கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

children readingஇலக்கியங்களில் அறிவியல் முறையிலான திறனாய்வு முறைகளும் ஆய்வு முறையியல்களும் வளர்ந்த பின்னர் ஆய்வு என்பது பரந்துபட்டதாகவும், உற்றுநோக்கக் கூடியதாகவும் அமைந்தது. துறைவாரியான ஆய்வு அணுகுமுறைகள் அதன் தனித்துவத்தையும், செயல்திறனையும் எடுத்துக் கூறுவதாக அமைகின்றன. ஆய்வு என்பது கலை, அறிவியல் இரண்டிற்கும் பொதுவானது என்றபோதிலும் கலையை அறிவியல் தன்மையில் ஆய்வதும், அறிவியலில் கலை அனுபவத்தை அடையாளங் காணுவதாகவும் உள்ளது. கலையியல் ஆய்வில் அறிவியல் தன்மையிலான அணுகுமுறைகள் அதன் நுட்பத்தை அணுகுவதற்கும் வழிகோலாக அமைகிறது. குழந்தை, குழந்தை இலக்கியம் என்றிரு தன்மை கலை, அறிவியல் ஆய்வுகளுக்கு உட்படுத்தக் கூடியதாக உள்ளன. குழந்தைகளை உடலியல், அறிவுஇயல், உளவியல் போன்ற தன்மைத்தான ஆய்வுகளைச் செய்து வந்ததன் தொடர்ச்சியாக குழந்தை இலக்கியத்திற்கான ஆய்வுகள் கலையின் அடிப்படையிலும், அறிவியல் அணுகுமுறைகளின் ஊடாக ஆய்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இத்தகைய இருநிலை தன்மையிலமைந்த ஆய்வுகளுக்கு அவை சார்ந்த நிறுவனங்களே முதன்மையாக அமைகின்றன. இந்தியாவில் மிகச்சில நிறுவனங்களே குழந்தை இலக்கிய ஆய்விற்காக இயங்குகின்றன. ஒரியா, கேரளம் முதலிய மாநிலங்களில் ஒரு நிறுவனமும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் ஒரு நிறுவனமும் இருக்கின்றன. அவை பற்றி இங்குப் பார்ப்போம்.

ஒரியா குழந்தை இலக்கிய ஆய்வு நிறுவனம்

1979 ஆம் ஆண்டு உலக குழந்தைகள் தின ஆண்டாக அறிவிக்கப்பட்ட போது, அதே ஆண்டில் ஒரியா (Odisha) வில் பட்ராக் மாவட்டத்தில், நாயபஜாரில் குழந்தை இலக்கிய ஆய்வு நிறுவனம் (Research Institute of Odia Children's Literature (RIOCL)) ஒன்று தோற்றுவிக்கப்பட்டது. ஒரியா, ஆங்கிலம் ஆகிய இருமொழிகளை முதன்மையாகக் கொண்ட இம்மாநிலத்தில் தோன்றிய இந்நிறுவனம் இந்திய சமூக சட்டம் பதிவு எண் பி.எல்.எஸ் 2697 - 655 (1989- 1990) சட்டத்தின் மூலம் பதிவு செய்யப்பட்டது.

இலக்கியத்தின் வழியாக குழந்தைகளையும், குழந்தை வளர்ப்பையும் வளப்படுத்தி, வளர்ச்சிப் பாதைக்கு இலக்கியத்தையும், அது சார்ந்த சமூகத்தையும் ஆராய்வதாகும். திட்டமிடுதல், செயல்படுத்துதல், கலந்துரையாடல், பயிலரங்குகள் நடத்துதல், குழந்தை இலக்கியத்திற்கான ஆய்வுகளைச் செம்மைப்படுத்துதல், அதனைக் கள ஆய்வு செய்தல் முதலான வளங்களில் நிதி ஒதுக்கீடு செய்வதும் ஊக்கப்படுத்துவதுமான பணிகளைச் செய்து வருகிறது.

நிறுவனம் தொடங்கி 31 ஆண்டுகளில் 21 பயிலரங்குகள் நடத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரிசாவிலுள்ள பல்வேறு கல்வி, ஆராய்ச்சி சார்ந்த நிறுவனங்களைத் தொடர்புகொண்டு, அதன்வழி கருத்தரங்குகள், பயிலரங்குகளை நடத்தி வருகிறது. அத்தகைய தன்மையில் இதுவரை 20 கருத்தரங்குகள் நடத்தியுள்ளன. ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்தலான (exchange programmes) நிகழ்வுகளை நிகழ்த்தியதன் மூலம் விஷ்வபாரதி (Vishwa Bharati), சாந்திநிகேதன் (Shantiniketan), சக்ராதர்பூர் (Chakradharpur) ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து “Children's Writers of West Bengal, Bihar, Andhra Pradesh, Uttar Pradesh and Karnatak” ஆகிய தளங்களில் ஆய்வுகள் நிகழ்த்தி படைப்பாளர்களை இனம்காண்பதோடு, திறனாய்வையும் ஊக்கப்படுத்துகின்றன.

நோக்கம்

குழந்தை இலக்கிய எழுத்தாளர்களையும், குழந்தை இலக்கிய ஆய்வாளர்களையும் இனம்கண்டு அவர்களை உலகறியச் செய்தலே இந்நிறுவனத்தின் நோக்கமாக இருக்கிறது. குழந்தை இலக்கிய ஆய்வுத்துறையை ஊக்கப்படுத்துதல், குழந்தைகளின் எழுத்தைச் செம்மைப்படுத்துதல், குழந்தை இலக்கியத்தை கல்வியியல் மற்றும் உளவியல் முறைகளில் அளித்தல், கருத்தரங்கு நடத்துதல், குழந்தை இலக்கிய படைப்பாளர்களுக்குப் பயிலரங்கு நடத்துதல், புத்தகக் கண்காட்சி அமைத்தல், பெற்றோர்களைச் சந்தித்தல், அனைத்து இந்திய மொழிகளில் உள்ள குழந்தை இலக்கியத்தின் அடிப்படைகளை ஒன்றிணைத்தல், கிராமம், நகரம் சார்ந்த குழந்தைகள், அவர்களின் வாசிப்புத்திறனை ஊக்கப்படுத்துதல், அதிகரித்தல் போன்றவற்றை செவ்வனவே செய்து வருகிறது இந்நிறுவனம். உலக அளவிலான குழந்தை மற்றும் குழந்தை இலக்கிய ஆராய்ச்சிகளையும் இந்தியச் சூழலில் அறிமுகப்படுத்தியதோடு, உலக அளவிலான எழுத்தாளர்களையும், திறனாய்வாளர்கள், உளவியலாளர்களையும் இந்திய குழந்தை ஆராய்ச்சித் தளங்களோடு அறிமுகப்படுத்தி வருகிறது.

நிறுவனத்தின் இயக்கமும் பரப்பளவும்

குழந்தை இலக்கிய ஆய்வு நிறுவனம் (RIOCL) பதிவாளரைத் தலைவராகக் கொண்டு அவரின்கீழ் பணிபுரிய ஆறு இயக்குநர்கள், உதவிப்பதிவாளர், நிதியாளர், பத்து உறுப்பினர்களைக் கொண்டு இயங்குகின்றது. தற்போதைய பதிவாளராக டாக்டர் மகேந்திரமொகந்தி அவர்கள் பதவி வகிக்கிறார். ஒரிசா, மேற்கு வங்காளம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களை ஒருங்கிணைப்பதாக இந்நிறுவனம் அமைகிறது.

கேரள மாநில குழந்தை இலக்கிய நிறுவனம்

1981 ஆம் ஆண்டு திருவாங்கூர் கொச்சி அறச்சிந்தனை சமுதாயச் சட்டம் 1956 இன் சட்டப்படி தோற்றுவிக்கப்பட்ட இந்நிறுவனம், மலையாள குழந்தை இலக்கியங்களை வளப்படுத்துவதற்கும், ஆய்வதற்கும் ஆரம்பிக்கப்பட்டதாகும். குழந்தை இலக்கிய நூல்களை வெளியிடுதல், குழந்தைகளின் வாசிப்புத்திறனை அதிகரித்தல், குழந்தைகளைப் பல்வேறு திறன் பயிற்சிகளுக்குத் தயார்படுத்துதல் போன்றவற்றைச் செய்து வருகிறது.

மொழி, இலக்கியம் ஆகிய துறைகளில் பங்களிப்பு செய்து குழந்தைகளுக்குப் பயன்படும் தனித்துவமிக்க நிறுவனமாக இது இயங்கி வருகிறது. இது ஒரு தன்னாட்சி அமைப்பாகும். கேரள அரசின் பண்பாட்டு அமைச்சகத்தின்கீழ் இயங்கி வருகின்றது. கேரள மாநிலக் கல்வி அமைச்சரே இதன் தலைவராக விளங்குகின்றார். பண்பாட்டு பிரிவின் செயலர் இதன் துணைத் தலைவராக விளங்குகின்றார். இவர்களே நிறுவனத்திற்கு உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரத்தினைப் பெற்றவர்களாக விளங்குகின்றனர். பெரும்பாலும் கல்விப்புலம் சார்ந்த பேராசிரியர்களையே உறுப்பினர்களாக நியமிக்கின்றனர்.

மலையாள மொழியில் சிறந்த நூல்களை வெளியிடுதல், குழந்தைகளுக்கான தளிர் இதழ் வெளியிட்டு குழந்தைகளிடையே பசுமையான நினைவுகளை ஏற்படுத்துதல், குழந்தைகளின் வாசிப்புத்திறனைத் துளிர் இதழ் மூலம் ஏற்படுத்துதல், சிறந்த குழந்தை இலக்கியங்களுக்குப் பரிசு அளித்து ஊக்கப்படுத்துதல், கருத்தரங்குகள், குழந்தை இலக்கிய எழுத்தாளர்களுக்கானப் பயிலரங்குகள் முதலியவற்றை நடத்துதல், குழந்தைகளுக்கான நூல்கள், இதழ்கள், பருவஇதழ்கள் தாய்மொழியான மலையாள மொழியில் வெளியிடுதல் போன்ற பணிகளை கேரள மக்களின் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுகிறது.

குழந்தைகள் எளிமையான முறையிலும் மனமகிழ்வுடன் வாசிக்கும் நோக்கில் நூல்கள், குழந்தை இலக்கிய அகராதிகள், அறிவியல் நூல்கள், கலைக்களஞ்சியங்கள், பொதுஅறிவு நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள், வாழ்க்கை வரலாற்று நூல்கள் போன்ற வகைகளில் குழந்தைகளின் வயது வாரியாக நான்கு வயது முதல் ஆறு வயது, ஆறு வயது முதல் ஒன்பது வயது, ஒன்பது வயது முதல் பன்னிரெண்டு வயது, பன்னிரெண்டு வயது முதல் பதினான்கு வயது என குழந்தைகளின் வயது முறைகளைப் பாகுபடுத்தி நூல்கள் வெளியிடப்படுகின்றது. குழந்தைகள் கலைக்களஞ்சியம் ஆறு தொகுதிகளில் பல்வேறு துறைகளை உள்ளடக்கியதாக கலை, கலாச்சாரம், விலங்குகளின் உலகம், இலக்கியம், உலக நடப்புகள், உலகத் தொழில்நுட்பம் போன்ற வகைகளில் வெளியிடப்பட்டுள்ளன.

சுயசரிதை வரிசையில் நூறு தனித்தன்மை வாய்ந்த மனிதர்களின் வாழ்க்கை வரலாற்றை வெளியிட்டுள்ளது. சார்லஸ் டார்வின் பற்றி தனித் தொகுதியாக வெளியிட்டுள்ளது. நாராயணகுரு, பொய்கையில் யோகணன் போன்றவர்களின் நூல்கள் தனித்தனித் தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இளையோர் வயதிற்கேற்றாற் போல் சிறந்த கவிஞர் ஒ.என்.வி. குரூப் அவர்களுக்குத் தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிறுவனத்தின் மூலம் பல்வேறு மொழிகளில் உருவான கதைகளை மொழிபெயர்க்கும் பணியும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சுவீடன், பிரெஞ்சு மொழிகளில் தோன்றிய குழந்தைகளுக்கான கதைகளை மொழிபெயர்த்துள்ளனர். இந்திய மொழிகளின் நாட்டுப்புறக் கதைகளையும் மொழிபெயர்க்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இந்நிறுவனத்தில் குழந்தை இலக்கியத்திற்கான விருதுகள் வழங்கப்படுகின்றன. 2009 ஆம் ஆண்டு முதல் பால சாகித்ய விருதும், கதை, நாவல் ஆகியவற்றிற்கு ஆபிரஹாம் ஜோஜப் விருதும், கவிதை, பாடல், அறிவியல் படைப்புகளுக்கு பி.டி.பாஸ்கரபணிக்கர் விருதும், தகவல் தொடர்பு இலக்கியம், வாழ்க்கை வரலாறு, சுயசரிதை, மொழிபெயர்ப்புகள், சிறந்த பாடப்புத்தகங்கள், குழந்தை இலக்கியப் படைப்பாளிகளுக்கு சி.சி. சாந்தகுமார் விருதும் (ரூபாய் 50,000) வழங்கப்படுகிறது.

குழந்தைகளுக்காக ஜவஹர்பால் பவனிலிருந்து தளிரு என்ற மாத இதழ் வெளியிடப்படுகிறது. இது மலையாள மொழியில் பழமையான இதழாகும். இதழின் முதன்மை ஆசிரியர் கேரள மாநில கவிஞர் சுகந்தகுமாரி ஆவார். இவ்விதழ் வாசித்தல், போட்டி வாசித்தல், குழு வாசித்தல் என்ற நிலைகளில் குழந்தைகளிடையே வாசிக்கும் திறனை மேம்படுத்தும் நோக்கில் வெளியிடப்படுகிறது. தளிரு என்பது குழந்தை வாசிப்பை ஊக்கப்படுத்தும் ஓர் அமைப்பு போல செயல்பட்டு வருகிறது. பள்ளி, குடும்ப ஸ்ரீபாலசபா தளிரு வாசிப்புக் குழுவைக் கண்டறிந்து கிராம அளவில் வாசிப்பு விழா நடத்தும் அமைப்பிற்கு ரூபாய் பத்தாயிரம் வாசிப்பு குழுவிலிருந்து வழங்கப்படும் சேவையையும் செய்கிறது.

கேரள குழந்தை இலக்கிய நிறுவனத்தில் சிறந்த நூலகமும் இயங்கி வருகிறது. புத்தக வழங்கல் வரிசைமுறை, மின் புத்தகம், காப்புரிமை விற்பனை அனைத்தையும் பெற்ற நூலகமாக உள்ளது. இந்நூலகம் 1981 முதல் 2006 ஆம் ஆண்டு வரை பல சாதனைகளைப் புரிந்துள்ளது. 1981 ஆம் ஆண்டு முதல் இன்று வரை புத்தக விற்பனையில் மட்டும் ரூ.2.77 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. சர்வ சிக்ச அபியான் திட்டம், கல்வித்துறை, இலக்கிய அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து கண்காட்சிகள் நிகழ்த்துவதன் மூலம் புத்தகங்கள் விற்பனை செய்கிறது. மலையாளம் மட்டுமன்றி தமிழ், இந்தி, ஆங்கிலம், மராத்தி, தெலுங்கு, கன்னடம் முதலான இந்திய மொழிகளிலும் நூல்கள் வெளியிடும் சிறப்பு இந்நிறுவனத்திற்கு உண்டு.

தேசிய குழந்தை இலக்கிய மையம் (National Centre for Children's Literature (NCCL))

1993 ஆம் ஆண்டு “தேசிய புத்தக டிரஸ்ட், இந்தியா” என்றொரு மையத்தை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின்கீழ் தன்னாட்சி பெற்ற அமைப்பாகத் தொடங்கியது மத்திய அரசு. இது மொழிபெயர்ப்பு நூல்களைப் படைப்பதற்கும், வெளியிடுவதற்கும் முன்னுரிமை அளிக்கிறது. உலகம் முழுவதும் உள்ள குழந்தை இலக்கிய நூல்களை வெளியிடுதல், குழந்தை இலக்கியப் பணிகளைச் சேகரித்தல், ஒருங்கிணைத்தல், வெளியிடுதல் ஆகிய பணிகளைச் செய்கின்றது.

உலக மொழிகளிலுள்ள சிறந்த பதிப்பகங்கள், வெளியீட்டாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் ஆகியவர்கள் மூலம் குழந்தை இலக்கியத்தினை வளர்ப்பதை முக்கியப் பணியாகக் கொண்டிருக்கிறது. இந்நிறுவனத்தின் செயல்திட்டங்களில் முதன்மையானவையாக விளங்குபவை, குழந்தை இலக்கியப் பயிற்சி அளித்தல், ஆய்வு செய்தல், தகவல் தொடர்பு மற்றும் ஆவணப்படுத்துதல், வாசகர் அமைப்பை ஏற்படுத்துதல், வாசகர் வட்டத்திலிருந்து ஆசிரியர்களுக்குக் குழந்தை பற்றிய சிறப்பு பயிற்சி அளித்தல், சிறப்பு முகாம் நடத்துதல், எழுத்தாளர்கள் கூட்டம் நடத்துதல், ஆய்வாளர்களுக்குப் பயிற்சி முகாம் நடத்துதல், பயிலரங்குகள் நடத்துதல், நுணுக்கமான ஆர்வமான செயற்பாட்டாளர்களைத் தேர்வுசெய்தல், குழந்தை இலக்கிய வல்லுநர்களை ஒருங்கிணைத்தல் முதலியனவாகும்.

வாசகர் இதழ் (Readers' Club Bulletin) என்ற பெயரில் மாதந்தோறும் இந்தி, ஆங்கிலம் ஆகிய இருமொழிகளில் வெளிவருகிறது. இவ்விதழ் உலக முழுமைக்கும் செல்கின்றது. குழந்தைகளின் படைப்புகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகின்றது.

தேசிய குழந்தை அமைப்பின்கீழ் நூலகமும் ஆவண காப்பகமும் செயல்பட்டு வருகின்றது. நூல்களால் புகழ் பெற்றவர்கள், திறனாய்வாளர்கள், எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், ஆசிரியர்கள், குழந்தை இலக்கிய செயற்பாட்டாளர்கள் தரும் நூல்கள் உள்ளன. நூலகம் மூன்று வகையான உறுப்பினர்களைக் கொண்டு விளங்குகிறது. சாதாரண உறுப்பினர்கள் (தில்லியைச் சார்ந்தவர்கள்) இவர்களுக்கு ஒருமுறை பதிவுக்கட்டணம் நூறு ரூபாயும், திருப்பித் தரும் பாதுகாப்பு பணமாக ரூபாய் ஐந்நூறும் பெற்று நூலகச் சேவைக்காகப் பயன்படுத்தப்படுகிறது. இதனை இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

இரண்டாம் நிலை உறுப்பினர்கள், தற்காலிக உறுப்பினர்கள் எனப்படுவர். குழந்தை இலக்கிய ஆராய்ச்சித் தேவைக்காக வேறு மாநிலத்திலிருந்தோ, வெளிநாட்டிலிருந்தோ புதுதில்லி வந்து நூலகத்தைப் பார்வையிட வந்தால் அவர்களுக்கு இந்த முறை உறுப்பினர் முறை கையாளப்படுகிறது. மூன்றாம் நிலை உறுப்பினர்கள் நேசனல் புத்தக டிரஸ்டில் வேலை செய்யும் ஊழியர்களுக்கானது. தேசிய குழந்தை இலக்கிய மையத்தில் 18 இந்திய மொழிகளில் உருவான நூல்கள், 26 உலகமொழிகளில் உருவான நூல்கள் என மொத்தம் 15000 புத்தகங்கள் உள்ளன. குறிப்பு உதவி, ஆய்வு நோக்கத்திற்காக எடுத்தியம்புவதே முதன்மை ஆகும். இந்நூலகம் தற்பொழுது நேரு பவனில் இயங்கிவருகிறது. பல்வேறு வழிமுறைகளில் நூலகம் வளர்ச்சி அடைந்து வருகின்றது. நூலகத்தில் தானே இயங்கும் சாப்ட்வேர் CDS/ISIS இணைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது பயன்பாட்டில் உள்ள கணினி பயன்பாட்டு சாப்ட்வேர் பயன்படுத்தப்படுகிறது. இந்திய மொழிகளுக்கு யூனிக்கோடு எழுத்துரு பயன்பாட்டில் செயல்படுத்தப்படுகின்றது. விர்டுர என்ற தகவல் தொடர்பு சாப்ட்வேர் முறைகளில் நவீனத்துவ சேவையுடன் நூலகம் அமைந்துள்ளது. இணையம் வழி நூல்களைத் தேடும் வசதிகளும் அமையப்பெற்றுள்ளது. குழந்தை இலக்கிய தரவுகள் பொது பயன்பாட்டிற்கு உள்ளது. அனைத்துத் துறைகளில் உள்ள மக்கள் அனைவரும் குழந்தை இலக்கிய அறிவைப் பெறும் நோக்கில் நூல்களும், பத்திரிகைகளும் பயன்பாட்டில் உள்ளது. தேசிய மற்றும் உலக அறிவை அளிப்பதற்காகத் தகவல் தொழில்நுட்ப அறிவைக் கொண்டு விளங்குகின்றது.

குழந்தைகள் புத்தக மையம்

1957-ஆம் ஆண்டு சங்கர்பிள்ளை என்பவரால் புதுதில்லியில் இவ்வமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இவர் 1902 ஆம் ஆண்டு கேரளத்தின் காயம்குளம் என்ற இடத்தில் பிறந்தார். இளங்கலை கல்வியை கேரள மகாராஜா கல்லூரியில் பயின்றுள்ளார். இவர் சித்திரப்படம் வரைவது பொழுதுபோக்காகக் கொண்டவர். 1932 ஆம் ஆண்டு முதல் 1946 ஆம் ஆண்டு வரை ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ இதழில் கருத்துப்படம் வரையும் பணியில் பணிபுரிந்துள்ளார்.

1948 ஆம் ஆண்டு சங்கர் என்ற பெயரில் வாரப் பத்திரிகை ஒன்றை ஆரம்பித்தார். பத்திரிகை 1975ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. மாற்று சிந்தனையில் தோன்றியதன் விளைவே குழந்தைகள் புத்தக மையம். 1957 ஆம் ஆண்டு குழந்தைகள் புத்தக மையத்தைத் தோற்றுவித்து குழந்தைகள் புத்தக மையத்தின் நோக்கமாக இந்தியாவில் குழந்தைகள் நூல்களை வெளியிடுதல், சிறந்த குழந்தை இலக்கிய எழுத்துக்களை ஊக்கப்படுத்தி உயர்த்துதல், சிறந்த புகழ் பெற்ற சிறந்த வடிவமைப்பைப் பெற்ற குழந்தைகள் நூல்களை அனைத்து இந்திய குழந்தைகளுக்கும் கொண்டு சேர்த்தல்.

குழந்தைகள் புத்தக டிரஸ்டில் (பாதுகாப்பு மையம்) புகழ்பெற்ற மாத இதழை ஆங்கிலத்தில் குழந்தைகள் உலகம் என்ற பெயரில் வெளியிடுகிறது. சங்கர் குழந்தை மையம் உலக குழந்தை மையமாக சிறப்பாக இயங்கி வருகின்றது. மையத்தின் நோக்கம் குழந்தைகள் ஆய்வுத்திட்டங்கள் உள்ளன. படைப்புத்திறன் உள்ள உலகஅளவில் உள்ள குழந்தைகளை ஒருமுகப்படுத்தி ஒன்று கூட்டுதல்.

மையத்தில் பெரிய பொருட்காட்சி மற்றும் ஓவியக்கலைக் காட்சிக்கூடம், உலக நாடுகளில் உள்ள பல்வேறு ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. பொதுகாட்சிக் கூடம், சான்றாதாரம் மற்றும் ஆய்வு நூலகம், கருத்தரங்கு மற்றும் பயிலரங்கு அறைகள் வசதிகள் மேலை நாடுகளில் உள்ளது போன்று அமைக்கப்பட்டுள்ளன. பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற நடனம், ஓவியம், தச்சு வேலைகள், கடைசல் வேலைகள், தையல் மற்றும் பல பணிகள் நடைபெற்று வருகின்றது. அடுத்த நிலையில் வளர்ச்சி பெற்று தன்னம்பிக்கைத் திறன், குழந்தைகளின் சிறப்பு தேவைகளான யோகா மற்றும் தியானம், வாழ்க்கைத் தொழில் சார்ந்த வழிகாட்டல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் மையம் இங்கு உள்ளது.

த. நிர்மல் கருணாகரன்