ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் கனவு மாளிகையான ஆன்டிலியா தற்போது சிக்கலில் மாட்டியுள்ளது. உலகிலேயே மிகப்பெரும் செலவில் கட்டப்பட்டதாகப் பெருமையடித்துக் கொண்டு முகேஷ் அம்பானி கட்டிய வீட்டின் பெயர்தான் ஆன்டிலியா. ஆன்டிலியா என்றால் மர்மத் தீவு என்று அர்த்தமாம். அதிகார வர்க்கத்தின் அந்தப்புரங்கள் எல்லாமே மர்மம் நிறைந்த தீவுகள்தான்.
மும்பையில் மலபார் ஹில்ஸ் என்னும் பகுதியில் இந்த வீடு கட்டப்பட்டுள்ள இடம் வக்பு வாரியத்துக்குச் சொந்தமானது. வக்பு வாரியத்தின் மூலம் இஸ்லாமிய மாணவர்களின் கல்விக்காக பள்ளிக்கூடம் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டிருந்த இந்த இடத்தில் கரீம் பாய் இப்ராகிம் பாய் கோஜா எனும் டிரஸ்ட் ஆதரவற்றோர் காப்பகம் ஒன்றை நடத்தி வந்துள்ளது.
இந்த டிரஸ்ட் நிர்வாகிகளைக் கையில் போட்டுக்கொண்டு சுமார் ஐநூறு கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தை வெறும் 21.5 கோடி ரூபாய்க்கு முகேஷ் அம்பானி வாங்கியுள்ளார். டிரஸ்ட் நிர்வாகிகள் வக்பு வாரியத்தின் அனுமதியின்றி இவ்வளவு குறைந்த விலைக்கு அம்பானியிடம் நிலத்தை விற்றுள்ளனர். அதாவது வக்பு வாரியத்துக்குச் சொந்தமான இடத்தை முகேஷ் அம்பானி எனும் உலகின் மிகப்பெரும் பணக்காரர் முறைகேடாக வளைத்துப் போட்டிருக்கிறார்.
இந்த நில மோசடி விவகாரத்தில் அம்பானியின் மீது சி.பி.ஐ. வழக்கு தொடரப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த நிலம் கைமாறியிருப்பதில் மோசடி நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டால் இந்த நிலம் மீண்டும் வக்பு வாரியத்தின் வசமே போக வாய்ப்புள்ளது. அப்படி ஆகும் பட்சத்தில் அம்பானியின் கனவு இல்லம் அவரிடமிருந்து பறிபோகக் கூடும். ஆனால் மகாராஷ்டிரா அரசு இந்த விஷயத்தில் அம்பானியின் மீது சி.பி.ஐ. வழக்கு தொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறி தனது முதலாளி விசுவாசத்தைக் காட்டியுள்ளது.
ஐயாயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த வீட்டில் என்னென்ன வசதிகள் எல்லாம் உள்ளன என்பது பற்றி சில நாட்களுக்கு முன்பு வெகுசன ஊடகங்கள் பிரமித்துப் போய் எழுதிக் குவித்தன. வாஸ்து சாஸ்திர முறைப்படி கட்டப்பட்ட 27 மாடிகள் கொண்ட இந்த மாளிகையில் இல்லாத வசதிகளே இல்லை. இந்தக் கட்டிடத்தில் சுமார் முன்னூறு கார்களும் சில ஹெலிகாப்டர்களும் நிறுத்தி வைக்கலாம். நீச்சல் குளங்கள், உடற்பயிற்சிக்கூடங்கள், சினிமா தியேட்டர், செயற்கைப் பனி நிறைந்த பனியறை, மூன்று மாடிகளில் அழகான தொங்கு தோட்டங்கள், விருந்தினர்களுக்கென்று தனித்தனி சொகுசு அறைகள், கண்களைக் கவரும் உள் அலங்காரங்கள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
இந்த வீடு கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் போதே பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்தது. தினம் ஒரு வேளை உணவுக்கு வழியின்றி வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிக்கும் பெரும்பாலான்மை மக்களைக் கொண்ட தேசத்தில் ஒரு தனிமனிதன் தன்னுடைய குடும்பத்துக்காக இவ்வளவு பொருட்செலவில் வீடு கட்டுவதா என்று விமர்சிக்கப்பட்டது. ஆனால் முதலாளிகளின் தயவில் அல்லது முதலாளித்துவத்தின் தயவில் பிழைக்கும் பெரும்பாலான வெகுசன ஊடகங்கள் அம்பானியின் மாளிகையை இந்தியாவுக்கே பெருமை சேர்க்கும் நினைவுச் சின்னமாக புகழ் பாடின. ‘இந்தியாவின் இன்னொரு தாஜ்மகால்’ என்றே ஒரு பத்திரிகை பட்டம் சூட்டி மகிழ்ந்தது.
உண்மையில் இவ்வளவு பொருட்செலவில் ஒரு மாளிகையை தனிப்பட்ட ஒரு முதலாளி தன்னுடைய நேர்மையான உழைப்பின் மூலம் கட்டுவதற்கு வாய்ப்பே இல்லை என்பதை பொருளாதார உணர்வுள்ள யாரும் ஒப்புக்கொள்வார்கள். இவ்வளவு பணமும், இன்னும் அவர் வசம் குவிந்து கிடக்கும் ஏராளமான சொத்துகளும் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டி, வாடிக்கையாளர்களை நம்ப வைத்து மயக்கி, அரசு நிர்வாகத்தில் இருக்கும் தன் விசுவாசப் பிரதிநிதிகளின் மூலம் முறைகேடாக சலுகைகளைப் பெற்று, அரசுக்கும் மக்கள் பணத்துக்கும் பல இழப்புகளை ஏற்படுத்தி சேர்த்தவைதான்.
இப்போதும் அவர் சி.பி.ஐ. வழக்கிலிருந்தும் விசாரணையிலிருந்தும் தன் மாளிகையை காப்பாற்றிக் கொள்வதற்கு எல்லா வழிகளையும் கையாள்வார். அதற்கு தேவையான பணபலமும், அதிகார பலமும், அவருடைய அடிகளை வருடும் ஊடகங்களின் பிரச்சார பலமும் அவருக்கு நிறையவே உள்ளன.
இருப்பவனுக்கும் இல்லாதவனுக்குமான இடைவெளி தொடர்ந்து அதிகரிப்பதில்தான் அம்பானி போன்ற முதலாளிகளின் நலன் அடங்கியிருக்கிறது. இந்த இடைவெளி குறைந்து விடாமல் காப்பதற்கு அவரைப் போன்ற முதலாளிகளும் முதலாளித்துவமும் தொடர்ந்து தன்னால் இயன்ற எதையும் செய்வார்கள். இந்தியாவில் ஏழைக்கும் பணக்காரனுக்குமான இடைவெளியின் அப்பட்டமான வெளிப்பாடாய் உயர்ந்து நிற்கிறது ‘ஆன்டிலியா’ எனும் மர்ம மாளிகை.