ஈராஸ் பாதிரி அகராதியில் திராவிடர் என்றால்
திரைமிலர் என்னும் கடலின் குழந்தைகள்
சிங்கள பெளத்த அகராதியிலோ கள்ளத்தோணி
ஆழி முந்நீரில் கோடிட்டே எல்லை பிரித்தவன் எவன்?

அக்கரையில் ஆடி முடித்த நரவேட்டைப் பேரினப் படுகொலை
நாளைய நட்சத்திரப் போருக்கு இன்றைய ஒத்திகையாய்.
இந்துமாக் கடலில் மையங்கொண்டது புயல் ஒன்று.
இக்கரையில் வம்சாவழிக்குப் பதவி வேட்டை
ஆரூர்ச் சோழன்  பேர-அரசியல்
ஓர் அடிமை மற்றோர் அடிமைக்கு உதவவா முடியும்?

அக்கரைத் திக்கின் முகமெலாம் நெய்தலே கறங்க
இக்கரை ஈர்ந்தண் முழவின் இன்னிசை ஆர்ப்ப
ஆரூர்ச் சோழன் நீரோ பிடிலாய்
செம்மொழி கொண்ட கோலாகலம்
அவைக்களப் புலவோர் மெய்க்கீர்த்திகள்

சர்வதேசப் போர்க் குற்றவாளிக்கும் உடன்போந்த
இந்திய மண்ணில் தேடப்படும் ஓர் குற்றவாளிக்கும்
சிவப்புக் கம்பள நடைபாவடை விரிப்பு

டப்ளின் தீர்ப்பை ஐ.நா. தீர்ப்பும் உறுதிப் படுத்திட
அசோகச் சக்கர நீழலில்
அடைக்கலம் தேடும் ”சிங்க நாசிச ஸ்வஸ்திகா”

புத்திர சோகமே   நித்திய சிலுவையாய்
கனக விசயர் காலடியில் ஆரூர்ச் சோழன் மணிமுடி

இன்னொரு கொங்கையும் திருகி எறிந்தனள்
ஒரு முலை இழந்த திருமா பத்தினி

ஆரூர்ச் சோழன் மதுரை மைந்தன் தேர்க்காலில்
இடறிச் சிதறின சில தலைகள்
ஆடும் கடைமணி மணிநா அசைந்திட
அரண்மனை வாயிலில் கயிற்றை இழுத்தன
கன்றை இழந்த ’கற்றா’ யாவும்

இந்து மாக்கடலில் மையம் கொண்ட புயல்
கன்றை இழந்த ’கற்றா’வின் ஆற்றாமை
கொங்கை எறிந்த கண்ணகிச் சீற்றம்

அலையாத்திக் காடுகளின் அரண்கள் தகர்த்தே
ஆழிப் பேரலை மெளனச் சூறை
கரையொதுங்கிற்று ஆரூர்ச் சோழன் மணி முடி

- பொதிகைச் சித்தர் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It