ஊர் கூடித் தேர் இழுப்பதும் ஊர் கூடிப் போர் தொடுப்பதும் தமிழ்ச் சமுதாயத்திற்கு புதிய மரபல்ல...

அறியாமைக்கு எதிராகப் போர் தொடுக்கும் பொருட்டு _ ஈரோடு, கோவை, சேலம், கரூர், நாமக்கல், அனைத்து மக்களையும் ஒருங்கினணத்து, அறிவுத் தேர் இழுக்கும் அற்புத நிகழ்ச்சியாக ஈரோடு புத்தகத் திருவிழாவை ஆண்டு தோறும் மக்கள் சிந்தனைப் பேரவை நடத்தி வருகிறது.

ஐந்தே ஆண்டுகளில் இந்த ஈரோடு புத்தகத் திருவிழா. அனைத்து மக்களுக்குமானதோர் அறிவுப் பேரியக்கமாக உருவெடுத்துள்ளது. வரும் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 10 வரை ஆறாம் ஆண்டு புத்தகத் திருவிழா மொத்தம் 12 நாட்களுக்கு ஈரோடு வ.உ.சி பூங்கா மைதானத்தில் நடைபெறுகிறது.

சென்ற ஆண்டு புத்தகத் திருவிழா நடந்து முடிந்த அடுத்த நாள் தொடங்கி, ஒராண்டு முழுக்க இந்த ஆண்டு புத்தகத் திருவிழாவுக்கான முன்னேற்பாடுகளில் தீவிர கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பதும், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே - மேற்குறிப்பிட்டுள்ள ஆறு மாவட்டங்களின் முக்கிய நகரங்களில் இது குறித்த சுவரெழுத்துப் பிரச்சாரங்கள் முழுமையாகச் செய்து முடிக்கப் பட்டு விட்டன என்பதும் குறிப்பிடத்தக்கவை.

மேலும் ஈரோடு புத்தகத் திருவிழா குறித்து தொலைக்காட்சி விளம்பரப் படம் ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் நாளன்றுக்கு பல முறை வரை ஒளிபரப்ப ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளன.

தவிர, துண்டுப்பிரசுரங்கள், தட்டிகள், ஆட்டோபிரச்சாரம், கோடை பண்பலை போன்ற ஊடகங்களில் பேட்டி என பல்வேறு வடிவங்களில் மக்களுக்கு புத்தகத் திருவிழா மீதான வலுவான கவனத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கொங்கு மண்டல அளவில் மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா என நடத்தி, All roads to Rome என்பது போல எல்லோருடைய கவனமும் புத்தகத்திருவிழா மீது குவியும் வண்ணம் முன் முயற்சிகள் எடுக்கப் பட்டிருக்கின்றன...

இந்த ஆண்டு 168 கடைகளுடன் அமைக்கப்பட்டுள்ள புத்தகத் திருவிழா அரங்கு, வழக்கத்தைக் காட்டிலும் உயரத்திலும் நீள - அகலத்திலும் புதிய புதிய மாறுதல்களோடு மிகப் பிரம்மாண்டமாய் விசாலப்படுத்தப்பட்டிருக்கிறது. இது, இந்திய அளவில் குறிப்பிடத் தகுந்ததொரு புத்தகச் சந்தையாக அமையும் பொருட்டு - சமூகப் பயன் கருதி எல்லா வகையிலும் தரத்தையே மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்தும், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் கோடிக்கணக்கான தமிழ், ஆங்கில நூல்கள் கொங்கு மண்டலத்திற்கு வருகை புரிகின்றன.

விற்பனையைப் பொறுத்தமட்டில் 2005-ம் ஆண்டு முதல் முதலாக 15கடைகளுடன் தொடங்கபட்ட போது, ஒண்ணேமுக்கால் கோடி ரூபாய்க்கு நடைபெற்றது. அடுத்தடுத்த ஆண்டுகளில் முறையே மூன்று கோடி மூன்றே முக்கால் கோடி, நான்கு கோடி, நாலரைக்கோடி என்று ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்தது. இந்த ஆண்டு ஐந்து கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே போல் புத்தகத் திருவிழாவிற்க்கு குடும்பம் குடும்பமாக வந்து செல்லும் பொது மக்களின் எண்ணிக்கையும் இந்த ஆண்டு பத்து லட்சமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைவரும் மன நிறைவோடு வந்து செல்வதற்கேற்ப தகுந்த முன்னேற்றப்பாடுகளும் சிறப்பு வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சிந்தனைக் கூடம்:

ஒவ்வொரு ஆண்டும் தேசத் தலைவர் ஒருவரது வாழ்க்கையை முழுமையாகச் சித்தரிக்கும் வகையில் அரிய புகைப்படங்கள், செய்திக்குறிப்புகள், வரலாற்றுச் சம்பவங்கள் நிறைந்த சிநதனைக் கூடம் ஒன்று மிகச் சிறப்பாக அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பெரியார், பாரதி, வ.உ.சி.க்கு அடுத்ததாக இந்த ஆண்டு, ‘விடுதலைப் போரில் தமிழ்ப் பெண்கள்’ என்ற தலைப்பை ஒட்டி, நமது இந்திய தேசத்தின் விடுதலைக்காகப் போரிட்டு வீர மரணத்தைத் தழுவிய தமிழ்ப் பெண்கள் பற்றிய காணக் கிடைக்காத அரிய படங்களும், வரலாற்றுச் செய்திகளும் ஏராளமாய்க் கொண்ட சிந்தனைக் கூடம் சிறப்பாக இருக்கும்.

இலக்கியக் கருத்தரங்கம்

அறிவூட்டக்கூடிய புத்தகங்களிலும், உணர்வூட்டக் கூடிய சொற்பொழிவுகளும் ஈரோடு புத்தகத் திருவிழாவின் இரு கண்கள் எனலாம். புத்தகம் வாங்க வருபவர்களை சொற்பொழிவு கேட்கச் செய்வதும், சொற்பொழிவுவைக் கேட்பதற்கென்றே வருவபவர்களை புத்தகங்களின் பால் ஈர்த்து வாசிக்கத் தூண்டுவதுமான இயக்கம் இங்கே செவ்வனே செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு மாலை நேரக் கருத்தரங்கில் கலந்து கொள்ளும் பொருட்டு வைகோ, இளம்பிறை மணிமாறன், சுகி. சிவம், லேனா தமிழ்வாணன், கே.ஏ. குணசேகரன், பத்திரிகையாளர் ஞாநி, கோடை பண்பலை இயக்குனர் சுந்தர ஆவுடையப்பன், மலேசிய எழுத்தாளர் சை. பீர்முகம்மது, இலங்கை எழுத்தாளர் டொமினிக் ஜீவா, உ. சகாயம் ஐ.ஏ.எஸ், ‘தமிழ்பேச்சு உயிர்மூச்சு’ இரா. விஜயன், கவிதாசன், நூலக இயக்குனர் க. அறிவொளி மற்றும் பலர் வருகை புரிகின்றனர்.

கவிஞர் மு. மேத்தா தலைமையில் கவியரங்கமும், பேராசிரியர் சத்தியசீலன் தலைமையில் பட்டிமன்றமும் நடைபெறுகிறது.

தியாகி. ஐ. மாயண்டி பாரதி அவர்கள் முதல் நாள் புத்தகத்திருவிழா அரங்கைத் திறந்து வைக்கிறார். ‘விடுதலைப் போரில் தமிழ்ப் பெண்கள்’ சிந்தனைக் கூடத்தை லட்சுமிகாந்தன் பாரதி ஐ.ஏ.எஸ். திறந்து வைக்கிறார்.

வழக்கம் போல் இந்த ஆண்டும் மக்கள் சிந்தனைப் பேரவை வெளிநாடு வாழ் தமிழர்களின் படைப்புகள் மட்டுமே அடங்கிய ‘உலகத் தமிழர் படைப்பரங்கத்தையும், தமிழர் தம் வரவாறு, பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை பறைசாற்றும் நூல்களையும் தன் பொறுப்பில் ஏற்று நடத்துகின்றது’.

அத்தோடு, மாணவர்களின் புத்தகச் சேமிப்புக்காக சலுகை விலையில் வழங்கப்படும் ‘மாணவ புத்தகச் சேமிப்பு உண்டியல்’ திட்டமும், ரூ250/-க்கு மேல் புத்தகம் வாங்கும் மாணவர்களுக்கு ‘நூல் ஆர்வலர்’ எனச் சான்றிதழ் வழங்கும் திட்டமும் இந்த ஆண்டும் நடைமுறைப் படுத்தப்படுகிறது. 

நுழைவுக் கட்டணம் ஏதுமில்லை.

சென்ற ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவின் நிறைவு நாளில் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்கள் 1 லட்சம் மக்கள் நிறைந்திருந்த கூட்டத்தில் புத்தகங்களின் மேன்மை குறித்தும் மனிதனின் வாழ்விற்கும் வளர்ச்சிக்கும் புத்தகங்களின் பங்கு குறித்தும் நிகழ்த்திய வரலாற்றுச் சிறப்பு மிக்க சொற்பொழிவு இந்த ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவின் எழுச்சிகரமான வெற்றிக்கு புதிய பலம் சேர்க்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

- ந.அன்பரசு

Pin It