வரலாறுகள் மனிதகுலத்தின் பண்டைய கால வாழ்வையும், வளர்ச்சி நிலைகளையும் பற்றி எடுத்துரைப்பவையாகும். தமிழரின் வரலாறு குமரிக் கண்டத்திலிருந்து தொடங்கப் பெற வேண்டும் என்பதை வரலாற்றாய்வாளர்கள் பலர் வலியுறுத்தி இருக்கின்றனர். ஆயினும் தென்னாட்டின் வரலாறு முறையாக எழுதப் பெறவில்லை என்பதே ஆய்வாளர்கள் பலரின் கருத்தாக இருக்கிறது. இந்திய வரலாறு தெற்கிலிருந்தே தொடங்கப் பெற வேண்டும் என சுந்தரம்பிள்ளை போன்றோர் வலியுறுத்தியுள்ளனர். வரலாற்றெழுதியல் என்னும் வரலாற்று உணர்வுடன் கூடிய எழுத்துக்கள் தமிழரின் இலக்கியங்கள் வழியே கண்டடையப்படக் கூடியனவாக இருக்கின்றன.
வரலாற்றினை ஆளும் வர்க்கத்தினர் தமக்கு இசைவாகத் திருத்தி எழுதிக் கொள்ளும் நிலை இன்று காணப்படுகிறது. உண்மையான வரலாறு என்பது சாத்தியமற்றதாக இருக்கிறது. இலக்கிய வரலாறு எழுதியோர் பலருள்ளும் தமிழர் வரலாறு, மொழி வரலாறு போன்றவற்றையும் எழுத முடிந்திருப்பதைக் காணமுடிகிறது. தமிழர் வரலாற்றினை சதாசிவ பண்டாரத்தார், நீலகண்ட சாஸ்திரியார், கே.கே.பிள்ளை, க.கோவிந்தன் போன்றோரும் இலக்கியங்களின் வழியும் வேறு தொல்பொருள் சான்றுகள் வழியும் எடுத்தியம்பியுள்ளனர். இவர்களின் வரலாற்று எழுதியல் முறையிலிருந்து வேறுபட்டதாகத் தேவநேயப் பாவாணரின் வரலாற்றெழுதியல் முறை காணப்படுகிறது.
பாவாணர், தமிழே, உலகில் தோன்றிய முதல்மொழி என்பதை விளக்கும் வகையில் தமிழ் வரலாறு, தமிழர் வரலாறு, வடமொழி வரலாறு முதலிய நூல்களை எழுதித் தமிழ் வளர்க்கப் பாடுபட்ட பேரறிஞர் என்பதைக் காணமுடிகிறது. தமிழினம் செழிக்கத் தமிழ்மொழிகளில் புகுந்த அயல்மொழிச் சொற்களை நீக்கித் தமிழ் நிலத்தைச் செம்மைப்படுத்திய சான்றோர் எனினும் மிகையாகாது. அவருடைய வரலாறுப் பணியை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
வரலாற்றியல் ஆய்வு
சமூக வாழ்வென்பது வரலாற்றிலிருந்து படிப்பினைகளைக் கற்றுக் கொள்ளும் வகையில் உருவானதாகும். தமிழகத்தை ஆட்சி செய்த மன்னர்கள், சீறூர்த்தலைவர்கள், அவர்கள்தம் வாரிசுகளும் வரலாற்றில் இடம்பெற்றுள்ளனர் என்பது தொடர்ந்து வைக்கப்படும் விமர்சனமாகும். மக்கள் வரலாற்றை எழுதும் வழக்கம் காணாமல் போவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தன. ஆரியர்களின் தலையீட்டினால் தமிழர்களின் உண்மையான வரலாறு மறைக்கப்பட்டது. களப்பிரர் காலத்தைத் திட்டமிட்டு இருண்ட காலம் என்று புனைவதன் பொருளை இதன் வழி அறிந்து கொள்ளலாம்.
இதனைக் குறித்த பாவாணரின் பார்வையும் இங்கு இன்றியமையாததாகிறது. தமிழர் வரலாற்றை மொழியின் வளர்ச்சியின் அடிப்படையில்தான் எடுத்தியம்புகிறார். பன்னெடுங்கால வரலாற்றின் சுவடுகளைப் பற்றிய அவருடைய கருத்துகள் பிற மொழியியல் அறிஞர்கள் மற்றும் வரலாற்றாளர்களின் நோக்கிலிருந்து வேறுபட்டு அமைவதைக் காணமுடிகிறது.
“காட்சியும் கருத்துமாகிய ஒவ்வொரு பொருட்கும் வரலாறிருப்பினும் ஒரு நாடு, அதன் மக்கள், அவர்கள் மொழி, அவர்கள் நாகரிகம் ஆகிய சிலவற்றின் வரலாறே சிறப்பாக வரலாறெனப்படும். ஒரு நாட்டின் வரலாறு அந்நாட்டின் பழங்குடி மக்களையும், வந்தேறிகளையும் பிரித்துக் காட்டுவதால், ஒரு வீட்டுக்காரனுக்கு அவ்வீட்டு ஆவணம் ஏமக் காப்பாவது போல் ஒரு நாட்டு பழங்குடி மக்கட்கும் அந்நாட்டு வரலாறு சில உரிமை வகையில் ஏமக் காப்பாம்” என்ற கூற்றிலிருந்து ஒரு நாட்டின் வரலாறெனப்படுவது அந்நாட்டினர் தம் வாழ்வியல் உரிமைகளைக் கோருவதற்கான ஆவணம் என்றும், மொழியே வரலாற்றுக்கு முதன்மையான கருவியாக இருக்கிறது" என்றும் குறிப்பிடுகிறார்.
“ஒரு நாட்டு வரலாறு எழுதப்பட்ட வரலாறு, எழுதப்படா வரலாறு என இரு திறப்படும். கிறித்துவிற்கு பிற்பட்ட நாடாயின் பெரும்பாலும் எழுதப்பட்டிருக்கும். முற்பட்டதாயின் எழுதப்பட்டோ படாதோ இருக்கும். எழுதப்படா வரலாறு அறியப்பட்ட வரலாறு, அறியப்படா வரலாறு என இரு திறத்து குறிப்புகளும் கருவிகளும் சான்றுகளும் போதிய அளவு இருப்பின் அறியப்படும். இன்றேல் இல்லை. எழுதப்பட்ட வரலாறும் மெய் வரலாறு, பொய் வரலாறு என இரு வகைத்து ஒரு நாட்டு வரலாறு அந்நாட்டின்மேற் பற்றும் நடுநிலையும் உள்ளவரால் எழுதப்படின் பெரும்பாலும் மெய்யாயிருக்கும். வேற்றினப் பகைவராலும் தன்னினக்கொண்டான்மாராலும் எழுதப்படின் பெரும்பாலும் பொய்யாயிருக்கும்.”என்ற கூற்றிலிருந்து வரலாற்றெழுதியல் குறித்த கூர்மையான பார்வையைக் கொண்டவராக பாவாணர் இருப்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
தமிழர்களின் மொழி வரலாற்றிலிருந்து அவர்தம் நாகரீக வரலாற்றை அறிந்து கொள்ளும் முயற்சியையே தமிழர் வரலாறு என்னும் நூலில் மேற்கொள்கிறார் பாவாணர். அவருடைய அறிவுத்திறன் மேம்பட்ட நிலையைக் காணமுடிகிறது. சீனிவாச ஐயங்கார், இராமச்சந்திர தீட்சிதர், சேசையங்கார் ஆகியோர் ஆரியச் சார்புடையவர்கள் ஆதலின் அவர்களின் தமிழர் வரலாறு குறைபாடுடையதாகவே இருக்கும் என்ற நிலைப்பாட்டினையும் பாவாணர் கொண்டிருக்கிறார் என்பதைப் பார்க்க முடிகிறது.
மொழி வழி வரலாறு
மனிதர்கள் தம் நாகரீக வளர்ச்சியில் மொழியினை உருவாக்கிக் கொள்கின்றனர். அவ்வாறு வளர்த்துக் கொள்ளும் மொழியின் தன்மை காலத்திற்குக் காலம் மாறுபடுகிறது. அதாவது புதிய கண்டுபிடிப்புகளுக்கு உகந்தவாறு மாற்றமடைகிறது.
தமிழ் தோன்றிய இடம் முழுகிப் போன லெமூரியக் கண்டம் என்று பாவாணர் குறிப்பிடுகிறார். தமிழ் மொழி வடமொழியினின்றும் கிளைத்தது என்று சில வரலாற்றாசிரியர்கள் கூறுவதை அவர் ஏற்கவில்லை.“சில தமிழ்ப் பகைவரும் கொண்டான்மாரும் தமிழை வடமொழி வழியதெனக் காட்டல் வேண்டித் தமிழர் வடக்கேயிருந்து வந்தனரென்று பிதற்றி வருகின்றனர்” என்று குறிப்பிடுகிறார்.
மொழியாராய்ச்சியில் துறைபோகிய பாவாணரின் கருத்துகள் வழி தமிழர் வரலாறானது ஆரியக் கலப்பில்லாத தூய்மையான வரலாறு என்பதைக் காணமுடிகிறது. ஆரியக் கலப்பென்பது ஆரியர்களால் எழுதப்படுகிற வரலாறு. தமிழர்க்கு விரோதமானதாகவே இருக்கும் என்ற அடிப்படையில் தம் அறிவியல் சார்ந்த சிந்தனை வழி வரலாற்றினை அணுகியுள்ளார் என்பதைக் காணமுடிகிறது. தமிழர்களின் பரவல் வட இந்தியாவிலும் அதைக் கடந்து மேற்கத்திய நாடுகளிலும் கூட அமைந்திருந்தது என்பதை,“தமிழர் குமரிக் கண்டத்தில் தோன்றிக் கடல் கோள், இனப்பெருக்கம், நாடுகாண் விருப்பம் முதலிய பல்வேறு காரணியங்களால் வடக்கே சென்றனர்”என்று காட்டுகிறார். இதன் மூலம் தமிழர்களே வேறு நாடுகளில் பரவி இருந்து பின்னர் இந்தியாவிற்கு வந்த ஆரியர்களாகவும் கருதப்படுகிறார்கள் என்று தம் கருத்தையும் பாவாணர் முன் வைக்கின்றார்.
வரலாறு
“வரல்+ஆறு - வந்த வழியைச் சொல்வது வரலாறாகக் கருதப்படும்.” பாவாணர் ஒரு நாட்டின் வரலாறு அந்நாட்டின் பழங்குடி மக்களையும், வந்தேறிகளையும் ஆராய்ந்து குறிப்பிடுவதால் அறியப்படும் என்கிறார்.
எழுதப்படா வரலாற்றை எழுதுவதற்குப் பயன்படும் சான்றுகள் இலக்கியம், வட்டெழுத்து, பழம்பெரும் நூல்கள் என மூவகைப்படும். இலக்கியத்துள் தொல்காப்பியமும் இரண்டொரு புறநானூற்றுச் செய்யுள்களும்,திருக்குறளும் தவிர மற்ற பண்டைத் தமிழ் நூல்களெல்லாம் அழியுண்டு போனமையால் கிறித்துவிற்கு முற்பட்ட தமிழ்நாட்டு வரலாற்றை எழுதுவதற்கு வேண்டிய இலக்கியச் சான்று இல்லாது போயிற்று என்றும் கூறுகிறார்.
மேலும்,“இப்போதுள்ள வட்டெழுத்துகள் பெரும்பாலும் கி.பி. 4ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டவையாதலின் அவையும் பயன்படவில்லை. இனி, பழம்பெரும் கலையோவெனின் கற்காலத்து இரும்புக் காலத்துப் பருப்பொருட் செய்திகளைத் தவிர, ஒழுங்கான வரலாற்றிற்குரிய நுண்குறிப்புகளைத் தெரிவிக்காததாயிருப்பதாலும்,அதையும் ஆராய்தற்குரிய முதற்காலத் தமிழகமாகிய பழம்பாண்டியநாடு (குமரிக் கண்டம்) முழுதும் முழுகிப் போனமையிலும், அதுவும் பயன்படாததே. ஆகவே எஞ்சி நிற்கும் ஒரே சான்று மொழியே”என்று குறிப்பிடுகிறார்.
பாவாணர் கூற்றின் மூலம் வரலாற்றுச் சான்றுகளுக்கு அடிப்படையாக அமைவது மனிதர்கள் பேசிய மொழிதான் சான்று என்பதை அறியமுடிகிறது. தொல் தமிழரின் வரலாற்றை அவர்களது இலக்கியங்கள், கல்வெட்டுகள் மூலம் அறிந்து கொள்ள ஏதுவாக அமைவதை இதன் வழி அறிந்து கொள்ளலாம்.
நாகரீகம்
பண்டையத் தமிழில் ஊர், நகரம் என்ற சொற்கள் ஒரு பொருட் சொற்களாக இருந்தன. ஊர் என்னும் பெயர்க்கு இதுவே காரணம். முற்காலத்தில் மருதநிலத்தூர்களே ஊர்களெனப்பட்டன. குறிஞ்சி, முல்லை, பாலை நிலங்களிலுள்ள குறிச்சி, பாடி, பறந்தலைவிட மருதநிலத்தூர்கள் மிகப் பெரியனவாயிருந்தன. வாணிகம் பற்றி நெய்தல் நிலத்துப் பட்டினங்களும், உழவு பற்றி மருத நிலத்தூர்களும் மிகச் சிறந்தனவும் பெரியனவுமான நகரங்களாயின. அவ்விருவகை நகரங்களிலும் வாணிகம் பற்றியும் உழவு பற்றியும் பலவகைக் கைத்தொழில்களும் சிறந்திருந்தன. பட்டினங்களையும் ஊர்களையுமே பண்டை மன்னரும் தத்தம் தலைநகராகக் கொண்டிருந்தார்கள். காவிரிப்பூம்பட்டினமும் கொற்கையும் நெய்தல் நிலத் தலைநகர்களாகவும், உறையூரும் மதுரையும் மருதநிலத் தலைநகர்களாகவும் இருந்தமையை கீழ்க்கண்டவாறு எடுத்துரைக்கிறார்.
“உழவு, வணிகம் என்னும் இரண்டினுள் உழவே தலைமையானதாயும், உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாததாயும் வாணிகத்திற்குக் காரணமாயுமிருத்தலின், முதலாவது ஏற்பட்ட தொழில் உழவேயென்றும் முதலாவது நகராகியது மருதநிலத்தூரே” என்றும் பாவாணர் கூறுகிறார்.
பண்பாடு
பண்படுவது பாடறிந்து ஒழுகல் என்று கலித்தொகை சுட்டுகிறது. பண்படுதல் சீர்படுதல் அல்லது திருந்துதல். திருந்திய நிலத்தைப் பண்பட்ட அல்லது பண்படுத்தப்பட்ட நிலமென்றும், திருந்திய தமிழைப் பண்பட்ட செந்தமிழ் என்றும் திருந்திய உள்ளத்தைப் பண்பட்ட உள்ளமென்றும் சொல்வது வழக்கம்.
பண் என்னும் பெயர்ச்சொல்லுக்கு மூலமான பண்ணுதல் என்னும் வினைச் சொல்லும், சிறப்பாக ஆளப்பெறும்போது, பல்வேறு வினைகளைத் திருந்தச் செய்தலையும், பல்வேறு பொருள்களைச் செவ்வையாய் அமைத்தலையும் குறிக்கும்.
பண்ணுதல்
மனிதச் செயல்பாடுகள் இயற்கையோடு இயைந்தும் அல்லது இயற்கையைத் தன்வசப்படுத்துகின்ற போதும் நிகழ்கின்றன. அவ்வாறு இயங்கும் போதுதான் வளர்ச்சியும் நாகரிகமும் உருவாகின என்பதை அறியலாம்.
நிலத்தைத் திருத்துதல். (பண்பட்ட மருதநிலம் பண்ணை)
ஊர்தியைத் தகுதிப்படுத்துதல்.
“பூதநூல் யானையொரு புனைதேர் பண்ணவும்”
சுவடித்தல் (அலங்கரித்தல்).
“பட்டமொடிலங்கல் பண்ணி”
இசையல கமைத்தல்.
“பண்ணல் பரிவட்டனை யாராய்தல்”
பண் அமைத்தல்
“மருதம் பண்ணிய கருங்கோட்டுச் சீறியாழ்”
சமைத்தல்.
“பாலு மிதவையும் பண்ணாது பெறுகுவர்”
“செய்” என்னும் வினைச்சொல்லினின்று திருந்த அல்லது அழகாய்ச் செய்யப் பெற்றது என்னும் பொருளில், செய் என்னும் நிலப்பெயரும் செய்யுள் என்னும் இயற்றமிழ்ப்பாட்டின் பெயரும் தோன்றியிருப்பது போன்றே பண் என்னும் வினைச் சொல்லினின்றும், திருந்த அல்லது இனிதாய்ச் செய்யப் பெற்றது என்னும் பொருளில், பண்ணை என்னும் நிலப்பெயரும் பண் என்னும் இசைத்தமிழ் அமைப்பின் பெயரும் தோன்றியுள்ளன என்பதை பாவாணர் கூற்றில் அறியமுடிகிறது.
“பண்பாடு பல பொருட்டு உரியதேனும் நிலமும் மக்கள் உள்ளமும் பற்றியே பெருவழக்காகப் பேசப்பெறும். ஆங்கிலத்திலும் Culture என்னும் பெயர்ச்சொல் சிறப்பாக நிலப் பண்பாட்டையும் உளப் பண்பாட்டையும் குறிப்பது கவனிக்கத் தக்கது. Culture என்னும் வினைச்சொல்லும் அங்ஙனமே. இவ்விரு வகைப்பண்பாட்டுள்ளும், மக்களைத் தழுவிய உளப்பண்பாடே சிறப்பாகக் கொள்ளவும் சொல்லவும் பெறும்” என்று பாவாணர் எடுத்துரைப்பதன் வாயிலாக தமிழர் வரலாற்றில் பண்பாடும், நாகரிகமும் இன்றியமையாதன எனவும் அதைக் கொண்டும் தமிழர் வாழ்வியலை அறிந்து கொள்ள இயலும் என்பதைக் காணமுடிகிறது.
வரலாற்றாசிரியர் பாவாணர்
தமிழர்தம் வரலாற்றினைப் பல அறிஞர்கள் எழுதியுள்ளனர். ஆயிரத்தென்னூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம் - கனகசபை, தென்னாட்டுப் போர்க்களங்கள் - கா.அப்பாத்துரையார், கே.கே.பிள்ளை, நீலகண்ட சாஸ்திரியார், இராமச்சந்திர தீட்சிதர், பி.டி.சீனிவாச ஐயங்கார் போன்றே தொன்மையான தமிழர் வரலாற்றினை அவரவர்நோக்கில் எழுதினர். ஆனால் இவர்களிடம் இருந்து சற்று வேறுபட்டு வேர்ச்சொல்லாய்வினை, தேவநேயப் பாவாணர் மேற்கொண்டிருந்தார். அதனால் பிற வரலாற்றாசிரியர்களின் சான்றாதாரங்களிலும் மிக நுண்ணிய சான்றுகளைத் தம் ஆய்வறிவின் மூலம் வெளிப்படுத்த அவரால் முடிந்தது. அவருடைய வேர்ச்சொல்லாய்வு நோக்கிற்குச் சான்று பின்வருமாறு.
“அரக்கு என்னும் மெழுகு பற்றிக் கூறும் பாவாணர் அச்சொல் அரக்கர் என்னும் பழங்குடியின மக்களைக் குறிப்பதாக நிறுவுகிறார்.“அலத்தம் அலத்தகம் என்னும் தென்சொற்களை ஆரியப் படுத்துவான் வேண்டி முறையே அ -லக்த, அ-லக்தக என உடலை இரு துண்டாய் வெட்டுவது போல் இரு கூறாய்ச் சிதைத்துப் பொருள் கூறுவர் வடமொழியார். அல் - அர் - அரக்கு -சிவப்பு Skt.rakta 2. சாதிலிங்கம், 3.செம்மெழுகு Skt Rkasha அரக்காம்பல் - செவ்வாம்பல் (பிங்)
அரக்குக் காந்தம் - செங்காந்தக் கல்
அரக்குச் சாயம் - செஞ்சாயம்
அரக்கு நீர் -1 அரத்தம் “புண்ணிடை யரக்குநீர் பொழிய”ஞ்ஞ் அரக்கு என்பது சிவப்பு நிறத்தையும் அரக்கம் என்பது அரக்கு, அரத்தம் முதலிய செந்நிறப் பொருள்களையும் குறிப்பதாலும் அமெரிக்கப் பழங்குடி மக்களுள் ஒரு சாரார் செவ்விந்தியர் எனப்படுவதாலும் அரக்கர் என்னும் வகுப்பார் பழங்காலத்தினராகத் தொல்கதைகள் கூறுவதனாலும் அரக்கன் என்னும் பெயர் செந்நிறம் பற்றிய அரக்கு என்னும் சொல்லினின்று திரிந்திருப்பதாக அறிஞர் சிலர் கருதினர்” என்று வேர்ச்சொல்லாய்வின் மூலம் வரலாற்றில் ஒரு சொல் கடந்து வந்த பாதையையும் அதன் மூலம் தமிழகத்தில் உள்ள அரக்கர், தேவர் என்னும் பிரிவினையின் செறிவான பொருளையும் விளங்க வைக்கிறார்.
பாவாணர் எழுதிய வரலாற்று நூல்கள்
தமிழ் வரலாறு (1967)
வடமொழி வரலாறு (1967)
தமிழர் வரலாறு (1972)
தமிழிலக்கிய வரலாறு (1979)
என்பனவாகும்.
இவற்றோடு ஒப்பியன் மொழிநூல், திராவிடத்தாய், பழந்தமிழாட்சி, முதற் தாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம், தமிழ்நாட்டு விளையாட்டுகள், பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும், தமிழர் மதம் முதலிய வரலாறு மற்றும் வரலாறு சார்ந்த நூல்களையும் எழுதியுள்ளார்.
வரலாற்றெழுதலில் நேர்ந்த பிழைகள் பற்றி பாவாணர்
1. “இந்திய வரலாற்றைத் தெற்கிலிருந்து தொடங்காமல் வடக்கிலிருந்து தொடங்கி எழுதுதல்.
2. பிற்காலத்தில் தோன்றிய ஆரிய வேதத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழர் வரலாற்றை எழுதுதல்.
3. தமிழர் ஆறியக் கலவை இனத்தார் எனக் கூறுதல்.
4. தமிழருக்குத் தனி எழுத்தில்லை. அசோகன் கல்வெட்டு பிராமி எழுத்தினின்றே எனக் கூறல்
5. கி.மு.2ஆம் நூற்றாண்டில் தமிழ் எழுத்துத் திரிக்கப்பட்டது எனக் கூறல்.
6. தமிழரின் முன்னோர் நண்ணியக் கடற்கரை (மத்திய தரைக்கடல்) பகுதியைச் சேர்ந்தவர் ஆவர். கிரேத்தாத் தீவில் ‘தெர்மிலை’ என்றும் சின்ன ஆசியாவின் தென்பகுதியிலுள்ள இலிசியாவில் ‘த்ரம்மிலி’ என்றும் இருந்த இருகிளை வகுப்பினைச் சேர்ந்தவர் தமிழரின் முன்னோர். அவர் பெயர் ஆரியத்தில் த்ரமிட-த்ரமிள-த்ரவிட எனத் திரிந்து அவர் தென்னிந்தியாவுக்கு வந்தபின் அப்பெயர் அவர் வாயில் தமிழ் என மாறிற்று எனச் சுனீதிகுமார் சட்டர்சி, நந்தமோரியர் காலம் எனும் நூலின் கட்டுரை வரைந்திருத்தல்.
7. நீலமலையே தமிழன் பிறந்தகம் என்பதுபோலக் காட்டும் எக்கேல் எனும் ஆங்கிலேயரின் தவறான கருத்து.
8. வரலாற்றாசிரியர் துடவர், கோத்தர் எனும் நீலமலைப் பழங்குடி மக்களைத் தமிழரின் முன்னோர் எனக் கூறுதல்.
9. உலகின் முதல் முதல் எழுதப்பட்ட மொழி சுமேரியம் என்று பிரித்தானியக் கலைக்களஞ்சியம் கூறுதல்.
10. தமிழ் நெடுங்கணக்கு சமஸ்கிருத வண்ண மாலையைத் தழுவியது என்று கால்டுவெல்லார் எழுதியது.
11. ஆரியர் ஒரு பெருங்கூட்டத்தாராக வந்து போர் வலிமையால் வடநாட்டைக் கைப்பற்றினர் எனக் கூறுதல்.
இவ்வாறு பல்வேறு பிழைகள் தமிழர் வரலாற்றில் இழைக்கப்பட்டுள்ளன என்பதை பாவாணர் தம் நூல்களில் சுட்டிக் காட்டியுள்ளார்.
ஆரியர்களை முன் வைத்தே இந்திய வரலாறும், பண்பாடும் மதிப்பிடப்படுகிறது என்பதை மறுத்தே தன் சீரிய நோக்கினை வெளிப்படுத்தியும் சொல்லாய்வுகளைப் பயன்படுத்தியும் வரலாற்றினை மறு வரையறை செய்தும் எழுதுகிறார் பாவாணர்.
வரலாற்றின் பயன்
வரலாற்றை நன்முறையில் எடுத்துக்காட்டும் பலர் அமைந்துவிடுவர். ஆனால் பாவாணர் ஒரு விளைவை எதிர்பார்த்தே அதை எழுதியுள்ளார் என்பதை அவர் நூல்கள் வாயிலாக அறியமுடிகிறது. புலவர்களும் அறிஞர்களும் மற்றவர்களும் அவர் எழுதிய வரலாற்றைப் படித்து தமிழின் உயர்தனிச் செம்மையையும் குமரிக்கண்டத் தமிழரின் கூர்மதிநுட்பத்தையும் உணர்ந்துகொள்ள வேண்டும் என்பர். அவர்கள் தம்மை உயர்த்திக் கொள்ள வேண்டும். தமிழை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் என்று எதிர்பார்த்தே வரலாறு பற்றிய தம் கருத்துக்களை வெளிப்படுத்தினார்.
அதுமட்டுமன்றி அவர் எழுதிய வரலாற்றின்படி தமிழ்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல செயல்கள் செய்யப்பெற வேண்டும் என விரும்பினார். அதற்காகப் பல செயல்திட்டங்களை வகுத்தளித்தார்.
மறைமலையடிகளின் தனித்தமிழ் மாண்பினைப் பாவாணர் போற்றினார். ஆரியத்தினின்று தமிழை மீட்கப் போராடினார். புதுச்சொல்லாக்கத்தைச் செழுமையாக்கினார். தனித்தமிழ்க் கொள்கையைப் பலபடி உயர்த்தினார். தமிழ்மொழியின் எல்லா வகையான பெருமைகளையும் மறுக்கவியலா வண்ணம் நிலைநாட்டினார் என அவரைப் பற்றிய கருத்துரைகள் தமிழில் காணப்படுகின்றன.
தமிழ் வரலாறு
தமிழ் மொழியின் வரலாறு வெறும் மொழி வரலாறு மட்டுமன்று. அது உலகமொழிகளின் வரலாறு, உலகின் முதல்மொழி தோன்றிய வரலாறு, உலக முதல் மாந்தன் தோன்றிய வரலாறு என்ற கருத்தினைத் தம் கொள்கையாகக் கொண்டிருந்தவர் பாவாணர் ஆவார்.
கழகம் தோன்றுவதற்கு முன் ஏறத்தாழ 40,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாறு தமிழுக்குண்டு. தேவநேயப் பாவாணர் ஒருவரே தமிழின் முழுவரலாற்றை எழுதிய அறிஞர் ஆவார். தமிழன் தோன்றிய பிறந்த குமரிக் கண்டமே உலகில் மனிதர் தோன்றிய இடம் என்பது அறிஞர்களின் கருத்தாக பாவாணரிடம் வெளிப்படுகிறது.
“வரலாற்று நூல், நில நூல், கடல் நூல், உயிர் நூல், மாந்த நூல் முதலிய பல நூல் ஆராய்ச்சியாளரும் குமரிக்கண்டமே மாந்தன் பிறந்தகமாயிருத்தல் வேண்டுமென ஓரிரு நூற்றாண்டுகட்கு முன்பே கூறிப் போந்தனர். மொழி நூலும், தமிழிலக்கியமும், அவர் தத்தம் நூற்சான்று கொண்டு செய்த முடிபை வலியுறுத்துகின்றன” என்று குறிப்பிடுகிறார். இதிலிருந்து அவர் அழிந்து போன குமரிக் கண்டத்திலிருந்தே உலகில் முதல் மனிதன் தோன்றினான். அவன் தமிழன்தான் என்னும் கருத்தினை உடையவராயிருந்தார் என்பது புலனாகிறது எனலாம்.
தமிழ் எனும் பெயர்
“தமிழ் எனும் பெயர் எவ்வாறு தோன்றியது என்பதை பாவாணர் முழுமையாகக் கண்டறிந்து தமிழின் தோற்றத்தை எடுத்துரைத்துள்ளார். “கிரேக்க நாட்டில் வழங்கிய தெர்மிலே, தெர்மிலர், திரமலர் என்னும் இனப்பெயரினின்று திரிந்தது” என்று ஞானப்பிரகாசர் கூறுகிறார். “வங்கநாட்டு ‘தம்ரலித்தி’ எனும் நகர்ப்பெயரினின்று தோன்றியது” என்பது கனகசபை பிள்ளையின் கருத்தாக அமைகிறது.
தமிழ் எனுஞ் சொல் தனிமையாக ழகரத்தைக் கொண்ட மொழி எனும் பொருள் தருவது என்று ஒரு சாரார் கருதுவர். இவ்வாறு பல வகையாகக் கூறப்பட்ட ‘தமிழ்’ எனும் பெயர்க் காரணங்களைப் பாவாணர் மறுத்துள்ளார். தமிழ் எனும் பெயர்க்கு வேறெவரும் கூறாத புதிய விளக்கத்தை பாவாணர் கூறியுள்ளார். தமிழ் எனும் பெயர்க் காராணங்களாகப் பிறர் கூறுவனவற்றுள் தனியாக ‘ழகரத்தை’ உடையது என்பதை மட்டும் பாவாணர் ஏற்கிறார். பாவாணரின் கண்டுபிடிப்பு ‘தந்நாட்டுமொழி’ என்ற பொருளே தமிழ் என்னும் சொல்லுக்கும் பொருத்தமானது என்பதாகும்.
திரவிடம் எனுஞ்சொல்
“த்ரமிளம்’ எனும் சொல்லின் சிதைவே தமிழாகும். அது ‘த்ரு’ எனும் வடமொழி வினைப் பகுதியினடியாகத் தோன்றியது என்று சுப்பரமணிய தீட்சிதர் ‘தமிழ்ப் பிரயோக விவேகம்’ எனும் நூலிற் கூறினார். இவ்விளக்கத்தை ஏற்கும் இரா.இராகவையங்கார் போன்றோர் திராவிடம் எனும் சொல்லின் மூலத்தையும் விளக்கத்தையும் குறிக்கத் தவறினர். “அத்துடன் ‘த்ரமிளம்’ எனும் வடமொழியின் மூலக்கருத்தே வலிமையாய் விடும் வண்ணம் தந்திரமாகத் தம் நூலை வரைந்துள்ளார்”.
இத்தகைய காரணங்களால் திராவிடம், தமிழ் இரண்டும் வெவ்வேறு சொற்கள் அல்ல. அவை ஒரு சொல்லின் இருவேறு வடிவங்கள் என்று பாவாணர் மட்டுமே தெளிவுபடுத்தினார். “த்ரமிடம், த்ரவிடம், தபிள, தவிட எனும் சொற்கள் வடமொழி நூல்களில் மட்டுமே வழங்குகின்றன. தமிழில் வழங்கவில்லை” என்ற குறிப்பையும் அவர் வழங்கினார்.
தமிழ் வரலாற்றை எழுதுபவர்கள் யாவரும், கழக இலக்கியங்கள், அகத்தியர், தமிழர் கொள்கை, தொல்காப்பியர், தொல்காப்பியத்தின் பெருமை,சிறப்பு பற்றி எழுதுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் பாவாணர் இவ்வாறு எழுதுபவர்களிடமிருந்து மாறுபடுகிறார். வரலாற்றை அறிவியல் நோக்கோடு உரிய சான்றுகளுடன் ஏற்புடைய கருத்துகளை உறுதியான வகையில் கூறுகிறார் என்பதை அவரது நூல்கள் சுடடுகின்றன.“தோற்றம் முதல் எழுதப்படுவதே முறையான வரலாறாகும்” என்ற அவரது கூற்றிலிருந்து வரலாற்றை எழுதும் முறையினை கற்றுக் கொள்ள ஏதுவாக அமைகிறது.
பாவாணர் ‘தமிழ் வரலாறு’ எனும் தம் நூல் தனித்தன்மையோடு பகுப்புமுறை முற்றிலும் புதியதாக எழுதியுள்ளார். இயனிலைப்படலம், திரிநிலைப்படலம், சிதைநிலைப்படலம், மறைநிலை படலம், கிளர்நிலைப்படலம், வருநிலைப்படலம் எனும் ஆறு படலங்களாகப் பிரித்துத் தமிழ் வரலாற்றைப் பாவாணர் ஆய்ந்து எழுதியுள்ளார். இயனிலைப் படலம் என்பது தமிழின் தோற்றத்தைக் கூறுவது. அதில் குமரிக்கண்டம், குமரிநாட்டு மாந்தன் தோற்றம், குமரிமாந்தர் மொழியற்ற நிலை, இயற்கை மொழி, தமிழ்த்தோற்றம், தமிழ் வளர்ச்சி ஆகியவை பற்றிக் கூறுகிறது. ஒரு மொழியில் ஒலி சொல், எழுத்து முதலியன தோன்றுதல், அவை திரிதல், சிதைதல், வளர்தல் எனும் நிலைகளையெல்லாம் எடுத்துக் கூறுவதே அம்மொழியின் வரலாறாகும் என்ற அடிப்படையில் முறையான நெறிமுறைகளைக் கடைபிடித்து அந்நூலை எழுதியுள்ளார்.
வரலாற்றடிப்படை
தென்னாட்டு வரலாறு உண்மையான முறையில் இதுவரை எழுதப்பெறவில்லை. இந்திய வரலாற்றைத் தெற்கிலிருந்து தொடங்க வேண்டுமென்று சென்ற நூற்றாண்டே சுந்தரம் பிள்ளையும், வின்செண்டு சிமித்தும் கூறிப்போயினர். ஆயினும், இன்னும் அம்முறை கையாளப் பெறவில்லை என்கிறார் பாவாணர்.
“இதற்கு மாறாகத் தென்னாட்டு வரலாறு மறைக்கப்பட்டே வருகின்றது. இதனால் மகன் தந்தைக்கும், பேரன் பாட்டனுக்கும் முந்தியவர் என்பது போல தலைகீழாகத் தமிழ் வரலாறும், தமிழ்நாட்டு வரலாறும் இருந்து வருகின்றன” என்கிற தம் கருத்துப் புலப்பாட்டினையும் வெளிப்படுத்துகிறார் பாவாணர்.
துணைநூற்பட்டியல்
1. பொ.வேல்சாமி, பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
2. ஞா.தேவநேயன், பாவாணர் தமிழ்க் களஞ்சியம்
3. ஞா.தேவநேயன், தமிழ் வரலாறு
4. ஞா.தேவநேயன், பண்பாட்டுக் கட்டுரைகள்
5. ஞா.தேவநேயன், பண்டைத்தமிழ் நாகரிகமும் பண்பாடும்
6. ஞா.தேவநேயன், தமிழர் வரலாறு
7. ஞா.தேவநேயன், முதற்றாய்மொழி.
- ப.ரதிதேவி, முனைவர் பட்ட ஆய்வாளர், ஸ்ரீ எஸ்..இராமசாமி நாயுடு ஞாபகார்த்தக்கல்லூரி, சாத்தூர்.