஒரு சிகப்புத்துண்டு, ஐந்து புதுவேட்டித் துண்டு, மது வகையில் எதாவது ஒன்று, எலுமிச்சைப்பழம், கருகமணி, மாட்டு மூத்திரம் (கோமீயம்) அல்லது மஞ்சள் தண்ணீர், மாட்டுசாணி மற்றும் ஆவாரந்தழை ஆகியவற்றைத் தயார்நிலையில் வைத்துக்கொண்டு, பூசைக்குத் தேவையான பொருட்களுடன் நள்ளிரவில் பன்னிரண்டு மணிக்குமேல், ஊரின் எல்லை அல்லது சுடுகாட்டில் பூசை செய்ய முற்படுகின்றனர். இதில், வேறொருவரும் கலந்துக்கொள்ள அனுமதியில்லை. பண்டைத் தொல்குடிகளிடம் கள் என்பது முக்கியப் படையல் பொருட்களில் ஒன்றாகச் சங்ககாலம் முதல் சமகாலம் வரையிலும் சடங்குகளில் காணப்படுகின்றது. தமிழர்களின் வாழ்வியலை எடுத்துக்கூறும் இடங்களில் எல்லாம் பலவகையான பானங்களைக் குடிக்கும் பழக்கம் நீண்ட நாட்களாக அவர்களிடையே இருந்ததை அறியமுடிகின்றது. அதேசமயம், இன்று பெரும்பாலானோரிடையே தேநீர்க் குடிக்கும் பழக்கம் இருப்பதுபோல், மதுக்குடிக்கும் வழக்கமும் உணவு வகைகளில் ஒன்றாகவே இருந்துள்ளது. அதனால்தான் சக்கிலியரும் இன்று படையல் பொருட்களில் முக்கிய உணவாக கள் மற்றும் இறைச்சி வகைகள் இடம்பெறச் செய்கின்றனர்.

கெடாய் வெட்டுதல்

நள்ளிரவு நேரத்தில் ஐந்து நபர்கள் மட்டுமே அவ்விடத்திற்குச் சென்று, முதலில் கோல்காரர் ஏழு கன்னிமார் கற்சிலைகளைக் கிழக்குநோக்கி நட்டு வைத்து, அதன் எதிர்திசையில் ஒரு கருப்பசாமி கற்சிலை ஒன்றையும் நட்டு, கன்னிமார் கற்சிலைக்குச் சிவப்புத்துணி, கருகமணி, மஞ்சள் குங்குமம் ஆகியவற்றையும் எதிரிலுள்ள கருப்பசாமிக்குக் கருப்புத்துணியும் அணிவித்து மரியாதை செய்யும் வகையில் சடங்கின் தொடக்கம் நடைபெறுகின்றது. அதன்பின்னர், சேட்டுப்பிடித்து உள்ளவனை வடக்குநோக்கி அமரவைத்து, கெடாய்க்குட்டியைக் கொண்டுவந்து ஒரே வெட்டில் கொத்துக்காரர் வெட்டி, அதன் இரத்தத்தை அங்கிருந்த கன்னிமார் மற்றும் கருப்பசாமி ஆகியவற்றின்மீது தெளித்துவிட்டு, தலை மற்றும் கால்களை மட்டும் கருப்பசாமி அருகில் வைத்துவிட்டனர். பகடை கெடாய்க்குட்டியின் வாய்க்குள் ஒரு காலை மட்டும் எடுத்துச் சொருகி வைத்துவிட்டு, முண்டத்தை மட்டும் கோல்காரர் கையில் கொடுத்து, சமைத்து வருமாறும் கொத்துக்காரர் கூறினார். அவரும் தயார்நிலையில் கல்லடுப்பு மூட்டியும் வைத்திருந்தார். அஃதாவது, இங்குப் பொதுவாக இரத்தப்பலி என்பது ஆண் விலங்குகளை மட்டுமே பலியிட்டு வழிபடுவது தொல்குடிகள் மரபாக உள்ளன. பெண் எனப்படுபவள் உயிரின் இனப்பெருக்கத்திற்கு உரியவள் என்பதாலும் தொன்றுதொ   ட்டு தாய்வழிப் பண்பாட்டின் எச்சமாக இருப்பதாலும் பெண் விலங்குகளைப் பலியிடுவதைத் தவிர்க்கும் மரபை இவர்களிடமும் காண முடிகின்றது.

பள்ளத்துப் பொங்கல்

ஐவரும் கொண்டுசென்ற மதுவினைக் குடித்துவிட்டு. கொஞ்சம்நேரம் கழித்து, ஊரின் பெரியதனக்காரர் சேட்டு என்னும் மனநோய் பிடித்தவனை அழைத்து, கன்னிமார் கற்சிலைக்கு முன் உட்காரவைத்துச் சாணியைக் கீழேபோட்டு, வட்டவடிவில் குழிப்பறித்து அதில் மூத்திரத்தை ஊற்றி, ஆவாரந்தழையில் நனைத்து அவன் தலையில் அடித்து, நீ எந்த “முண்டகராளு” (விதவைப் பெண்) விடம் பாலியல் தொடர்பு வைத்துக்கொண்டாய் என்று கேட்டார். அவனும் கொஞ்சம் மதுபோதையில் எந்தக் கைம்பெண்ணிடம் இருந்தானோ அந்தப் பெண்ணின் பெயரை மூன்று முறை சொல்கிறான். மறுபடியும் மாட்டு மூத்திரச் சாணியில் முக்கியெடுத்த ஆவாரந்தழையில் அடித்து ஒவ்வொரு முறையும் கேட்டார். அவனும் பதில்சொல்லிக் கொண்டே வந்தான். நால்வரும் ஒவ்வொருவராகக் கேட்டு, சேட்டு என்னும் தீட்டைப் போக்கினார். அஃதாவது, இங்குக் கணவனை இழந்த பெண்களிடம் பாலியல் தொடர்பு வைத்துக்கொள்வது தவறு என்பதைச் சுட்டிக்காட்டி ஆவாரந்தழையில் அடித்து இறங்குகின்றனர். அதேவேளையில் ஆவாரந்தழை என்பது இங்கு முன்னோரின் குலக்குறி என்றும் தகவலாளி பெருமாள் சன்னையன் கூறுகின்றார்.

கொஞ்சம் நேரம் கழித்து ஐவரும் அருகிலுள்ள கிணற்றிலோ, அமுத்துப்பைப்பிலோ குளித்துவிட்டு மீண்டும் சடங்கு நடக்கும் இடத்திற்கு, புதுவேட்டித் துண்டும் கட்டிக்கொண்டு வருகின்றனர். சூடம் ஏற்றி இனிமேல் இதுபோன்ற தவறை நான் ஒரு போதும் செய்யமாட்டேன் என்றும், ஒரு கைம்பெண்ணின் வாழ்வு கெடுமாறு எந்தவொரு செயலிலும் ஈடுபடமாட்டேன் என்றும் தரையில் விழுந்து கும்பிடுகிறான். அதன்பின்னர், அனைவரும் அங்குச் சமைத்து வைத்திருக்கும் ஆட்டுக்குட்டியின் கறியை சாங்கியத்திற்குக் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு, மீதியுள்ள உணவை மண்சட்டியுடன் தலையை மூன்றுமுறை சுற்றி உடைத்து எறிந்துவிட்டுத் திரும்பிப் பார்க்காமல், அவரவர் வீடுகளுக்குப் போய்ச் சேர்ந்து விடுகிறார்கள். மறுநாள் காலையில் தலையோடு தண்ணீர் வார்த்துக்கொண்டு, குலத்தெய்வக் கோயிலுக்குச் சென்றுவந்தால், அவனைப் பிடித்திருந்த சோம்பலும் மனநோயும் நீங்கி, எப்போதும் போலவே அவனும் சுறுசுறுப்பாக இருப்பான். இச்சடங்கானது முற்றிலும் நம்பிக்கையின் அடிப்படையில் செய்யப்படுவதாகும். இதனைச் சக்கிலியரின் வட்டார வழக்கில் “வக்கப் பொங்கல்” (பள்ளத்துப் பொங்கல்) என்று அழைக்கின்றனர். அஃதாவது, ஒருவன் நீண்ட நாட்களாக, உடல்நலம் சரியில்லாமல் பித்துப்பிடித்தவன் போல் இருந்தாலோ அல்லது விதவைப் பெண்களிடம் தகாதவுறவு வைத்துக்கொண்டு இருப்பது தெரியவந்தலோ, இவனுக்குச் சீக்கிரம் வக்கப்பொங்கல் வைக்கவேண்டும் என்று இன்றும் கேலியும் கிண்டலும் செய்யும் வழக்கம் இவர்களிடம் இன்றும் காணப்படுகின்றது.

கறுப்பு - சிவப்பு

மேற்கூறிய சடங்கில் கறுப்பு - சிவப்பு வண்ணங்களைப் பயன்படுத்தி உள்ளனர். இது, தமிழினக்குடிகள் இடையே மிக நீண்ட இலக்கிய மரபினைக் கொண்டு காணப்படுகின்றது. தொல்காப்பியரும் “கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள, நிலத்துரு உணர்த்தற்கும் உரிய என்ப” (தொல்.சொல்.855-856) என்பர். அதாவது, கறுப்புச் சிவப்பு என்பன கோபத்தை உணர்த்தும் சொற்களாகவும் வரும் என்பது தொல்காப்பிய இலக்கணமாகும். மேலும், தொ.பரமசிவன் (2001) “நிறங்கள் மனித உணர்வுகளைப் புலப்படுத்தும்” தன்மையுடையது என்பார். அதேபோல்தான், சிவப்பு வண்ணங்களில் உள்ள கன்னிமார் கற்சிலைகள் பெண்களின் குறியீடாகவும் - அதாவது, கோபத்தின் வெளிப்பாடாகவும் இருக்கின்றன. மேலும் கறுப்பு வண்ணம் என்பது ஆண்களின் குறியீடாகவும் இச்சடங்கில் காட்டப்பட்டுள்ளது. ஆணின் தவறைச் சரிசெய்யவே இங்கு ஆட்டின் கெடாய்க்குட்டியைப் பலியிட்டு அதன் இரத்தத்தைக் கன்னிமார் கற்சிலைகளின்மேல் தெளித்து, கோபத்தைக் குறைத்து, மன்னிப்பு கேட்கும் குறியீட்டின் வடிவமைப்பிலேயே சடங்கு நிகழ்த்தியுள்ளனர். இதேபோல்தான், “மாட்டுச்சாணம்” என்பது வளமையின் குறியீடு என்பதாலும் அதனை ஒரு வழிபாட்டுப் பொருளாகவும் பல்வேறு சுபநிகழ்வுகளிலும் மற்றும் துக்க நிகழ்வுகளிலும் பயன்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

“ஆவாரந்தழை” என்பது சக்கிலியர் இனக்குழுவினரின் குலக்குறியாகக் காணப்படுகின்றது. சக்கிலியர் ஒருவர் இறந்துவிட்டால், அவரது மனைவியின் தாலிக்கயிற்றை அறுத்துப் பசும்பால் வைத்துள்ள குவளையில் போட்டபின்பு, அதனைக் கொண்டு போய் மீண்டும் ஆவாரஞ்செடியில் கட்டி வைக்கின்றனர். மேலும், இறந்தவரின் உடலைச் சுடுகாட்டிலோ இடுகாட்டிலோ வைத்து, நீர்நிறைந்த மண் கலையத்துடன் பிணத்தை மூன்றுமுறை வலஞ்சுற்றி வரும்போது, இடக்கையில் கலயத்தைப் பிடித்துக்கொண்டு, வலக்கையால் ஆவாரந்தழையினைச் சுழற்றிக்கொண்டே, இறுதியில் கலையத்தைக் கீழேபோட்டு உடைத்து விடுவதோடு, ஆவாரந்தழையினைப் பிணத்தின் கால் மாட்டிலே வைத்து விடுகின்றனர். இங்கு ஆவாரஞ்செடி என்பது வளமையின் குறியீடு என்பதோடு இல்லாமல், வறட்சியான காலங்களில் வளர்வது போலவே, கணவன் இல்லாத காலத்திலும் வாழ்வது எப்படி என்பதையும் ஆவாரஞ்செடி எடுத்துக்காட்டுகின்றன.

முடிவுரை

தமிழ் இலக்கியங்களில் காணப்படும் ஒருதலைக் காமமாகிய கைக்கிளையும் பொருந்தாக் காமமாகிய பெருந்திணையும் போலவே, நிலம் சார்ந்த ஒழுக்கமான செயல் அல்ல என்பதை இங்கு நினைவூட்டும் வகையில் இச்சடங்கு அமைந்துள்ளது. இருப்பினும், சேட்டுக்கழித்தல் என்னும் சடங்கின் முக்கிய நோக்கம் திருமணம் செய்துகொண்டு முறையாகப் பாலுறவில் ஈடுபடவேண்டும் என்னும் கற்பு நெறியினை ஆணுக்கும் பெண்ணுக்கும் எடுத்துக்காட்டுகின்றது. அதுமட்டுமின்றி, கணவனை இழந்த பெண்களிடம் பாலியல் உறவு வைத்துக்கொள்வது தவறு என்பதையும் சுட்டிக்காட்டுவதோடு மட்டுமில்லாமல், கணவனை இழந்த பெண்ணின் குடும்பச் சூழலையும் கணவன் இல்லாமல் இவள் எப்படிக் கருவுற்றாள் என்னும் பழிச்சொல்லும் வந்துவிடக்கூடாது என்னும் உயர்ந்த நிலையில், அவளை முறையாகத் திருமணம் செய்துகொண்டு ஒழுக்க நெறியோடு வாழவேண்டும் என்ற அறிவுறுத்தலின்படி “சேட்டுக்கழித்தல் எனும் பள்ளத்துப் பொங்கல்” சடங்கு இடம் பெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

துணைபுரிந்த நூல்கள்

1.      பரமசிவன், தொ. 2002. “தெய்வங்களும் பண்பாட்டு அசைவுகளும்”, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை.

2.      …………, 2001. “பண்பாட்டு அசைவுகள்”, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்.

3.      பாரதி, பக்தவச்சல. 2002. “தமிழர் மானிடவியல்”, மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம்.

4.      ……………, 2021. “சங்ககாலத் தமிழர் உணவு: பண்டைய அடிசல் முறைகள்”, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்.

5.      ……………., 2020. “சங்ககால உணவு மனிதகுல வரலாற்றில் பண்டைத் தமிழரின் உணவாதார வகிபாகங்கள்”, கல்லளைப் பதிப்பகம், புதுச்சேரி.

6.      மகேசுவரன்., சி. 2023. “பண்பாட்டு ஆய்வியல்” (பண்பாட்டியல் குறித்த முழுதளாவியப் பார்வை), பாரதி புத்தகாலயம், சென்னை.

7.      கோவிந்தசாமி., பெ. 2026. “பர்கூர் மலை: தொல்லியலும் இனவரைவியலும்”, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை.

தகவலாளர்கள் பட்டியல்

1.      செங்கோட்டையன் த/பெ செல்லமுத்து (வயது-62), வெள்ளையம்பாளையம், அந்தியூர் வட்டம், ஈரோடு.

2.      கண்ணுப்பையன் த/பெ சின்னான் (வயது-70), ரெட்டிப்பாளையம், வெள்ளித்திருப்பூர் ஊராட்சி, ஈரோடு.

3.      பெருமாள் த/பெ சன்னையன் (வயது-71), எலச்சிபாளையம், பர்கூர் ஊராட்சி, ஈரோடு.

4.      மாதையன் த/பெ பெருமாள் (வயது-65), பெஜ்ஜிலெட்டி, பர்கூர் ஊராட்சி, ஈரோடு.

கட்டுரையாளர்கள்:

பெ. கோவிந்தசாமி, முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, சென்னைக் கிறித்தவக் கல்லூரி, கிழக்குத் தாம்பரம், சென்னை-600059.

நெறியாளர்: முனைவர் சி. முத்துகந்தன், உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, சென்னைக் கிறித்தவக் கல்லூரி, கிழக்குத் தாம்பரம், சென்னை. 600059.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.