மக்களாட்சியின் வரலாறு எங்கிருந்து தொடங்குகிறது? இங்கு வரலாறு என்பதே மன்னர்களின் வரலாறாகவே இருந்தது - இருக்கிறது. மக்களின் வரலாறுகள் எழுதப்படவில்லை. ‘மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்' என்பது புலவர் வாக்கு. மன்னர்கள் உயிராகவும், மக்கள் உடலாகவும் கருதிய காலம் அது. அக்காலத்தில் அரசனை தெய்வமாகவே மக்கள் கருதினர். குடிமக்களின் கருத்தறிந்து அரசர்களும் ஆட்சி செய்தனர்.
இந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறியது. மன்னர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஆட்சி செய்ய ஆரம்பித்தனர். மன்னர்களின் சர்வாதிகார ஆட்சிகளைப் பார்த்துச் சலிப்படைந்த மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அந்த நாளும் வந்தது.
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்னும் தாரக மந்திரத்தோடு பிரெஞ்சுப் புரட்சி மாபெரும் வெற்றி பெற்றது. அந்தப் புரட்சியின் காரணகர்த்தாக்களாக இருந்த வால்டேர், ரூசோ புதிய மக்களாட்சிக்கு வித்திட்டனர். 18ஆம் நூற்றாண்டில் இந்தச் சிந்தனையாளர்களின் முழக்கம் மக்களைச் சிந்திக்க வைத்தது. தட்டி எழுப்பியது.இதன் தொடர்ச்சியாக இந்தியா 200 ஆண்டுகள் ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் இருந்தது. வணிகம் செய்ய வந்தவர்கள் ஆட்சியாளர்களாக மாறினர். புலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது பாண்டியன், வேலு நாச்சியார் இவர்களை எதிர்த்துப் போராடி தூக்குமேடை ஏறினர்.
இறுதியாக காந்தியடிகள் தலைமையில் சுதந்திரப் போராட்டம் தொடங்கியது. மக்களும் விடுதலை உணர்வு மேலிட்டு, தங்கள் உடல், பொருள், ஆவியை அர்ப்பணித்தனர். அந்த வீரஞ்செறிந்த போராட்டத்தின் முடிவில் நாட்டுக்கு விடுதலையும் கிடைத்தது.
சுதந்திரம் பெற்ற நாட்டில் மக்களாட்சி முறை கேள்விக்குறியை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. மக்களாட்சி என்பது மக்களுக்கான ஆட்சியாக இல்லாமல் ஆளும் கட்சியின் ஆட்சியாக மாறிக் கொண்டிருக்கிறது. அரசியல் என்பதும் அர்ப்பணிப்பாக இல்லாமல் தொழிலாகவே மாறிக் கொண்டிருக்கிறது.
அன்று வணிகம் செய்ய வந்தவர்கள் ஆட்சி செய்ய ஆரம்பித்தனர். இன்று ஆட்சி செய்ய வந்தவர்கள் வணிகம் செய்ய ஆரம்பித்து விட்டனர். இதுதான் இன்று வித்தியாசம்.
மக்களாட்சி என்பது மக்களுக்குத் தொண்டு செய்வது என்பது மாறி எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்பதே கொள்கையாகி விட்டது. மக்களுக்குத் தொண்டு செய்து அவர்களது நன்மதிப்பைப் பெறுவது என்பதெல்லாம் இப்போது இல்லாமல் போய்விட்டது. இதனால் அரசியல்வாதிகளுக்கும், மக்களுக்கும் இடைவெளி அதிகமாகி விட்டது.
எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிப்பதற்கு புதிய புதிய உத்திகளைத் தேடிப் புறப்பட்டு விட்டனர். புதிய உத்திகளை உருவாக்கித் தருவதற்கு தரகர்களும் தயாராகி விட்டனர். மக்களை ஏமாற்றி அவர்களது வாக்குகளைப் பெற்று ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும்.
அதற்கான வழிவகைகளைத் திட்டமிட்டுத் தருவதற்கும், கோடி கோடியாகக் கொட்டிக் கொடுப்பதற்கும் அரசியல் கட்சிகள் தயார். சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்க வேண்டும். மக்களைக் கவர்வதற்கு குறுக்கு வழிகள் காணப் புறப்பட்டு விட்டனர்.
இப்போது இந்திய அரசியலில் பிரசாந்த் கிஷோர் முன்னணியில் உள்ளார். பாஜக, ஐக்கிய ஜனதா தளம், ஆம் ஆத்மி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், திரணமூல் காங்கிரஸ், திமுக எனப் பல்வேறு கட்சிகளுக்கு உத்திகளை வகுத்தளித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக 2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சிக்கு உத்திகளை வகுத்தளிக்க உள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
தேசம் சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகிவிட்டது. சுதந்திரத்திற்காகப் போராடிய ஒரு தேசிய கட்சியின் நிலை இப்படியாகி விட்டது. எந்த அரசியல் கட்சியும் ஆட்சியில் இருந்தால் மட்டுமே உயிர்வாழ முடியும் என்ற நிலை உருவாகி விட்டது.
“எப்படியாவது அரசியலில் வெற்றி பெற்று விட வேண்டும், அதன்பின் அவரை எதிர்த்தவர்கள் எல்லாம் சரணடைந்து விடுவார்கள்” என்பதுதான் அரசியல் ராஜதந்திரிகளின் அர்த்தம் உள்ள தத்துவம். அதுதான் அன்றும் இன்றும் பொதுக் கொள்கையாக இருந்து வருகிறது
காந்தி, நேரு, நேதாஜி, திலகர் போன்ற மாபெரும் தலைவர்கள் இருந்த கட்சி அது. பெருங்காயம் இருந்த பாண்டமாக இப்போது மாறிவிட்டது. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று அலைகிறார்கள். இப்போது கட்சியின் மேலிடமே கட்சிக்கு அப்பாற்பட்ட ஒருவரை அழைத்துப் பேசியுள்ளது. கட்சியில் சேரவும் கோரியதாகவும், அவர் மறுத்து விட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொய்யான வாக்குறுதிகள், இலவசங்கள் மூலம் மக்களை மடைமாற்றம் செய்யும் உத்திகளை அரசியல் கட்சிகள் ஆதரிக்கக் கூடாது. அவற்றைப் பரிந்துரை செய்யும் போக்கு மக்களாட்சியையே மரணக் குழியில் தள்ளிவிடும். மக்களை நம்பாமல், மக்கள் நலன்களைப் புறக்கணித்துவிட்டு, அரசியல் தரகர்களை நம்புவது கட்சியின் எதிர்காலத்தையே பாழாக்கி விடும்.
ஒரே மனிதன் எல்லாக் கட்சிகளுக்கும் உத்தி வகுத்துத் தருவான் என்றால் அவனைவிட சந்தர்ப்பவாதி வேறு யார் இருக்க முடியும்? அவருக்கான கொள்கை ஏதும் இல்லாமல் பணத்துக்காகச் செயல்படுபவனை அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு ஆதரிக்கின்றன என்றால் அந்த அரசியல் கட்சிகளுக்கே கொள்கை இல்லை என்பது வெளிப்படை.
உண்மையான அரசியல் என்பது மக்களிடம் போவதும், மக்களிடம் கற்றுக் கொள்வதும், மக்களுக்கே திருப்பிச் செய்வதும் என்பது இவ்வளவு விரைவில் மறக்கப்பட்டு விட்டது. சிந்தனையாளர்கள் பல்லாண்டுகளாகப் பாடுபட்டு உருவாக்கிய அரசியல் சித்தாந்தங்கள் ஒதுக்கப்பட்டு விட்டன. காலம் எதையும் மாற்றும் என்பது உண்மைதான். மாறுதல் மட்டுமே மாறாதது என்பதும் உண்மைதான். வரலாறுகள் எப்போதும் முன்னோக்கிப் போக வேண்டும்.
“உண்மையில் அதிகாரம் மக்களிடத்தில்தான் உள்ளது. இப்போதைக்கு அந்தப் பிரதிநிதிகளிடம், யாரைத் தேர்ந்தெடுக்கிறோமோ அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. மக்கள் இல்லாமல் சுயேச்சையாக நாடாளுமன்றத்திற்கு அதிகாரமும் இல்லை, அது இருக்கவும் இயலாது” என்று காந்தியார் கூறுகிறார்.
பொதுவாகத் தேர்தலில் வெற்றியும், தோல்வியும் மாறி மாறி வருவது இயற்கை. ஆளும் கட்சி எதிர்க்கட்சியாகவும், எதிர்க்கட்சி ஆளும் கட்சியாகவும் வருவதுதான் மக்களாட்சியின் மகத்துவம். நாடு சுதந்திரம் பெற்ற பிறகு காங்கிரஸ் பலகாலம் நாட்டை ஆண்டது. அதனால் மக்கள் மற்றொரு எதிர்க்கட்சிக்கு வாய்ப்பளிக்க நினைத்ததால்தான் பாஜக ஆட்சிக்கு வந்தது.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை 1967இல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி கண்டு ஆட்சியை இழந்தது. இந்தி எதிர்ப்புப் போராட்டமும், அரிசிப் பஞ்சமுமே அதற்குக் காரணம். அதன்பின் திராவிடக் கட்சிகள் மாறி மாறி ஆண்டு வருகின்றன. இந்தக் கட்சிகளும் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் தவிக்கின்றன. தமிழக அரசு வாங்கிய கடன்களுக்கு வட்டி கட்ட முடியாமல் திண்டாடுகின்றது.
1967 மார்ச் 6 அன்று அண்ணா முதலமைச்சர் ஆனார். அந்தத் தேர்தலில் ‘ரூபாய்க்கு 3 படி தருவோம்' என்னும் வாக்குறுதி மக்களைக் கவர்ந்தது. வெற்றியைத் தேடித் தந்தது. ஆனால் அதனையே நிறைவேற்ற முடியவில்லை. ‘மூன்றுபடி இலட்சியம், ஒரு படி நிச்சயம்' என்று அந்த வாக்குறுதி திருத்தியமைக்கப்பட்டது.
அதன்பிறகு கடந்த 55 ஆண்டுகளாகக் காங்கிரஸ் கட்சி இழந்த இடத்தைப் பிடிக்க முடியவில்லை. ஒவ்வொரு தேர்தலிலும், ‘காமராசர் ஆட்சியை அமைப்போம்' என்று முழங்குவதோடு சரி, அதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மாநிலக் கட்சிகளுடன் கூட்டணியமைத்து கிடைத்தது வரை இலாபம் என்று அரசியல் நடத்துகின்றன.
உலக அரசியல் மாறும்போது, இந்திய அரசியலும் மாறிக் கொண்டிருக்கிறது. தனியொரு கட்சியாக ஆட்சியைப் பிடித்த காலம் மாறிவிட்டது. இப்போது கூட்டணிகளே ஆட்சியைப் பிடிக்க முடியும் என்ற நிலை உருவாகி விட்டது. அதற்குத் தக அரசியல் கட்சிகள் தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும்.
ஆட்சியதிகாரத்துக்கு வந்த பிறகு அரசியல் கட்சிகளுக்கும் மக்களுக்குமான உறவு குறைந்து போய் விடுகிறது. மக்களைச் சந்திப்பதும் இல்லை. சந்திக்க வரும் மக்களுடன் உரையாடுவதும் இல்லை. இந்த நிலை எல்லா ஆளும் கட்சிகளுக்கும் பொருந்தும். மக்களுக்குத் தொண்டு செய்யும் மனப்பான்மை ஒழிந்துவிட்டது. ஆட்சியில் இருக்கும்போதே சொத்து சேர்த்துக் கொள்ளத் துடிக்கிறார்கள்.
‘எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே' என்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது. ஏழ்மை, வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு பற்றியெல்லாம் தேர்தல் நேரத்தில் மட்டும் பேசப்படுகின்றன. மற்ற நேரங்களில் மறந்து விடுகின்றனர். புதிய புதிய செல்வந்தர்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றனர். பழைய ஏழைகள் இன்னும் ஏழையாகிக் கொண்டிருக்கின்றனர்.
தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக மட்டுமே மக்களைத் தேடும் அரசியல் கட்சிகள் ‘உத்தி'களைத் தேடி அலைகின்றன. இது நாட்டின் எதிர்காலத்தையே பாழாக்கிவிடும். எதிர்காலத் தலைமுறைகளையும் திசை திருப்பிவிடும். மக்களாட்சியின் மாண்பினைச் சிதைத்து விடும்.
ஏழ்மையும், அறியாமையும் நிறைந்த நாட்டில் மக்களை ஏமாற்றுவது எளிதாகும். பலரைச் சிலகாலம் ஏமாற்றலாம். சிலரைப் பல காலம் ஏமாற்றலாம். எல்லாரையும் எல்லா காலமும் ஏமாற்ற முடியாது. அரசியல்வாதிகள் இதனை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்வது நல்லது.
‘அரசியல்வாதிகள் அடுத்தத் தேர்தலைப் பற்றியே நினைப்பார்கள். தலைவர்கள் அடுத்தத் தலைமுறையைப் பற்றியே சிந்திப்பார்கள்' என்பதுதான் உண்மை. மக்களாட்சி மாண்புற நல்ல தலைவர்களைத் தேடுவோம்.
- உதயை மு.வீரையன்