தோழர் வானமாமலை தமது 59 ஆண்டுகளைக் கடந்து 60ஆம் ஆண்டைத் துவக்கியுள்ளார். அவரது அரசியல் கலை, இலக்கிய, ஆராய்ச்சிப் பணிகளை முறையாக மதிப்பிடுவது எனக்கு முடியாத காரியம். எனக்குத் தெரிந்த சில அம்சங்களை என் சிந்தனையில் அழுத்தமாக நிற்கும் சில நினைவுகளை இதில் குறிப்பிட்டுள்ளேன்.

அரசியல் துறை

அவருடன் எனக்கு முதல் பரிச்சயம் 1944ல் ஏற்பட்டது என நினைவு. அதற்கு முன்னதாகவே அவரைப் பற்றிச் சில தோழர்கள் மூலம் கேள்விப் பட்டிருந்தேன். அவரை எனக்கு நேரில் முதல் முதலாக அறிமுகம் செய்தவர் தோழர் பாலதண்டாயுதம் ஆவார். அம்பாசமுத்திரத்தில், பாப்பான்குளம் சொக்கலிங்கம்பிள்ளை வீட்டிற்குச் சென்ற நேரத்தில் (1945ல்) தோழர் பாலனுடன் வானமாமலையும் வந்திருந்தார். அச்சமயம் தோழர் வானமாமலை மொழிபெயர்த்திருந்த ஒரு நூல் ‘ஒப்பில்லாத சமுதாயம்’ (டீன் ஆப் கான்டர் பரி, ஹியூ லட் ஜான்சன் எழுதியது) வெளிவந்ததை வாசித்து அறிந்திருந்தேன். அதனால் அவரை அறிமுகம் செய்ததும் அவரது அமெரிக்கன் கல்லூரி வாழ்க்கை, ஆசிரியர் தொழில் பற்றிப் பேசிவிட்டு எனது வேலையில் முனைந்து விட்டேன். பின்னர் தோழர் பாலன் வானமாமலை பற்றி எனக்கு விவரமாகக் கூறினார். எனது அரசியல் வாழ்க்கையில் ஏற்பட்ட சில மாறுதல் களால் நான் அவரைத் தொடர்ந்து ஓரிரு ஆண்டுகள் பார்க்க வில்லை. பின்னர் 1948ஆம் ஆண்டு துவக்கத்தில் அவரைச் சந்தித்தேன். இதற்குப் பின்னர் எனது தொடர்பு இடையறாதது.

சுமார் 30 ஆண்டுகளில் கடந்த 14 ஆண்டு களாக நான் சென்னையில் வாழ்ந்த போதிலும் அவருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கிறேன். 1948 முதல் 1962 முடிய 15 ஆண்டுகளில் அவருடன் அரசியல், தத்துவார்த்தப் பிரச்சனைகளோடு, சொந்தப் பிரச்சனைகளையும் விவாதித்துள்ளேன். எனது உடல்நலம் பாதித்திருந்த காலத்தில் அவருடைய உதவி எனக்குக் கிடைத்தது. ஒரு கம்யூனிஸ்ட் ஊழியனைக் காப்பாற்றுவதில் அவருக்கிருந்த அக்கறை, பண்பு ஆகியவற்றை அனுபவித்து உணர்ந்தவன் என்ற முறையில் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறேன். சோதனைகள் மிக்க நேரத்தில் அரசாங்க அடக்குமுறை இருந்த காலத்தில் கலக்கமில்லாமல் உதவி செய்த உறுதிமிக்க கம்யூனிஸ்ட் அவர்.

அவரையே சிறையில் தள்ளி 1949ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சில நிர்ப்பந்தங்களை ஏற்படுத்தினார்கள். அப்போதும் அவர் கம்யூனிஸ்ட் கட்சியை விட்டதில்லை. அவர் சிறை வாழ்க் கையில் எத்தகைய அசௌகரியத்தையும் சுலபமாகச் சமாளித்தார். அவரோடு சிறையிலிருந்த வழக்கறிஞர் தோழர் வானமாமலை கூறினார் “என்.வி. சிறை வாழ்க்கையில் மிகச் சுலபமாக தனது வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டார். எங்களுக் கெல்லாம் புதிய அனுபவம், சிரமமாக இருந்தது” என்று பாராட்டுத் தெரிவித்தார்.

இவர் மீது விமர்சனம் வரும் போதெல்லாம் கலங்காது தனது குறையை உணர்ந்து அவர் மிக நிதானமாக நடந்து கொண்டார். இம்மாதிரி சந்தர்ப்பங்களில் பலர் உணர்ச்சிவசப்படுவதையும், குரோத உணர்ச்சி கொள்வதையும், கட்சி நலனைக் கைவிட்டதையும் பார்த்திருக்கிறேன். முற்றிலும் மாறுபட்ட நிலையில் கட்சி உணர்வுடன் அவர் நடந்து கொண்டதை மறக்க முடியாது.

இத்தகைய ஆழ்ந்த கட்சிப் பற்றும், கம்யூனிஸ்ட் லட்சியங்கள் மீதுள்ள தெளிவும், உறுதியான பிடிப்பும் அவரைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஈடுபடுத்தி வருகிறது.

பலதுறை ஆர்வம்

தோழர் வானமாமலைக்கு விவசாய இயக்கத்தில் அக்கறை இருந்தது. இதன் காரணமாக தோழர் நல்லகண்ணுவை நாங்குனேரி தாலுகாவிற்குத் தோழர் பாலன் மூலம் முயற்சித்துக் கொண்டு வருவதில் அக்கறை காட்டினார். நாங்குனேரி தாலுகா விவசாய இயக்கம், நாங்குனேரி இளைஞர் மன்றம் ஆகியவற்றில் அக்கறை காட்டிச் செயல்பட்டார்.

கட்சிக்கு அரசியல் ஊழியர்களைத் தயாரிப்பதில் எப்போதும் முயற்சி செய்வார். இன்றும்கூட பல இளைஞர்களைக் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு அவர் பயிற்றுவித்துள்ளார். இத்துறையில் அவரது பங்கு நெல்லை மாவட்ட கம்யூனிஸ்ட் இயக்கத் திற்குப் பெரிதும் உதவியுள்ளது. மாவட்டத் தலைமையிலும், மாவட்டத்தின் பல பகுதிகளிலும் அவரது மாணவர்கள் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் வேலை செய்கிறார்கள்.

மார்க்சீய போதனையைத் தொழிலாளர், விவசாயிகளுக்கு அளிப்பதில் கடந்த பல ஆண்டு களாக அவர் ஆற்றியுள்ள பணி மறக்க முடியாதது. இத்துறையில் அவரது உதவி நெல்லை மாவட்டக் குழுவுக்கும் தமிழக கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தொடர்ந்து கிடைத்து வருவது கட்சிக்கு நல்ல பலனை அளித்துள்ளது.

கட்சிக்கு நிதி அவசரமாகத் தேவைப்பட்ட போதெல்லாம் உதவியுள்ளார். கட்சி வேலைகள் தொடர்ந்து நடைபெற பல சந்தர்ப்பங்களில் அவர் உதவியுள்ளார். இன்றைய சூழ்நிலையில் அதன் அருமையைச் சிலர் உணர முடியாமல் போகலாம். அடக்குமுறை, தலைமறைவுக் காலம், பின்னர் கட்சியைப் புனரமைத்த காலங்களில் அவரால் முடிந்த உதவியெல்லாம் தந்துள்ளார். கட்சியின் அமைப்பு ஜீவனுடன் இயங்க வேண்டும் என்கிற ஆழ்ந்த உணர்வுடன் அவர் சரளமாக இந்த உதவி களைச் செய்துள்ளார். இவைகளில் விளம்பரம், படாடோபம் இருந்ததில்லை. இயற்கையான செயலாகவே அவைகளைச் செய்து வந்துள்ளார்.

கம்யூனிஸ்ட் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு முறையான கல்வியைத் தரவும் அவர் தயங்கிய தில்லை. பல கம்யூனிஸ்ட் ஊழியர்கள், தங்கள் பிள்ளைகளைச் சரிவர கவனிக்க முடியாது கடந்த காலத்தில் செயல்பட்டுள்ளனர். அச்சந்தர்ப்பங்களில் அவர்களது பிள்ளைகளுக்குக் கல்வி தந்து தேர்வில் வெற்றிபெற உதவியுள்ளார். கட்சி ஊழியர்களின் பிள்ளைகளின்மீதும் அவர் காட்டிய அக்கறை மிகச் சிறந்த கம்யூனிஸ்ட் பண்பு ஆகும். கம்யூனிஸ்ட் ஊழியர்களின் குடும்பங்களுக்கும் அவரால் முடிந்த போதெல்லாம் உதவியுள்ளார்.

இத்தகைய பல்துறை கவனத்துடன் அவர் தனது அரசியல் வாழ்க்கையில் நடந்து வருகிறார். இப்படிப்பட்ட பண்புகளை கம்யூனிஸ்டுகள் பெறுவது அவசியம். தோழர் வானமாமலை ஒரு நல்ல முன்னுதாரணம், பின்பற்ற வேண்டிய உதாரணம்.

கலை, இலக்கியத்துறை

தமிழகத்தில் கலை, இலக்கியப் பெருமன்றம் உருவாக தோழர் ஜீவா, ரகுநாதன் ஆகியோரோடு துணைநின்று செயலாற்றினார். கலை, இலக்கிய நோக்கு எப்படி அமைய வேண்டும் என்னும் கொள்கை அறிக்கையை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தார்.

நெல்லை மாவட்டத்தில் கார்க்கி கலைக்குழு, நாடக மன்றங்கள் ஆகியவற்றிற்கு ஊக்கமளித்துச் செயல்பட்டுள்ளார்.

இலக்கியகர்த்தாக்களிடம் கொள்கை விவாதம் நடத்தி, தெளிவை ஏற்படுத்தியும், இளம் எழுத்தாளர் களை உருவாக்கியும் வந்துள்ளார். அதி தீவிரக் கருத்தோட்டத்தில் புதுமை, புதுமை என புதுமையை வணங்கிவிட்டு, சிறந்த பண்புகளைப் பார்க்க மறந்துவிட்ட, மறுத்துவிட்டவர்களைச் சரியான வழிக்குக் கொண்டு வருவதில் விசேச முயற்சி களைச் செய்து வெற்றி கண்டுள்ளார்.

கிராமியக் கலை எனப்படும் மக்கள் கலையை, கிராமியப் பாட்டுகள், இலக்கியம் எனப்படும் மக்கள் இலக்கியம், பாட்டு இவைகளைச் சேகரித்து அதன் சமூக உள்ளடக்கங்களைப் புலப்படுத்தி அதன் சிறப்பை உலகம் உணரச் செய்தவர் தோழர் வானமாமலை. இதற்கு இந்தியா, உலகு தழுவிய அங்கீகாரம் அவருக்குக் கிடைத்துள்ளது. இது ஒரு மாபெரும் சாதனை.

இத்துறையில் பல இளம் அறிஞர்களை ஈடுபடுத்தி இத்துறையை விரிவடையச் செய்துள்ளார்.

தொல்பொருள் ஆராய்ச்சியை வரலாற்றுக்கு மட்டுமல்ல, கலை இலக்கியப் பாரம்பரியத்தைப் பேணிப் பாதுகாத்து, வளர்க்க வழிகாணும் முறையில் அதனைப் பயன்படுத்தியுள்ளார். இதற்கு அவருக்கு மார்க்சீய ஞானம் துணை புரிந்துள்ளது. சொல்லப் போனால் மார்க்சீய விஞ்ஞானத்தைத் திறம்படப் பயன்படுத்தி கலை இலக்கியத் துறையை வளப் படுத்தியுள்ளார்.

ஆராய்ச்சித்துறை

இத்துறையில் அவருக்குப் பொது ஆர்வம் பல ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது. அவர் எந்த நூலைப் படித்தாலும் அதன் உட்கருத்தையும் அதன் கருப்பொருளையும் புரிந்து கொள்வதில் அசாத்திய திறமை பெற்றிருந்தார்.

மார்க்சீய நூல்களைக் கற்பதில் இடையறாத ஆர்வமிருந்தது அவருக்கு. கட்சி அரசியலைப் புரிந்து கொண்டு மக்களுக்குச் சிறந்த முறையில் சேவை செய்ய தன்னால் முடிந்ததைச் செய்ய வேண்டும் எனும் ஆர்வம் அவருக்கிருந்தது. இது போன்றே பலரைக் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குத் தயாரிக்க வேண்டும் எனும் ஆழ்ந்த அக்கறை இருந்தது. இதன் காரணமாக அவர் மக்கள் வாழ்க் கையில் ஏற்படும் இன்ப துன்ப நிகழ்ச்சிகளைக் கூர்ந்து கவனிக்கும் ஆற்றல் பெற்றிருந்தார்.

ஒரு சந்தர்ப்பத்தில் கிராமப்புற விழா நிகழ்ச்சி களைப் பற்றி நான் அவருடன் பேசிக் கொண் டிருந்தேன். குறிப்பாக தாழ்த்தப்பட்ட அரிஜன மக்கள் வீர வணக்கம் செய்யும் முறையில்

தங்களது சொந்தக் கடவுள்களை வணங்குவது பற்றி விவாதித்தேன். அவர் வீர வணக்கத்தின் பின்னணியை எனக்கு விளக்கினார். கிராமப் புறங்களில் மேல் ஜாதியினருக்கும் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்குமிடையில் ஏற்படுகின்ற மோதுதல் சமூக உணர்ச்சிகள், ஜாதீய மனோ பாவங்கள் பற்றி விவாதித்தேன். இதற்கும் அரிஜன மக்கள் வணங்கும் வீரக் கடவுள்களுக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது என எனது சந்தேகத்தைக் கிளப்பினேன். இதுபற்றி விவர பூர்வமாக ஆராய்வது அவசியம் எனக் கூறினார். இப்பொழுது தமது ஓராண்டு ஆய்வுப் பணியில் இதைப் பற்றி ஆராய்ந்து தமது ஆய்வு நூலில் எழுதியுள்ளார்.

நாட்டுப்பாடல் துறையில் நா.வா. ஈடுபட்ட சந்தர்ப்பம் வருமாறு: தோழர் வானமாமலைக்கு உழைக்கும் மக்கள் பால் உள்ள அன்பும் அவர்களது கலை உணர்வு, வாழ்க்கைப் போராட்டங்கள் ஆகியவை பற்றி இருந்த ஞானமும், வரலாறு பற்றிய சர்ச்சைகள் ஆகியவையும் சேர்ந்து சமூக இலக்கியங்கள், கிராமியப் பாடல்கள் ஆகிய வற்றில் ஆராய்ச்சி வேண்டும் என்கிற எண்ணத்தை உருவாக்கியது.

இதன் விளைவாக கிராமியப் பாடல்கள் திரட்டு, கட்டபொம்மன் வரலாறு, முத்துப்பட்டன் பாட்டு, நல்லதங்காள் கதை போன்றவைகளை ஆழ்ந்து கற்றுணர்ந்து, இப்பாடல்களில் காலம், சமூகப் பின்னணி, இதன் சமூக உள்ளடக்கம் பற்றி யெல்லாம் விளக்கமாக நூல் வடிவில் கொண்டு வந்தார்.

இதையொட்டியே மக்கள் வரலாற்றில், பண் பாட்டில் அதிக அக்கறை அவருக்கு வளர்ந்தது. தொல்பொருள் ஆராய்ச்சி முடிவுகளைக் கற்றுத் தேர்வதில் அக்கறை செலுத்தினார்.

கிராமப்புறத்தில் விவசாயிகள் தங்கள் நல் வாழ்வுக்காக நடத்திய பல போராட்டங்கள் பற்றி அவர் ஆராய்ந்தார். பிற்காலச் சோழர்கள் காலத்தில் நடந்த விவசாயிகளின் போராட்டம் பற்றி அவர் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரை உலக அறிஞர் களின் பாராட்டுதலைப் பெற்றுள்ளது.

இந்தியத் தத்துவம், பண்பாட்டியல் ஆகிய வற்றில் அவரது ஆராய்ச்சி தரமானவை.

வேதாந்த பிரபஞ்சம் என்னும் நூலுக்கு (Universe of Vedantha) அவர் எழுதிய விமர்சனம் மார்க்சீய விஞ்ஞானத்திலும், இயற்கை விஞ்ஞானத்திலும் அவருக்குள்ள ஆழ்ந்த அறிவை மட்டுமல்ல வரலாற்றுணர்வையும் புலப்படுத்துகிறது.

அவரது ஆராய்ச்சி உணர்வு மிகப் பரந்தது. இதன் பிரதிபலிப்பே ‘ஆராய்ச்சி’ காலாண்டு இதழாக வெளிவருகிறது. இத்தகைய துணிச்சலான கன்னி முயற்சியில் தனிநபர் ஈடுபடுவது தமிழகத்தில் இதுவே முதல் தடவை ஆகும்.

செல்வ வளம் பெற்றவரல்லர், இருப்பினும் இந்த முயற்சி கண்டு நானும், வேறு சில தோழர் களும் அச்சம் கொண்டோம். வானமாமலையின் அறிவுத் துணிச்சல் வென்றது. இவருக்கு ஊக்க மளித்தவர்களில் ஒருவர் தோழர் பால தண்டாயுதம் ஆவார்.

தோழர் வானமாமலைக்கு ஏராளமான நண்பர்கள், தோழர்கள் உண்டு. பல அறிஞர்களின் பாராட்டுதலையும் பெற்றவர்.

தோழர் வானமாமலைக்குக் குடும்ப பிரச்சனைகள் பல உண்டு. ஆயினும் இவைகளுக்கு மத்தியில் ஆராய்ச்சித் துறையிலும், கட்சிப் பணிகளிலும் அவர் செலுத்திவரும் கவனம் பாராட்டுக்குரியது.

தமிழகத்தின் சிறந்த ஆராய்ச்சி அறிஞர் ஒருவர் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டது, கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஆக்கபூர்வமான சக்திக்கு ஏற்பட்ட வெற்றியாகவே கருதுகிறேன். ஆரம்பத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் கொண்ட பற்றின் காரணமாகவே அவர் படிப் படியாக ஆராய்ச்சியாளராக வளர்ந்து உயர்ந்தார்.

நமது காலத்தில், நம் கண் முன்னே மகத்தான காரியங்களை அடக்கமாகச் செய்துவரும் ஒரு பேரறிஞரை, ஒரு தோழரை, உற்ற நண்பரை வாழ்த்து கிறேன்.

இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கம் இன்னும் நீண்ட பயணம் செய்ய வேண்டிய ஜீவ இயக்க மாகும். இந்த இயக்கத்திற்கு அவரது அறிவு, திறமை, உழைப்பு தொடர்ந்து கிடைக்க அவர் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.

(நா.வா. மணிவிழா ஆண்டு மலரில் இடம்பெற்ற கட்டுரை)