இரக்க குணம் ஒரு உள்ளுணர்வு
மனிதன் இவ்வுலகில் பிழைத்துப் பயமின்றி வாழ வேண்டும் என்றால் அவன் மற்றவர்களுடன் கூடி வாழ்ந்தால் மட்டுமே சாத்தியமாகிறது. இயற்கையின் சீற்றத்திலிருந்தும் பிற விலங்குகளிடமிருந்தும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள சக மனிதர்களின் உதவி தேவைப்படுகிறது. உதவி செய்ய விரும்பும் நபர், பிறர் அனுபவிக்கும் வலியை உணரும் தன்மை உடையவராக இருந்தால் தான் அவரால் உதவ முடியும். மனிதனின் பரிணாம வளர்ச்சியை ஆராய்ந்தவர்கள் பிறர்மீது அன்பு கொண்டு இரக்கப்பட்டு உதவுவது மனிதனுக்கு இயற்கையாகவே வந்த ஒரு உள்ளுணர்வு அல்லது இயல்புணர்ச்சி என்கிறார்கள். அதை ஆங்கிலத்தில் INSTINCT என்று சொல்கிறார்கள். மனிதனுக்கு இந்த உள்ளுணர்வு வந்ததின் காரணம் தனக்கு வலி வரும்போது மற்றவர்கள் வந்து காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமே. தான் சேர்ந்துள்ள சமூகம் பாதுகாப்புடன் வாழ வேண்டும் என்றால் இந்த பிறன் வலிபார்த்து உதவும் குணம் அனைவருக்கும் இருக்க வேண்டும்.
பிறர் வலியை தனக்கு வந்தது போல நினைத்து உதவுவதை EMPATHY என்றும் மனதளவில் அனுதாபப்படுவதை மட்டும் SYMPATHY என்றும் கூறலாம். "வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்" என்றார் வள்ளளார். அதுபோல இந்தக் குணம் உள்ளவர்களால் தான் மனித இனம் ஒன்றுபட்டு இந்த பூமிப்பந்தில் இன்றளவும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த இரக்க குணம் உள்ளவர்களால் மிக எளிதில் மற்றவர்களுடன் உரையாட உறவாட, நல்ல தொடர்பிலிருக்க முடிகிறது. அனைத்து வகையான உயிரினங்களுக்கும், முக்கியமாகக் குட்டி போட்டு பாலூட்டும் பிராணிகளுக்கு எல்லாம் இந்தக் குணம் இயற்கையிலேயே வந்து விடுகிறது.எப்போது இந்தக் குணம் வந்தது?
அன்பு அல்லது இரக்கம் மனிதனுக்கு இயற்கையாகவே வருகிறது என்றால் எப்போது வருகிறது என்ற கேள்விக்கான பதிலை அறிந்து கொள்ள ஆராய்ச்சியாளர்கள் பிறந்த குழந்தைகளிடம் சென்று ஆராய்ந்தனர். பிறந்து 18 மணியிலிருந்து 72 மணி வரையிலும் உள்ள குழந்தைகளின் செயல்களை உற்று நோக்கினார்கள். தாயின் கருப்பையிலிருந்து இவ்வுலகுக்கு வந்துள்ள புத்தம் புது வரவுகளான அவர்கள் இருக்கும் அறையில் ஒரு குழந்தை வீறிட்டுக் கத்தியவுடன் மற்றக் குழந்தைகளும் கத்த ஆரம்பித்து விட்டார்கள். தம்மைப்போல் உள்ள ஒரு உயிர் வலியால் கத்தும்போது மற்ற குழந்தைகளும் அதை உணர்ந்து கத்துவதைக் கண்டார்கள். மற்ற குழந்தைகள் கத்துவது முதலில் கத்திய குழந்தைக்கு ஆறுதல் சொல்லுவது போல இருப்பதை உணர்ந்து ஆச்சரியப் பட்டனர். இந்தக் கோட்பாட்டை உறுதி செய்ய அதே அறையில் செயற்கையாகக் குழந்தை கத்துவதைப் போன்று பதிவு செய்யப்பட்ட குரலை ஒலித்தபோது அவ்வளவாக மற்றக் குழந்தைகள் கத்தவில்லை . சில குழந்தைகள் கத்தாமல் இருந்ததையும் கண்டார்கள். மிருகங்கள் வலியால் கத்துவது போன்று பதிவு செய்யப்பட்ட குரலுக்கும் குழந்தைகளின் எதிர்வினை அதிகம் இல்லாததைக் கண்டனர்.
குழந்தை வளர்ந்து ஒரு இரண்டு அல்லது மூன்று வயது ஆனவுடன் இந்த இரக்க குணம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போமா? இந்தக் குழந்தைகள் இருக்கும் அறையில் அவர்களுக்கு முன்பே அறிமுகம் இல்லாத நபர் உள்ளே நுழைந்து, குழந்தைகள் பார்க்கும்படியாக திடீரென்று கீழே விழுந்து வலியால் அழுவது போல் நடிக்கிறார். இதைப் பார்த்த மற்றக் குழந்தைகளின் முகங்களில் சோகம், பயம், என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் என்று பலவித உணர்ச்சிகள். சில குழந்தைகள் உனக்கு ஒன்றும் இல்லையே என்ற வினவல். கீழே விழுந்த நபரைப் போய் கட்டித் தழுவுதல் போன்ற செயல்களையும் செய்கின்றனர். ஆக இயற்கையிலேயே மனிதனுக்கு இரக்க குணம் உள்ளது என்றும் அது பிறந்ததிலிருந்தே வெளிப்படுகிறது என்றும் முடிவுக்கு வரலாம்.
ஏன் குறைந்து விடுகிறது?
குழந்தை பிறந்து வளர்ந்து பதின்பருவம் வழியே ஒரு வயது வந்த நபராக இந்த சமூகத்தில் சேரும்போது குழந்தைப் பருவத்தில் இருந்த அதே அன்பும் இரக்க குணமும் உள்ளதா என்று பார்த்தால் ஏமாற்றம்தான். பிறவியிலேயே வந்த இரக்க உணர்வு மனிதன் வளர வளர குறைந்து விடுகிறது. அவ்வப்போது மீடியாக்களில் சாலை விபத்தில் அடிபட்ட நபரை சுற்றி நின்று உதவ முயற்சி செய்யாமல் மனதெல்லாம் மரத்துப்போய் வேடிக்கை பார்க்கும் கூட்டம் பற்றி எழுதுகிறார்கள். நெருங்கிய உறவுகளைக் கொலை செய்யும் இளங்குற்றவாளிகளையும் பார்க்கிறோம். மீடியாக்களில் வரும் செய்திகளைப் பார்க்கும் போது எல்லா நாடுகளிலும் இளங்குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போவதைக் காணலாம். நல்ல பண்புகளுக்குப் பஞ்சம் வந்து விட்டது போல் தோன்றுகிறது. பிறர்மீது அன்பு கொண்டு அவருக்கு உதவுவது என்பது ஒரு மனவியல் சார்ந்த உணர்வுபூர்வமான விஷயம். எல்லோரும் தெரசா அம்மையார் போல இருக்க வேண்டாம். ஆனாலும் மனதளவில் கூட இரக்கப்படாமல் அந்த நிகழ்வைக் கடந்து செல்லும் போது அவர்களால் சமூகம் முன்னேறுவதில்லை .
வன்முறைக் காட்சிகளின் பங்கு
பிற உயிர்களிடத்தில் அன்பும் இரக்கமும் ஊற்றெடுக்கப் பிறக்கும் குழந்தைகள் வளர வளர மனசு மரத்துப் போய் நிற்கின்றன. காரணம் என்னவென்று ஆராய்ந்தால் முதலில் நிற்பது குழந்தைகளை இளம்பருவத்திலிருந்தே வன்முறைக் காட்சிகளுக்கு நாம் பழக்கப் படுத்தியதுதான். இணையமும், தொலைக்காட்சியும், கைபேசியும் 24/7 வன்முறைக் காட்சிகளைக் காண்பித்துக் கொண்டே இருக்கின்றன. இதை உள்வாங்கும் குழந்தையும் அதே போன்று உண்மை வாழ்க்கையிலும் செய்து பார்த்து மகிழ்கிறது. கீழே கொடுத்துள்ள உதாரணங்கள் இந்த கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாகத்தான் உள்ளது.
இஸ்ரேல் நாட்டில் 1990இல் தான் முதல் முதலாக உலக குத்துச்சண்டை கூட்டமைப்பின் குத்துச் சண்டைகளை தொலைக்காட்சியில் காண்பிக்க ஆரம்பித்தார்கள். கொஞ்ச காலத்தில் அந்நாட்டு செய்தித்தாள்களில், பள்ளிகளில் உள்ள விளையாட்டு மைதானங்களில் குழந்தைகளிடையே சண்டைகள் அதிகமாகி இரத்தக் காயங்களுடன் மருத்துவமனைக்கு செல்பவர்களின் விகிதம் அதிகமாகி விட்டதாக செய்திகள் வரத் துவங்கின. டஃப்னா லெமிஷ் (DAFNA LEMISH) என்ற டெல் அவிவ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் பல பள்ளிக் கூடங்களின் முதல்வர்களிடமும் மாணவர்களிடமும் சென்று கணக்கெடுத்து ஆராய்ந்ததில், நிறைய மாணவர்கள் தாங்கள் தொலைக்காட்சியில் பார்த்த அதே குத்துச் சண்டைக் காட்சிகளை பரீட்சித்துப் பார்த்ததாகச் சொன்னார்கள். பள்ளிக்கூட முதல்வர்களும் குத்துச்சண்டை வீரர்களின் பாணியைக் குழந்தைகள் காப்பியடித்து சண்டை போட்டுக் கொள்வதாகக் கூறினார்கள். ஆனால் தொலைக்காட்சியில் சண்டை போட்டவர்கள் மிகவும் திறமையான நடிகர்கள் என்பது குழந்தைகளுக்குத் தெரியவில்லை.
அமெரிக்காவில் பதின்பருவத்தினரிடையே எடுத்த கணக்கெடுப்பின்படி சராசரியாக ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் மீடியாவில் செலவு செய்கின்றனர். இதில் வீடியோ கேமில் செலவு செய்யும் நேரமும் அடக்கம். ஒரு ஐந்து வயதுக்கு மேல் இருப்பவர்கள் பார்ப்பதற்கான வீடியோ கேமில் பெரும்பாலானவைகளில் மூன்றில் இரண்டு பங்கு வன்முறைக் காட்சிகள்தான். அதில் எதிராளியை அடித்தல், அழ வைத்தல், சுட்டு வீழ்த்துதல் போன்றவைகளைச் செய்யும் நபர் வெற்றி பெறுகிறார். கற்பனைக் காட்சியானாலும் வன்முறையில் ஈடுபட்டு வெற்றி பெற்றால் மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறது. மீண்டும் மீண்டும் அந்த விளையாட்டை விளையாட மனம் விரும்புகிறது.
இம்மாதிரி இயற்கை உணர்வுகளை மழுங்கவைக்கும் நிகழ்ச்சிகளைச் சிறு வயதிலிருந்தே பார்த்து மகிழ்ந்து வளர்ந்த ஒருவர் சக மனிதன் துன்பப் படும் போது, இயற்கையாகவே வரவேண்டிய உதவ வேண்டும், ஆறுதல் சொல்ல வேண்டும் என்ற பரிவோ கனிவோ இன்றி மனது மரத்துப்போய் வேடிக்கை பார்க்கிறார். வன்முறையில் மகிழும் நபர்கள் மேலும் மேலும் வன்முறை செய்து மகிழ்ந்து சமூகத்தின் ஆபத்தான மனிதர்களாக மாறுகிறார்கள்.
என்ன செய்யலாம்?
சமுதாயம் நல்ல குணங்களை உடைய இளைஞர்கள் இல்லாமல் முன்னேற முடியாது. ஆனால் இந்தக் குழந்தைகளுக்கு நல்ல பழக்கத்தையும் குணங்களையும் யார் சொல்லிக் கொடுப்பது? பெற்றோர்கள் பள்ளிக்கூடம் நல்ல பண்புகளை சொல்லிக் கொடுத்து விடும் என்று நினைக்கிறார்கள். ஆனால், அங்கே பாடங்களைச் சொல்லிக் கொடுக்கவே நேரம் போதவில்லை. முடிவில் படித்திருந்தாலும் பண்பில்லா மனிதர்கள் சமூகத்தில் ஐக்கியமாகிக் கொண்டே இருக்கிறார்கள்.
இன்றைய காலத்தில் சமுதாயம் எந்தெந்த பழக்கத்தை எல்லாம் விரும்ப வில்லையோ அவைகளைத்தான் குழந்தைகள் முதலில் கற்றுக் கொள்கிறார்கள். சில நேரங்களில் தவறுகள் திருத்தப் படாமல் அங்கீகரிக்கப்படுவதால் அவைகளும் சரியாகின்றன. பிறவியிலேயே வந்த இரக்க குணம் குறையாமல் வளர்ந்து சக மனிதர்களிடத்தில் அன்பு கொள்ளும் மனிதனாக குழந்தை மாற வேண்டும் என்றால் அது பெற்றோர்களுக்கும் குழந்தைக்கும் ஏற்படும் பாசப் பிணைப்பின் தன்மையைப் பொறுத்ததுதான். பாசப் பிணைப்பில் பாதுகாப்பாக உணரும் குழந்தைக்கு எளிதில் மற்ற உயிர்களிடத்தில் அன்பு என்ற குணமும் வந்து விடுகிறது.
இரக்க குணம் உள்ள நபருக்கு பிற உயிர்களின் பால் அன்பும், கரிசனமும், நேர்மையும் இயற்கையாகவே வந்து விடுகிறது. அவர்களால் மற்றவர்களின் மனதைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு பாதுகாப்பாகவும் செயல்படவும் முடிகிறது. சமூகமும் இக்குணங்கள் இருக்கும் நபர்களை நம்பி அவர்களின் பின்னால் செல்லத் தயாராக இருக்கிறது. முன்னால் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா 'EMPATHY IS A QUALITY OF CHARACTER THAT CAN CHANGE THE WORLD' என்று சொல்கிறார். ஆக குழந்தைகளிடம் இரக்க குணம் தொடர்ந்து இருக்கும்படி வளர்த்து ஆளாக்கும் மிகப் பெரிய கடமை பெற்றோர்களுக்கும் சமூகத்திற்கும் இருக்கிறது.
- ப.வைத்திலிங்கம், குழந்தைகள் நல மருத்துவர்.